Thursday, November 30, 2017

இரட்டை இலையும் இடைத்தேர்தலும்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இரத்தத்தில் ஊறிய சின்னம். மக்கள் திலகமான எம்.ஜி.ஆர் மக்கள் தலைவனானதும் தன்னை நம்பிய தொண்டர்களுக்கு அடையாளம் காட்டிய சின்னம். வலது கையைத் தூக்கி இரண்டு விரல்களை விரித்து எம்.ஜி.ஆர் காட்டும்போது அது இரட்டை இலையின் அடையாளம் என்பதைத் தொண்டர்கள் புரிந்து கொண்டனர். எம்.ஜி.ஆரின் அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த இரட்டை இலைச்சின்னம். தமிழக அரசியல் வரலாற்றில் இரண்டு முறை முடக்கப்பட்டது. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஜெயலலிதாதான்  பின்னணியில் இருந்தார்  என்பதுதான் விதியின் விளையாட்டு.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அவரின் மனைவி ஜானகி அணி ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தபோது இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்தபின்னர் சசிகலா அணி ஓ.பன்னீர்ச்செல்வம் அணி என இரண்டாகப் பிரிந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா, சிறைக்குச்செல்ல முன்பு தனது பிரதிநிதியாக டி.டி.தினகரனை நியமித்தார்.
சசிகலாவின் பெயர் மறைந்து தினகரன் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தினகரன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி பேசாமடைந்தையானார்.எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அடையாளம் கட்டிய இரட்டை இரட்டை இலைச்சின்னம் வெற்றி தரும் என தினகரன் நம்பினார்.

தினகரனின் நம்பிக்கைக்கு பன்னீர் முட்டுக்கட்டை போட்டார். எடப்படியின் அணியில் இருந்த முக்கியஸ்தர்கள் சிலர் பன்னீரின் பக்கம் சாய்ந்தனர். பன்னீர் அணியின் கோரிக்கையால் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. வாக்களர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் கிடைத்ததால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.  இரட்டை இலையின் மகாத்மியத்தைப்  புரிந்துகொண்ட எடப்பாடி அணி, பன்னீர்  அணியுடன் இணங்கிப்போக விரும்பியது. ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை அறிய விசாரணைக் கமிஷன், சசிகலாவையும் மன்னார்குடி குடும்பத்தையும் ஒதுக்கி வைத்தல் ஆகியவற்றுக்கு எடப்பாடி பச்சைக்கொடி காட்டினார்.

எடப்படியின் தலைமையில் இருந்தவர்கள் தினகரனின் தலைமையில் பிரிந்து சென்றார்கள். இரட்டை இலைச்சின்னத்தைத் தமக்குத் தரவேண்டும் என கொரிய பன்னீர் தரப்பு உரிய ஆவணங்களை தேர்தல்  தலைமை அலுவலகத்துக்குக்  கொடுத்தது. ஏட்டிக்குப் போட்டியாக எடப்படியும் தினகரனும் ஆவணங்களுடன் தேர்தல் தலைமை அலுவலகத்தை நாடினார்கள். இவர்களுக்கிடையில் தீபாவும் இரட்டை இலைக்கு உரிமை கோரி ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

எடப்பாடி,பன்னீர்,தினகரன் ஆகிய மூவரின் தலைமையிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்திருந்தது. ஒன்றரைக்கோடி தொண்டர்களும் தமது பக்கம் என்றே மூவரும் பிரசாரம் செய்தார்கள். எடப்பாடியின் தலைமையிலான தமிழக அரசைத் தூக்கி ஏறிய வேண்டும் என பன்னீரும் தினகரனும் தமிழக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். ஆளும் கட்சி உறுப்பினர்களின் விருப்பத்தைக் கணக்கில் எடுக்காது, தமிழக அரசைக் காப்பாற்றுவதில் மத்திய அரசு கண்ணும்  கருத்துமாக இருந்தது.

எடப்பாடியையும் பன்னீரையும்  ஒற்றுமையாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு குறியாக இருந்தது. அவர்கள் இருவரும் பிரிந்திருந்தால் அது திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமாக இருக்கும் என பாரதீய ஜனதா கருதியது. மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே இருவரும் இணைத்து வைக்கப்பட்டார்கள். பிரிந்தவர்கள்  இணைந்தார்கள். கட்சியின் மிக முக்கியமான பொறுப்பான பொதுச்செயலாளர் பதவி இல்லாமல் ஆக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஒருங்கினப்புக்குழு அமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்ச்செல்வம்  ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி துணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதாவும் இரட்டை இலையும் இல்லாத தேர்தலை எதிர்கொள்ள அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் தயங்கியது. எட்டு மாதங்களின் பின்னர் இரட்டை இலைச்சின்னமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பெயரும் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது. அவைத் தலைவர் மதுசூதனனின் அணிக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டது. எடப்படியும் பன்னீரும் இணைந்தாலும் அறுதிப் பெரும்பனமைக்குரிய பலம் அவர்களிடம் இல்லை. ஆனால்,அதிகளவான  உறுப்பினர்களும், நிர்வாகிகளும் அவர்கள் பக்கம் இருப்பதால் சின்னமும் பெயரும் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.

இரட்டை இலைச்சின்னத்தையும் கழகப் பெயரையும் பயன் படுத்த அனுமதி வழங்கப்பட்ட மறுநாள் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால், இதன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரச இயந்திரங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கைப்பாவை என்ற குற்றச்சாட்டுக்கு உரிய பதில்  இதுவரை கிடைக்கவில்லை.

இரட்டை இலைச்சின்னம் கிடைத்ததால் வெற்றி பெறலாம் என எடப்பாடியும் பன்னீரும் நினைக்கின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது இல்லை. ஜெயலலிதா சொல்வதை அன்று அனைவரும் வேதவாக்காக ஏற்றுக்கொண்டனர். ஆனால், இன்றைய அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் சொல்லை நிர்வாகிகள் தட்டிக் கழிக்கிறார்கள்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்  போட்டியிடுவதற்கு முன்னர் மனுத் தாக்கல் செய்த மருது கணேஷையே திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் அறிவித்துள்ளது. எட்டு மாதங்களுக்கு முன்னர் எடப்பாடி அணியில் தினகரனும் பன்னீர் தரப்பில் மதுசூதனனும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். தினகரன் இல்லாததால் மதுசூதனன் வேட்பளராக அறிவிக்கப்படுவார்  என்றே அனைவரும் பார்த்தனர். ஆனால், விரும்பு மனுத் தாக்கல் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா இருந்தபோது இப்படி ஒரு நிலைமை ஏற்படவில்லை. அவர் அறிவிப்பவர்தான் வேட்பாளர். விருப்பு மனு என்ற  நடைமுறையை அவர் பின்பற்றவில்லை. மதுசூதனன் போட்டியிடுவதை எடப்பாடி அணி விரும்பவில்லை என்பதை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

மதுசூதனன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா, முன்னாள் தமிழக அமைச்சர் கோகுல இந்திரா உட்பட 20 பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்தனர். மூன்று நாள் இழுபறிக்குப் பின்னர் வேட்பளராக மதுசூதனன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கு முன்னரே வேட்பாளர் தெரிவில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பலத்த போட்டி நடைபெற்றது.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை துளிர்ப்பதும் முடங்குவதும் நீதிமன்றத்தின் கையில் உள்ளது. தங்களுடைய புகாருக்கு விளக்கம் தெரிவிக்காமல் எடப்பாடி பன்னீர் தரப்புக்கு இரட்டை இலையைக் கொடுத்தது தவறு என தினகரன்  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தினகரன் இப்படி ஒரு காரியம் செய்வர் என்பதை உணர்ந்த பன்னீர் தரப்பு முன்கூட்டியே  நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இரட்டை இஅலையெக் கேட்டு யாராவது முறையிட்டால்  எங்களைக் கேட்காமல் முடிவு எடுக்கக் கூடாது என மனுத் தாக்கல் செய்துள்ளது.  

இரட்டை இலைக்காகவே  எடப்பாடியும் பன்னீரும் இணைந்தனர். பிரிந்த அணிகள் இணைந்தன. ஆனால், மனங்கள் இணையவில்லை என்ற உண்மையை டிவிட்டர் வெளிப்படுத்தியுள்ளது. எடப்பாடி கலந்துகொண்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்கு பன்னீர் தரப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதே போன்ற பல உள் குத்துகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. அவை அனைத்தும் வெளிச்சத்துக்கு வருவதில்லை. சோதனையில் பன்னீர் தரப்பு வெற்றி பெற்று விட்டது. இந்த வெற்றி நிரந்தரமா இல்லையா என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்.

வர்மா 

Thursday, November 23, 2017

அரசியல் ஆயுதமான ஒப்பரேஷன் கிளீன் மணி

    
 சசிகலாவின் குடும்பம்
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவின் குடும்பத்தினர்,  உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளிலும்  அலுவலகங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் பெரும் எடுப்பிலான சோதனையை நடத்தியுள்ளனர். தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களில் சுமார் 190 இடங்களில்  2000  அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரியவருகிறது. இது போன்ற மிகப்பெரியதொரு சோதனை இந்தியாவிலேயே இதுவரை நடைபெறவில்லை. திருமணத்துக்குச் செல்வதற்காக 200 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.  
ஜெயா தொலைக்காட்சி அலுவலகம்,மிடாஸ் மதுபான ஆலை,  கொடநாடு,சிறுதாவூர் பங்களா  உட்பட பல அலுவலகங்களில் தீவிர சோதனைநடைபெற்றது.மகாதேவன்,விவேக்,கிருஷ்ணப்பிரியா,வெங்கடேசன்,திவாகரன்,விவேகானந்தன்,டாக்டர்வெங்கடேசன்,டாக்டர்சிவகுமார்,கலியப்பெருமாள் பாஸ்கரன்,பரணி கார்த்திக் , புகழேந்தி உட்பட பலரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டுத் தேடினர்.
மன்னார்குடியைச் சேர்ந்த சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்த சசிகலா,  அரசியல்வாதியான நடராஜனைத் திருமணம் செய்தார். கணவருடன் சென்னைக்குக் குடிபெயர்ந்த சசிகலா, வீடியோ  கடை ஒன்றை நடத்தினார். நடராஜனின் அரசியல் தொடர்புகளினால் அரசியல் கட்சிகளின்  கூட்டங்களை வீடியோ எடுக்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.  ஜெயலலிதாவுடனான நெருக்கம் உடன் பிறவா சகோதரிவரை வளர்ந்தது. தனி ஆளான ஜெயலலிதாவின் பக்கத்துணையாக சசிகலா இருந்தார்.  சசிகலா என்ற ஒற்றைப் பெண்மணியின் பின்னால் அவருடைய மன்னர் குடி குடும்பம் பெரு வளர்ச்சி பெற்றது. 
 
 
சினிமாவிலும் அரசியலிலும் ஜெயலலிதா சம்பாதித்தற்கு மிக அதிகமான சொத்துக்களுக்கு அதிபதியானது மன்னார்குடி  குடும்பம் ஜெயலலிதாவின் சொத்துக்களில் அதிகமானவை பினாமியின் பெயரிலேயே உள்ளன. வருமானம் தரும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் என்பனவற்றை மிரட்டிப்பறிப்பதில் சசிகலாவின் உறவினர்கள் தேர்ச்சி பெற்றனர்.பரம்பரை பரம்பரையாக தொழில் செய்பவர்களின் சொத்தை விட அதிகமான சொத்துக்களை மன்னார்குடி இளவல்கள் கொண்டிருந்தனர். இவற்றை எல்லாம் களம் தாழ்த்தித் தெரிந்துகொண்டதால்  சசிகலாவுடன் மன்னார்குடி குடும்பத்தை விரட்டினார் ஜெயலலிதா. பின்னர் சசிகலாவை மட்டும் மன்னித்து தன்னுடன் வைத்துக்கொண்டார்.  அந்த மன்னிப்புத்தான் அவருக்கு எதிரானதாக மாறியது.
வருமானவரி அதிகாரிகளின் சோதனையின் போது 1௦௦௦ கோடிக்கும் அதிகமான முறைகேடுகள், போலி நிறுவனங்கள், போலியான் கணக்கு வழக்குகள் என்பன தெரியவந்துள்ளது. வள வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் யாராவது  செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. வைரங்கள், அனுமதிப் பத்திரம் இல்லாத துப்பாக்கிகள் , நகைகள்,   முக்கியமான ஆவணங்கள் அன்பான கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எதனையும் உறுதி செய்யவில்லை. ஜெயலலிதாவின் வீட்டில் நள்ளிரவு  சோதனை நடத்தப்பட்டது. சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்படும் என செய்திகள்வெளியாகி உள்ளன. முக்கியமான பல ஆவணங்கள் வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டு விட்டதாகவும், அவற்றைத் தேடி வருமானவரித்துறை அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச்  செல்லப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 விவேக்

வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதனை எதிர்த்து சிலர் கோஷம் போட்டார்கள். தினகரன்,திவாகரன்,விவேக் ஆகியோர் மிரட்டலான பாணியில் பேட்டியளித்தார்கள்.  இந்தச்சோதனை அரசியல்  பழிவாங்கல் என தினகரனும் திவகரனும் அறிவித்தனர். அதிகாரிகள் தமது கடமையைச்செய்தார்கள் என்று விவேக் தெரிவித்தார்.  சசிகலாவை முழுமையாகப்  பாவித்துவித்த ஜெயலலிதா, அவரைக்கைவிட்டு விட்டார் என திவாகரன் குற்றம் சாட்டுகிறார். அதனை தினகரன் மறுக்கிறார். எனது வீட்டில் சோதனை  நடைபெறவில்லை. எனது நண்பர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது எனக் கூறி தினகரன் தப்பிக்கிறார். ஜெயலலிதாவின் மருத்துவ சிடியை சில இடங்களில் அதிகாரிகள் விசாரித்ததாக திவாகரன் குற்றம் சாட்டுகிறார்.  அதனை புகழேந்தி மறுக்கிறார். மன்னார்குடிக் குடும்பத்தில் உள்ள சில பிரச்சினைகள் சந்திக்கு வந்துள்ளன.
தமிழக  அரசைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்துவதற்கு மத்தியில் ஆட்சிசெய்யும் பாரதீய ஜனதா விரும்புகிறது. தினகரன் அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார். அவரை  அடக்குவதற்காகவே இதன் ஒப்பரேஷன் என சிலர் வியாக்கியானம் செய்கிறார்கள். இதே போன்ற அதிரடிச்சோதனைகள் முன்னரும் தமிழகத்தில் நடைபெற்றன. அந்த விசாரணைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று தமிழக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 கிருஷ்ணகுமாரி
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது 570 கோடி ரூபாவுடன் கைப்பற்றப்பட்ட கொன்டனர்களின் விசாரணை, 89 கோடி ரூபா வழங்கிய ஆவணம்,  நந்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி, முன்னாள் தலைமைச்செயலாளர் ரம் மோகன் ராம்,மணல் மாபியா சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர்,குட்கா குடோன் ஆகிய இடங்களில் சோதனை செய்து பணம்,நகை, ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன. அந்த விசாரணைகள் பற்றிய அறிக்கைகள் எல்லாம் மூடு மந்திரமாக உள்ளன. தினகரன் தரப்பு அடங்கிவிட்டால் இந்த விசாரணைகள் எல்லாம் மூடி மறைக்கப்படும்.


  

Wednesday, November 15, 2017

இத்தாலி தோல்வியடைந்ததால் பப்போன் விடை பெற்றார்உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான பிளே-ஆப்சுற்று ஆட்டத்தில் சுவீடனிடம் தோல்வி கண்டு வாய்ப்பை இழந்ததால் இத்தாலி அணியின் கேப்டனும், கோல்கீப்பருமான ஜியானுலிகி பப்போன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ரஷியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இத்தாலியில் மிலன் நகரில் நேற்று முன்தினம் நடந்த 2-வது பிளே-ஆப் ஆட்டத்தில் இத்தாலி அணி கோல் எதுவுமின்றி சுவீடனும் டிரா கண்டது. முதல் ஆட்டத்தில் சுவீடன் அணி வெற்றி பெற்று இருந்தால் உலக போட்டிக்கு முன்னேறியது. இத்தாலி அணி உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனதால் இத்தாலி அணி வீரர்கள் மிகுந்த மனவேதனையுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். 39 வயதான கேப்டனும், கோல்கீப்பருமான ஜியானுலிகி பப்போன் சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுவதாக கண்ணீர் மல்க உடனடியாக அறிவித்தார்.

உலகின் தலைசிறந்த கோல்கீப்பர்களில் ஒருவரான பப்போன், எதிரணியினரின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை தடுத்து நிறுத்துவதில் கில்லாடி. 1997-ம் ஆண்டில் ரஷியாவுக்கு எதிரான சர்வதேச போட்டியில் இத்தாலி அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்த பப்போன் அது முதல் 175 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 1998, 2002, 2006, 2010, 2014-ம் ஆண்டுகளில் நடந்த உலக கோப்பை போட்டிகளில் இத்தாலி அணியில் பப்போன் இடம் பெற்றார். 1998-ம் ஆண்டில் மட்டும் அவர் களம் இறங்கவில்லை. 2006-ம் ஆண்டில் இத்தாலி அணி உலக கோப்பையை வென்ற போது அந்த போட்டி தொடரில் அவர் மொத்தம் 2 கோல்களை மட்டுமே தடுக்க தவறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆண்டுகளாக 175 சர்வதேச போட்டியில் ஆடி இருக்கும் பப்போன் 79 போட்டிகளில் இத்தாலி அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அதிக சர்வதேச போட்டியில் விளையாடிய இத்தாலி வீரர் என்ற பெருமைக்குரிய பப்போன், உலக அளவில் அதிக சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்களில் 4-வது இடத்தில் உள்ளார்.

ஓய்வு குறித்து பப்போன் பேசுகையில், ‘இத்தாலி கால்பந்து உலகத்துக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். எனது அதிகாரப்பூர்வமான கடைசி சர்வதேச போட்டியில் அணி வெற்றி பெறாமல் போனதையும், உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனதையும் தலைகுனிவாக கருதுகிறேன். இந்த தோல்வியை எல்லோரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் பலிகடா ஆக்கக்கூடாது. கடந்த காலங்களிலும் நமது அணி தோல்வியில் இருந்து மீண்டு வலுவான நிலையை எட்டி இருக்கிறது. இத்தாலி அணியில் திறமையும், அர்ப்பணிப்பும் அதிகம் இருப்பதால் நல்ல எதிர்காலம் இருக்கிறதுஎன்று தெரிவித்தார்.

பப்போனை தொடர்ந்து இத்தாலி அணியை சேர்ந்த ஆந்த்ரே பாராக்லி, டானிலே டி ரோஸ் ஆகிய வீரர்களும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளனர். இத்தாலி அணியின் மானேஜர் ஜியாம்பிரோ வென்டுரா கருத்து தெரிவிக்கையில், ‘நான் ராஜினாமா செய்யவில்லை. இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவரிடம் பேசிய பிறகு தான் எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய முடியும்என்றார்.

 கணக்கில் சுவீடனிடம் தோல்வி கண்டு இருந்ததால் அந்த அணி அடுத்த ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிர்ச்சிகரமாக இழந்தது. 1958-ம் ஆண்டுக்கு பிறகு  இத்தாலி அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாமல் போனது இதுவே முதல்முறையாகும். 60 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை பறிகொடுத்து இருக்கும் இத்தாலி அணி உலக கோப்பை போட்டிக்கு அதிக தடவை (18 முறை) தகுதி பெற்ற அணிகள் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. பிரேசில் அணி எல்லா போட்டிகளுக்கும் தகுதி பெற்று முதலிடத்திலும், ஜெர்மனி அணி 19 முறை தகுதி கண்டு 2-வது இடத்திலும் உள்ளன.

இத்தாலி அணி 4 முறை (1934, 1938, 1982, 2006) உலக கோப்பையை உச்சி முகர்ந்து இருக்கிறது. இரண்டு முறை (1970, 1994) 2-வது இடத்தை பிடித்து இருக்கிறது. ஐரோப்பிய கண்டத்தில் நெதர்லாந்துக்கு அடுத்தபடியாக வலுவான இத்தாலி அணி தகுதி இழந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாமல் போனதால் அந்த நாட்டு வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் சோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள். இதற்காக இத்தாலி கால்பந்து சம்மேளனம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
Tuesday, November 7, 2017

மோடியின் மாநிலமான குஜராத்தைக் குறி வைக்குக் காங்கிரஸ்

  
இமாசலப் பிரதேசம்,குஜராத் ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள் இந்த மாதமும்  அடுத்த மாதமும் நடைபெற உள்ளன. இந்திய ஆளும் கட்சியான  பாரதீய ஜனதாக் கட்சியின் மீது மக்கள் வெறுப்புற்று இருக்கிறார்கள் எனப் பரவலான கருத்துகள் இருந்தபோதும் இரண்டு சட்ட சபைத் தேர்தல்களிலும் பாரதீய ஜனதா வெற்றி பெறும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இமாசலப் பிரதேச சட்டசபைத் தேர்தல் நவம்பர் 9 ஆம் திகதி நடைபெற உள்ளது .குஜராத் தேர்தல் டிசம்பர் 9 ஆம் திகதியும் டிசம்பர் 14 ஆம் திகதியும் இரண்டு கட்டமாக நடைபெறும். இரண்டு சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 18 ஆம் திகதி வெளியிடப்படும்.

இமாசலப் பிரதேசம், குஜராத் ஆகிய இரண்டு சட்டசபை தேர்தல்களும் ஒரே நாளில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோது முதலில் இமாசலப் பிரதேசத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. சர்ச்சைகள் பெரிதாவதற்குள்  குஜராத் தேர்தலை அறிவித்து தேர்தல் திணைக்களம் தப்பிவிட்டது. இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும் ,குஜராத்தில்   பாரதீய ஜனதாக் கட்சியும் ஆட்சியில் இருக்கின்றன. இரண்டு சட்டசபைகளிலும் வெற்றி பெறுவதற்காக பாரதீய ஜனதாவும் காங்கிரஸும் வியூகங்களை அமைத்துள்ளன. .

மோடியின் தாய் வீடான குஜராத்தைக் கைப்பற்றுவதே காங்கிரஸின் பிரதான குறிக்கோள். 27  வருடங்களுக்கு முன்னர் குஜராத்தின் ஆட்சியை காங்கிரஸ் பறிகொடுத்தது.   22  வருடங்களாக குஜராத்தை ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்காக காய்களை நகர்த்தி வருகிறது. மோடியின்  மாநிலத்தைக் கைப்பற்றி விட்டால் அது மற்ற  மாநிலங்களிலும்  தாக்கத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் நம்புகிறது. ஆகையால் குஜராத்தில் செல்வாக்குள்ளவர்களின் உதவியை நாடி உள்ளது.

குஜராத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் வியாபாரிகளும் தலித்களும் பாரதீய ஜனதாவுக்கு  எதிராக இருப்பதை தனக்குச்  சாதகமாக்குவதற்கு  காங்கிரஸ் முயற்சிக்கிறது. சாதி வாகுகளை மூலதனமாக்கி குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. இந்து என்ற ஒற்றைச்சொல்லுடன் குஜராத்தில் களம் இறங்கிய பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. தொடர்ச்சியாக ஐந்து முறை குஜராத்தில் ஆட்சி செய்த பாரதீய ஜனதா  ஆறாவது முறையாகவும் ஆட்சி  பீடம் ஏறுவதற்கு முயற்சி செய்கிறது. இந்து என்ற அடையாளம் இப்போது வலுவிழந்துள்ளது. சாதி ரீதியிலான வாக்கு  வங்கி குஜராத்தில் தலை எடுக்கத் தொடங்கிவிட்டது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் முயற்சி செய்கிறது.

குஜராத்தில் பலம்மிக்க பட்டேல் சமூகம் பாரதீய ஜனதாவுக்கு எதிராக நிற்கிறது.  குஜராத்தை ஆட்சி செய்த பாரதீய ஜனதா அரசு பட்டேல் சமூகத்தின் இளம் தலைவரான  ஹர்த்திக் பட்டேலுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. குஜராத்தில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெறக்கூடாது என்பதில் ஹர்த்திக் பட்டேல் உறுதியாக இருக்கிறார். அவர் காங்கிரஸில் சேரவில்லை காங்கிரஸுக்கு  ஆதரவாகப் பிரசாரம் செய்யவில்லை. பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார். ஹர்த்திக் பட்டேல் தமது கட்சியில் சேர்வார் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

 பாரதீய ஜனதாவின் வாக்கு வங்கியில் பட்டேல் சமூகம் பெரும் பங்கு வகிக்கிறது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடிய பட்டேல் சமூகத்தை இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடவைத்தவர்  ஹர்த்திக் பட்டேல். இவருடைய போராட்டத்தினால் பரதீய ஜனதாவுக்கு ஆதரவான பட்டேல் சமூகத்தின் வாக்கு வங்கி குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அல்பேஷ்  தாகூர் என்ற இளம் தலைவரும்  பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி உள்ளார். அவருக்குப் பின்னாலும் பெரும் படை உள்ளது. ஆனால்,அவரும் காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை.பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராக குஜராத்தில் போர்க்கொடித் தூக்கி உள்ள இன்னொரு பிரபலம் ஜிக்னேஷ் மேவானி. தலித் போராளியான அவர் 36  வயது நிரம்பிய வழக்கறிஞர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் போது இடங்களில் தலித்கள் தாக்கப்பட்டதற்கு நியாயம் கேட்டுப் போராடியவர் ஜிக்னேஷ் மேவானி. இவருடைய போராட்டத்தினால் அன்றைய முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் பதவி விலக நேர்ந்தது. இவருடைய அமைப்பு  பாரதீய ஜனதாவை எதிர்த்து செயற்படுகிறது.  
 
   பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராக  குஜராத்தில் நடைபெறும் சம்பவங்களைத் தனக்குச் சாதகமாகப்  பயன்படுத்த காங்கிரஸ் வியூகம் அமைத்துள்ளது. வியாபாரிகள்,தலித்கள், விவசாயிகள் பாரதீய ஜனதாவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இன்னமும் காங்கிரஸுக்கு ஆதரவானவர்களாக மாறவில்லை. அவர்கள் மாறுவார்கள் என காங்கிரஸ் தலைவர்கள் நம்புகிறார்கள்.

  பிரதமர் மோடியும், பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியத் தலவரான அமித்ஷாவும் குஜராத்தின் மைந்தர்களாக இருக்கும்  போது சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி மிக இலகுவாக வெற்றி பெறலாம். ஆனால், கள நிலவரம் பாரதீய ஜனதாவுக்கு எதிராக இருக்கிறது. கருத்துக் கணிப்புகள் பாரதீய ஜனதாவுக்கு சார்பாக இருந்தாலும் மிகுந்த போராட்டத்தின்  மத்தியில்தான் வெற்றி பெரும் சூழ்நிலை உள்ளது.

குஜராத் சட்டமன்றத்  தேர்தலில் 1995 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்துமுறை பாரதீய  ஜனதாக் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 2014  ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 26 தொகுதிகளிலும் பாரதியஜனதா வெற்றி பெற்றது. குஜராத் தேர்தல் வரலாற்றில் இது அது போன்ற மோசமான தோல்வியை காங்கிரஸ்  சந்தித்ததில்லை.
குஜராத் முதலமைச்சராகப் பதவி வகித்த கேசுபாய் பட்டேல் 2001 ஆம் ஆண்டு பதவி விலகிய பின்னர் நரேந்திர மோடி முதலமைச்சரானார். அதன் பின்னர் நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதலமைச்சரானார். பிரதமரின்மநிலத் தேர்தலில் தோல்வியடையக்கூடாது என பாரதீய ஜனதாக் கட்சியினர் விரும்புகின்றனர்.

   இந்தியா டுடே அக்சிஸ் மை இந்தியா கடந்த செப்டம்பர் 15 முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி  வரை நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாரதீய ஜனதா  ஆட்சியைக் கைப்பற்றும் என்று கணித்துள்ளது. 182 சட்டசபை தொகுதிகளில் பாஜகவிற்கு 115-125 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக இந்தியா ருடே கணித்துள்ளது. கடந்த 2007 தேர்தலில் 117 தொகுதிகளிலும்  2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 116 தொகுதிகளிலும்  பாரதீய ஜனதா  வென்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி கட்சி 65 தொகுதிகளில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 2007 ஆம் ஆண்டு தேர்தலில் 59 தொகுதிகளிலும்,2012 ஆம் ஆண்டு தேர்தலில் 60 தொகுதிகளிலும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பிற கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும் என்றும் இந்தியா ருடே கணித்துள்ளது.

 இமாசல பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா  அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா ருடே -அக்சிஸ் மை இந்தியா மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இமாசல பிரதேச மாநிலத்தில் வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நவம்பர் 9ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக   நவம்பர் 9ஆம் திகதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 18ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 68 இடங்களில் 43 முதல் 47 இடங்களை பாரதீய ஜனதா  கைப்பற்றும் என்று இந்தியா ருடே -அக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தற்போது பாரதீய ஜனதா  ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

 ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 21 முதல் 25 இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. பிற கட்சிக்கு 2 இடங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

குஜராத் சட்டசபைத் தேர்தலில் மக்களின் மனதில் இருப்பது தொடர்பாக டைம்ஸ் நவ்- விஎம்ஆர் இணைந்து கருத்து கணிப்பை நடத்தி உள்ளன. இந்த கருத்து கணிப்புகளில் பாஜக 5-வது முறையாக வென்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

   தற்போதைய தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு வாக்களிப்போம் என 52 % பேர் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் பாஜகவுக்கு 118 முதல் 134 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

   இத்தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிப்பதாக 37 % பேர் கூறியுள்ளனர்.  காங்கிரஸுக்கு 49 முதல் 61 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு.

 அதிகபட்சம் 3 இடங்கள் பாரதீய ஜனதா, காங்கிரஸ் அல்லாமல் மற்ற கட்சிகளுக்கு வாக்களிப்போம் என 11 % பேர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மற்ற கட்சிகளுக்கு அதிகபட்சம் 3 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது டைம்ஸ் நவ்வின் கருத்துக் கணிப்பு

கருத்துக் கணிப்புகள் அனைத்தும் காங்கிரசுக்கு எதிராகவே உள்ளன. தேர்தலின் போது மக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பது டிசம்பர் 18 ஆம் திகதி தெரிந்துவிடும்.

வர்மா