Monday, April 25, 2016

கச்சதீவுக்கு சொந்தம் கொண்டாடும் தமிழகத் தலைவர்கள்

 இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும்  பாக்குநீரிணையில் எதுவித முக்கியத்துவமும்  இல்லாது இருந்த கச்சதீவை இந்தியா இலங்கைக்குத்தாரை வார்த்தபின்னர்  கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த  இடமாக மாறியது. தமது உரிமைக்காக ஆயுதம் ஏந்தி  இலங்கைத் தமிழ் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் இந்திய மீனவர்களைப் பிடிக்கும் பொறியாக கச்சதீவு மாறியது. 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  28 ஆம் திகதி  அப்போதைய இந்தியப்பிரதமர் இந்திர காந்தி , இலங்கைப்பிரதமர் ஸ்ரீமாவோ  பண்டாடரநாயக்க ஆகிய இரண்டு தலைவர்களுக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இருநாடுகளின் நல்லுறவு வளர்வதற்காக கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்தியா.

இந்திய இலங்கை பிரதமர்களின் ஒப்பந்தம் கைச்சாத்தானபோது  தமிழக மீனவர்களின் எதிர்காலம் திசை மாறியது. அவர்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்ட்டது. இராமேஸ்வரத்துக்கு அருகில்  உள்ள கச்சதீவை இலங்கைக்கு விட்டுகொடுத்த பெருந்தன்மை அன்று பெரிதாகப்பேசப்பட்டது. இந்திய இலங்கை உறவில் புதியதொரு பரிமாணம் என்று பிரசாரம் செய்யப்பட்டது.  இலங்கயின் யுத்த மேகத்தால் தமிழக மீனவர்களும் இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களும் கடலிலே போராடும் நிலை ஏற்பட்டது. திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் ஆட்சிக்காலத்தில்  கச்சதீவு  இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு   வாய்ப்பாக அமைந்துவிட்டது. திராவிட முன்னேற்றக் கழக‌ ஆட்சியில் இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட கச்சதீவை  மீட்பேன் என்று  தேர்தல் காலத்தில் ஜெயலலிதா முழக்கமிடுவார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கச்சதீவு பேசுபொருளாக மாறியுள்ளது. கச்சதீவை மீட்பேன் என்று ஜெயலலிதா மேடைதோறும் பிரசாரம் செய்கிறார். ஐந்து வருட ஆட்சியில் இருந்தபோது கச்சதீவை   மீட்க‌ நடவடிக்கை எடுக்காத ஜெயலலிதா அடுத்த முறை முதல்வரனால் கச்சதீவை மீட்பேன்  என்று சபதமிடுகிறார். 1991 ஆம் ஆண்டு   கோட்டையில்  கொடி ஏற்றிவிட்டு கச்சதீவை மீட்பேன் என்று உறுதிமொழி எடுத்தார். கோட்டையில் கொடி காற்றில்  பறந்ததுபோல அவருடைய உறுதிமொழியும் காற்றில்  பறந்தது. இப்போதும் அதே போன்ற உறுதி மொழியை வீசியுள்ளார்.

 பாட்டாளி மக்கள்கட்சியின் நிறுவுனர்  டாக்டர்  ராமதாஸுசுக்கும்   கச்சதீவின் மீது ஒருகண். பாட்டாளி மக்கள் கட்சி  திராவிட முன்னேற்றக் கழக    ஆட்சிபீடம் ஏறினால் கச்சதீவை மீட்போம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். கச்சதீவை மீட்பதற்கு பழ.நெடுமாறன் போன்றோர் படகிலே புறப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. இந்த முறையும்  தேர்தல் பிரசாரத்தில் கச்சதீவு இடம் பெற்றுள்ளது. இந்திராகாந்தி கச்சதீவை இலங்கைக்குக் கையளிக்கும் போது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக‌ம் ஆட்சியில் இருந்தது. கருணாநிதியும்  இந்திராகாந்தியும் ஓரணியில் இருந்ததனால் கருணாநிதியின் ஒப்புதலுடன் கச்சதீவு பறிபோனது என்ற பிரசாரம் வலுப்பெற்றது.


இந்தியா சுதந்திரமடைந்த போது ராமநாதபுரம் சமஸ்தானமும் இந்தியாவுடன்   இணைந்தது. ராமேஸ்வரத்தின் கண்ணுக்கு எட்டிய தூரத்தில்உள்ள கச்சதீவும் இந்தியாவின் பகுதியாகியது.   தமிழக மீனவர்கள் தங்கும் இடமாக கச்சதீவு விளங்கியது. இலங்கயின் எல்லையிலும் இந்திய மீனவர்கள் சிலசமயம் மீன் பிடிப்பார்கள். அப்போது எதுவித பிரச்சினையும் ஏற்படவில்லை. இலங்கையில் யுத்தம் ஆரம்பித்தபோது இந்திய மீனவர்கள் மீதான கெடு பிடியும் ஆரம்பமானது. கச்சதீவு இலங்கையின் கைக்கு வந்தபின்னர் தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல் ஆரம்பமாகியது. தமிழ் ஈழம் கோரிப் போராடும் இலங்கித் தமிழர்களுக்கு தமிழக மீனவர்கள் உதவி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இலங்கை அரசால் சுமத்தப்பட்டது.

கச்சதீவை இலங்கைக்குக் கொடுக்கும் போது தமிழக மீனவர்கள் கச்சதீவில் தங்குவதற்கும் வலைகளை காயப்போடுவதற்கும் அங்குள்ள     சேர்ச்சின் வருடாந்த உற்சவத்தில் இந்திய மக்கள் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படும் என ஒப்பந்தத்தில் எழுதப்பட்டது.   யுத்தம் கொடூரமாக நடந்த போது  ஒப்பந்தம்  கடலிலே மூழ்கடிக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டுக்குப்பின்னர் கச்சதீவு  சேர்ச்சுக்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை கச்சதீவை மையமாக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களினால் எண்ணற்ற  தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர். பலர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இன்னும் பலர் காணமல் போயினர்.  தமிழக மீனவர்களுக்கு வருமானம் தரும் மீன்வகை இலங்கை  கடல் பரப்பில் அதிகளவில் காணப்படுவதே இப்பிரச்சினைக்குமுக்கிய  காரணம். இதனைத் தடுப்பதற்கான எந்த விதமான வழி முறைகளையும் இரு நாட்டு அரசாங்கங்களும் ஏற்படுத்தவில்லை. அதனால் தமிழக மீனவர்கள் மிக  மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இரண்டு நாடுகளின் ஒப்பந்தத்தில் மாநில அரசு ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதைத் தெரிந்து கொண்டும் மீனவர்களில் வாக்குகளைக் குறிவைத்து தமிழக அரசியல் தலைவர்கள் வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றனர். தேர்தல் திருவிழா முடிவடைந்ததும் வாக்குறுதி மறக்கப்பட்டுவிடும். தமிழக மீனவர்கள் கச்சதீவை ஏக்கத்துடன் பார்த்து வருந்துவதைத் தவிர வேறு வழி இல்லை.
வர்மா

Saturday, April 23, 2016

வைகோவுக்கு முன்னால் காத்திருக்கும் சவால்

தமிழக  அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மிளிர்ந்த  வைகோவை பிரதான திராவிடக் கட்சிகள் இரண்டும் திட்டமிட்டு ஓரம் கட்டின. வைகோவின் அரசியல் முடிவடைந்து விட்டது என்றே பிரதான கட்சிகள் இரண்டும் நம்பி இருந்தன.   திராவிட முன்னேற்றக் கழக‌ம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் ஆகியவற்றால் கழற்றி விடப்பட்ட கட்சிகளை ஒன்றிணைப்பதில் வெற்றி பெற்ற வைகோ பலமான மூன்றாவது அணியை உருவாக்கினார். திராவிட முன்னேற்றக் கழக‌த்தில் இருந்து வெளியேறினால்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம். இரண்டு கழகங்களும் இல்லை என்றால் காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதாக் கட்சி என்ற வரைமுறையை உடைத்து  மூன்றாவது அணியை உருவாக்கி  புதிய ஒரு அரசியல் பாதையை அமைத்துள்ளார் வைகோ.

திராவிட முன்னேற்றக் கழக‌ம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் ஆகியவற்றை நம்பி ஏமாந்த கட்சிகள் அனைத்தும் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயருடன்  ஓரணியில் நிற்கின்றன.வைகோ, திருமாவளவன்,இடதுசாரித் தலைவர்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் பாதையை உருவாக்கினார்கள். விஜயகாந்த், வாசன் ஆகியவர்களையும் தம்முடன் இணையும்படி அறைகூவல் விடுத்தனர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தைத் தவிர ஏனைய கட்சிகளுடன் பேரம் பேசிய விஜயகாந்த் இறுதித் தருணத்தில் மக்கள் நலக் கூ ட்டணியில் இணைந்தார். ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வைக்காக கடைசிவரை காத்திருந்து ஏமாந்த வாசன் போக்கிடம் இன்றி மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார் பலத்த இழுபறியின்  பின்னர் மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப்பங்கீடு முற்றுப் பெற்றது. 

மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப்பின்னர்     மீண்டும் சட்டசபைத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். வைகோ தேர்தல்களில் போட்டியிட்டது மிக மிகக் குறைவுதான். இதுவரை அவர் மொத்தமே 5 முறைதான் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அதிமுக முறை அவர்  ராஜ்யசபை உறுப்பினராக இருந்துள்ளார்.

அரசியல் போராளியாக அறியப்பட்டாலும் தேர்தலுக்கும் வைகோவுக்கும் ஏழாம் பொருத்தம்தான். போட்டியிட்ட பல தேர்தல்களில் அவர் தோல்வியையே பரிசாக பெற்றுள்ளார். இம்முறை கோவில்பட்டி அந்த மோசமான சரித்திரத்தை மாற்றி எழுதுமா என்பதே   தொண்டர்கள் எதிர்பார்ப்பு. திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட பிறகு 1994ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்  என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். 1996ம் ஆண்டு முதன்முறையாக சட்டசபை தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. திமுக மற்றும் அதிமுகவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கூட்டணியுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்  போட்டியிட்டது.

 ஒரு தொகுதியிலும்   வெற்றி பெற முடியவில்லை. வைகோ தான் போட்டியிட்ட விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் தோற்றார். அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்  தேர்தலின்போது சிவகாசி தொகுதியிலும் தோல்வியே கிடைத்தது வைகோவுக்கு.


  1998 மற்றும் 1999ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வைகோ வெற்றிபெற்றார். 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பெற்றிபெற நல்ல வாய்ப்பு இருந்தும் வைகோ போட்டியிடாமல் கட்சியை சேர்ந்தவருக்கு தொகுதியை விட்டுக்கொடுத்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ், மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.   

   ஆனால் 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்  தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட வைகோ தோல்வியைத்தான் தழுவினார். 2011ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மதிமுக போட்டியிடப்போவதில்லை என்று வைகோ அறிவித்துவிட்டார்.

 2014 நாடாளுமன்றத்  தேர்தலில்  பாரதீய ஜனதாக்  கூட்டணியை தமிழகத்தில் அமைக்க   முனைப்பாக உழைத்த வைகோ, விருதுநகரில் மீண்டும் தோற்றார். ஜெயலலிதாவின் அலையில் வைகோவும் அடித்து செல்லப்பட்டார்

 தமிழக அரசியலில் மிகப்பெரிய போராளியாக பார்க்கப்படும் வைகோ, தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளில் உடனுக்குடன் குரல் கொடுப்பவர். ஆனால் வைகோ ஒரு ராசியில்லாத ராஜாவாகவே பார்க்கப்படுகிறார். இந்த நிலையில், கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் முடிவை வைகோ எடுத்துள்ளார்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தாலும், கோவில்பட்டி தொகுதியில் நாடார் ஜாதியினரை தவிர்த்து நாயக்கர் உள்ளிட்ட பல ஜாதி பிரிவினரும் கணிசமாக வசிக்கிறார்கள். கட்சி, அரசியலை தாண்டி ஜாதி பலமும் வைகோவுக்கு கை கொடுக்க வாய்ப்புள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்   தொண்டர்கள்.

 கொம்யூனிஸ்ட்களின் கோட்டையான கோவில்பட்டியில் வைகோ வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தொடர்ந்து ஏழு முறை கொம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டியில் வெற்றி பெற்றுள்ளது. கோவில்பட்டியை விட்டுக்கொடுக்க கொம்யூனிஸ்ட்கள் முதலில் விரும்பவில்லை. மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோவுக்கு பாதுகாப்பான தொகுதி வேண்டும் என்பதால் கோவில்பட்டியை கொம்யூனிஸ்ட்கள் விட்டுக்கொடுத்தனர்.

வைகோவின் வெற்றி மிக இலகுவானதாக இருக்கப்போவதில்லை. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் வைகோவை  வீழ்த்துவதற்கு தனித்தனியாக வியூகம் அமைக்க உள்ளன. வைகொவுன் தோல்வி மக்கள் நலக் கூட்டணிக்கு பலத்த அடியாக இருக்கும் என்பதனால் வைகோவுக்கு எதிரான பிரசாரம் கோவில்பட்டியில் அனல் பறக்கும் என்பது உறுதியானது. வைகோவின் தோல்வி மக்கள் நலக் கூட்டணியின் தோல்வியாகக் கருதப்படும் என்பதனால் கூட்டணித தலைவர்கள் அனைவரும் வைகோவின் வெற்றிக்காக கோவில்பட்டியில் முகாமிடுவர்கள்.
 தமிழ்த்தந்தி
 25/04/16


Tuesday, April 19, 2016

ஏமாற்றம் தந்த வடமாகாண அமைச்சரவை மாற்றம்


வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போது  மிகப்பெரிய ஒரு வரலாற்றுச்  சாதனையைப் புரிந்த மனமகிழ்ச்சி தமிழ் மக்களிடம் இருந்தது.யுத்த  வெற்றியில் திளைத்திருந்த அன்றைய அரசாங்கத்துக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை மிகச் சரியான வகையில் நிறைவேற்றிய திருப்தி தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. ஆயுத்தத்தால் அடக்கிய அரசாங்கததுக்கு வாக்கின் பலத்தை உணர்த்திய அலை ஓய்வதற்கிடையில்  அமைச்சுப்பதவியைப் பெறுவதற்கான நுண் அரசியல் ஆரம்பமாகியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை தமிழ் அரசுக்கட்சி மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாகத் தொடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை தமிழ் அரசுக்கட்சி மறுத்தாலும் ஏனைய கட்சிகள் ஏற்கத்தயாராக இல்லை.  நான்கு அமைச்சுப்பதவியைப் பெறுவதற்கான மரதன் நடைபெற்றது. தோழமைக் கட்சித் தலைவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். அன்று ஆரம்பமான  அதிருப்தி இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகளும் பொது மக்களும் குறைகூறிய காலம்  போய் அவர்களை மாற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக உறுப்பினர்கள்  போர்க்கொடி தூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் இடையிலான விரிசல் உச்சக்கட்டத்தை அடைந்த போது முதலமைச்சரை மாற்றுவதற்கான சதி உருவாகிறது என்ற கருத்து மேலோங்கியது. அந்தப் பிரச்சினை அடங்கியபோது அமைச்சர்களுக்கு எதிரான கருத்து முன்னிலை பெற்றது. வினைத்திறன் அற்ற அமைச்சர்களை மாற்றி அவர்களுக்குப்  பதிலாக புதியவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோஷம் மேலெழுந்தது.

வடமாகாணசபைத் தேர்தல் 2013  ஆம் ஆண்டு  செப்ரெம்பர் மாதம்  21 ஆம் திகதி நடைபெற்றது.  மாகாணசபைக் கட்டடம், அமைச்சர்கள் நியமனத்தில்  ஏற்பட்ட இழுபறி காரணமாக ஒக்டோபர்  மாதம்   11 ஆம் திகதி  அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்தார்கள்.  இரண்டரை வருடங்களில் அமைச்சரவை மற்றம் செய்யப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. இதனை மக்கள் மறந்துவிட்டார்கள். சக உறுப்பினர்கள்   மனதில் வைத்திருந்து இப்போது ஞாபகப்படுத்துகிறார்கள். வடமாகாணசபையின் அமைச்சர்களை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கும் அணிக்கு வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி  ஜெகநாதன் உரத்துக் குரல் கொடுக்கிறார். வடமாகாணசபையில் 30 உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.  16 உறுப்பினர்கள் அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்ற கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் கை எழுத்திட்டமையினால்  அமைச்சர்களை மாற்ற  வேண்டும் என அன்ரனி ஜெகநாதன் வாதாடுகிறார்.

யுத்தத்தினால் மிக மோசமாகப்  பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு  மாவட்டத்தைச் சேர்ந்த எவரும் அமைச்சராக இல்லை.  தான் பிரதிநிதித்துவப்படுத்தும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி ஒன்று கிடைக்காத காரணத்தினால் மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என அன்ரனி ஜெகநாதன்  கூறியுள்ளார்.

இதனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களை செய்து முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஜெகநாதன் கூறியுள்ளார்.வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டப் பிரதிநிதிகளுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சு பதவிகள் வழங்கும் போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சு பதவியை வழங்காதது அநீதியானது.

அத்துடன் வடக்கு மாகாண சபையில் இருக்கும் தற்போதைய அமைச்சர்கள் மூலம் எதிர்பார்த்த அபிவிருத்தியை அடைய முடியாது.தற்போதுள்ள அமைச்சர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களின் அபிவிருத்திக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கி வருவதாகவும் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தியை புறந்தள்ளியுள்ளதாகவும் ஜெகநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடமாகாணசபையின் அமைச்சர்களை மற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒருவரை மட்டும்  குறி வைக்காது நான்கு அமைச்சர்களையும் மற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பெண்களுக்கு மதிப்புக்கொடுத்து அமைச்சுப்பதவி கொடுக்க வேண்டும் என்ற ஆதங்கம் பெண்களிடம் இருக்கிறது. பெண்களின் மனதில் உள்ள விருப்பம் வெளிவரவில்லை.

வடமாகாணசபை உறுப்பினர்களுக்கும் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது  வடமாகாணசபையின் அமைச்சர்களை மற்ற வேண்டும் என்ற கடிதத்தை    தலைவர் இரா.சம்பந்தனிடம் அன்ரனி ஜெகநாதன்   கையளித்தார். வடமாகாண முதலமைச்சர்,அவைத்தலைவர், அமைச்சர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.அமைச்சர்களை மற்ற வேண்டும் என்ற கடிதத்தை வாங்கிய தலைவர், அமைச்சர்களை மற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று  பதிலளித்தார்.

வடமாகாணசபையில் சில குறைபாடுகள் இருக்கிறதென வெளியான விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட தலைவர்,   அமைச்சர்களின் செயற்பாடு திருப்திகரமாக இருக்கிறதெனத் தெரிவித்தார். முதலமைச்சர் மீதும் , அமைச்சர்கள் மீதும் பிழை இல்லை.. 13 ஆவது திருத்தச்சட்டத்தில்  உள்ள குறைபாடுதான் இதற்குக் காரணம் என்றார். அரசியமைப்பை மீறி முதலமைச்சரும் அமைச்சர்களும் செயற்பட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இரண்டரை வருடங்களில் அமைச்சர் பதவி கைவிட்டுப்போகும் எனப் பயந்தவர்கள் நிம்மதியடைந்தனர். அமைச்சராகலாம் என நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள்.
வர்மா
துளியம்





Sunday, April 17, 2016

காங்கிரஸின் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் அஸாம்


தமிழகம்,புதுச்சேரி,அஸாம்,மேற்கு வங்காளம்,கேரளா ஆகிய ஐந்து மாநிலத்தேர்தல்கள்  இந்திய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தப்போகின்றன.  இவற்றினுள் அஸாம் மாநிலத்தேர்தல் அரசியலில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அஸாமில் தொடர்ந்து  நான்கு வருடங்களாக காங்கிரஸ் ஆட்சி  நடைபெறுகிறது. இம்முறை அஸாமின் பாரதீய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸுக்கும்  பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையிலான பலப் பரீட்சையாக அஸாம் தேர்தல் களம் உள்ளது.

 டில்லி,பீகார் ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் படு தோல்வியடைந்த பாரதீய ஜானதா  அஸாமில் ஆசியைப்பிடித்து  புதிய சரித்திரத்தை ஏற்படுத்த எண்ணியுள்ளது. பாரதீய ஜனதாவின்  வெற்றிக்கு வித்திடும் விதத்தில்  நாடறிந்த  பிரதமர் மோடியை பிரதானப்படுத்தாமல் அந்த மாநில மக்களுக்கு நன்கு பரிச்சயமான மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவாலை முதல்வர் வேட்பாளராக பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. அஸாமில் இரண்டு முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்த முக்கிய மாநிலக் கட்சியான அஸாம் கண பரிஷத் கட்சியுடன் பாரதீய ஜனதா  வலுவான கூட்டணி அமைத்து களம் கண்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியும், பாஜக கூட்டணியும் நீயா? நானா? என்ற ரீதியில் போட்டியிடும் அஸாமில், கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 82.20 சதவீதம் வாக்குகள் பதிவாகின  கடந்த 2011ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளைவிட 12 சதவீதம் அதிகமாகும்.

"தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகமானால், பொதுமக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என அர்த்தம்' என்ற பொதுவான அரசியல் வரையறையின்படி, அஸாமில் இந்தமுறை எப்படியும் ஆட்சியைப் பிடித்து, அங்கு காங்கிரஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை பாரதீய ஜனதாக்  கூட்டணிக் கட்சியினர் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.   அஸாமில் கடந்த திங்கள்கிழமை (ஏப்.11) நடைபெற்ற   இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம், இரண்டாம்கட்டத் தேர்தல் நடைபெற்ற    61 சட்டப்பேரவைத் தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் "கை' ஓங்கியுள்ள இடங்களாகும். அஸாமின் மத்திய மற்றும் சமவெளிப் பகுதிகளில் அமைந்துள்ள இந்த 61 தொகுதிகளில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களைக் கைப்பற்றியது. மாறாக பாஜக கூட்டணி 17 இடங்களில்தான் வெற்றி பெற்றது. எனவே காங்கிரஸ் வலுவாக உள்ள இந்த மாவட்டங்களில், பாரதீய ஜனதா  கூட்டணி அதிகப்படியான வாக்குகளைப் பெற்றால் மட்டுமே, அதன் "மிஷன் 84'(பெரும்பான்மை இடங்களில் வெற்றி) எண்ணம் வெற்றி பெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிரான மாநில மக்களின் மனநிலையும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு அலைகடலென திரளும் மக்கள் கூட்டமும் பாஜகவுக்கு சாதகமான அம்சங்கள்தான். இருந்தாலும் இரண்டாம்கட்டத் தேர்தல் நடைபெற்ற மாவட்டங்களில் பெருவாரியாக உள்ள சிறுபான்மையினரின் ஆதரவு காங்கிரஸýக்கு உள்ளதால் கடைசி நேரத்தில் தேர்தல் முடிவுகள் மாற வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
அஸாமில் திங்கள்கிழமை நடைபெற்ற இரண்டாவது இறுதிக் கட்ட தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85 சதவீத வாக்குகள் பதிவாயின. ஒட்டுமொத்தமாக அங்கு 81.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
 அஸாமில் வன்முறையின்போது சிஆர்பிஎஃப் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்


 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குவாஹாட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அவரது மனைவி குர்சரண் சிங் கெளரும்வாக்களித்தார்.மன்மோகன் சிங் 1991-ஆம் ஆண்டு முதல் அஸ்ஸாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.  அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் மீது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி போலீஸார் தங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.தேர்தல் நடைபெற்றபோது தருண் கோகோய் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இது தவறாகும். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தலின் இரண்டாவது பிரிவாக கடந்த திங்கட்கிழமை  நடைபெற்ற தேர்தலின் போது 79.51 சதவீதம் வாக்குகள் பதிவாயின..மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில்முதல் கட்டத் தேர்தல்இ இரு பகுதிகளாக நடத்தப்படுகிறது. முதல் பகுதியாக கடந்த 4ஆம் திகதி  18 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து மேற்கு மிதுனபுரி, பாங்குரா, பர்த்வான் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள  31 தொகுதிகளுக்கு   2ஆவது பகுதியாக தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர்.ஒரு சில வாக்குச்சாவடிகளில் இடதுசாரி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஜமூரியாவில் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர், திரிணமூல் காங்கிரஸ் கட்சியிரால் தாக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வாக்குப்பதிவை பாதிக்கக் கூடிய அளவுக்கு வன்முறை சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.இந்த தேர்தலில் 79.51 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறின.
  
தமிழகம்,புதுச்சேரி, கேரளா,அஸாம் , மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்கு  பணம் கொடுப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.உரிய ஆதாரங்கள் இன்றி பெருமளவில் பணத்தை எடுத்து செல்கிறபோது, அதை தேர்தல் கமிஷனின் பறக்கும் படை பறிமுதல் செய்து வருகிறது.இதுவரை உரிய ஆதாரமின்றி சட்டவிரோதமாக எடுத்துச்செல்லப்பட்ட   53 கோடி ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 21.45 கோடி ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் அஸாம்உள்ளது.அங்கு11.66கோடிரூபாபறிமுதல்செய்யப்பட்டுள்ளது.கேரளாவில்  9.65 கோடி ரூபாவும்  மேற்கு வங்காளத்தில் 9.61 கோடி ரூபாவும் புதுச்சேரியில் ரூ.60.88 லட்சம் ரூபாவும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் மூத்த அதிகாரி ஒருவர் இந்த தகவல்களை தெரிவித்தார்.

கரூரில் தனியார் தொலைக்காட்சி நிருபர் குடியிருக்கும் வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படம் பொறித்த 695 சுவர் கடிகாரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்  . கரூர் தொகுதி தேர்தல் பறக்கும்படை அலுவலர் சொர்ணமாணிக்கம் தலைமையிலான குழுவினர், கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள தனியார் தொலைக் காட்சி நிருபர் பத்மநாபன் குடியிருக்கும் பகுதியில் கடந்த வாரம்  சோதனை நடத்தினர்.

 அப்போது 18 அட்டைப் பெட்டிகளில் சுவர் கடிகாரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை சோதனை செய்தபோது அந்த கடிகாரங்களில்     இரட்டை இலை சின்னத்துடன் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் அச்சிடப்பட்டு  வி.செந்தில்பாலாஜி, மாவட்டச் செயலாளர் போக்குவரத்துத் துறை அமைச்சர் என அச்சிடப்பட்டுள்ளது. இதையடுத்து 695 சுவர்க் கடிகாரங்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவற்றை கரூர் நகர பொலிஸில் ஒப்படைத்தனர். கடந்த ஆண்டு ஆசிரியர் தின விழாவையொட்டி ஆசிரியர்களுக்கு வழங்குவதற்காக இந்த சுவர்க் கடிகாரங்கள் தயார் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது

தமிழகம்,புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெறுவதை நினைத்தும் பார்க்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழக்த்தின் புண்ணியத்தில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் இருக்கிறது. இந்த நிலையில் அஸாம் மாநிலத்தேர்தல்   காங்கிரஸுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் கெளரவப்பிரச்சினையாக மாறியுள்ளது.
ரமணி
தமிழ்த்தந்தி
17/04/16





விஜயகாந்தின் நிம்மதியை குலைத்த விசுவாசிகள்

தமிழக அரசியல் தலைவர்களை குழப்பியடித்து   தடுமாற வைத்த விஜயகாந்த்     அவரது கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களின் செயற்பாட்டினால்   நிம்மதி இழந்து தவிக்கிறார். விஜயகாந்தின் வாக்கு வங்கியினால் வெற்றி பெறலாம் என கணக்குப்போட்டிருந்த கட்சித் தலைவர்கள் விஜயகாந்த் தம்முடன் வருவர் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தனது கட்சிக்கு அதிக  தொகுதிகளும் மனைவிக்கும் மைத்துனருக்கும் பெரிய பதவிகளையும் எதிர்பார்த்து விஜயகாந்த் பேச்சு  வார்த்தை நடத்தினார். விஜயாகாந்த் எதிர்பார்ப்பை யாருமே நிறைவேற்றவில்லை.வெறுத்துப் போன விஜயகாந்த் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.அவரது அறிவிப்பு கட்சியில் உள்ளவர்களை கலங்கடித்தது.

திராவிட முன்னேற்றக் கழக‌கத்துடன்  இணைந்து தேர்தலைச்  சந்திக்க  வேண்டும் என்பதே விஜயகாந்தின் கட்சியில் உள்ள பலரின் விருப்பம். அவரின் மனதை மாற்றி  திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேரலாம் என அவர்கள் எதிர்பார்த்தனர். அனைவரின் விருப்பத்தையும் தவிடு பொடியாக்கிய விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியுடன்  சேர்ந்தார். அவரின் முடிவை ஏற்றுக்கொள்ளாதவர்கள்  போர்க்கொடி தூக்கினர். முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரி காலக்கெடு விதித்தனர். விஜயகாந்த் தனது முடிவை மாற்றவில்லை. ஆகையால்  விஜயகாந்தை எதிர்த்தவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்தனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரகுமார் தலைமையிலான அணியில் கும்மிடிபூண்டி சேகர், மேட்டூர் பார்த்திபன் ஆகிய சட்டசபை உறுப்பினர்களும்  ஈரோடு வடக்கு-தெற்கு திருவண்ணாமலை வேலூர் சேலம் மேற்கு திருப்பூர்உட்பட பத்து  மாவட்டச் செயலாளர்கள்  கட்சியை விட்டு வெளியேறி  மக்கள்  தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

விஜயகாந்த் வருவர் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தனது அஸ்திரத்தைப் பிரயோகித்து விஜயகாந்தின்  முடிவால் வெறுப்புற்றவர்களுக்கு வலை வீசியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலையில் சந்திரகுமார் தலைமைமயிலான அணி விழுந்தது.விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்ட போது திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஆகியவற்றின் வாக்குகளைப் பிரித்தார்.  ஜெயலலிதாவுடன் சேர்ந்தபோது எதிர்க்கட்சித்தலைவர் பதவி தேடி வந்தது. விஜயகாந்த்,அவரது மனைவி பிரேமலதா,மைத்துனர் சுதீஷ் ஆகியோரே கட்சியில் பிரதானிகள். அவர்களைத்தவிர வேறு யாரும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தவர்களின் பெயர் பத்திரிகைகளில் அடிபட்டது. ஜெயாதொலைக்கட்சியில் அவர்களை முன்னிலைப்படுத்தினர்கள் தன்னை நம்பி இருந்த தேசிய முற்போக்கு திராவிடகழக  சட்ட மன்ற உறுப்பினர்களை ஜெயலலிதா கைவிட்டுவிட்டார். ஒருவருக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கி உள்ளார். அவர் வெற்றி  பெறுவார்  என்பது சந்தேகம்.


விஜயகாந்தின் கட்சியில் இருந்து பிரிந்தவர்களுக்கு சன் கலைஞர் ஆகிய தொலைக்காட்சிகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. சமூகத்துக்கும் மக்களுக்கும் சேவை செய்யும் அரசியல், தொலைந்து நீண்ட காலமாகிவிட்டது. விஜயகாந்தின் கட்சியை வளர்ப்பதற்காக தண்ணீராக பணத்தைச்  செலவு செய்தவர்கள் இன்று கடனாளியாகி விட்டனர். போட்ட பணத்தைத்  திரும்ப எடுக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலையில் விழுந்துள்ளனர். 
 சந்திரகுமார் விலகியதைவிட சி.ஹெச்.சேகர் உள்ளிட்டோர் விலகியது தான் விஜயகாந்த் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சி எனக்  கூறப்படுகிறது.சி.ஹெச்.சேகர் விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமானவர் பல விஷயங்களில் ஆலோசனை கொடுப்பவர். அதே போல்    கட்சியின் மாநில நிர்வாகியான தேனி முருகேசன் விஜயகாந்தின் அதி தீவிர பக்தர். ரசிகர் மன்றத்தில் இருந்து விஜயகாந்தை போலவே உடையணிந்து வலம் வந்த நபர்.   தேசிய முற்போக்கு திராவிட கழக நிவகிகளில்  பலர் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்தின் கட்சியில் இருந்த பலரின் பெயர் இப்பொழுதுதான் மக்களுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது.

விஜயகாந்தின் வெற்றிக்குப் பின்னால் அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகம்,ஜெயலலிதாவின் செல்வாக்கு, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு, என்பனவும் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் ஆகியவற்றின் எதிர்ப்பு என்பவவும் இருந்தன. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சிகளின் வாக்கு வங்கியைவிட சாதி வாக்கு முக்கியமானது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் விஜயகாந்தின் கட்சியை விட்டு விலகியவர்களுக்குப் பதிலாக அதே சாதியைச்சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவைரைத் தேடிப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்ட மன்றத்  தேர்தலில் விஜயகாந்தின் கட்சிக்கு இருந்த செல்வாக்கு இப்போது குறைந்துள்ளது.  சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றிபெற்ற விஜயகாந்த் அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் படு  தோல்வியடைந்தார். விஜயகாந்த் கட்சியை ஆரம்பித்த போது சுமார் 50 தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் பலம் அவரிடம் இருந்தது.  அதே போன்ற சக்தி இப்போது அவரிடம் இல்லை. விஜயகாந்த் கட்சியை ஆரம்பித்த போது  அவரே  முன்னிலை வகித்தார். விஜயகாந்த் இன்று மெளன காந்தாக  மாறிவிட்டார். விஜயகாந்தின் வாய் பொல்லாதது. ஆகையினால் அவர் வாய் மூடி மெளனியாகிவிட்டார். கட்சியின் முடிவு அனைத்தையும் பிரமலதா தான்  மேற்கொள்கிறார். கட்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் பிரேமலதாவையே குற்றம் சாட்டுகின்றனர்.

பிரேமலதாவின் விருப்பத்துக்காகவே விஜயகாந்த் மக்கள் நலக்  கூட்டணியுடன் சேர்ந்தார். பிரேமலதாவின்  பிரதான எதிர்க்கட்சி திராவிட முன்னேற்றக் கழகம.  கருணாநிதியும் ஸ்டாலினும் அவரது பிரதான எதிரிகள். ஜெயலலிதாவையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அவர் விமர்சிப்பதில்லை. மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் ஐக்கியமானபோது  அவர் எதுவுமே  பேசவில்லை. வைகோதான் விளக்கமளித்தார். கொள்கை விளக்கக் கூதடத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த் எதுவும் பேசாது அமைதியாக இருந்தார். அவரைப் பேச அழைத்தபோது  திக்கித் திணறி எல்லோரும் பேசிட்டாங்க நான் என்னத்தைப் பேச எனக்கூறி அமர்ந்துவிட்டார்.

வருங்கால முதல்வரின் முக்கிய உரையை கேட்பதற்கு ஆவலுடன் காத்திருந்தவர்கள் ஏமாந்துவிட்டனர். தனது நம்பிக்கைக்குரிய விசுவாசிகள் கட்சியை விட்டு வெளியேறி புதிய கட்சி ஆரம்பித்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவதைப்ப்றி ஏதாவது சொல்வர் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.  அதைப்பற்றி அவர் எதுவும் இதுவரை பேசவில்லை. அவருக்காகக வைகோதான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக சவால் விடுகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எதிர்த்து அரசியல் செய்த விஜயகாந்த் தனது கட்சியினரை  எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழ் நிலை தோன்றியுள்ளது. கட்சியில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும்  சேர்ந்தவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில்  தனது கட்சி உறுப்பினரை தேர்தலில் நிறுத்தி தனது வெற்றியை உறுதி செய்வாரா அல்லது மக்கள் நலக் கூட்டணிக்கு  விட்டுக்கொடுப்பாரா என்பது இன்று பெறுமதியான கேள்வியாக உள்ளது.
தமிழக அரசியல் தலைவர்களை ஆட்டிப்படைத்த விஜயகாந்தை அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் அசைத்துள்ளனர். இவர்களை போன்று இன்னும் சிலர் வெளியேறினால் அவரது கட்சிக்கு ஆபத்து  அதிருப்தியாளர்களை தன் வழிக்குக் கொண்டுவரவில்லையானால் கட்சியில் பெரும் பின்னடைவு ஏற்படும்.
வர்மா
தமிழ்த்தந்தி
17/04/16




Tuesday, April 12, 2016

தமிழரின் யோசனையை ஏற்குமா சிங்களம்


இலங்கையை காலம் காலமாக ஆண்டுவந்த சிங்கள மேலாதிக்க அரசாங்கங்கள் தமது இருப்பைத் தக்க வைப்பதற்காக தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி சிங்கள மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டின. இதன் உச்சக்கட்டமாக பெளத்த மதத்துக்கு முன்னுரிமை, சிங்களம் மட்டும் சட்டம்,தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், பல்கலைக் கழகத்தில் பயில்வதற்கு இனவிகிதாசார அனுமதி என்பனவற்றை அமுல்படுத்தி சிங்கள மக்களின் மனத்தைக் குளிர்வித்து தமிழ் மக்களை புறக்கணித்தனர்.

தமிழ் மொழிக்கு சம உரிமை என சட்டத்தில் எழுதிவிட்டு சட்டத்தை மதிக்காது சிங்களத்தை முதன்மைப்படுத்திய   தலைவர்களினால் எழில் மிகு இலங்கை பிரச்சினை உருவானது.  புதிய இலங்கையை உருவாக்க திட சங்கற்பம் பூண்டிருக்கும் நல்லிணக்க அரசாங்கம் அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு ஆலோசனையை பரிந்துரைக்குமாறு கேட்டுள்ளது.கேட்டுள்ளது.  அரசியல் கட்சிகளும் நிறுவனங்களும், தனி நபர்களும் தமது ஆலோசனையை சமர்ப்பித்தன. வடமாகாண சபையும்   தனது ஆலோசனையை சமர்ப்பித்துள்ளது.  வடமாகாண சபையா தயாரித்துள்ள அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு திட்டத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

வடமாகாண சபையின் 49 ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரவைக் கட்டடத்தில்   வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு முன்மொழிவுகளை சபையில் முன்வைத்து முதலமைச்சர் உரையாற்றினார்.அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள்
வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும் சிங்கள மக்கள் வாழும் ஏனைய மாகாணங்கள் இன்னொரு மாநிலமாகவும் பிரகடனம் செய்யப்படவேண்டும். முஸ்லிம் மக்களுக்கும் தெற்கில் மலையக மக்களுக்கும் தன்னாட்சிப் பிராந்தியம் உருவாக்கப்பட வேண்டும்

இந்தியாவில் மாநிலங்கள் மொழி ரீதியாகப் பிரிக்கப்பட்டிருப்பதைப் போன்று இலங்கையானது அடிப்படையில் இரண்டு பரந்த மாநிலங்களாக அதாவது பெரும்பான்மையாகத் தமிழ் பேசும் பிரதேசத்தைக் கொண்ட வடக்குஇ கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும் மற்றும் பெரும்பான்மையாகச் சிங்களம் பேசும் மக்களைக் கொண்ட ஏனைய ஏழு மாகாணங்கள் இன்னொரு மாநிலமாகவும் பிரகடனப்படுத்தப்படல் வேண்டும்.

இவ்விரு பரந்த மொழி ரீதியான மாநிலங்களிலும் தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் வடக்கு மற்றும் கிழக்கில் ஓர் அலகாகவும் தமிழ் பேசும் மலையகத் தமிழர்கள் நாட்டின் ஏனைய பகுதியில் ஓர் அலகாகவும் இனங்காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படல்வேண்டும்.
சிங்களம் பேசுவேரைக் கொண்ட மாநிலமானது அதனுள்ளே பிரிக்கப்படல் வேண்டுமா என்ற கேள்வியானது சிங்கள மக்களால் தீர்மானிக்கப்படல் வேண்டும்.
பெரிய நகருக்குரிய கொழும்புப் பகுதியானது தனியானதோர் நிர்வாகத்தைக் கொண்டு நாட்டின் தலைநகர் அலகாக அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

இலங்கையில் தமிழ் பேசுவோரைக் கொண்டுள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களினுள் தற்போதைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒன்றிணைத்தலின் போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபையானது உருவாகும்.
இத்தன்னாட்சிப் பிராந்தியத்தின் நிலை பரிமாணம் மற்றும் நியாயாதிக்க எல்லைகள் ஆகியன தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டும்.
மொழி ரீதியிலான தமிழ் பேசும் வடகிழக்கு மாநிலமானது மாநிலப் பாராளுமன்றத்தைக் கொண்டிருக்கும்

மலையகத் தமிழர்களுக்காக அதேபோன்ற ஒழுங்குகள் சிங்கள மொழிரீதியான மாநிலத்தினுள் மேற்கொள்ளப்படல்வேண்டும். அதிகாரமானது ஒரு சமூகத்தில் குவிக்கப்படும் அபாயத்தைத் தவிர்த்து அதிகாரங்கள் சகல சமூகங்களுக்கிடையேயும் சமனாகப் பகிரப்படுவதை முழு நாட்டினதும் பாராளுமன்றப் பிரதிநிதிகள் உறுதி செய்தல் வேண்டும்.
எது எவ்வாறு இருப்பினும் வடகிழக்கு மாநிலம் மற்றும் முஸ்லிம் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் மலையகத் தமிழ் தன்னாட்சிப் பிராந்தியம் பாதிக்கத்தக்கவாறு மத்திய கூட்டாட்சி சமஷ்டிப் பராளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் உரிய மாநிலத்தாலோ அல்லது தன்னாட்சிப் பிராந்தியங்களாலோ அங்கீகரிக்கப்படாத வரை நடைமுறைக்கு வரக்கூடாது.

வடகிழக்கு மாநிலப் பாராளுமன்றம் வடகிழக்கு முஸ்லிம் பிராந்திய சபை அதேபோல் மலையகத் தமிழ்ப் பிராந்திய சபை ஆகியவற்றுக்கு தமது சொந்த அலுவல்களை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் முழுமையாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்படல் வேண்டும்.
இப்பாராளுமன்றத்துக்கும் பிராந்திய சபைகளுக்கும் போதி சுயாட்சியானது ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். இலங்கையை விடப் பரப்பளவிலும் குடித்தொகையிலும் சிறிய நாடாகிய சுவிற்சர்லாந்தில் நடைமுறையிலுள்ள கன்டோன் நாட்டுப் பிரிவு முறைமையானது அவசியமான மாற்றங்களுடன் இங்கு சுவீகாரஞ் செய்வதற்காகப் பரிசீலிக்கப்படமுடியும்.
தமிழ்ப்பேசும் மாநில அரசில் மத்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர் நிறைவேற்று அதிகாரம் எவற்றையும் கொண்டிருக்கமாட்டார். அவை மாநிலத்தின் அமைச்சரவையினாலேயே முழுமையாக தன்னுடைமையாக்கப்படும்.

இலங்கையின் அரசகரும மொழிகள் சிங்களமும் தமிழும் ஆவதுடன் ஆங்கிலமானது இணைப்பு மொழியாகவும் இருத்தல் வேண்டும். வடகிழக்கு மாநிலத்திலுள்ள சகல பதிவுகளும் நடவடிக்கைகளும் சிங்கள மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பேணப்பட்டு தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும். மலையகத் தமிழ்ப் பிராந்திய சபை தவிர்ந்த தீவின் மீதிப்பாகத்தில் பேணப்படும்
சகல பதிவுகளும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பேணப்பட்டு சிங்களத்தில் இருத்தல் வேண்டும். மலையகப் பிராந்தியத்திய சபைகளில் பேணப்படும் சகல பதிவுகளும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் தமிழிலோ சிங்களத்திலோ நடைபெறலாம். அவற்றின் தமிழ் அல்லது சிங்கள மொழிபெயர்ப்பும் ஆங்கிலமொழி பெயர்ப்பும் பேணப்படவேண்டும்.
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குகையில் தொடர்ச்சியாக வந்த மத்திய அரசாங்கங்களால் சுற்றயல் நிர்வாகங்களை வலிதற்றதாக்குவதன் பொருட்டு இதுவரை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இல்லாதொழிக்கப்படல்வேண்டும்.

ஒவ்வொரு மாணவரும் தேசிய மொழிகளிலும் இணைப்பு மொழியிலும் தேர்ச்சிபெற்றிருப்பதைக் கட்டாயமாக்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட அனுமதிக்கப்படவேண்டும்.
குடியரசின் கொடியானது மக்கள் பிரிவுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் இருப்பதை இல்லாதொழிக்க வேண்டும். தேசிய கீதமானது சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் சிங்களத்திலோ அல்லது தமிழிலோ அல்லது இரு மொழிகளிலுமோ பாடப்படல்வேண்டும்.
தமிழ்பேசும் மக்களுக்கு எதிரான அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைப் புத்தகங்களினூடான நிலைப்பேறான நிகழ்ச்சிநிரலானது இல்லாதொழிக்கப்படல்வேண்டும்.. இலங்கையின் வரலாறானது பிரிவுசார் அல்லது வட்டாரம்சார் கோரிக்கைகளுக்குப் பணிந்திராதுஇ சர்வதேசத் தராதரங்களுக்கு அமைவாக சரியாக வரையப்படல்வேண்டும்

மாநில அரசாங்கத்துக்கு முழுமையான பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும். சமஷ்டி கூட்டரசுக்குரிய பொலிஸானது மாநிலத்தில் அல்லது பிராந்தியத்தில் ஒழுங்கமைப்படுவதில் எவ்வித ஆட்சேபனையுமில்லை.
தீவிரவாதத் தடுப்பு (தற்காலிக) ஏற்பாடுகள் சட்டம் நீக்கப்பட்டு நாட்டின் பொதுவான குடியியல் சட்டமானது மீண்டும் கொண்டுவரப்படல்வேண்டும்.
புதிய அரசியலமைப்பு ஒழுங்குகள் இனம் மதம் மொழி கோட்பாடு சாதி மற்றும் பண்பாட்டைச் சார்ந்திராது சகல சமூகங்களுக்கிடையிலும் சமூக அக்கறையை உறுதிசெய்து தனிப்பட்ட பிரஜைகள் சட்டவிதிகளுக்கும் உரிமைகளுக்கும் சுயஉரிமைகளுக்கும் மதிப்பளித்தலை மேம்படுத்தி பாராளுமன்ற ஜனநாயகத்தின் நேரான இலட்சியங்களைத் தொடர வழி அமைக்கப்படவேண்டும்.

நவீன கண்காணிப்பு முறைகளின் காரணமாக போர் முடிவுற்றமையைத் தொடர்ந்து வடக்கிலும் கிழக்கிலும் இராணுவப்படைகளைக் கண்காணிப்புப் பணிகளுக்காக நிலைநிறுத்த வேண்டிய அவசியப்பாடானது தேவைக்கு மிகையானது.
முன்னாள் போராளிகளை பொது வாழ்க்கையினுள் மீளக் கொண்டு வருவதன் பொருட்டு படைக்குறைப்இ படைக்கலைப்பு மற்றும் மீளவொருங்கமைத்தல் செயன்முறையானது மேற்கொள்ளப்படல் வேண்டும்.

வடமாகாண சபை உருவாக்கிய இதற்கு தெற்கில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  தமிழ் ஈழத்தைப் பெறுவதற்கான முன்னோடி என சிங்களத் தலைவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு சிங்களத் தலைவர்கள் ஒருபோதும்   இணங்க மாட்டார்கள். முஸ்லிம்களும் வடக்கு கிழக்கு இணைப்பை கடுமையாக எதிர்ப்பார்கள். கிழக்கு  மாகாணம் முஸ்லிம்களின் பிரதேசம் என்பதே அவர்களின் நிலைப்பாடு.

தமிழ் பேசும் மாநிலம் இருக்கக்கூடாது என்பது  பெரும்  பெரும் பான்மையான சிங்களத் தலைவர்களின் நிலைப்பாடு. முஸ்லிம் தலைவர்களும் இதற்கு தூபமிடுவார்கள். தமிழில் தேசிய கீதம் படக்கூடாது என்பதில் பிடிவாதமாக உள்ள கடும் போக்காளர்கள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள். இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தி மொழியில் இருக்கிறது என வாதாடும்  சிங்களத் தலைவகள் அப்பாவியான சிங்கள மக்களை தவறாக வலி நடத்துகின்றனர்.
வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தை விளைத்த வேண்டும், முன்னாள் போராளிகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்  தீவிரவாதத் தடுப்பு (தற்காலிக) ஏற்பாடுகள் சட்டம் நீக்கப்பட்டு நாட்டின் பொதுவான குடியியல் சட்டமானது மீண்டும் கொண்டுவரப்படல்வேண்டும்போன்ற ஆலோசனைகளுக்கு  கடும் போக்காளர்கள்  எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்.
 வடமாகாண சபையின் ஆலோசனை ஏற்கப்பட்டால் நல்லிணக்கத்துக்கான பாதை திறக்கப்படும்.

வானதி
சுடர் ஒளி
ஏப்ரல் 13/ஏப்ரல்20




Monday, April 11, 2016

பதுக்கிய பணத்தை பகிரங்கப்படுத்திய பனாமாபேப்பர்ஸ்


உலகின் மதிப்புமிக்கவர்களின் மறுபக்கம் எப்பொழுதும் மாறுபட்டதாகவே இருக்கும். அளவுக்கு மிஞ்சிய சொத்தை பாதுகாப்பதற்கு சட்டவிரோதமான முறையில் முதலீடு செய்தவர்கள் கதி கலங்கிப் போயுள்ளனர். நல்ல பிள்ளைபோல  அரசாங்கத்துக்கு வரிசெலுத்துபவர்கள் தமது கறுப்புப்பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கின்றனர். அவற்றைக் கைப்பற்றுவதற்கு அரசாங்கங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகின்றன. “பனாமா பேப்பர்ஸ்’”’””“ கடந்த  வாரம் கசியவிட்ட இரகசிய ஆவணங்களினால் பணமுதலைகள் திகைத்துப்போயுள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்  புட்டின்,  சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின், ஆர்ஜென்ரீனா ஜனாதிபதி  மாரிசியோ மாக்ரி, ஐஸ்லாந்து தீவு பிரதமர் சிக்மண்டூர் டேவிட் மற்றும் அவரது மனைவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.   , அபுதாபி மன்னரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபருமான கலீபா பின் ஜயத் அல் நஹாயன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பும் இந்த பட்டியலில் உள்ளார். இவரது மகன்களும், மகள்களும் இணைந்து பிரிட்டிஷ் வர்ஜின் தீவில் நிறுவனங்களைத் தொடங்கினர். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த உதைபந்தாட்ட வீரர்  லியானல் மெஸ்ஸியின் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது. இவர் மீது ஏற்கனவே அவரது நாட்டில் பல வரி ஏய்ப்புப் புகார்கள் உள்ளன.. ஹொலிவுட் நடிகர் ஜாக்கி சானின் பெயரும் இப்பட்டியலில் உள்ளது. எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், லிபிய முன்னாள் ஜனாதிபதி கடாபி உள்ளிட்ட பல பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். ஈரான், சிம்பாப்வே மற்றும் வட கொரியாவைச் சேர்ந்த 33 நபர்கள் அமெரிக்காவின் தடைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்களுள் ஒருவர் வட கொரியாவின் அணுவாயுத நடவடிக்கையுடன் தொடர்புடையவர் எனவும் அறியப்படுகின்றது 12 நாடுகளின் தலைவர்களும்   120 அரசியல் தலைவர்களும் இப்புகார் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


இந்திய பிரபலங்கள் பலரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவருடைய மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். நிறுவனத்தின் கே.பி. சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர்  9 பேர், கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரோமோட்டர் சமீர் கெலாத், அப்போலோ டயர் புரோமோட்டர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா மற்றும் டெல்லியைச் சேர்ந்த லோக்சத்தா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் ஆகியோர் உட்பட 500 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன. 'இண்டியாபுல்ஸ்' நிறுவன தலைவர் சமீர் குலாடிழூ'அப்பல்லோ டயர்ஸ்' தலைவர் ஓன்கார் கன்வர்ழூலோக்சத்தா கட்சித் தலைவர் அனுராக் கெஜ்ரிவால்ழூமூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேழூமுன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியின் மகனும்இ பிரபல டாக்டருமான ஜகாங்கீர் சோலி சொராப்ஜிழூதமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மல்லிகா ஸ்ரீனிவாசன்   ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர்.
 சமூகத்தில் மதிப்புமிக்க அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள்,விளையாட்டு வீரர்கள்,  கோடீஸ்வரர்கள்பனாமாவில் பணத்தைப் பதுக்கிவைத்திருப்பதாகத் தெரியவருகிறது. அமிதாப் பச்சன் ,ஐஸ்வர்யாராய்  ஆகியோர் இதனை மறுத்துள்ளனர். கடந்தாண்டு ஜெனிவாவின் ஹச்எஸ்பிசி வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள 1100 இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டு சுவிட்சர்லாந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், தற்போது இந்த பனாமா பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்லாந்து மக்களும் எதிர்க்கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தியதால் பிரதமர் டேவிட் இராஜினாமாச் செய்துள்ளார். தன மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர் இராஜினாமா செய்யமுடியாது என தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தீவிரமாக போரட்டத்தை நடத்தியதால் வேறு வழி இன்றி   பிரதமர் பதவியை இராஜினாமாச் செத்தார். கட்சியின் தலைவராக செயற்படுகிறார்.

சுவிட்சர்லாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகளில் வரிச்சலுகை கிடைப்பதால், அந்நாட்டு வங்கிகளில் பலர் முதலீடு செய்து வந்தனர்; குறிப்பாக கறுப்புப் பணம், இவ்வாறு பதுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், போலியான பெயரில் நிறுவனங்களை உருவாக்கி அதில் முதலீடு செய்வது. போன்ற மோசடி நடக்கிறது. மத்திய அமெரிக்க நாடான பனாமாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'மோசக் பொன்சிகா' என்ற சட்ட நிறுவனம், இதுபோன்ற மோசடியை மிகப்பெரிய அளவில் செய்து வருவது தற்போது அம்பலமாகி உள்ளது. இந்த நிறுவனத்துக்கு, உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி போலியான பெயரில் உள்ள நிறுவனத்தின் இயக்குனராக பதிவு செய்து கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் பெயரில் வங்கிகளில் பணத்தை முதலீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பணத்தை பதுக்கி வைத்துக் கொள்ள இந்த நிறுவனம் உதவி வருகிறது. இதில்  இருந்த 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.


'மோசக் பொன்சிகா'என்ற சட்ட நிறுவனம் சர்வதேச அளவில் இந்த மோசடியை செய்து வருகிறது. பனாமா நாட்டில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து இந்த மோசடி குறித்த ஆவணங்கள் வெளியான தால் பனாமா பேப்பர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.அடையாளம் தெரியாத ஒருவர் அளித்த இந்த ஆவணங்கள் முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகைக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து சர்வதேச புலன் விசாரணை பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து கடந்த எட்டு மாதங்களாக ஆய்வு செய்து பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.கடந்த 40 ஆண்டுகளாக உலகெங்கும் 2.14 லட்சம் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள்குறித்த விவரம்வெளியாகியுள்ளது.

 2013ம் ஆண்டு வெளியான விக்கிலீக்ஸை விட இது பெரிதாக பார்க்கப்படுகிறது. விக்கிலீக்ஸின் அம்பலத்தால் உலகின் பல நாடுகள் ஆட்டம் கண்டன. உலக வல்லரசான அமெரிக்காவை ஆட்டிப்படைத்த  விக்கிலீக்ஸின்  விவகாரம் நீண்டுகொண்டே  இருக்கிறது. கடந்த 1970களிலிருந்து பல ஆவணங்களை கொண்டுள்ளது இந்த பனாமா விவகாரம். இதில்  2.6 டெர்ராபைட் அளவிலான டேட்டாக்கள் உள்ளன. 11.5 மில்லியன் ஆவணங்கள் கசிந்துள்ளன. இதுதான் பெரும்பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது. இதை கசிய விட்டவர் யார் என்பது தெரியவில்லை. 

விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டுள்ளமையானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் இணைந்தே இந்த தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர்.
வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கமே (International Consortium of Investigative Journalism)  ) ஏப்ரல்  3 ஆம் திகதி ஞாயிறன்று  இந்த தகவல்களை பனாமா பேப்பர்ஸ்எனும் பெயரில் வெளியிட்டுள்ளது.

கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்கள் பனாமா நாட்டில் எவ்வாறு பதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்களே கசிந்துள்ளன.மொசாக் பொன்சேகா நிதி நிறுவனம் 1977 இல் இருந்து 2015 டிசம்பர் வரையில் தங்கள் சேவைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால்இமொசாக் ஃபொன்சேகா நிறுவனம் தாங்கள் 40 ஆண்டுகளாக இயங்கிவருவதாகவும் ஒருபோதும் இத்தகைய மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறது.எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் நிதி மோசடிக்காரர்கள் அனைவரின் விபரங்கள்  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிபற்றி விசாரிப்பதற்கு சில நாடுகள் முன்வந்துள்ளன. அப்போது கனவான்களின் முகத்திரை கிழிக்கப்படும்.
ரமணி
தமிழ்த்தந்தி
10/04/16