நடிப்பின் மூலம் திறமையை வெளிப்படுத்துவதும் கலைதான்
உடுவை தில்லை நடராஜா.
அரசில் உயர் பதவி வகிப்பவர். இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடம் பிடித்து வைத்திருப்பவர். ஆன்மீகப் பக்கத்திலும் தடம் பதித்தவர். ஓய்வின்றி வேலை செய்யும் நிலையிலும் நாடகத்துக்கென நேரம் ஒதுக்கி நாடக மேடையிலும் தனது முத்திரையைப்பதித்தவர் உடுவை தில்லை நடராஜா.
மாணவப்பருவத்திலேயே பத்திரிகைகளில் ஆக்கங்களை எழுதி இருந்தார். தில்லை நடராஜா என்ற பெயரில் வேறு இருவர் எழுதிய ஆக்கங்களை இவர் எழுதியதா சிலர் பாராட்டிய போது, தனக்கென ஒரு தனித்துவமான பெயர் வேண்டும் எனச்சிந்தித்து உடுவை தில்லை நடராஜா என்று தனது தனித்துவத்தை அடையாளப்படுத்தினார்.
சில்லையூர்,தாளையடி தெளிவத்தை, வதிரி என ஊர்ப் பெயரைச் சொன்னதும் எழுத்தாளர்களின் பெயர் பிரதிபலிப்பது போல உடுவை என உச்சரித்தாலே தில்லை நடராஜா என்ற பெயர் மனதிலே ஒட்டிக்கொள்ளும்.
உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் க.பொ.த[சா/தா] தரம் வரை படித்தபின் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தரம் படித்தார்.மாணவப்பருவத்திலே நடிக்க ஆரம்பித்த உடுவை தில்லை நடராஜா அரசில் உயர் பதவி வகித்தபோதும் நடிப்பைக் கைவிடவில்லை. நடிகர்கள் கேவலமானவர்கள் அல்லர். உயர்வாகப்பார்க்கப்பட வேண்டியவர்கள் என நிரூபித்துள்ளார். தனது நாடக அனுபவங்களை மனம் திறந்து வெளிப்படுத்துகிறார்.
கே; சிறுவயதிலேயே எழுத்து நாடகம் என இரண்டிலும் தடம் பதித்தீர்கள். இது எப்படிச்சாத்தியமானது?
ப; அப்பாதான் காரணம். பாடசாலையில் படிக்கும் போதே புத்தகங்கள் வாங்கித்தருவார்.கூட்டங்கள், நாடகம், படம் ஆகியவற்ருக்குப் போகும் படி கூறுவார்.கல்கண்டு,கரும்பு ஆகிய புத்தகங்களை விரும்பிப் படித்தேன்.படித்து முடிந்ததும் கதையைக்கேட்பார்.படம் ,நாடகம் என்றாலும் அப்பபடித்தான். இலக்கியம், அரசியல் கூட்டங்களுக்குப்போனால் அங்கு நடைபெற்றதைக் கூறவேண்டும். மறுநாள் பத்திரிகையில் நான் சொல்லாத தகவல் ஏதும் வந்தால் ஏன் சொல்லவில்லை என்று கேட்பார். அந்தப் பயிற்சி பின்னாளில் உயர் பதவி வகிக்கும் போதும் எனக்கு உதவுகிறது.
கே; மாணவப்பருவத்து எழுத்துக்கு வரவேற்பு எப்படி இருந்தது?
ப; பத்திரிகைகளில் எனது பெயருடனும்,படத்துடனும் கதைகள் பிரசுரமானபோது தனி உலகத்தில் மிதந்தேன். மாணவர்களும் ஆசிரியர்களும் என்னைப்பற்றி உயர்வாகப்பேசினர். ஈழநாடு,சுதந்திரன் ஆகியவற்றில் எனது எழுத்துக்கள் வெளியாகின. அப்போதே சில தொடர்கதைகளும் எழுதினேன். ராஜகோபல், சிவகுருநாதன் ஆகியோர் என்னை உற்சாகப்படுத்தினர்.அப்பா வேலை செய்த யாழ்.தில்லைபிள்ளை லக்ஷ்மி விலாசில் டொமினிக் ஜீவா போன்றவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.
கே.கே.எஸ் வீதியில் உள்ள தமிழ்ப் பண்னை புத் சாலை,லங்கா புத்தகசாலை,மறவன்புலோ சச்சிதானந்தத்தில் காந்தளகம் அச்சகம் ஆகியவற்றுக்கு அடிக்கடி போவதனால் அதிகமான புத்தகங்கலைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. காசு கொடுக்காமல் அதிக புத்தகங்களைப் படித்தேன்.பின்னர் அரசு காசுதந்து ஆலயங்களுக்குப்போய் ஆய்வு செய்யச்சொன்னது. தணிக்கை சபை உறுப்பினராக இருந்ததனால் படம் பார்க்க காசு தந்தார்கள். இவை எல்லாம் மற்றவர்களை விட எனக்குப்புதுமையான அனுபவங்கள்.
கே;நாடகத்தின் பக்கம் உங்கள் பார்வை எப்போது திரும்பியது?
ப; அருள் எம்பெருமான்தான் எனக்கு முதன் முதலில் நடிக்கச்சந்தர்ப்பம் தந்தார். அதன் பின்னர் திருமதி சிவராஜா எனக்கு நாடகப்பயிற்சி தந்தார். அருள் எம்பெருமானின் "உலகம் போறபோக்கைப்பாரு", திருமதி சிவராஜாவின் "சகுந்தலை","வீரபாண்டியகட்டபொம்மன்" ஆகியவை பாடசாலை காலத்தில் எனக்கு பெருமை தேடித்தந்தவை.
கே; நாடகத்தில் நடிக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
ப; மிகவும் பெருமையாக இருக்கும்.அரசனாக நடிக்கும் போது அம்மாவின் சீலையை தாறுபாச்சி உடுத்துவார்கள். பருத்தித்துறையச்சேர்ந்த சீன் சிவலிங்கம் என்பவரிடம் அரச உடுப்பு வங்குவேன். முகத்துக்கு ம் உத்துவெள்ளை பூசுவார்கள். சப்பாத்துக்கு தங்க சரிகை ஒட்டி முன்னுக்கு கூர்வைத்து வடிவமைப்போம். மேக்கப் செய்வதை சிலர் வந்து புதினம் பார்ப்பார்கள். புதினம் பார்க்கவரும் சிறுவர்களைக் கலைப்போம். எல்லம் கொஞ்ச நேரம் தான்.பிறகு மேக்கப் அரிக்கத்தொடங்கும்.தலையில்வைத்த டோப்பாவின் மனம் வயிற்றைப்புரட்டும்.எல்லாவற்றையும் சகித்துக்கொண்டுதான் நடிப்போம்.தேங்காய் எண்னெய் போட்டுத்தான் மேக்கப்பைக்களைய வேண்டும்.
கே; நாடகமேடை அனுபவத்தில் உங்களைப்பாதித்த சம்பவம்?
ப; யாழ் இந்துக்கல்லூரி வைரவிழாவின் போது யாழ்ப்பாணம் தேவனின் நாடகத்தில் கம்பனாக நடித்தேன். எனக்கான ஒப்பனை முடிந்ததும் அங்கு வந்த சொக்கன் என்னைப்பார்த்தார். "தம்பி, கம்பன் ஆழ்வார் அவர் விபூதி பூசுவதில்லை. ஒப்பனையை மாற்று" என்றார். அவரின் ஆலோசன எனக்குப்பிடிக்கவில்லை. நான் ஏறுமாறாகப்பேசிவிட்டேன்.அவர் யார் என்பதும் எனக்கு அப்போது தெரியாது.நாடகம் முடிந்ததும் எனது நண்பர்களான பாமா ராஜகோபாலன்,சபாரட்ணம்,பெருமாள்,கோபு ஆகியோர் ஒப்பனையின் குறையைச்சுட்டி காட்டினார்கள்.அதன் பின் சொக்கனிடம் நான் மன்னிப்புக்கேட்டேன்.
கே; உங்களுக்குப் புகழைத்தேடித்தந்த நாடகங்கள் எவை?
ப; தேவன் யாழ்ப்பாணம் எழுதிய தெய்வீகக்காதல்,சொக்கனின் இராஜ ராஜசோழன்,ஞானக்கவிஞன்,சங்கிலி யோகனாதனின் கல்லறைக்காதல், எஸ்.எஸ். கணேசபிள்ளையின் அசட்டு மாப்பிள்ளை,சி.சண்முகத்தின் வாடகை வீடு ஆகிய நாடகங்கள் எனக்குப் புகழைத்தேடித்தந்தன.
கே;யாழ்ப்பாணத்தில் நாடகம் நடித்த உங்களுக்கு யாழ்ப்பாணத்துக்கு வெளியே நடிப்பதற்கான சந்தர்ப்பம் எப்படி ஏற்பட்டது?
ப; எனது முதல் வேலை என்ன என்பது பலருக்குத் தெரியாது. பொலிஸ் திணைக்களத்தில் எழுது வினைஞராகக் கடமையாற்றினேன் அதுதான் எனது முதல் வேலை.வவுனியாவில் வேலை செய்தபோது முற்றவெளி திறந்தார்கள். எனக்குப் பழைய நாடகவியாதி பிடித்தது. அங்கு நண்பர்களுடன் நாடகங்கள் நடித்தேன். அப்போதுதான் மு.பாக்கியநாதன்,அவரின் தம்பி பாக்கியராஜா,வதிரி.சி.ரவீந்திரன் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது.கொழும்புக்கு மாற்றாலாகியபின் எஸ்.எஸ்.கணேசபிள்ளையும் நானும் ஒரே அறையில் இருந்தோம். அதன்பின் எனது வளர்ச்சியைப்பார்த்து நானே வியந்தேன்.
கே; கொழும்பு நாடக அனுபவம் எப்படி இருந்தது?
ப; மில்கவைற்றின் ஆதரவில்வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் அசட்டு மாப்பிள்ளை நாடகம் நடந்தது. நாடகம் முடிந்ததும் நடிகர்களை அறிமுகப்படுத்தினார்கள். நான் உடை மாற்றிக்கொண்டிருந்ததனால் என்னை அழைக்கத் தாமதமானது.அப்போது சபையிலிருந்து தில்லை நடராஜா என்று பலர் சத்தம் போட்டார்கள். வவுனியாவில் இருந்துவந்த நண்பர்கள் தான் சத்தம் போட்டதாக பின்னர் அறிந்தேன்.
கே; நாடகங்களை அரங்கேற்றுவது இலகுவானதாக இருந்ததா?
ப; நடிக்கும்போது அந்தப்பிரச்சினை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.நாடகத்தை மேடை ஏற்றும்போதுதான் பிரச்சினைகள் தெரிய ஆரம்பித்தன. நான் பொலிஸ் என்பதனால் எல்லோரும் எனக்கு உதவி செய்தனர். வாகன வசதி, நிதி உதவி எல்லாம் எனக்கு தாராளமாகக் கிடைத்தன.
கே; பொலிஸில் இருந்து அரச உயரதிகாரியான பின்பும் நீங்கள் நடிப்பதை நிறுத்தவில்லையே. என்ன காரணம்?
ப; நடிப்பது இழிவான செயலல்ல. உயரதிகாரியானபின் எனது திறமையை வெளிக்காட்டுவதில் தவறில்லை. எனக்குக் கீழே இருப்பவர்களும் அப்போதுதான் தமது திறமைகளை வெளிப்படுத்துவார்கள். இளவாலை ஹென்றி அரசன் பாடசாலையின் நிதி உதவிக்காக அசட்டு மாப்பிள்ளை நாடகம் நடத்த எஸ்.எஸ். கணேசபிள்ளையிடம் கேட்டார்கள். தில்லை நடித்தால் நான் தயார் என்றார்.அப்போது நான் அரச அதிபராக இருந்தே. என்னிடம் கேட்டார்கள். நானும் ஒப்புதலளித்தேன். ஜோன் டீ சில்வா அரங்கில் நடைபெற்ற அந்த நாடகத்தின் மூலம் மூன்று இலட்சம் ரூபா நிதி சேர்ந்தது. எனது உதவியினால் அதிகளவி நிதி சேர்ந்ததையிட்டு நான் சந்தோஷப்பட்டேன்.
கே; உங்களின் திறமையை எப்படி நீங்கள் பட்டை தீட்டினீர்கள்?
ப; அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கு வவுனியாவில் கிடைத்தது. நாடகத்துக்கான அறிவித்தல்கள் தவறு என சில நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள். எனது அறிவித்தல்களை ஒலிப்பதிவு செய்து பார்த்தபோது தவறை உணர்ந்தேன்.அதன் பின்னர் எப்படிப்பேசுவது என ஒத்திக்கை பார்த்தேன்.
கே; நாடகத்தின் பக்கம் அதிக அக்கறையுடன் நீங்கள் செயற்பட ஊக்கம் தந்தது யார்?
ப; அம்மாவின் அம்மாவுடன் சென்று வல்லிபுரக்கோவிலில் நடைபெறும் நாடகங்களைப்பார்ப்பேன். தேருக்கு முதல் நாள் போய் தேரிலன்று நாடகம் நடை பெறும் நாடகத்தைப் பார்த்து விட்டு அடுத்த நாள் தான் வீட்டுக்கு வருவேன்.வி.வி.வைரமுத்து, கொக்குவில் செல்வராசா ஆகியோரின் நாடகங்கள் எமது ஊரில் போட்டிக்கு நடைபெறும். வீரபத்திரர் கோவிலில் வி.வி.வைரமுத்துவின் நாடகமும், விதானையார் படலையில் கொக்குவில் செல்வராசாவின் நாடகமும் நடைபெறும். ஏட்டிக்குப் போட்டியாக விளம்பரம் செய்வார்கள்.அரிச்சந்திரமயானகாண்டம் பலரின் நடிப்பில் பார்த்தேன். வி.வி. வைரமுத்துவுக்கு ஈடு இணை யாருமில்லை.
கே; மறக்கமுடியாத அனுபவம்?
ப; எழுதுமட்டுவானில் நடைபெற்ற நாடகத்தை மறக்கமுடியாது. வானொலி நாடகக்கலைஞர்கள் நடிக்கும் ஆறு நாடகங்கள் நடக்கும் என்று ஒரு வாரமாக விளம்பரம் செய்தார்கள். மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் என்ற நாடகம் இரவு 10 மணிக்கு ஆரம்பமானது. மூன்று மணிக்கு நாடகம் முடிந்து விட்டது. சனம் கலையவில்லை. இன்னும் நடியுங்கோ அல்லது பாடுங்கோ என்றார்கள். எங்களுக்கும் சந்தோஷம். எம்மவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். கடைசியாகத்தான் எமக்கு உண்மைதெரியவந்தது. அதிகமானவர்கள் அயற்கிராமங்களில் இருந்து வண்டிலில் வந்தார்கள். அவர்கள் வரும்போது லாம்பு கொண்டுவரவில்லை. விடியும் வரை காத்திருக்க வேண்டும் என்பதனால்தான் எங்களை நடிக்கும்படி கூறினார்கள்.
கே; பயிற்சியளித்தால் நடிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் முன் வருவார்களா?
ப;கொழும்பிலே மிகவும் குறைவான சாத்தியமே உள்ளது. அன்ரனி ஜீவா சில முயற்சிகள் செய்கிறார். கலைச்செல்வனும் இதில் முயற்சி செய்தார். பேராசிரியர் மெளனகுரு, குழந்தை சண்முகம் ஆகியோர் தமது பிரதேசத்தில் செய்வதாக அறிந்தேன்.
கே; நீங்கள் நடிப்பதைப்பற்றி உங்களுக்கு இணையான உயர் அதிகாரிகள் என்ன கருதுகிறார்கள்?
ப; அவர்களும் அதை வரவேற்கிறார்கள். நடிகர் காமினிதிசநாயக்காவுடன் நான் பணியாற்றியபோது நடிகனுக்கு முன்னால் இன்னொரு நடிகன் என பெருமையாகக் கூறினார்.சில விருந்துகளின் போது மற்றவர்களை மகிழ்விக்கும்செயல்களைச்சிலர் செய்வார்கள். சிலர் பாடுவார்கள். சிலர் நடிப்பார்கள்.சிலவேளை நடிப்பென்று தெரியாமல் ஏதாவது செய்வார்கள்.கடைசியில் தான் அது நடிப்பென்று மற்றவர்களுக்குத்தெரியும்.
அணமையில் எமது பாடசாலை பழைய மாணவர் விழா கொழும்பில் நடைபெற்றபோது ஏதாவது நடியுங்கள் என்று நண்பர் விஜயபாலன் கேட்டார். அங்கிருந்த ஜெயசோதியுடன் கதைத்துவிட்டு நான் போய்விட்டேன். அவர் சத்தமாக உடுவையைக்கண்டீர்களா எனக்கேட்டார். அவர் பலரிடம் கேட்டபோது அனவரும் என்னைத்தேடினார்கள். பின்னர்தான் அது நடிப்பு என மற்றவர்களுக்குத்தெரிந்தது.
கே; தொலைக்காட்சி நாடகத்தில் நடித்துள்ளீர்களா?
ப ; ரூபவாஹினியில் விக்ரர் ஹென்றி கொடவின் தொடர் நாடகத்தி நடித்தேன். விஸ்வநாதன் நெறியாள்கை செய்தார்.
கே; பலரின் நாடகத்தில் நடித்திருக்கிறீர்கள் நீங்கள் நாடகம் எழுதினீர்களா?
ப; பலநாடகங்கள் எழுதினேன்.ஈழநாடு 10ஆவது ஆண்டுவிழாவில் மேடை ஏறிய பூமலர் என்ற ஓரங்க நாடகம் பரிசு பெற்றது. பல வானொலி நாடகங்கள் எழுதினேன்.
கே; உங்களுடைய நாடக வெற்றிக்கு யார் காரணம்?
ப; எனக்கு நடிக்கச் சந்தர்ப்பம் தந்தவர்களும், என்னுடன் நடித்தவர்களும் தான் காரணம். மயில்வாகனம் சர்வானந்தா, கமலினி செல்வராஜா,அச்சுதன்,ராஜபுத்திரன் யோகராஜா, விஜயாள் பீற்றர்,ஏ.எம்.சி.ஜெயசோதி போன்றவர்களின் ஒத்துழைப்பும் எனது வெற்றிக்குக் காரணம்.
கே; எதிர்கால கால நாடக உலகம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?
ப; பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் இருப்பதனால் புதிய எழுச்சி பெறும் என நினைக்கிறேன்.
ரவி
சுடர் ஒளி 09/03/14