Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts

Wednesday, January 22, 2020

ஈராக் வீதிகளில் காட்சியளித்த பேரின்பநாதனின் ஓவியங்கள்.


 வாசகர்,அரசியல் கட்சியின் ஆதரவாளர், ரசிகர்,உதைபந்தாட்ட வீரன், நடிகர்,ஓவியர் என பல துறைகளில் தடம் பதித்தவர் பேரின்பநாதன். பேரின்பம், மகேந்திரன் என  அவரை அழைப்பார்கள்.வடமராட்சி  வதிரியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதியின்  மகன். சிறு வயதில் இருந்தே வாசிப்பு இவருடன் பயணிக்கிறது. தேவரையாளி இந்துக் கல்லூரியின்  முன்னாள் அதிபர்   எம்.எஸ்.சீனித்தம்பி அறிமுகப்படுத்திய வாசிப்புக்கு தாய் மாமன் சி.க. இராஜேந்திரன் வலுவூட்டினார். அவர் வாங்கும் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும்  பேரின்பநாதனின் வாசிப்புக்கு உயிரூட்டின.

மாமா, கிளாக்கர் என உறவினர்களால் செல்லமாக அழைக்கப்படும் சி.க.இராஜேந்திரனின் கொம்யூனிச அரசியல் சாயம் பேரின்பநாதனின்  மீதும் படிந்தது. யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களுக்கும், அரசியல் கூட்டங்களுக்கும் சி.க.இராஜேந்திரனுடன் சென்றதால்  எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் போன்ற பலரின் நட்பு பேரின்பநாதனுக்குக் கிடைத்தது.

பாடசாலை நாட்களிலும் அதன் பின்னரும் பல நாடகங்களில் நடித்தார். இளம் வயதில் டையமன் விளையாட்டுக் கழகத்துக்காக விளையாடினார். பின்னர் விளையாட்டைக் கைவிட்டார். ஆனால், ரசிப்பதை அவர் இன்னமும் கைவிடவில்லை. வடமராட்சியிலும்  யாழ்ப்பாணத்திலும் முக்கியமான உதைபந்தாட்டப் போட்டியென்றால் அவரை  அங்கே காணலாம். கொழும்பிலும், நீர்கொழும்பிலும் அவர் வாழ்ந்த காலத்தில் முக்கியமான உதபந்தாட்டப் போட்டிகளைப் பார்த்து ரசித்தவர்.   வெளிநாட்டு உதைபந்தாட்ட அணி விளையாடினால், அவசரமான  வேலையாக  இருந்தாலும் அதனைக் கைவிட்டு விளையாட்டைப் பார்க்கச் சென்று விடுவார்.


 பத்திரிகைகளில் ஓவியம், விளையாட்டு பற்றிய கட்டுரைகள், பேட்டிகள் பிரசுரமானால் அவற்றை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். ஓவியம், நடிப்பு  இரண்டிலும் பாடசாலை நாட்களில் தனது திறமையை வெளிப்படுத்திய பேரின்பநாதன், பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னும் அவற்றைக் கைவிடவில்லை. நடிப்பு அவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. ஓவியம் அவரது வாழ்வை வளப்படுத்தியது.

கேள்வி: ஓவியம் , நடிப்பு இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் தடம் பதித்தீர்கள். இது எப்படிச் சாத்தியமாகியது?

பதில்:   தேவரையாளி இந்துக் கல்லூரியில் படித்தபோது  அங்கு கடமையாற்றிய ஆசிரியர்கள்தான் என்னை வழி நடத்தினார்கள். அதிபர் சீனித்தம்பி, சைவப்புலவர் வல்லிபுரம்,ஆ.ம.செல்லத்துரை, இளவரசு ஆழ்வாப்பிள்ளை,  பெ.அண்ணாசாமி, சூ. ஏகாம்பரம்,சி.திரவியம், பொன்னம்மா ரீச்சர்,மீனாட்சியம்மா ரீச்சர் ஆகியோர் தான் என்னை உருவாக்கினார்கள். பரிசளிப்பு விழாவில் ஆழ்வாப்பிள்ளை மாஸ்ரரின் ஆங்கில நாடகங்களில் பெண் வேடத்தில் நான் நடித்தேன். அந்தக் காலம் நடைபெற்ற நாடகப் போட்டிகளிலும்  நான்  நடித்து பரிசு பெற்றேன். அண்ணாசாமி, ஏகாம்பரம் ஆகிய இருவரும் எனது ஓவியத்தை மெருகேற்றினார்கள். பென்சிலால் வரைவது எப்படி, வோட்டர் கலரால் வரைவது எப்படி, காலையில், மாலையில், இரவில் எப்படி வர்ணம் கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்லித்தந்தார்கள். அவர்களின் வழிகாட்டலில் பல போட்டிகளில் பரிசு பெற்றேன்

கேள்வி:  ஓவியம் வரைவதில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
பதில்:  சிறுவயதில்  பொருள்,உருவம் என்பனவற்றைப் பார்த்து  வரைந்துகொண்டிருப்பேன். அந்தப்பயிற்சியே எனக்கு ஊக்கமாக அமைந்தது. முதலில் படங்களைப் பார்த்து ஆரம்பமான வரைதல் ஒருவரைப் பார்த்து வரையும் படிமுறையை வழங்கியது. கல்கி,கலைமகள், ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகைகளை மாமா வாங்குவார்.  அவற்றை வாசித்தபின்னர் அதிலுள்ள படங்களை உன்னிப்பாக அவதானித்து நுணுக்கங்களைப் பார்த்து கற்றுக்கொண்டேன். யாழ்ப்பாணத்துக்கு ஏதாவது வேலையாகப் போனால், தியேட்டருக்குப் போய் மணியத்தின் புதுப்பட கட் அவுட்டைப் பார்ப்பேன். கொழும்பில் வேலை செய்யும்போதும் கட் அவுட் பார்ப்பதற்காகத் தியேட்டருக்குப் போவேன்.

கேள்வி:  பாடசாலைக்கு அப்பால் ஓவியத்தை யாருடம் பயின்றீர்கள்?
பதில்: ராஜேஸ்கண்னனின் தகப்பன் ராஜேஸ்வரன் அண்ணாவுடனும்  கரவெட்டி இளங்கோவனுடனும் இணைந்து ஓவியம் வரைந்ததால்  சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்.  வீட்டுக்கு வர்ணம் பூசும் கலையை  இளங்கோவன் அறிமுகப்படுத்தினார். அவருடன் வேலை செய்ததால் வர்ணங்களைக் கலக்கும் முறையை கற்றுக்கொண்டேன்.
கேள்வி:  இயற்கைக் காட்சிகள் தவிர்ந்த வேறு என்ன மாதிரியான படங்களை உருவாக்கினீர்கள்.?

பதில்: பிள்ளையார்,சிவன்,பார்வதி,முருகன் போன்ற தெய்வங்களையும், காந்தி,நேரு,கென்னடி,காமராஜர், அண்ணா, லிங்கன் போன்றவர்களையும் எமது ஊர் பூவற்கரை பிள்ளையார் ஆலயத்துக்கான திரைச்சீலை ஒன்றையும் வரைந்தேன். பூவற்கரை ஆலய கும்பாபிஷேகத்தின்போது அமரர் தெய்வேந்திரத்துடனும் இளைஞர்களுடனும் இணைது வர்ணம் பூசினேன். தவிர நெல்லியடி மஹாத்மா வீதியில்  உள்ள ஐயனார் ஆலயத்தில் தெய்வத்திரு உருவங்களையும் வர்ணப்பூச்சையும் செய்தேன். யுத்தகாலத்தின் போது உயிர் நீத்தவர்களின் கட் அவுட்களை உருவாக்கிக் கொடுத்தேன். நான் வரைந்த பண்டார வன்னியனின் படங்கள் வன்னிப்பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டன.

கேள்வி: ஓவியத்துக்காக நீங்கள் பயன் படுத்தும் வர்ணம் எத்தகையது?
பதில்:  பென்சில்,ஒயில் பெயின்ற், வோட்டர்  பெயின்ற் இந்தியன் இங்க் என அனைத்திலும் ஓவியம் வரைந்துள்ளேன்.
கேள்வி: மக்கள் மத்தியில் உங்களுடைய ஓவியத்துக்கான வரவேற்பு எப்படி இருந்தது?

பதில்: யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்தி சபை நடத்திய கண்காட்சியில் பனை சம்பந்தமாக 100 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நல்லூர் ஆசிரிய கலாசலை கண்காட்சியில் வரலாறு,சரித்திரம், கற்காலம் போன்றவற்றைச் சித்தரித்து ஓவியங்கள் தீட்டினேன். வடமாகாண பாடசாலைகளின் கண்காட்சிக்கு பறவை, காவடி,பொம்மை போன்றவற்றை உருவாக்கினேன். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டு ஆசிரியர்களின் கண்காட்சியில் சர்வதேச  உதைபந்தாட்ட மைதானத்தை வடிவமைத்தேன். அதில் மின் கம்பங்கள், விளம்பரங்கள் என்பனவும் இடம் பெற்றன. அண்மையில் காலமான வேதாபரணத்தின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டைமன் மைதானத்தில் சர்வதேச உதைபந்தாட்ட மைதானம் ஒன்றை அமைத்தேன்.  இவை எல்லாவற்ரையும் பலர் பாராட்டினார்கள். சித்திரத்தைப் படிக்கும் மாணவர்கள் சந்தேகம்  கேட்பதற்காக வருவார்கள். அவர்களுக்கு என்னாலான உதவிகளை வழங்குவேன்.

கேள்வி: ஈராக்கில் நீங்கள் வரைந்த சதாமின் கட் அவுட்கள் காட்சிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எப்படி அமைந்தது?

பதில்:  இஸ் ரீல் ஃபிற்றராக ஈராக்குக்குச் சென்றேன். ஒய்வு நேரங்களில் பலகையில் சோக்கால் படம் கீறுவேன். அதைப் பார்த்த இஞ்ஜினியர் படம் கீறுவதற்கு எனக்குச்  சந்தர்ப்பம் தந்தார். நான் வேலை செய்த நிறுவனத்தில் படம்  கீறுவதற்காக பிலிப்பைன்ஸ்காரர் ஒருவர் இருந்தார். அவர் சொந்த நாட்டுக்குச் சென்றதும், நான் ஓவியரானேன். ஈர்க்கின் யுத்த வெற்றிகளைக் கொண்டாவதற்காக சதாமின் கட் அவுட்களை வீதியெங்கும் காட்சிப்படுத்துவார்கள். அந்த நேரத்தில் சதாமின் படங்களை வரையும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவை அங்கு கட் அவுட்களாக வீதிகளில் காட்சியளித்தன. என்னிடமிருந்த பல படங்கள் பலரிடம் கைமாறி தொலைந்து விட்டன. கைவசம் இருக்கும் சில படங்களுடன் புதிய படங்களையும் வரைந்து ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.


கேள்வி: உங்களுடைய நாடக அனுபவம் எங்கே ஆரம்பமானது?

பதில்: தேவரையாளி இந்துக் கல்லூரியில் படிக்கும்போது ஆழ்வாப்பிள்ளை மாஸ்ரரின் ஆங்கில நாடகங்களில் பெண் பாத்திரத்தில் நடித்தேன். பாடசாலைகளுக்குடையிலான போட்டிகளில் பரிசுகள் பெற்றேன். பெண் பாத்திரம் எனக்குப் பொருதமானதாக இருந்ததால், பாடசாலைக்கு வெளியிலும் எனக்கு பெண்பாத்திரத்தில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. கவிஞர் கோவி நேசன், நகைச்சுவை நடிகர் மாசி ஆகியோருடன் இணைந்து தாள லய, நகைச்சுவை, சமூக சீர்திருத்த நாடகங்களில் நடித்தேன். ஒப்பனைக் கலைஞர் வேலாயுதம், இ. யோகராஜா ஆகிய இருவரும் எனக்கு ஒப்பனை செய்வார்கள். அவர்களின் கைவண்னத்தால்தான் நான் பெண்னாகத் தோற்றமளித்தேன்.

கேள்வி: நீங்கள் நடித்த நாடகங்கள்  மேடையேற்றப்பட்ட இடங்கள் எவை?

பதில்: எம்து ஊரில வருடாந்தம் நடைபெறும் நாடக விழாக்களில் எமது நாடகங்கள் நடைபெறும். பஞ் அரங்கு மிக முக்கியமானது. வடமராட்சியில் அல்வாய்,பருத்தித்துறை, கொற்றாவத்தை போன்ற இடங்களிலும் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய நகரங்களிலும் எமது நாடகங்கள் நடைபெற்றன. சண்முகநாதனின் சமூக நாடகமான “பாசம்”, கோவிநேசனின் தாள லய நாடகமான   “காலம் கெட்டுப்போட்டு  மாசியின் நகைச்சுவை நாடகங்களான புறோக்கர் பொன்னையா, நவீன சித்திர  புத்திரன் ஆகியவை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

கேள்வி: நாடக உலகில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் எது?

பதில்: இலங்கேஸ்வரன் எனும் நாடகத்தில் நடிகமணி V.V. வைரமுத்து  இலங்கேஸ்வரனாகவும், கலாவிநோதன்  ,  M.P.அண்ணாசாமி   நாரதராகவும் நடித்தனர்.  இலங்கேஸ்வரனின் தாயாக நான் நடித்தேன்.. அதை என்றைக்கும் என்னால் மறக்க்கமுடியாது. ராஜ ஸ்ரீகாந்தனின் தகப்பன் வ, ஐ, இராசரத்தினத்தின் அம்பிகாபதி எனும் நாடகத்தில்  இந்திராணி அம்பிகாபதியாகவும், கலைச்செல்வி அமராவதியாகவும் கொட்டிக்கிழங்கு விர்கும் கிழவியாக நானும் நடித்தேன். ஆண்கள் மட்டும் நடிக்கும் நாடகங்களில்தான் நான் பெண் வேடமிட்டு நடித்தேன். ஆன்களும், பெண்களும் நடித்த நாடகத்தில் நான் பெண் வேடத்தில் நடித்தது மறக்க முடியாத சம்பவம்

Monday, August 6, 2018

ஈழத்து ஆலயங்களில் ஒலிக்கும் நம்மவர் குரல்





அதிகாலையில் கோயில்மணி ஓசையுடன் பொழுது புலர்வது அன்று தொட்டு வழமையான ஒன்று. கோயில் மணி ஓசையுடன் பக்திப் பாடல்களும் இப்போது மக்களைத் துயில் எழுப்புகின்றன. இந்தியப் பக்திப்பாடல்கள்  ஒலித்த நமது ஆலயங்களில் இன்று நம் நாட்டுக் கவிஞர்கள் எழுதிய  நமது நாட்டு இசையமைப்பாளர்கள் இசையமைத்த நமது நாட்டுப் பாடகர்கள் பாடிய பாடல்கள் ஒலிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள பல கோயில்களில் ஒலிக்கும் பக்திப் பாடல்கலை எழுதியவர் விஷ்ணுப்ரியா.

விஷ்ணுப்ரியா என்ற புனை பெயரில் கவிதைகளையும் பக்திப் பாடல்கலையும் எழுதுபவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் மாணிக்கம் கிருஷ்ணகாந்தன்.தேவரையாளி இந்துக்கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி, மருதானை சாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்விகற்றவர்.

கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயின்ற  இவர், கேகாலை தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயம், கொட்டஞ்சேனை உப்புக்குளம் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயம்,வவுனிக்குளம் 2ஆம் யுனிட் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, மன்னார் சிராட்டிகுளம் தமிழ் கலவன் பாடசாலை,தட்சணாமருதமடு அ.த.க.பாடசாலை,தேவரையாளி இந்துக்கல்லூரி,குடத்தனை அமெரிக்க மிஷன் த.க.பாடசாலை,உடுப்பிட்டி அமெரிக்க மிஷன்கல்லூரி,வதிரி வடக்கு மெதடிஷ்த த.ம.வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவராவார்.

வதிரி பூவற்கரை  பிள்ளையார் ஆலய முன்னாள் தலைவரும் வதிரி தமிழமன்றம் வட்டுவத்தை சனசமூக நிலையம், தமிழ் மன்றம் ஆகியவற்றின் முன்னாள் தலைவரும்  வதிரி டையமண்ட் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் வீரருமாவார்.

கே; கவிதை எழுதும் ஆற்றல் உங்களுக்கு எப்படி அமைந்தது?

ப; பாடசாலையில் படிக்கும் காலத்தில் சைவப்புலவர்  சி. வல்லிபுரம் எமக்குத் தமிழ் ஆசிரியராக இருந்தார். அப்போது வெண்பா எழுதுவது எப்படி என்று கற்றுக்கொடுத்தார். அதே போல் அறுசீர் விருத்தம்,எண்சீர் விருத்தம்,அந்தாதி என்பனவற்றை எப்படி எழுத வேண்டும் எனவும் சொல்லிக்கொடுத்தார்.  அவருடைய பாடத்தின் போது வெண்பா,அறுசீர் விருத்தம் எண்சீர் விருத்தம் என்பனவற்றை எழுத வேண்டும் அதன் காரணமாக கவிதை எழுதும் ஆற்றல் உருவாகிவிட்டது.

கே; உங்களுடைய கவிதையைப் பற்றி ஆசிரியரின் கருத்து எப்படி இருந்தது.?

ப; எனது தமிழ் ஆசான் அமரர் சி.வலிபுரம், எனக்குத் தேவையான தமிழ் வளங்களைத் தெளிவாகவே ஊட்டியவர். அதிலும் க.பொ.த.{சா.த } வகுப்பில் இலக்கியத்திற்காகக் கம்பராமாயணம், கும்பகர்ணன் வதைப் படலம் போன்ற பாடல்களை எனது ஆசான் எனக்கு விளக்கிய விதமும் அதிலுள்ள நயங்களைத் தெரிய வைத்த பாங்கும்  எனக்குக் கவிதைமேல் தீராத ஆவலை ஏற்படுத்தியது. இதற்குத் துணையாக ஈற்றடியைத்  தந்து வெண்பா இயற்றும் பயிற்சியை எமக்கு அளித்தார். ”பாலும் தெளி தேனும்” எனும் வெண்பாவை  எனது விருப்பப்படி மாற்றி எழுதிக் காட்டினேன்.
பார்த்ததும் பளார் என எனது கன்னத்தில் ஓர் அறை. சிறிது நேரத்ஹ்டின் பின் என்னை அழைத்து வெண்பாவைப் புகழ்ந்தார்.


கே; வெண்பா நல்லதென்றால் எதற்காக அந்த அறை? அந்த வெண்பா இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறதா?

ப;  நான் நிவேதித்த பொருட்கள் ஆசானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது எனப் புரிந்து கொண்டேன்.
“பற்றீசுடன் கட்லட் பதமான பட்டர் பாண்
வெற்றிலையும் நான் தந்து வேண்டுவேன் - சற்குணனே
இருதார மணம் புரிந்த இளமுரு
கா நான்  விரும்பும்
ஒருதார மளிப்பாய் ஓம்

கே: எப்படிப்பட்ட கவிதைகளை எழுதியுள்ளீர்கள்?

ப: இயற்கை,அன்பு,பாசம், ஆன்மீகம், பாராட்டு, அரசியல்,பண்டிகைகள், சுனாமி,கூத்து , மாற்றுத் திறனாளி, இனப்பிரச்சினை ,தேர்தல், பணம்  போன்ற மனதில் பட்ட அனைத்தையும் கவிதையாக்கினேன்.

கே: இதுவரை எத்தனி கவிதைகள் எழுதியிருப்பீர்கள்?

ப: ஆரம்பத்தில் நான் எழுதிய கவிதைகள் கொப்பிகளிலே கிடந்தன. அவற்றை சேர்க்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் நான் எழுதியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. இப்போது சுமார்   150 கவிதைகள் கைவசம் உள்ளன. கவிதைகள் கொப்பியில் தூங்காமல் பத்திரிகைகளில் பிரசுரமாக வேண்டும் என விரும்பினேன்.


கே: உங்களது கவிதைகள் பிரசுரமான பத்திரிகைகள்  எவை?
ப: வலம்புரி,சுடர் ஒளி, தினக்குரல்,வீரகேசரி , உதயன் ஆகிய பத்திரிகைகளில் எனது கவிதைகள் பிரசுரமாகின.

கே:  கவிதைகளை எழுதுவதற்கான சூழ்நிலைகள் எப்படி உண்டாகின.?

ப: சில சம்பவங்கள், சந்திக்கும் மனிதரின் குணங்கள்  போன்றவை கவிதைகளாகின. எனது பேரன் பங்குபற்றும் கவியரங்குகளுக்காக கவிதைகளை ஆக்கியமையும் நான் கவிதையைத் தொடர்வதற்கு  ஒரு காரணியானது.


கே: உங்களுக்குப் பிடித்தமான கவிஞர்கள் யார்?

ப:    மகாவித்வான் பிரம்மஸ்ரீ வீரமணி ஐயர்,கவிஞர் சோ.ப.வைரமுத்து,மு.மேத்தா,பாரதிதாசன்.  மகாவித்வான் பிரம்மஸ்ரீ வீரமணி ஐயரை எனது மானசீகக் குருவாக வரித்துக் கொண்டேன். அவரது கற்பனையில் உதித்த  “ சுட்டிபுரம் வழும் சிவ சுந்தரியே” என்கின்ற பாடலே என்னுள் கவிதை எழுதும் திறனுக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

கே: கவிஞரான விஷ்ணுப்ரியா பாடலாசிரியரானது எப்படி? பக்திப் பாடல்களை எழுதுவதற்குத் தூண்டு கோலாக அமைந்த சம்பவம் எது?

ப: எமது  வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் ஒரு சிறிய கடையை ஆரம்பித்து வியாபாரம் செய்தேன். சும்மா இருக்கும் போது பிள்ளையாரைப்  பார்த்தபடி ஏதாவது எழுதுவேன். அதுவே பக்திப் பாடலானது.  ஆலய பரிபாலன சபைத்  தலவரானபின்னர் எனக்கும் பிள்ளையாருக்கும் இடையில் இருந்த இடைவெளி குறைந்தது.

எனக்கு மிகவும்  பிடித்தமான இராகம் ஷாமா. அந்த இராகத்தில் தான் நான் முதன் முதலில் என் குல தெய்வத்துக்கு “வேழ முகம் கொண்ட நாயகனே” என்ற பாடலை எழுதினேன்.எமது ஆலய திருவிழா ஒன்றில் எனது நண்பரும் சங்கீத வித்துவானுமாகிய செ.குமாரசாமி பாடியமை என்னை உற்சாகப்படுத்தி இத்தனை பாடல்களையும் எழுத வைத்தது.
பூவற்கரைப் பிள்ளையாரின் பாடல் இறுவட்டு வெளியாதும்  ஏனைய கோயில்களில்  இருந்தும் பாடல்கள் எழுதும்படி எனக்கு அழைப்பு வந்தது.

கே :எத்தனை கோயில்களுக்கு பக்திப் பாடல்கள் எழுதியுள்ளீர்கள்?

ப: வதிரி பூவற்கரை பிள்ளையார், வல்வெட்டி வன்னியப்பிள்ளையார், கம்பர்மலை ஞான வைரவர், புதுத்தோட்ட விநாயகர்,  ஏழாலை வசந்த நாகபூசணி அம்மன், எள்ளங்குளம் முத்துமாரி அம்மன் ஆகிய கோயில்களுக்கு நான் எழுதிய பக்திப் பாடல்கள் இறுவட்டுக்களாக வெளிவந்துள்ளன.

கே: கவிதைகளுக்கும் பக்திப் பாடல்களுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?

ப: கவிதைகள் யாப்பிலக்கணத்துக் குட்பட்டவை.கனதியானவை. பாடல்கள் சற்று நெகிழ்ச்சிப் போக்கானவை.அழகிய சொற்கள் பாடல்களாக மிளிரும்.  ஆனால், கவிதை அப்படியல்ல பாடல் எழுதுவதிலும் பார்க்க கவிதை எழுதுவ்ழ்து சற்று கடினமானது.

கே: உங்கள் பக்திப் பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் யார்?

ப: இசை விரிவுரையாளர் செ.குமாரசாமி, இசை விரிவுரையாளர் செ. பத்மலிங்கம்,மல்லாகம் வரதன் ,எஸ்.திவாகர்,செல்வி.ரி.தினிஷா ஆகியோர் எனது பாடல்களுக்கு இசை அமைத்துள்ளனர்.

கே:      அவர்களின் இசை அமைப்பில் அப் பாடல்களைப் பாடியவர்கள் ?

ப: இசைவிரிவுரையாளர் செ.குமாரசாமி, மல்லாகம்  வரதன் என்.கே.ரகுநாதன், ஏழாலை வரதன், சாந்தன், ஜெயபாரதி ஆகியோர் பாடியுள்ளனர்.

கே: இறுவட்டில் வெளிவராத பக்திப்பாடல்கள் கைவசம் இருக்கிறதா?

ப: நல்லூர்,  தொண்டமனாறு செல்வச்சன்னதி, வல்லிபுர ஆழ்வார், பூவற்கரைப் பிள்ளையார் , அல்வாய்  சாமணந்தறை பாலகணபதி, நயினாதீவு நாக பூஷணி ஆகிய கோயில் பாடல்களும்  ஆலயக் கும்பாபிஷேக, தேர் வெள்ளோட்ட சிறப்பு மலர்களில் உள்ள பாடல்களும் இறுவட்டுகளாக வெளிவரவில்லை.
அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன்ஆலய நிர்வாகம் கேட்டதற்கிணங்க 11 பாடல்களை எழுதிக் கொடுத்தேன். வருடங்கள் பல கடந்தும் வெளிவராதது வியப்பாக இருக்கிறது.


கே: அவற்றை என்ன செய்வதாக உத்தேசம்?
ப: அவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு தொகுப்பாக்க   வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.

வர்மா
தினக்குரல்
29/07/2018






Monday, June 12, 2017

தமிழ் மக்கள் நெருக்கடி சரியாகப் பதியப்படவில்லை ஓவியர் மருது



                                                    {யோ.நிமல்ராஜ் - தினக்குரல்}

தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லை.வெறும் வார்த்தைகளால் அந்த நெருக்கடியை பதிவு செய்வது போதுமானதொன்றல்ல. தமிழர் நெருக்கடி தொடர்பாக வெளித்தோற்றத்தில்  காணப்படும் விடயங்கள் மாத்திரமே இதுவரை பதிவாகியுள்ளன. ஆழ்மட்டத்தில் காணப்படும் பிரச்சனைகள் சரியான முறையில் பதிவாகவில்லையென இந்தியாவின் பிரபல ஓவியரும் பல்துறை விற்பன்னருமான ட்ராஸ்கி மருது கூறினார்.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஓவியரும் கலை இயக்குநருமானமருது  வடமராட்சி வதிரி தமிழ் மன்றத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே  இவ்வாறு குறிப்பிட்டார்.


ஆவணப்படுத்தலின் அவசியம் தொடர்பாக இவ்வாறு கூறிய அவர் தனது ஓவியப்பயணம் இலங்கையுடனான தொடர்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில்:
ஓவியப் பயணம்
ஆரம்பத்தில் வீடுகளில் சாறிகள் நெய்யப்படும்போது அவற்றினை மத்திய அரசாங்கம் மாநியங்களை வழங்கி கொள்வனவு செய்யும் அவ்வாறான காலப்பகுதியில் நாம் பல்வேறு வடிவங்களை அதாவது தமிழ்க் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வடிவங்களை அந்த சாறிகளில் பொறிக்கவேண்டிய பணியினை தொடர்ந்திருந்தோம்.

 அதேபோல பல்வேறு நூதனசாலைகளில் காணப்படும் ஓவியங்களை வேறு இடங்களிலும் காட்சிப்படுத்துவதற்காக மீண்டும் வரையவேண்டிய தேவையிருந்தது. அதற்காக என்னைப்போன்ற பலரை அரசாங்கம் பணிக்கமர்த்தியிருந்தது. பல்வேறு இடங்களிலும் காணப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் அவற்றின் பெறுமதி அழிந்துவிடாமல் காப்பதற்காக அதேபோன்ற உருவங்களையும் ஓவியங்களையும் நாம் வடிவமைத்து மக்களிடத்தில் அவற்றைக் கொண்டுசேர்த்தோம்.

இந்தப் பணியைத் தொடர்ந்து 10 ஆண்டுகளின் பின்னர் பத்திரிகைத் துறையில் ஆர்வம் செலுத்தினேன் அது எனது விருப்பமாகவும் இருந்தது. சிறிய பத்திரிகைகள் தேசிய பத்திரிகைகள்,  ஆனந்தவிகடன்,  குமுதம் போன்ற சஞ்சிகைகளில் பணியாற்றுவுதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தக் காலப்பகுதியில் சினிமாவும் ஆர்வம் ,கணினி வருவதற்கு முன்னரான காலப்பகுதியில் தந்திரக் காட்சிகளை உருவாக்குவதில் ஓவியர்களின் பங்கு அதிகமாக காணப்பட்ட காரணத்தினால் அவ்வாறான திரைப்படங்களுக்கு காட்சியமைப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதில் கவனத்தை செலுத்திவந்தேன். இவ்வாறான சினிமா, பத்திரிகை இரண்டும் கலந்ததாக கிட்டத்தட்ட 30 வருடங்கள் அந்தத் துறைகளில் பணியாற்ற முடிந்தது.

தொடர்ந்து சுதந்திர ஊடகவியலாளராக பல்வேறு பத்திரிகைகளுக்கு செயலாற்றியிருந்தேன். 1980 ஆம் ஆண்டில் கணினிகள் வருகைதருவதற்கு ஆரம்பித்த காலப்பகுதியில் அதனைத் தேடி கணினி மூலமான கிரபிக்ஸ் வடிவங்களை அமைப்பதற்கு கற்றுக்கொண்டேன். அதன்பின்னர் சினிமாவில் அதிக ஆர்வத்தினை செலுத்தி அதற்குரிய காட்சியமைப்புக்களை வடிவமைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிகளுக்காக அசையும் காட்சிகளை வடிவமைக்கும் பணி கிடைத்தது. கிட்டத்தட்ட 6 உதவியாளர்களுடன் புதுயுகம் தொலைக்காட்சிகளுக்காக அந்தப் பணிகளை மேற்கொண்டிருந்தேன்.  4 1/2 வருட காலப்பகுதியில் 22 படங்களை புதுயுகம் தொலைக்காட்சி சேவைக்காக நாம் உருவாக்கினோம்   அதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறேன்.
இலங்கைக்கான வருகையின் காரணம்

முன்னரும் இலங்கைக்கு வருகை தந்திருந்தேன். தற்பொழுது மட்டக்களப்பில் நடைபெறும் கருத்தரங்கொன்றிற்காக வருகைதந்திருந்தேன். தமிழகத்தில் ஒரு விடயத்திற்காக நீண்டகாலமாகப் போராடி வருகின்றோம். அதாவது சகல கலைகளையும் ஒரே பல்கலைக்கழத்தில் கற்பிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து நாம் போராடி வருகின்றோம்.

இன்னொரு துறையை கற்கின்ற ஒருவர் மற்றக் கலைகள் தொடர்பாகவும் அறிந்துகொள்வதற்கு சாதகமான சூழ்நிலையை இவ்வாறான பல்கலைக்கழம் ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால்,  மட்டக்களப்பில் இவ்வாறான பல்கலைககழகம் உள்ளது. அதனை மேலும் நெறிப்படுத்த வேண்டுமென்று ஆலோசித்துவருகின்றோம். குறிப்பாக வீடியோ, அனிமேஷன், படத்துடனான கதை, சர்வதேச ரீதியில் படத்துடனான கதை பிரபலமான ஒன்று. எழுத்துடனும் ஓவியத்துடனும் இணைந்து கதைகளை கூறிச்செல்லும் முறை. இவ்வாறான மாற்றங்களை இந்தக் கல்வித் திட்டங்களில் உட்புகுத்த வேண்டுமென்று மட்டக்களப்பில் வலியுறுத்தியிருந்தேன். கல்வி கற்கும் மாணவருக்கு சர்வதேச ரீதியில் முன்னேற்றம் அடைந்து தொழில் ரீதியான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.
தமிழர் நெருக்கடி

 தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி சரியான முறையில் ஆவணங்களில் பதிவாகவில்லை. வெறும் வார்த்தைகளாக அந்த நெருக்கடியினை பதிவு செய்வது போதுமான ஒன்றல்ல. தொடுபரப்பு அல்லது மேற்பரப்பில் காணப்படம் விடயங்கள் மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளன. அடிமட்டத்தில் உள்ளே காணப்படும் பிரச்சினைகள் பதிவாகியிருக்கவில்லை.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தமது படைப்புக்கள் மூலமாக எவ்வாறான விடயங்களை கூறவேண்டுமென்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொய்யான விடயங்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்கள் கூறிவிடக்கூடாது. எந்தக் கோணத்தில் எவ்வாறான கருதுகோளுடன் கலைஞர்கள் தமது படைப்புக்களை வெளிப்படுத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருக்க வேண்டும். மற்றக் கலைவடிவங்கள் அதற்கு எவ்வாறு துணைபுரியும் என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
 பத்திரிகைகள் அழிந்துவிடும்

எதிர்வரும் காலத்தில் செய்திப் பத்திரிகைகள் அழிந்துவிடும். எந்தவிதமான சந்தேகங்களும் இல்லை. இன்று தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். ஆனால் ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.

 பயணிக்கும் போது கூட தனித்தனியா ஒவ்வொரு சாதனங்களில் வெவ்வேறுபட்ட சினிமாக்களையோ நிகழ்ச்சிகளையோ நாம் பார்க்கின்றோம். செய்தித் தாள்களில் இறந்த செய்திகளே (பழைய செய்திகளே) கூடுதலாக காணப்படுகின்றன. சமூக ஊடகங்கள் உடனடியாக ஒரு செய்தியை கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. செய்திப் பத்திரிகைகளில் தயாரிக்கப்பட்ட செய்திகளே கூடுதலாக காணப்படுகின்றது. ஆனால் சமூக ஊடகங்கள் ஒரு தொடர்பினைக் கொண்டிருக்கின்றன. உடனுக்குடன் அவை தெளிவுபடுத்தப்படுகின்றன.

 இவ்வாறான நிலையில், ஊடகங்கள் எவ்வாறு பயணிக்கின்றன. தொடர்பாடல் எவ்வாறு காணப்படுகின்றது. என்பதனை ஆராய்ந்து அடுத்த தலைமுறையினரும் இவற்றினை தொடரும் வகையில் பாடத்திட்டங்களில் உள்வாங்கப்படவேண்டும்.
இவ்வாறான நிலையில் அனைத்துக் கலைகளும் இலங்கையில் ஒரு பல்கலைக்கழத்தின் கீழ் கற்பிக்கப்படுகின்றமை மகிழ்ச்சியான விடயம். இதற்காக தமிழகத்தில் 90 ஆம் ஆண்டிலிருந்து பல போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். ஆனால் அது நடைபெறவில்லை. இவ்வாறான கட்டமைப்புடனான கல்வி இலங்கையில் தொடருமாக இருந்தால் இன்னும் ஒரு சில வருடங்களில் இதன்பெறுபேறு அர்த்தம் நிறைந்த விளைவுகளை ஏற்படுத்தும். மட்டக்களப்பிலுள்ள மாணவர்களைப் பார்த்து உரையாடியமை மிகவும் மகிழ்ச்சியான விடயமாகவே நான் கருதிக்கொள்கிறேன்.

கொல்வின் ஆர்.டி சில்வா   என்.எம்.பெரேரா  அரசியல் தஞ்சம்

ஆனால், இலங்கைக்கும் எனது தந்தைக்கும் இடையில் நெருக்கிய உறவு காணப்படுகின்றது. அதுஎவ்வாறெனில் எனது தந்தை 14 ஆவது வயதில் காந்தி ஆச்சிரமத்துக்கு சென்றார். காந்தியுடன் அந்த ஆச்சிரமத்தில் இருந்தார். மத்திய இந்தியாவிலிருக்கும் அந்த ஆச்சிரமத்தில் 16 ஆவது வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போய் எனது தந்தை அங்கு ஒருவருட காலப்பகுதிக்கு தங்கியிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் காந்தியும் அங்கிருந்தார்.

பின்னர் அவர் மீண்டும் மதுரைக்கு அழைத்துவரப்பட்டார். இவ்வாறான நிலையில் அரசியல் தஞ்சம் கோரி கொல்வின் ஆர்.டி சில்வாவும், என்.எம்.பெரேராவும் தப்பி இந்தியாவுக்கு வந்தார்கள். அவர்கள் அங்கு அஞ்சாதவாசத்தினை மேற்கொண்டிருந்தது மதுரையில். என்னுடைய தந்தையார் தான் மதுரையில் ஒரு வீட்டில் தங்கவைத்திருந்தார்.
அங்கிருந்து சென்னைத் துறைமுகம் , மும்பைத் துறைமுகத்திற்கு சென்று தொழிற்சங்க வேலைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பிவரும்போது பெண்வேடம் போட்டு வருகை தந்திருந்தார்கள். தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் எங்கு தங்கியிருந்தார்கள் என்பதனை யாரும் அறிந்திருக்கவில்லை. எனது தகப்பனார் அவர்களுடன் இருந்தார். இதன்காரணமாகவே ட்ராஸ்கி என்ற பெயர் எனக்கு சூட்டப்பட்டிருந்தது.
இதேநேரம், கொல்வின் ஆர்.டி சில்வா  என்.எம்.பெரேரா இந்தியாவில் தலைமறைவு வாழ்க்கையை தொடர்ந்தபோது அவர்களில் ஒருவருக்கு திலக் என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே எனது இளைய சகோதரனுக்கு திலக் என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் காரணத்தை அன்றைய சந்தர்ப்பத்தில் எம்மால் உணரமுடியவில்லை. இன்று எம்மால் அதனை விளங்கிக் கொள்ள முடிகின்றது. அந்த இருவரின் நினைவாகவே அந்தப்பெயர் தந்தையால் வைக்கப்பட்டது.


யாழ்ப்பாணத்துடனான உறவு

 அதேபோல, யாழ்ப்பாணத்துடனும் எனது குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. ராமசாமி என்பவர் எனது தந்தையாருடன் ஆழமான நீண்டதொடர்பினை கொண்டிருந்தார். எனது தந்தைக்கு முன்னர் ராமசாமி இறந்த செய்தி எனக்குக் கிடைத்தது. ஆனால் அவர்கள் இருவரிடையிலும் காணப்பட்ட நட்புக் காரணமாக அந்த தகவலை எமது தந்தைக்கு நாங்கள் கூறியிருக்கவில்லை. 6 மாதங்களின் பின்னரே அந்தத் தகவலை கூறியிருந்தோம். ஆனால் நீங்கள் எனக்கு கூறவில்லையானாலும் அவரது மரணத்தை என்னால் உணரமுடிந்தது என தந்தை என்னிடம் குறிப்பிட்டிருந்தார்.

ராஸ்கியைப் பற்றிய புத்தகம் ஒன்றினை ராமசாமிதான் எழுதியிருந்தார். தந்தையாரிடமிருந்த தகவல்களின் அடிப்படையில் அந்த நூல் எழுதப்பட்டது. ஆனால், தமிழில் அது வெளியாகியிருக்கவில்லை.

எனது தந்தை இறந்தபோது எஸ்பொ. வருகைதந்திருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் அவரும் நினைவுகூர்ந்திருந்தார். எனது தந்தையாரைப் பற்றி எஸ்.பொ. எழுதியபோது என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர். டி சில்வா ஆகியோரின் தலைமறைவு வாழ்க்கைக்கு தமிழர்களே உதவியாக குறிப்பிட்டதுடன், பின்னர் அவர்கள் தமிழர்களின் எதிரிகளாக மாறிவிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களின் தலைமறைவு வாழ்க்கை தொடர்ந்த நிலையில், அவர்களின் இருப்புக்கு அங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் பொலிஸார் உட்பட பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களை எதிர்நோக்க வேண்டிய நிலையேற்பட்டது.

இவ்வாறான நிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலையேற்பட்டபோது எனது தந்தையாரிடம் கூறிவிட்டுச் செல்வதற்காக வீட்டிற்கு வருகைதந்தபோது தந்தையார் வீட்டில் இருக்காத நிலையில் எனது பூட்டியாரிடம் பயணத்தை கூறிவிட்டு சென்றிருந்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்திலும் பொலிஸார் வருகை தந்தபோது பூட்டியார் கூட அவர்களை பாதுகாத்ததாக கூறப்படுகிறது.
மரபு ரீதியான ஓவியங்களும் சமகால ஓவியங்களும்

கேள்வி ; உணர்வு ரீதியான விடயங்களை வெளிப்படுத்த பொருத்தமான முறை சமகால ஓவியங்களா மரபுரீதியிலான ஓவியங்களா?

பதில் :சமகால ஓவியங்கள் எவ்வாறான வடிவத்திலும் காணப்படலாம். ஆனால் அவை உண்மையானதாக இருக்கவேண்டும். சமகால ஓவியத்தினை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். படைப்பாளன் அதனை உணர்ந்து உண்மையாக அந்தப் படைப்பினை வெளிப்படுத்த வேண்டும். ஆனால்இ இந்த சமகாலத்தை ஓவியத்தை படைப்பதாக இருந்தாலும்இ புலமை ரீதியாக அடிப்படை விடயங்களை அறிந்து அதனைக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. கல்வியியல் ஒழுக்கம் சகல விடயங்களுக்கும் அவசியமானது. இவை அனைத்திலும் பின்னர்தான் ஓவிய வடிவங்களை எம்மால் மாற்றிக்கொள்ள முடியும்.  உருவத்தைத் தெரியாமல் அருவத்தை வரைய முடியாது.  சும்மா கிறுக்குவது ஓவியமாகிவிடமுடியாது. அதேபோல் பார்வையாளர்களும் பயிற்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். பார்த்தவுடன் சில ஓவியங்களை விளங்கிக் கொள்ள முடியாது. ஆழமாக நோக்கிய பின்னரே ஓவியங்களின் ஆழமான அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியும். கடுமையான பயிற்சியை தவிர்த்து தற்கால ஓவியத்துக்கு சென்றுவிட முடியாது.

அடிப்படை கல்வி ஒழுக்கங்கள் இன்றி சரியான பயிற்சி இல்லாமல் சமகால ஓவியங்களை வரைவதன் மூலம் முழுமையான அர்த்தத்தினை வெளிப்படுத்த முடியாது. ஓவியங்களை அவ்வாறு வரையலாம் ஆனால் ஒரு சில நாட்களில் அந்தப் படைப்பாளர் ஒதுங்கிச் செல்லவேண்டிய நிலையேற்படும்.

தொடர்புகொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவ்வழிமுறைகளை சரியாக கற்றுக்கொண்டு தொடர்பினை ஏற்படுத்தினால்தான் இருவருக்கிடையிலான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
கேள்வி ; கணனி ஓவியங்கள் கிராபிக்ஸ் வளர்ச்சிகாரணமாக எதிர்காலத்தில் கை ஓவியங்கள் மறந்துவிடும் சாத்தியம் உள்ளதா?

பதில் : கணனி ஓவியங்களால் மரபு ரீதியான ஓவியங்கள் அழியவோ மறைய்யஅவோ போவதில்லை. கணனி ஒரு சாதனம் நாம் கூறுவதனை செய்கின்றது.மனிதர்களின் அறிவின் மூலமே அதுவும் செயற்படுகின்றத்கு.கணனிகள் பணிகளை சுருக்குகின்றன. ஆனால் மனித புலமையே அதற்கு பயன்படுகின்றது.எந்த சந்தர்ப்பத்திலும் அது தொடர்ந்து செயற்படுகின்றது. ஆனால் உண்மையான மென்பொருள் என்பது மனிதர்கள் மட்டுமே.