Sunday, December 20, 2020

அதிகமாக ஆசைப்படும் பிரேமலதா

 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி,ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் எதிராகத் தேர்தலில் போட்டியிட்டு  நெருக்கடி கொடுத்தவர் விஜயகாந்த். அவரின்   சிம்ம கர்ஜனையை ரசித்த கூட்டம் அவரின் பின்னால் சென்றது. மேடை தோறும் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும்  விமர்சித்து அரசியல் செய்தவர் விஜயகாந்த்

இன்று, பொம்மைபோல இருக்கும் விஜயகாந்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் அவரின் மனைவி பிரேமலதா. உச்சத்தில் இருந்த விஜயகாந்தின் செல்வாக்கு அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. அந்த அரசியல் யதார்த்தத்தை உணர்ந்துகொள்ளாமல் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும், மைத்துனர் சுதீஷும்  பேசும் பேச்சுக்களும், வெளியிடும் அறிக்கைகளும் அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் அவர்கள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்ம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஆகியவற்றின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் சக்தியாக விஜயகாந்தின் கட்சி இருந்தது. 2005 ஆம் ஆண்டு கட்சியை ஆரம்பித்த விஜயகாந்த் 2006 ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டார். மக்களுடந்தான் கூட்டணி எனும் விஜயகாந்தின் தனித்துவமான பேச்சால் பலர் கவரப்பட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்ம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   ஆகிய இரண்டு கட்சிகளையும் விரும்பாத வாக்காளர்கள் விஜயகாந்தின் கட்சிக்கு வாக்களித்தனர்.


2005 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் 8.45 சத வாக்குகளைப் பெற்று ஆளும் கட்சிக்கும் பிரதான எதிர்க் கட்சிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் விஜயகாந்த். அந்தத் தேர்தலில் விஜயகாந்த மட்டும் வெற்றி பெற்றார்.  ஏனைய வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டாலும் விஜயகாந்தின் கட்சி பெற்ற வாக்குகள் பிரதான கட்சிகளைக் கிலிகொள்ள வைத்தது. விஜயகாந்தின் வளர்ச்சி கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் அசைத்துப் பார்த்தது. அவருடன் கூட்டணி சேர இருவரும் தூது விட்டனர்.

2011 ஆம் ஆண்டு  தமிழக சட்ட சபைத் தேர்தலில் ஜெயலலிதா 41 தொகுதிகளை ஒதுக்கியதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் விஜயகாந்தின் கட்சி போட்டியிட்டது. 29 தொகுதிகளில் விஜயகாந்தின் கட்சி வெற்றி பெற்றதால் அவர் எதிர்க் கட்சித்தலைவரானார். திராவிட முன்னேற்றக் கழகம் பல இடங்களில்  மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. எதிர்க் கட்சித்தலைவர் பதவி கருணாநிதிக்குக் கிடைக்கவில்லை. விஜயகாந்தின் உறுப்பினர்களைப் பிரித்தெடுத்து  அவரின் எதிர்க் கட்சி உறுப்பினர் பதவியை பறித்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் வீழ்ந்த விஜயகாந்தின் கட்சி இன்னமும் தலை தூக்கவில்லை.

2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்துடன் கூட்டணி சேர கருணாநிதி விரும்பினார். பழம் நழுவி பாலில் விழும் நிலை எனக் கூறினார்.  விஜயகாந்தை வளைத்த மூன்றாவது அணி அவரை முதல்வர்  வேட்பாளராக்கியது.  மூன்றாவது அணி படு தோல்வியடைந்தது. மூன்றாவது அணியால் கருணாநிதி முதல்வராக முடியாத நிலை ஏற்பட்டது. விஜயகாந்தின் கட்சியின் வாக்கு 2.2 சத வீதமாக வீழ்ச்சியடைந்தது.

விஜயகாந்தின் வாக்கு வங்கி வீழ்ச்சியடைந்ததை கணக்கில் எடுக்காத மனைவி பிரேமலதாவும், மைத்துநர் சுதீஷும் தாம் இன்னமும் உயரத்தில் இருப்பதாகவெ எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.  விஜயகாந்தின் மகனோ தன்னைலை மறந்து   பேசுகிறார்.  எல்லாக் கட்சிகளும் விஜயகாந்தின் காலடியில் கிடக்கின்றன.  விஜயகாந்துடன் கூட்டணி வைக்க கட்சிகள் வரிசையில் காத்திருக்கின்றன என விஜயகாந்தின் மகன் சொல்கிறார்.


சிங்கம் போல் கர்ஜித்த விஜயகாந்த் பொம்மைபோல் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. கட்சிப் பிரசாரத்துக்கு தலைவர் வருவார் என பிரேமலதா சொல்லும் கதை நம்பும்படியாக இல்லை. விஜயகாந்தின் வீழ்ச்சியை உணராது  41 தொகுதிகளைத் தருபவர்களுடன் தான்  கூட்டணி என  பிரேமலதா யாரும் கணக்கில் எடுக்க மாட்டார்கள். விஜயகாந்தின் கட்சியில் உள்ள பலர் வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டார்கள்.  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்கள் யாரும்    இல்லை.  கூட்டணிக் கட்சியின் உதவி  இல்லாமல் வெற்றி பெற  முடியாது என்ற உண்மை பிரேமலதாவுக்குத் தெரியும். ஆனாலும் போலிக் கெளரவத்தால்  அதிக தொகுதிகளுக்கு ஆசைப்படுகிறார்.

தமிழக சட்ட சபைத் தேர்தலில் சகல தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்த பிரேமலதா அந்தப் பரபரப்பு அடங்குவதற்கிடையில்  41 தொகுதிகலைத் தருபவர்களுடன் தான் கூட்டணி என அறிவித்துள்ளார்.  விஜயகாந்த் என்ற மாயை மறைந்து விட்டது.    அதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக விஜயகாந்த் இல்லை. கடந்த சட்ட சபைத் தேர்தலில் 1.1 சத வீத வாக்குகளால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக்க  முடியாது தோல்வியடைந்தது. இன்றைய அக் கட்சியின் 2 சதவீத வாக்கு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அவசியம் தேவையானது.  ஆனால், அதற்காக 41 தொகுதிகளைத் தூக்குக் கொடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை.


சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டாலும் வெற்றி பெறக்கூடிய செல்வாக்கு பிரேமலதா, விஜய பிரபாகரன்,,சுதீஷ் ஆகியோருக்கு இல்லை. சுதீஷை நாடாளுமன்ற உறுப்பினராக்க வேண்டும் என்ற கனவு பிரேமலதாவுக்கு இருக்கிறது.  அதனால்தான் நடக்க முடியாத ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். கடந்த சட்ட சபைத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்தின் கட்சியை பிரேமலதா இணைத்தார். கடைசி நேரம் வரை  திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேரம் பேசிய அசிங்கமும் வெளிச்சத்துக்கு வந்தது.

சுதீஷை ராஜ்ய சபா எம்பியாக்க வேண்டும் என்ற கனவான் ஒப்பந்தத்துடன்  கூட்டணியில் இணைந்தார் பிரேமலதா தேர்தல் முடிந்ததும் கனவான் ஒப்பந்தத்தை கைவிட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.  அந்தப் படிப்பினையால் இம்முறை எழுத்து மூல ஒப்பந்தம் செய்து தான் கூட்டனியில் சேர்வார் பிரேமலதா.

விஜயகாந்தால் உருவாக்கப்பட்ட கட்சியைப் பற்றியோ அதன் வளர்ச்சி பற்றியோ கிஞ்சித்தும் அக்கறை இல்லாது  சுதீஷுக்கு ஒரு எம்பி பதவி வாங்குவதிலேயே பிரேமலதா குறியாக இருகிறார்.

வர்மா