Saturday, January 19, 2019

ஆதரவை எதிர்பார்த்து கூட்டணிக் கதவைத் திறந்த மோடி


வாஜ்பாஜிடம் இருந்து பாரதீஜ ஜனதாக் கட்சியின் தலைமைப் பொறுப்பைப் பெற்ற மோடி கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவி ஏற்றார். வாஜ்பாய்க்கு அடுத்த தலைவராக மிளிர்ந்த அத்வானியைப் புறந்தள்ளிய மோடி, தன்னுடன் அமித்ஷாவை இணைத்துக்கொண்டார். மோடி அமித்ஷா கூட்டணி எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தது. அரசியல் தில்லு முல்லுகள்மூலம் உச்சத்துக்குச் சென்ற இவர்கள் மாநிலக் கட்சிகளைத் துச்சமாக மதித்தனர். இந்தியாவின் தேர்தல் ஆண்டான 2019, மோடியை கிலிகொள்ள வைத்துள்ளது. அதனால் 20 வருடங்களுக்கு முந்தைய கூட்டணிக்குத் தயார் என அறிவித்துள்ளார்.

இந்துயாவில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 282 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சி செய்யும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற 19 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியை ஆட்டம்காணச் செய்தது. கூட்டணிக் கட்சிகளையும் மாநிலக் கட்சிகளையும் துச்சமாகக் கருதிய பாரதீய ஜனதாக் கட்சி அச்சமடைந்துள்ளது. கடந்த வருடக் கடைசியில் நடைபெற்ற ஐந்து மநிலத் தேர்தல்களில் பாரதீய ஜனதாக் கட்சி படுதோல்வியடைந்தது. மூன்று மாநிலங்களை காங்கிரஸிடம் பறிகொடுத்தது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி  பெற முடியுமா எனும் சந்தேகம் மோடிக்கு எழுந்துள்ளது.

மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியின் தொடர் வெற்றிகளால் மக்ழ்ந்திருந்த அமித்ஷா, அடுத்த பொதுத் தேர்தலில் 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனச் சூழுரைத்தார். பாரதீய ஜனதாவுக்கு எதிரான மக்களின் மனநிலை, கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமை, எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை என்பன ஆட்சியை ஆட்டம்காணச் செய்துள்ளன. அதனால், 20 வருடங்களுக்கு முந்தைய வாஜ்பாய் காலத்துக் கட்சிகளுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  

கருணாநிதியும் ஜெயலலிதாவும் 20 வருடங்களுக்கு முன்னர் வாஜ்பாயுடன் கைகோர்த்தனர். காங்கிரஸ் கட்சியையும் ராகுலையும் கடுமையாக விமர்சிக்கும் மோடி, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் ஸ்டாலினையும் எதிர்கிறார். ஆகையால் மோடியுடன் ஸ்டாலின் இணையமாட்டார். திருமாவளவன்,வைகோ, ராமதாஸ் ஆகிய தமிழகத் தலைவர்கள் வாஜ்பாயுடன் இணைந்து செயற்பட்டார்கள். வைகோவும் திருமாவளவனும்  மோடியை மூர்க்கமாக எதிர்க்கின்றனர். அவர்களும் இந்தப்பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்கள்.  திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை எனச் சபதம் செய்த ராமதாஸ்,  பாரதீய ஜனதாவின் பக்கம் சாயலாம் என்ற கருத்து நிலவுகிறது.

ஜெயலலிதா இல்லாத நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்துபவர்கள் மோடியிடம் சரணடைந்துள்ளனர். மோடிக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு இருப்பதால் அவருடன் இணைவதில் தயக்கம் காட்டப்படுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தமிழக சட்டசபை உறுப்பினர்கள் பாரதீய ஜனதாவை எதிர்த்து கருத்துச் சொல்வதில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரதீஜ ஜனதா அரசை எதிர்த்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துகின்றனர்.  ஆனால் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிரான தீர்மானங்களின் போது எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்கின்றனர்.


அண்ணா  திரவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரான தம்பித்துரையின்  பேட்டி பாரதீய ஜனதாக் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியை முதுகிலே சுமக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ன பாவம் செய்துள்ளது? என்ற அவரின் கேள்வியை பரதீய ஜனதாவுக்கு எதிரானவர்கள் 
      விரும்புகிறார்கள்.  நாடாளுமன்றப் ஒதுத் தேர்தல் அரிவிக்கப்பட்டபின்னர் கூட்டணிபற்றி யோசிக்கலாம் என மற்றைய தலைவர்கள் சொல்கிறார்கள்.
ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவருடன் கூட்டணி


வைக்கலாம் என பாரதீய ஜனதாத் தலைவர்கள் எதிர்பார்த்தார்கள். ரஜினியின் அரசியல் பிரவேசம் கட்சி ஆரம்பிக்கப்படும் என்ற அறிவுப்புடன் முடிவுக்கு வந்துள்ளது. கமலை வளைக்க முடியாது. ராமதாஸையும் விஜயகாந்தையும் தம் பக்கம் இழுக்க பாரதீய ஜனதா முயல்கிறது. பாரதீய ஜனதாவுக்கு எதிரான அலை தமிழகத்தில் கடுமையாக இருப்பதால் வெளிப்படையாக எதுவும் பேச முடியாத நிலையில் ராமதாஸும் விஜயகாந்தும் இருக்கிறார்கள்.

பாரதீய ஜனதாக் கட்சியுடன் சேராமல் தனியாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் கூட்டணி சேரலாம் என்ற மன ஓட்டத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. கூட்டணி சேர்ந்தாலும் சேராவிட்டாலும் தமிழகத்தில் தாமரை மலராது என்பது நிச்சயம்.

சூரன்.ஏ.ரவிவர்மா.

Sunday, January 13, 2019

கொடநாட்டைச் சுற்றிய மர்ம முடிச்சு எடப்பாடி மீது குற்றச்சாட்டு


ஜெயலலிதா ஓய்வெடுக்கும் வாசஸ்தலமான கொடநாட்டைப் பற்றிய செய்திகள் அதிகம் வெளிவருவதில்லை. ஜெயலலிதா கொடநாட்டுக்குச் சென்றார். ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து திரும்பிவிட்டார்  போன்றவையே அப்போதைய பரபரப்பான செய்தியாக இருந்தன.ஜெயலலிதா அங்கே என்ன செய்தார் என்ற விபரம் எதுவும் வெளிவருவதிலை. கொடநாட்டு காவலாளி கொலை செய்யப்பட்டு விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள்  திருடப்பட்ட செய்தி பெரிய பரபரப்பின்றி அடங்கியது. பின்னர் நடைபெற்ற விபத்து மரணங்களும் தற்கொலையும் சந்தேகத்தை ஏற்படுத்தியனவே தவிர சர்ச்சையாகவில்லை. கொள்ளை கொலைகள் ஆகியவற்றின் பின்னால் இருப்பவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ற குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொடநாட்டுக் கொள்ளை, அதன் பின்னர் நடைபெற்ற மரணங்கள் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவால் நடைபெற்றதாக   டெஹெல்காவின் முன்னாள் ஆசிரியர் மத்தியூஸ் சாமுவேல், டெல்லியில்   பத்திரிகையாளர் முன் குற்றம் சாட்டியுள்ளார். கொடநாட்டு கொள்ளை குற்றவாளிகளான சயானும் வாளையா மனோஜும், மத்தியூஸ் சாமுவேலுடன் சேர்ந்து எடப்பாடி மீதான குற்றச்சாட்டை பத்திரிகையாளர் முன்னால் உறுதிப்படுத்தினர்.

முதலமைச்சராக இருக்கும்போது குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனை பெற்ற அவப்பெயர் தமிழகத்தின் மீது படிந்துள்ளது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட முதலமைச்சர் எனும் கரும் புள்ளியும் தமிழகத்தின் மீது விழுந்துள்ளது. முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விலக வேண்டும் என்ற  எதிர்க்கட்சிகளின் குரல்  ஓங்கி ஒலிக்கத்தொடங்கிவிட்டது. தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களும் எடப்பாடிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது எதிர்க்கட்சிகளின் சதி பின்னணியில் இருப்பவரை விரைவில் வெளிப்படுத்துவேன் என  எடப்பாடி சூழுரைத்துள்ளார்.

கொள்ளையடிப்பதற்காக கொடநாட்டுக்குச் சென்றவர்கள் கவலாளிகளைக் கட்டிவைத்துவிட்டு உள்ளே சென்றார்கள். மூச்சுத்திணறி ஓம் பிரகாஷ் என்ற காவலாளி மரனமானார். இச்சம்பவம் நடைபெற்ற சில நாட்களின் பின்னர் கேரளாவில் நடைபெற்ற சாலை விபத்தில் சயான் என்பவர் படுகாயமடைந்தார். அவரது மனைவி விஷ்ணுபிரியாவும் மகள் நீத்துவும் கொல்லப்பட்டனர். அந்த விபத்தில் காயங்களுடன் தப்பிய சயான் என்பவர் தான் இன்று எடப்பாடிமீது குற்றம் சுமத்தியுள்ளார். கொடநாட்டில் சீசீரிவி  இயக்குநராகக் கடமையாற்றிய தினேஸ்குமார் தற்கொலை செய்தார். ஜெயலலிதாவின் கார்ச் சாரதியான கனகராஜ் என்பவர் எடப்பாடியில் சாலை விபத்தில் பலியானார்.

காவலாளி கொலை, தற்கொலை விபத்து மரணங்கள் பற்றி அப்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. கனகராஜின் அண்ணன், எடப்பாடிமிது குற்றம் சுமத்தி சிபிஐ விசாரனை வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தகுந்த சாட்சிகள், ஆதாரங்கள் என்பன இல்லமையால் அவை அப்போதே மறக்கடிக்கப்பட்டன. மத்தியூஸ் சாமுவேலின் கொடநாடு ஆவணப்படத்தின் மூலம் அந்தச் சம்பவங்கள் அனைத்தும் உயிர் பெற்றுள்ளன.

”குற்றம் செய்த தனது கட்சியின் உறுப்பினரிடம் வீடியோ மூலம் வாக்கு மூலம் பெற்ற ஜெயலலிதா, அதனைப் பாதுகாப்பாக வைத்திருந்தார். அதனால்தான் யாரும் அவரை எதிர்த்து எதுவும் பேசுவதில்லை. அந்த வீடியோ வாக்கு மூலம் அனைத்தும் இப்போது எடப்பாடியிடம் உள்ளன” என்கிறார் மத்தியூஸ் சாமுவேல்.

பத்திரிகையாளர் மத்தியில் சயான் தெரிவிக்கையில், ”கொடநாட்டில் 20 கோடிரூபா பணம் இருக்கிறது அதனையும் சில ஆவனங்களையும் எடுக்க வேண்டும்.   தமிழகத்தில் இருந்து யாரும் வேண்டாம் கேரளாவில் இருந்து ஆட்களைக்கொண்டுவா என ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் கேட்டார். நாங்கள் கனகராஜ் நான் உட்பட 10 பேர் கொடநாட்டுக்கு கொள்ளையடிக்கச் சென்றோம். கனகராஜும் நானும் இன்னும் இரண்டுபேர் உள்ளே போனோம். கனகராஜ் சில ஆவணங்களையும், பென்ரைவ்களையும் சிடிக்களையும் தனது பையில் போட்டார். முதலமைச்சர் எடப்பாடிதான் செய்யச்சொன்னார் ஒரு பிரச்சினையும் வராது என்று கனகராஜ் கூறினார்” என்றார்.

டெல்லிப் பத்திரிகையாளர் முன்னால் தெரிவித்த குற்றச்சாட்டுகளை மருத்த எடப்பாடி. சென்னையில் சைபர் கிரைமில் புகார் செய்தார். உடனடியாக டெல்லிக்கு விரைந்த தனிப்படை சயானையும் அவரது கூட்டாளையையும் கைதுசெய்து சென்னைக்குக் கொண்டுவந்துள்ளது. அவர்களின் உயுருக்கு உத்தரவாதமில்லை என மத்தியூஸ் சாமுவேலும்  தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களும்  தெரிவித்துள்ளனர்.

கொடநாட்டுக் கொள்ளை தொடர்பாக சயான் உட்பட10  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  பிணையில் விடுதலை செய்யப்பட்ட சயானையும் அவரது நண்பரையும் தமிழகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளை நடைபெற்ற அன்று கொடநாட்டில் மின்சாரம் இருக்கவில்லை. சீசீரிவி வேலை செய்யவில்லை என பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வாசஸ்தலத்தில் அபப்டி இரு சம்பவம் நடக்க வாய்ப்பு இல்லை என்பதே பொதுவான கணிப்பு.

கொடநாடு யாருடையது. அங்கே எப்படியான பாதுகாப்பு இருக்கும். வெளியார் யாரும் கொள்ளையடிக்கும் நோக்குடன் உள்ளே நுழைய முடியாது. என்ன பொருள்  எங்கே இருக்கிறதென்பது எவருக்கும் தெரியாது. உள்ளே இருந்தவரின் உதவி இன்றி கொள்ளை நடைபெற்றிருக்க் முடியாது.

எடப்பாடி முதல்வராக இருக்கையில் தமிழக  பொலிஸ் விராசணையில் நம்பிக்கை இல்லை. எடப்பாடி பதவி விலகி விசாரனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதே பொதுவான அபிப்பிராயமாகும். தான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு எடப்பாடிக்கு உள்ளது.

சூரன்.ஏ.ரவிவர்மா.

Thursday, January 3, 2019

திருவாரூரில் மையம் கொள்ளும் தமிழக அரசியல்


தமிழ்க சட்டப்பேரவையில் 20 தொகுதிகள் காலியாக உள்ளன அந்தத்தொகுதிகளுக்கான மினித் தேர்தலை எதிர்பார்த்திருந்த வேளையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத் தேதல் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரம்குன்ற தொகுதியில் வெற்றி பெற்ற போஸ் மரணமானதால் அந்தத்தொகுதி காலியாக உள்ளது. வேட்பாளர் பீ படிவத்தில்  ய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  அன்றைய பொதுச்செயலாளர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து கையொப்பமிடாமல் கைரேகை பதிவு செய்தார். அந்தக் கைரேகை பற்றிய வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கு தேர்தல் நடத்த முடியாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18  தொகுதிகள் காலியாக உள்ளன மேன் முறையீடு  செய்யாமல் தேர்தலைச் சந்திக்கப்போவதாக தினகரனின் ஆதரவு பெறவர்கள் கூறியுள்ளனர். மேன் முறையீட்டுக் கால அவகாசம்  இன்னமும் நிறைவு பெறாததால் 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த முடியாது.

கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் ஜனவரி 28 ஆம் திகதி  இடைத்தேர்தல்   நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜனவரி 3 வேட்புமனுத்தாக்கல், ஜனவரி 11 வேட்புமனு மறுபரிசீலனை, ஜனவரி 14 வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள், ஜனவரி 28 தேர்தல்,  ஜனவரி 31 வாக்கு எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன.

திருவாரூர் கருணாநிதி பிறந்த இடம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. திராவிட முன்னேற்றக் கழகம் 7 முறை வெற்றி பெற்றது. சிபிஎம் ஐந்து முறையும் காங்கிரஸ் ஒரு முறையும் திரூவாரூரில் வெற்றி பெற்றன. 2011, 2016 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் கருணாநிதி வெற்றி பெற்றார்.  எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தலைமை ஏற்று நடத்திய காலத்திலும் திருவாரூரில் வெற்றி பெறவில்லை. ஆகையால் தேர்தலுக்கு முன்பே திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி உறுதியாகியுள்ளது.

திருவாரூரில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது மழை புயல் காரணமாக ரெட் அலேட் விடுக்கப்பட்டதால் தேர்தலை நடத்த வேண்டாம் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. நீதி  மன்றம் கட்டளையிட்டதால் தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல்  நடத்துவதற்குரிய ஏதிநிலை இப்போது இல்லை என்ற கருத்து மேலோங்கியுள்ளது. கஜா புயல் பாதிப்பில் இருந்து திருவாரூர் மக்கள் இன்னமும் விடுபடவில்லை. அவர்களுடைய ஆதார் அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்துவிட்டன. பொங்கல் பண்டிகைக்காக் தமிழக மக்கள் தயாராக இருக்கும் வேளையில் தேர்தல் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள்  இருக்கும் வேளையில் கஜாபுயலுக்கான நிவாரணத்தொகையை அறிவித்த கையோடு திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பும் வந்துள்ளது. மதிரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கை நாட்டுவதற்கு பிரதமர் மோடி தமிழகத்துக்கு விஜயம் செய்கிறார். ஜனவரி 27 ஆம் திகதி அடிக்கல் நாட்டும் வைபவம். மறுநாள்  28 ஆம் திகதி  தேர்தல் இது திட்டமிட்ட தேர்தல் பிரசாரமாகும்.

தேர்தலுக்கு முதல் நாள் பிரசாரம் செய்யக்கூடாது. மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தை பாரதிய ஜனதாக் கட்சி தேர்தல் பிரசாரமாக்குகிறது. கஜா புயல் நிவாரணத் தொகையை விடுவித்தது, எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றால் திருவாரூர் மக்கள் வாக்களிப்பார்கள் என பரதீய ஜனதாக் கட்சியினர் கருதுகிறார்கள்.

திருவாரூரில்ர் தினகரனைத் தோற்கடிக்க வேண்டும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  வீழ்த்த வேண்டும் என தினகரனும் வரிந்துகட்டி களமிறங்குவார்கள். இரண்டாவது இடத்தை யார் பிடிப்பது என்பதில் அதிக போட்டி இருக்கும். 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதி கூடிய வாக்குகளால் கருணாநிதி வெற்றி பெற்றார்.  அதை விடக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றால் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் மீதான விமர்சனம் அதிகரிக்கும்.

திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்ருக்கிடையேயான மும்முனைப்போட்டியாக திருவாரூர் இடைத் தேர்தல் இருக்கப்போகிறது. கடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்த  வைகோ,, திருமாவளவன், இடதுசாரிகள் ஆகியோர்  இப்போது ஆதரவு தெரிவித்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கருணாநிதியையும் எதிர்த்து செய்யப்போகும் பிரசாரம் திருவாரூரில்  களைகட்டாது என்பது பகிரங்கமான உண்மை.

திருவாரூரில் கருணாநிதிக்கு இருக்கும் செல்வாக்கு மற்றவர்களுக்கு இல்லை. ” இதுவே எனது  கடைசித் தேர்தல். இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என கருணாநிதி பிரசாரம் செய்தார்.   இதன் காரணமாக அதிகளவான வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார். திரூவாரூர் தொகுதிக்கு கருணாநிது செய்த சாதனைகளை முன்னிறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் பிரசாரம் செய்யும். கருணாநிதி இல்லை என்ற அனுதாப அலையும் அதிக வாக்குகளை திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பெற்றுக் கொடுக்கும்.

சூரன்.ஏ.ரவிவர்மா.