Saturday, May 17, 2008

சினிமா தழுவிய அரசியல் அரசியல் ந‌ழுவிய சினிமா

பிரிக்கமுடியாதது எது எனக்கேட்டால் தமிழக அரசியலும்,தமிழ்சினிமாவும் எனப்பதில்கூறுவதற்கு ஏற்றவாறு இரண்டும் பின்னிப்பிணைந்துள்ளன.அறிஞர் அண்ணா சினிமாவை அரசியல் பிரசாரத்துக்காகப்பயன் படுத்தினார்.எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட பாடல்கள் அனைத்தும் அவர் முதலமைச்சராவதற்கு உதவின.அரசியலில் பிரவேசிக்கவிரும்பாத ரஜினி சொல்வதை தமக்குச்சாதகமாக மாற்றிச்சொல்வதில் பல்வேறு அரசியல் தலைவர்களும்முனைப்புக்காட்டுகின்றனர்.



அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்,செல்விஜெயலலிதா என 1967ஆம் ஆண்டுக்குப்பின்னர் வந்த முதலமைச்சர்கள் அனைவரும் சினிமாவுடன் சம்பந்தப்பட்டவர்களே.

திராவிடமுன்னேற்றக் கழகத்துக்கு எம்.ஜி.ஆரும்,காங்கிரஸ் கட்சிக்கு சிவாஜியும் பிரதமபேச்சாளராக விளங்கினார்கள்.திராவிடமுன்னேற்றக்கழகத்திலிருந்து எம்.ஜி,ஆர் வெளியேறி அண்ணா திராவிடமுன்னாற்றக்கழகத்தை ஆரம்பித்தபோதுதமிழக திரைப்படக் கலைஞர்கள், திராவிடமுன்னேற்றக்கழகம்,காங்கிரஸ்,அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் ஆகியமூன்று கட்சிகளிலும் சேர்ந்துபிரசாரம் செய்தனர்.

ஊழலற்ற அரசியலை உருவாக்கப்போவதாக அவர்கள் மேடைகளிலும்,சினிமாவிலும் பிரசாரம் செய்தார்களேதவிர அதனை நடைமுறைப்படுத்த அவர்களால் முடியவில்லை.

அரசியல்பிரசாரங்களுடன் எதிரணிஅரசியல் வாதிகளை மட்டம் தட்டும்நோக்கிலும் சினிமா பயன்படுத்தப்படுகிறது.சினிமாக்கலைஞர் பிரசாரம் செய்வதுடன் மட்டும் நில்லாது ஆட்சியையும் பிடிக்கமுடியும் என்பதை எம். ஜி.ஆர் தமிழகத்தில் நிரூபித்தார். எம்.ஜி.ஆரைத்தொடர்ந்து என்.டி .ராமராவ் ஆந்திராவில் ஆட்சியைப்பிடித்தார்.

1958ஆம் ஆண்டுவெளியான "நாடோடிமன்னன்"படத்தில் மன்னராட்சியின் கொடுமைகளை எதிர்த்து மகக்ளாட்சிமலரவேண்டும் என்பதற்காகப்போராடும் நாடோடி எம்.ஜி.ஆர் சிறையில் அடைக்கப்படுகிறார்.தன்னைச்சுற்றி இருக்கும் சூழ்ச்சி வலையில் இருந்துவிடுபடவிரும்பும் மன்னன் எம்.ஜி.ஆர் உருவ ஒற்றுமையைப்பயன்படுத்தி நாடோடியை மன்னனாக்கி மக்களாட்சி மலர வழிவிடுகிறார்.

1969ஆம் ஆண்டு வெளிவந்த "நம்நாடு" திரைப்படத்தில் நடுத்தரக்குடும்பத்தைச்சேர்ந்த பொதுநலவாதியான எம்.ஜி.ஆர் நகராட்சித்தேர்தலில் வென்று தலைவராகிறார்.எஸ்.வி.ரங்கராவ்,அசோகன், கே.ஏ.தங்கவேலு ஆகிய மூண்று பணக்காரர்களும் எம்.ஜி.ஆரைப்பணீசெய்யவிடாது சதி செய்கின்றனர்."நம்நாடு" படத்தில் சமூக விரோதியாகவரும் எஸ்.வி. ரங்கராவ் பேசும் வசனங்கள் இனறும் அரசியலுக்குப் பொருத்தமானதாகவே இருக்கிறது.

"ஆண்டவனே மனிதனாகப் பிறந்து தேர்தலில் நின்று ஜெயித்தாலும் அவன் இலஞ்சம் வாங்காமல் இருக்கமுடியாது."

"ஏழைகளீடமிருந்து காப்பாற்றுகிறேன் எனககூறி பணக்காரர்களீடம் காசு வாங்கவேண்டும்.பணக்காரர்களீடம் இருந்து காப்பாற்றுகிறேன் எனக்கூறி ஏழைகளிடம் காசு வாங்கவேண்டும்."

" ஒருவன் ஐந்து ரூபா தந்தாலே வருவான். ஒருவன் நூறு ரூபாய்க்குதலை வணங்குவான்.ஒருவன் லட்ச ரூபாய்க்கு காலில் விழுவான்.இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ரேட் இருக்கிறது"

"ஒரு கெட்டகாரியத்தை செய்து கொள்ளையடிக்கவேண்டுமென்றால் எப்போதும் ஒரு நல்லவனை முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும்."
அவை "நம்நாடு" படத்தின் வசனங்கள்.

"எல்லாம் உனக்காக" என்ற படம் 1961 ஆம் ஆண்டு வெளியானது. இப் படத்தில் பொது நலமனப்பான்மை கொண்டவராக நடித்த சிவாஜி, ஊருக்கு நல்லது செய்ய எண்ணி பஞ்சாயத்துத் தேர்தலில் வென்று தலைவராகி.நகரசபைத்தலைவர்,மாநகரசபை மேயர் போன்ற பதவிகளை வகித்து அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என உபதேசம் செய்கிறார்.
வர்க்கப் போராட்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "சவாலே சமாளி"என்ற படம் பெருவெற்றி பெற்றது.கிராமத்து பஞ்சாயத்துத் தேர்தலில் பண்ணையார் தோல்வியுற்றதால் வெற்றிபெற்ற ஏழை விவசாயிக்கு பண்ணையரின் மகள் வாழ்க்கைப் படுவதாககதை அமைக்கப்பட்டிருந்த்து.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த சிவாஜி கணேசன் திருப்பதி போய்வந்ததால் "திருப்பதி கணேசா" என தி.மு.க வின் உடன் பிறப்புகள் கேலி செய்ததால் தி. மு.கவில் இருந்து வெளியேறிய சிவாஜிகணேசன் காங்கிரஸில் இணைந்தார்.



காங்கிரஸின் தலமையினால் அவமானத்துக்கும்,எரிச்சலுக்கும் ஆளான சிவாஜிகணேசன் கங்கிரஸில் இருந்து வெளீயேறி தனது ரசிகர்களை நம்பி"தமிழகமுன்னேற்ற முன்னணீ" என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்தார்.தனது கட்சியின் கொள்கைகளை பரப்புவதற்காக "என் தமிழ் என் மக்கள்" என்ற பெயரில் சினிமாப் படம் ஒன்றைத்தயாரித்து வெளியிட்டார். முழுக்கமுழுக்க அரசியல் மயமான அப்படம் வெற்றிபெறவில்லை.அதே போல் சிவஜியின் அரசியல் வாழ்வும் வெற்றிபெறவில்லை.

ஜெய்சங்கர்,ஜெயசித்ரா நடித்த "பணக்காரப்பெண்" என்ற படம் ஏழை பணக்காரன் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டது. தி.மு.க அபிமானியாகக் கருதப்பட்ட ஜெய்சங்கர் "ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா,நீ நாடள வரவேண்டும் ராமச்சந்திரா" எனப்பாடி நடித்தார்.

ஜெய்சங்கர்,கே.ஆர்.விஜயா நடித்த "மேயர்மீனாட்சி" எஅற படத்தில் குப்பதுமீனாட்சியாக நடித்த கே.ஆர்.விஜயா, மேயர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் படம் வெற்றி பெறவில்லை.

"இன்று நீ நாளை நான்" என்ற படத்தில் தேர்தலில் தோல்வியுற்றதால் அவமானமடைந்த ஜெய்சங்கர் தற்கொலை செய்கிறார்.

"அச்சமில்லை அச்சமில்லை" என்ற படம் அரசியல்வாதிகளை வெளீச்சம் போட்டுக்காட்டியது.அரசியல்வாதியான தனது கணவன் ராஜேஷ் அயோக்கியனாக இருப்பதைப் பொறுக்கமாட்டாத மனைவி சரிதா தேர்தல் பிரசார மேடையில் கணவனைக் கொலை செய்கிறாள். திரை உலக ஜாம்பவானான கே.பாலசந்தரைமே லும் பிரபல மாக்க இப்படம் உதவியது.

"தாய்மாமன்" படத்தில் நேர்மையான முறயில் தேர்தலில் வெற்றிபெறும் சத்யராஜ்,"அமைதிப்படை" என்ற படத்தில் தேர்தலில் வெற்றிபெற தில்லு முல்லு களில் எத்தனை வகை உண்டோ அத்தனை வகைகளையும் கடைப்பிடித்து தேர்தலில் வெற்றிபெறுகிறார்.

"நட்பு" படத்தில் கார்த்திக் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார் .ஸ்டாலின் நடித்த "மகக்ள் அணையிட்டால்"படமும் அரசியல் பேசியது.

அரசியல்வாதி தான் வெற்றிபெறுவதற்காக ஒரு தொண்டனை எப்படி எல்லாம் வஞ்சிக்கிறான் என்பதை "என் உயிர் தோழன்" மூலம் பாரதிராஜா மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்.

எதிரும் புதிருமான இரு அரசியல் வாதிகளின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்துப் புனையப்பட்ட "இருவர்" மணிரத்தினத்தின் தோல்விப்படங்களில் ஒன்றானது.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வைவெளிப்படுத்தும் "அரசியல்","மக்களாட்சி" என்பன வரவேற்பைபெற்றன.

"எஜமான்"படத்தில் ரஜினிகாந்தை தோல்வியடையச்செய்ய நெப்போலியன் கடைப்பிடிக்கும் உத்திகள் அனைத்தையும் முறியடிக்கும் ரஜினி தேர்தலில் வெற்றிபெறுகிறார்.
"மகராசன்" ,"வீரபாண்டிக் கோட்டையிலே","உழைக்கும் கரங்கள்",ஏழைஜாதி" எனப்பல படங்கள் தேர்தல்சாயத்துடன் வெளிவந்தன.

திரைப்படங்களில் வருவதுபோல தேர்தல் வெற்றி சுலபமானது அல்ல என்பதை பல திரை உலகப்பிரமுகர்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததன் மூலம் உணர்ந்துள்ளனர்.


ரமணி
தினக்குரல் 12/12/ 1999

Thursday, May 8, 2008

தமிழக அரசியல் கட்சிகளிடையே இணையத்தளத்தால் எழுந்த சலசலப்பு




மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போர்க்கொடி தூக்கியுள்ளன. டி.ஆர். பாலுவின் மகன் மாரி நடத்தும் நிறுவனங்களுக்கு எரிவாயு பெறுவதற்காக மத்திய அரசை அவர் வற்புறுத்தி உள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி உள்ளன.
டி.ஆர். பாலுவின் குடும்பத்துக்குச் சொந்தமான அந்த நிறுவனங்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கவேண்டும் என்று பிரதமர் அலுவலகம் சிபாரிசு செய்துள்ளது. ஆகையால் பிரதமர் உரிய பதிலளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
டி.ஆர். பாலு மீதான இந்தக் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற அலுவல்கள் இரண்டு நாட்களாக முடங்கின. எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டை டி.ஆர். பாலு மறுக்கவில்லை. எனது மகன் நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு சலுகை காட்டும்படி பெற்றோலியத்துறை அமைச்சரிடம் கேட்டது உண்மைதான். இதில் தவறு ஒன்றும் இல்லை. இரண்டு நிறுவனங்களிலும் வேலை செய்யும் ஊழியர்களின் நன்மை கருதி சலுகை விலையில் எரிபொருள் கேட்டதில் எதுவித தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஒருவர் தனது சொந்த நிறுவனத்துக்கு சலுகை காட்டும்படி கேட்டது தவறுதான் என்பதில் அவரை எதிர்ப்பவர்கள் உறுதியாக உள்ளனர். நஷ்டம் காரணமாக எத்தனையோ நிறுவனங்கள் இந்தியாவில் மூடப்பட்டுள்ளன. மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. அவற்றுக்கெல்லாம் சலுகை காட்டும்படி டி.ஆர். பாலு கோரிக்கை விடுத்தாரா என்ற கேள்விக்கு அவரிடம் இருந்து பதில் வரவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயன்தான் இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தி நியாயத்தைக் கேட்டார். பாரதீய ஜனதாக் கட்சி, சமாஜவாடி ஆகிய கட்சிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து டி.ஆர். பாலுவுக்கு எதிராகக் குரல் கொடுத்தன.
தனது குடும்பத்தினரின் நிர்வாகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கும்படி டி.ஆர். பாலு பிரதமர் அலுவலகத்துக்குக் கோரிக்கை விடுத்தார். அவருடைய கோரிக்கையின் பிரகாரம் பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் பெற்றோலியத்துறை அமைச்சருக்கு எட்டுக் கடிதங்கள் எழுதினார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று எட்டுக் கடிதங்களின் நகல்களையும் வெளியிட்டு டி.ஆர். பாலுவை மேலும் சிக்கலில் வீழ்த்தியுள்ளது. கிங்ஸ் ஒவ் இந்தியா கோப்பரேசன், கிங்ஸ் இந்தியா பவர் கோப்பரேசன் ஆகிய இரண்டு நிறுவனங்களின் தலைவராக டி.ஆர்.பாலு இருக்கிறார்.
பாரதீய ஜனதாக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து மத்தியில் ஆட்சி அமைத்தபோது மத்திய அமைச்சராவதற்காக இதனது நிறுவனங்களின் தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் டி.ஆர். பாலு.
பாரதீய ஜனதாக்கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது டி.ஆர். பாலுவின் மகன் ராஜ்குமாரின் பொறுப்பில் இருந்த கிங்ஸ் இந்தியா கெமிக்கல் நிறுவனம், மத்திய பெற்றோலியம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்தது. டி.ஆர். பாலுவின் மகனின் நிறுவனத்துக்கு 10 ஆயிரம் கியூபெக் மீற்றர் எரிவாயு சலுகை விலையில் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. டி. ஆர். பாலுவின் மகன்களான ராஜ்குமார், செல்வக்குமார் ஆகிய இருவரும் இரண்டு நிறுவனங்களுக்கும் தலைவரானார்கள். இந்த நிறுவனங்களில் அதிக பங்குகளை டி.ஆர். பாலுவின் மனைவியும் உறவினர்களும் வைத்திருக்கின்றனர். ஆகையால் ஏனைய நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தன.
பாரதீய ஜனதாகக் கட்சியின் காலத்திலே ஆரம்பமான இப்பிரச்சினை இன்றுதான் சந்திக்கு வந்துள்ளது. டி.ஆர்.பாலுவின் மகனின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பாரதீய ஜனதாக் கட்சியே இன்று டி.ஆர். பாலுவுக்கு எதிராகக் கூச்சலிடுகிறது.
நலிவடைந்த நிறுவனங்கள் என மத்திய அரசால் வெளியிடப்பட்ட பட்டியலில் கிங்ஸ் கெமிக்கல் நிறுவனத்தின் பெயரும் உள்ளது. வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை அந்த நிறுவனம் திருப்பிக் கொடுக்கவில்லை. கடன் பாக்கி வைத்திருக்கும் நலிவடைந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு சலுகை காட்ட முற்படுவது தவறு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
ஆனால் அமைச்சர் டி.ஆர்.பாலுவின் விளக்கமோ வேறு வகையாக உள்ளது. 2004 ஆம் ஆண்டு பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் விலகியபோது அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தேன். என்னையே பழிவாங்குவதற்காகவே நலிவடைந்த நிறுவனங்களின் பட்டியலில் எனது மகனின் நிறுவனத்தை இணைத்தது அந்த நிறுவனத்தை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், பங்குதாரர் ஆகியோரின் வேண்டுதலின் பேரில்தான் சலுகை விலையில் எரிவாயு வழங்க கோரிக்கை விடுத்தேன். இதில் என்ன தவறு உள்ளது என்று கேட்கிறார் டி.ஆர். பாலு.
சேது சமுத்திரத் திட்டத்தில் கடலில் மணலைத் தோண்டும் ஒப்பந்தம் திரும்பத் தரப்படாத வங்கிக் கடன், மானிய விலையில் மீன்பிடி படகுகளை வாங்கி விற்றது போன்ற பல பிரச்சினைகளை டி.ஆர். பாலுவுக்கு எதிராக வெளிக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.
முதல்வரின் மகனும் தமிழக அமைச்சருமான மு.கா. ஸ்டாலினின் அதிகாரபூர்வமான இணையதளமொன்றின் மூலம் மக்களுடன் மிக நெருக்கமாகியுள்ளார். எமக்கே ஸ்டாலின்.நெட்(www.mkstalin.net ) என்ற அந்த இணையத்தளத்தில் ஸ்டாலினின் சேவைகள், சாதனைகள், எதிர்காலத் திட்டங்கள் என்பன விலாவாரியாக உள்ளன.
மக்கள் கருத்துகளுக்கு அந்த இணையத்தளத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது வெளிவரும் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஸ்டாலினின் இணையத்தளத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை பற்றி வெளியான விமர்சனம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் டாக்டர் ராமதாஸுக்கு அக்கறை இல்லை. தனது கட்சியை வளர்ப்பதிலும் குடும்பத்தை காப்பாற்றுவதிலுமே டாக்டர் ராமதாஸ் குறியாக இருக்கிறார் என்று இணையத்தள வாசகர்கள் சிலர் டாக்டர் ராமதாஸ் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
டாக்டர் ராமதாஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினைகள் உருவாகுவதும் அவை அடங்கிப் போவதும் வழமையானதே. இந்த நிலையில் இணையத்தளக் கருத்துக்கள் ராமதாஸைப் பற்றி அவதூறு பரப்புகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இணையத்தளத்தில் வெளியாகும் கருத்துக்கள் வாசகர்களுடையதே தவிர அவற்றுக்கும் இணையத்தளத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று இணையத்தளப் பொறுப்பாளராக முஹம்மது ஜின்னா கூறியுள்ளார்.
இணையத்தளம் கருத்துக்களைப் படித்து அதற்குரிய பதில்களை ஸ்டாலின் எழுதி வருகிறார். இணையத்தளத்தில் வெளியாகும் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட அலுவல்களுக்கு அனுப்பப்பட்டு அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களின் கருத்தை ராமதாஸும் அறியவேண்டும் என்பதற்காகவே அவரைப் பற்றிய கருத்துக்கள் வெளியாவதாக உணர முடிகிறது.
மக்களிடமும் தொண்டர்களிடமும் நெருங்கிப் பழகும் ஸ்டாலினை இந்த இணையத்தளம் மேலும் நெருக்கமாக்கி உள்ளது. அமைச்சர் ஸ்டாலினிடம் நேரில் செல்ல முடியாத பல கருத்துக்களை இணைய தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள். ஸ்டாலினின் தொழில் நுட்ப வளர்ச்சி பழைய தலைவர்களை கதி கலங்க வைத்துள்ளது.

வர்மா

வீரகேசரி வாரவெளியீடு;04.05.2008

Sunday, May 4, 2008

இலங்கைப் பிரச்சினையால் பரபரப்பான தமிழக அரசியல்




இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினியை ராஜீவ்காந்தியின் மகளான பிரியங்கா இரகசியமாகச் சிறையில் சந்தித்ததை ராஜீவ்காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் கண்டித்துள்ளன. இதேவேளை இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்øசயை ஏற்படுத்தியுள்ளது.
நளினியை பிரியங்கா இரகசியமாகச் சந்தித்தது பற்றிய விபரங்கள் கசியத் தொடங்கியதும் அச்சந்திப்புப் பற்றி பல யூகங்கள் வெளியாகின. ராஜீவ்காந்தி பற்றி பிரியங்கா புத்தகம் ஒன்று எழுதுகிறார். அதற்காகத்தான் நளினியைச் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்தார், இந்தியப் பிரதமராக ராகுல்காந்தி வருவதற்கான தடைகளை நீக்குவதற்காகவே இச்சந்திப்பு நடைபெற்றது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன் தனது சிறை அனுபவங்களை புத்தகமாக எழுதி வருகிறார். அதுபற்றிய விபரங்களை அறிவதற்காக பிரியங்கா நளினியைச் சந்தித்தார் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் தமது யூகங்களை வெளியிட்டு வருகின்றனர்.
சிறைச்சாலை விதிகளை மீறியே பிரியங்கா, நளினியைச் சந்தித்தார். கைதிகளைச் சந்திக்கும் பொதுவான இடத்தில் சந்திக்காது பிரத்தியேகமாக ஒரு இடத்தில்தான் இச்சந்திப்பு நடந்துள்ளது. ஆகையால் சட்டவிதிகளுக்கு அப்பாற்பட்டே இச்சந்திப்பு நடந்துள்ளது என்று ஒரு சிலர் குரல் எழுப்பியுள் ளனர்.
நளினியை பிரியங்கா சந்தித்ததில் எந்தவிதமான சட்டவிதிகளும் மீறப்படவில்லை என்று சிறைச்சாலை வட்டாரங்கள் விளக்கமளித்துள் ளன.
நளினியை மன்னித்து நளினியின் குடும்பத்தின் மீது பரிவு காட்டும் சோனியா காந்தி ராஜீவ்காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களின் மீது அனுதாபம் காட்டவில்லை, இவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை சோனியாவும் அவரது பிள்ளைகளும் மன்னித்தாலும் நாம் மன்னிக்கப் போவதில்லை என்று ராஜீவுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
அரசியல் அரங்கில் அவ்வப்போது தன்னை வெளிப்படுத்தும் ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, நளினி, பிரியங்கா சந்திப்பை கையில் எடுத்து தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழக அரசுக்குத் தெரியாது இச்சந்திப்பு நடைபெற்றிருக்காது. ஆகையால் தமிழக அரசு இதற்கு சரியான பதில் கூறவேண்டும். தமிழக அரசைக் கலைக்கும்வரை ஓயமாட்டேன் என்று டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி சூளுரைத்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் இச்சந்திப்பை வரவேற்றுள்ளனர். விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தி வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இச்சந்திப்பைப் பற்றி மௌனம் காத்து வருகின்றனர்.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழக அரசு மிக மெது மெதுவாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய சூழலை இந்திய அரசு ஏற்படுத்தவேண்டும் என்று தமிழக சட்டசபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது.
விடுதலைப் புலிகளை எதிர்ப்பதையே தமது பிரதான கொள்கையாகக் கொண்டிருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் இத்தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். எந்தப் பிரச்சினையானாலும் கட்சியின் மேலிடம் கூறுவதைத் தமது கொள்கையாகக் கருதும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மேலிடத்து உத்தரவின்றி ஆதரவு தெரிவித்திருக்கமாட்டார்கள்.
இலங்கை விவகாரத்தில் ஏதோ ஒரு அணுகுமுறையை இந்தியா கையாள்வதற்கு தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் கால்கோலாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பைக் காரணம் காட்டி அடக்கி வாசிக்கும் முதல்வர் கருணாநிதி இந்திய மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடவேண்டும் என்று நோர்வே பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்த பின்னர் இந்திய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர ஏனைய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் உள்ளன.
விடுதலைப் புலிகளினால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் ஜெயலலிதா தனது பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும் எனக்கூறியுள்ளார்.
இந்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிவதற்கு அரசியல் உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது. இலங்கை விவகாரத்தில் ஆக்கபூர்வமான முடிவு காணப்படவேண்டும் என்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் வைகோ உறுதியாக உள்ளார். நோர்வேயில் அவர் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளõர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கிமூனையும் வைகோ சந்திப்பதற்கு முயற்சி செய்கிறார். இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தினால் இந்திய அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.
வர்மா
வீரகேசரி வார வெளியீடு; 27.04.2008

தொலைபேசி விவகாரத்தால் கலங்கிப்போன தமிழக அரசு



தமிழக அரசை வீழ்த்துவதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்து சலிப்படைந்த ஜெயலலிதா தீபம் ஏற்றி தமிழக அரசை அகற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார்.
தமிழ்நாடு இப்போது இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இருள் அகன்று ஒளி பிறப்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்கள் அனைவரும் மாலை 6.30 மணிக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று ஜெயலலிதா தனது கழகக் கண்மணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தீபம் ஏற்றும்போது ""இருண்ட தமிழகத்தில் ஒளியேற்ற வாருங்கள் அம்மா'' என்று முழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.
ஒளி ஏற்றும் விழா நிகழ்ச்சி உண்மையிலேயே திராவிட முன்னேற்றக் கழக அரசை அகற்றுவதற்குத்தானா அல்லது ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்வை உயர்த்துவதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கார்த்திகைத் தீபம், தீபாவளி ஆகிய இரண்டு தினங்களில் மட்டும் இந்துக்கள் தீபமேற்றி வழிபடுவார்கள். இந்த இரண்டு நாட்களுக்கும் புராணக் கதைகள் உள்ளன. ஆனால் ஜெயலலிதாவின் கட்டளைப்படி புதிய ஒரு தீபமேற்றும் நாள் உருவாக்கப் பட்டுள்ளது.
தீபமேற்றி விழாக் கொண்டாடுவது இந்து சமயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. தனது சுயநலனுக்காக தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் தீபமேற்றும்படி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் பலர் கூடி பிரார்த்தனை செய்வதும் வழிபாடு செய்வதும் மதங்களில் உள்ள நடைமுறைகளில் ஒன்று. பண்டைக் காலத்தில் மன்னரின் ஆரோக்கியத்துக்காக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தமது வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை செய்வார்கள். அதேபோன்ற ஒரு நிலையையே இன்று ஜெயலலிதா பின்பற்றுகிறார்.
தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு பரிகாரங்களையும் யாகங்களையும் ஜெயலலிதா செய்து வருகிறார். தோஷ நிவர்த்திக்காகவே ஒரே நேரத்தில் சகலரும் ஒளியேற்றி தன்னை வாழ்த்த வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான பல வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் இருந்து அவர் விடுதலை பெறுவதற்கு ஒரே நேரத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று யாராவது ஒரு ஜோதிடர் கூறி இருப்பார். அதனால்தான் ஜெயலலிதா இப்படியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றும் கருதத் தோன்றுகிறது.
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து ஜெயலலிதாவைக் காப்பாற்றிய வக்கீல் ஜோதி ஜெயலலிதாவின் எதிர்முகாமாகிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமாகி உள்ளார். ஜெயலலிதாவின் பலம் பலவீனம் அனைத்தும் அறிந்த ஜோதி திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்தி தனக்கு தண்டனை வாங்கித் தந்துவிடலாம் என்றும் ஜெயலலிதா பயப்படுகிறார்.
ஜெயலலிதாவின் மக நட்சத்திரத்துக்கு இந்த ஆண்டுப் பலன்கள் எதிர்மறையாக உள்ளன. அட்டமியில் வருடம் பிறந்தது ஜெயலலிதாவின் ராசிக்கு நன்மை தராது. ஜெயலலிதாவுக்கு கண்டச் சனி நடக்கிறது. ராகு, கேது பெயர்ச்சியும் ஜெயலலிதாவின் ராசிக்கு எதிராக உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்யவே விளக்கேற்றி வழிபடும் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்றும் கருத இடம் உண்டு. மூட நம்பிக்கைகளை களைந்தெறிய புறப்பட்ட திராவிட கழக கண்மணிகளின் ஒளியேற்றும் விழா ஜெயலலிதாவின் வாழ்வில் ஒளியேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அமைச்சர்கள், அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் இரகசியமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டதென்பது ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டதனால் திராவிட முன்னேற்றக் கழக அரசு கதிகலங்கிப் போயுள்ளது.
தமது உரையாடல்கள் உளவுத்துறை மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஒலிப்பதிவு செய்யப்படுகிறது என்று பலரும் செய்த புகார்களை திராவிட முன்னேற்றக் கழக அரசு உறுதியுடன் மறுத்து வந்தது. உயர் அதிகாரிகள் சிலரின் உரையாடல்களை ஆங்கிலத் தினசரி ஒன்று ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படிதான் தொலைபேசி உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்ப்பட்டதா? அல்லது உளவுத் துறை அதிகாரிகள் தமது இஷ்டப்படி ஒலிப்பதிவு செய்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொலைபேசி உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட விபரம் பத்திரிகையில் வெளியாக முன்பு எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவின் கரங்களுக்கும் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசுக்குள்ளும் எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உளவாளிகள் இருப்பதை இது அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளது.
தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு பற்றிய நீதி விசாரணை நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். நீதி விசாரணை நடைபெறுவது ஒருபுறம் இருந்தாலும் தமிழக ஆட்சியில் இது ஒரு கறை படிந்த சம்பவம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
வர்மா

வீரகேசரி வாரவெளியீடு;20.04.2008

முதல்வர் கருணாநிதியின் முடிவு இராஜதந்திரமா? பின்வாங்கலா?

ஒகேனக்கலில் குடிநீர்த்திட்டம் மேற்கொள்ள தமிழக அரசு முடிவெடுத்ததால் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் தமிழ் நாட்டுக்கு எதிராக போராட்டம் தொடங்கியது. கர்நாடகத்தின் இனவெறிக்கு பதிலளிக்கும் வகையில் தமிழகத்திலும் ஆங்காங்கு கர்நாடகத்துக்கு எதிராக வன்செயல்கள் நடைபெற்றன.
கர்நாடகம், தமிழகம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் கலவரம் வெடிக்குமோ என்று சகலரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்தை ஒத்திவைப்பதாகத் தமிழக முதல்வர் அறிவித்ததால் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் முதல்வருக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளன.
எலும்பை ஒடித்தாலும் ஓகேனக்கல் குடிநீர்த்திட்டம் நிறைவேறும் என்று வீரவசனம் பேசிய முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக தமிழக மக்களின் குடிநீர்த்திட்டத்தை அடகு வைத்துவிட்டார்.
தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும்
ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்துக்காக ஒற்றுமையாகக் குரல்கொடுத்தன. திராவிட முன்னேற்றக்கழகத்தின் பரம எதிரியான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும், அதன் தோழமைக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகமும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் கரங்களை வசப்படுத்தின.
தமிழ்த்திரை உலகம் திரண்டு கர்நாடகத்தை மிரட்டியது. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரஜினி, அர்ஜுன், முரளி, ரம்பா ஆகியோர் ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகத்தில் உள்ள இன வெறிபிடித்தவர்களுக்கு எதிராக ஒன்று திரண்டனர்.
தமிழகத்தின் ஒற்றுமையின் காரணமாக
ஒகேனக்கல் பிரச்சினைக்கு சாதகமான தீர்ப்புக்கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் முதல்வரின் ஒரு தலைப்பட்சமான அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.கர்நாடக சட்டசபைத் தேர் தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் கர்நாடக அரசியல் கட்சிகள் ஒகேனக்கல் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளன.
தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாரதீய ஜனதாக் கட்சியும் ஒகேனக்கல் பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிராகவே உள்ளன. கர்நாடக ஆட்சியைக் கைப்பற்றுவதே இரு கட்சிகளின் நோக்கமாக உள்ளது. ஆகையினால் நியாயத்தை ஒரு புறம் ஒதுக்கி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் கர்நாடக வாக்குகளில் மட்டும் கவனம் செலுத்துகின்றன.
கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறப்போகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று முதல்வர் கூறி உள்ளார். மேல் நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றின் தீர்ப்புக்களைக் கூட துச்சமென தூக்கி எறிந்த கர்நாடகம் பேச்சுவார்த்தையில் சுமுகமாக முடிவு ஒன்றைத் தரும் என்று எந்த அடிப்படையில் முதல்வர் நம்புகிறார் என்பது தெரியவில்லை.
காவிரி நீர்ப்பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகம் தப்பு செய்கிறது என்பதை மத்திய அரசு உணர்ந்து கொண்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு உரிய உரிமைகளை கொடுக்கும்படி மத்திய அரசு இதுவரை கர்நாடக மாநிலத்துக்கு எந்தவித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த போதும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் தீர்க்கப்படாத பிரச்சினையை கர்நாடகத்தில் மே மாதம் பதவி ஏற்கப்போகும் அரசு தீர்த்து வைக்கும் என்று முதல்வர் கருணாநிதி கனவு காண்கிறார்.
கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறது. ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அமைச்சர் ஸ்ராலின்
ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்துக்குக்கான அடிக்கல்லை நாட்டி சம்பிரதாயபூர்வமாக திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அப்போதும் கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சிதான் நடைபெற்றது. அப்போது பொங்கி எழாத கர்நாடக அரசியல்
வாதிகள் இப்போது பொங்கி எழுவது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது.
முதல்வரின் அறிவிப்பால் தமிழக அரசியல் வாதிகளும் மக்களும் கொதித்துப்போயுள்ளனர். கர்நாடக அரசியல்வாதிகள் தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர். ஆனால், தேர்தலின் பின்னர் பேச்சுவார்த்தை மூலம் ஒகேனக்கல் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கர்நாடக அரசியல்வாதிகள் எவரும் கூற வில்லை.
ஒகேனக்கலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர்த்திட்டம் தமிழக அரசு மேற்கொள்ளும் இந்தத் திட்டத்தினால் தமிழ் நாடும், கர்நாடக எல்லையில் உள்ள கர்நாடக மக்களும் பயனடைவார்கள்.
இந்தத்திட்டம் தடைப்பட்டால் தமிழ் நாட்டு எல்லையின் கர்நாடக மக்களும் பயனடைவார்கள். இந்த உண்மையை கர்நாடக அரசியல் வாதிகள் யாரும் வெளிப்படையாகக் கூறவில்லை. நகரத்தில் உள்ளவர்களுக்கு குடிநீர்ப் பிரச்சினை பெரிதாகத் தெரிவதில்லை.கிராமத்தில் உள்ள மக்கள் தான் குடிநீருக்கு அலைகிறார்கள்.
ஒகேனக்கல் குடிநீர்த்திட்டம் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது கர்நாடகத்தில் நீர்ப்பாசன அமைச்சராக இருந்த நஞ்சகௌடா ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சட்டப்படி அது தமிழ் நாட்டுக்குச் சொந்தமானது. அதனைத் தடுப்பதற்கு கர்நாடகத்தில் உள்ளவர்களுக்கு உரிமை இல்லை என்று அவர் தெளிவுபடக் கூறி உள்ளார்.
தேசிய ஒற்றுமை, பொறுத்திருப்போம், காத்திருப்போம், நம்பிக்கையுடன் இருப்போம் என்று சொல்லிச் சொல்லியே தமிழக அரசு பல சந்தர்ப்பங்களில் ஏமாந்துள்ளது. மீண்டும் அதேபோன்ற ஒரு தவறை தமிழக முதல்வர் செய்துள்ளார்.
காவிரி நீர்ப்பிரச்சினை பல நூற்றாண்டு காலமாக உள்ளது. கி.பி. 1146 1163 ஆம் ஆண்டு மைசூரை தலைமையிடமாகக் கொண்டு போகா மன்னர்கள் காவிரி நீரைத் தடுக்க முயன்றபோது இரண்டாம் ராஜராஜ சோழன் படையெடுத்து அதனை முறியடித்தான்.
17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மைசூர் அரசன் சிங்க தேவராயன் அணைகட்டி காவிரி நீரை தடுத்த போது அதனை எதிர்த்து ராணிமங்கம்மா படையெடுத்துச் சென்றார். அப்போது பெய்த பெருமழையில் அணை உடைந்ததால் போர் தவிர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. றண்றறறறற1890 ஆம் ஆண்டு மைசூர் சென்னை அரசுகளுக்கிடையே காவிரி நீர்ப்பிரச்சினை உருவானது. மன்னராட்சியில் ஆரம்பித்த காவிரி நீர்ப்பிரச்சினை மக்களாட்சியிலும் தொடர்கிறது.
1956ஆம்ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது திருவிதாங்கூர் பகுதிகள் கேரளாவுடனும் குடகு, மலபார் பகுதிகள் கர்நாடகாவுடனும் இணைக்கப்பட்டன. குடகு மலையில் தலைக்காவிரியில் உற்பத்தியாகும் காவிரி, கர்நாடக மாநிலத்தின் மலைகள் குன்றுகளுக்கிடையே 320 கி. மீற்றர் ஓடி தமிழகத்தில் அகண்ட காவிரியாய் 416 கிலோ மீற்றர் சமவெளியில் செல்கிறது.
கர்நாடகம் தமிழகம் ஆகிய இருமாநில எல்லையிலும் 64.கி.மீற்றர் சமவெளியில் காவிரி ஓடுகிறது. இதில் தமிழக எல்லையான ஒகேனக்கல் பகுதியில்தான் தமிழக அரசு குடிநீர்த்திட்டத்தை உருவாக்க அடிக்கல் நாட்டி உள்ளது.
தற்போது அமைதியாக இருக்கும் ஒகேனக்கல் பிரச்சினை கர்நாடகத் தேர்தலின் பின்னர் விஸ்வரூபம் எடுக்கும்.
வர்மா

வீரகேசரி வாரவெளியீடு;13.04.2008