Tuesday, March 20, 2018

இலங்கையின் சுதந்திரக்கிண்ணத்தைக் கைப்பற்றிய இந்தியா
                   சம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்

இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியாவும், பங்களாதேஷும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இலங்கை அணி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் வெளியேறியது.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவும்,வங்காளதேஷும் மோதின. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக முகமது சிராஜ் நீக்கப்பட்டு ஜெய்தேவ் உனட்கட் சேர்க்கப்பட்டார். பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றிக்கனியை பறித்தது.  

நாணயச்சுழற்சியில் ஜெயித்த இந்திய கப்டன் ரோகித் சர்மா முதலில் வங்காளதேஷை பேட் செய்ய அழைத்தார்.   தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டான் தாஸ் (11 ) வாஷிங்டன் சுந்தரின் சுழற்பந்து வீச்சிலும், தமிம் இக்பால் (15 ) யுஸ்வேந்திர சாஹலின் சுழலிலும் ஆட்டம் இழந்தனர். தமிம் இக்பால் தூக்கியடித்த பந்தை ‘லாங் ஆன் திசையில் எல்லைக்கோட்டுக்கு மிக அருகில் நின்ற ஷர்துல் தாகூர் சூப்பராக பிடித்தார். சவுமியா சர்கார் (1 , விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் (9 ) ஆகியோருக்கும் சாஹல் ‘செக் வைத்தார். அப்போது அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 68 ஓட்டங்களுடன் (10.1 ஓவர்) பரிதவித்தது.

சுழற்பந்து வீச்சில் திணறிய வங்காளதேஷ் விரர்கள் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது ஓவர்களை வீசி முடித்ததும் சுறுசுறுப்படைந்தனர். ஏனெனில் வேகப்பந்து வீச்சில் எந்த வித நெருக்கடியும் இன்றி சவுகரியமாக அடித்து நொறுக்கினர். குறிப்பாக சபிர் ரகுமான் அதிரடி காட்டி ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினார். விஜய் சங்கரின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்டார். இதற்கிடையே மக்முதுல்லா(21), கப்டன் ஷகிப் அல்-ஹசன் (7) ஆகியோர் ரன்-அவுட் ஆனார்கள்.


சாதுர்யமான ஷாட்டுகள் மூலம் இந்திய பவுலர்களுக்கு ‘தண்ணி காட்டிய சபிர் ரகுமான் 77 ஓட்டங்களில் (50 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) ஜெய்தேவ் உனட்கட்டின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.

இதன் பின்னர் ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில், மெஹதி ஹசன் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உள்பட 18 ஓட்டங்கள் அடித்து  தங்கள் அணி சவாலான ஸ்கோரை எட்டிப்பிடிக்க உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்காளதேஷ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள்கள் சேர்த்தது.

167 ஓட்டங்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. ஷிகர் தவான் (10), அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (0) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். இதன் பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுலுடன் கூட்டணி அமைத்து சரிவை தடுத்து நிறுத்தினார். ரன்ரேட்டையும் துரிதப்படுத்தியதால் ‘பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 56 ஓட்டங்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது.

  லோகேஷ் ராகுலும் (24 ஓட்டங்கள், 14 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்),ரோகித் சர்மாவும் (56 ஓட்டங்கள், 42 பந்து, 4 பவுண்டரி,3 சிக்சர்) சிறிய இடைவெளியில் வெளியேறியதும் இந்திய அணிக்கு நெருக்கடி உருவானது.

  மனிஷ் பாண்டேயும், ஆல்-ரவுண்டர் தமிழக வீரர் விஜய் சங்கரும் ஜோடி சேர்ந்தனர். முக்கியமான கட்டத்தில் ஆடிய விஜய் சங்கர் பதற்றத்தில் திகைத்து போனார். கடைசி 3 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை முஸ்தாபிஜூர் ரகுமான் வீசினார். அவர் வீசிய முதல் 4 பந்துகளை விஜய் சங்கர் அப்படியே வீணடித்தார். 5-வது பந்தில் ‘லெக்-பைவகையில் ஒரு ஓட்டம் கிடைத்தது. கடைசி பந்தில் மனிஷ் பாண்டே (28) கேட்ச் ஆனார். இந்த ஓவரில் ஒரே ஒரு ஓட்டம் மட்டுமே கிடைத்ததால் இந்திய அணி கரைசேருமா? என்ற கேள்வி எழுந்தது. பாண்டேவுக்கு பிறகு விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆட வந்தார்.

தினேஷ் கார்த்திக் களத்தில் இறங்கும் போது, இந்தியா 133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது. 12பந்துகளில் 34 ஓட்ட்டங்கள் தேவை. எதிரே இருக்கும் விஜய் சங்கர் பதற்றத்தில் பந்துகளை வீணாக்கினார். மொத்த அழுத்தமும் தனியாளாக இவர் மீது மட்டும்தான் இருந்தது. ஒரு ஓவருக்கு 17 ஓட்டங்கள் தேவை.   ஆனால் தினேஷ் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இரண்டு விக்கெட் எடுத்த டெட் ஓவர் பந்து வீச்சாளர் ருபேல் போட்ட முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். சிக்ஸ் அடித்த அதே திசையில் அடுத்த பந்திலேயே பவுண்டரி அடித்தார். ஆனால் தினேஷ் கார்த்திக் அதோடு விடவில்லை. அடுத்த பந்தையும் சிக்ஸுக்கு பறக்கவிட்டார். அடுத்த பந்தில்ஓட்டம் அடிக்காமல்,அதற்கு அடுத்த பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். த்ரில் ஓவர் 19வது ஓவரின் கடைசி பந்தில் உடலை திருப்பி, ரிவர்ஸ் ஷாட் அடித்து பந்தை மீண்டும் சிக்ஸுக்கு பறக்கவிட்டார் தினேஷ் கார்த்திக்.

ஆனால் கடைசி ஓவர் விஜய் சங்கருக்கு கிடைத்தது. ஆல்ரவுண்டர் சௌமியா போட்ட அந்த ஓவரின் முதல் பந்து வைட் பந்தாக சென்றது. அதற்கு அடுத்த பந்தை வீணாக்கினார் விஜய். அதற்கு அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து தினேஷ் கார்த்திக்குக்கு ஸ்டிரைக் கொடுத்தார் 4 பந்துகளில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது தினேஷ் கார்த்திக் சிங்கிள் அடித்துவிட்டு ஓடினார். 3 பந்தில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது விஜய் சங்கர் பவுண்டரி அடித்தார். 2 பந்தில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட சமயத்தில் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து   கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.   ஆனால் அதற்குள் தினேஷ் கார்த்திக் ஸ்டிரைக் எண்டிற்கு சென்றுவிட்டார். கடைசி ஒரு பந்து ஐந்துஓட்டங்கள் அடிக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் பேட்டிங். மொத்த அழுத்தமும் அவர் மீது. சௌமியா போட்ட கொஞ்சம் அகலமான பந்தை பேட்டில் வாங்கியதும் தினேஷ் முகத்தில் சிரிப்பு, பந்தை அப்படியே வளைத்து சிக்ஸுக்கு பறக்கவிட்டார். அசத்தல்   கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகள் பிடித்தார். இதில் 3 சிக்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தா. மொத்தம் 362.50 ஸ்டிரைக் ரேட்டுடன் 29 ஓட்டங்கள் எடுத்தார். அவர் வாழ்நாளில் மிக சிறப்பான ஆட்டத்தை ஆடி இந்தியாவிற்கு வெற்றியை தேடி கொடுத்தார்.

 கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த தினேஷ் கார்த்திக் நாகினி டான்ஸ் ஆடவில்லை,கத்திக் கொண்டே ஓடவில்லை,எதிரணி வீரரிடம் சென்று சண்டை போடவில்லை. ஆனால் மிக அமைதியாக பேட்டை தூக்கி மேலே காட்டினார். அதுதான், அந்த அனுபவமிக்க கொண்டாட்டம்தான் வெற்றிக்கு பின்பாக தேவை. வெற்றிக்கு தகுதியாக இருக்கும் போதுஅந்த பக்குவம் தானாக வந்து சேரும் 

இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியோடு சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது. வியப்புக்குரிய வகையில் ஆடிய தினேஷ் கார்த்திக் 29 ஓட்டங்களுடன் (8 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்கும் தொடர் நாயகன் விருது  வாஷிங்டன் சுந்தருக்கும் வழங்கப்பட்ட்டது

ரி20 வரலாற்றில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற ஐந்தாவது போட்டி இதுவாகும்.2010 இல் இந்தியாவுக்கு எதிராக இலங்கை வீரர் கபுகெதரவும் 2012 இல் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் இயன் மாட்கலும் 2013 இல் மேற்கி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் பாபரும் 2014 இல் நெதர்லந்துக்கு எதிராக் ஸிம்பாப்வே வீரர் சிபாண்டும் முன்னதாக கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து தமது அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
இலங்கையில் 50 ஆவது ஆண்டு சுதந்திரக் கிண்ணத்தையும் 70 ஆவது ஆண்டு சுதந்திரக்கிண்ணத்தையும் இந்தியா தட்டிச்சென்றது.

Tuesday, March 13, 2018

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி   

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகியவற்றுக்கிடையேயான   முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாஸ ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 4-வது லீக் போட்டியில் இலங்கையை எதிர்த்துவி்ளையாடிய  இந்தியா  வெற்றிபெற்றது. முதல் சுற்றுப் போட்டியில் மூன்று நாடுகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதனால்  இந்தப் போட்டி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் முக்கியமான போட்டியாக அமைந்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 152 ஓட்டங்கள் எடுத்தது. 153 என்ற வெற்ரி இலக்குடன் விளையாடிய இந்தியா 17.3 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 153 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெற்களால் வெற்றிபெற்றது.

. இந்திய அணியில் ரிஷாப் பான்ட் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் 2 ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட கப்டன் சன்டிமாலுக்கு பதிலாக சுரங்க இடம் பெற்றார். திசரா பெரேரா கப்டன் பொறுப்பை கவனித்தார். மழை காரணமாக ஆட்டம் 95 நிமிடம் தாமதமாக தொடங்கியது. இதனால் ஒரு ஓவர் மட்டும் குறைக்கப்பட்டு 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது..

நானயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா களத்தடுப்பைத் தேர்வு செய்தது.   இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலக, குசல் மென்டிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.. 2 ஓவர்களில்   25 ஓட்டங்கள் எடுத்தபோது   அடித்து ஆடிய குணதிலக ஆட்டமிழந்தார். 8 பந்துகளில் ஒரு சிக்ஸர் உட்பட 17 ஓட்டங்கள் எடுத்த குணதிலக, ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் சுரேஷ் ரெய்னாவால் அருமையாக கேட்ச் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார்.


அடுத்து களம் கண்ட குசல் பெரேரா (3 ) வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் வெளியேறினார்..  குசல் மென்டிஸ் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். தரங்கா (22), கப்டன் திசரா பெரேரா (15 ) ஆகியோர் தன் பங்குக்கு வேகமாகஓட்டங்கள்  சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜீவன் மென்டிஸ் (1  ) வாஷிங்டன் சுந்தர் பந்தில் விக்கெற்றைப் பறிகொடுத்தார்.

அதிரடி காட்டிய குசல் மென்டிஸ் 38 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 55 ஓட்டங்கள் எடுத்த நிலையில் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் கப்டன் ரோகித் சர்மாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு இலங்கை அணியின் ஓட்ட வேகத்தை இந்திய அணி கட்டுப்படுத்தியது. நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெற்களை இழந்து  152 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெற்களையும்,, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெற்கலையும்ம், ஜெய்தேவ் உனட்கட், யுஸ்வேந்திர சாஹல், விஜய் சங்கர்  ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் கைப்பற்றினார்கள்.

 19 ஓவர்களில் 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெற்களை  இழந்து 153 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (11), ஷிகர் தவான் (8) ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெயா பந்து வீச்சில் விரைவில் ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் கண்ட லோகேஷ் , ரெய்னா ஜோடி சிறிது நேரம் தாக்குப் பிடித்தது.
15  பந்துகளுக்கு முகம் கொடுத்த ரெய்னா 2 சிக்ஸர் 2 பவுண்டர் அடங்கலாக 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.சிறந்த முறையில் விளையாடும் ரெய்னா மோசமான பந்து வீச்சுகளில் ஆட்டமிழக்கிறார். ராகுல் பெரியளவில் சோபிக்கவில்லை. 18 ஓட்டங்களில் ஹிட் விக்கெற் முறையில் ஆட்டமிழந்தார். ரி20 போட்டியில் இந்திய அணி வீரர் ஒருவர் ஹிட் விக்கெற் முறையில் ஆட்டமிழப்பது இதுவே முதன் முறையாகும்.

அடுத்து ஜோடி சேர்ந்த மனிஷ் பாண்டே (42ஓட்டங்கள், 31 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), தினேஷ் கார்த்திக் (39 ஓட்டங்கள், 25 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) ஆகியோர் கடைசி வரை நிலைத்து நின்று அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. அகில தனஞ்ஜெய 2 விக்கெற்களையும் நுவான் பிரதீப், ஜீவன்  மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் கைப்பற்றினர்.ஷதுர் தாகூர் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பங்களாதேஷ் எதிர்கொள்கிறது.

Friday, March 9, 2018

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி

               வெற்றிக்களிப்பில் இந்திய வீரர்கள்
 

இந்தியா,பங்களாதேஷ்,இலங்கை ஆகியவற்றுகிடையே கொழும்பில் நடைபெறும் முத்தரப்பு ரி20 கிறிக்கெற் போட்டியில் இந்தியா முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது.

பிறேமதாஸ மைதாந்த்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங்களாதேஷை எதிர்த்து விளையாடிய இந்தியா ஆறு விக்கெற்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ்  எட்டு விக்கெற்களை இழந்து 136 ஓட்டங்கள் எடுத்தது.  137 என்ற வெற்ரி இலக்குடன் விளையாடிய இந்தியா  நான்கு விக்கெற்களை இழந்து 140 ஓட்டங்கள் எடுத்தது.   

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா களத்தடுப்பைத் தேர்வு செய்தார். தமிம் இக்பாலும் சவும்யா சர்காரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர்
பங்களாதேஷ் வீரர்களுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். களத்தடுப்பில் தடுமாறியதால் குறைந்த ஓட்டங்களில் கட்டுப்படுத்த முடியவில்லை.. முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் சவும்யா சர்கார் வெளியேறி இருக்க வேண்டியது.  பந்தை அவர் தூக்கியடித்தபோது அதனைப் பிடிக்க வாஷிங்டன் சுந்தரும், மனிஷ் பாண்டேவும் ஓடி வந்தனர். அருகில் வந்ததும், ‘அவர் பிடிப்பார் என்றும் இவரும், இவர் பிடிப்பார் என்று அவரும் நினைத்து முயற்சிக்காமல் நின்றனர். அதற்குள் பந்து கீழே விழுந்துவிட்டது. ஆனாலும் அடுத்த ஓவரில் சவும்யா சர்கார் [14 ஓட்டங்கள்] வெளியேற்றினார்..

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த பங்களாத்ஷ் அணியினர், அதிரடி காட்ட முடியாமல் தடுமாறியதால் ரன்ரேட் பெரிய அளவில் செல்லவில்லை. அபாயகரமான பேட்ஸ்மேன்களான தமிம் இக்பால் 15 ஓட்டங்களிலும், முஷ்பிகுர் ரஹிம் 18ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக லிட்டான் தாஸ் 34 ஓட்டங்கள் எடுத்தார்.


                   ஆட்டநாயகன் விஜய் சங்கர் 

 
20 ஓவர் முடிவில் பங்களாதேஷ் 8 விக்கெற் இழப்புக்கு 139 ஓட்டங்கள்  மட்டுமே எடுத்தது. இந்திய வீரர்கள் பீல்டிங்கில் 3 கேட்ச்சுகளை கோட்டை விட்டனர். விஜய் சங்கரின் ஓவரில் லிவிங்டன் தாஷ் இரண்டுமுறை தப்பினார். இதனால் ஒரு ஓவரில் இரண்டு விக்கெற்களை வீழ்த்தும் சந்தர்ப்பத்தை விஜய் சங்கர் தவறவிட்டார்.களத்தடுப்பு சிறப்பாக இருந்திருந்தால் விஜய் சங்கர் ஐந்து விக்கெற்களை வீழ்த்தி இருப்பார்.. இந்திய தரப்பில் ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெற்களையும், விஜய் சங்கர் 2 விக்கெற்களையும் வீழ்த்தினர்..


அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து  140 ஓட்டங்கள்எடுத்து 6 விக்கெற் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை பெற்றது. ஷிகர் தவான் 55 ஓட்டங்களும் (43 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), சுரேஷ் ரெய்னா 28 ஓட்டங்களும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.. 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த விஜய்சங்கர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.