Wednesday, December 30, 2009

உலகக்கிண்ணம்2010


சிலி
தென் ஆபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தென் அமெரிக்காவில் இருந்து தகுதி பெற்ற இரண்டாவது நாடு சிலி. பிரான்ஸில் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய சிலி 12 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கான 18 தகுதி காண் போட்டியில் விளையாடிய சிலி 10 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்தது. மூன்று போட்டிகளை சமநிலையில் முடித்தது. சிலி 32 கோல்கள் அடித்தது. சிலிக்கு எதிராக 22 கோல்கள் அடிக்கப்பட்டன. 33 புள்ளிகளைப் பெற்றது. 43 முறை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. நான்கு முறை எச்சரிக்கை விடப்பட்டது. மூன்று தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது. கம்பின்டோ சுசோ 10 கோல்களை அடித்தார். மாரியா பெர்னாண்டோ நான்கு கோல்கள் அடித்தார். ஒரு போட்டி மீதமாக இருக்கையில் கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 42 கோல்கள் மூலம் வெற்றி பெற்றதும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை சிலி பெற்றது.
ஆர்ஜென்ரீனா, பிரேஸில் ஆகியவற்றுடன் தலா இரண்டு போட்டிகளில் விளையாடிய சிலி இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. மாரியஸ் பெர்னாண்டஸ், அலெக்ஸிஸ் சஞ்சஸ், ஹம்பட்டோசுசோ ஆகியோர் சிலி அணியின் நம்பிக்கைக்குரிய வீரர்களாவர். ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த மாசெலோ பியல்சா சிலியின் பயிற்சியாளராக உள்ளார்.
1962ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி சிலியில் நடைபெற்றது. அப்போது 1 0 கோல் கணக்கில் யூகோஸ்லோவியாவை வென்று சிலி மூன்றாவது இடத்தைப் பெற்றது. ஸ்பெய்ன், ஹொண்டூராஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுடன் எச் பிரிவில் சிலி உள்ளது.
ரமணி
மெட்ரோநியூஸ்

Tuesday, December 29, 2009

உலகக்கிண்ணம்2010


பிரேஸில்
தென் ஆபிரிக்காவில் 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்கு தென் அமெரிக்காவில் இருந்து 10 நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின. பிரேஸில், சிலி, பரகுவே, ஆர்ஜென்ரீனா, உருகுவே ஆகிய ஐந்து நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
19 உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் தொடர்ச்சியாக விளையாடிய ஒரே ஒரு நாடு என்ற பெருமையுடன் திகழும் பிரேஸில் தென் அமெரிக்காவில் இருந்து தெரிவான முதலாவது நாடாக விளங்குகிறது. 18 போட்டிகளில் விளையாடிய பிரேஸில் ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. ஏழு போட்டிகளை சமநிலையில் முடித்தது. ஈக்குவடோருக்கு எதிராக 50 கோல்கள் அடித்தது. ஈக்குவடோர் கோல் எதனையும் அடிக்கவில்லை. உருகுவே, சிலி, வெனிசுவெலா ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டியில் தலா 4 0 கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.
பிரேஸில், ஆர்ஜென்ரீனா ஆகியவற்றுக்கிடையிலான போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். முதலாவது போட்டியில் இரண்டு நாடுகளும் கோல் அடிக்காமையினால் போட்டி சமநிலையில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் பிரேஸில் மூன்று கோல்கள் அடித்தது. ஆர்ஜென்டீனா கோல் அடிக்காது தோல்வி அடைந்தது.
கொலம்பியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளும் சமநிலையில் முடிந்தன. இரு போட்டிகளிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. பிரேஸில் 33 கோல்கள் அடித்தது. பிரேஸிலுக்கு எதிராக 11 கோல்கள் அடிக்கப்பட்டன. 34புள்ளிகளுடன் உல கக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட பிரேஸில் தகுதி பெற்றது.
லூயிஸ் பாபியானோ, காகா இருவரையும் கட்டுப்படுத்துவது எதிரணிக்கு மிகு ந்த சிரமமாக இருக்கும். லூயிஸ் பாபியா னோ ஒன்பது கோல்களையும் காகா ஐந்து கோல்களையும் அடி த்து தமது பலத்தை நிரூபித்துள்ளனர். கோல் கீப்பரான ஜூலியோ சீஸர் பிரேஸிலின் வெற்றிக்கு பிரதானமான வீரராகத் திகழ்கிறார். 18 தகுதிகாண் போட்டிகளில் பிரேஸில் விளையாடியது. அதில் 12 போட்டிகளில் எதிர்த்து விளையாடிய நாடுகள் கோல் எதனையும் அடிக்கவில்லை. டுங்கா என செல்லமாக அழைக்கப்படும் கார்லொஸ் காட்டனோ பெலடோன் பிரேஸில் அணியின் பயிற்சியாளராக உள்ளார். 1962 ஆம் ஆண்டு சிலியில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் சம்பியனான பிரேஸில் அணியில் விளையாடியவர். 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் பிரேஸில் அணியின் பயிற்சியாளராக டும்ங்கா பொறுப்பேற்றார். 2008 ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி வரையிலான 19 போட்டிகளில் பிரேஸில் தோல்வியடையவில்லை. தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் வடகொரியா, ஐவரிகோஸ்ட், போர்த்துக்கல் ஆகிய நாடுகளுடன் ஜி பிரிவில் பிரேஸில் உள்ளது. ரமணி
மெட்ரோநியூஸ்

Sunday, December 27, 2009

சாதித்தது தி.மு.க துவண்டது அ.தி.மு.க


திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்தி உள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்து தொகுதிகளுக்கான சட்டசபை இடைத் தேர்தலைப் புறக்கணித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருச்செந்தூரிலும், வந்தவாசியிலும் போட்டியிட்டதனால் எதிர்பார்த்த வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் பெறாது என்ற கணிப்பீட்டைப் பொய்யாக்கி 2006 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகளைப் பெற்று திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் வெற்றியீட்டினர்.
திருச்செந்தூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. வந்தவாசியில் வன்னியர் அதிகளவில் வாழ்வதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான எதிரியான பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு அதிகம் என்ற மாயை இருந்தது.
இத்தேர்தலில் இலங்கை கடற்படையினால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதே எதிர்க்கட்சிகளின் பிரதான பிரசாரமாக இருந்தது.
ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் ஆகியோர் கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்செந்தூரில் ஸ்டாலினும், வந்தவாசியில் அழகிரியும் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்தனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பனிப் போர் ஆரம்பித்திருப்பதாக செய்திகள் கசிந்த இவ்வேளையில் இடைத்தேர்தலின் வெற்றி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மிக அத்தியாவசியமாகத் தேவைப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தனது செல்வாக்கு இன்னமும் மங்கி விட வில்லை என்பதை காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்துவதற்கும் இடைத்தேர்தலின் வெற்றி உதவி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை விரும்பாத காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஜெயலலிதாவுடன் அல்லது விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று விரும்பினர். அவர்களின் முகத்தில் கரியைப் பூசுவதற்கு இடைத்தேர்தலின் வெற்றி உதவி உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியும் அனிதா ராதாகிருஷ்ணனின் செல்வாக்கும் திருச்செந்தூர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கிக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் செல்வாக்குக்கும் இடையே யான பலப்பரீட்சையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவியுடன் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றியீட்டியுள்ளார்.
2001 ஆம் ஆண்டும் 2006 ஆம் ஆண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால் இடைத் தேர்தல் நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தை தோல்வி அடையச் செய்வதைவிட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் துரோகம் செய்த அனிதா ராதாகிருஷ்ணனை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்துடன் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்தார். நம்பி வந்த அனிதா ராதாகிருஷ்ணனை கைவிடக் கூடாது என்ற கொள்கையுடன் முத ல்வர் கருணாநிதி தேர்தல் பிரசாரத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்.
2006 ஆம் ஆண்டு தேர்தலில் அனிதா
ராதாகிருஷ்ணன் 13,861 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இப்போது 46,861 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலை விட 16,623 வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளார். இதன் மூலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்ற மாயை தேர்தல் முடிவு உடைத்தெறிந்து விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து திருச்செந்தூரை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றி உள்ளது.
வந்தவாசி இடைத் தேர்தலிலும் அதிக வாக்குகளைப் பெற்று திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. வந்தவாசி தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான ஜெயராமன் காலமானதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஜெயராமனின் மகனான கமலக்கண்ணனை திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிறுத்தியது. தந்தையைவிட அதிக வாக்குகள் பெற்று கமலக் கண்ணன் வெற்றி பெற்றார்.
இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்ற திரம்விட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்லாது, தனது தோழமைக் கட்சியான காங்கிரஸுக்கும் தனது பலத்தை நிரூபித்துள்ளது. இரு பிரதான கட்சிகளும் பணமும் அன்பளிப்புகளும் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த போதிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை தடுக்க முடியவில்லை.
விஜயகாந்தின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற கனவுடன் அரசியலில் புகுந்த விஜயகாந்த் அரசியல் வேறு சினிமா வேறு என்பதை உணர்ந்தும் உணராதவர் போல் நடந்து கொள்கிறார். கடந்த தேர்தல்களின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியைத் தகர்த்த விஜயகாந்த் தே.மு.தி.க. இம்முறை இரண்டு தொகுதிகளிலும் கட்டுப்பணத்தை இழந்துள்ளார்.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் புயலாக மாறி புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் என்ற கணிப்பீடுகள் எல்லாவற்றையும் வாக்காளர்கள் பொய்யாக்கி விட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறவைத் துண்டித்து விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் எனத் துடித்த காங்கிரஸ் தலைவர்களின் முகத்தில் திரம்விட முன்னேற்றக் கழகம் கரியைப் பூசி உள்ளது.
முதல்வரின் அரசியல் வாரிசுகளான ஸ்டாலினும் அழகிரியும், திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளின் வெற்றி நாயகர்களாக விளங்குகின்றனர். ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே பிரச்சினை அதிகாரம் மிக்கவர் யார் என்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு என்று பரவலாகத் தகவல் வெளியானாலும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தை இருவரும் நிறைவேற்றி விட்டனர். முதல்வர் கருணாநிதி சென்னையில் இருந்து கொண்டே வெற்றிக் கனியைப் பறித்து விட்டார். கருணாநிதிக்கு பின்னர் கட்சியை வழி நடத்த இரண்டு புதல்வர்களும் இருக்கிறார்கள் என்ற தெம்பு திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலை புறக்கணிக்கும்படி ராமதாஸ் விடுத்த கோரிக்கையை எவரும் கணக்கில் எடுக்கவில்லை. திருச்செந்தூரில் 17 பேரும், வந்த வாசியில் 21 பேரும் தேர்தலைப் புறக்கணிக்கும் படிவத்தை நிரப்பியுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றினால் புறந்தள் ளப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியை இர ண்டு தொகுதிகளிலும் உள்ள மக்கள் நிராகரி த்து விட்டனர்.
அடுத்து நடைபெறும் தேர்தலில் கூட்டணியில் சேர்வதற்கான பேரம் பேசும் தகுதியை ராமதாஸும் விஜயகாந்தும் இழந்துள்ளனர். பிரதான கட்சிகளின் வெற்றி வாய்ப்பைத் தடுக்கும் பலம் ராமதாஸுக்கும் விஜயகாந்துக்கும் உள்ளது என்ற மாயை அகன்று விட்டது. இவர்களை தமது கட்சியில் சேர்ப்பதை விட இவர்களது கட்சித் தொண்டர்களையும் பிரபலமானவர்களையும் தமது கட்சிக்கு இழுக்கும் வேலையை பிரதான எதிர்க்கட்சிகள் ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை வலுப்படுத்த வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கான பேரம் பேசும் வலுவை திராவிட முன்னேற்றக் கழகம் அதிகரித்துள்ளது.
வர்மா

வீரகேசரிவாரவெளியீடு 27/12/09


உலகக்கிண்ணம்2010


ஹொண்டூராஸ்
வட அமெரிக்கா, கரிபியன் தீவுகளில் இருந்து உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தெரிவான மூன்றாவது நாடு ஹொண்டூராஸ். அரசியல் மாற்றத்தினால் சோர்வடைந்திருந்த ஹொண்டூராஸ் நாட்டின் மக்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இரண்டு தடவை மட்டுமே விளையாடுவதற்கு தகுதி பெற்ற ஹொண்டூராஸ் 28 வருடங்களின் பின்னர் மூன்றாவது முறையாக உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் 10 வெற்றியையும் ஆறு தோல்விகளையும் சந்தித்த ஹொண்டூராஸ் இரண்டு போட்டிகளை சமப்படுத்தியது.
32 கோல்கள் அடித்த ஹொண்டூராஸுக்கு எதிராக 18 கோல்கள் அடிக்கப்பட்டன. 38 தடவை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஒரு தடவை எச்சரிக்கை விடப்பட்டது.
நான்காவது சுற்றில் 10 போட்டிகளில் விளையாடிய ஹொண்டூராஸ் ஐந்து வெற்றிகளையும் நான்கு தோல்விகளையும் பெற்றது. ஒரு போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. 17 கோல்கள் அடித்த ஹொண்டூராஸுக்கு எதிராக 11 கோல்கள் அடிக்கப்பட்டன.
16 புள்ளிகளைப் பெற்றது. நான்காவது சுற்றில் கடைசிப் போட்டியில் எல்சல்வடோரை 1 0 என்ற கோல்களினால் வெற்றி பெற்றது. ஹொண்டூராஸ் மக்கள் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருந்தனர்.
அமெரிக்காவும் மெக்ஸிக்கோவும் தெரிவாகி விட்டன. அமெரிக்காவுக்கும் கோஸ்ரரிக்காவுக்கும் இடையேயான போட்டியில் கோஸ்ரரிக்கா வெற்றி பெற்றால் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தை கோஸ்ரரிக்கா பெற்று விடும்.
ஹொண்டூராஸ் வெளியேறி விடும். அந்தப் போட்டியில் அமெரிக்கா வெற்றி பெறவேண்டும் என்றே ஹொண்டூராஸ் மக்கள் விரும்பினார்கள். அமெரிக்காவுக்கும் ஹொண்டூராஸுக்கும் இடையே அரசியல் பிரச்சினை இருந்தாலும் அமெரிக்காவின் வெற்றியை ஹொண்டூரஸ் மக்கள் விரும்பினார்கள்.
அமெரிக்காவுக்கும் கோஸ்ரரிக்காவுக்கும் இடையேயான போட்டி சமநிலையில் முடிவடைந்ததால் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட ஹொண்டூராஸ் தகுதி பெற்றது. ஹொண்டூராஸைப் போன்றே கோஸ்ரரிக்காவும்
10 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றது. நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்தது. ஒரு போட்டியை சமநிலையில் முடித்தது. ஹொண்டூராஸ், கோஸ்ரரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் தலா 16 புள்ளிகளைப் பெற்றன. விகிதாசார அடிப்படையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட ஹொண்டூராஸ் தகுதி பெற்றது.
டேவிட் அசோ, வில்சன் பலதியோல் ஜுலியோ லியோன், அமோடோடுவாரா ஆகியோர் ஹொண்டூராஸின் நட்சத்திர வீரர்களாவர். கார்லோஸ்பவல் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஸ்பெயின், சிலி, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுடன் "எச்' பிரிவில் ஹொண்டூராஸ் உள்ளது.
ரமணி
மெட்ரோநியூஸ்

Tuesday, December 22, 2009

உலகக்கிண்ணம்2010


மெக்ஸிக்கோ
வட அமெரிக்கா, கரிபியன் தீவுகளில் இருந்து உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்ற இரண்டாவது நாடு மெக்ஸிக்கோ. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் அணியைத் தேர்வு செய்யும் மூன்றாவது சுற்றில் 18 போட்டிகளில் விளையாடிய மெக்ஸிக்கோ 11 போட்டிகளில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளை சமநிலையில் முடித்தது. ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்தது. மெக்ஸிக்கோ 36 கோல்கள் அடித்தது. மெக்ஸிக்கோவுக்கு எதிராக 18 கோல்கள் அடிக்கப்பட்டன. மெக்ஸிக்கோவுக்கு எதிராக 32 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. மெக்ஸிக்கோவுக்கு எதிராக நான்கு சிவப்பு அட்டைகள் காட்டப்பட்டன. பெலிஸ் நாட்டுக்கு எதிரான போட்டியில் 7 0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நான்காவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்ற ஆறு நாடுகளில் மெக்ஸிக்கோவும் ஒன்று. 10 போட்டிகளில் விளையாடிய மெக்ஸிக்கோ ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமநிலையில் முடித்தது. மூன்று போட்டிகளில் மெக்ஸிக்கோ தோல்வி அடைந்தது. மெக்ஸிக்கோ 18 கோல்கள் அடித்தது. மெக்ஸிக்கோவுக்கு எதிராக 12 கோல்கள் அடிக்கப்பட்டன. 19 புள்ளிகளுடன் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட மெக்ஸிக்கோ தகுதி பெற்றது.
கியூட்ட, மெக்பிளாங்கோ அகூரி குளேரிமோர் அக்கோயா, ஏப்ரயன், யுயா ரெஸ், அன்ரஸ் குயிட்டடோ, ஜியோ வொனிடூஸ் சாந்தோஸ், நாவல் மாதிஸ்ப் ஆகியோர் மெக்ஸிக்கோவின் பிரபல்யமான வீரர்களாவர். ஜாபீர் சுக்குனியின் பயிற்சியில் மெக்ஸிக்கோ பல வெற்றிகளைப் பெற்றது.
2005ஆம் ஆண்டு பெருவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் மெக்ஸிக்கோ சம்பியனானது. அந்த அணியில் விளையாடிய ஐந்து வீரர்கள் இன்றைய மெக்ஸிக்கோஅணியில் பெரும் பலத்தைக் கூட்டியுள்ளது.
தென்ஆபிரிக்கா உருகுவே, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஏ பிரிவில் மெக்ஸிக்கோவும் இடம்பிடித்துள்ளது

Monday, December 21, 2009

தமிழகத்தை பிரிக்கும் ராமாதாஸின் கனவு நனவாகுமா






ஆந்திராவில் இருந்து புறப்பட்ட தெலுங்கானா என்ற புயல் இந்திய அரசியலை பதற வைத்துள்ளது. தெலுங்கானா கிடைக்கும்வரை சாகும்வரை உண்ணாவிரதம் என்ற அறிவிப்பு காங்கிரஸ் தலைவி சோனியாவின் மனதை உருக்கியதால் தெலுங்கானா பற்றிய பரீட்சைக் காலம் என்ற அறிவிப்பை இந்திய மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் அறிவிப்பினால் கர்நாடகா முதல் காஷ்மீர் வரை உறங்கிக் கிடந்த தனி மாநிலப் போராட்டங்கள் சுறுசுறுப்படையத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தையும் இரண்டாக்க வேண்டும் என்ற தனது பழைய அறிக்கையை தூசி தட்டி வெளிப்படுத்தினார் டாக்டர் ராமதாஸ். ""தமிழகத்தின் வட பகுதி முன்னேற்றமடைந்துள்ளது. தென் பகுதி இன்னமும் வளர்ச்சி பெறவில்லை. தமிழக அரசின் செயற்திட்டங்கள் தென்பகுதிக்கு முறையாகக் கிடைக்கவில்லை. ஆகையினால் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு வட தமிழகத்தையும், மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு தென் தமிழகத்தையும் உருவாக்க வேண்டும்'' என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கி தமிழகத்தின் தென்பகுதியில் மிக அதிகளவில் இருப்பதனால் தமிழகத்தை இரண்டாக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் முனைப்புக் காட்டுகிறார். மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு தென் தமிழகத்தை உருவாக்கினால் பாட்டாளி மக்கள் கட்சி ஆளும் கட்சியாகலாம் அல்லது கூட்டணிக் கட்சிகளுக்கு தலைமை வகிக்கலாம் என்ற நம்பிக்கை டாக்டர் ராமதாஸிடம் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைமையில் எத்தனை காலத்துக்கு அரசியல் நடத்துவது. பாட்டாளி மக்கள் கட்சியின் தயவில் ஏனைய கட்சிகள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தைப் பிரிக்கும் யோசனையை முன்வைத்துள்ளார்.
டாக்டர் ராமதாஸின் வேண்டுகோளை தமிழக முதல்வர் கருணாநிதியும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவும் ஒருமித்த குரலில் எதிர்த்துள்ளார்கள். தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்ற இவர்களின் குரலால் டாக்டர் ராமதாஸ் குரல் சற்று அடங்கி விட்டது. டாக்டர் ராமதாஸுக்கு ஆதரவாக தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை.
தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு ஒருவரும் விரும்பவில்லை. ஆகையினால் டாக்டர் ராமதாஸின் கனவு பலிக்காத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருப்பதால் ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின், அழகிரி ஆகியோர் முனைப்புடன் பிரசாரம் செய்து வருகின்றனர். இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கருத்துக் கூறிய டாக்டர் ராமதாஸ் எதிர்பார்க்காத வகையில் கட்சிக்குள் இருந்து சலசலப்பு எழுந்துள்ளது.
இதேவேளை, திருச்செந்தூர் வந்தவாசி ஆகிய தொகுதிகளில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கின்றனர். கட்சி நிறுவுனரின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்காமல், பாட்டாளி மக்கள் கட்சியின் சில தலைவர்களும் தொண்டர்களும் தேர்தல் பிரசாரம் செய்வது கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதோ என்ற ஐயப்பாட்டை உருவாக்கியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைமைப் பீடத்தின் ஆசியுடன் தான் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அக்கட்சியினர் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பலமான வாக்கு வங்கியை உடைய ஒரு கட்சியாக ஒரு காலத்தில் கருதப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி இன்று தனி மரமாக நிற்கிறது.
பலமான கட்சியுடன் கூட்டு சேர்ந்தால்தான் அக்கட்சி வளர்ச்சி அடையும். இல்லையேல் ஒரு கட்சியின் வெற்றி விகிதாசாரத்தைக் குறைத்த பெருமை மட்டும் தான் கிடைக்கும். வெற்றி என்பது எட்டாக்கனி என்பதை டாக்டர் ராமதாஸ் நன்றாக உணர்ந்துள்ளார். ஆகையினால் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டு சேர வேண்டிய நிர்ப்பந்தம் டாக்டர் ராமதாஸுக்கு உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அண்மையில் தாம் வெளியேறியதால் மீண்டும் அக்கட்சியுடன் இணைவதற்குரிய சாத்தியக் கூறு இல்லை. இந்தியத் தேசியக் கட்சிகளில் ஒன்றான பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் முடங்கிப் போயுள்ளது. பலமில்லாத பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைவதற்கு டாக்டர் ராமதாஸ் ஒருபோதும் விரும்ப மாட்டார்.
காங்கிரஸுடன் இணைவதற்கு டாக்டர் ராமதாஸ் பகீரதப் பிரயத்தனம் செய்தார். முதல்வர் கருணாநிதிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள சோனியா தயாராக இல்லாததனால் டாக்டர் ராமதாஸின் முயற்சிகள் பலிக்கவில்லை. கருணாநிதியின் ஆசீர்வாதத்துடன் காங்கிரஸில் சேரும் திட்டம் டாக்டர் ராமதாஸிடம் உள்ளது.
நொந்து போயிருக்கும் டாக்டர் ராமதாஸுக்கு அவருடைய "அன்புச் சகோதரியான ' ஜெயலலிதா புதியதொரு தலையிடியை உருவாக்கி உள்ளார். புதுக்கோட்டையிலுள்ள பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் தொண்டர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்துள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 4000 உறுப்பினர்கள் ஒரே நாளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்ததாக வெளியான பத்திரிகைக் குறிப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.
இடைத் தேர்தல் சமயத்தில் நடைபெற்ற கட்சி மாற்றம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது போல் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் அதிகளவில் கட்சி மாறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத் தேர்தலில் வாக்குகளைக் கவர்வதற்காகவும் ஜெயலலிதாவிடமிருந்து நல்ல பெயரைப் பெறுவதற்கு திட்டமிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சிலர் நடத்திய மோசடி நாடகம் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது உண்மை. ஆனால் அக்கட்சி அறிவித்தது போல் 4000 பேர் இணையவில்லை.
இதேவேளை, திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையிலான கௌரவப் போட்டியை உருவாக்கி உள்ளது.
திருச்செந்தூரில் ஸ்டாலினின் தலைமையிலும் வந்தவாசியில் அழகிரியின் தலைமையிலும் தேர்தல் பிரசாரம் நடைபெறுகிறது. திருச்செந்தூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை வந்தவாசி பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை. அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் தொகுதி எது என்ற போட்டி ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் அசைக்க முடியாத இடத்தில் ஸ்டாலினின் செயற்பாடுகள் உள்ளன. அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என்பது உறுதியாகி விட்டது. கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தில் இருக்கிறார்.
கருணாநிதி ஓய்வு பெற்றதும் ஸ்டாலின் முதல்வராகி விடுவார். ஸ்டாலினுக்கு இணையான ஒரு பதவியை தமிழகத்தில் பெறுவதற்கு அழகிரி முயற்சி செய்கிறார். ஆகையினால் திருச்செந்தூரைவிட அதிக பெரும்பான்மையுடன் வந்தவாசியில் வெற்றி பெற வேண்டும் என்று அழகிரி சபதமெடுத்துள்ளார்.
அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான போட்டி ஆரோக்கியமானதாக இருந்தால் இருவருக்கும் நல்லது.
வர்மா

உலகக்கிண்ணம்2010



அமெரிக்கா
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபியன் தீவுகளில் இருந்து 35 நாடுகள் போட்டியிட்டன. அமெரிக்கா, பர்படாஸ், கௌதமாலா, கியூபா, ரினிடாட் அன்ட்டுபாக்கோ, எல்சல்வடோர், கொஸ்ரிக்கா, மெக்ஸிக்கோ ஹொண்டூராஸ் ஆகிய ஒன்பது நாடுகள் மூன்றாவது சுற்றுக்கு தெரிவாகின. 13 வெற்றியுடனும் இரண்டு தோல்விகளுடனும் மூன்று போட்டியை சமப்படுத்தியதுடனும் நான்காவது சுற்றுக்கு அமெரிக்கா தெரிவானது. பர்படாஸுக்கு எதிராக எட்டு கோல்களும், கியூபாவுக்கு எதிராக ஆறு கோல்களும் அடித்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
மூன்றாவது சுற்றில் அமெரிக்கா 42 கோல்கள் அடித்தது. அமெரிக்காவுக்கு எதிராக 16 கோல்கள் அடிக்கப்பட்டன. 24 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. ஒருமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமெரிக்கா, மெக்ஸிகோ, ஹொன்டூராஸ், கோஸ்ரிக்கா, எல்சல்வடோர், ரினிடாட் அன்ட் டுபாக்கோ ஆகிய ஆறு நாடுகள் நான்காவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன. அமெரிக்கா 19 புள்ளிகளுடனும் மெக்
ஸிகோ 16 புள்ளிகளுடனும் உலகக் கிண்ண போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. ஹொண்டூராஸ், கோஸ்ரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் தலா 16 புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் ஹொண்டூராஸ் உலகக் கிண்ண போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
அமெரிக்கா, மெக்ஸிக்கோ, ஹொண்டூராஸ், கோஸ்ரிக்கா, எல்சல்வடோர், ரினிடாட் அன்ட் டுபாக்கோ ஆகிய ஆறு நாடுகள் நான்காவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.
நான்காவது சுற்றில் ஆறு வெற்றிகளைப் பெற்ற அமெரிக்கா இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தியது. அமெரிக்கா 19 கோல்கள் அடித்தது. அமெரிக்காவுக்கு எதிராக 13 கோல்கள் அடிக்கப்பட்டன.
டொனோவான் அமெரிக்க உதைபந்தாட்ட அணித் தலைவராக உள்ளார். ஒடுசி ஒன்யோ மைக்கல் பிரட்வே, யோகி அல்டி டோரி, டிம் ஹோவாட், கிளின்ட் டெம்சே ஆகியோர் அமெரிக்க உதைபந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர்களாவர்.
தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பொப் பிரட்வே நிரந்தரப் பயிற்சியாளராகக் கடமையாற்றுகிறார்.
ரமணி
மெட்ரோநியூஸ்

Saturday, December 19, 2009

நைஜீரியா


ஜேர்மனியில் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை நூலிடையில் தவற விட்ட நைஜீரியா 2010ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் நடைபெற வுள்ள உலகக் கிண்ண சுற்றுப் போட்டியின் தகுதிகாண் போட்டிகளில் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக ஆபிரிக்கக் கண்டத்தில் 43 நாடுகளிடையே நடைபெற்ற போட்டியில் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவான நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. பீ பிரிவில் மொஸாம்பிக், துனுஷியா ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற போட்டியில் சமநிலையில் முடிந்ததனால் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. துனுஷியா, மொஸாம்பிக்கிடம் தோல்வியடைந்ததனால் நைஜீரியாவின் வாய்ப்பு அதிகமாகியது.
கென்யா, நைஜீரியா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெறும் நாடு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெறும் என்ற பரபரப்பான சூழ்நிலையில் இரு நாடுகளும் மோதின. மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்ற போட்டியில் 2 2 என்ற கோல்களுடன் இரு அணிகளும் விளையாடின. போட்டி முடிவதற்கு எட்டு நிமிடம் இருக்கையில் நைஜீரியா அடித்த கோல் வெற்றியைத் தேடித் தந்தது.
ஜோசப் யோபோ நைஜீரிய உதைபந்தாட்ட அணியின் தலைவராக உள்ளார். மாட்டின்ஸ், யாகுபு ஜானச் பீனி, பீற்றர் ஒடெம், விங்கி ஆகிய அனுபவம் மிக்க வீரர்கள் நைஜீரியா உதைபந்தாட்ட அணியில் உள்ளனர். ஜோன் ஒபெக் மிக்கெல் மீது நைஜீரிய ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஒண்பது வெற்றிகளைப் பெற்றுள்ளது. மூன்று போட்டிகள் சமநிலையில் முடிந்தன. நைஜீரியா 20 கோல்களை அடித்துள்ளது. நைஜீரியாவுக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன. 14 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.
17 வயதுக்குட்பட்ட நைஜீரிய உதைபந்தாட்ட அணி 1985, 1993, 2001ஆம் ஆண்டுகளின் சம்பியனானது. 1996ஆம் ஆண்டு ஒலிம்பிக் சம்பியனாகியது. நைஜீரியா (தென்ஆபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியில் பி பிரிவில் ஆர்ஜென்ரீனா, கொரியா, கிரீஸ் ஆகிய நாடுகளுடன் நைஜீரியா போட்டியிடுகிறது.
ரமணி
மெட்ரோநியூஸ்

Wednesday, December 16, 2009

உலகக்கிண்ணம்2010


கமரூன்
தென்னாபிரிக்காவில் 2010 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து தெரிவான நாடு கமரூன். மொராக்கோவுடனான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட கமரூன் தகுதி பெற்றது. 1990 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் எதிரணிகளை அச்சுறுத்தி கால் இறுதிவரை முன்னேறியது.
எகிப்துடனான போட்டியில் பெனால்டியில் தோல்வி அடைந்ததனால் 1996 ஆம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தது.
12 போட்டிகளில் விளையாடிய கமரூன் ஒன்பது வெற்றிகளைப் பெற்றது. இரண்டு போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்தன. ஒரு போட்டியில் கமரூன் தோல்வி அடைந்தது. கமரூன் 23 கோல்கள் அடித்தது. கமரூனுக்கு எதிராக நான்கு கோல்கள் அடிக்கப்பட்டன. கமரூனுக்கு எதிராக 17 மஞ்சள் அட்டைகளும் ஒரு சிவப்பு அட்டையும் காண்பிக்கப்பட்டது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு நடைபெற்ற மூன்றாவது சுற்றில் ஏ பிரிவில் டோகோ மொராக்கோ கோபன் ஆகிய நாடுகளுடன் விளையாடியது கமரூன். ஆறு போட்டிகளில் விளையம்டிய கமரூன் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியை சமநிலையில் முடித்தது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது.
சாமுவேல் இடோ, ஜொமி நி ஜிதாப், றிகோபேட் சோவ், பியோரிலிபோ, ஜூன் மதவுன், இறிங்கோகோ ஸ்டீபனி, அலெக்ஸாண்டர் சோங் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சாமுவல் இடோ ஒன்பது கோல்கள் அடித்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போலவிடுயன் கமரூன் அணிக்கு பயிற்சியாளராக உள்ளம்ர்.

Monday, December 14, 2009

ஸ்டாலினுக்கு முடிசூட்டுவதற்குதயாராகியுள்ள கருணாநிதி


கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டிய வயதையும் தாண்டி சுறுசுறுப்பாக அரசியல் பணியை நடத்தி வருகிறார் முதல்வர் கருணாநிதி.
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால் தான் அவரது மகன் மு. க. ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவார். தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலினை நியமிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் களையப்பட்டு விட்டன. வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஸ்டாலினை எதிர்த்தவர்களின் வாய் அடைக்கப்பட்டு விட்டது. தமிழகத்தின் முதல்வராவதற்கான சகல தகுதிகளும் தனக்கு இருப்பதாக ஸ்டாலின் நிரூபித்துள்ளார். கருணாநிதி வைத்த சகல பரீட்சைகளிலும் ஸ்டாலின் சித்தியடைந்து விட்டார்.
மாணவர் அணி, அணித் தலைவர் பதவி, தமிழக சட்டமன்ற உறுப்பினர், சென்னை மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், கட்சியின் பொருளாளர் ஆகிய பதவிகளில் தனது திறமையை நிரூபித்த ஸ்டாலின், தமிழகத்தின் துணை முதல்வராகி, அப்பதவியிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்தான் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. ஸ்டாலினுக்கு எதிராக கட்சிக்குள் இருந்த சகல எதிர்ப்புகளும் நீக்கப்பட்டு நிம்மதியாக இருந்த வேளையில் அழகிரியின் அரசியல் பிரவேசம் ஸ்டாலினுக்கு அச்சுறுத்தலை விடுத்தது. மாநில அரசுக்கு ஸ்டாலின், மத்திய அரசுக்கு அழகிரி என்ற சூத்திரத்தின் மூலம் பிரச்சினை தீர்க்கப்பட்டது.
இந்திய மத்திய அமைச்சர் பதவி அழகிரி எதிர்பார்த்த சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது திணறும் அழகிரி, தமிழக அரசியலில் கால்பதிக்கத் துடிக்கிறார். தம்பி ஸ்டாலினின் கீழ் அண்ணன் அழகிரி பணி புரிய மாட்டார் என்பதனால் அதிகாரம் உள்ள பதவி ஒன்று அழகிரிக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஸ்டாலின் முதல்வரானால் துணை முதல்வர் பதவியின் நிலை என்ன என்ற கேள்விக்கு உடனடியாக விடை தெரியவில்லை. ஸ்டாலினின் கீழ் துணை முதல்வராவதை அழகிரி விரும்ப மாட்டார். அழகிரியை முதல்வராக்கினால் எதிர்க்கட்சிகளின் தாக்குதல் மிக மோசமானதாக இருக்கும் என்பதும் கருணாநிதிக்குத் தெரியும். ஆகையினால் அழகிரி துணை முதல்வராகும் சந்தர்ப்பம் இல்லை.
அழகிரியைத் தவிர வேறு ஒருவர் துணை முதல்வரானால் அது அழகிரியை அவமானப்படுத்துவது போல் ஆகி விடும். வேலைப்பளு அதிகமானதாலும் கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டது. உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் ஸ்டாலின் சேவை செய்யும் வேளையில் துணை முதல்வரை நியமித்து ஸ்டாலினுக்கு இணையாக இன்னொருவர் உருவாகுவதை கருணாநிதி விரும்ப மாட்டார். ஆகையினால் ஸ்டாலின் முதல்வரானதும் துணை முதல்வர் பதவி இல்லாமல் போவதற்குரிய சந்தர்ப்பம் மிக அதிகமாக உள்ளது.
அழகிரியின் அரசியல் பிரவேசத்தின் பின்னர் தமிழகத்தின் தென் மண்டலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. தென் மாவட்டத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைகள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வசமாகின. அழகிரியின் அணுகுமுறையும், திட்டமிடலும் தமிழக இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பெரு வெற்றியைப் பெற்றுத் தந்தன.
ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய இருவரையும் சமாளிக்கக் கூடிய வல்லமை அழகிரிக்கு இருப்பதனால் கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவி ஒன்று அழகிரிக்கு வழங்கப்படலாம். தமிழகத்தில் கட்சியை வளர்க்கும் பாரிய பொறுப்பு அழகிரியிடம் ஒப்படைக்கப்பட்டால் வேலைப் பளுவை காரணம் காட்டி மத்திய அமைச்சுப் பதவியிலிருந்து அழகிரி விலகிவிடுவார். கனிமொழி அமைச்சராவார் என்ற கருத்தும் உள்ளது.ஓய்வு ஒழிச்சல் இல்லாது அரசியல், இலக்கியம் என்ற இரட்டைக் குதிரையில் வெற்றிகரமாகப் பயணம் செய்ய கருணாநிதி, ஓய்வைப் பற்றி அறிவித்தமை அவரின் மனதில் உள்ள காயத்தின் வெளிப்பாடே என்ற கருத்தும் உள்ளது. தமிழக அமைச்சர்கள் சிலர் முறைகேடாக தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துகள் வாங்கியது கருணாநிதியை வெகுவாகப் பாதித்துள்ளது. முறைகேடாக வாங்கிய சொத்துகளை மீள ஒப்படைக்கும்படி கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
முதியவர்கள் ஒதுங்கி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பது கருணாநிதியின் விருப்பம். தான் மட்டும் பதவியில் ஒட்டிக் கொண்டு மற்றையவர்களை ஒதுங்கும்படி கட்டளையிடுவது நியாயமாகுமா என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் கருணாநிதி உள்ளார். ஸ்டாலினுக்கு பதவி உயர்வு, இளைஞர்களுக்கு கருணாநிதி வழி விடுகிறார் என்ற இரண்டு காரியங்கள் நடைபெற வேண்டுமானால் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். அரசியலில் இருந்து கருணாநிதி ஓய்வு பெற்றால் அவரது இலக்கியப் பணி அதிகரிக்கும்.
கும்பிடிப்பூண்டி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான அனிதா ராதாகிருஷ்ணனை வீழ்த்த வேண்டும் என்ற கங்கணத்துடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் பணியை சுறுசுறுப்பாக்கியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவிய அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உறுதிபூண்டுள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நம்பிக்கையுடன் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணனை கைதூக்கி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் காரிய மாற்றுகிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைகள் அனைத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான திருச்செந்தூரையும் கைப்பற்ற வேண்டும் என்ற வெறியுடன் திராவிட முன்னேற்றக் கழகம் களமிறங்கியுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பணியாற்றியதைப் போன்றே பணியாற்றி திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சிந்தித்து செயல்படுகிறது.
கடந்த இடைத்தேர்தல்களில் பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றதைப்போல் இம்முறையும் வெற்றி பெற திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி செய்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டை திராவிட முன்னேற்றக் கழகம் மறுத்துள்ளது.

அதேவேளை, அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக முதல்வர் கருணாநிதி விடுத்த அறிக்கையின் பின்னால் அவர் மனம் புண்படும்படியான காரியங்கள் நடைபெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. முதல்வரின் தலைமையில் நடைபெறும் கடைசித் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் கருதப்படுவதனால் வெற்றி பெறவேண்டும் என்ற உத்வேகம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்னர் நடைபெற்ற சகல இடைத்தேர்தல்களிலும் தோல்வியடைந்த அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி உள்ளது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 13/12/09

Sunday, December 13, 2009

உலகக்கிண்ணம்2010


கானா
தென் ஆபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு முதன் முதலில் தகுதி பெற்ற நாடு கானா. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் கானாவும் ஒன்று.
உலகக் கிண்ண தகுதி காண் போட்டியின் முதல் சுற்றில் 12 போட்டிகளில் விளையாடிய கானா எட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றது.
ஒரு போட்டியை வெற்றி தோல்வி இன்றி முடித்தது. மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது. முதல் சுற்றில் 20 கோல்கள் அடித்தது. கானாவுக்கு எதிராக எட்டு கோல்கள் அடிக்கப்பட்டன. கானாவுக்கு எதிராக 17 மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டன.
இரண்டாவது சுற்றில் டி பிரிவில் பெனின் மாலி, சூடான் ஆகிய நாடுகளுடன் கானாவும் இடம்பிடித்தது. இரண்டாவது சுற்றில் ஆறு போட்டிகளில் விளையாடிய கானா நான்கு வெற்றிகளைப் பெற்றது. ஒரு போட்டியை வெற்றி தோல்வி இன்றி முடித்தது. ஒருபோட்டியில் தோல்வி அடைந்தது. 19 கோல்கள் அடித்தது கானாவுக்கு எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன. 13 புள்ளிகளுடன் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. 17 மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.
அணித்தலைவர் ஸ்டீபன் அப்பையா மீதும் கோல் கீப்பர் ரிச்சர்ட் கிங்சன் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சுலே முன்டாரி அசானா மொயாகயன் யூனியர்சுகாகோ மத்தியூ அமோயா ஜோன் மென்ஷா, ஜொன் பொயின் சில் ஆகியோர் கானாவின் நட்சத்திர வீரர்களாவர்.
ஆபிரிக்க கிண்ணத்தை கானா நான்கு தடவை கைப்பற்றியது. 17 வயதுக்குட்பட்ட கானா உதைபந்தாட்ட அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
1996 ஆம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஈ பிரிவில் இத்தாலி, கானா, செக் குடியரசு, அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பிடித்தன. இத்தாலியுடனான போட்டியில் 2 0 என்ற தோல் கணக்கில் தோல்வி அடைந்த கானா செக் குடியரசு, அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான போட்டியில் தலா 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது.
இரண்டாவது சுற்றில் பலம் வாய்ந்த பிரேசிலுடன் மோதி 3 0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
2010 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் டி பிரிவில் ஜேர்மனி, அவுஸ்திரேலியா, கானா சேர்பிய ஆகிய நாடுகள் உள்ளன.
1996 ஆம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் சேர்பியாவுக்கு எதிரான போட்டியில் கானா வீரரான அசாமோயா கயன் 68 செக்கனில் கோல் அடித்தது உலகக் கிண்ணப் போட்டியில் குறுகிய நேரத்தில் அடித்த கோல் எனப் பதியப்பட்டுள்ளது.
ரமணி
மெட்ரோநியூஸ்

Thursday, December 10, 2009

26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது இலங்கை


இலங்கை இந்திய அணிகளுக்கிடையே நாக்பூரில் நடைபெற்ற முதலாவது டுவென்டி 20 போட்டியில் இலங்கை 29 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத் தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 215 ஓட்டங்கள் எடுத்தது.
வயிற்றுக் கோளாறு காரணமாக ஸ்ரீசாந்த் விளையாடம்ததால் அவருக்குப் பதிலாக அசோக் திண்டா சேர்க்கப்பட்டார். அசோக் திண்டாவுக்கு இது தான் முதலாவது சர்வதேசப் போட்டியாகும்.
டில்ஷானும் ஜயசூரியவும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களம் புகுந்தனர். இந்திய வீரர்களின் பந்து வீச்சு ஆக்ரோசமாக இருந்ததனால் இலங்கை வீரர்கள் முதலில் தடுமாறினார்கள். நான்கு ஓவர்களில் இலங்கை 17 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. அதன் பின்னர் இலங்கை வீரர்களின் அதிரடியை இந்திய வீரர்களினால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஜயசூரிய நான்கு ஒட்டங்கள் எடுத்திருந்தபோது கவர் பொயிண்ட் திசையில் நின்ற யுவராஜ் மிக எளிதான பிடியைத் தவற விட்டார். கண்டத்தில் இருந்து தப்பிய ஜயசூரிய தனது வழக்கமான அதிரடியை ஆம்பித்தார். நெஹ்ராவின் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஐந்து பௌண்டரிகள் அடித்தார்.
அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த ஜயசூரிய, டில்ஷான் ஜோடியை இஷாந்த் பிரித்தார். 20 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்த ஜயசூரிய இஷாந்தின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
13 ஓட்டங்கள் எடுத்தபோது டில்ஷானை ஆட்டமிழக்க கிடைத்த வாய்ப்பை இஷாந்த் சர்மா தவறவிட்டார். இஷாந்த் வீசிய பந்தை டில்ஷான் அடித்தபோது அதனை பிடிக்க இஷாந்த் மூன்று முறை முயற்சித்துப் பிடி நழுவியதால் டில்ஷான் ஆட்டமிழக்காது தப்பினார்.
ஜயசூரிய ஆட்டமிழந்ததும் அணித் தலைவர் சங்கக்கார, டில்ஷானுடன் இணைந்து வாண வேடிக்கை காட்டினார். சங்கக்காரவின் அதிரடி ஆட்டம் விளையாட்டின் போக்கை மாற்றியது. 40 பந்துகளில் 50 ஓட்டங்களைக் கடந்த இலங்கை 28 பந்துகளில் அடுத்த 50 ஓட்டங்களை எட்டியது. சந்தித்த பந்துகளை பௌண்டரி எல்லைவரை விரட்டிய சங்கக்கார 21 பந்துகளில் 20 ஓவர் போட்டியின் நான்காவது அரைச் சதமடித்தார். டில்ஷான், சங்கக்கார ஜோடி 74 ஓட்டங்கள் எடுத்தது. 33 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்த டில்ஷான் ரோஹித் சர்மாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மஹேல யூசுப் பதானின் பந்து வீச்சில் ஒன்பது ஓட்டங்களுடன் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கபுகெதரவும் அதிரடியில் மிரட்டினார். கபுகெதர 13 ஓட்டங்கள் எடுத்தபோது பந்து வீசிய ரோஹித் சர்மா பிடியைத் தவறவிட்டார். கபுகெதர 23 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது சுலபமான ரன் அவுட்டை இஷாந்த் சர்மா தவறவிட்டார். 20 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்த கபுகெதர நெஹ்ராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
19 ஆவது ஒவரில் இலங்கை அணி 200 ஓட்டங்களைக் கடந்தது. 19 ஆவது ஓவரை நெஹ்ரா வீசினார். முதல் நான்கு பந்துகளையும் பௌண்டரிக்கு விரட்டினார் கபுகெதர. ஐந்தாவது பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். ஆறாவது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மத்தியூஸ் நான்கு பந்துகளில் இரண்டு சிக்சர் உட்பட 15 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஆவது ஓவரில் கடைசிப் பந்தில் சங்கக்கார ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 37 பந்துகளைச் சந்தித்த சங்கக்கார இரண்டு சிக்சர் 11 பௌண்டரி அடங்கலாக 78 ஓட்டங்கள் எடுத்தார்.
20 ஆவது ஓவரில் சங்கக்காரவின் இலகுவான பிடியை இஷாந்த் சர்மாவும் மத்தியூஸின் கடினமான பிடியை ஓஜாவும் தவற விட்டன.
இலங்கை அணி 20 ஆவது ஓவரில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 215 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் விட்ட தவறுகளினால் இலங்கை அணி பிரமாண்டமான இலக்கை அடைந்தது. 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி அடித்த ஐந்தாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இந்திய அணிக்கு எதிராக ஒரு அணி அடித்த அதிக பட்ச எண்ணிக்கையும் இதுவாகும்.
216 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை எடுத்தது. ஒரு ஓவருக்கு 10.76 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சவாலுக்கு பதிலளிக்கும் விதமாக துடுப்பெடுத்தாடினர்.
கம்பீரும் ஷேவாக்கும் வழமையான அதிரடியுடன் ஆட்டத்தை ஆரம்பித்தனர். 2.5 ஓவரில் இந்திய அணி 32 ஓட்டங்கள் எடுத்தபோது முதலாவது விக்கட்டை இழந்தது. குலசேகரவின் பந்தை மத்தியூஸிடம் பிடிகொடுத்த ஷேவாக் ஆட்டமிழந்தார். 14 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஷேவாக் ஒரு சிக்ஸர் 3 பௌண்டரிகள் அடங்கலாக 26 ஓட்டங்கள் எடுத்தார்.
டோனி 9, யுவராஜ் சிங் 6, ரோஹித் சர்மா மூன்று ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
கம்பீர் அதிரடி காட்டியபோது இந்தியாவின் ஓட்ட வீதம் ஒரு ஓவருக்கு 11 ஓட்டங்களுக்கு மேல் சென்றது. யூசுப் பதான் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். 13 பந்துகளைச் சந்தித்த ரெய்னா 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் நம்பிக்கை தகர்ந்தது.
டின்டா 19, நெஹ்ரா 22, ஓஜா 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்த இந்திய அணி 186 ஓட்டங்கள் எடுத்து 29 ஓட்டங்களினால் தோல்வி அடைந்தது. 20 ஓவர் போட்டியில் இந்திய அணி சந்தித்த தொடர்ச்சியான நான்காவது தோல்வி இது. இலங்கை அணித் தலைவர் சங்கக்கார ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
இலங்கை அணி 6.4 ஓவர்களில் 50 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி 4.3 ஓவர்களில் 50 ஓட்டங்களைக் கடந்தது. இலங்கை 11.2 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்ட இந்திய அணி 9.3 ஓவர்களில் 100 ஓட்டங்களைக் கடந்தது.

உலகக்கிண்ணம்2010

ஐவரிகோஸ்ட்
தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலக உதைபந்தாட்டப் போட்டியில் ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து தெரிவான அணிகளில் மிகவும் பலம் வாய்ந்தது ஐவரிகோஸ்ட். நட்சத்திர வீரர்கள் இல்லாத ஐவரிகோஸ்ட் எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆபிரிக்க கண்டத்தில் இருந்து ஈ பிரிவில் விளையாடிய ஐவரிகோஸ்ட் ஆறு போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியை சம
நிலையில் முடித்தது. 19 கோல்களை அடித்துள்ளது. ஐவரி கோஸ்ட்டுக்கு எதிராக நான்கு கோல்கள் அடிக்கப்பட்டன. 16 புள்ளிகளுடன் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்துக்கு விளையாடத் தகுதி பெற்றது. புக்கினாஸோ, மாலாவி ஆகிய நாடுகள் ஈ பிரிவில் ஐவரிகோஸ்ட்டுடன் உலகக் கிண்ணத் தகுதிகான் போட்டியில் விளையாடின.
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் முதல் சுற்றில் 12 போட்டிகளில் விளையாடிய ஐவரிகோஸ்ட் எட்டு வெற்றிகளைப் பெற்றது. நான்கு போட்டிகளை சமநிலையில் முடித்தது. ஐவரிகோஸ்ட் 29 கோல்களை அடித்தது. ஐவரிகோஸ்டுக்கு எதிராக ஆறு கோல்கள் அடிக்கப்பட்டன. ஐவரிகோஸ்ட்டுக்கு 16 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. மாலாவி, புக்கினாஸோ ஆகிய நாடுகளை தலா 50 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
டிடியர் ட்றொக்பா, சொலமன், காலோயு, கோலோடோரி, அருணா டின்டோன் இமானுவல் இபோயு ஆகிய வீரர்களின் மீது ஐவரிகோஸ்ட் நாட்டு ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பொஸ்னியாவைத் தாயகமாகக் கொண்ட வாகிட்சலீல் ஹோட்சிக் இவோனி ஐவரிகோஸ்ட் உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக உள்ளார். ஐந்து போட்டிகளில் விளையாடி ஆறு கோல்கள் அடித்த லெஸ் எலிபன் எதிரணிக்கு அதிர்ச்சி அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆபிரிக்க கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாடிய ஐவரிகோஸ்ட் இரண்டாவது இடத்தைப் பெற்றது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆபிரிக்கா கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் காலிறுதிவரை முன்னேறியது. 2008 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் விளையாட கானா தகுதி பெற்றது.
1996 ஆம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் சி பிரிவில் ஆர்ஜென்ரீனா, நெதர்லாந்து, சேர்பியா ஆகிய நாடுகளுடன் விளையாடி முதல் சுற்றுடன் வெளியேறியது. ஆர்ஜென்ரீனாவுடனும் நெதர்லாந்துடனும் தலா 2 1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த ஐவரிகோஸ்ட் சேர்பியாவுடனான போட்டியில் 3 2 என்ற கோல் கணக்கல் வெற்றி பெற்றது.
2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜி பிரிவில் பிரேசில், வட கொரியா, ஐவரி கோஸ்ட், போர்த்துக்கல் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நான்கு நாட்டு உதைபந்தாட்ட அணிகளும் மிகப் பலம் வாய்ந்தன.
ரமணி
மெட்ரோநியூஸ்

Sunday, December 6, 2009

அ.தி.மு.க.விடம் சரணடைந்த இடதுசாரிகள்கூட்டணியின்றி தனிமரமான பா.ஜ.க.




திருச்செந்தூர் வந்தவாசி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரிந்த கட்சிகளை மீண்டும் இணைத்துள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்கு வங்கிகளை உடைய கட்சிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன வெளியேறின.
நாடாளுமன்றத் தேர்தலின் தோல்வியின் பின்னர் பிரிந்து போன இடதுசாரிகள் இடைத் தேர்தலுக்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக களமிறங்குகின்றன. நாடாளுமன்ற இடைத் தேர்தலில் மண்ணைக் கௌவிய பின்னர் கூட்டணித் தலைவர்களை ஜெயலலிதா கணக்கில் எடுக்கவில்லை. தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தில் உள்ள இந்தியா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
ஐந்து தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பகிஷ்கரித்ததனால் இடதுசாரிக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தன. திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவதனால் கம்யூனிஸ்ட் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவதால் அக்கட்சியின் வெற்றிக்காக பாடுபடப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தோழமைக் கட்சித் தலைவர்களால் புறக்கணித்த ஜெயலலிதாவைத் தேடிச் சென்று தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தமது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் காங்கிரஸ்கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கத் துணிந்து விட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்ப்பதற்காக தம்மை வெறுத்து ஒதுக்கிய ஜெயலலிதாவின் வெற்றிக்காக பிரசாரம் செய்கின்றன.
ஜெயலலிதா எதிர்பார்க்காத நேரத்தில் தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்களான தா. பாண்டியன், ஆர். நல்லகண்ணு, ஏ.எம். கோபு, சி. மகேந்திரன் ஆகியோர் ஜெயலலிதாவைச் சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்தனர். இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் தமது முடிவை ஒரே நேரத்தில் தெரிவிப்பது வழமை. ஆனால், இம்முறை கம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவுக்கு தனது ஆதரவை முதலில் வெளிப்படுத்தியது. கொம்யூனிஸ்ட் கட்சி தனது முடிவை பகிரங்கமாக அறிவித்ததனால் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவுக்கு ஒப்புதலளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி தள்ளப்பட்டது.
திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மார்க்சிஸ்ட் கட்சி விரும்பியது. கம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்ததனால் தமது செல்வாக்கு குறைந்து விடும் என்று அச்சமடைந்த மார்க்சிஸ்ட் கட்சி வேறு வழியின்றி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காகப் பிரசாரம் செய்யும் மார்க்சிஸ்ட் கட்சி ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் ஏறி பிரசாரம் செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தடுப்பதற்கான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக இடதுசாரிகள் களமிறங்கியுள்ளன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளின் செயற்பாட்டையும் இடதுசாரிகள் விமர்சிக்கின்றனர். இரண்டு எதிரிகளில் சிறந்த எதிரி யார் என்பதை இடதுசாரிகள் தெரிவு செய்துள்ளன. சகல அதிகாரங்களுடனும் ஆட்சி செய்யும் தமிழக முதல்வர் கருணாநிதியை வீழ்த்துவதற்காக தனது ஆட்சிக் காலத்தில் சர்வ அதிகாரத்தையும் பிரயோகித்த ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அன்புச் சகோதரியுடன் கைகோர்த்து மேடையில் தோன்றிய டாக்டர் ராமதாஸ் அன்புச் சகோதரியின் செயற்பாடு பிடிக்காமல் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டார். தனி மரமாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கை வெளிப்படுத்த வேண்டும் என்று தலைவர்களும் தொண்டர்களும் விரும்பினார்கள். வந்தவாசியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. வந்தவாசியில் போட்டியிட்டு தமது செல்வாக்கை வெளிப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் விரும்பினார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி வந்தவாசியில் போட்டியிட்டால் அங்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கும் வேட்பாளரின் மேலதிக வாக்குகளின் தொகை கணிசமாக குறைந்து விடும். கூட்டணி இல்லாது தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை டாக்டர் ராமதாஸ் மிக நன்றாகப் புரிந்து கொண்டுள் ளார். பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற மாயையும் உடைந்து விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேரும் எண்ணத்தில் உள்ளது. வந்தவாசி தொகுதியில் போட்டியிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சீண்டுவதற்கு டாக்டர் ராமதாஸ் விரும்பவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இருந்தாலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையே நடைபெறும் பனிப் போர் அம்பலத்துக்கு வந்துள்ளது. திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதற்கு உரிய முன் ஏற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகம் செய்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகளும் பிரசாரத்தில் இறங்கி உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த பின்னர் அதிலிருந்தும் வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்த சரத்குமார், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு படுதோல்வியடைந்த சரத்குமார் தனது அரசியல் இருப்பை வெளிப்படுத்துவதற்கு இடைத் தேர்தலைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதற்கு இது முன்னோடியாகக் கருதப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்மைய தேர்தல் வெற்றிகளின் பிரதானமானவராக உள்ள அமைச்சர் அழகிரியிடம் இடைத் தேர்தல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அழகிரி கட்சியை முன்னேற்றுவதில் முழு அக்கறை காட்டுகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாரதீய ஜனதாக் கட்சி இடைத் தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளது. தமிழகத்தின் செல்வாக்கான அரசியல்வாதியாக உள்ள திருநாவுக்கரசர் பாரதீய ஜனதாக் கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளம்ர். அதன் காரணமாக பாரதீய ஜனதாக் கட்சி நல்லதொரு தலைவர் இல்லாது தடுமாறுகிறது. இடைத் தேர்தலில் போட்டியிட்டால் திருநாவுக்கரசர் இல்லாத குறை தெரிந்து விடும் என்பதனால் இடைத் தேர்தலில் போட்டியிடுவதை பாரதீய ஜனதாக் கட்சி தவிர்த்துள்ளது.
விஜயகாந்த் வழமை போன்று என் வழி தனி வழி என்று களமிறங்கி உள்ளார். விஜயகாந்தின் கட்சி சந்தித்த தேர்தல்கள் எல்லாவற்றிலும் தோல்வி அடைந்தது. சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். அது விஜயகாந்த்துக்கு கிடைத்த வெற்றியே தவிர அவரது கட்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது. கூட்டணி சேர்ந்தால் வெற்றி பெறலாம் என்று பலரும் கருத்துக் கூறிய பின்னரும் கூட்டணி சேராது தனித்துப் போட்டியிடுகிறார் விஜயகாந்த். காங்கிரஸுடன் கூட்டுச் சேர விஜயகாந்த் விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டு வந்தால் கூட்டுச் சேர்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இப்போதைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட காங்கிரஸ் தயாராக இல்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலை பகிஷ்கரித்தபோது 20 சதவீத வாக்குகளைப் பெற்ற விஜயகாந்த் இந்த இடைத் தேர்தலில் அந்த வாக்கு விகிதத்தை தக்க வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இடைத் தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை என்ற படிவத்தை நிரப்பும்படி பாட்டாளி மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த இடைத் தேர்தலில் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க விரும்பவில்லை என்ற படிவத்தை நிரப்பும்படி ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். இந்தத் தேர்தலில் அதேவேண்டுகோளை டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ளார்.
தேர்தலைப் பகிஷ்கரிக்கும் மன நிலையில் தமிழக வாக்காளர்கள் இல்லை என்பதை டாக்டர் ராமதாஸ் உணரவில்லை.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 06/12/09

Friday, December 4, 2009

உலகக்கிண்ணம்2010


அல்ஜீரியா
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு ஆபிரிக்கா கண்டத்திலிருந்து 43 நாடுகள் போட்டியிட்டன. உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் நாடான தென் ஆபிரிக்கா போட்டியின்றி தகுதி பெற்றது. அல்ஜீரியா, கமரூன், ஜாவாரிக்கா, கானா, நைஜீரியா ஆகிய ஐந்து நாடுகள் தகுதி பெற்றுள்ளன. உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் தகுதி பெறுவதற்காக மூன்றாவது சுற்றில் 20 நாடுகள் ஏ, பீ, சீ, டி, ஈ என ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டன.
அல்ஜீரியா, எகிப்து, சிம்பாப்வே, ருவாண்டா ஆகிய நான்கு நாடுகள் சி பிரிவில் போட்டியிட்டன. சி பிரிவில் உள்ள எகிப்து, அல்ஜீரியாவுக்கு கடும் சவாலை விடுத்தது. சிம்பாப்வே, ருவாண்டா
ஆகிய நாடுகளை மிக இலகுவாக வீழ்த்திய அல்ஜீரியா கடும் போராட்டத்தின் பின்னர் எகிப்தை வீழ்த்தி உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
அல்ஜீரியாவுக்கும் எகிப்துக்கும் இடையேயான போட்டியில் வெற்றி பெறும் நாடு உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் விளையாடும் தகுதியைப் பெறும் என்பதனால் இரண்டு நாடுகளும் வெற்றி பெறும் முனைப்புடன் போராடின. போட்டி முடிவதற்கு ஐந்து நிமிடம் இருக்கையில் அல்ஜீரியா அடித்த ஒரே ஒரு கோலின் மூலம் வெற்றி பெற்றதால் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை எகிப்து இழந்தது.
1986ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய பின்னர் இம்முறை உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட அல்ஜீரியா தகுதி பெற்றுள்ளது.
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் அல்ஜீரியா சாதனை எதனையும் செய்யவில்லை. ஆனால் பலம் வாய்ந்த நாடுகளை வீழ்த்தி உதைபந்தாட்ட ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1982ஆம் ஆண்டு மேற்கு ஜேர்மனியையும் 1986ஆம் ஆண்டு மெக்ஸிக்கோவையும் வீழ்த்தி உதை பந்தாட்ட ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.
13 தகுதிகாண் போட்டிகளில் விளையாடிய அல்ஜீரியா எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது. இரண்டு போட்டிகளை சமநிலையில் முடித்தது. தாய்நாட்டில் ஏழு போட்டிகளிலும் வெளிநாட்டில் ஒரு
போட்டியிலும் வெற்றி பெற்றது. வெளிநாட்டில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. வெளிநாட்டில் விளையாடிய இரண்டு போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி முடிந்தன.
அல்ஜீரியா 17 கோல்கள் அடித்தது. எட்டு கோல்கள் அல்ஜீரியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டன. அல்ஜீரியாவுக்கு
எதிராக 31 தடவை மஞ்சள் அட்டை காண்பிக்கப்
பட்டது
.ரமணி
மெட்ரோநியூஸ்

Tuesday, December 1, 2009

உலகக்கிண்ணம்2010



தென்ஆபிரிக்கா
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த தென்னாபிரிக்கா தயாராகி விட்டது. 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு 32 நாடுகள் தெரிவு செய்யப்பட்டு விட்டன. பீபாவில் அங்கத்துவம் வகிக்கும் 224 நாடுகள் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியில் விளையாடின.
பலம்வாய்ந்த நாடுகளான ஆர்ஜென்டீனாவும், பிரான்ஸும் இறுதிவரை போராடி தமது கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. உதைப்பந்தாட்டத்தின் பலம் வாய்ந்த நாடுகள் முட்டி மோதி தமது திறமையை வெளிப்படுத்தி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதனால் தென் ஆபிரிக்கா நேரடியாக விளையாடும் தகுதியைப் பெற்றது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து 43 நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின. கானா, ஐவரிகோஸ்ட், கமரூன், நைஜீரியா, அல்ஜீரியா ஆகிய ஐந்து நாடுகள் புள்ளிகளின் அடிப்படையில் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்ற தென் ஆபிரிக்கா உதைபந்தாட்ட ரசிகர்களின் பாராட்டையும் பெறும் என்பதில் சந்தேகமில்லை. பீபாவில்
தென்ஆபிரிக்கா சேர்ந்து 15 ஆண்டுகளாகின்றன.
1998, 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடும் தகுதியை தென் ஆபிரிக்கா பெற்றது. 1996 ஆம் ஆண்டு ஆபிரிக்கக் கிண்ணத்தைக் கைப்பற்றிய தென் ஆபிரிக்கா 1998 ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தையும் 2000 ஆம் ஆண்டு 3 ஆம் இடத்தையும் பெற்றது.
ஆபிரிக்கக் கிண்ணப் போட்டியில் விளையாட தொடர்ச்சியாக ஏழு முறை தென் ஆபிரிக்கா தகுதி பெற்றது.
தென் ஆபிரிக்காவின் பயிற்சியாளரான ஜோ. எல், சாந்தனா கடமையாற்றி வருகிறார். கசிசிடிக்குகோ பென்னி மக்கார்த்தி, கிபுகி சோபென்னி, சியா பெங்கா, ஹொம் விடே ஆகிய வீரர்கள் மீது தென் ஆபிரிக்க ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
அண்மையில் விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளையும் மூன்று தோல்விகளையும் பெற்றது. ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது. தென் ஆபிரிக்கா ஐந்து கோல்கள் அடித்துள்ளது. எதிரணிகள் ஐந்து கோல்கள் அடித்துள்ளன. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 10 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டுள்ளன.
ரமணி
மெட்ரோநியூஸ்

Monday, November 30, 2009

ஜெயலலிதாவின் முடிவால்உற்சாகமான தொண்டர்கள்


திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதனால் தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதனால் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதனால் அனிதா ராதாகிருஷ்ணன் பதவியை ராஜினாமா செய்தார். வந்தவாசி தொகுதியில் இருந்து சட்டசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஜெயராமன் மரணமானதால் அங்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
திருச்செந்தூர் தொகுதி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் வந்தவாசி, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள்.
தமிழக அரசின் செல்வாக்கு, மின்னணு இயந்திரத்தில் முறைகேடு, பணத்துக்கு வாக்காளர்களை வாங்குவது போன்ற குற்றச்சாட்டுகளினால் கடந்த முறை நடைபெற்ற ஐந்து இடைத்தேர்தல்களைப் புறக்கணித்த ஜெயலலிதா திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதலில் அறிந்து தேர்தலில் முனைப்புக் காட்டி உள்ளார்.
கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலை ஜெயலலிதா புறக்கணித்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகளை நம்பி களமிறங்கிய விஜயகாந்த் எதிர்பார்த்த வாக்குகளைப் பெறவில்லை. திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் மும்முனைப் போட்டி நடைபெறவுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வழமைபோல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்காளியான காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக பிரசாரம் செய்யவுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உட்பூசல்கள் அதிகரித்து வரும் வேளையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக ஆர்வமுடன் பிரசாரம் செய்யும் தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? ஒப்புக்காகப் பிரசாரம் செய்பவர்கள் யார் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக பிரசாரப் பணிகளை ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தில் உள்ள தனது செல்வாக்கை மீண்டும் ஒருமுறை மத்திய அரசுக்கு வெளிக்காட்ட வேண்டிய கட்டாய சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் இடைத்தேர்தலுக்கு முகம்
கொடுக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் இடைத்தேர்தலின் பிரதான பிரசாரமாக எதிர்க்கட்சிகளினால் முன்னிலைப்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகவும் கர்நாடக அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் மத்திய அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதை பிரதான எதிர்க்கட்சிகள் மக்கள் முன் விளக்கத் தொடங்கிவிட்டன.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அமைச்சின் செயற்பாட்டுக்கு எதிராக தான் எடுத்திருக்கும் நடவடிக்கையை மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணித்த இடைத்தேர்தலில் 20 சதவீத வாக்குகளைப் பெற்ற விஜயகாந்தின் கட்சி அடுத்த மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும் தனது வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டிய நிலை உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடாததனால் விஜயகாந்தின் கட்சிக்கு வழமையைவிட கூடுதலான வாக்குகள் கிடைத்தன. இப்போது நடைபெறவுள்ள தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் விஜயகாந்தின் கட்சிக்கு கிடைப்பது சந்தேகம்.
விஜயகாந்தின் அரசியல் நடவடிக்கையினால் வழமை போன்று வாக்குகள் சிதறுமே தவிர அவரது கட்சி வேட்பாளர் வெற்றி பெறமாட்டார்.
வந்தவாசி தேர்தல் தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமானது. வந்தவாசியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தடுப்பது சிரமமானது. வன்னியர் அதிகமுள்ள தொகுதி வந்தவாசி.
வன்னிய சமூகத்தின் வாக்கு வங்கியைக் குறி வைத்து ஆரம்பிக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி தனி மரமாக நிற்கிறது. எந்தக் கூட்டணியிலும் இல்லாது தனித்து நிற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வந்தவாசியிலும் செல்வாக்கு உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு தமிழகத்தில் குறைந்து கொண்டு போவதை கடந்த கால தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சியில் நம்பிக்கை வைத்துள்ளவர்களின் வாக்குகளைக் கவர்வதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் முயற்சி செய்கின்றன.
திருச்செந்தூர் தொகுதியின் மீது தமிழகத்தின் பார்வை விழுந்துள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட செல்வாக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியுமே கடந்த தடவை திருச்செந்தூர் தொகுதியின் வெற்றியைத் தீர்மானித்தன.
இம்முறை அனிதா ராதாகிருஷ்ணனின் செல்வாக்கா, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியா, திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெறப் போகிறது என்பதை அறிவதற்கு தமிழகம் ஆவலுடன் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் அனிதா ராதாகிருஷ்ணனை திருச்செந்தூரில் களமிறக்கியுள்ளது. அம்மன்டி, நாராயணன் என்பவரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருச்செந்தூரில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணனின் வெற்றிக்கு துணையாக நின்றவர் அம்மன்டி நாராயணன். தூத்துக்குடி மாவட்டத்தில் அனிதா ராதா கிருஷ்ணன் அரசியலுக்கு அறிமுகமாகியபோது அவருக்கு பலத்த எதிர்ப்பு வந்தது.
அந்த எதிர்ப்புகளை சமாளித்து அனிதா
ராதாகிருஷ்ணனை வெற்றி பெறச் செய்ததில் அம்மன்டி நாராயணனுக்கும் பங்கு உள்ளது. அம்மன்டி நாராயணனை வேட்பாளராக அறிவித்து அனிதா ராதாகிருஷ்ணனின் செல்வாக்கை உடைத்துள்ளார் ஜெயலலிதா.
திருசெந்தூர்த் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். 2001ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரனைத் தோற்கடித்தார்.
2006ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக ஏ.டி.கே. ஜெயசீலன் போட்டியிட்டு 13,916 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதுவரை 12 பொதுத் தேர்தலையும் ஒரு இடைத்தேர்தலையும் சந்தித்த திருச்செந்தூர் சட்டசபைத் தொகுதி இப்போது இரண்டாவது இடைத்தேர்தலுக்குத் தயாராகி விட்டது.
13 தேர்தல்களைச் சந்தித்த திருச்செந்தூர் தொகுதியில் ஏழு முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. நான்கு முறை திராவிட முன்னேற்றக் கழகமும் இரண்டு முறை காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கையே திருச்செந்தூரில் ஓங்கி உள்ளது. கட்சியின் செல்வாக்கா, வேட்பாளரின் செல்வாக்கா திருச்செந்தூர் தொகுதியில் வெற்றியைத் தேடித் தரும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 29/11/09

Monday, November 23, 2009

தி.மு.க.வை ஒதுக்குகிறது காங்கிரஸ்கூட்டணியை விரும்புகிறது தி.மு.க.


திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது. பல விடயங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனை பெற்றே நிறைவேற்றி வந்த காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தெரியாமலே பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர்திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒதுக்கத் தொடங்கியது காங்கிரஸ் கட்சி. மத்திய அமைச்சரவையில் அமைச்சுக்களை ஒதுக்குவதில் ஆரம்பித்த பிரச்சினை முல்லைப் பெரியாறு அணை விவகாரம் வரை விஸ்வரூபமாக உருவெடுத்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டமடைந்த போது தமிழக முதல்வர் கருணாநிதியுடனான ஆலோசனையின் பின்னரே சகல முடிவுகளும் எடுக்கப்பட்டன. பயங்கரவாதம் பூண்டோடு அழிக்கப்பட்டு விட்டது என்று இலங்கை அரசு அறிவித்த பின்னர் தமிழக முதல்வர் கருணாநிதியின் ஒப்புதல் இன்றி பல சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன.
டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்துக்கு விஜயம் செய்யும்போது முதல்வர் கருணாநிதியைச் சந்திப்பதை வழமையாகக் கொண்டிருந்தனர். ராகுல் காந்தியின் தமிழக விஜயத்தின் பின்னர் இந் நடைமுறை மாற்றம் பெற்றது. தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் செய்த ராகுல் காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கவில்லை. தொலைபேசியில்கூட அவருடன் உரையாடவில்லை.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆஷாத் சென்னைக்குச் சென்றபோது முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கவில்லை. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான உறவு பலமாக இருக்கிறது, கூட்டணி உறுதியாக இருக்கிறது என்று பேட்டியளித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்யும்போது முதல்வர் கருணாநிதியை சந்திப்பது சம்பிரதாய முறையாக இருந்து வந்தது.
இந்திய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தார். பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வரும்போது அல்லது இலங்கையில் இருந்து டில்லிக்குச் செல்லும்போது தமிழக முதல்வரைச் சந்திப்பது சம்பிரதாயமாக இருந்து வந்தது. இந்தச் சம்பிரதாய வழமையை காங்கிரஸ் கட்சி புறக்கணித்து விட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதியையும் காங்கிரஸ் மேலிடம் ஓரங்கட்டத் தொடங்கிவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் இதனைப் புரிந்து கொண்டுள்ளது. ஆனால், கூட்டணி வலுவான நிலையில் இருப்பதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பீடம் அடிக்கடி உரத்துக் கூறி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் போக்கைப் புரிந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் வெறுப்பை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் தமிழக காங்கிரஸ் பிரமுகரான இளங்கோவன், தனது வெறுப்பைத் தீவிரமாக்கி உள்ளார்.
திருநாவுக்கரசர் காங்கிரஸில் இணைந்த வைபவம் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அங்கு உரையாற்றிவர்களில் அதிகமானோர் திராவிட முன்னேற்றக் கழகத்தை எச்சரிக்கும் தொனியிலேயே தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
திருநாவுக்கரசருக்கு தமிழகத்தில் அதிக செல்வாக்கு உள்ளது. எம்.ஜி. ஆரின் விசுவாசிகளும் திருநாவுக்கரசரின் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இன்னமும் அவர் மீது மதிப்பு வைத்துள்ளனர். பாரதீய ஜனதாக் கட்சியில் இருக்கும்போது தமிழகத்தில் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.
ஆனால், அவரின் செல்வாக்கு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியின் மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிபீடம் ஏற முடியாது என்பது வெளிப்படையானது.
மத்திய அரசில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு காங்கிரஸ் கட்சி அமைச்சுப் பதவி வழங்கி உள்ளது. அதேபோன்று தமிழகத்தில் ஆட்சி செய்யும் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி குரலெழுப்பி வருகின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் குரலை சோனியா காந்தியின் துணையுடன் தமிழக முதல்வர் கருணாநிதி அடக்கி வருகிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கும்போது காங்கிரஸ் தலைமைப் பீடம் தலையிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை சாந்தப்படுத்துவது வழமையானது. தமிழக காங்கிரஸ் தலைவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் விமர்சிக்கும் போது தலைமைப் பீடம் எதுவும் சொல்வதில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் அவமானங்களை பொறுமையுடன் எதிர்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி தொடர்கிறது என்று அவ்வப்போது அறிக்கை விடுத்து வருகிறது.
தமிழக அரசாங்கத்தில் தமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்பும் காங்கிரஸ் தலைவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்கத் துடிக்கின்றனர். விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றால் விஜயகாந்த் முதல்வராகவும் தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் இருக்கலாம் என்று காங்கிரஸ் விரும்புகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும்வரை விஜயகாந்த் காங்கிரஸுடன் சேர மாட்டார்.
ஆகையினால், திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒதுக்கும் கைங்கரியத்தை காங்கிரஸ் தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். என்னதான் பிரச்சினை ஏற்பட்டாலும் கூட்டணியில் இருந்து இப்போதைக்கு வெளியேறும் எண்ணம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை. இதே போன்று திராவிட முன்னேற்றக் கழகத்தை உடனடியாக கைவிட காங்கிரஸ் கட்சியும் தயாராக இல்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளைப் பிரித்ததனால் விஜயகாந்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்ற கருத்து உள்ளது. ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே பகிஷ்கரித்த இடைத் தேர்தலில் எதிர்பார்த்த வாக்குகளை விஜயகாந்தின் கட்சி பெறவில்லை. இந் நிலையில் விஜயகாந்துடன் இணைந்தாலும் ஆட்சியைப் பிடிப்பது காங்கிரஸுக்கு சிரமமானதே.
காங்கிரஸுடனான கூட்டணியை திராவிட முன்னேற்றக் கழகம் கைவிட்டால் இடதுசாரிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தமது பூரண ஆதரவை வழங்குவர்.
இதேபோன்று ஆதரவு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ராமதாஸும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமாகக் கூடும். இதுவரை செய்த சாதனைகளை முன்வைத்து புதிய வியூகத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலைச் சந்திக்கும்.
வெளியிலே பூகம்பங்கள் ஏற்படும் வேளை இரண்டு கட்சித் தலைவர்களும் எதுவும் நடக்காதது போல் பாசாங்கு காட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சி காட்டிய ஆதரவினால் கூட்டணிக் கட்சிகளைத் தூக்கி எறிந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை காங்கிரஸ் கட்சி ஓரங்கட்டத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான பனிப் போர் வெளிச்சத்துக்கு வரும் நாளை எதிர்க் கட்சிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 22/11/09

Wednesday, November 18, 2009

திருநாவுக்கரசரின் வெளியேற்றத்தால்பலமிழந்தது தமிழக பா.ஜ.க.


தமிழக அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை களைவதற்கான நடவடிக்கையை முதல்வர் கருணாநிதி ஆரம்பித்துள்ளார். சொத்துச் சேர்ப்பதுதான் அரசியல்வாதிகளின் பிரதான நோக்கம் என்ற பரவலான கருத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தீர்மானித்துள்ளார்.
அமைச்சர்கள் தமது பெயரிலும் தமக்கு வேண்டியவர்களின் பெயரிலும் அதிகளவான சொத்துக்களைச் சேர்த்துள்ளார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டு. அமைச்சர் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி பெறுமதியான சொத்துக்களை குறைந்த விலைக்கு சில அமைச்சர்கள் சுருட்டியுள்ளனர். தற்போது அவர்களின் பக்கம் தமிழக முதல்வரின் பார்வை திரும்பியுள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமான சொத்துச் சேர்த்ததாக ஜெயலலிதாவின் மீது திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் வழக்குத் தாக்கல் செய்தது. ஆனால், திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் சிலர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, குறைந்த விலையில் பெறுமதிமிக்க காணிகளை வாங்கியுள்ளனர்.
செல்வாக்கும், பதவியும் அவர்களின் செயலைத் தடுக்கவில்லை. பொது மக்கள் மத்தியில் அவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இந்த விசயங்கள் தமிழக உளவுத்துறையின் மூலம் முதல்வரின் கவனத்துக்குச் சென்றதும் முதல்வர் கருணாநிதி எடுத்த அதிரடி முடிவினால் தவறான வழியில் சொத்துச் சேர்த்த அமைச்சர்கள் அதனைத் திரும்ப ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மிக முக்கிய அமைச்சர் ஒருவரை அழைத்த முதல்வர் கருணாநிதி குறைந்த விலையில் வாங்கிய இடத்தை உரியவரிடம் திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவுக்கிணங்க அவர் ஒப்படைத்ததை கேள்விப்பட்டவர்கள் அதேபோன்று தாம் வாங்கிய இடங்களை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் இந்த அதிரடி நடவடிக்கை அவர் மீது நல்ல பெயரை உருவாக்கி உள்ளது. ஆளும் கட்சி அரசியல்வாதிகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி எதுவும் செய்ய முடியாது என்ற மன நிலை மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
ஒரு ரூபாவுக்கு ஒருபடி அரிசி, இலவச தொலைக்காட்சி, இலவச காஸ் இணைப்பு ஆகிய திட்டங்கள் போன்று கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பலர் உயிர் பிழைத்துள்ளனர். பலரின் நோய் தீர்க்கப்பட்டுள்ளது. தரமான மருத்துவ வசதிகளைப் பெற முடியாதவர்கள் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குச் செலுத்துவதை அறிந்த ஜெயலலிதா அதேபோன்ற ஒரு திட்டத்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்மூலம் நடைமுறைப்படுத்த விரும்புவதாக செய்தி ஒன்று கசிந்துள்ளது. மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்கு இது போன்ற செயற்பாடுகள் தேவை என்பதை ஜெயலலிதா உணர்ந்துள்ளார் போல் தெரிகிறது.
ஹெலி விபத்தில் பலியான ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு புகழையும் மதிப்பையும் பெற்றுக் கொடுத்தது இது போன்ற ஒரு காப்பீட்டுத் திட்டம் தான். அவர் இறந்ததும் அதிர்ச்சியில் பலர் இறந்தனர். கவலையில் பலர் தற்கொலை செய்தனர். அதே நடைமுறையைத்தான் தமிழக முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தி யுள்ளார்.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் தனது அரசியல் வாரிசான ஸ்டாலினுக்குப் போய் சேரும் என்ற நம்பிக்கை முதல்வர் கருணாநிதியிடம் உள்ளது. ஸ்டாலினின் அரசியலை ஸ்திரப்படுத்துவதற்காக அமைச்சர் துரைமுருகனை ஓரம் கட்டியதைப்போல் அமைச்சர் ஆற்காடு வீராசாமியையும் கட்சி மேலிடம் ஓரம் கட்டத் தொடங்கி உள்ளது. மின்துறையில் ஏற்பட்ட நெருக்கடியில் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. அடிக்கடி ஏற்பட்ட மின் தடையினால் அரசுக்கு பலத்த நஷ்டம். இதனை ஒழுங்குபடுத்தத் தவறியதாக ஆற்காட்டார் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.
முதல்வர் கருணாநிதியின் கீழ் பணியாற்றியவர்கள் ஸ்டாலினின் கீழ் பணியாற்றும்போது சில சிக்கல்கள் ஏற்படலாம். அதனைத் தடுப்பதற்கும் ஸ்டாலினின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுக்கு சில பதவிகளை வழங்கவும் வேண்டிய சூழ்நிலை கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். எம்.ஜி. ஆருடன் இணைந்து தமிழக அரசியலில் ஒரு காலத்தில் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட திருநாவுக்கரசர் ஜெயலலிதாவின் எழுச்சியினால் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். அரசியலில் செல்வாக்குள்ள திருநாவுக்கரசர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி பாரதீய ஜனதாக் கட்சியில் இணைந்தார்.
அரசியலில் அனுபவமும் திறமையும் உள்ள திருநாவுக்கரசருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் தேசியச் செயலர் பதவியும் கொடுத்து பாரதீய ஜனதாக் கட்சி அழகுபார்த்தது. அத்வானி, வாஜ்பாய் ஆகியவர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியில் அத்வானியின் கை ஓங்கியதால் வாஜ்பாயின் ஆதரவாளரான திருநாவுக்கரசர் ஓரம் கட்டப்பட்டார். கட்சியிலுள்ள தனது செல்வாக்கு குறைவதை அறிந்த திருநாவுக்கரசர் கட்சியுடனான தொடர்புகளை குறைத்துக் கொண்டார்.
தமிழகத்தில் மிக மோசமான நிலையில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சியை வளர்ப்பதற்கு தலைவர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. திருநாவுக்கரசரின் வெளியேற்றத்தால் தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சியின் நிலை பரிதாபமாக உள்ளது.
சிதம்பரம், வாசன், தங்கபாலு, இளங்கோவன் போன்ற தலைவர்களின் கட்டுப்பாட்டில் காங்கிரஸ் கட்சி உள்ளது. புதிதாக களம் புகுந்த திருநாவுக்கரசரை ஆதரிக்கவும் அங்கு சிலர் தயாராக உள்ளனர். திருநாவுக்கரசரின் வருகையால் தமிழக காங்கிரஸின் செல்வாக்கு உயர்வதற்கு சந்தர்ப்பம் இல்லை. திருநாவுக்கரசர் அரசியலில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 15/11/09

நாயும்பூனையும்

எனது மகளுக்கு ஒன்றரை வயதானபோது குடும்பத்துடன் கொழும்புக்குவந்துவிட்டேன். அப்போது எனதுசகோதரிக்கு ஒருபெண்குழந்தை பிறந்துஆறு மாதமாகியது. ஐந்துவருடங்களீன் பின்னர் சகோதரிக்கு சத்திரசிகிச்சை செய்யவேண்டியதால் சகோதரிகுடும்பத்துடன் கொழும்புக்குவந்து என்னுடன் தங்கினார்பிள்ளைகள் இருவரும்முதலில் சேரத்தயங்கினர்.பின்னர் பிரிக்கமுடியாதபடி இணைந்துவிட்டனர்.
ஒருநாள் இரவு ஊரைப்பற்றியும் கொழும்பு வாழ்ககையைப்பற்றியும் நாங்கள் கதைத்தோம்.அப்போதுதிடீரென சகோதரியின் மகள் வீரிட்டு அலறியபடி ஓடிப்போய் தாயைக்கட்டிப்பிடித்தார். எனதுமகள் ஏங்கியபடி எல்லோரயும்பார்த்தார்.சகோதரியின் மகளிடம் காரணம் கேட்டோம்.அழுகைகூடியதேதவிர காரணத்தை அவர் சொல்லவில்லை.என்ன நடந்ததென மகளிடம் கேட்டேன்.
"நீங்கசத்தமா கதைச்சீங்க.சந்தைமாதிரிகிடக்கெண்டா.பக்கத்துகாம்பராவிலை போயிவிளையாடுவம் எண்டுநான்சொன்னேன். உடனை அழுதா."
என்று எனதுமகள் கூறினார்.கொழும்பிலை காம்பறா<சிங்களம்> என்றால் அறை. வைத்தியசாலையில் பிரேத்தை வைக்குமிடத்தை காம்பறா என ஊரில் சொல்வார்கள்.கொழும்பில் அதனை மய்யக்காம்பறா என்பார்கள்.
எனது நண்பரொருவர் கொட்டாஞ்சேனையிலிருந்து தெஹிவளைக்கு தனதுமைத்துணருடன் போனார். நண்பனுக்கு சிங்களம் அரைகுறையாகத்தெரியும். மைத்துணருக்கு சிம்க்களம் தெரியாது. பஸ்ஸில் ஏறியதும்" தெஹிவளை தெக்காய்" என்றார் நண்பர்.மற்றவர் யாரென சிங்களத்தில் நடத்துனர் கேட்டார். "அத்தான் எக்காய். நான் எக்காய் .தெஹிவளை தெக்காய் என்று நண்பைகூறினார்.
சாப்பாட்டுக்கடை ஒன்றில் மலையாள‌ நண்னபரொருவர்சப்பிட்டுக்கொண்டிருந்தார்.பரிமாறுபவர் குழம்புவிட்டதும் மதிமதி என்றார். பரிமாறுபவர் மீண்டும் குழம்பு ஊற்றினார். மலையளநண்பர் சத்தமாக மதிமதி ந்ண்றுகத்தினார். மலையாளத்தில் மதி என்றால் போதும். சிங்களத்தில் மதி என்றால் போதாது.
இவை தொடற்பாடலை தவறாக விளங்கிக்கொண்டதால் ஏற்பட்ட குழப்பங்கள்.நாயும் பூனயு கண்டதும் சண்டைப்படுவதற்கும் தவறானதொடர்பாடல்தான் காரணம்.நண்பனைக்கண்டதும் நாய் வாலை ஆட்டும்.இரையைக்கண்டால் பூனைவாலை ஆட்டும்.நான் உன்நண்பனென்று வாலை ஆட்டி நாய் கூறுவதை ,தன்னை இரையாக நாய் நினைப்பதாக பூனை தவறாக விள்ங்கிவிடுகிறது.
நான் உன் எதிரியல்ல நண்பன் என்று வாலை உயர்த்தி த்னது நட்பைவெளிப்படுத்துகிறது பூனை.நாய் எதிரியைக்கண்டால் வாலை உயர்த்தும்.தொடர்பாடலில் ஏற்பட்டகுழப்பத்தால் நாயும் பூனையும் சண்டையைஆரம்பித்துவிடும்.

Sunday, November 8, 2009

அசுரபலத்துடனான தமிழக அரசும்பலமிழந்துள்ள எதிர்க்கட்சிகளும்


தமிழக எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் முடங்கிப் போயுள்ளதால் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் எதுவித இடைஞ்சலும் இன்றி ஆட்சி செய்கிறது. காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இரண்டு கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக உள்ளன. ஏனைய கட்சிகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளாகவே உள்ளன. அவை பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயற்படாமையினால் தமிழக அரசு சிறப்பாகச் செயற்படுவதாகவே மக்கள் கருதுகிறார்கள்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா ஆறு மாத அஞ்ஞாதவாசத்தின் பின்னர் கடந்த வாரம்தான் சென்னைக்குத் திரும்பினார். ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்துப் போயுள்ளன. கொடநாட்டில் ஓய்வெடுத்த ஜெயலலிதா தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டம் எதனையும் முன்னெடுக்கவில்லை. இதேவேளை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சில செயற்பாடுகளை கொடநாட்டில் இருந்து நிறைவேற்றினார் ஜெயலலிதா. கொடநாட்டில் இருந்து விடுத்த உத்தரவுக்கிணங்க கட்சியில் இருந்து சிலர் வெளியேற்றப்பட்டார்கள். ஒரு சில நிர்வாகிகள் தூக்கியெறியப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
முல்லை பெரியாறு விவகாரத்தில் இந்திய மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையில் ஏற்பட்ட புகைச்சலை சரியான முறையில் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தவறிவிட்டது. முல்லைபெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கு இந்திய மத்திய அரசின் துணை அமைச்சர் அனுமதி அளித்ததை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் போர்க்கொடி தூக்க அழைப்பு விடுத்தது.
தமிழக அரசுக்கு ஆதரவு வழங்கும் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்கள் அவ்வப்போது தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதும் பின்னர் அடங்கிப் போவதும் வழமையான நடவடிக்கைகளில் ஒன்று. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் இணைந்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள், தற்போது காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதையே தனது பிரதான கொள்கையாகக் கருதுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன ஒரே கூட்டணியில் இருந்தாலும் மூன்று கோணங்களில் உள்ளன. இந்த மூன்று கட்சிகளின் பலவீனங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கு ஜெயலலிதா தவறிவிட்டார். ஜெயலலிதாவின் பலவீனத்தினால் திராவிட முன்னேற்றக் கழகம் பலமான கட்சியாக உள்ளது.
அகில இந்திய ரீதியில் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடும் எனக் கருதப்படும் பாரதிய ஜனதாக் கட்சி தமிழகத்தில் தனி மரமாக உள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர தமிழக அரசியல் கட்சிகள் எவையும் தயாராக இல்லை.
பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு அக்கட்சியை விட்டு ஒதுங்கி உள்ளார். தனித்து நின்று தமிழக அரசை எதிர்க்கும் துணிவு பாரதீய ஜனதாக் கட்சிக்கு இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு மாற்றீடாக அரசியல் நாடகத்தில் நடிக்க களமிறங்கிய விஜயகாந்த் ஜெயலலிதாவையும் முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து அறிக்கை விடுவதுடன் தன் கடமை முடிந்தது என்ற திருப்திப்படுகிறார். எதிர்க்கட்சித் தலைவி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் விஜயகாந்த் நிலைமையை சரிவரப் பயன்படுத்தாமல் காட்டமான அறிக்கை வெளியிடுவதிலேயே கவனமாக உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்தபோது, பொறுப்பான எதிர்க்கட்சி போன்று செயற்பட்ட டாக்டர் ராமதாஸ் அடுத்து என்ன செய்வதென்று தெரியாது தடுமாறுகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை பரம எதிரியாக கருதும் வைகோ, இலங்கைத் தமிழர் பிரச்சினையை மையப்படுத்தி தமிழக அரசைச் சாடுகிறாரே தவிர, தமிழக அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் அழுத்தமாகப் பதிவதற்குரிய நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் இரண்டு எதிர்க்கட்சி வரிசையில் உள்ளன. அவையும் தமக்குரிய பொறுப்பை சரிவர நிறைவேற்றவில்லை. தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தாமையினால் தமிழக அரசு எதுவித இடைஞ்சலும் இன்றி தனது பணியைத் தொடர்கிறது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியதையும் எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டிய தமிழக எதிர்க்கட்சிகள் பத்திரிகை அறிக்கையுடன் தமது பணியை முடித்துக் கொண்டன. தமிழக அரசை எதிர்ப்பதற்குரிய சந்தர்ப்பத்தை தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்து தவறவிட்டுள்ளன.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு உரிமை வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி விரும்புகிறார். இதுவரை காலமும் அதிக அக்கறை காட்டாத அகதிகள் மீது தமிழக அரசு தற்போது கருணை காட்டத் தொடங்கி உள்ளது. துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆகியோர் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தங்கி இருக்கும் முகாம்களுக்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளின் அபிமானத்தைப் பெறுவதற்கு தமிழக அரசு திட்டம் தீட்டி உள்ளது. தமிழக எதிர்க்கட்சிகள் இந்த விசயத்திலும் முழு அளவிலான அக்கறையைக் காட்டவில்லை. எதிர்க்கட்சிகளின் பலவீனங்களை தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளம்ர் தமிழக முதல்வர் கருணாநிதி.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 08/11/09

Wednesday, November 4, 2009

அப்ரிடி அக்மல் அதிரடியால் வென்றது பாகிஸ்தான்



நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே அபுதாபியில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் அப்ரிடி, கம்ரல் அக்மல் ஆகியோரின் அதிரடியினால் பாகிஸ்தான் அணி 138 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சல்மான் பட் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். அணித் தலைவர் யூனுஸ் கானும் ஓட்டமெதுவும்
எடுக்காது ஆட்டமிழந்தார்.
சல்மான் பட், யூனுஸ்கான் ஆகிய இருவரும் ஷேன் பொண்டின் பந்தை மெக்கலமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தனர். ஓட்டமெதுவும் எடுக்காது பாகிஸ்தான் அணியின் இரண்டு விக்
ய்கட்டுகள் விழுந்ததனால் பாகிஸ்தான் வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மொஹமட் யூசுப் 30 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். உமர் அக்மல் ஓன்பது ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணியின் முக்கியமான 4 வீரர்களும் 75 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
ஐந்தாவது இணைப்பாட்டத்தில் விளையாடிய அப்ரிடி, கம்ரன் அக்மல் ஜோடி 101 ஓட்டங்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டது.
56 பந்துகளுக்கு முகம் கொடுத்த அப்ரிடி மூன்று
சிக்சர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஓரமின் பந்தை பட்லரிடம் பிடிகொடுத்து அப்ரிடி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அப்துல் ரஸாக் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணியின் விக்கெட் மளமளவென வீழ்ந்தாலும் கம்ரன் அக்மல் தனது அதிரடியைத் தொடர்ந்தார். 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்கள் எடுத்தது பாகிஸ்தான். 43 பந்துகளுக் முகம் கொடுத்த கம்ரன் அக்மல் ஆட்டமிழக்காது நான்கு சிக்சர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்கள் எடுத்தார்.
ஷேன் பொண்டிங், வெட்டடோரி ஆகியோர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் சோத்தி பட்லர், ஓராம் ஆகியோர் தலா ஒரு விக்ய்கட்டையும் வீழ்த்தினர்.
288 என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 39.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.
மக்கலம் 21, ரெட்மன்ட் 52, வெட்டோரி 38 ஓட்டங்கள் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
சயீட் அஜ்மல், அப்ரிடி, உமர் குல், அப்துல் ரஸாக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மொஹமட் அமீர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக அப்ரிடி தேர்வு செய்யப்பட்டார்.

Tuesday, November 3, 2009

24 ஓட்டங்களால் வென்றது அவுஸ்திரேலியா


அவுஸ்திரேலிய இந்திய அணிகளுக்கிடையே மொஹாலியில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 24 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத் தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49.2 ஒவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்கள் எடுத்தது.
வட்சன், மார்ஸ் ஜோடி களமிறங்கியது 23 பந்துகளுக்கு முகம் கொடுத்த மார்ஸ் ஐந்து ஓட்டங்கள் எடுத்த நிலையில் நெஹ்ராவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி வீரர்களின் பந்தைப் பதம் பார்த்து ஆறு பௌண்டரிகள் உட்பட 49 ஓட்டங்கள் எடுத்த வட்சன் ஹர்பஜனின் பந்தை டோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
பொண்டிங், வைட் ஜோடி நிதானமாகத் துடுப்பெடுத்தாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது பொண்டிங் ஒரு நாள் போட்டியில் 73 ஆவது அல்ரச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
மறுமுனையில் வைட் ஒரு நாள் அரங்கில் தனது நான்காவது அரைச் சதத்தைத் பூர்த்தி செய்தார்.
52 ஓட்டங்கள் எடுத்த பொண்டிங் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். பொண்டிங் வெளியேறியதும் களமிறங்கிய ஹஸி தனது அதிரடி மூலம் இந்திய அணிக்கு அச்சுறுத்தல் விடுத்தார்.
41 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஹஸி ஒரு சிக்சர், இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் எடுத்தபோது ஹர்பஜனின் பந்தை இஷாந்த் சர்மாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தர்.
ஹென்றிக்ஸ் ஆறு ஓட்டங்களுடனும் ஜோன்சன் எட்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 62 ஓட்டங்கள் எடுத்த ஹஸி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததும் அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். அவுஸ்திரேலியா 49. 2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 256 ஒட்டங்கள் எடுத்தது.
நெஹ்ரா மூன்று விக்கட்டுகளையும் ஹர்பஜன் இரண்டு விக்கட்டுகளையும் யுவராஜ் சிங் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
251 ஒட்டங்கள் என்ற இலக்குடன் களம் புகுந்த இந்திய அணி 46. 4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
ஷேவாக் தனது வழமையான அதிரடியுடன் ஆட்டத்தை ஆரம்பித்தார்.
சச்சின் மிக நிதானமாகத் துடுப்பெடுத்தாடினார். 19 பந்துகளில் ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 30 ஒட்டங்கள் எடுத்த ஷேவாக் ஹரிட்ஸின் பந்தில் எல்.பி.
டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
கோஹ்லி 10 ஓட்டங்களில் வெளியேறினார். 17 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கர் சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் 40 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை யில் நடுவர் அசோக டி சில்வாவின் தவறான முடிவில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
யுவராஜ்சிங் 12, டோனி 26, ரைனா 17, ஜடேஜா 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஹர்பஜன் தன் பங்குக்கு அவுஸ்திரேலிய வீரர்களை மிரட்டினார். 25 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஹர்பஜன் ஒரு சிக்சர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்தார். பிரவீன் குமார் 17 ஓட்டங்கள் எடுத்தார்.
ஏனையவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 46. 4 ஒவர்களில் சகல விக்கட்களையும் இழந்த இந்திய அணி 226 ஓட்டங்கள் எடுத்தது.
பொலிங்கர், வட்சன் ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளையும் ஹரிட்ஸ் இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக வட்சன் தெரிவு செய்யப்பட்டார். ஏழு போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்றன.