Showing posts with label கெஜ்ரிவால். Show all posts
Showing posts with label கெஜ்ரிவால். Show all posts

Monday, November 14, 2022

மோடியை வெளியேற்றுவாரா கெஜ்ரிவால் ?


 குஜராத் சட்ட மன்ரத்தேர்தல் அடுத்தமாதம் நடைபெற உள்ளது. இது வரை காலமும்  பாரதீய ஜனதாவுகும், காங்கிரஸுக்கும் இடையேதான் குஜராத்தில் போட்டி இருந்தது. இப்போது  கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் களத்தில் இறங்கியுள்ளது.  புதிய திட்டங்களுடன்  கெஜ்ரிவால் களம் இறங்கி உள்ளதால், குஜ்ராத் தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது.

 குஜராத்தில் ஆட்சிக்கு எதிரான மனநிலை இருப்பதாக செய்திகள் கூறிவரும் நிலையில், முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எனப் பலரும் தேர்தலில் போட்டியிடவில்லை.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 1, 5 ஆகிய திகதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், குஜராத் சட்டமன்றத் தேர்தல் பா.ஜ.க-வுக்கு மிக முக்கியமான தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் வந்தாலும், கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக பா.ஜ.க-வுக்கு ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், அங்கு ஆட்சிக்கு எதிரான மனநிலை இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2014-ல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு ஆனந்தி பென் முதல்வரானார். இரண்டே ஆண்டுகளில், முதல்வர் பதவியை ஆனந்தி பென் ராஜினாமா செய்தார். பிறகு, விஜய் ரூபாய் முதல்வரானார். இவரும் கடந்த ஆண்டு முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இவரைத் தொடர்ந்து, பூபேந்திர படேல் முதல்வரானார்.

2001-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டுவரை குஜராத் முதல்வராக நரேந்திர மோடி தொடர்ச்சியாக ஆட்சி செய்தார். அவர் முதல்வராக இருந்தபோது, ‘வளர்ச்சி’ என்ற சொல்லே மாநிலம் முழுவதும் சொல்லப்பட்டது. ஆனால் மோடி பிரதமரான பிறகு, அடுத்த முதல்வர்களின் ஆட்சியில் பல்வேறு சிக்கல்களை பாஜக அரசு சந்தித்ததாக சொல்லப்பட்டது. அடுத்தடுத்து, முதல்வர்கள் பதவி விலகியதற்கு அதுதான் முக்கியக் காரணம். தற்போது, பல சவால்களை குஜராத் பா.ஜ.க அரசு எதிர்கொண்டுவருகிறது.


 சிறு குறு தொழில்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. அந்த மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் நெசவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வர்த்தகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பா.ஜ.க அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததன் காரணமாக, அரசுக்கு எதிரான மனநிலையை அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3,000 உதவித்தொகை, பெண்களுக்கு மாதம் 1000 உதவித்தொகை, அயோத்திக்கு இலவச ரயில் பயணம் உட்பட கெஜ்ரிவால் அறிவித்திருக்கும் வாக்குறுதிகள் வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. மொத்தம் 182 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் குஜராத்தில், சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வும் காங்கிரஸும் பெற்ற வாக்குகளின் சதவிகித இடைவெளி மிகவும் குறைவுதான்.

ஆகவே, பல வகைகளில் இந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க பல சவால்களைச் சந்தித்துவருகிறது. இந்த நிலையில்தான், குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 140-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள். இதுவும், ஆளும் பா.ஜ.க-வுக்கு பெரும் சோதனையாக அமைந்திருக்கிறது. இந்தத் துயரச் சம்பவம்,வரும் சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

இப்படியான சூழலில்தான், வரும் தேர்தலில் 150 தொகுதிகளைப் பிடித்துவிடுவோம் என சில மாதங்களுக்கு முன்புவரை சொல்லிவந்த பா.ஜ.க தலைவர்கள், தற்போது 120 தொகுதிகளுக்கு மேல் பிடிப்போம் என்று கூறுகிறார்கள். இதிலிருந்தே அவர்களின் நிலைமை புரிகிறது. குஜராத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ‘வளர்ச்சி’ பற்றியெல்லாம் பெரிதாகப் பேசவில்லை.

மாறாக, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை சமீபகாலத்தில் அவர் தொடங்கிவைத்திருக்கிறார். அதாவது, இனிமேல் தொடங்கப்படவிருக்கும் திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் அவை. அங்கு, பா.ஜ.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சில திட்டங்கள் பற்றி மோடி குறிப்பிட்டுப் பேசினாலும்கூட, முன்பு சொல்லப்பட்ட ‘குஜராத் மாடல்’ என்ற பிரசாரத்துக்கு கிடைத்த வரவேற்பு இந்த முறை கிடைத்ததாகத் தெரியவில்லை.

இத்தகைய சூழலில்தான், முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பா.ஜ.க-வின் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் நவம்பர் 9-ம்திகதி நடைபெற்றது. இந்த நேரத்தில்தான், தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற முடிவை விஜய் ரூபாய் அறிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் கௌசிக் படேல், சௌரவ் படேல், ஆர்.சி.ஃபல்டு, பூபேந்திரசின் சுடஸ்சமா, பிரதிப்சின் ஜடேஜா உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.

தேர்தலில் புதிய முகங்களை களமிறக்குவது என்று பா.ஜ.க முடிவுசெய்திருக்கிறது. எனவே, விஜய் ரூபானிக்கும் பல முன்னாள் அமைச்சர்களுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாது என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். மேலும், வேட்பாளர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டதாக பா.ஜ.க வட்டாரங்களில் பேசப்பட்டது. தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றுதான் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய முகங்களை அறிமுகப்படுத்துவதால், பா.ஜ.க மீதான அதிருப்தியும் ஆட்சிக்கு எதிரான மனநிலையும் மாறிவிடுமா? சௌரவ் படேல் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்ற காரணத்தால், பல ஆண்டுகளாக  மின்துறை அமைச்சராக இருந்த அவர் மீது சொல்லப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மறந்துவிடுவார்களா என்பது போன்ற கேள்விகளை எதிர்க் கட்சிகள் எழுப்புகின்றன. மக்கள் முடிவு என்ன என்பது வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்!

Tuesday, January 21, 2014

கனவுகாணும் தலைவர்கள் காக்திருக்கும் மக்கள்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வரும் வேளையில், கருத்துக்கணிப்புகளும் பல அதிர்ச்சியான முடிவுகளுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் கனவில் சில தலைவர்கள் திளைத்திருக்க பிரதமர் யார் என்பதை பொதுமக்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். டில்லியில் ஏபிபி நியூஸுக்காக ஏ.சி. நெல்சன் நிறுவனமும்,தமிழ்நாட்டில் ஜுனியர் விகடனும் கருத்துக் கணிப்புகளை நடத்தி உள்ளன.

மோடி பிரதமராவதையே டில்லியும், தமிழகமும் விரும்புவதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. டில்லியில்  இரண்டாவது இடத்தில் கெஜ்ரி வாலும், மூன்றாவது இடத்தில் ராகுலும் இருக்கிறார் இந்தியாவின் அடுத்த பிரதமர் ஜெயலலிதா என்றே அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், தமிழகமக்கள் ஜெயலலிதாவை மூன்றாவது இடத்தில் வைத்துள்ளனர். டில்லிமக்கள் மோடிக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் பெருமளவு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே போன்று தான் தமிழக மக்களும் மோடியையும் அவரது கட்சியையும் ஆதரித்துள்ளனர். திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் சமமான விகிதா சாரத்தையே தமிழக மக்கள் வழங்கி உள்ளனர்.

 பலமான கூட்டணி அமைத்தால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதை அரசியல் கட்சிகளுக்கு மக்கள் உணர் த்தியுள்ளனர். இந்த உண்மையை உணர்ந்து கொண்டதனால் மிகப்பெரிய கூட்டணிக்கான கதவை கருணாநிதி திறந்து வைத்துள்ளார். ஜெயலலிதாவின் எண்ணம் வேறாக உள்ளது. தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பனர்களுடன் மத் தியஅரசில் நுழைந்து விடலாம் என்று நினைக்கிறார் ஜெயலலிதா.

15ஆவது நாடாளுமன்றம் ஜுன் 3ஆம் திகதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் அல்லது மே யில் பொதுத்தேர்தல் நடைபெறவேண்டும் மோடியை முன்னிலைப்படுத்திய பாரதிய ஜனதாக்கட்சி தேர்தல் பரப்புரையை ஆரம்பித்து விட்டது. ஆட்சி அமைப்பதற்கு 272 உறுப்பினர்கள் தேவை. இதனை கருத்தில் கொண்டு இந்தியா 272 டொட்கொம்,மோடி 272 பிளஸ் என இலத்திரனியல் திட்டங்களை பாரதீயஜனதாக்கட்சி பிரசாரத்துக்காகப் பயன்படுத்துகிறது.

வாஜ்பாய்க்குப் பின்னர் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் இல்லாத பாரதீய ஜனதாக் கட்சியைக் கரைசேர்க்க  மோடி கிடைத்துள்ளார். மோடியின் வளர்ச்சியும்,பாரதீயஜனதாக் கட்சியின் எழுச்சியும் காங்கிரஸை கிலிகொள்ள வைத்தது. வீழ்ந்தது காங்கிரஸ் என்ற வெற்றிப் பெருமிதத்துடன் இருந்த பாரதீய ஜனதாக் கட்சிக்கு வில்லனாக வந்தது ஆம் ஆத்மி அரவிந்த கெஜ்ரிவாலின் தலைமையில் முதன் முதலாக டெல்லி மாநிலத்தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸூக்கும், பாரதீய ஜனதாவுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து ஆம் ஆத்மி வியூகம் வகுத்தால் இரண்டுகட்சிகளும் பாதிக்கப்படும்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிரடி நடவடிக்கைகள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. ஊழல் பற்றிய புகா ரைத் தெரிவிக்க  விஷேட தொலைபேசி இலக்கம். ஊழல் செய்த அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் அரச ஊழியர்களின் பிள்ளைகள் அரசாங்கப் பாடசாலையில் தான் படிக்க வேண்டும் இப்படிப்பட்ட திட்டங்கள் தமது மாநிலத்திலும் நடைபெறவேண்டும் என்றே அதிக மானவர்கள் விரும்புகிறார்கள். மத்தியில்  ஒரு கட்சி அமைந்தால் எப்படி இருக்கும் என்று இந்திய மக்கள் சிந்தித்தால் மோடியின் எதிர்பார்ப்பும் கனவாகவே போய்விடும்.

மோடிக்கு நிகரான தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை. தலைமை பொறுப்பை ஏற்பதற்கு யாருமே முன்வரவில்லை அடுத்த தலைவர் ராகுல்தான் என்று அறிக்கை விடுகிறார்கள். இது காங்கிரஸில் தன்னம்பிக்கைக்கு சவாலாக உள்ளது. இத்தனை காலமும் கண்ணாமூச்சி விளையாடிய ராகுல் எந்தப் பொறுப்பையும் ஏற்கத்தயார் என்று அறிவித்துள்ளனர். ஆகையினால் காங்கிரஸ் கட்சி தனது பிரதமர் வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கும் கனிமொழிக்கு எதிரான 2 ஜி ஊழல் வழக்கும்  நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் முன்னிலை வகிக்கும். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக தீர்ப்பு வரவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் கூறுகிறார்கள். ஸ்பெகிரம் ஊழல் வழக்கில் கனிமொழி கைதுசெய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டால் அவரது பிரதமர் கனவு தவிடு பொடியாகவிடும். கனிமொழி மீண்டும் கைது செய்யப்படால் திராவிடமுன் னேற்றக்கழகத்துக்எதிரான பிரசாரமாக அது முன்னிலைபெறும். இரண்டு பெண் பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகளினால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படலாம்.
அரசியல் தலைவர்களின் விருப்பமும் கருத்துக்கணிப்புகளும் செய்திகளாகவும் அறிக்கைகளாகவும் வெளிவருகின்றன. நாடாளு மன்றத்தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் ஒன்றாகத் தமிழக மக்கள் கருதவில்லை. இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் வாக்களித்துள்ளனர்.
 திராவிடமுன்னேற்றக்கழகம் 1967 ஆம் ஆண்டு ஆரம்பக்கப்பட்டதிலிருந்து நடைபெற்ற  நாடாளுமன்றத் தேர்தல்களின் போது அதனுடைய கையே மேலோங்கி இருந்தது. எம்.ஜீ. ஆர் கட்சியிலிருந்து. வெளியேறிய போது வீழ்ச்சியடைந்தது பின்னர் தனது செல்வாக்கை உயர்த்தியது. வைகோ பிரிந்து போனபோது எவ்விததாக்கமும் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். சுகவீன முற்றிருந்த போதும், இந்திரா, ராஜீவ் ஆகியோர் கொல்லப்பட்டபோதும் நடைபெற்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக்கழகம் படுதோல்வியடைந்தது. பின்னர் பழைய நிலைக்கு உயர்ந்தது.

 நாடாளுமன்றத் தேர்தல்களில் 50 சதவீதமான வெற்றியை திராவிட முன்னேற்றக்கழகம் பெற்றுள்ளது. மத்தியில் தொடர்ந்து மூன்று முறை அரசமைக்க உதவியது இட ஒதுக்கீடு மெட்ரோ ரயில் திட்டம், வேலைவாய்ப்பு போன்ற திராவிடமுன்னேற்றக்கழக அமைச்சர்களின் செயல்பாடு வெற்றியைத் தேடித்தரும் என கருணாநிதி நம்புகிறார். 1998ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு ஆதரவு வழங்கிய ஜெயலலிதா ஒரே வருடத்தில் தேநீர் விருந்து வைத்து ஆட்சியைக் கவிழ்த்தார். அதன் பின்னர் மத்திய அரசில் அவர் சேருவதற்கான வாய்ப்பை தமிழகமக்கள் வழங்கவில்லை. மக்களின் மனநிலையை சரியாகப் புரிந்து கொண்டால் தான் தேர்தல் வெற்றி பெற முடியும் என்பதை சில அரசியல் தலைவர்கள் இன்னமும் உணரவில்லை.

 வானதி 
சுடர் ஒளி 19/01/14

Tuesday, December 31, 2013

டில்லியில் மையம்கொண்ட புதிய ஆட்சி

ஊழலின் மொத்த உருவமான காங்கிரஸ் கட்சியை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும் எனச் சபதமிட்டு அரசியல் அரங்கத்தில் தோன்றிய அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் என்றால் என்ன என்பதை டில்லி சட்ட சபைத் தேர்தலின் மூலம் புரிந்து கொண்டார். தமது கோட்டை என இறுமாந்திருந்த காங்கிரஸை கூட்டித்துடைத்து குப்பைக் கூடையில் போட்டது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி.
நாற்றமெடுக்கும் ஊழலை கூட்டிச் சுத்த மாக்குவதற்காக  துடைப்பத்தை தனது சின்னமாகக் கையில் எடுத்தது ஆம் ஆத்மி கடசி. ஆம் ஆத்மி கட்சி எதிர்பார்த்தது போன்று டில்லியில் காங்கிரஸை ஓரங் கட்டியது.அதேவேளை காங்கிரஸின் ஆதரவுடன் கெஜ்ரிவால் முதல்வரானார்.

 அண் மையில் நடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ்கட்சி பின்னடைவைச் சந்திக்கும் என எதிர் பார்க்கப்பட்டது.பாரதீய ஜனதாக்கட்சி முன்னிலை வகிக்கும், ஆட்சியைக் கைப்பற்றும் என்றே கருத்து கணிப்புகளும் எதிர்வு கூறின.ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் என்று யாருமே கணிக்கவில்லை.
ஆம் ஆத்மி கட்சியினால் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் சிதறடிக்கப்படும்.பாரதீய ஜனதாக்கட்சி சுலபமாக ஆட்சியைப் பிடித்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.70 தொகுதி கள் கொண்ட டில்லி சட்ட சபையில் பாரதீய ஜனதாக்கட்சி 31 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 28 தொகுதிகளிலும், காங்கிரஸ்கட்சி 8  தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.ஆட்சி அமைப்பதற்கு 36 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். உதிரிக்கட்சியின் ஆதரவைப் பெற்றாலும் யாரும் ஆட்சியமைக்க முடியாத நிலை. பரம எதிரியான காங்கிரஸ் மனது வைத்தால்தான் டில்லியில் ஆட்சிபீடம் ஏறலாம் என்ப தைபாரதீய ஜனதாக் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் உணர்ந்தன.
டில்லியில் ஆட்சிபீடம் ஏறமுடியாது என்பதைத் தெரிந்து கொண்ட பாரதீய ஜனதாக் கட்சி கெளரவமாக ஒதுங்கிக் கொண்டது.ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு வழங்க காங்கிரஸ் முன் வந்தது.காங்கிரஸின் ஆதரவை ஆம் ஆத்மி உடனடியாக ஏற்கவில்லை. தமிழக அரசியல் கட்சிகளைப் போன்று பொதுச்சபை கூடி தலைவர் முடிவெடுப்பார் என்று கூறவில்லை. மக்கள் கருத்தைக்  கேட்பதற்கு காலஅவகாசம் கேட்டது.

காங்கிரஸின் ஆதரவு தேவை இல்லை .மறு தேர்தல் தான் என்று உறுதியாக இருந்த ஆம் ஆத்மி சற்று இறங்கிவந்தது.டில்லியில்  உள்ள  நகரங்களிலும் சேரிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியது  ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மக்களின் கருத்துக்களைக் கேட்டார்கள்.மூன்று இலட்சத்து 24 ஆயிரம்  எஸ். எம்.எஸ்.இரண்டு இலட்சத்து 38 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள்,ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ஈமெயில் மூலம் மக்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தார்கள். காங்கிரஸின் தயவுடன் ஆட்சிபீடம் ஏறலாம் என்ற மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து ஆட்சியமைக்க  சம்மதித்தது ஆம் ஆத்மி.

டில்லியில் இதுவரைகாலமும்  தனி ஆட்சி தான் நடைபெற்றுவந்தது.இப்போது தான் முதல் முதலாக இன்னொரு கட்சியின் உதவியுடன் ஆட்சி அமைகிறது.ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட ஆம் ஆத்மி எப்படிப்பட்ட ஆட்சியை அமைக்கப் போகிறதென்பதை  அறிவதற்காக வே காங்கிரஸ்கட்சி  ஆதரவு வழங்கி உள்ளது. தலைமையின்  முடிவை டில்லியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்கவில்லை. ஒரு சில இடங்களில் எதிர்ப்பு கோஷங்களும், போராட்டங்களும் நடை பெற்றன. காங்கிரஸின் முடிவுக்கு எதிராகப் போராடும் தொண்டர்கள் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் படங்களை எரித்தார்கள்.தப்பு செய்த தனது கட்சித்தலை வருக்குத் தண்டனை கொடுக்க  அவர்கள் தயாராக இல்லை.

டில்லியில் ஆட்சிபீடம் ஏறும் ஆம் ஆத்மியின் முன்னால்  மிகப் பெரிய சவால் உள்ளது . ஆட்சிபீடம் ஏறும் கட்சிகள் எவையும்  வாக்குறுதியை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை. ஆம் ஆத்மியின் தேர்தல் கால வாக்குறுதி மிகவும் கடினமானது.ஆட்சிபீடம் ஏறியதும் மின் கட்டணத்தை 50 சதவீதமாகக் குறைப்போம் என ஆம் ஆத்மி வாக்குறுதியளித்தது.மின் கட்டணத்தை பாதியாகக் குறைக்க என்ன மாயம் செய்யப் போகிறது ஆம் ஆத்மி கட்சி.

டில்லியை மாநில அந்தஸ்தாக உயர்த்து வது, 50 இலட்சம் மக்களுக்கு தினமும் 700 லீற்றர் தண்ணீர், இரண்டு இலட்சம் பொதுக் கழிப்பறை,போக்குவரத்து தரமுயர்த்துவது, ஊழல் செய்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை என்பனவும் ஆம் ஆத்மியின் வாக்குறுதிகளில் அடங்கும்.இவை எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத வாக்குறுதிகள். இவற்றை நிறைவேற்றத் தவறினால் பொதுத் தேர்தலில் ஆம் ஆத்மி பின்னடைவைச் சந்திக்கும். தேர்தல்கால வாக்குறுதிகளில் ஒரு  சிலவற்றை யாவது நிறைவேற்றினால்தான் இந்தியப் பொதுத்தேர்தலில் காங்கிரஸும் பாரதீய ஜனதாக்கட்சியும் பின்னடைவைச் சந்திக்கும். இல்லையேல் தான் வெட்டிய குழியில் தானே விழ வேண்டிய நிலை ஆம் ஆத்மிக்கு ஏற்படும். ஊழல் செய்த அரசில்வாதிகள் மீது நடவடிக்கை என்ற ஆம் ஆத்மியின் கோஷத்தை டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இரசிக்கவில்லை.எங்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்து எங்கள் மீது நடவடிக்கையா என்று பொருமுகின்றனர் டில்லியில் உள்ள காங்கிரஸ் தலை வர்கள்.

டில்லியில் இளவயதுமுதல்வர் என்ற பெருமையைப் பெறுகிறார் 45 வயதான அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்கு உறு துணையாக இருக்கும் சிகோடியாவுக்கு 41 வயது. இவர் துணை முதல்வராகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.டில்லியில் துணை முதல்வர் பதவி உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை. ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்களின் சராசரிவயது நாற்பதாகும். அமைச்சரவை அறிவிக்கப்படும் முன்பே பூசல் வெடித்துள்ளதாகத் தகவல்கள்  கசிந்துள்ளன. டில்லி சட்ட சபைத்தேர்தலில் ஆம் ஆத்மி  கட்சியின் சார் பில் வெற்றி பெற்ற அனைவரும் தலைவரை போன்று நேர்மையானவர்கள் தானா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. காங்கிரஸ் கைவிட்ட காங்கிரஸ்குல்லாவை  ஆம் ஆத்மியினர்கள் தம் தலையில்  சூட்டியுள்ளனர். ஊழ லையும் சுமப்பார்ர்களா  என்பதை காலம்தான் கூற வேண்டும். 
வர்மா 
சுடர் ஒளி 29/12/13