Tuesday, October 26, 2010

குலுங்கியது மதுரைகுதூகலத்தில் ஜெயலலிதா


மதுரையில் தனது செல்வாக்கைக் காட்ட களமிறங்கிய ஜெயலலிதா அதில் வெற்றி பெற்றுவிட்டார். அழகிரியின் கோட்டையில் அ.தி.மு.க. கொடி பட்டொளி வீசியது.
தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் வியூகத்தை உடைப்பதற்கும் காங்கிரஸை அடிபணிய வைக்கவும் உரிய நடவடிக்கையைத் தமிழக முதல்வர் முடுக்கி விட்டுள்ளார்.
அழகிரியின் ஒத்துழைப்பின்றி மதுரையில் சிறப்பாக எதனையும் செய்ய முடியாது. அழகிரியின் கோட்டை மதுரை. தமிழகத்தை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்தாலும் மதுரையை ஆள்பவர் அழகிரி. "மதுரை அரசாளும் மீனாட்சி' என்பது பக்திப் பாடல். ஆனால் அழகிரி கை அசைத்தால் மதுரையே அதிரும் என்ற பெருமைகளை உடைத்தெறிந்துவிட்டார் ஜெயலலிதா.
தமிழக அரசைக் கண்டித்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்த உடனேயே பிரச்சினைகள் ஆரம்பமாகிவிட்டன. அண்ணன் அழகிரியின் கோட்டைக்குள் ஜெயலலிதாவை நுழைய விடக் கூடாது என்பதில் ஒரு சிலர் உறுதியாக இருந்தனர். திட்டமிட்டபடி மதுரையில் கூட்டம் நடத்துவேன் என்று உறுதிபடத் தெரிவித்தார் ஜெயலலிதா. மதுøரக்கு வந்தால் கொல்லப்படுவாய் என்று ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏட்டிக்குப் போட்டியாகத் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. கொலை மிரட்டல் விடுத்தவர்கள் ஆதாரத்துடன் கைது செய்யப்படவில்லை. மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாது மதுரையில் வெற்றிகரமாகக் கூட்டத்தை நடத்தினார் ஜெயலலிதா.
மதுரையில் ஜெயலலிதா நடத்தும் கூட்டத்தில் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தது. ஏதாவது அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமல்லாது அழகிரிக்கும் அவப் பெயர் ஏற்பட்டு விடும் என்பதை தமிழக அரசு உணர்ந்திருந்தது. ஆகையினால் சிறு அசம்பாவிதம் கூட ஏற்படவில்லை.
அழகிரியின் கோட்டையை அதிர வைத்து விட்டார் ஜெயலலிதா. கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் கூடிய கூட்டத்தை விட அதிகளவான மக்கள் மதுரையில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படி ஒரு பெருங் கூட்டம் மதுரையில் கூடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மதுரையில் கூடிய மக்கள் வெள்ளம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் திருப்புமுனையாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்கத் தயங்கிய கட்சிகள் சிந்திக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது.
அழகிரியின் கோட்டையில் தனது செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்று களமிறங்கிய ஜெயலலிதா அதில் வெற்றி பெற்று விட்டார். மதுரையின் மூலை முடுக்கு எங்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. ஏட்டிக்குப் போட்டியான சுவரொட்டி யுத்தம் ஜெயலலிதாவின் மதுரை விஜயத்துடன் முடிவுக்கு வந்தது. மதுரையில் கூடிய கூட்டம் ஜெயலலிதாவுக்குப் புதுத் தெம்பை அளித்துள்ளது. ஜெயலலிதாவைக் காணத் திரண்ட மக்கள் வெள்ளம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஜெயலலிதா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அதிகமானோர் வெளிமாவட்டங்களில் இருந்து மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். ஜெயலலிதாவின் கட்டளைக்குப் பணிந்து இவ்வளவு மக்கள் கூடுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதாவுக்கும் அது பெரிய ஆச்சரியமாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வழங்கிய பேட்டியிலிருந்தும் எம்.ஜி. ஆரின் விசுவாசிகள் இன்னமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதை உணரக்கூடியதாக உள்ளது.
இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போதும் இப்படித்தான் ஜெயலலிதாவின் பின்னால் மக்கள் வெள்ளம் திரண்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் நேர்மாறாக இருந்தன. நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை ஜெயலலிதா பெறவில்லை. ஜெயலலிதாவை நம்பி பின்னால் சென்ற வைகோ, ராமதாஸ் ஆகியோரும் இடதுசாரிக் கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்தன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் வியூகத்தை உடைப்பதற்கும் காங்கிரஸ் கட்சியை அடிபணிய வைக்கவும் உரிய வியூகங்களை இப்பொழுதே ஆரம்பித்து விட்டார் முதல்வர் கருணாநிதி. சோனியாகாந்தியின் திருச்சி உரை முதல்வர் கருணாநிதியைச் சிந்திக்கத் தூண்டி உள்ளது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதிக அக்கறை காட்டுகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் விருப்பம். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்துக்கும் ராகுல் காந்தியின் ஆசைக்கும் சோனியா காந்தி ஒப்புதலளிக்கவில்லை. திருச்சியில் சோனியா காந்தி ஆற்றிய உரை அவர்களின் விருப்பத்துக்கு சாதகமான சமிஞ்ஞையை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டும் அல்லது ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோஷத்துக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்குத் தமிழக அரசியலில் பங்கு கொடுத்து அவர்களை அமைச்சர்களாக்குவதற்கு முதல்வர் கருணாநிதி விரும்ப மாட்டார். ஆகையினால் ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸ் தலைவர்களின் விருப்பம்.
விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியில் பங்கு பெறலாம். சுழற்சி முறையில் முதல்வராகலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது.
ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்காது என்பது விஜயகாந்துக்கு நன்கு தெரியும்.
விஜயகாந்தும் காங்கிரஸும் இணைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்த முதல்வர் கருணாநிதி புதிய கூட்டணிக்கான அத்திபாரத்தை இப்பொழுதே ஆரம்பித்து விட்டார். நம்ப வைத்து கழுத்தறுத்த கருணாநிதியும் அரசியல் வியாபாரி ராமதாஸும் சந்தித்துள்ளார்கள். தனது மகனுக்கு ராஜ்யசபை உறுப்பினர் பதவி தரவில்லை என்பதனால் நம்ப வைத்து கழுத்தறுத்த கருணாநிதி என்று ராமதாஸ் விமர்சித்தார். அதனைப் பொறுக்க மாட்டாத துரைமுருகன் அரசியல் வியாபாரி ராமதாஸைச் சாடினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி கலந்துரையாட தமிழக முதல்வரைச் சந்திப்பதற்கு ராமதாஸ் அனுமதி கேட்டார். உடனே அனுமதி கிடைத்துவிட்டது. தமிழகத் தேர்தல் கூட்டணிக்கான புதிய ஆரம்பமாகவே இதனைக் கருதலாம். ஜெயலலிதாவின் முதலாவது தெரிவு காங்கிரஸ், இரண்டாவது தெரிவு விஜயகாந்த், மூன்றாவது இடத்தில் ராமதாஸ் உள்ளார். தனது நிலை என்ன என்பதை உணர்ந்து கொண்ட ராமதாஸ் தமிழக முதல்வரின் பக்கத்துக்குச் சாய்ந்து விட்டார்.
காங்கிரஸும் விஜயகாந்தும் கூட்டணி சேர்ந்தால் ஜெயலலிதா பலவீனமாகிவிடுவார். வெற்றி வாய்ப்பு இல்லாத ஜெயலலிதாவுடன் இருக்கும் இடதுசாரிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவி விடுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கணக்குப் போட்டுள்ளார்.
சூரன்.எ.ரவிவர்மா.
வீரகேசரிவாரவெளியீடு 24/10/10

Sunday, October 24, 2010

கூட்டணிக் கனவில் தலைவர்கள்இலவசத்தை எதிர்பார்க்கும் மக்கள்




தமிழக சட்டமன்றத் தேர்தல் முன் கூட்டியே நடைபெறாது என்று முதல்வர் கருணாநிதி அழுத்தம் திருத்தமாக அறிவித்து விட்டார். ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது பிரசாரத்தை ஆரம்பித்து விட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியன தமது பலத்தைக் காண்பிப்பதற்காக ஏட்டிக்குப் போட்டியாக கூட்டங்களை நடத்துகின்றன.
காங்கிரஸ் கட்சி திருச்சியில் பிரமாண்டமான கூட்டத்தை நடத்தி தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 125 ஆவது ஆண்டு விழா, ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழா திருச்சியில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாகாந்தி இக்கூட்டத்தில் கலந்து கொண்டது காங்கிரஸ் கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சோனியா காந்தியின் திருச்சி உரை காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தை சிந்திக்கத் தூண்டியுள்ளது. தமிழகத்தில் நாம் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியை மதிக்கிறோம். அதேநேரம் தனது தனித்துவத்தை காங்கிரஸ் ஒருபோதும் இழக்காது. தமிழகத்தில் காங்கிரஸ்தான் எதிர்காலத்தில் பிரதான அரசியல்கட்சியாக இருக்கும் என்று எண்ணி பல இலட்சக்கணக்கானோர் கட்சியில் இணைந்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சியின் புதிய சரித்திரத்தின் தொடக்கத்தை எழுதுகிற ஓர் அற்புதமான நிகழ்வு. இந்தப் புதிய தொடக்கத்தை எழுதுவதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். புதிய சரித்திரத்தை எழுத வேண்டும் என்று சோனியா காந்தி உøரயாற்றினார். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை நாசூக்காகக் கூறியுள்ளார் சோனியா காந்தி.
தமிழக ஆட்சியைத் தக்க வைப்பதற்கான சகல முயற்சிகளையும் திராவிட முன்னேற்றக் கழகம் செய்து வருகிறது. இழந்து விட்ட ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கு துடிக்கிறது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். வியூகமஅமைத்து வேலை செய்து வருகிறது. திராவிடக் கழகங்களை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தது போதும் நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற உத்வேகம் காங்கிரஸ் கட்சியிடம் ஏற்பட்டுள்ளது.
காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று தமிழகத் தலைவர்கள் மேடைதோறும் முழங்கி வருகின்றனர். பல கோஷ்டியாகப் பிரிந்திருக்கும் அவர்கள் பேச்சுடன் மட்டும் நின்று விடுவார்கள் என்பது வெளிப்படை. தமிழகக் காங்கிரஸ் தலைவர் போட்டிக்கே பலமாக முட்டி மோதும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முதல்வராகும் சந்தர்ப்பம் கிடைத்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியும், தமிழகத் தலைவர்களும் முழங்கும் போது அமைதியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் சோனியாவின் பேச்சால் விழிப்படைந்துள்ளது. தமது தலைமையில் சிறு கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி அமைக்கலாம் என்று கருதுகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். இரண்டு திராவிடக் கட்சிகளும் பலமாக இருக்கும் வேளையில் காங்கிரஸின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறக் கூடிய சாத்தியக் கூறு இல்லை.
மக்களுடன்தான் கூட்டணி என்ற கோஷத்துடன் அரசியல் அரங்கில் நுழைந்த விஜயகாந்த் அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு இறங்கி வந்துள்ளார். காங்கிரஸும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் விஜயகாந்துடன் தொடர்பு வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இந்தத் தகவல்களை காங்கிரஸும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் உத்தியோகபூர்வமாக மறுப்பறிக்கை விடவில்லை. யாருடன் கூட்டணி என்பது பற்றி விஜயகாந்த் வாயே திறக்கவில்லை.
பலமான கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே அரசியல் தலைவர்களின் கனவு. ஆனால் தமிழக மக்களின் கருத்து வேறு விதமாக உள்ளது. பலமான கூட்டணி அல்ல நாம் வழங்கும் தீர்ப்பே ஆட்சியைத் தீர்மானிக்கும் என்று மக்கள் கூறியுள்ளனர். அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் கிராமப் புறங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஒரு ரூபாவுக்கு படி அரிசி, இலவச தொலைக்காட்சி, இலவச காஸ், இலவச வீடு, உயிர் காக்கும் கலைஞர் காப்புறுதித் திட்டம் போன்றவற்றினால் கிராமப் புறத்தில் உள்ள மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடமேற வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர். ஆகையினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணி சேர வேண்டிய நிலையே சிறு கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. மதுரையில் குறுகிய மன்னனாக அழகிரி கோலோச்சுகிறார். மதுரையில் நடைபெறும் சகல தேர்தல்களிலும் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறார் அழகிரி. தமிழகம் எங்கும் சூறாவளியாகச் சுற்றுப் பயணம் செய்யும் ஜெயலலிதா மதுரைக்குப் போவதாக அறிவித்ததும் சர்ச்சைகள் ஆரம்பித்து விட்டன. மதுரைக்கு வந்தால் உயிருடன் திரும்பிப் போக முடியாது என்று ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனுதாபிகள் மீது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சந்தேகம் கொள்கிறது. எச்சரிக்கை விடுத்தவர்கள் கையும் மெய்யுமாகப் பிடிப்படவில்லை.
இதேபோன்று தமிழக முதல்வருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏட்டிக்குப் போட்டியான கொலை மிரட்டல்களால் தமிழக அரசியல் தரம் தாழ்ந்துள்ளது. மதுரையில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மதுரையில் சிறு சம்பவமாவது ஏற்பட வேண்டும். அதை வைத்தே தமிழக அரசை ஆட்டம் காண வைக்க வேண்டும் என்று அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்துள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு17/10/20

Thursday, October 14, 2010

பா.மா.க.வை புறந்தள்ளியது தி.மு.க.அ.தி.மு.க.வை எதிர்பார்க்கும் பா.ம.க.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடைபெறாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. தமிழக சட்ட மன்றத் தேர்தல் திடீரென நடந்தால் யாருடன் கூட்டணி சேர்வது தொகுதிப் பங்கீடு எப்படி இருக்க வேண்டும் என்று சகல கட்சிகளும் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தன. தமிழக சட்ட மன்றத்தேர்தல் உரிய காலத்தில் தான் நடைபெறும் என்று தெரிந்ததனால் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகள் சற்று ஆறிப்போயுள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய பாட்டாளி மக்கள் கட்சி "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' என்ற மன நிலையில் மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சங்கமமாவதற்குத் தயாராகிறது.
வன்னியரின் உரிமைக்காக என்று ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் நாளடைவில் அரசியல் கட்சியாகப் பரிணமித்தது. வன்னியரின் வாக்கு வங்கியை பாட்டாளி மக்கள் கட்சி அறுவடை செய்ததனால் திராவிடக் கட்சிகள் இரண்டும் அக்கட்சிøயத் தமது கூட்டணியில் சேர்ப்பதற்கு முன்னுரிமைகொடுத்தன. ராமதாஸ் இருக்கும் கூட்டணிக் கட்சிவெற்றி பெறும் என்ற கருத்தினால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூ"டடணி வெற்றி பெறும் என்ற மாயை கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் இவ்வளவுதான் என்று தெரிய வந்ததனால் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அவரை ஒதுக்கத் தொடங்கினார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பாட்டõளி மக்கள் கட்சி வெளியேறியதும் திராவிட முன்னேற்றக் கழகம் இருகரம் கொண்டு அழைக்கும் என்றே டாக்டர் ராமதாஸ் எதிர்பார்த்தார்.
தமிழக முதல்வர் கருணாநிதி அவசரப்படாது மிக நிதானமாகத் தனது முடிவை அறிவித்தார். ராஜ்ய சபையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்வதற்காகத் தூதுவிட்டார் ராமதாஸ். ராமதாஸின் மகன் அன்புமணியின் ராஜ்ய சபை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் அவரை ராஜ்ய சபை
உறுப்பினராக்குவதற்காகவே பாட்டõளி மக்கள் கட்சியின் தூதுக்குழு கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களைச் சந்தித்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று அறிவித்த கருணாநிதி இன்னொரு நிபந்தனையையும் முன்வைத்தார். அன்புமணி ராஜ்ய சபை உறுப்பினராவதற்கு 2013 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்ற கருணாநிதியின் நிபந்தனை ராமதாஸைக் கோபமடைய வைத்தது. உடனடியாகக் கொதித்து எழாமல் பொறுமை காட்டினார் ராமதாஸ்.
கருணாநிதியின் நிபந்தனையை கேட்டு உணர்ச்சிவசப்படாத ராமதாஸ் மீண்டும் ஒருமுறை தூதுக்குழுவை அனுப்பினார். இரண்டாவது தூதும் பயனளிக்காததால் கோபத்தை அடக்கிக் கொண்டு பொறுமை காத்தார் ராமதாஸ். ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணி தமிழகத் தேர்தலில் வெற்றி பெற மாட்டாது என்பதைக் காலம்கடந்து உணர்ந்த ராமதாஸ் அவசரப்படாது பொறுமை காத்தார். இனியும் பொறுமை காக்க முடியாது என்பதனால் தனது கோபத்தை வார்த்தை மூலம் வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டார் ராமதாஸ்.
அன்புமணிக்கு ராஜ்ய சபை உறுப்பினர் பதவி தருவதõக வாக்குறுதியளித்த கருணாநிதி ஏமாற்றி கழுத்தறுத்துவிட்டார் என்று ராமதாஸின் பேச்சு திராவிட முன்னேற்றக் கழகத்தை உசுப்பேற்றிவிட்டது.
கழுத்தறுப்பதும் காலை வாருவதும் எங்களுக்குத் தெரியாது. நம்பியவரை எங்கள் தலைவர் கைவிடமாட்டார் என்று துரைமுருகன் பதிலளித்துள்ளார். நாலு சீற்றுக்காக கட்சி ஆரம்பித்து அமைச்சுப் பதவிக்கு பேரம் பேசும் அரசியல்வாதிகள் மலிந்துவிட்டார்கள் என்று அன்பழகன் காட்டமாகப் பதிலளித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் ராமதாஸுக்குப் பதிலளித்துள்ளதனால் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இடம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவது அரசியல்வாதிகளுக்குப் புதியதல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கருணாநிதியையும் பற்றி ராமதாஸ் குற்றம் கூற ராமதாஸின் குற்றப்பட்டியலை திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்கள் பகிரங்கப்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் தலைமைப் பீடம் விரும்புகிறது. தமிழக கட்சித் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினாலும் காங்கிரஸ் தலைமைப் பீடம் அதனைக் கண்டு கொள்ளப் போவதில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் தயவு இன்றி தேர்தலைச் சந்திக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகிறது. ஆகையினால் இனியும் காத்திருப்பதில் பயனில்லை என்று உணர்ந்து விட்டார் ராமதாஸ். ஜெயலலிதா அழைப்பு விடுத்தால் உடனடியாக ஒப்புதலளிக்கும் மன நிலையில் பாட்டõளி மக்கள் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக காத்திருக்க ஜெயலலிதா காங்கிரஸ் கட்சி இல்லாத பலமான கூட்டணியை அமைக்கத் தயாராகிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாகப் போராட வேண்டி ஏற்படும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இது சாதகமாக அமையும். அதேவேளை பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் என்று உறுதியாகக் கூற முடியாத நிலை ஏற்படும்.
அன்புமணிக்கு ராஜ்ய சபை உறுப்பினர் பதவி தரும் கட்சியுடன் தான் ராமதாஸ் கூட்டணி சேர்வார். இல்லையேல் தனித்துப் போட்டியிட்டு திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு10/10/10

கட்சியை வெறுப்பேற்றும் அழகிரிஅமைதி காக்கத் தவிக்கும் கலைஞர்

திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நிலவிய வாரிசுப்போர் விரிசல் அடைந்து கொண்டு வருகிறது. கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின்தான் என்ற நிலையே நிலவியது. அழகிரியின் அரசியல் பிரவேசத்தின் பின்னர் இந்த நிலை ஆட்டம் காணத் தொடங்கியது. கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின் தலைமை பொறுப்பை ஏற்று கட்சியை வழி நடத்துவார் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.
கருணாநிதியின் அரசியல் வாரிசாக ஸ்டாலினும் இலக்கிய வாரிசாக கனிமொழியும் வளர்ந்து வந்தனர். சந்தர்ப்பவசத்தினால் கனிமொழியும் அரசியல்வாதியானார். கனிமொழியின் அரசியல் பிரவேசம் ஸ்டாலினுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலையும் கொடுக்கவில்லை. மத்திய அரசை கனிமொழியும் தமிழக அரசை ஸ்டாலினும் எதுவித பிரச்சினையும் இன்றி பிரதிநிதித்துவப்படுத்தினர். தமிழகத்தின் தென் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்ப்பதற்காக மதுரையில் தங்கிய அழகிரி அரசியலில் பிரவேசித்த பின்னர் ஸ்டாலினுக்கு கட்சிக்குள்ளேயே அச்சுறுத்தல் ஏற்பட்டது.
முதல்வர் கருணாநிதி இளவல் ஸ்டாலின் ஆகிய இருவரையும் சுற்றியே திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ச்சியடைந்தது. ஸ்டாலின் மீது விருப்பம் இல்லாதவர்களும் அவரை வெறுப்பதில்லை. அழகிரியின் அரசியல் பிரவேசத்தின் பின்னர் இந்த நிலை மாற்றமடைய தொடங்கியது. ஸ்டாலினைப் பிடிக்காதவர்கள் அழகிரியின் புகழைப் பாடத் தொடங்கினர். கட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஸ்டாலினின் ஆளா? அழகிரியின் ஆளா? என்பது போன்ற கேள்வி எழத் தொடங்கியது.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் ஏற்படும் பிரச்சினைகள், எதிர்க்கட்சியினரதுதொல்லைகள் கூட்டணிக் கட்சிகளின் கழுத் தறுப்புக்கள் எல்லாவற்றையும் தனது அரசியல் அனுபவத்தின் மூலம் தீர்த்து வைக்கும் தமிழக முதல்வர் கருணாநிதியால் தன் மகன் அழகிரியைச் சமாதானப்படுத்த முடியவில்லை. அழகிரியின் அறிக்கைகளும் பேட்டிகளும் உரைகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் பூசலை ஏற்படுத்துகின்றன.
கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்வதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்கள் அனைவரும் பகிரங்கமாக கூறி வருகின்றனர். ஆனால் அழகிரியின் கருத்து இதற்கு எதிர்மாறாக உள்ளது. கருணாநிதிதான் தலைவர். தமிழகத்தின் அடுத்த முதல்வர் கருணாநிதிதான் என்று உறுதியாகக் கூறி வருகிறார் அவர். தகப்பனின் பின்னர் தன் தம்பிக்குப் பட்டமெதுவும் செய்யப்படுவதை அழகிரி விரும்பவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான பத்திரிகைகள் இதனை ஊதிப் பெரிதாக்குகின்றன.
கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அழகிரிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. செம்மொழி மாநாட்டில் நடைபெற்ற சில சிறப்பு அரங்கங்கள் வெளியீட்டு விழாக்கள் ஸ்டாலினின் தலைமையில் நடைபெற்றன. ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அழகிரிக்குக் கொடுக்கப்படவில்லை.
செம்மொழி மாநாட்டில் முதல்வர் கண்காட்சியைத் திறந்து வைக்கும் பொறுப்பு அழகிரிக்கு வழங்கப்பட்டது. டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்ததனால் அதனைத் திறந்து வைக்கும் சந்தர்ப்பம் அழகிரிக்குக் கிடைக்கவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழõ மூன்று வாரங்களுக்கு முன்னர் நாகர்கோவிலில் நடைபெற்றது. அழைப்பிதழில் தென் மண்டல அமைப்பாளராக அழகிரியின் பெயர் இல்லை. கொதித்துப் போனவர்கள் தென் மண்டலத்தில் உள்ள அண்ணா அழகிரியின் அன்புத் தம்பிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புகழ் பரப்பும் மாநாடுகளில் ஒன்று முப்பெரும் விழா. அந்த விழாவில் கலந்து கொள்வது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களினதும் தொண்டர்களினதும் தார்மீகக் கடமைகளில் ஒன்று. அழைப்பிதழில் அழகிரியின் பெயர் இல்லாததனால் முப்பெரும் விழாவில் அழகிரி கலந்து கொள்ளமாட்டார் என்ற தகவல் பரவியது. அழகிரியைச் சமாதானப்படுத்த முதல்வர் கருணாநிதி பலமுறை முயன்றõர். அழகிரி தரப்பில் இருந்து சாதகமான பலன் கிடைக்கவில்லை.
கட்சி மாநாட்டு அழைப்பிதழில் யாருடைய பெயர் அச்சடிக்கப்பட வேண்டும் என்று யாப்பிலே கூறப்பட்டுள்ளது. அழகிரியின் பதவி கட்சி யாப்பில் உள்ளடக்கப்படவில்லை. அழகிரிøயச் சமாதானப்படுத்துவதற்காக அழகிரியை வரவேற்று பத்திரிகை விளம்பரம் பிரசுரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதையாக பத்திரிகை விளம்பரம் பிரச்சினையைக் கொடுத்து விட்டது. அழகிரியைச் சமாதானப்படுத்த பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்தில் குஷ்புவின் பெயரும் இருந்தது. இது அழகிரியின் ஆதரவாளர்களைச் சீண்டி விட்டது.
நாகர் கோவிலில் நடந்த முப்பெரும் விழாவுக்கு அழகிரி செல்லவில்லை. தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழக அரசின் பெரு விழாவாக நடந்த இந்த விழாவையும் அழகிரி புறக்கணித்தார். அழைப்பிதழ்களில் அழகிரியின் பெயர் இல்லாதது அவரின் கட்சித் தம்பிகளை சீண்டிவிட்டது. தஞ்சைப் பெரியகோயிலின் பிரதான வாயிலினால் நுழைந்த அரசியல்வாதிகளின் வாழ்வு அஸ்தமனமானதினால் மூட நம்பிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் முதல்வர் கருணாநிதி கூட பிரதான வாயிலின் மூலம் உள்ளே செல்லவில்லை.
தஞ்சைப் பெரியகோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் சூசகமாக சில செய்திகளை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் 1012 ஆம் ஆண்டு பட்டம் சூட்டிக் கொண்டான். தந்தையும் மகனும் சிறப்பாக ஆட்சி செய்தார்கள் என்பது வரலாறு என முதல்வர் கூறியதன் அர்த்தம் அரசியல்வாதிகளை விழிப்படைய வைத்துள்ளது. 2011ஆம் ஆண்டு தமிழக சட்ட சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று மகன் ஸ்டாலினின் கையில் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை சூசகமாகத் தெரிவித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
தனக்குப் பிறகு ஸ்டாலின்தான் என்பதை இதற்கு முன்பும் பல தடவை முதல்வர் கருணாநிதி சமிஞ்ஞை காட்டியுள்ளார். வெளியில் இருந்து வரும் எதிர்ப்பை சாமர்த்தியமாகச் சமாளித்த அவரால் உள்ளே இருந்து அழகிரி கொடுக்கும் நெருக்குதல்களைச் சமாளிக்க முடியாது திணறுகிறார். அழகிரியின் இச் செயற்பாடு ஜெயலலிதாவுக்குச் சாதகமாக அமைந்து விடுமோ என்று கழக கண்மணிகள் பயப்படுகிறார்கள். அழகிரியைச் சமாளிப்பதா அல்லது புறந்தள்ளுவதா என்பதை முதல்வர் கருணாநிதி முடிவெடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு03/10/10

ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்பாதுகாப்பை அதிகரிக்கக் கோரிக்கை

திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியன நடத்தும் பிரமாண்டமான கூட்டங்களினால் தமிழக நகரங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு கட்சி கூட்டம் நடத்தும் அதே இடத்தில் மிகக் குறுகிய கால இடைவெளியில் அடுத்த கட்சி கூட்டத்தை நடத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தான் இதுவரை ஏட்டிக்குப் போட்டியாகக் கூட்டத்தை நடத்தின. இந்த இரண்டு கட்சிகளுக்கும் போட்டியாக இப்போது காங்கிரஸ் கட்சியும் பிரமாண்டமான கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தும் கூட்டங்களுக்கு ஏராளமான மக்கள் கூடுகின்றனர். ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டங்களில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து தமிழக ஆளும் கட்சி கொஞ்சம் மிரண்டு போயுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இப்படித்தான் கூட்டம் கூடியது. தேர்தல் முடிவு எமக்குச் சாதகமாக அமைந்தது என்று திருப்திப்படுகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழகத்தின் சகல நகரங்களிலும் கூட்டம் நடத்தும் ஜெயலலிதா மதுரையில் கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்த தினத்தில் இருந்து அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மதுரையிலே மீனாட்சி அம்மன் ஆலயம் இருப்பதனால் மதுரை அம்மாவின் ஆட்சி என்பார்கள். தமிழக அரசியலைப் பொறுத்தவரை மதுரை அண்ணனின் ஆட்சி என்பார்கள். அழகிரியை மதுரையில் உள்ளவர்கள் அண்ணன் என்றே அழைப்பார்கள். அண்ணன் அழகிரியின் கோட்டையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் அம்மா காலடி வைக்கக் கூடாது என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு போதாது எனவும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது. ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து மனுக் கொடுத்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் பற்றி தமிழக அரசு தீவிர விசாரணை செய்து வருகிறது. மதுரைக்கு வந்தால் கொல்லப்படுவார் என்று ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலின் பின்னணியில் அழகிரியின் அனுதாபிகள் இருப்பதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சந்தேகப்படுகிறது.
மதுரையில் ஜெயலலிதா கூட்டம் நடத்தும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அழகிரிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்பதனால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருப்பதற்குரிய முன் ஏற்பாடுகளை தமிழக அரசு எடுக்கவுள்ளது. மதுரைக் கூட்டம் வெற்றியளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா விரும்புகிறார். மதுரையில் ஜெயலலிதா நடத்தும் கூட்டம் தோல்வி அடைய வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது. ஆகையினால் மதுரையில் நடைபெறும் கூட்டத்துக்கு அதி உச்ச பாதுகாப்பை தமிழக அரசு வழங்கும்.
தமிழக ஆட்சியைத் தக்க வைப்பதற்காக கருணாநிதியும் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஜெயலலிதாவும் காய்களை நகர்த்தி வரும்வேளையில் ஆட்சியில் பங்கு பெறுவதற்கான திட்டங்களுடன் காங்கிரஸ் கட்சியும் களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தலில் போட்டியிட்டால் படுதோல்வி அடையும் திராவிடக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தமிழகத் தேர்தலில் எதனையும் சாதிக்க முடியாது. என்பதை காங்கிரஸ் தலைமைப் பீடம் நன்கு உணர்ந்துள்ளது.
கருணாநிதியுடனா, ஜெயலலிதாவுடனா கூட்டணி என்று காங்கிரஸ் தலைமைப் பீடத்தைக் கேட்டால் கருணாநிதியுடன் தான் கூட்டணி என்று காங்கிரஸ் தலைமைப் பீடம் பட்டென பதில் கூறிவிடும். கருணாநிதிக்கும் இது நன்கு தெரியும். அதனால் தான் இளங்கோவனின் பேச்சுக்கு எந்தவிதமான பதிலையும் கருணாநிதி வெளியிடுவதில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கருணாநிதியின் குடும்பத்தையும் யாராவது விமர்சித்தால் சாட்டையடி கொடுப்பது போல் பதிலளிக்கும் கருணாநிதி இளங்கோவனின் இயலாமையை பற்றி நன்கு தெரிந்த படியினால் அதற்கு பதிலளிப்பதில்லை.
கருணாநிதியை அனுசரித்துப் போக வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமைப் பீடம் உறுதியாக உள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது கூட்டணியைப் பற்றி யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று குலாம் நபி ஆஷாத் மறைமுகமாக இளங்கோவனுக்கு எச்சரிக்கை விடுத்தார். அந்தக் கூட்டத்திலிருந்து பாதியிலேயே இளங்கோவன் வெளியேறி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
ராகுல்காந்தி, இளங்கோவன், போன்றவர்கள் கருணாநிதியுடனான கூட்டணியை விரும்பவில்லை. சோனியா காந்தியும் மன்மோகன் காந்தியும் கருணாநிதி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். சோனியாவின் முடிவுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எதுவும் செய்வதற்கு விரும்ப மாட்டார்கள். இளங்கோவனும் சோனியாவின் விருப்பத்துக்கு மாறாக எதனையும் செய்வதற்கு இப்போதைக்குத் தயாராக இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் பிரிந்து விட்டால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், விஜயகாந்தும் பயனடைந்து விடுவார்கள். காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழக் கூட்டணியில் இப்போதைக்கு பிளவு ஏற்படும் சூழ்நிலை இல்லை. இளங்கோவன் போன்றவர்கள் எதிர்ப்புக் காட்டினாலும் சோனியாவின் முடிவுக்கு தமிழக காங்கிரஸ் கட்டுப்பட்டு விடும்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு26/09/10

Thursday, October 7, 2010

தி.மு.க.வுக்கு தலைவலியான இளங்கோவன்விஜயகாந்தை அரவணைக்கத் துடிக்கிறார்



தமிழக சட்ட சபைத் தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க பிரதான கட்சிகள் அனைத்தும் முனைப்புக் காட்டி வருகின்றன. திராவிட முன்னேற்றக் கழக, காங்கிரஸ் கூட்டணி பலமாக இருப்பதாக இரண்டு கட்சிகளின் தலைவர்களும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸின் தயவில் தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்கிறது. காங்கிரஸ் கட்சிக்குரிய பங்கை முதல்வர் கருணாநிதி தரவில்லை என்ற கோபம் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் உள்ளது. தமிழக ஆட்சியில் பங்குதராத திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று வெளிப்படையாகவே தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிப்பவர்களில் முதலிடத்தில் உள்ளார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான இளங்கோவன். எதிர்க்கட்சிகள் கொடுக்கும் தலையிடியை விட அதிகளவான தலையிடியைக் கொடுக்கிறார் இளங்கோவன். திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு எதிரான இளங்கோவனின் கண்டன அறிக்கைகளும் அனல் தெறிக்கும் உரைகளும் தினசரிகளில் தலைப்புச் செய்தியாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எப்படித்தான் தலைகீழாக நின்று திராவிட முன்னேற்றக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதியையும் விமர்சித்தாலும் முடிவு காங்கிரஸ் தலைவி சோனியாவின் கைகளிலேதான் உள்ளது. இளங்கோவன் திராவிட முன்னேற்றக் கட்சியை விமர்சிப்பதும் காங்கிரஸ் கட்சி இளங்கோவனை எச்சரிக்கை செய்வதும் தொடர்கதையாகி உள்ளது.
இளங்கோவனின் விமர்சனம் உச்சக் கட்டத்தை அடையும் வேளை காங்கிரஸ் தலைமைப் பீடம் அவரை எச்சரிக்கும். அதன் பின்னர் இளங்கோவன் பணிந்து போவார். இளங்கோவனின் விமர்சனம் உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில் கூட்டணியைப் பற்றி யாரும் விமர்சிக்கக் கூடாது என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். இளங்கோவன் இனிமேல் அடங்கி விடுவார் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நினைத்தது. வழமையாக அடங்கிவிடும் இளங்கோவன் முன்னை விட அதிகமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சீண்டி வருகிறார்.
இளங்கோவனின் பேச்சை டில்லி கவனத்தில் எடுக்காது என்ற கணக்கு தவறு என்பதை காலம் கடந்து உணர்ந்தது திராவிட முன்னேற்றக் கழகம். காங்கிரஸ் தலைமைப் பீடம் எச்சரித்தும் இளங்கோவன் அடங்கவில்லை என்றால் இளங்கோவனின் பின்னணியில் பலமான சக்தி ஒன்று இருப்பதாக திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பிரச்சினை உண்டாக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்து போக வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கருதுகிறார்கள். காங்கிரஸைக் கைவிட்டால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்து கொண்ட முதல்வர் கருணாநிதி கூட்டணியில் இருந்து வெளியேறக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.
ஜெயலலிதாவும் விஜயகாந்தும் இணைந்தால் அந்தக் கூட்டணி பலமாகி விடும் என்ற கருத்து உள்ளது. இருவரையும் இணைய விடாமல் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இதே பயம் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ளது. ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்வதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. விஜயகாந்தை, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைப்பதற்கு காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தூக்கி ஏறிந்தால் காங்கிரஸுடன் கூட்டு சேரத்தயார் என்று விஜயகாந்த் சூசகமாகத் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டு விஜயகாந்துடன் கூட்டணி அமைக்கும் விஷப் பரீட்சைக்கு காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. காங்கிரஸை விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் அதன் பின்னர் விஜயகாந்துடன் வெளிப்படையாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தத் தடையும் இருக்காது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இருக்கையில் விஜயகாந்த்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஏற்படும் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு நன்றாகத் தெரியும்.
கருணாநிதியையும், விஜயகாந்தையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்தும் திட்டம் காங்கிரஸிடம் இருக்கிறதோ என்ற சந்தேகம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்களில் கட்டளைக்குக் கீழ்ப்படியாது இளங்கோவன் வெளியிடும் கருத்துக்களால் இந்தச் சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளது.
இளங்கோவனின் விருப்பத்துக்கு மாறாக திராவிட முன்னேற்றக் கழக கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் இளங்கோவன் தனி வழி செல்வார். இளங்கோவனும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப்பிடிக்காத தமிழக காங்கிரஸ் தலைவர்களும் பிரிந்து சென்று விஜயகாந்துடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பார்கள். விஜயகாந்த், இளங்கோவன் கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் சகல தொகுதிகளிலும் போட்டியிடும். திராவிட முன்னேற்றக் கழகத்தை விரும்பாதவர்களும் காங்கிரஸ் கட்சி அபிமானிகளும் விஜயகாந்த், இளங்கோவன் கூட்டணியை ஆதரிப்பார்கள். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் இளங்கோவனின் ஆட்கள் போட்டியிட மாட்டார்கள். விஜயகாந்த், இளங்கோவன் கூட்டணி கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸுடன் இணையும் அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி ஏற்படும். இவற்றையெல்லாம் காங்கிரஸ் கட்சி இரகசியமாகத் திட்டமிடுவதாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
ஜெயலலிதாவுடன் காங்கிரஸ் இணைவதை விரும்பாத மூப்பனார் தனிக்கட்சி ஆரம்பித்து கருணாநிதியுடன் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் காங்கிரஸுடன் இணைந்த மூப்பனார் தனது அரசியல் எதிரியான ஜெயலலிதாவுடனும் கை கோர்த்தது பழைய வரலாறு. அப்படி ஒரு வரலாற்றைத் திரும்பவும் உருவாக்குவதற்கு இளங்கோவன் முயற்சி செய்வதாக திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களின் இந்தக் குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் தலைமைப் பீடத்திடம் உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகள் மூலம் இதற்கான விடை வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
வர்மா,
வீரகேசரிவாரவெளீயீடு 19/09/10

விஜயகாந்தை எதிர்பார்த்துகாத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி




விஜயகாந்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இதுவரை இரகசியமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை தமிழக முதலமைச்சராக்கி அழகுபார்த்த காங்கிரஸ் கட்சி விஜயகாந்தை முதல்வராக்குவதற்கு முயற்சி செய்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று அறிக்கை விடுகிறார்கள். ப.சிதம்பரம், தங்கபாலு, வாசன், இளங்கோவன் ஆகிய பலமிக்க தலைவர்கள் தமக்குப் பின்னால் பலரைச் சேர்த்து வைத்துள்ளனர்.இந்தப் பின்னணி எதுவும் இல்லாத தமிழக காங்கிரஸை உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் ஆசீர்வாதத்துடன் தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற்றது. பெரும் கோஷ்டி மோதல்களுக்கு மத்தியில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் தேர்தலில் யுவராஜ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தின் இளைஞர் காங்கிரஸ் பயிற்சிப்பட்டறையின் போது ராகுல் காந்தி விஜயம் செய்து இளைஞர்களை ஊக்குவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் ஆதிக்கம் இல்லாத இளைஞர் காங்கிரஸ் தலைவரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்பினார். அதிலும் தமது செல்வாக்கைக் காட்ட தமிழகத் தலைவர்கள் முயற்சி செய்தனர். இறுதியில் வாசனின் விருப்புக்குரிய யுவராஜ் இளைஞர் காங்கிரஸ் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரான யுவராஜ், விஜயகாந்தை இரகசியமாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகப் பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்தி வெளியானது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கரிஸ் தலைவர்கள் வாய் கிழியப் பேசி வருகின்றனர். ஆனால் அதற்கான முயற்சிகள் எதனையும் அவர்கள் செய்யவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்துவதற்கான திட்டத்துடன் களமிறங்கியுள்ளார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் ஆசீர்வாதம் பெற்ற யுவராஜ், விஜயகாந்தைச் சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது. ராகுல் காந்தியின் உத்தரவின்றி இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும். கருணாநிதியின் குடும்பத்தை தலையெடுக்க விடக் கூடாது என்று ஜெயலலிதா அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் அதற்குரிய செயற் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும். கருணாநிதியின் குடும்பத்தைத் தலையெடுக்க விடக் கூடாது என்ற திட்டங்களுடன் செயற்படுகிறார் ராகுல் காந்தி.
யுவராஜ், விஜயகாந்த் ஆகியோர் சந்தித்தது பற்றி பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்தி வெளியானபோது இருவரும் இதனை மறுத்து அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியையும் காங்கிரஸின் ஆதரவில் உள்ள தமிழக அரசையும் கடுமையாக விமர்சிக்கும் விஜயகாந்தை, யுவராஜ் சந்தித்ததற்கான நம்பக் கூடிய காரணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை.
தமிழகத்தை ஆட்சி செய்யக் கூடிய பலம் திராவிட முன்னேற்றக் கழகத்திடமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமும் மட்டுமே உள்ளது. இந்தியத் தேசியக் கட்சியான காங்கிரஸினதும் தமிழகத்தின் சிறிய கட்சிகளின் ஆதரவும் இருந்தால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் நன்றாக உணர்ந்துள்ளனர். ஆகையினால் காங்கிரஸ் கட்சியைக் கைவிட தமிழக முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை. காங்கிரஸுடன் கூட்டுச் சேர்வதற்கு என்று ஜெயலலிதா துடிக்கிறார்.
இந்தியத் தேசியக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் வலு விழந்த நிலையில் உள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்குத் தமிழகத்தின் சிறிய கட்சிகள் கூட விரும்பவில்லை. தமிழகத்தின் சிறிய கட்சிகள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவதற்கே தமிழகத்தின் கட்சிகள் அனைத்தும் முண்டியடிக்கின்றன. காங்ககிரஸுடன் விஜயகாந்த் இணைந்தால் தமிழகத்தின் சில கட்சிகள் அந்தக் கூட்டணியில் சேர்வதற்கு முண்டியடிக்கும் நிலை ஏற்படலாம்.
காங்கிரஸுடனான விஜயகாந்த் நடத்திய பேச்சுவார்த்தை விஜயகாந்துக்குத் திருப்தியளிக்கவில்லைப் போல் தெரிகிறது. 30, 40 தொகுதிகளுக்கு கூட்டணி சேரத் தயாராக இல்லை என்று விஜயகாந்த் பகிரங்க அறிக்கை விட்டிருப்பது அவர் அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதாகத் தோன்றுகிறது. காங்கிரஸின் தயவில் ஆட்சியைப் பிடிக்க விஜயகாந்தும் விஜயகாந்தின் தயவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் வியூகம் அமைத்துள்ளன.
விஜயகாந்தின் பக்கம் ராகுல் காந்தி சாய்ந்திருப்பதை நன்றாக அறிந்து கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி, காங்கிரஸுடனான கூட்டணி உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸின் கூட்டணியைத் தீர்மானிப்பது சோனியா காந்தி தான் என்பது வெளிப்படையானது. சோனியா காந்தி இன்னமும் விஜயகாந்தின் மீது முழு நம்பிக்கை வைக்கவில்லை. ஆகையினால் கூட்டணிக்குள் இப்போதைக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதை முதல்வர் கருணா
நிதி தெளிவாகத் தெரிந் துள்ளார். விஜயகாந்தின் பக்கம் காங்கிரஸைக் கொண்டு செல்வதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்து வரும் வேளையில் காங்கிரஸ் கட்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸைப் பிரிக்க வேண்டும் என நினைக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேரத் துடிக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்வதை விரும்பவில்லை. கூட்டணி பற்றி விஜயகாந்த் உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னர் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும்.
வர்மா,
வீரகேசரிவாரவெளீயீடு 12/09/10