Saturday, September 29, 2018

கருணாஸை அச்சுறுத்தும் தமிழக அரசு



ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையில் தமைழக சட்டசபை உறுப்பினரானவர் கருணாஸ்.நகைச்சுவை நடிகராகத் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்ட கருணாஸை அரசியல்வாதியாக  உருவாக்கியவர்  ஜெயலலிதா. ஜெயலலிதா செய்த அரசியல் தவறுகலில் இதுவும் ஒன்று. மக்களின் மத்தியிலும் சமூகத்தின் மத்தியிலும் செல்வாக்கில்லாத கருணாஸை இரட்டை இலைச்சின்னம் சட்டசபை உறுப்பினராக்கியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினரான கருணாஸை தமிழக அரசு கைது செய்துள்ளது.

 முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை தியாகநகர்  பொலிஸ் கமிஷ்ச்னர் தியாகராஜன் ஆகியோரை விமர்சித்ததால்  கருணாஸ் கைது செய்யப்பட்டார்.  கருணாஸைக் கைது செய்த பொலிஸார், கருணாஸுக்கு எதிரான  பழைய    பழைய புகார்களைத் தூசு தட்டத் தொடங்கியது.   கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி ஐபிஎல் போட்டிக்கு எதிராகத் தடையை மீறி கருணாஸ், ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது  கருணாஸைக் கைதுசெய்த பொலிஸார்  பின்னர் விடுதலை செய்தனர். இப்போது அதற்காகவும் அவரைக் கைது செய்த பொலிஸார் மொத்தமாக எட்டுப் பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.  
 
ஜெயலலிதா மரணமானதும்,  சசிகலாவின் தலைமையிலும் ஓ.பன்னீர்ச்செல்வம்       தலமையிலும்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டானது. அந்த நேரத்தில் கருணாஸ், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.  சகிகலா சிறைக்குச் சென்றபின்னர் அவரால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமையை ஆதரித்த கருணாஸ், சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழக அரசை எதிர்த்துக் குரல்கொடுத்தார். கூவத்தூர் கூத்து எல்லாம் எனக்குத் தெரியும் எனவும் மிரட்டினார். சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்தித்த பின்னர் கருணாஸ் கைது செய்யப்பட்டதால் அது அரசியல் நோக்கம் கொண்டதாகக் கருதப்படுகிறது. பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கும் கருணாஸ் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்துக்காகக் கைது செய்யப்படலாம்.

பாரதீஜ ஜனதாக் கட்சியின் செல்லப் பிள்ளைகள் என்பதால் எஸ்.வி.சேகர், எச்.ராஜா ஆகிய இருவரையும் கைது செய்வதற்கு தமிழக அரசு அஞ்சுகிறது. பெண்களை இழிவுபடுத்திய, பொலிஸ் அதிகாரியை அவமானப்படுத்திய, நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய, மதங்களுக்கிடையில் பிரச்சினையை உருவாக்கிய குற்றங்களைப் புரிந்த   எஸ்.வி.சேகர், எச்.ராஜா ஆகிய இருவரையும் கைது செய்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டும் இதுவரை இருவரும்  கைது செய்யப்படவில்லை. பெண் ஊடகவியலாளரையும் பெண்களையும் அவமானப்படுத்தியவர் எஸ்.வி.சேகர். கைதுக்குப் பயந்து தலைமறைவானவர் மீண்டும் வெளியே தலை காட்ட ஆரம்பித்துவிட்டார். முஸ்லிம்களின் பகுதியினூடாக தடையையும் மீறி விநாயகர் ஊர்வலம்   நடத்த முற்பட்ட எச்.ராஜாவை பொலிஸார் தடுத்தனர். அப்போது பொலிஸ் அதிகாரியையும் நீதிமன்றத்தையும் அவமானப்படுத்தினார்.  பாரதீஜ ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளரான எச். ராஜாவை பொலிஸாரால் நெருங்க முடியவில்லை.

பொதுக் கூட்ட மேடையில் எச். ராஜா வீற்றிருக்கையில் அங்கு உரையாற்றிய ஒருவர் “சிங்கம் ராஜா மேடையில் இருக்கிறார். முடியுமானால் கைது  செய்என சவால் விடுத்தார்.தமிழக ஆளுநரை எச். ராஜா சந்தித்தார். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மே 18 இயக்க அமைப்பாளர் திருமுருகன் காந்தி  ஐம்பது நாட்களுக்கும் மேலாக வைத்திய வசதி இன்றி வாடுகிறார். தமிழக அரசாங்கத்துக்கு வேண்டப்படாதவர்    என்பதால் திருமுருகன் காந்தியின் மீது கடுமையான குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கும்  மத்திய அரசுக்கும் வேண்டியவர்கள் என்பதால் சேகரும் ராஜாவும் சுதந்திரமாகத் திரிகிறார்கள். தமிழக அரசை எதிர்ப்பதால் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கூவத்தூரில் நடந்ததை வெளிப்படுத்துவேன் என கருணாஸ் மிரட்டுகிறார். மிரட்டல் மிரட்டலாகத்தான் இருக்கும் உண்மையை கருணாஸ் வெளிப்படுத்தமாட்டார்.

Sunday, September 16, 2018

மறுக்கப்படும் நீதியால் காவுகொள்ளப்படும் உண்மை



இலங்கைத் தமிழர்களை உலக நாடுகளில் இருந்து அந்நியப்பட வைத்த அந்தத் துயர சம்பவம் நடைபெற்று இருபத்தேழு வருடங்கள் கடந்துவிட்டன. குற்றமற்றவர்கள் விடுதலையாகி வெளியே வருவார்கள் என்ற பெற்றவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதால் இலங்கைத் தமிழர்களுக்கும்  தமிழகத் தலைவர்களுக்கும் இடையிலான தொப்புள்கொடி உறவு துண்டிக்கப்பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு நடைபெறும் அநீதிகளைத் துயரத்துடனும்  அனுதாபத்துடனும் பார்த்த இந்தியா பகை உணர்ச்சியுடன் பார்க்கத் தொடங்கியது.

 1991 ஆம் ஆண்டு நடந்த இந்தியப் பொதுத் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மே மாதம் 21 ஆம் திகதி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்ற ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலைக் குண்டுதாரியால் இலக்கு வைக்கப்பட்டதால்  ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என புலன் விசாரணையில் தெரிய வந்தது. தற்கொலைக் குண்டு என்ற கோணம் விடுதலைப் புலிகள் மீது நேரடியாகக் குற்றம் சாட்டியது. இலங்கைக்குச் சென்ற அமைதிப் படை வடக்கு ,கிழக்கில் செய்த கொடுமைகளால் கோபமடைந்த பிரபாகரனின் உத்தரவில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட செய்தி இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழருக்கும் இருந்த பாசப் பிணைப்பை அறுத்தெறிந்தது.

விடுதலைப் புலிகளின் அமைப்பைச் சேர்ந்த ஒற்றைக் கண் சிவராசன், தணு, சுபா என்ற கோணத்தில் விசாரனையை ஆரம்பித்த இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் சிவராசனுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்தனர்.  இந்தியத் தலைவர், நேரு குடும்பத்தின் வாரிசு கொல்லப்பட்டதால் குற்றவாளிகளைப் பிடித்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற அவசரம்  புலனாய்வு அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக உண்மையான குற்றவாளிகளை நெருங்காது சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களைக் குற்றவாளியாக்கினார்கள். 26 பேர் மீது 1992 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 1998 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேன்முறையீட்டின் பின்னர்  1991 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி  நளினி ,சாந்தன், முருகன்,பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜெயக்குமார்,ரொபேட், ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.  2014 ஆம் ஆண்டு  பெப்ரவரி 14 ஆம் திகதி மூவரின் மரணதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்த உச்சநீதிமன்றம் மூவரின்  விடுதலையை தமிழக அரசு முடிவு செய்யலாம் எனப் பரிந்துரைத்தது.

தமிழக அரசு, தமிழக கவர்னர், தமிழக முதலமைச்சர்கள், ஜனாதிபதி,உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையில் அரசியல் காரனங்களுக்காகச் சிக்கித் தவித்த எழு பேரின் விடுதலை கைக்கெட்டியதூரத்தில் இருக்கிறது.

பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது: ராஜிவ் கொலை தொடர்பான விசாரணை முழுமையடையவில்லை. இந்த வழக்கில் 24 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக கவர்னருக்கு 2015 டிசம்பரில் கருணை மனு அனுப்பினேன். இரண்டு ஆண்டுகளாகியும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லைஎன அவர் அதில் கூறியிருந்தார்.

மத்திய அரசு தொடர்ந்த வழக்கு மற்றும் பேரறிவாளன் தொடர்ந்த வழக்குகளை இணைத்து விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு   இந்த வழக்கை முடித்து வைத்தது. 'பேரறிவாளன் கொடுத்துள்ள கருணை மனுவை தமிழக ஆளுநர் பரிசீலிக்க வேண்டும்' என கூறியுள்ள உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் வழக்கை முடித்து வைப்பதாக கூறியுள்ளது.

இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழு பேருக்கும் நேரடியாக எந்த நிவாரணத்தையும் உச்ச நீதிமன்றம் அளிக்கவில்லை. அதே நேரத்தில் 'பேரறிவாளனின் கருணை மனுவை தமிழக கவர்னர் பரிசீலிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஆறு பேரும் தங்களை விடுதலை செய்யும்படி கவர்னருக்கு கருணை மனுவை அனுப்பும் வாய்ப்பு ஏற்பட்டது.

ஆளுநரின் கையில் ஏழு பேரின் தலைவிதி தங்கி உள்ளது.     விடுதலை செய்யலாம், மறுக்கலாம், தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பலாம், மாநில அரசுக்குட்பட்ட வழக்குகளில் ஆளுநரின் முடிவு செல்லுபடியாகும் தேசிய வழக்குகளில் ஆளுநர் தலையிட முடியாது என்ற குறிப்பும் உள்ளது. பாரதீஜ ஜனதாவின் பிரதிநிதியான ஆளுநரின் தலயில் ஏழுபேரின்  விடுதலையை சுமத்திவிட்டு தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

ராஜீவ் கொலையைப் பற்றிபல புத்தகங்களும் திரைப்படங்களும் ஆவணப் படங்களும்  வெளிவந்துள்ளன. அவற்றில் காணப்படும்  பல சந்தேகங்களுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.  சிபிஐ தலமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்த  ரகோத்தமன், வெளியிட்ட புத்தகத்தில் சாந்தனிடம் மன்னிப்புக் கேட்டுளார். சிபிஐ தேடிய சாந்தன் , கைது செய்யப்பட்டு  சிறையில் இருப்பவர் அல்ல என்ற உண்மையை வெளியிட்டதுடன் சாந்தனுக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டில்லிப் பத்திரிகையாளர் பெரோஸ் அஹ்மத்  எழுதிய புத்தகத்தில் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளார்.
''இது என்னுடைய கற்பனை அல்ல. பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். ராஜீவ் காந்தி கொலையின் பின்னணிப் பாதுகாப்பை விசாரித்த ஜெயின் கமிஷன் மற்றும் வர்மா கமிஷன் என்ன கூறியது என்பதை முதலில் பார்த்தேன். இவற்றோடு இந்தக் கொலை குறித்து சி.பி.ஐ இயக்குநர் கார்த்திகேயன்,ராஜீவ் கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ அதிகாரி வினோத் குமார் ராஜு, அப்போது சட்ட அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் தமிழக டி.ஜி.பி மோகன்தாஸ்,பத்திரிகையாளர் மனோஜ் மிட்டல் என்று பலர் இது பற்றி சொன்னவற்றை தொகுத்தேன். இப்படி எழுதியவர்கள் எல்லாம் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள். இதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளேன் எனக்குறிப்பிட்டுள்ளார். பாதிகாப்புக் குறைபாடு வெளிநாட்டுச்சதி என்பன பற்றி யாரும் விசாரிக்கவில்லை என பெரோஸ் அஹ்மத் குறைபட்டுள்ளார்.

சிறையில் இருக்கும் நளினி எழுதிய புத்தகத்தின் மூலம் அவர் கேட்ட கேள்விகளுக்கு இதுவரையாரும் பதிலளிக்கவில்லை. ஒற்றைக்கண் சிவராசனுடன் ராஜீவின் கூட்டத்துக்குப் போனது குற்றமா?. எதற்கெனத்தெரியாமல் பற்றி வாங்கிக் கொடுத்தது குற்றமா? சாந்தன் என்ற பெயரில் வாழ்வது குற்றமா? என சாதாரணமானவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத சிபிஐயினால், துறைசார் நிபுணர்களின் கேள்விகளுக்கு எப்படிப் பதிலளிக்க முடியும். விடுதலையானாலும் கொலைக்குற்றவாளிகள் என்ற அவப்பெயருடன்தான் அவர்கள் வாழப்போகிறார்கள். 27 வருட அவலவாழ்க்கையை ஈடு செய்ய யாராலும் முடியாது.

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் கைது செய்யப்பட்டது முதல் அவர்களை விடுவிக்க தீர்மானம் போட்டது வரை 

கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் திகதி  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். முருகன், நளினி, சாந்தன்,பேரறிவாளன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன்,ராபர்ட் பயஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மே 20 1992: பூந்தமல்லியில் தடா நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிறப்பு விசாரணை குழு.

1998 ஜன 28: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

1999  மே 11: இதில் நளினி, சாந்தன்,முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையையும், மற்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனையையும் மீதமுள்ள 19 பேரை விடுவித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1999  அக்டோபர் 8- முருகன்இ நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

ஒக்.17: தமிழக ஆளுநருக்கு 4 பேரும் கருணை மனு அளித்தனர்.

ஒக் .27: கருணை மனுக்களை ஆளுநர் நிராகரித்தார்

நவ.25: கருணை மனுக்களை ரத்து செய்து ஆளுநர் உத்தரவை சென்னை ஹைகோர்ட் நிராகரித்தது. மேலும் சட்டபேரவையின் கருத்துகளை பெற்று புதிய உத்தரவை பிறப்பிக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட்டது ஐகோர்ட்.

2000  ஏப். 19- நளினியின் தூக்கு தண்டனையை குறைக்குமாறு அப்போதைய முதல்வர் கருணாநிதி பரிந்துரை செய்தார்.

ஏப். 21- கருணாநிதியின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றார்.

ஏப். 28: அதே போல் சாந்தன்,முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவருக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது.
2008 மார்ச் : நளினியுடன் பிரியங்கா காந்தி வேலூர் சிறையில் சந்திப்பு

ஆகஸ்ட் 12, 2011- கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டில் ரத்து செய்துவிட்டதாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சரம் தெரிவித்தது.

ஓகஸ்ட் 26: கடந்த 2011-செப்டம்பர் 9-ஆம் தேதி சாந்தன்இ முருகன்இ பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட தேதி குறிக்கப்பட்டது.

ஓகஸ்ட் 30: மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு தமிழக அரசு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து மூவரின் தூக்கு தண்டனை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த கருணை மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியது.

2012 மே 1: மூவரின் பேரின் மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

2014 பிப்.14- மூவரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதையடுத்து அவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டது.

பிப். 19: சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ,ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

மார்ச்: தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு .இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

டிசம்பர் 2015: 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என உச்சநீதிமன்றம் கருத்து

மார்ச் 2016- 7 பேரை விடுவிப்பது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
ஏப்ரல் 2016- தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு
ஜனவரி 2018- 7 பேரை விடுவிப்பது குறித்து மத்திய அரசு 3 மாதத்துக்குள் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

2018  செப் 6: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து மத்திய அரசின் வழக்கை முடித்து வைத்தது.

செப். 9: தமிழக அமைச்சரவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூடியது. அப்போது ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Monday, September 3, 2018

நிழல் தலைவர் ஸ்டாலின் நிஜத் தலைவரானார்


திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவராக ஸ்டாலின்  பொறுப்பேற்பார்  என்ற செய்தி  கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே வரையறை செய்யப்பட்டு விட்டது. சிறந்த ஒரு தலைவரால் வழி நடத்தப்படும் அரசியல் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை தொண்டர்களும் ஏனையவர்களும் ஊகித்து வைத்திருப்பார்கள். சடுதியாக நடைபெறும் சம்பவங்கள் அந்த ஊகங்களை உடைத்தெறிந்தமை வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.

நேருவின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகள் இந்திரா காந்தியை காமராஜர் அரசியலுக்கு அறிமுகப்படுத்தினார். இந்திரா காந்தி கொல்லப்பட்டபின் அவருடைய மகன் ராஜீவ் தலைவரானார்.. ராஜீவ் கொல்லப்பட்டபின் அவருடைய மனைவி சோனியா தலைவரானார்.  ராஜீவ், சோனியா ஆகியோரின் மகன் ராகுல் இப்போ காங்கிரஸ் தலவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வாஜ்பாய்க்குப் பின்னர் பாரதீய  ஜனதாக் கட்சியை  அதவானி வழி நடத்துவார் என எதிர்பார்த்திருந்த வேளை மோடி அலையில் அவர் அடித்துச்செல்லப்பட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில்  அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு இடமில்லை. கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்கள் ஸ்டாலினைத் தலைவராக நினைத்டுக் கொண்டனர். கருணாநிதி நோய் வாய்ப்பட்டிருந்தபோதும், செயற்படாதிருந்த போதும் ஸ்டாலின் சொன்னதையே மூத்த தலைவர்கள்  வழிமொழிந்தார்கள். ஆகையினால் ஸ்டாலின் தலைவரானது ஒன்றும் புதுமையல்ல.

அண்ணாத்துரை மறைந்தபோது நெடுஞ்செழியனா, கருணாநிதியா என்ற போட்டி ஏற்பட்டது. சகல எதிர்ப்புகளையும் தகர்த்து கருணாநிதி தலைவரானார். அப்போது கருணாநிதிக்கு 45 வயது. இப்போது கருணாநிதி மறைந்த பின்னர் எதுவித சலனமும் இன்றி  65 வயதில் ஸ்டாலின் தலைவரானார். கருணாநிதியைப் போன்றே ஸ்டாலினும் அடிமட்டத் தொண்டனாகப் போராடி சிறை சென்று கட்சியின் உயர் பதவியைப் பிடித்துள்ளார்.

கருணாநிதி கட்சித் தலைவனான போது திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் கட்சியாக இருந்தது. தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இந்திய அரசியலில் ஒரு கட்சித் தலைவராக 50 வருடம் வழி நடத்தியவர் கருணாநிதி மட்டும்தான்.

ஸ்டாலினின் முன்னால் மிகப்பரிய பொறுப்புகள் காத்திருக்கின்றன.  சென்னைமேயராகவும் துணை முதல்வராகவும் கடமையாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுக்கும். ஊழலுக்கு அப்பாற்பட்ட தலவராக ஸ்டாலின் விளங்குகிறார். அவருடைய மென்மையான் அரசியல் போக்கை  சிலர் விரும்பவில்லை.
அதிரடி அரசியலில் விருப்பம் கொண்ட அண்ணன் அழகிரி, தம்பி ஸ்டாலினுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி உள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் தனக்குப் பின்னல் இருப்பதாக அழகிரி அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள யாரும் அழகிரிக்கு ஆதரவாக இல்லை. 

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருக்கின்றனர். கட்சிய விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இணைப்பதற்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கட்சியைப் பலப்படுத்தித் தனது தலைமைப் பதவியை வலுப்படுத்துவதற்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

  மு..ஸ்டாலின் கடந்த 1953-ஆம் ஆண்டு மார்ச்  1 ஆம் திகதி கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.   1967ல் முதல் முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தில்  சேர்ந்தார். அதே ஆண்டு 14 வயதாக இருந்த போது,  திராவிட முன்னேற்றக் கழகத்துக்காகப்  பிரசாரம் செய்தார். இதுவே ஸ்டாலினின் முதல் பிரசாரம் ஆகும். 1968ல் திராவிட முன்னேற்றக் கழக  இளைஞர் அணிக்கு முன்னோட்டமாக இளைஞர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார்.

  அதன்பின் சென்னை நியூ கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றார். 1973-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக  பொதுக்குழுவில் உறுப்பினர் ஆனார். 1975-இல் எமர்ஜென்சி காரணமாக சிறைக்கு சென்றார். இந்த சிறை வாழ்க்கை ஸ்டாலினின் அரசியல் வாழ்வில் திருப்பு முனையாக  இருந்தது.   1975-இல் துர்காவை மணந்தார். 1977 இல் உதயநிதி ஸ்டாலின் பிறந்தார். 1978 இல் முதல் திரைப்படத்தை தயாரித்தார்  சில காட்சிகளில் நடித்தார்.

1984 இல் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல்முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ஸ்டாலின்.   1988 இல் ஒரே ரத்தம் படத்தில் நடித்தார். 1989 இல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991 இல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1993-ஆம் ஆண்டு இளைய சூரியன் என்ற இதழை தொடங்கினார்.   1996 இல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிபெற்றார்.

 1996 சென்னையின் 37 ஆவது மேயராக ஸ்டாலின் தேர்வானார். அவர் அப்பதவியில் 2002-ஆம் ஆண்டு வரை நீடித்தார். சென்னையின் மேயரானது ஸ்டாலின் அரசியல் பயணத்தில் மற்றொரு திருப்பு முனையானது. ஜெயலலிதா அமுல் படுத்திய சட்டத்தால் மேயர் பதவிய இழந்தார்.  2001 இல் மூன்றாவது முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்றார். 2001 இல் ஊழல் குற்றச்சாட்டில் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார்.  2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் நிர்வாக துறை அமைச்சரானார். கொளத்தூர் தொகுதியில் வெற்றி 2008 இல்  திராவிட முன்னேற்றக் கழகத்தில்  பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. 2009 இல் தமிழகத்தின் துணை முதல்வரானார். அவர் அப்பதவியில் 2011-ஆம் ஆண்டு வரை நீடித்தார். 2011 இல் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்றார். 2016 இல் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் வென்றார்.

 2016 இல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.  கருணாநிதி நோய்வாய்ப்பட்டதால் 2017 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.  இதைத் தொடர்ந்து  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.  . ஸ்டாலினை தவிர்த்து வேறு  எவரும்  வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் அவர்   தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திராவிட மூன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஸ்டாலின், தனது   முதல் உரையில் மாநில சுயாட்சி, மதசார்பின்மை ஆகியவற்றை வலியுறுத்திப் பேசினார். இந்தியாவுக்கு காவி பூசுபவர்களை எதிர்ப்பேன் என மத்திய அரசையும், முதுகெலும்பில்லாத அரசு என தமிழக அரசையும் கண்டித்துள்ளார். அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பாதையில்  செல்லப்போவதாக ஸ்டாலின் சூழுரைத்துள்ளார்.
”என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே” என்பது கருணாநிதியின் கரகரத்த குரல். “ என் உயிரினும் மேலான கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளே” எனக் கூறி ஸ்டாலின்  தனது உரையை ஆரம்பித்தார்.

திருப்பரம்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் ஸ்டாலினின் தலைமைத்துவத்துக்கு சவால் விடும் களமாக உள்ளது. திருப்பரம் குன்றம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை.. திருவாரூர் கருணாநிதியின் சொந்த ஊர். இந்த இரண்டு தொகுதிகளையும் ஸ்டாலின் எப்படிக் கையாளப் போகிறார் என்பதை அறிய அரசியல் ஆய்வாளர்கள் ஆவலாக உள்ளனர்.

Sunday, September 2, 2018

வடக்கே போகும் மெயில் நூல் நயப்பு


சூரன் .ரவிவர்மாவின் 16 சிறுகதைகளை உள்ளடக்கியதாக இந்த சிறுகதைத் தொகுதி அமைந்திருக்கிறது. இலங்கை ரயில் சேவைகளில் வடக்கே பயணிக்கும் யாழ்தேவி ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கும் சேவையாக இருந்து வந்தது. போர் தீவிரமடைந்து இரு தசாப்தங்களாக இந்த சேவை முடங்கிப் போயிருந்த போதிலும் கூட யாழ் தேவியை மக்கள் மறக்கவில்லை. “வடக்கே போகும் மெயில்என்ற தலைப்பு ஐந்து வருடங்களுக்கு முன் இந்த நூல் வெளிவந்த போதும் என்னை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.
ஈழத்தில் ஒரு சமூக விடுதலைப் போராளியாக வாழ்ந்து காட்டி இன்றைய தலைமுறைக்கும் தனது விளைச்சலை விட்டுச் சென்ற சூரன் அவர்களின் பேரன் ரவிவர்மா அவர்கள். அடிப்படையில் ஊடகவியலாளராக இருந்த போதும் ஈழத்தில் வெளி வந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதிய சிறுகதைகளே இத்தொகுதியில் திரட்டப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகையாளர் கற்பனாவாதியாக, எழுத்தாளனாக
ஒருங்கே கைவரப் பெற்றவர்கள் என்றால் மூத்த எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களையும், இராணுவத்தின் ஷெல் தன் குடும்பத்தையே
தின்ற எழுத்தாளர் சக பத்திரிகையாளர் நெல்லை .பேரனையும், ரவிவர்மாவின் உறவினர் மற்றும் ஊடகவியலாளராகவும் பத்திரிகையாளராகவும் இயங்கிய அமரர் ராஜஶ்ரீகாந்தன் ஆகியோரையும் தான்
நினைவில் கொண்டு வர முடிகிறது. இவர்களோடு ரவிவர்மாவின் சிறுகதைகளை இப்போது தான் வாசிக்கக் கிட்டியது.
வடக்கே போகும் மெயில்என்ற சிறுகதை இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளில் ஒன்று. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் அந்த ரயில் பயண நினைவுகள் தான் எவ்வளவு இனிமை அதே நேரம் அதன் இன்னொரு பக்கம் அவலமானது. சிங்களக் காடையரால் ரயிலில் பயணித்த அப்பாவிப் பயணிகள் கொல்லப்பட்ட வரலாறுகளும், இனத்துவேஷங்கள் சங்கமித்த களமாகவும் இந்தப் பயணம் இனப் பிரச்சனையைத் தண்டவாளத்தில் ஓட்டிக் காட்டும் ஒரு குறு நாடக மேடை. ரவி வர்மா எழுதிய சிறுகதையும் இவ்வாறானதொரு போக்கில் எழுதப்பட்டிருக்கிறது. அத்தோடு ஏனைய சிறுகதைகளின் அடி நாதத்தில் இந்த இனப் பிரச்சனையே மையம் கொண்டிருக்கிறது. ஆகவே தலைப்புகளும் களங்களும் வெவ்வேறாயினும் எல்லாச் சிறுகதைகளுமே வாசகனைவடக்கே செல்லும் மெயில்இருத்தியே பயணிக்கின்றன.
ஈழத்து எழுத்தாளர்களில் ஒரு வகையினர் பிரதேச வழக்குகளைத் தீவிரமாகக் கையாண்டு எழுதுகையில் இன்னொரு சாரார் பொதுத் தமிழில் எழுதத் தலைப்படுவர். வெகுஜனப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவ்வாறான பொதுத் தமிழைக் கையாளும் சிறுகதைகளே அதிகம். இதன் வழியாகப் பரவலான வாசகர் வட்டத்துக்குச் சொல்ல வந்த சேதி போய்ச் சேரும் சிறப்புண்டு. ரவிவர்மா தன் மொழியாடலில் உரையாடல் பகுதிகளில் ஈழத்துப் பேச்சுத் தமிழையும் கதையோட்டத்துக்குப் பொதுத் தமிழையும் கையாண்டிருக்கிறார்.
சைக்கிள் களவு போன கதையை வேடிக்கையாகபோனால் போகட்டும்சிறுகதை வழியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். யாழ்ப்பாண வாழ்வியலில் சைக்கிள் ஒரு பிரதான ஊர்தி அதே சமயம் சைக்கிள் களவில் இருந்து தப்பியவரும் அரிது. “பொன்னுக்கிழவிகதை படித்த போது ராஜஶ்ரீகாந்தனின் சிறுகதை ஒன்றைப் படித்த அனுபவம். ஈழநாடு வார இதழ் போன்று ஈழத்துப் பத்திரிகை உலகில் தினக்குரலின் பாய்ச்சல் வேகமானது. இவ்விரண்டு பத்திரிகைகளிலும் தன் கதைகளை எழுதியிருக்கிறார். அத்தோடு ஈழத்தின் மூத்த சஞ்சிகைமல்லிகைஇலும் இவர் பங்களிப்பு வந்திருக்கிறது. அது போல் இன்றும் தசாப்தம் கடந்து வெளிவரும்ஞானம்சஞ்சிகையிலும் எழுதிய சிறுகதையும் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
வானொலியில் பாட்டுக் கேட்கும் போது நம்மையறியாமலேயே நம் குடும்ப விபரங்களைப் பகிர்வதன் ஆபத்தைஎன்னைத் தெரியுமா?” சிறுகதை வழியாகக் காட்டியிருக்கிறார்.
செல்லாக்காசுநாயகன் கணேச மூர்த்தியின் கதை ஏதோ நிஜத்தில் கண்டு கேட்டது போல இருந்தது.
திக்குத் தெரியாதசிறுகதை எந்தத் திசையில் செல்லப் போகிறது என்ற ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத அதன் முடிவு முறுவலை எழுப்பியது.
உருவகக் கதை பாணியில்குலதெய்வம்என்ற சிறுகதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த உத்தியில் எழுபதுகளில் செங்கை ஆழியான் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் நம் ஈழத்து எழுத்தாளர்கள் அதிகம் தொடாதது.
புலம்பெயர் வாழ்வியலைத் தொட்டு எழுதியதிரைகடல் ஓடியும்கதை இன்றைய யதார்த்த உலகில் சுய நலம் தோய்ந்த உறவுகளைக் காட்டும் ஒரு கண்ணாடி.
இடப் பெயர்வின் அவலத்தை முதன் முதலில் சந்தித்தவர்கள் வடமராட்சி மக்கள். அவர்களின் கதைகளின் வழியே உண்மையின் சாட்சியங்கள் தான் கிட்டும். அப்படியொரு உணர்வை எழுப்பியதுஎன்று மறையும்என்ற சிறுகதை. இந்தச் சிறுகதையும், தொகுதியின் நிறைவில் உள்ளவிடியலைத் தேடிசிறுகதையும் மிகவும் ஆழமான பார்வையோடு எழுதப்ப்பட்டிருப்பவை. இவை இரண்டுமே ரவிவர்மா என்ற எழுத்தாளர் இன்னும் பல ஈழத்துப் போரியல் வாழ்வைக் களமாகக் கொண்ட சிறுகதைகளைக் கொடுக்க வல்லவர் என்ற நம்பிக்கையை அதிகம் விளைவிப்பவை.
ஒரு நல்ல சிறுகதையொன்றைப் படித்து முடித்ததும் அந்தக் கதைக்களமும், கதை மாந்தர்களும் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறி விடும் உணர்வைப் பிரதிபலித்தால் அதன் வெற்றியென்று கொள்ளப்படும்.
அந்த வகையில் ஈழத்தவரின் வாழ்வியல் பண்பாடுகள், அனுபவங்களை அந்தந்தக் காலகட்டத்தினூடே எடுத்துச் சென்று கதைகளின் வழி நிகழ்த்திக் காட்டியதன் வழியாக சூரன் .ரவிவர்மா நல்ல சிறுகதை ஆசிரியராக அடையாளப்படுத்தப்படுகிறார்.

கானா பிரபா

27.08.2018