Friday, October 31, 2014

கைவிட்டது மே.இந்தியத்தீவுகள்; கைகொடுத்தது இலங்கை.

மேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெற் சபைக்கும்,  வீரர்களுக்குமிடையேயான சம்பளப்பிரச்சினக்காரணமாக இந்திய கிரிக்கற்தொடரை கைவிட்டுவிட்டு மேற்கு இந்திய வீரர்கள் நாடுதிரும்பிவிட்டனர். இதன் காரணமாக , மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெற்றுக்கும் ,இந்திய‌ கிரிக்கெற்றுக்கும் இடையே பாரிய விரிசல் விழுந்துள்ளது.

 மேற்கு இந்திய வீரர்கள் இந்தியாவுக்குச் செல்லும் முன்பேசம்பளப்பிரச்சைனை உண்டாகியது. தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக முதல்  நாள் போட்டியில் கறுப்பு பட்டி அணிந்து விளையாடினார்கள். தொடர் முடியும் வரை எதுவிதமான பிரச்சினையும் ஏற்படாது என இந்தியா எதிர்பார்த்தது. நான்காவது ஒரு நாள் போட்டி முடிந்ததும், தொடரைக்கைவிட்டு மேற்கு இந்தியத்தீவுகள்  வீரர்கள் நாடுதிரும்பிவிட்டனர். இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்தது. ஐந்தாவ‌து ஒருநாள் போட்டி டெஸ்‌ட்‌ போட்டிக‌ள் ரி 20 போட்டி என்பன‌‌ கைவிட‌ப்ப‌ட்ட‌த‌னால் இந்திய‌க்கிரிக்கெற்றின் வ‌ருமான‌த்தில் அடிவிழுந்த‌து.

இழ‌ந்த‌ வ‌ருமானத்தை ஓர‌ள‌வேனும் மீட்ப‌த‌ற்காக‌ இல‌ங்கைக்கு அழைப்பு விடுத்த‌து இந்தியா. எதுவித‌ ம‌றுப்பும்தெரிவிக்காது உட‌ன‌டியாக‌ இல‌ங்கை ச‌ம்ம‌த‌ம் தெரிவித்த‌து. இதேவேளை மேற்கு இந்திய‌த்தீவுக‌ளிட‌ம் இருந்து இழ‌ப்பீட்டைப்பெறுவ‌த‌ற்காக‌ ச‌ட்ட‌ப்ப‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்போவ‌தாக‌ இந்தியா அறிவித்துள்ள‌து. கிரிக்கெற் தொட‌ர் கைவிட‌ப்ப‌ட்ட‌தால் சுமார் 400 கோடி ரூபா‌ இழ‌ப்பு என‌ இந்தியா அறிவித்துள்ள‌து.

இந்தியாவுக்கு எதிரான‌ கிரிக்கெற் தொட‌ர் கைவிட‌ப்ப‌ட்ட‌த‌ற்கு வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் என‌ மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் கிரிக்கெற் ச‌பை அறிவித்துள்ள‌‌து. ச‌ம்ப‌ள‌ ஒப்ப‌ந்த‌ப்பிர‌ச்சினையை பேசித்தீர்த்திருக்க‌லாம் என்ற‌ மேற்கு இந்திய‌ கிரிக்கெற் ச‌பையின் கூற்றை வீர‌ர்க‌ள் நிராக‌ரித்துள்ள‌ன‌ர். வீர‌ர்க‌ள் ச‌ங்க‌த்த‌லைவ‌ர் ஹிண்ட்ஸ்சுக்கும் வீர‌ர்க‌ளுக்கும் இடையேயான‌ பிர‌ச்சினைதான் இத‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம். மேற்கு இந்திய‌ கிரிக்கெற் ச‌பை இத‌னை சுமுக‌மாக‌த்தீர்த்திருக்க‌லாம் என‌று இந்தியா க‌ருதுகிற‌து.


மேற்கு இந்திய‌தீவுக‌ளுட‌னான‌  கிரிக்கெற் தொட‌ர்க‌ளுக்கு ஐந்து வ‌ருட‌ங்க‌ள் த‌டைவிதிப்ப‌து, ஐ.பி.எல் தொட‌ர்க‌ளில் இருந்து மேற்கு இந்தியாதீவுக‌ள் வீர‌ர்க‌ளை நீக்குவ‌து போன்ற‌ அதிர‌டிமுடிவுகளை‌ இந்திய‌ கிரிக்கெற் எடுக்கும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌ட்ட‌து.மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் வீர‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வான‌ ச‌மிக்ஞை‌யை இந்தியா வெளிப்ப‌டுத்தி உள்ள‌து. ஐ.பி.எல்லில் இருந்து வீர‌ர்க‌ளை வெளியேற்றுவ‌தில்லை என‌ இந்தியா தீர்ம‌னித்துள்ள‌‌து. மேற்கு  இந்திய‌த்தீவுக‌ள் வீர‌ர்க‌ளுக்கான‌ ர‌சிக‌ர் ப‌ட்டாள‌ம் இந்தியாவில் உள்ள‌து. அத‌னை இழ‌க்க‌ இந்திய‌ கிரிக்கெற்  விரும்ப‌வில்லை. மேற்கு இந்திய‌ கிரிக்கெற் வீர‌ர்க‌ளை இந்தியா பாதுகாத்துள்ள‌து. ஆகையினால் இத‌ ற்கு  சுமுக‌மான‌ முடிவைக்காணும் சூழ்நிலைக்கு மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌து.

இந்திய‌ கிரிக்கெற்றுட‌ன் ப‌கைத்தால் வ‌ருமான‌த்தில் பாதிப்பு ஏற்ப‌டும் என்ப‌து அனைவ‌ருக்கும் தெரிந்த‌ உண்மை. இந்தியா விரும்பிய‌துபோல‌ ஐந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு மேற்கு இந்தியாத்தீவுக‌ளுட‌ன் விளை‌யாடாம‌ல்விட்டால் அத‌ன் பொருளாதார‌ தாக்கத்தை ச‌மாளிப்ப‌து க‌டின‌ம். ஆகையினால் ஏதோ ஒரு வ‌ழியில் இந்தியாவைச்ச‌மாதான‌ப்ப‌டுத்த‌ மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் முய‌ற்சி செய்யும். 
இந்திய‌ பாகிஸ்தான் அர‌சிய‌ல் பிர‌ச்சினைகார‌ண‌மாக‌ இந்திய‌ கிரிக்கெற் அணி பாகிஸ்தானுக்குச் செல்வ‌தில்லை. ஐ.பி.எல்லில்  விளையாட‌ பாகிஸ்தான் வீர‌ர்கள் அ‌னும‌திக்க‌ப்ப‌டுவ‌தில்லை. இத‌ன் கார‌ண‌மாக‌ ப‌கிஸ்தான் கிரிக்கெற்றுக்கும் வீர‌ர்க‌ளுக்கும் வ‌ருமான‌ இழ‌ப்பு ஏற்ப‌ட்டுள்ள‌து.இதேவேளை ஐ.பி.எல்லில் ப‌யிற்சியாள‌ர்க‌ளாக‌வும் வ‌ர்ண‌னையாள‌ர்க‌ளாக‌வும் பாகிஸ்தானின் முன்னாள் வீர‌ர்க‌ள் க‌ட‌மையாற்றுகின்ற‌ன‌ர்.

ச‌ம்ப‌ள‌ நிலுவை கார‌ண‌மாக‌ இல‌ங்கை வீர‌ர்க‌ளும் மிக‌வும் துன்ப‌ப்ப‌ட்ட‌ன‌ர். ஆனால் எந்த‌நிலையிலும் இல‌ங்கைக்கு அவ‌மான‌ம் த‌ரும் வகையில் அவ‌ர்க‌ள் ந‌ட‌ந்து கொண்ட‌தில்லை. ச‌ம்ப‌ள‌ப்பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் வீர‌ர்கள்‌ நாடுதிரும்பிய‌தால் அந்த‌ இடத்தை நிர‌ப்புவ‌த‌ற்காக‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள் இந்தியாவுக்குச் சென்றுள்ள‌ன‌ர்.  திட்ட‌மிட‌ப்ப‌டாத‌ இந்த‌த்தொட‌ர் இல‌ங்கை வீர‌ர்க‌ள் மீது வ‌லிந்து திணிக்க‌ப்ப‌ட்டுள்ள‌‌து.


இந்தியாவுக்கு எதிரான‌ தொட‌ரை இல‌ங்கைவீர‌ர்க‌ள் எதிர்பார்க்க‌வில்லை. அனுப‌வ‌ம் மிக்க‌வ‌ரான‌ ச‌ங்க‌கார‌ த‌ன‌து ம‌ன‌தில் உள்ள‌வ‌ற்றை வெளிப்ப‌டையாக‌ அறிவித்துள்ளார்.  இந்திய‌ வீர‌ர்க‌ளுக்கு எதிராக‌ விளையாடுவ‌த‌ற்கு த‌யாராக‌ இல்லாத‌ நிலையிலேதான் இலங்கை‌ வீர‌ர்க‌ள் சென்றுள்ள‌ன‌ர். முத‌ல் மூன்று  ஒரு நாள் போட்டிக‌ளில் டோனி விளையாட‌மாட்டார். க‌டைசி இர‌ண்டு போட்டி ஒரு நாள்  போட்டிக‌ளிலும் டோனி விளையாடுவார். இந்திய‌ அணி முழுப்ப‌ல‌த்துட‌ன் உள்ள‌து.

 ம‌லிங்க‌, ர‌ங்க‌ண‌ ஹேர‌த்,அஜ‌ந்த‌ மெண்டிஸ்  ஆகியோர் அணியில் இல்லாததனால்  ப‌ந்து வீச்சில்ச‌ற்று தள‌‌ர்வு உள்ள‌து. ச‌ங்க‌கார‌ க‌ள‌ம் இற‌ங்குவாரா என்ப‌து இன்ன‌மும் உறுதி செய்ய‌ப்ப‌ட‌வில்லை. எத்த‌கைய‌ இக்க‌ட்டான‌ நிலையிலும் மன உதியுட‌ன் விளையாடும் துணிவு இல‌ங்கை வீர‌ர்க‌ளிட‌ம் உள்ள‌து. ஆகையினால் ஒருநாள் தொட‌ரில் ப‌ர‌ப‌ர‌ப்புக்குப் ப‌ஞ்ச‌மிருக்காது.   கிரிக்கெற்றின் வெற்றி என்ப‌த‌ற்கு அப்பால் உல‌க‌க்கிண்ண‌ கிரிக்கெற் போட்டியில் விளையாடும் அணியில் இட‌ம் பிடிக்க‌ வேண்டும் என்ற‌ அவா ஒவ்வொரு வீரருக்கும் உள்ள‌து என்ப‌த‌னால் அதிக‌ ப‌ட்ச‌ திற‌மையை வெளிப்ப‌டுத்த‌ வேண்டிய‌ நெருக்க‌டி  வீர‌ர்க‌ளுக்குஉள்ள‌து.

இங்கிலாந்து, மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் ஆகிய‌வ‌ற்றுக்கு எதிரான‌ தொட‌ர்களில் வெற்றி பெற்ற‌ ந‌ம்பிக்கையில் இந்தியா உள்ள‌து. பாகிஸ்தான்,தென்.ஆபிரிக்கா ஆகிய‌வ‌ற்றுக்கு எதிரான‌‌ தொட‌ர்க‌ளில் தோல்விய‌ட‌ந்த‌ இல‌ங்கை இங்கிலாந்துக்கு எதிரான‌‌ தொட‌ரில் வெற்றி பெற்றுள்ள‌து.

இந்தியா ,பாகிஸ்தான், இல‌ங்கை ஆகிய‌ நாடுக‌ள் இணைந்து 1996 ஆம் ஆண்டு உல‌க‌க்கிண்ண‌ கிரிக்கெற் போட்டியை ந‌ட‌த்தின‌. அப்போது  இல‌ங்கையில் குண்டு வெடிப்புக‌ள் அடிக்க‌டி ந‌டைபெறுவ‌த‌னால் பாதுகாப்பு இல்லைஎன‌ அவுஸ்திரேலியாவும் மேற்கு இந்திய‌த்தீவுக‌ளும் இல‌ங்கையில் விளையாட ம‌றுப்புத் தெரிவித்த‌ன‌. இல‌ங்கையில் எந்த‌வித‌மான‌ பாதுகாப்பு அச்சுறுத்த‌லும் இல்லை என்ப‌தை வெளிப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ இந்திய‌ பாகிஸ்தான் வீர‌ர்க‌ள் இணை‌ந்து இல‌ங்கையில் விளையாடினார்க‌ள்.

 இந்திய‌ நாடாளும‌ன்ற‌தேர்த‌ல் கால‌த்தில் ஐ.பி.எல்லுக்கு பாதுகாப்பு த‌ர‌முடியாது என‌ ம‌த்திய‌ அர‌சாங்க‌ம் அறிவித்த‌த‌னால்,2009 ஆம் ஆண்டு ஐ.பி.எல்லின் சில‌போட்டிக‌ள் தென். ஆபிரிக்காவில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ன‌. அப்போது இந்திய, தென். ஆபிரிக்க‌ கிரிக்கெற்  உறவுகள்க‌ள் மிக‌ இறுக்க‌மாக‌ இருந்த‌ன‌. 2013 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியது. இந்திய‌ கிரிக்கெற் அணி  தென்.ஆபிரிக்காவில் விளையாடும் போட்டிக‌ளின் அட்ட‌வ‌ணை ஒருத‌லைப்பட்ச‌மாக‌‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து என‌க்குற்ற‌ம் சாட்டிய‌து இந்தியா. அத‌ன் கார‌ண‌மாக‌ மேற்கு .இந்திய‌த்தீவுக‌ளை த‌னது நாட்டுக்கு அழைத்து இர‌ண்டு டெ‌ஸ்ட்போட்டிகளை நடத்தியது.





தென்.ஆபிரிக்காவுடனான முறுகல் காரணமாக சச்சினின் 200 ஆவது டெஸ்ட்போட்டி அங்கு நடப்பதை இந்தியா விரும்பவில்லை. ஆகையினால் மேற்கு இந்தியத்தீவுகளை தனது நாட்டுக்கு அழைத்து சச்சினின் 200 ஆவது போட்டியை நடத்திதிருப்தியடைந்தது. இப்போது மேற்கு இந்தியத்தீவுகள் தொடரைக்கைவிட்டதனால் அந்த இடைவெளியை நிரப்புவதற்காக இலங்கையை அழைத்துள்ளது.

தமிழ்மிரர்

Saturday, October 11, 2014

தலைமை இல்லாது தடுமாறும் அ.தி.மு.க

வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களினால் தமிழகத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தைப்பற்றி நன்கு அறிந்த தமிழக அமைச்சர்கள் இதனைக்கண்டும் காணாதிருக்கின்றனர். நீதிக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அறிக்கை விட்டால் ஜெயலலிதாவை எதிர்பதாக அமைந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள்.


மத்திய மாநில அரசியல் தலைவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது இது போன்ற தொடர் போராட்டங்கள் நடைபெறவில்லை. மேல் முறையீட்டின் மூல‌ம் அவ‌ர்க‌ள் பிணையில் விடுத‌லை செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள். அரசியல் காழ்ப்புண‌ர்ச்சியினால்தான்ஜெய‌ல‌லிதாவுக்கு த‌ண்ட‌னை கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அவ‌ரை உட‌ன‌டியாக‌ பிணையில் விடுத‌லைசெய்யவேண்டும் என்று அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌த்தின‌ர் குமுறுகிறார்க‌ள்.க‌ருணாநிதியின் அர‌சிய‌ல் ப‌ழிவாங்கல். காவிரிப்பிர‌ச்சினையில்  குட்டு வைத்த‌ ஜெய‌ல‌லிதாவை ச‌ந்த‌ர்ப்ப‌ம் பார்த்து க‌ர்நாட‌க‌ம் வ‌ஞ்சித்துவிட்ட‌து.பார‌தீய‌ ஜ‌ன‌தாக்க‌ட்சியில் அர‌சிய‌ல் சித்து விளையாட்டு என்ற‌ ரீதியில் அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌தின‌ர் குற்ற‌ம் சாட்டுகின்ற‌ன‌ர்.






ஜெய‌ல‌லிதாவுக்கு எதிராக‌ 13 வ‌ழ‌க்குக‌ள் தாக்க‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌.க‌ல‌ர் ரீவி வ‌ழ‌க்கில் குற்ற‌வாளியாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டார். அப்போது ந‌ட‌ந்த‌ வ‌ன்செய‌லில் மத‌ர்ம‌புரியில் மூன்று மாண‌விக‌ள் ப‌ஸ்ஸுட‌ன் சேர்த்து எரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.டான்சி நில‌பேர‌ வ‌ழ‌க்கில் எச்ச‌ரிக்க‌ப்ப‌ட்டார். இர‌ண்டு வ‌ழ‌க்குக‌ள் நிலுவையில் உள்ள‌ன‌. ஏனைய‌ வ‌ழ‌க்குக‌ளில் நிர‌ப‌ராதிஎன‌ விடுத‌லை செய்ய‌ப்ப‌ட்டார்.சொத்துக்குவிப்பு வ‌ழ‌க்கில் இருந்து த‌ப்ப‌ முடியாது என்பதை ஜெய‌ல‌லிதா‌ அறிந்திருந்தார். அத‌னால்தான் இந்த‌ வ‌ழ‌க்கை இழுத்த‌டித்தார்.

வ‌ருமான‌த்துக்கு அதிக‌மான‌ ப‌ண‌ம் எப்படி வ‌ந்த‌து என்ப‌தைஜெய‌ல‌லிதா நிரூபிக்க‌வில்லை. ச‌சிக‌லா,இள‌வ‌ர‌சி,சுதாக‌ர‌ன் ஆகிய‌ மூவ‌ருக்கும் எந்த‌வித‌மான‌ வ‌ருமான‌மும் இல்லை. ப‌ல‌ நிறுவ‌ன‌ங்க‌ள‌ ஆர‌ம்பிப்ப‌த‌ற்கான‌ ப‌ண‌ம் எங்கிருந்து கிடைத்த‌து என்பதை‌ அவ‌ர்க‌ளால் நிரூபிக்க‌ முடிய‌வில்லை. ஜெய‌ல‌லிதாவின் வ‌ய‌து, உட‌ல்நிலை, ப‌த‌வி,அந்த‌ஸ்து ஆகிய‌வ‌ற்றை கார‌ண‌ம் காட்டி பிணைம‌னு கோர‌ப்ப‌ட்ட‌து. மாநில‌ முத‌ல்வ‌ர் இப்ப‌டி மோச‌டிசெய்தால் அவ‌ரின் கீழே உள்ள‌வ‌ர்க‌ள் செய்ய‌மாட்டார்க‌ளா என‌ ச‌ந்தேக‌ம் எழுப்பிய‌ நீதிப‌தி பிணை வ‌ழ‌ங்க‌ ம‌றுத்துவிட்டார். அண்ணா திராவிட முன்னேற்ற‌க்  க‌ழ‌க‌த்தில் ஜெய‌ல‌லிதா ம‌ட்டும் தான் இப்ப‌டிச்செய்ய‌லாம் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் நினைத்துக்கூட‌ப்பார்க்க‌ முடியாது  என்ப‌து நீதிப‌திக்குத்தெரியாது.


தீர்ப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் நாள‌ன்று த‌மிழ‌க‌ முத‌லமைச்ச‌ரான‌  ஜெய‌ல‌லிதா குற்ற‌வாளிக்கூண்டில்   நின்ற‌து  முத‌ல‌மைச்ச‌ர் ப‌த‌விக்கு அவ‌மான‌ம். த‌மிழ‌க‌த்துக்கு த‌லைக்குனிவு. தொண்ட‌ர்க‌ள் என்ற‌ பெய‌ரில் த‌மிழ‌க‌த்திலிருந்து சென்ற‌வ‌ர்க‌ள்.நீதியை‌ அவ‌ம‌தித்து விட்ட‌ன‌ர். க‌ர்நாட‌க‌ பொலிஸாருட‌ன் த‌மிழ‌க‌ அமைச்ச‌ர்க‌ளும் ம‌ல்லுக்க‌ட்டின‌ர். த‌மிழ‌க‌த்துக்கும் க‌ர்நாட‌க‌த்துக்கும் இடையேயான‌ பிர‌ச்சினையின் உச்ச‌க்க‌ட்ட‌மாக‌ ஜெய‌ல‌லிதாவுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட தீர்ப்பை அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தின‌ர் பார்க்கின்ற‌ன‌ர்.


 அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தின் பெய‌ரிலே அண்ணா இருக்கிறார்.தேர்த‌ல் நெருங்கும் போது எம்.ஜி. ஆர் முன்னிலைப்ப‌டுத்த‌ப்ப‌டுவார்.வ‌ன் செய‌ல்க‌ளின் மெளன‌ சாட்சியாக‌ க‌ழ‌க‌க் கொடியிலே அண்ணா ஒற்றை விர‌லைக்காட்டிய‌ப‌டி இருக்கிறார். அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌ம் என்றால் ஜெய‌ல‌லிதாதான் என்ப‌தே இன்றைய‌ நிலை.அவ‌ரின் க‌ண்ண‌சைவிலே தான் எல்லாம் ந‌டைபெறுகின்ற‌ன. த‌ன‌க்குப்பின்  யார் த‌லைவ‌ர் என்ப‌தை ப‌ல‌ த‌லைவ‌ர்க‌ள் சூச‌க‌மாக‌த் தெரிவிப்பார்க‌ள்.ஆனால் ஜெய‌ல‌லிதா அப்ப‌டி யாரையும் வ‌ழி ந‌ட‌த்த‌வில்லை. அத‌னால் அடுத்து என்ன‌ செய்வ‌து என‌த்தெரியாம‌ல் த‌டுமாறுகிற‌து அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ம்.

ஜெய‌ல‌லிதாவைத் திருப்திப்ப‌டுத்த‌ வேண்டும் என்ற‌ நோக்கிலே ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌டைபெறுகின்ற‌ன‌.ஜெய‌ல‌லிதாவுக்கு எதிரான‌ தீர்ப்பு வெளியான‌தும் சிறைத்த‌ண்ட‌னை அதிக‌ம் அப‌ராத‌த்தொகை மிக‌மிக‌ அதிக‌ம் என்ற‌ ம‌ன‌நிலை ப‌ல‌ரிட‌ம் காண‌ப்ப‌ட்ட‌து. ஜெய‌ல‌லிதாவுக்குச் சார்பாக‌ இருந்த‌ ம‌க்க‌ளின் ம‌ன‌நிலையை த‌ம‌க்குச்சாத‌மாகப்பயன்ப‌டுத்த‌ அண்ணா‌ திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தின‌ர்த‌வ‌றிவிட்ட‌ன‌ர். ஜெய‌ல‌லிதாவின் இட‌த்தை நிர‌ப்ப‌க்கூடிய‌ ஆழுமை மிக்க‌ ஒருவ‌ர் அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌த்தில் இல்லை.
இதன் காரணமாக அடுத்து என்ன செய்வதெனத்தெரியாது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தடுமாறுகிறது. எதைச்செய்ய வேண்டும் எதைச்செய்யக்கூடாது என்ற விபரம் இல்லாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தடுமாறுகின்றனர்.

தமிழக முதலமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்த ஓ.பன்னீர்ச்செல்வம்,சிறையில் இருக்கும் குற்றவாளியிடம் ஆசிவேண்டிச்சென்றது. முதல்வர் பதவிக்கு இழுக்கு.அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் சிறை வாசலில் காத்திருந்து ஜெயலலிதாவின் மீதான தமது விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மாட்டுத்தீவன வழக்கில் 95 கோடி ரூபா ஊழல் செய்த லல்லுவுக்கு பிணைகொடுத்த நீதிமன்றம் வருமானத்துக்கு  அதிகமாக 66கோடிரூபா வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு பிணை கொடுக்கலாம் தானே என வாதிடுகிறார்கள். ஹ‌ரியானாவின் முன்னாள் முத‌ல்வ‌ர் ஓம்பிர‌காஷ் ச‌வுதாலாவின் பிணை இர‌த்துச்செய்ய‌ப்ப‌ட்ட‌து ஜெய‌ல‌லிதாவுக்கு சிக்க‌லை ஏற்ப‌டுத்தி உள்ள‌து.ஆசிரிய‌ நிய‌ம‌ன‌த்தில்முறைகேடு செய்த‌ குற்ற‌த்துக்காக  அவருக்கு 2003 ஆம் ஆண்டு 10 வ‌ருட‌ சிறைத்த‌ண்ட‌னை விதிக்க‌ப்ப‌ட்ட‌து. உட‌ல் ந‌ல‌க்குறைபாட்டை கார‌ண‌ம் காட்டி பிணை கோரினார். நீதிம‌ன்ற‌ம் அவ‌ருக்கு பிணை வ‌ழ‌ங்கிய‌து. தேர்த‌ல் பிர‌சார‌க்கூட்ட‌த்தில் அவ‌ர் க‌ல‌ந்து கொண்ட‌தால் பிணை இர‌த்துச்செய்ய‌ப்ப‌ட்டு ச‌ர‌ண‌டையும் ப‌டி உத்த‌ர‌விட‌ப்ப‌ட்ட‌து. ஜெய‌ல‌லிதா பிணையில் வெளிவ‌ந்தாலும் பொது நிகழ்ச்சிக‌ளிலோ க‌ட்சிக் கூட்ட‌ங்க‌ளிலோ க‌ல‌ந்து கொள்ள‌ முடியாது.


 ஜெய‌ல‌லிதாவுக்கு பிணை‌ வ‌ழ‌ங்க‌ ஆட்சேப‌னை இல்லை என்று அர‌ச‌த‌ர‌ப்பு வ‌ழ‌க்க‌றிஞ‌ர் கூறியும் நீதிப‌தி பிணை வ‌ழ‌ங்க‌ ம‌றுத்துவிட்டார். இது ஜெய‌ல‌லிதாவுக்கு பின்ன‌டைவு. நீதிப‌திக்கு எதிராக‌வும் நீதிம‌ன்ற‌த்துக்கு எதிராக‌வும் அண்ணா திராவிட ‌முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தின‌ர் ந‌ட‌த்தும் போராட்ட‌ங்க‌ளை நீதித்துறை  அவ‌தானித்து வ‌ருகிற‌து. த‌மிழ‌க‌த்தில் ந‌டை‌பெறும் போராட்ட‌ங்க‌ளால் பொதும‌க்க‌ள்  பாதிப்ப‌டை‌ந்துள்ள‌ன‌ர். இத‌னால் அன்ணா திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌த்தின் எதிர்கால‌ம் பாதிப்ப‌டையும் நிலை உள்ள‌து.இப்போதைய‌ ஆட்சியை த‌க்க‌வைக்க‌  வேண்டிய‌ க‌ட‌மை  அண்ணா திராவிட முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தின் முன்னால் உள்ள‌து. இல்லையேல் த‌லை தூக்க‌ முடியாத‌ அத‌ல‌ பாதாள‌த்தில் க‌ட்சி விழுந்து விடும்.