Wednesday, February 20, 2019

மோடியிடம் சரணடைந்த லேடியின் விசுவாசிகள்


கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகியவற்றால் புகைந்து கொண்டிருந்த தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாரதீய ஜனதாக் கட்சி சேரும் என்பது அனைவருக்கும் தெரிந்த சங்கதி. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி  வைப்பதில்லை என சபதம் ராமதாஸ் இரட்டை இலையின்கீழே ஒதுங்கியுள்ளார். தன்னுடன் கூட்டணி சேர்வதற்கு மோடி மேற்கொண்ட முயற்சிகளை ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை மோடியின் ஆசைகள் எவையும் நிறைவேறவில்லை. ஜெயலலிதா இறந்த பின்னர் தான் நினைத்தபடி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்டிப்படைக்கிறார் மோடி.
 தமிழகத்தை ஆட்சி செய்வது ஊழல் கட்சி எனக்கூறி அந்த ஊழல்கள் பற்றிய புத்தகத்தை வெளியிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிசெய்தவர் ராமதாஸ்.தமிழக அரசு செய்த ஊழல்கள் பற்றிய விபரப் பட்டியலை தமிழக ஆளுநரிடம் கையளித்தவர் ராமதாஸ். தமிழகத்தை கெடுத்து குட்டிச் சுவராக்கிய திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேரமாட்டேன் என சபதம் செய்தவர் ராமதாஸ். அவை எல்லாவற்றையும் மூட்டை கட்டிப் பறணில் வைட்துவிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு தொகுதிகளும் கூடிதலாக ஒரு ராஜ்ய சபை உறுப்பினர் வழங்கவும் இணக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வடபகுதியிலும் கொங்கு மண்டலத்திலும்  பாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்குள்ளது. ஆகையினால் இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ராமதாஸின் மகன் அன்புமணிக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு உள்ளது. பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட்டால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அவர் வெற்றி பெறுவார். அதே போல் பாட்டாளி மக்கள் கட்சியின் ஏனைய ஆறு வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்களா என்பது சந்தேகமே. ஜெயலலிதாவு ஒரு முறை பட்டாளி மக்கள்கட்சிக்கு ஏழுதொகுதிகளைக் கொடுத்தார் அந்தத்தேர்தலில் ஒரு தொகுதியிலும் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறவில்லை.

ராமதாஸ், அன்புமணி ஆகியோரைப் போன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மிகப்பிரபலமானவர் காடுவெட்டி குரு. காடுவெட்டி குருவின் பேச்சைக் கேட்பதற்கு ஒரு கூட்டம் காத்திருக்கும். அவருடைய இறுதிக் காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கைகொடுக்கவில்லை என்ற வருத்தம் உடும்பத்தவரிடம் இருக்கிறது. அன்புமணி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடப்போவதாக காடுவெட்டி குருவின் தாயார் அறிவித்துள்ளார். தேர்தல் காலமொன்றின் போது பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தார். இந்தத் தேர்தலில் குரல் கொடுக்கப்போவதில்ல என ரஜினி அறிவித்துள்ளார்.  ரஜினியின் ரசிகர்கள் அதனை மறந்திருக்க மாட்டார்கள். பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரானவர்கள் அதனை ஞாபகப்படுத்துவார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானதல்ல. தமிழக அரசைத் தக்கவைப்பதே அதன் முக்கிய குறிக்கோளாகும். பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு தொகுதிகளையும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளையும் விட்டுக்கொடுத்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.அதற்குப் பிரதி உபகாரமாக  தமிழக சட்ட மன்ற இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் போட்டியிடக்கூடாது என ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழக சபாநாயகரினால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட  21 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி இழந்ததை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவற்றில் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் தமிழக அரசு தப்பிப் பிழைக்கும். இல்லையேல் அறுதிப் பெரும்பான்மையை இழந்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் துணையுடன் ஏழு தொகுதிகளுக்கு  மேல் வெற்றி பெறாலாம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் நம்புகிறார்கள்.

தமிழக சட்ட மன்றத்தில் காலியாக உள்ள  21  தொகுதிகளின் உறுப்பினர்களும் தினகாரனின் ஆதரவாளர்கள். அவர்களில் செல்வாக்குள்ளவரான செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துவிட்டார். ஒன்றரை வருடங்களாக 21 தொகுதிகளிலும் அபிவிருத்தி எவையும்  நடைபெறவில்லை. அந்தத் தொகுதிகளில் வெற்றி பெறவர்கள் பதவி இழந்ததால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர். நாடாளுமன்றத் தேர்தலிலும் இடைத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பலட்த எதிர்ப்பு இருக்கும் என்பது உண்மை.

பலமான கூட்டணியில் சேர்ந்து போட்டியிட வேண்டும் என்பது ராமதாஸின்  விருப்பம். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஆகிய இரண்டு கட்சிகளுடனும் பாட்டாளி மக்கள் கட்சிப் பிரமுகர்கள் இரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினர். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான பேரம் படியாததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி சங்கமித்தது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியை விரும்பாத பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் ராஜேஸ்வரி கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். கட்சித்தலைவர்கள் பொன்னாடை போர்த்தி,கைகுலுக்கி ஒற்றுமையாகிவிட்டனர்.  தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும்.

மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதாக் கட்சி, தமிழகத்தைக் கண்டு கொள்ளவில்லை. நீட் தேர்வு ,மேகதாது அணக்கட்டு என்பனவற்றின் மூலம் பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது.கஜா புயல் நிவாரணத் தொகையை மத்திய அரசு தரவில்லை என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் குற்றம் சாட்டினர். தமிழகத்துக்கு நன்மை செய்யும் தேசியக் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அடிக்கடி சொன்னார்கள். அதை எல்லாம்  புறந்தள்ளி பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கியுள்ளது.

பாரதீய ஜனதாக் கட்சியின் செயலர் எச். ராஜாவின் மீது தமிழக மக்கள் கடுமையான கோபத்திலுள்ளனர்.  அவருடைய இனவாத, மதவாதப் பேச்சுகளை இலகுவில் மறக்க முடியாது. பெண்களை இழிவுபடுத்திப் பேசிய எச். ராஜாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது எனபதை உணர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளதாம்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அனைவரும் பாரதீய ஜனதாவுடன் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். மூத்த உறுப்பினரான தம்பித்துரை வெளிப்படையாக பாரதீய ஜனதாக் கட்சியை விமர்சிக்கிறார். வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பாரதீய ஜனதாக் கட்சியை அக்குவேறு ஆணி வேறாக விமர்சித்தார் தம்பித்துரை. இந்தக் கூட்டணியை தம்பித்துரை விரும்பவில்லை. பாரதீய ஜனதாக் கட்சிப் பிரமுகரான சுப்பிரமணியன் சுவாமிக்கும் இந்தக் கூட்டணியில் விருப்பமில்லை. வெற்றிக் கூட்டணி என சகலரும் சொல்லிவருகையில் அதற்கு எதிர்மாறாக இந்தக் கூட்டணி வெற்றி பெறாது என சுப்பிரமணியன் சுவாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தாமரை மலரும். பாரதீய ஜனதாவின் தலைமையில் கூட்டாணி அமையும் என முழங்கிய தமிழைசை அமைதியாக ஓரத்தில் நின்று நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார். மோடிக்கும் பாரதீய ஜனதக் கட்சிக்கும் எதிரான மனநிலையில் தமிழக மக்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நோட்டாவுக்குக் குறவாக வாக்குப் பெற்ற பாரதீய ஜனதாக் கட்சியின் வெற்றி கூட்டணி கட்சிகளின் கையில்தான் உள்ளது.

சூரன்.ஏ.ரவிவர்மா

Sunday, February 10, 2019

பலமான கட்சிகள் கூட்டணிக்கு காத்திருக்க தனி வழி செல்லும் கமல்


இநதிய நாடாளுமன்றத்  தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சகல அரசியல் கட்சிகளும் பலமான  கூட்டணியில் போட்டியிட ஆர்வம் கொண்டிருக்கையில்  தமிழகத்தின் சகல தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக கமல் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் எனும் அரசியல் கட்சியை உருவாக்கிய கமல் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியுடவில்லை. அந்தக் கட்சிக்கான வாக்கு விகிதம் என்ன எனவும் சரியாகக் கணிக்கப்படவில்லை. தனித்துப் போட்டி என்ற கமலின்முடிவு அவரின் தன்னம்பிக்கையைப் புலப்படுத்துகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, கமல் சந்தித்தது  அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் கூட்டணி இல்லை என கமல் உறுதியாகக் கூறியிருந்தார். இந்துத்துவாவின் மீது அதிக மோகம் கொண்ட பாரதீய ஜனதாக் கட்சியுடன் கமல் சேரமாட்டார். ஆகையால் காங்கிரஸுடன் கமல் சேர்வார்  என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பிரதமர் வேட்பாளராக ஸ்டாலினால் ராகுல் காந்தி பிரகடனப்படுத்தியபின்னர் அரசியல் கள நிலவரம் மாறிவிட்டது. ராகுலை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கிய வேளையில் ஸ்டாலினின் பிரகடனம் காங்கிரஸுக்கும்  திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகரித்தது.

திராவிட முன்னாற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு எதிரான வாக்குகளைக் கவர்வதற்கு கமல் காய் நகர்த்துகிரார். இதே பாணியில்தான் விஜயகாந்த், அரசியலில் முன்னேறினார். அரசியலுக்கு வரப்போவதாக கமலுக்கு முன்னர் ரஜினி அறிவித்தார். அவரின் அறிவிப்பு அறிவிப்பாகவே இருக்கிறது.  சினிமாவின் நடிப்பதில் ரஜினி அதிக ஆர்வம் காட்டுகிறார். என் வழி தனி வழி என்பது ரஜினியின் பிரபலமான சினிமா வசனம். அதனை கமல் நிஜமாக்கிவிட்டார். தமிழகத்தின் பலம் வாய்ந்த கட்சிகள் ரகசியமாகக் கூட்டணிப்பேச்சு வார்த்தை நடத்துகின்றன. கமல் துணிந்து களத்தில் இறங்கிவிட்டார். பரபரப்பான அரசியல் கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்ட கமல் அரசியல் தலைவராகிவிட்டார்.

தமிழகத்தில் அரசியல் கட்சியை ஆரம்பித்து முதல்வராகிய பெருமை எம்ஜிஆரையே சாரும். எம்ஜிஆருடன் சேர்ந்ததால் ஜெயலலிதாவும் முதல்வராகினார். கர்நாடகாவில் நடிகர் என்.டி.ராமராவ் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல்வரானார். அரசியல் கட்சி அமைத்த ஏனைய நடிகர்கள் பலமான கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்றத்திலும்  சட்டசபையிலும் உறுப்பினரானார்கள். சிலர் தோல்வியடைந்தனர்.  கால மாற்றத்தில் அவர்களின் கட்சியும் காணாமல் போய்விட்டது. இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான் கமல், கட்சியை ஆரம்பித்துள்ளார்.

கமலுடன் கூட்டணி சேர்வதற்கு எந்தக் கட்சியும் தயாராகவில்லை. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பலமான கூட்டணியை அமைப்பதற்கு முயற்சி செய்யும்போது கமல் தனித்து விடப்பட்டார். தன்னுடைய நிலமையைப் புரிந்துகொண்ட கமல் துணிச்சலுடன் தனியாகக் களம் இறங்கிவிட்டார்.  நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது கமலின் நோக்கமல்ல. தமிழகத்தில் தனக்குரிய செல்வாக்கைப் பரீட்சிப்பதற்கான களமாக தேர்தலை அவர் கருதுகிறார்

சூரன்.ஏ.ரவிவர்மா.

Tuesday, February 5, 2019

தலைவரை மாற்றி தடையைத் தகர்த்த காங்கிரஸ்


தமிழக காங்கிரஸுக்கு ஒரு தலைவர் இருப்பார். ஆனால், அடுத்த நிலையில் இருக்கும் தலைவர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு கொடுக்கமாட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலை எதிர் நோக்கி இருக்கும் இந்த நேரத்தில் தமிழக காங்கிரஸ் தலவரான திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு கே.எஸ்.அழகிரி தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கோஷ்டிப் பூசல்கள் டில்லித் தலைமையின் மனமாற்றம் என்பவற்றின் காரணமாக தலைமைப் பதவியை ஒருவர் அதிக காலம் வகிப்பதில்லை. தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் ஒரு சில மாதங்கள் இருக்கையில் தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் திருநாவுக்கரசர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை தமிழகத்தில் சந்திப்பதற்கு காங்கிரஸ் தயாராக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணி வலுப்பெற வேண்டும் என்பதனாலேயே காங்கிரஸ் தலைமை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்த திருநாவுக்கரசர்  எம்.ஜி.ஆரின் துணையுடன் அரசியலில் பிரவேசித்தவர். எம்.ஜி.ஆருடனும் ஜெயலலிதாவுடனும் மிக நெருக்கமாகப் பழகிய திருநாவுக்கரசரால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பாசத்தை விட முடியவில்லை.  அதுவே அவரின் பதவிக்கு ஆபத்தாக மாறிவிட்டது.

தமிழக அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் ஸ்டாலினுடைய தலைமையில் நடைபெற்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கும் கட்சிகள் அனைத்தும் அதில் கலந்துகொண்டன. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அதில் கலந்துகொள்ளாமல் தனியாக போராட்டம் நடத்தியதால் தமிழக காங்கிரஸார் அதனை ரசிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதை திருநாவுக்கரசர் விரும்பவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதையே திருநாவுக்கரசர் விரும்பினார். இதனை டில்லித் தலைமை விரும்பாததனால் திருநாவுக்கரசர் தூக்கி எறியப்பட்டார்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வெற்றிக் கூட்டணியில் இருப்பதால் தலைமைப் பதவிக்கு ஆபத்து இல்லை என்பதே திருநாவுக்கரசரின் எண்ணம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகையில் தலைமைப் பதவியில் கைவைப்பதற்கு தலைமைப் பீடம் விரும்பாது என்பதைத் தெரிந்துகொண்ட திருநாவுக்கரசர் நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை நான்தான் தலைவர் எனப்  பேட்டியளித்தார். தலைக்கனம் மிக்க அந்தப்பேட்டியும் அவருக்குப் பாதகமாக அமைந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகக் கட்சியை உருவாக்கி அரசியல் செய்யும் தினகரனுடன் இணைவதற்கு திருநாவுக்கரசர் முயற்சி செய்தார். அந்த முயற்சியும் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.

எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் துணை சபாநாயகராகப் பதவி வகித்த திருநாவுக்கரசர் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இருந்தார். எம்ஜிஆர் மறைந்ததும் ஜெயலலைதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஜெயலலிதாவின் தலைமையிலும் எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் தலைமையிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாகப் பிரிந்தபோது ஜெயலலிதாவுக்குப் பக்க பலமாக இருந்தவர் திருநாவுக்கரசர். சாத்தூர் ராமச்சந்திரனுடன் சேர்ந்து தமிழக சட்டசபை உறுப்பினர்களை கைதி போல் வைத்திருந்தார். கூவத்தூர்  கூத்துக்கு அச்சாரம் போட்ட பெருமை திருநாவுக்கரசரைச் சாரும்.

திருநாவுக்கரசர் மீது ஜெயலலிதா நம்பிக்கை இழந்தபின்னர் அவருக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. தனக்கு மதிப்பிலாத இடத்தில் இருப்பதை விரும்பாத திருநாவுக்கரசர், அங்கிருந்து பாரதீய ஜனதாக் கட்சிக்குத் தாவினார். வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய அமைச்சராக வலம் வந்தார். பாரதீய ஜனதாவில் செல்வாக்குக் குறையத்தொடங்கியதும் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார். 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததால் அன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இராஜினாமாச் செய்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதியரைத் தேடியபோது ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவரான திருநாவுக்கரசரின் பெயரும் முன்னிலைப்படுத்தப்பட்டது.  பாரதீய ஜனதாக் கட்சியில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தவர் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆகக்கூடாது என கருத்டு முன்வைக்கப்பட்டது. திருநாவுக்கரசரை தமிழக காங்கிரஸ் தலைவராக்கக்கூடாது என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டில்லித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார். தமிழகத் தலிவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் திருநாவுக்கரசருக்கு தமிழக காங்கிரஸ் தலைமைப் பதவி வழங்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற திருநாவுக்கரசர் ஏனைய தலைவர்களுடன் கலந்தாலோசிக்காது தன்னிச்சையாகப் பலமுடிவுகளை அமுல்படுத்தினார். 45 மாவட்டத் தலைவர்கள் இருந்த நிலையில் அதனை 72 ஆக உயர்த்தி தனக்கு விசுவாசமானவர்களை மாவட்டத் தலைவரக்கினார். 2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 13 ஆம் திகதி ஆட்டத்தை ஆரம்பித்த திருநாவுக்கர்  அடக்கப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் நெருக்கமாக இருக்கும் இவர், தேர்தலுக்கான பேச்சு வார்த்தையில் முக்கிய இடத்தை வகிப்பார். தமிழக காங்கிரஸ் தலைவர் பட்டியலில் பீட்டர் அல்போன்ஸின் பெயரும் இருந்தது. பீட்ட்டர் அல்போன்ஸ்தான் தலைவராவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மென்மையான போக்கைக் கொண்ட பீட்டர் அல்போன்ஸால் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் போது இறுக்கமாகப் பேசமாட்டார். அதன் காரணமாக அவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.எஸ். அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நம்பிக்கைக்குரியவர். 67 வயதான அழகிரி 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்கடலூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலும், 1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலும் சிதம்பரம் தொகுதியில் தமிழக சட்ட சபைத் தேர்தலில்  போட்டியிட்டு  வெற்றி பெற்றவர்.  2003 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஏழு தலைவர்களை தமிழக காங்கிரஸ் கட்சி கண்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் இணக்கமாக இருக்கும் அழகிரிக்கு ஜோதிமணி,குஷ்பு போன்ற பெண் தலைவர்களின் ஆதரவு இருக்கின்றது. அழகிரியுடன் சேர்த்து நான்கு செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் சேர்ந்து தமிழக காங்கிரஸை வலுப்படுத்த வேண்டிய கடமை அழகிரியின் முன்னால் உள்ளது.

சூரன்.ஏ.ரவிவர்மா.