Thursday, May 26, 2011

அம்மா ஆட்சியில்அதிரடி மாற்றங்கள்

அரசியல் ஆய்வாளர்களின் அறிக்கைகளையும் கருத்துக் கணிப்புக்களையும் ஒட்டுமொத்தமாகத் தூக்கி எறிந்த தமிழக வாக்காளர்கள் ஜெயலலிதாவை முதல்வராக்கியுள்ளனர். இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஒரு சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியடைந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது.
தமிழக ஆட்சிøயத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. 1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சியின் சகவாசத்தால் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பை விஜயகாந்துக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளது.
ஸ்பெக்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, குடும்ப அரசியல், சினிமாத்துறையில் அராஜகம், கட்டப் பஞ்சாயத்துப் போன்றவையே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீட்டின்போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு காங்கிரஸ் கொடுத்த நெருக்கடியும் தோல்வியின் காரணிகளில் ஒன்று. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற எண்ணமே இருக்கக் கூடாது என்பதையும் வாக்காளர்கள் தெளிவாகப் புரிய வைத்துள்ளனர்.
அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஐந்து வருடங்களாக ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சியின் தாளத்துக்கு ஏற்ப ஆடி ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. ஜெயலலிதாவும் விஜயகாந்தும் இணைந்தபோதே திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக சிந்தித்துச் செயற்பட்டிருக்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலவீனத்தைத் தனது பலமாக மாற்ற முயற்சி செய்த காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்து தானும் குழிக்குள் விழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் இளங்கோவன், மணிசங்கர் அய்யர் போன்ற பெருந் தலைவர்கள் தோல்வியடைந்தனர். வெற்றியா தோல்வியா என்ற இழுபறியில் இருந்த சிதம்பரம் கடைசி நேரத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலின்போதே தனது பலவீனத்தை உணர்ந்து கூட்டணிக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் செயற்பட்டிருக்க வேண்டும். தமிழின உணர்வாளர்களின் பிரகாரம் காங்கிரஸ் கட்சிக்குப் பலத்த அடியை கொடுத்துள்ளது.
இலவசங்களும் சலுகைகளும் வெற்றியைத் தேடித் தரும் என்று கருணாநிதி மலைபோல நம்பியிருந்தார். 19 அமைச்சர்களைத் தோற்கடித்த தமிழக மக்கள் அரசின் மீதான தமது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை நம்பி வந்த சிறிய கட்சிகள் அனைத்தும் மண்ணைக் கௌவின. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் சேர்ந்த சிறிய கட்சிகள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணி ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தது.
ராகுல் காந்தியின் தலையீடு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த சரிவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் ராகுல்காந்தி. இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் ராகுல் காந்தி. தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒதுக்கிவிட்டு இளைஞர்களை வளர்த்தெடுக்க முயற்சி செய்தார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் இளைஞர் படை படுதோல்வியடைந்தது.
கருணாநிதியைக் கைவிட்டு விட்டு ஜெயலலிதாவுடன் கைகோர்க்க வேண்டும் என்று விரும்பிய காங்கிரஸ்காரர்கள் சட்டமன்றத் தோல்வியைத் தமக்குச் சாதகமாக்க விரும்புகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக் கூறிய சோனியா காந்தி ஜெயலலிதாவைத் தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளார். ஜெயலலிதா சோனியா காந்தியுடன் இணைந்துவிடுவாரோ என்ற அச்சம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு ஸ்பெக்ரம், விலைவாசி உயர்வு, குடும்ப அசியல், மின்வெட்டு என்பன முக்கிய காரணம். இவை எதிலும் நேரடியாகச்சம்பந்தப்படாத காங்கிரஸின் தோல்விக்கு காங்கிரஸின் உள்ளே உள்ள போட்டியே பிரதான காரணம். 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஐந்து தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக மோசமாகச் சரிந்துள்ளதை இது வெளிப்படுத்துகிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமாண்டமான வெற்றிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பே முக்கிய காரணம். முதலமைச்சராகப் பதவி ஏற்ற ஜெயலலிதா அதிரடியாகப் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். காவல்துறை அதிகாரிகளும் தலைமைச் செயலக அதிகாரிகளும் அதிரடியாக ம்õற்றப்பட்டுள்ளனர். ஆட்சியைப் பிடிக்கும் கட்சி முதலில் செய்வதையே முதலமைச்சர் ஜெயலலிதாவும் செய்துள்ளார். ஓமந்தூரர் அரசினர் கோட்டத்தில் இயங்கும் தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு இடம்மாற்றும் அவரது உத்தரவை தமிழகக் கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.
ஆங்கிலேயர்களால் 1640 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புனித ஜோர்ஜ் கோட்டை சுமார் 500 ஆண்டுகளாக இக்கோட்டைகள் தமிழ்நாட்டின் அதிகார மையமாகச் செயற்படுகிறது. தலைமைச் செயலகமும் சட்ட சபையும் இயங்குவதற்கு இடவசதி போதாது என்பதால் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ராணி மேரி கல்லூரி வளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அன்று அந்த முயற்சிக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. ஆட்சி மாறி கருணாநிதி முதல்வரானதும் ஓமந்தூர் அரசின் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம், சட்ட சபை என்பன அமைக்கப்பட்டன. 600 கோடி ரூபாவுக்கு மதிப்பிடப்பட்டு 1000 கோடி ரூபாவுக்கு கட்டி முடிக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் இக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
புதிய தலைமைச் செயலகத்துக்கு போக மாட்டேன் என்று ஜெயலலிதா சபதம் செய்தார். தனது சபதத்தை நிறைவேற்றுவதற்காகவே தலைமைச் செயலகத்தை அவசர அவசரமாக மாற்றுகிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் பெரு வெற்றியில் வடிவேல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளõர். அவரது பண்ணை வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் விஜயகாந்த் இருப்பதாக வடிவேல் குற்றம் சாட்டியுள்ளார்.
அழகிரியின் கோட்டையான மதுரையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வீறு கொண்டெழுந்துள்ளது. அழகியிரின் கல்யாண மண்டபம் அழகிரியின் நெருங்கிய சகாவின் வீடு என்பனவற்றின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. பழிவாங்கும் படலம் மெல்ல மெல்ல அரங்கேறி வருகிறது. ஊழல் வழக்கு வருமானத்தை மீறிய சொத்துச் சேர்த்தது போன்ற வழக்குகளால் தமிழக அரசியல் பரபரப்பாகும் நிலை தூரத்தில் இல்லை.
கருணாநிதியை ஆட்சியில் இறக்கிவிட்டு ஜெயலலிதாவை முதல்வராக்கியுள்ளார் விஜயகாந்த். ஜெயலலிதாவை இறக்கிவிட்டு தான் முதல்வராகும் வரை அமைதி காக்கிறார் விஜயகாந்த்.





வர்மா




சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு22/05//11

Tuesday, May 17, 2011

முதல்வராகிறார் ஜெயலலிதா

தமிழக சட்டசபைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றி யுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி படுதோல்விய டைந்துள்ளது. தமிழக சட்டசபைத்தேர்தல் கடந்த மாதம் 13ஆம் திகதி நடைபெற்றது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 160 தேசிய முற்போக்கு, திராவிட முன்னணி 41, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10, மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12, மனிதநேய மக்கள் கட்சி மூன்று, புதிய தமிழகம் இரண்டு, சமத்துவ கட்சி, இரண்டு, தொகுதிகளிலும் குடியரசுக் கட்சி சேதுராமனின் கட்சி பாவேட்பிளாக், கொ.இ.பே. ஆகியன தலா ஒரு தொகுதிகளில் போட்டியிட்டன.
திராவிட முன்னேற்றக் கழகம் 119, காங் கிரஸ் கட்சி 63, பாட்டாளி மக்கள் கட்சி 30, விடுதலைச் சிறுத்தைகள் 10, கெ.மு.க ஏழு, இந்திய முஸ்லிம் லீக் மூன்று தொகுதிகளிலும் வாண்டர் பெருந்தலைவர் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
பாரதீய ஜனதாக்கட்சி, ஜனதாத்தளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியாகப் போட்டி யிட்டன.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் மூன்று கூட்டணிகள் போட்டியிட்டாலும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் ஆகிய கூட்டணியி டையே தான் கடும் போட்டி நிலவியது. தேர்தலுக்கு முன்னைய கருத்துக் கணிப்பு களும், தேர்தலுக்குப் பின்னைய கருத்துக் கணிப்புகளும் இரண்டு கூட்டணிகளுக்கும் சாதகமாகவும், பாதகமாகவும் வெளியாகின. சாதகமான கருத்துக்கணிப்புகளை ஏற்றுக் கொள்வ தாகக் கூறிய அரசியல் தலைவர்கள் தமக்குப் பாதகமாக வெளியான கருத்துக்கணிப்புகளை நம்பமறுத்தனர்.
தமிழகத் தேர்தல் முடிவு எதிர்பார்த்ததை விட அதிகளவு தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற் றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல் வியடைந்தன. தமிழக ஆட்சியில் மாற்றம் ஏற்படவேண்டும் என்ற விருப்பத்தை மக்கள் அமைதியான முறையில் நிறைவேற்றியுள்ள னர்.
தமிழக அரசியல் வெற்றி,தோல்வியைத் தீர் மானிக்கும் சத்தியாக விளங்கிய விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தபோதே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட் டணி வெற்றி பெறுவது உறுதியாகியது. கடைசி நேரத்தில் உரிய மதிப்புக் கொடுக்காத படியால் அண்ணாதிராவிட முன்னேற்றக் கூட்டணியில் இருந்து வைகோவெளியேறி யது. ஜெயலலிதாவுக்கு பின்னடைவை
ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தஎதிர்பார்ப்புக்களை எல்லாம் ஓரங்கட்டிய வாக்காளர்கள் கருணாநிதி மீண் டும் ஆட்சிபீடம் ஏறக் கூடாது என்பதில் மிக வும் உறுதியாக இருந்தார்கள்.
ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகள், கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஜெயலலிதா மதிக்க மாட்டார். கட்சி முக்கியஸ்தர்களுடன் நெருக்கமாகப் பழகமாட்டார் போனற குற்றச் சாட்டுகள் ஜெயலலிதாவின் மீது சுமத்தப்பட் டன. அந்தக் குற்றச்சாட்டுக்கள் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை எற்படுத்தவில்லை.
திராவிட முன்னேற்றச் கழகத்தின் கோட்டை யான சென்னை அண்ணா திராவிடகழக வசமானது. திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர். விஜயகாந்த் எதிர்பார்த்தது போன்றே கருணா நிதியின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு விட்டது. விஜயகாந்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதே தமிழக அரசியல் ஆய்வாளர் களின் கேள்வியாகும் ஆட்சி அமைக்கப் போகும் ஜெலலிதாவின் அமைச்சரவை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதும் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் தவறுகளை மன்னிப்பதற்கு தமிழக மக்கள் தயாராக இல்லை. தவறுகளைத் தொடர்ச்சி யாகச் செய்துவிட்டு கடைசி நேரத்தில் மத்திய அரசின் தலையில் சுமத்திவிட்டு தப்புவதற் காக கருணாநிதி மேற்கொண்ட முயற்சி போன்றவற்றை எல்லாம் மனதில்வைத்து உரியநேரத்தில் தாம்விரும்பிய முடிவை தமிழக மக்கள் எடுத்துள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல் விக்கு காங்கிரஸ் கட்சியும் ஒரு காரணம் அதிக தொகுதிகளில் போட்டியிடவேண்டும். அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளுக்கு இணங்கிப்போகவேண்டிய கட்டாயம் திரா விட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இருந் தாலும் தொண்டர்கள் மத்தியில் ஒற்றுமை காணப் படவில்லை இதேவேளை காங்கிரஸ் தலை வர்களிடம் ஒருமித்த கருத்து இருக்கவில்லை.
கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் கடந்த ஐந்து வருடங்களாக செய்த சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்குப் பயன்தந்தன என்றாலும் வாரிசு அரசியல், ஊழல், ஸ்பெக்ரம் என்பன திரா விட முன்னேற்றக் கழகத்துக்குப் பாதக மாக அமைந்தன.
காங்கிரஸ் கட்சி 63 இடங்களை அடம்பிடித் துக் கேட்டுவாங்கியது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் அதிகமானவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அத்தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது.
ஜெயலலிதாயுடன் கூட்டுச் சேர்ந்த விஜய காந்த் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள் ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைகளில் ஒன்றான மதுரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கைகளில் தஞ்ச மடைந்துள்ளது. மாற்றத்தை எதிர்பார்த்த மக் கள் தமது கடமையை கச்சிதமாக முடித்துள் ளனர்.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைத்த பின்னர் ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் வழக்கு களின் நிலைபற்றிய கேள்வி முன்னிலைவகிக் கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் கள் மீதான ஊழல் வழக்குகள் , அரங்கேறுமா என்ற எதிப்பார்ப்பும் மக்களிடம் உள்ளது.

வர்மா

சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு15/05//11

Thursday, May 12, 2011

ஒரு நடிகை நாடாள்கிறாள்



தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா கடந்த வாரம் தமிழக முதலமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்ட விதிகளின் படி தேர்தலில் போட்டியிட முடியாத ஒருவர் முதலமைச்சராகப் பதவியேற்றது புதிய சட்டப் பிரச்சினையொன்றை ஏற்படுத்தியுள்ளது.
1991 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக முதன்முதல் பதவியேற்ற ஜெயலலிதா தற்போது இரண்டாவது முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
ஏற்கனவே சி.இராஜகோபாலாச்சாரியார் (193739, 194952), எம்.ஜி.இராமசந்திரன் (197780, 198087) ஆகியோர் இரண்டுமுறை முதலமைச்சராக இருந்தார்கள். கலைஞர் கருணாநிதி (196976, 198991, 19962001) மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தார்.
1967 ஆம் அண்டின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகமும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழகத்தை ஆட்சிசெய்து வருகின்றன.
ஜெயலலிதா 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி பிறந்தார். ஜெயராம் சந்தியா தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்த இவருக்கு ஒரு அண்ணன் இருந்தார். இவர்களது பூர்வீகம் ஸ்ரீரங்கம்.
ஜெயலலிதாவின் தாயார் பிரபல நடிகையாக இருந்ததால், இவர் சென்னையில் தனது படிப்பை மேற்கொண்டார்.
சென்னை சேர்ச் பாக் கொன்வென்றில் படித்த இவர் ஸ்டெல்லா மேரி கல்லூரியில் பி.யு.சி படித்தார்.மெட்ரிகுலேசன் பரீட்சையில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார். தமிழ் தவிர ஆங்கிலம்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சரளமாக பேசுவார்.
தாயாரின் சினிமா செல்வாக்கு காரணமாக ஜெயலலிதாவின்17 ஆவது வயதில் சினிமா வாய்ப்பு தேடி வந்தது. வெள்ளிவிழா படங்களின் இயக்குநர் ஸ்ரீதரின் படத்தில் ஜெயலலிதா முதன்முதல் அறிமுகமானார்.
வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி ஆகியோர் அறிமுகமானார்கள். நிர்மலா, மூர்த்தி ஆகியோரின் பெயருடன் இன்றும் வெண்ணிற ஆடை என்ற பெயர் இணைந்துள்ளது.
வயது வந்தவர்களுக்குரிய படமாக வெண்ணிற ஆடை வெளியானதால் ஜெயலலிதாவால் அந்த படத்தைப் பார்க்க முடியவில்லை.
எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு பெரும் திலகங்களின் பிடியில் தமிழ் சினிமா கட்டுண்டிருந்தபோது ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஜெயலலிதாவின் இரண்டாவது படம் இலட்சக்கணக்கான தமிழ் இதயங்களில் இடம்பிடித்த எம்.ஜி.ஆரின் படமாக வெளியானதால்எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ஜெயலலிதாவின் மீதும் மதிப்பு வைத்தார்கள்.
எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா 28 படங்களில் கதாநாயகியாக நடித்தார். சுமார் ஐந்து வருடங்கள் ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் மட்டும் நடித்ததால் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் அவருக்கிருந்த மதிப்பும் மரியாதையும் அதிகமாகின.
1970 ஆம் ஆண்டு உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் மஞ்சுளாவை எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்தியதால் எம்.ஜி.ஆர்ஜெயலலிதாவுக்கிடையே இருந்த சினிமா உறவு முறிவடைந்தது.
உலகம் சுற்றிம் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்தார். லதா, மஞ்சுளா இருவரும் அவருக்கு கதாநாயகிகளாக நடித்தார்கள்.
ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70 கண்காட்சியில் உலகம் சுற்றும் வாலிபன் படம்பிடிப்பு நடைபெற்றது. எம்.ஜி.ஆர் தன்னை ஒதுக்கிவிட்டு வேறு நடிகைகளை ஜப்பானுக்கு அழைத்துச் சென்றதைப் பொறுக்க முடியாத ஜெயலலிதா ஜப்பறீýதண் சென்று கண்காட்சியை பார்வையிட்டார்.
கலாட்டா கல்யாணம் என்ற படத்தில் சிவாஜியுடன் ஜெயலலிதா முதன் முதலில் ஜோடியாக நடித்தார். நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகாராணி என்ற பாடல் அந்தத் திரைப்படத்தில்ஆரம்பக்காட்சியாக அமைந்தது.
ஜெயலலிதா திரையுலகில் பிரபலமாக இருந்தபோது அவரின் தாயார் சந்தியா மரணமானார். 18 வருடங்கள் திரையுலகில் நிலைத்திருந்த இவர் 115 படங்களில் நடித்தார்.
அடிமைப் பெண் திரைப்படத்தில் அம்மா என்றால் அன்பு என்ற பாடலை முதன்முதலில் பாடினார். அதன் பின்னர் பல படங்களிலும்பாடியுள்ளார்.
எபிசிங் என்ற ஒரு ஆங்கிலப் படத்தில் நடித்த இவர். ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் நடிக்க முன் நாடகங்களில் நடித்தார். கதை, கவிதை, நாவல் என்பவற்றிலும் இவர் தனது திறமையைக் காட்டியுள்ளார்.
பரதம், ஓவியம், நடனங்களை முறையாக பயின்ற அவரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடிகர் திலகத்தின் தலைமையில் நடைபெற்றது.
1965 ஆம் ஆண்டு தமிழ்ப் படங்களில் நடிக்க முதல் 1964 ஆம் ஆண்டு சின்னதே கொம்மே, மானே அலியா ஆகிய படங்கறில் நடித்தார்.
எம்.ஜி.ஆரின் கதாநாயகியாக அவர் அடையாளம் காணப்பட்டாலும் சிவாஜியுடன் நடித்த எங்கிருந்தோ வந்தாள், சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டணமா அகிய படங்களின் மூலமே சிறந்த நடிகையெனப் பேசப்பட்டார்.
சினிமா உலகத்தை விட்டு விலகிய ஜெயலலிதா எம்.ஜி.ஆர் முன்னிலையில் 1982 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி அ.இ.அ.தி.மு.க வில் சேர்ந்தார்.
ஜெயலலிதா கட்சியில் சேர்ந்து ஆறு மாதங்களுக்கிடையில் அ.இ.அ.தி.மு.க வின் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டார். அரசியல் வாழ்வில் இவர் பெற்ற முதல் பதவி இதுவாகும்.
ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சியைப் பொறுக்கமாட்டாத அ.இ.அ.தி.மு.க மூத்த உறுப்பினர்கள் பலரது எதிர்ப்பையும் பொறுட்படுத்தாத எம்.ஜி.ஆர். 1984 ஆம் ஆண்டு கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதாவை நியமித்தார்.
இருவருக்குமிடையிலான உறவில் சில நேரங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்தார்.
எம்.ஜி.ஆர்ன் இறுதி ஊர்வலத்தில் ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி பொதுமக்கள் மத்தியில் இவருக்கு பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் மீது மதிப்பு வைத்திருப்பதை உணர்ந்த கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியை அரசியலுக்கு இழுத்தார்கள். ஜெயலலிதா தலைமையிலும் ஜானகி தலைமையிலும் கட்சி பிளவுப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஜானகி முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.
1988 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இரண்டு அணிகளும் அ.இ.அ.தி.மு.க இரட்டை இலைச்சின்னம் தமக்குரியது எனத் தெரிவித்ததால் அந்தச் சின்னம் முடக்கப்பட்டு ஜெயலலிதா அணிக்கு இரண்டு கோழியும், ஜானகி அணிக்கு இரண்டு புறாவும் சின்னங்களாக வழங்கப்பட்டன.
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 196 இடங்களில் போட்டியிட்ட கட்சி 26 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றது.
கருணாநிதி முதலமைச்சரானார். எதிர்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டசபைக்கூட்டத்தில் நடைபெற்ற ரகளையால் மனமுடைந்த ஜெயலலிதா சட்டசபைக்கு இனி வரமாட்டேன் எனக்கூறி சபையைவிட்டு வெளியேறினார்.
ஜானகி அரசியலில் இருந்து ஒதுங்கிய போது ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்தனர். இரட்டை இலைச்சின்னம் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான கட்சிக்கு வழங்கப்பட்டது.
1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா இந்திரா காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ராஜூவ் காந்தி படுகொலை ஜெயலலிதாவுக்கு பாரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
ஜெயலலிதா முதல்வரானதும் திரைமறைவில் இருந்த உடன் பிறவா சகோதரி வெளிச்சத்தக்கு வந்தார். ஜெயலலிதாவின் சகல நடவடிக்கைகளும் சிசிகலாவின் வழிகாட்டலில் நடந்ததாகவே மக்கள் பேசிக்கொண்டார்கள்.
அவரின் காலத்திலே தான் கட்அவுட் கலாசாரம் தமிழகத்தில் முளைவிடத் தொடங்கியது. இவர் பயணம் செய்கையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் முன்னும் பின்னும் சென்றது.
இவர் செல்லும் பாதையில் நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதால் பொது மக்களின் பயணத்துக்கு பல தடங்கல்கள் ஏற்பட்டன.
வளர்ப்பு மகன் என அறிமுகப்படுத்தப்பட்ட சுதாகரனின் திருமணம் தமிழக மக்களைத் திகிலடையச் செய்தது. சிசிக்கலாவின் உறவினரான சுதாகரனுக்கு சிவாஜியின் பேத்திக்கும் நடைபெற்ற திருமணம் மக்களிடம் இவர் மீதிருந்த மதிப்பை இல்லாமல் செய்தது.
ஜெயலலிதாவின் மீது ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அவரது ஆட்சி ஆடம்பர ஆட்சியென எதிர்க்கட்சிகள் வர்ணித்தன. 1991 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகத்தில் ஜெயலலிதாவும் உடன் பிறவா சகோதரியும் கலந்து கொண்டார்கள்.
இலட்சக்கணக்கான மக்கள் குளத்தில் நிராட முண்டியடித்ததில் பலர் மரணமானார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தார்கள்.
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆடம்பர நாட்டத்தை முக்கிய பிரசாரமாக்கி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது.
1991 ஆம் ஆண்டு தேர்தலில் ராஜீவின் மறைவால் உண்டான அனுதாப அலையால் வெற்றிபெற்ற ஜெயலலிதா தனது வெற்றிக்கு ராஜீவின் மரணம் காரணம் அல்ல எனக் கூறினார்.
காங்கிரஸ் மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேரவிரும்பியபோது மூப்பனார் தலைமையில் தமிழக காங்கிரஸ் பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமானது.
ஊழலுக்கு எதிரான மூப்பனார். கருணாநிதி ஆகியோர் பிரசாரம் செய்தபோது தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ரஜினியும் இவர்களுடன் இணைந்துகொண்டார்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக்க ஜெயலலிதா தேர்தலில் தோல்வியுற்றார். ஜெயலலிதாவின் மீது சுமத்தப்பட்ட ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
டான்சி நிலபேர ஊழல் வழக்கு, கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல், கலர் ரி.வி. ஊழல் வழக்கு, அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு, அந்நிய செலாவணி மோசடி வழக்கு உட்பட பல வழக்குகள் ஜெயலலிதா மீது தொடரப்பட்டன.
நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கில் ஜெயலலிதா நிரபராதியென விடுதலை செய்யப்பட்டார். ஆனால் டான்சி நில பேர ஊழல் வழக்கிலும் கொடைக்கானல் ஹோட்டல் வழக்கிலும் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதை ஆட்சேபித்து தர்மபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கல்லூரி மாணவிகள் நால்வர் பஸ்ஸூடன் சேர்த்து எதிக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பிரகாரம் அவருக்கு முறையே இரண்டு ஆண்டுகளும், மூன்று ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படியிருந்த போதிலும் இந்த முறை தேர்தலுக்காக ஜெயலலிதா நான்கு தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
இதே வேளை இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்தாலும் மேலதிக தொகுதிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் என்ற சட்டத்தையும் அவர் பொருட்படுத்தவில்லை.
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் எனத் தெரிந்து கொண்டே சட்டத்தை ஏமாற்ற முயற்சித்து அப்பாவி மக்களிடம் அனுதாபத்தைப் பெற்றுக் கொண்டார்.
ஜெயலலிதாவுடன் முன்னர் கூட்டனி வைத்துக் கொண்ட வைகோ, ராமதாஸ் ஆகியோர் கருணாநிதியுடன் இணைந்தார்கள்.
கருணாநிதியுடன் துணையிருந்த மூப்பனார் ஜெயலலிதாவிடம் சரண்புகுந்தார். ராமதாஸ் மீண்டும் ஜெயலலிதாவிடம் தஞ்சமடைந்தார். வைகோ கடைசி நேரத்தில் கருணாநிதியின் கையை விட்டு தனியாகச் சென்றார்.
ஜெயலலிதாவின் கூட்டணியின் உபயத்தால் அ.இ.அ.தி.மு கழகம் தனிபெரும்பான்மை பெற்றது.
தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா மீண்டும் தெரிவு செய்யப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் பதவியேற்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றவாளி ஒருவரே தன் மீது வழக்கு நடத்தும் புதிய அத்தியாயத்தை தமிழக அரசு ஆரம்பித்துள்ளது.
பேரறிஞர் அண்ணாத்துரையின் சட்டம் ஒரு இருட்டறை என்ற வாசகம் ஜெயலலிதாவின் வாழ்வில் ஒளியேற்றவுள்ளது.
ஏ.ரவிவர்மா
தினக்குரல்,புதன்வசந்தம் 23/05/2001

Monday, May 9, 2011

தலைவர்களைத் தடுமாறவைக்கும்கருத்துக்கணிப்புகள்

தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்த காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் மிக நெருக்கமாகப் பழகத் தொடங்கி விட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர். ஸ்பெக்ட்ரம், தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை ஆகியவற்றினால் காங்கிரஸ் கட்சியில் இருந்து சற்றுத் தூர விலகி இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகளின் நிலைமை இதற்கு எதிர்மாறாக உள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது ஒன்றாகக் குழுமிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கட்சிகள் தமிழக சட்ட சபைத் தேர்தலின் பின்னர் ஆளுக்கு ஒரு பக்கமாகத் திசை மாறி விட்டன. தேர்தல் நடைபெறும் வரை ஒன்றாக கூடிக் குதூகலித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அமைதியாகி விட்டன.
தமிழக சட்ட சபைத் தேர்தல் முடிவு பற்றிய கருத்துக் கணிப்புகள் எதிரும் புதிருமாக உள்ளன. வானிலை அறிக்கை போன்று அடிக்கடி மாறுகின்றன. தேர்தலுக்கு முன்னரான கருத்துக் கணிப்பில் கருணாநிதி தலைமையிலும், ஜெயலலிதாவின் தலைமையிலும் கூட்டணி ஆட்சி அமையும் என்று கருத்துக் கணிப்புகள் கூறின. தேர்தலுக்குப் பின்னர் வெளியான கருத்துக்கணிப்புகள் கருணாநிதிக்கு சாதகமாக வெளிவந்தன. கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை இல்லாத கருணாநிதி, தனக்கு விசுவாசமானவர்களின் மூலம் கருத்துக் கணிப்பு நடத்தினார். அந்தக் கருத்துக் கணிப்பு கருணாநிதிக்குச் சாதகமானதாக உள்ளது. வெற்றி பெறும் தொகுதி, தோல்வியடையும் தொகுதி, வெற்றி தோல்வியைக் கணிக்க முடியாத தொகுதி என்று மூன்று வகையாகப் பிரித்து நடைபெற்ற இக்கருத்துக் கணிப்பினால் கருணாநிதி உற்சாகமாக உள்ளார்.
தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் மிகக் கடுமையாக நடந்து கொண்டது. அரசின் அதிகார துஷ்பிரயோகம் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பண விநியோகம், அன்பளிப்புகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தியது. தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையினால் வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் நினைத்தபடி செயற்பட முடியவில்லை. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை அத்துமீறியுள்ளதாகக் கருணாநிதி குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை ஜெயலலிதா பாராட்டினார். தேர்தல் ஆணையம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதாக திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டியது. தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது தேர்தல் ஆணையகத்தைப் பற்றி காங்கிரஸ் விமர்சனம் எதனையும் முன் வைக்கவில்ø.
மற்றைய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடும் போது தேர்தல் ஆணையம் தமிழகத்தில் மிகக் கண்டிப்பாக நடந்ததாக அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர் சிதம்பரத்தின் இக்குற்றச்சாட்டு கருணாநிதிக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பாதகமாகவும் தேர்தல் ஆணையம் நடந்துள்ளதாக கருணாநிதி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத் தேர்தல் முடிவை அறிவதற்கு மத்திய அரசும் ஆர்வமாக இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறினால் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்குப் பின்னரும் நடைபெற்ற கருத்துக் கணிப்புகளில் பெருமளவு முரண்பாடு உள்ளது. கருத்துக் கணிப்புகள் பல சந்தர்ப்பங்களில் காலை வாரிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும், பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி பீடம் ஏறும் என்றே பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடையும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையினால் கூட்டணி பெரு வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால், முடிவு தலைகீழாக மாறியது.
மத்தியில் காங்கிரஸ் அமோக வெற்றியுடன் ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலை வெற்றியை உறுதி செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிக் கட்சிகள் இருந்ததையும் இழந்தது கூட்டணியின் பலத்தினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. இதன் காரணமாக, கருத்துக் கணிப்பை திராவிட முன்னேற்றக் கழகம் நம்பவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பெற முடியாத நிலையில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பதற்கு கூட்டணிக் கட்சிகளின் உதவி தேவைப்படும்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் விஜயகாந்தும் இடதுசாரிகளும் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்குவதற்கு முன் வர மாட்டார்கள். கூட்டணித் தலைவர்களுடனான உறவு ஜெயலலிதாவுக்கு என்றைக்குமே சுமுகமாக இருந்ததில்லை.
தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது ஜெயலலிதாவின் பெயரை விஜயகாந்தும் விஜயகாந்தின் பெயரை ஜெயலலிதாவும் உச்சரிக்கவில்லை. இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து கூட்டணி அமைப்பார்களா என்பது சந்தேகமே. தமிழக சட்ட சபைத் தேர்தல் முடிந்ததும் ஜெயலலிதா, போய் விட்டார். ஏனைய கூட்டணித் தலைவர்களும் தம் வழியில் சென்று விட்டனர். யாரும் ஜெயலலிதாவைச் சந்திக்கவில்லை. தேர்தல் முடிவு சாதகமானால் இவர்கள் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுவார்கள். வெள்ளிக்கிழமையுடன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வந்து விடும். தேர்தல் முடிவு வெளியான பின்னர் கருத்துக் கணிப்புகளின் உண்மை தெரிந்து விடும்.

வர்மாசூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு08/05//11

Wednesday, May 4, 2011

அதட்டுகிறது காங்கிரஸ்அடங்குகிறது தி.மு.க.

தமிழக சட்ட சபைத் தேர்தல் காரணமாக சற்று அடங்கி இருந்த ஸ்பெக்ரம் விவகாரம் மீண்டும் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. ஸ்பெக்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டதும் எதிர்க்கட்சிகள் அதனைத் தமது தேர்தல் பிரசாரத்தில் முக்கிய கருப் பொருளாகப் பயன்படுத்தினர். தமிழக சட்ட சபைத் தேர்தல் முடிவு வெளிவர இன்னமும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன. தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று அரசியல் கட்சிகள் அனைத்தும் பதை பதைத்துக் கொண்டிருக்கும் வேளையில் குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயரை சி.பி.ஐ. சேர்த்ததால் கலங்கிப் போயுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
ஸ்பெக்ரம் ஊழல் குற்றச்சாட்டில் ராசா, சாதிக் பாட்ஷாவின் சகோதரி ஆகியோர் சி.பி. ஐ.யால் கைது செய்யப்பட்டனர். முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்பாள், மகள் கனிமொழி ஆகியோரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று பரபரப்பாகத் தகவல் வெளியானது. ஸ்பெக்ரம் விவகõரத்தைப் பற்றிக் கவலைப்படாது தேர்தலைச் சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம். காங்கிரஸ் கட்சியின் நெருக்குதல்களைக் கணக்கில் எடுக்காது கூட்டணி தர்மம் என்று சொல்லிக்கொண்டு காங்கிரஸுடன் உறவைத் தொடர்ந்தது தி.மு.க.
ஸ்பெக்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிறுவனத்திடம் இருந்து 210 கோடி ரூபாவை கலைஞர் தொலைக்காட்சி கடனாகப் பெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்துடன் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதால் ஸ்பெக்ரம் ஊழலுக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. கருதுகிறது. கலைஞர் தொலைக்காட்சியின் 60 சதவீத பங்குகள் தயாளு அம்மாளின் பெயரில் உள்ளது. கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத் குமார் ஆகியோரும் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்கள். சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தயாளு அம்மாளின் பெயர் குற்றப் பத்தரிகையில் இல்லை. ஆனால் சாட்சியின் பெயரில் தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆகையினால் ஸ்பெக்ரம் பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபட்டிருக்கமாட்டார் என்று சி.பி.ஐ. கருதுகிறது.
கூட்டணிக் கட்சிகள் ஊழல் செய்யும்போது அதனைக் கண்டும் காணாதது போல் இருந்து கூட்டணித் தர்மத்தைக் கடைப்பிடித்த வரலாறுகள் உள்ளன. இந்திய மத்திய அரசு கண் அசைத்தால் தான் மேலதிக விசாரணைகள் துரிதப்படுத்தப்படும். மத்திய அரசின் ஒப்புதல் இன்றி விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படுவதில்லை. ஊழலுக்கு எதிரான கட்சி என்ற மாயையை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயல்கிறது. அதனால் தான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கிறது. காங்கிரஸுக்கு எதிராகப் பொங்கி எழுந்தால் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி அமைந்துவிடும் என்ற பயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அடங்கி ஒடுங்கியுள்ளது.
ஸ்பெக்ரம் ஊழல் என்ற பூதத்தைக் காட்டியே தனது விருப்பங்கள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றி வருகிறது. தமிழக சட்ட சபைத் தேர்தல் முடிவு வெளிவரும் வரை இறுக்கமான நடவடிக்கை எதனையும் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்காது. தமிழக ஆட்சி பறிபோனால் மத்திய அரசின் துணையுடன் தான் தமிழக அரசை எதிர்த்துப் போராட வேண்டும். ஸ்பெக்ரம் விவகாரத்துக்காக அவசரப்பட்டு மத்திய அரசில் இருந்து வெளியேறினால் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் பொங்கி எழாது பொறுமை காட்டுகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
ஸ்பெக்ரம் விவகாரத்தில் கனி மொழியின் பெயரை சி.பி.ஐ குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டதனால் திராவிட முன்னேற்றக் கழக செயல் திட்டக் குழு அவசரமாகக் கூடியது. அது சம்பிரதாயமான கூட்டமாகவே இருக்கும் காங்கிரஸுக்கு எதிரான எந்தவிதமான எதிர்ப்பும் அங்கு காட்டப்படாது என்று விமர்சகர்கள் எதிர்வு கூறினார்கள். அதேபோன்று சட்டப்படி இப்பிரச்சினையை எதிர்நோக்குவோம். குற்றப் பத்திரிகையில் பெயர் குறிப்பிட்டிருந்தால் குற்றவாளி என்று அர்த்தமில்லை என்று நிலைப்பாட்டை எடுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
ஸ்பெக்ரம் குற்றப் பத்திரிகையில் கனி மொழியின் பெயர் சேர்க்கப்பட்டதனால் ரோஷமடைந்து மத்திய அரசில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் அது பரபரப்பான செய்தியாக இருக்குமே தவிர அரசியல் ரீதியாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்தவித இலாபமும் கிடைக்காது. குற்றப் பத்திரிகையில் இருந்து கனிமொழியின் பெயரை தீர்ப்பதற்குரிய வழிவகை இது என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் உணர்ந்துள்ளது.
இம்மாதம் 6 ஆம் திகதி கனிமொழியும் சரத்குமாரும் சி.பி.ஐ. முன்னிலையில் ஆஜராக வேண்டும். அப்போது விசாரணையின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா அல்லது கைது செய்யப்படுவார்களா என்று பதைபதைப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திடம் உள்ளது.
காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிரான கட்சி என்பதை வெளிக்காட்டுவதற்காக கொமன்வெல்த் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு பின் அதிரடியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கியது காங்கிரஸ் கட்சி. திராவிட முன்னேற்றக் கழகமும் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ராசாவையும் கனிமொழியையும் கை கழுவி விட திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தனது முழு அழுத்தத்தையும் பிரயோகித்து நெருக்குதலைச் கொடுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சி, ஸ்பெக்ரம் விவகாரம் காரணமாக கனிமொழி கைது செய்யப்பட்டாலும் அதிரடியாக எதனையும் செய்ய முடியாத நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. தமிழகத் தேர்தல் முடிவுக்குப் பின்னர்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கும் அதுவரை பொறுமையைக் கடைப்பிடிக்கும்.
காங்கிரஸ் கட்சிக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தற்காலிகமாக இலங்கைப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஐ.நா. வின் நிபுணர் குழு அறிக்கையின் பிரகாரம் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். கனிமொழி மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியதால்தான் ஐ.நா. வின் நிபுணர் குழு அறிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் கையில் எடுத்துள்ளது.


வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு01/05//11