தமிழக முதலமைச்சராகஜெயலலிதா பொறுப்பேற்றபின்னர்
ஜெயலலிதாவின் முதலாவது கையெழுத்து தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தல் பரப்புரையின் போது அவரை வசைபாடிய அரசியல் தலைவர்கள் அவரை
வாழ்த்தியுள்ளனர். சென்னை பல்கலைக்கழக
நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் ஆளுநர் ரோசையா முன்னிலையில்
ஜெயலலிதா பதவியைப் பொறுப்பேற்றார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா மண்டபம்
ஜெயலலிதாவுக்கு ராசியான மண்டபமாகக் கருதப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமான சொத்து
சேர்த்த வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் இதே மண்டபத்தில்தான் ஜெயலலிதா
பதவியைப் பொறுப்பேற்றார். பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் ஜெயலலிதா முதலில் என்ன
செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தாம் முதலமைச்சரானால் மதுவிலக்குத்தான்
முதலாவது கை எழுத்து என்று கருணாநிதியும் அன்புமணியும் தேர்தல் பிரசாரத்தின் போது
தெரிவித்திருந்தார்கள். படிப்படியாக மதுவிலக்கு அமுல் படுத்தப்படும் என்று
ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஜெயலலிதாவின் பதவி
ஏற்புவிழாவில் எதிர்பார்த்த ஆடம்பரங்கள் எவையும்
இருக்கவில்லை. கட் அவுட் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வெற்றி
பெற்ற சந்தோசத்தில் கட் அவுட்களால் சென்னை திக்குமுக்காடும் என
எதிர்பார்த்திருந்தவர்கள் எமாற்றமடைந்தார்கள். காலில் விழும் கலசாரமும் முடிவுக்கு
வந்துள்ளது. அமைச்சர்கள் பதவி ஏற்கும் போது யாரும் காலில் விழக்கூடாது என
கண்டிப்பான உத்தரவு போடப்பட்டது. அதையும் மீறி செல்லூர் ராஜா காலில் விழுந்தார்.
ஜெயலலிதாவின் கோபப்பார்வை மற்றவர்களை அடக்கி விட்டது.
ஜெயலலிதா சிறையில்
இருந்தபோது பன்னீர்ச்செலம்தலைமையில் பதவி ஏற்ற அமைச்சர்கள் அழுது குழறி அட்டகாசம்
செய்தார்கள். இப்போதைய பதவி ஏற்பு விழாவில் அனைவரும் ஜெயலலிதாவின் கட்டளைக்கு
இணங்க காலில் விழவில்லை. ஒருவர் மட்டும் விழுந்தார் அது தவறெனத்
தெரிந்ததும் மற்றையவர்கள் காலில் விழ முயற்சிக்கவில்லை.
தமிழக அமைச்சர்கள் ஜெயலலிதாவின் காலில்
விழுவதும், அவருக்கு
வைக்கப்படும் கட் அவுட்களும் எதிர் மறையான
விமர்சனங்களை உருவாக்குகின்றன. இதனை உணர்ந்த ஜெயலலிதா இந்த இரண்டையும் இம்முறை
ஒழித்துவிட்டார்.. பதவி ஏற்புவிழாவைப்பற்றிய சர்ச்சைகள் எவையும்
வெளிவரக்கூடாது என்பதில் ஜெயலலிதா மிகக்கவனமாக இருந்துள்ளார். இதில் அவர் வெற்றி
பெற்றுள்ளார். சொன்னீர்களே செய்தீர்களா என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின்
விளம்பரத்துக்குப் பதிலடியாக தேர்தல் சமயத்தில் கொடுத்த ஐந்து வாக்குறுதிகளை
நிறைவேற்ற கையெழுத்திட்டார். யாரும் எதிர் பார்க்காத வகையில் குடிமகன்களுக்கு
முட்டுக்கட்டை போட்டார். 500 சிறிய மதுபானக்கடைகள்
மூடப்படும். மதுபானக் கடைகளை திறக்கும் நேரம் தள்ளி வைக்கப்படுகிறது. இதுவரைகாலமும்
10 மணிக்கு திறக்கப்பட்ட மதுபானக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு
பூட்டப்படும். தாலிக்கு 8 சவரண் பவுன் வழங்கபடும்.
விவசாயக்கடன் தள்ளுபடி. 100 யுனிட்டுக்குள் மின்சாரம் இலவசம்
பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவு போன்ற அதிரடிகள் ஜெயலலிதாவின் மதிப்பை
உயர்த்தியுள்ளன.
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சியிலும் அமைச்சரவை பதவியேற்பு
விழாவிலும் மு.க.ஸ்டாலின் தனது கட்சி
எம்.எல்.ஏக்களுடன் கலந்து கொண்டார். பதவியேற்பு விழாவில் வேறு கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள்,
திரையுலகினர், பல்துறைப் பிரபலங்கள் கலந்து
கொண்டனர்.
ஸ்டாலினுடன் பொன்முடி, எ.வ.வேலு, கேபிபி சாமி, கு.பிச்சாண்டி, ப.ரங்கநாதன்,
கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அன்பில்
பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, கு.க
செல்வம், சுதர்சனம், மு.க.மோகன்,
தாயகம் கவி உள்ளிட்ட அவரது கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா பதவியேற்பில் ஸ்டாலின் கலந்து கொள்வது புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2002ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது அவரும், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அன்பழகனும் கலந்து கொண்டனர் என்பது
நினைவிருக்கலாம். அப்போது ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது. தேர்தலில்
தோல்வியடைந்த சரத் குமாருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கி ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கி ஜெயலலிதா
பழி வாங்கிவிட்டார் என கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்
கருணாநிதியின் குற்றச்சாட்டை ஜெயலலிதா மறுத்துரைத்துள்ளார்
திட்டமிடப்பட்ட பழி வாங்கல் என்பதை அவர் அழுத்தம் திருத்தமாக மறுத்துள்ளார். தனது
பதவி ஏற்பு விழாவில் பங்கெடுத்த ஸ்டாலினுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்
ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்ட சபையில் ஸ்டாலினுக்கு வணக்கம் செலுத்தினார்.
ஸ்டாலினும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார். இது வரை காலமும் ஸ்டாலினைக்
கணக்கெடுக்காது இருந்த ஜெயலலிதாவின் பார்வை சற்று வித்தியாசகமாக உள்ளது. தமிழக
சட்ட சபையில் கருணாநிதியைச் சந்திப்பதை ஜெயலலிதா தவிர்த்தார்.கருணாநிதி சத்தியப்
பிரமாணம் செய்யும்போது ஜெயலலிதா வெளியேறிவிட்டார்.
தமிழக வளர்ச்சிக்காக திராவிட முன்னேற்றக்
கழகத்துடன் இணைந்து செயற்பட ஜெயலலிதா விருப்பம் தெரிவித்துள்ளார். தனது அரசியல்
எதிரியான கருணாநிதியை ஒதுக்கு வைத்துவிட்டு ஸ்டாலினுடன் இணக்க அரசியல் செய்ய
ஜெயலலிதா முன்வந்துள்ளார் போல் தெரிகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர
வேறு கட்சிகள் எவையும் தமிழகத்தில் இல்லை என்பதனால் மற்றைய கட்சிகளைப்பற்றி
ஜெயலலிதா கவலைப்படவில்லை.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி தேர்தல்
ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீண்டும் பழைய
பொறுப்புகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக கரன் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ட்டம் ஒழுங்கு
கூடுதல் டிஜிபியாக மீண்டும் ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டார். சென்னை மாநகர
காவல்துறை ஆணையராக டி.கே.ராஜேந்திரன் திரும்பி வந்துள்ளார். கடலோர பாதுகாப்பு குழும
ஏடிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்ட்டுள்ளார். உளவுத்துறை ஐ.ஜியாக
சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கப் பிரிவு ஏடிபிஜியாக அசுதோஷ்
சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். கலக்டர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்டவர்களை தமிழக முதலமைச்சர் மீண்டும் தனது
கட்டுப் பாட்டில் கொண்டு வந்துள்ளார். ஆட்சி மாறியிருந்தால் இவர்கள் தூக்கி
அடிக்கப்பட்டிருப்பார்கள்.
இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள நிலையில்,ராஜ்யசபாவிலும், நான்காவது பெரிய கட்சியாக உருவெடுக்கப்போகிறது அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பெரும் வெற்றியை பெற்று,அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,
37 எம்.பி.,க்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இதனால், பாரதீய ஜனதா,காங்கிரஸ் ஆகியவற்றுக்கு
அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.,உருவெடுத்துள்ளது.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றதன் மூலம், ராஜ்யசபாவில், நான்கு எம்.பி.,க்கள், கிடைக்கவுள்ளனர். ராஜ்யசபாவில்,
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலம், 13 ஆக உயரவுள்ளது. இதனால், காங்.கிரஸ், - பாரதீய ஜனதா, சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கு அடுத்து, நான்காவது பெரிய கட்சியாக, ராஜ்யசபாவில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவெடுக்க உள்ளது. நாடாளுமன்றத்தில் 37; ராஜ்யசபாவில், 13 என,மொத்தம் 50 நாடாளுமன்ற உருப்பினர்கள் அண்ணா
திராவிட முன்னேற்றக்கழகத்துக்குக் கிடைக்கஉள்ளனர்.நாடாளுமன்ற வரலாற்றில்,தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு, இவ்வளவு பெரிய கெளரவம் இதுவரைகிடைத்தது இல்லை. ஆனாலும், சபை நடவடிக்கைகளில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகஉறுப்பினர்களின் பங்கேற்பு,ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு சபைகளிலுமே, அண்ணா திராவிட
முன்னேற்றக்கழக உறுப்பினர்கள்எவரும் பாராட்டத்தக்க வகையில்ஜொலிக்கவில்லை. சபை அலுவல்களில் ஆர்வமின்மை, தலைமை மீதான அளவு கடந்த பயம் ஆகியவைகாரணங்கள் என்றாலும், மொழிப் பிரச்னை மிகப்பெரிய தடையாக உள்ளது. இதனால்,பெரும்பாலானவர்கள் சபையில் பேச முடியாமல் தடுமாறுவது அப்பட்டமாகத் தெரிகிறது.
இந்நிலையில் தான், தற்போதுராஜ்யசபாவிலும், அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் எண்ணிக்கை உயரவுள்ளது தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தின்
சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 மாநிலங்களில் இருந்து
வரும் ஜூன் ஓகஸ்ட் மாதங்களில்
மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலாவதியாக உள்ளது மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான
இந்த தேர்தலில் தமிழகத்திலும் ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் பதவி வரும்
ஜூன் 29ஆம் திகதி காலியாக உள்ளன. ஜூன் 11 ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.
. ஒரு ராஜ்யசபா உறுப்பினருக்கு
34 சட்டசபை
உறுப்பினர்களின் வாக்கு தேவைஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மூன்று
உறுப்பினர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இரண்டு
உறுப்பினர்களும் நிச்சயம். . ஒருவேளை, அரவக்குறிச்சி தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயித்தால்
4 உறுப்பினர்களை
அக்கட்சியால் தேர்ந்தெடுக்க முடியும்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களாக
அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரான
டி.கே.எஸ்.இளங்கோவன் , அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
வேட்பாளர்களாக, நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார்கள்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முடிவடையும் நவநீதகிருஷ்ணனுக்கு மீண்டும்
வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள
எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரசில் இருந்து விலகி அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த மூத்த தலைவர். இதேபோல் ஆர்.வைத்திலிங்கம்
சட்டசபைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்..
அதிகாரம் மிக்க ஐவர் அணியில் இருந்த வைத்தியலிங்கத்தின் அரசியல் அஸ்தமனமாகி
விட்டது என அனைவரும் கருதிய நிலையில் அவருக்கு மீண்டும் ஜெயலலிதா
வாழ்வளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் தலைமையில் தமிழக சட்ட சபைத்
தேர்தலில் போட்டியிட வாசன் விரும்பினார் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட
ஜெயலலிதா விடுத்த கோரிக்கையை நிராகரித்த வாசன் மக்கள் நலக் கூட்டணியில்
போட்டியிட்டு படுதோல்வியடைந்தார். காங்கிரஸில் இருந்து வாசனுடன் வெளியேறிய
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என
விரும்பினார். ஜெயலலிதாவை விட்டு வாசன் வெளியேறிய போது
பாலச்சுப்பிரமணியன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.வாசனுக்குக்
கிடைக்க வேண்டிய எம்பி பதவி அவருடைய சகபாடியான பாலசுப்பிரமணியத்துக்குக்
கிடைத்துவிட்டது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற
உறுப்பினர்களின் செயற்பாடு திருப்திகரமாக இல்லை என்பதனால் அனுபவசாலியான
பாலசுப்பிரமணியனின் மூலம் டில்லியில் தனது அரசியலை ஸ்திரப்படுத்த ஜெயலலிதா
விரும்புகிறார்.
நான்காவது பெரிய கட்சி என்ற பெருமையை, ராஜ்யசபாவில் பெறவுள்ள அண்ணா திராவிட
முன்னேற்றக்கழகம்., அதற்கு ஏற்ற வகையில் செயலாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்குஏற்றாற்போல், ராஜ்யசபா நடவடிக்கைகளில் பழைய கம்பீரத்தை மீட்டெடுக்க, ., தலைமை முன்வருமாஎன்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
வர்மா