Wednesday, May 17, 2017

பலே பலே பாகுபலி

பாகுபலியை  கட்டப்பா ஏன் கொலை செய்தான்? என்ற ஒற்றை வரிக் கேள்விக்கு இரண்டு வருடங்களின் பின்னர் விடை கிடைத்துள்ளது. இந்த இரண்டு வருடங்களில் பலரும் பல பலகோணங்களில் சிந்தித்து விடை பகன்றனர்.   முதலாவது பாகுபலியின்  பிரமாண்டம் மனதைவிட்டு இன்னமும் நீங்கவில்லை. அந்த இடத்தில் இரண்டாவது  பாகுபலியும் இடம் பிடித்துவிட்டது. இந்திய சினிமாவில் பிரமாண்டத்தின்  ஆரம்பம் சந்திரலேகா. நவீன தொழில் நுட்பங்களுடன் பிரமாண்டமான பல திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. பிரமாண்டம் என்ற மையப் புள்ளி சந்திரலேகாவில்   இருந்துதான் ஆரம்பமாகிறது  சந்திரலேகாவுக்குப் பின்னர்  பிரமாண்டம் என்றால் பாகுபலி ஒன்று, பாகுபலி இரண்டு என இரண்டு படங்களும் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டன.
திரைக்கதை,வசனம்,நடிப்பு,எடிட்டிங்,இசை,பாடல்கள், இயக்கம்,தயாரிப்பு, உடை, கலை என பட்டியலிடும் அனைத்தும் பிரமாண்டம் தான். இரண்டாவது பாகுபலியின் ஆரம்பத்தில் முதலாவது பாகுபலியின் கதையை  ஞாபகப்படுத்தும் உத்தி மிக அருமையானது. பாகுபலி ஒன்றில் மகனின் கதையையும் பாகுபலி இரண்டில் தகப்பனின் கதையையும் சிக்கலின்றி மிகத் தெளிவாகத் தந்துள்ளார். பாகுபலியின் கதையை நகர்த்தும் முக்கிய கதாபத்திரமான கட்டப்பாவாக சத்தியராஜ் மகிழ்மதி நாட்டுக்கும் பாசத்துக்கும்  இடையில் சிக்கித் தவிக்கும் ராஜமாதா சிவகாமியாக ரம்யா கிருஷ்ணன், அப்பா மகன் இரட்டை வேடத்தில் பாகுபலியாக பிரபாஸ், அப்பாவையும் மகனையும் எதிர்த்து ஆட்சியைப் பிடிக்கும் பல்வாள் தேவனாக ராணா டகுபதி, பல்வாள் தேவனின் தகப்பன்  இடது கை சூம்பிய சகுனியாக நாசர்,  குந்தள தேசத்து யுவராணி   தேவசேனாவாக அனுஷ்கா, அனுஷ்காவின் மாமன்  மாறவர்மனாக சுப்பராஜ், இவர்களுடன் ரோகினி ,தமனா ஆகியோரும் தமது பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.

ரஜினியை எதிர்த்த நீலாம்பரியாக ரசிகர்களின் மனதில் காலுக்கு மேல்  கால் போட்டு அமர்ந்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் ராஜமாதாவாக ஜொலிக்கிறார். தில்லான மோகனம்பாள் என்றால் பத்மினி நினைவுக்கு வருவது போல்  நீலாம்பரி, சிவகாமி என்றால் ரம்யா கிருஷ்ணன் தான் மனதில் தோன்றுவார். ராஜ குடும்பத்து விசுவாசமாக நடக்கும் கட்டப்பாவை பல்வாள் தேவனும் அவரது தகப்பனும் நாய் என்றுதான் அழைக்கிறார்கள். முதல் வெளியான பாகுபலியில் வயது போன தேவசேனையாக  ரசிகர்களின் பரிதபத்துக்கு ஆளான அனுஷ்கா அழகு தேவதையாக மிளிர்கிறார்.

காளகேயருடனான் போரில் வெற்றி வாகை சூடிய பாகுபலியை அரசனாகவும் பல்வாள் தேவனை தளபதியாகவும் ராஜமாதா  அறிவிக்கிறார். மக்களின் பிரச்சினைகளை அறிவதற்காக பாகுபலி பிற தேசங்களுக்குச் செல்கிறார்.  பாகுபலிக்குத் துணையாக கட்டப்பா  செல்கிறார். குந்தள தேசத்தில் கொள்ளையரின் அட்டகாசத்தை அடக்கும் யுவராணி தேவசேனாவைக் கண்டு பாகுபலி மயங்குகிறார். பயந்தவர் போல் நடிக்கும் பாகுபலிக்கும் கட்டப்பாவுக்கும் உதவி செய்ய தனது நாட்டுக்கு அழைத்துச்செல்கிறார்  தேவதேனா.    . தொடை நடுங்கியான மாறவர்மனிடம் பாகுபலி யுத்தப் பயிற்சி பெறுகிறார்.  தேவசேனாவின்  அழகிய படத்தைக் கண்டு காமம்  தலைக்கேறிய பல்வாள் தேவன், தேவசேனாவை பாகுபலி காதலிப்பதை அறிந்தும் அவளைத் தனக்கு மணமுடித்துத் தரும்படி ராஜமாதாவிடம் கேட்கிறார். ராஜமாதா சம்மதிக்கிறார்.


பொன்னும் பொருளும் கொடுத்து தேவசேனாவைப்  பெண் கேட்கிறார் ராஜமாதா. அதனை அவமானமாகக் கருதிய  தேவசேனா கோபத்துடன் பதில்  கடிதம் அனுப்புகிறார்  அதனால் சீற்றமடைந்த ராஜமாதா, தேவசேனாவைக்கைது செய்யும்படி உத்தரவிடுகிறார். குந்தள தேசத்தில் பாகுபலி இருப்பதை அறிந்த ராஜமாதா அவருக்குத் தகவல் அனுப்புகிறார். குந்தள தேசத்தை கொள்ளைக்காரர்கள்  தாக்கியபோது பாகுபலி தீரமுடன் போராடி அவர்களைத் துவம்சம் செய்கிறார். பாகுபலியின் வீரத்தைக் கண்டு தேவசேனா திகைத்து நின்றபோது கட்டப்பா உண்மையை கூறுகிறார்.

 பாகுபலியின் காதலை கட்டப்பா பகிரங்கப்படுத்த அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். பறவை கொண்டுவந்த தகவலின் மூலம் தேவசேனாவைக் கைது செய்வதாக பாகுபலி தெரிவிக்கிறார். அதற்கு தேவசேனா சம்மதிக்கவில்லை. தேவசேனாவின்   மானத்துக்கும் கற்புக்கும் எதுவிட பங்கமும் ஏற்படாது என பாகுபலி உத்தரவாதமளித்ததால் தேவசேனா கைதியாகச் செல்ல ஒப்புக்கொல்கிறார்.


மகிழ்மதி  நாட்டுக்கு அரசனாக யார் முடிசூடியது?. தேவசேனா யாரைத் திருமணம் செய்தார்? கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? தேவசேனாவுக்குக் கொடுத்த வாக்கை பாகுபலி  காப்பாற்றினாரா? போன்ற கேள்விகளுக்கு சிக்கலின்றி  விடை தருகிறார் ராஜமெளலி.
மதம் பிடித்த யானையை பாகுபலி அடக்குவது. யானையின் மேல் பாகுபலி ஏறுவது.யானையின் மீது இருந்து அம்பு எய்வது.தீச்சட்டியைத் தலையில் வைத்துச்செல்லும் ராஜமாதா  திரும்பிப்பார்த்து கண்ணால் புன்னகைப்பது. பன்றி வேட்டை, .சண்டையின் தேவசேனாவுக்கு பாகுபலி அம்பு எய்யப் பயிற்சியளிப்பது. பட்டாபிஷேகத்தின்போது பாகுபலியில் பெயரை உச்சரித்ததும் நிலம் அதிர்வது. தேவசேனையின் பிரமாண்டமான ஓவியம்  போன்ற சின்னச்சின்ன  விஷயங்கள்  மனதில் நிற்கும்படி படமாக்கப்பட்டுள்ளன.
"உன் அம்மாவின் நாய் வருகிறது," ,"தேவையின்றி ஐயம் கொண்டேன் கட்டப்பா நீ நாய்தான்," "கைதியாக வருவதை விட பணிப்பெண்ணாக வருவதில் திருப்தி" ,"மதியாதார்  வாழும் தேசத்துக்கு மகிழ்மதி என்று பெயர்" , "இதுவே என கட்டளை. அதுவே என சாசனம்" போன்ற வசனங்களால் தியேட்டர் அதிர்கிறது.

லேசா ருத்ராசா, பலே பலே பகுபலி  ஒரே ஓர் ஊரில். கண்ணா நீ தூங்கடா,வந்தாய் அய்யா,. ஒரு யாகம்  ஆகிய பாடல்கள்ளை  மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. திரைக்கதை இயக்கம் ராஜ மெளலி,கதை ராஜமெளலியின் தகப்பன் விஜேந்திர பிரசாத்,இசை மரகதமணி தமிழ் வசனம் கார்க்கி,படத்தொகுப்பு கோத்தகிரி வெங்கடேஷ்வரராவ், ஒளிப்பதிவு செந்திகுமார், கிராபிக் காட்சிகள் வியக்கும் படியாகப் படமாக்கப்பட்டுள்ளன. வசூலில் புதுப்புது சாதனைகளை நிகழ்த்தி வருகிறது..ராஜமெளலியின் இந்த வெற்றிக்குப் பின்னால், அவரின் குடும்பம் பெரிய பலமாக இருந்து வருகிறது. அவரின் அப்பா கூறிய கதையே இதன் அடிப்படை. படத்தின் காஸ்டியூம் டிசைனர்களில் ஒருவர் அவரின் மனைவி ரமா. இசையமைப்பாளர் கீரவாணியும் ராஜமௌலியின் உறவினரே. கீரவாணியின் மனைவியான ஶ்ரீவள்ளிதான் படத்தின் லைன் புரொடியூசர். ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா படத்தின் இரண்டாவது யூனிட்டின் இயக்குநர்.
ராஜமெளலியின் வெற்றிக்கு அவரின் குடும்பத்தினர் அனைவரின் துணை இருந்தாலும், குறிப்பிட்ட இருவரின் பங்கு மிக முக்கியமானது.   அந்த இருவர் ராஜமெளலியின் மனைவி ரமா மற்றும் ரமாவின் சகோதரியும் படத்தின் லைன் புரொடியூசருமான ஶ்ரீவள்ளி ஆகியோர்தான். பாகுபலியின் ஆடை வடிவமைப்பாளர்கள் ரமாவும் பிரசாந்தி திப்ரினேனியும் அரசர் காலத்து கதை என்பதால், அரசர், அரசி, அமைச்சர்கள், எதிரி நாட்டு அரசன், பொதுமக்கள் என பலவித உடைகளை வடிவமைக்க வேண்டியிருந்தது. இந்த உடைகளை அவர்கள் இருவரும் மிக நுட்பமாக வடிவமைத்துள்ளனர்.

பாகுபலியின் காலத்தை மனதில் பதிய வைப்பதில் ராஜமெளலி வெற்றி பெற்றுள்ளார்.சண்டைக் கட்சிகள்  நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளன.  மனதை  விட்டு சிரிக்கும் கட்சிகள்  படத்துடன் ஒன்றியுள்ளன. 

பாகுபலியின் வெற்றி உலக சினிமாவை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

Wednesday, May 10, 2017

3 ஆவது உலகப்போர்

அமெரிக்க அடையாளங்களில் ஒன்றான இரட்டைக்  கோபுரம் விமானத் தாக்குதலால் சின்னாபின்னமானபோது மூன்றாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகும் என அச்சம் ஏற்பட்டது. இரட்டைக்  கோபுரத் தாக்குதலின் சூத்திரதாரி என பிலேடனை அடையாளம் கட்டியது அமெரிக்கா. பிலேடனை வேட்டையாட ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க  நுழைந்த போது  மூன்றாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகும் என கருதப்பட்டது. ஆனால், அவை எல்லாம் புஸ்வாணமானது. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தெரிவானபோது மீண்டும் ஒரு யுத்தத்துக்கான அறிகுறி தோன்றியது. அமெரிக்காவைச் சீண்டிப்பார்க்கும் வட கொரியாவை மிரட்டுவதற்கு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
.அமெரிக்கப் போர்க்கப்பல்கள் வட கொரியாவை நோக்கிச் சென்றுள்ளன. பிரிட்டன்,ரஷ்யா,சீனா ஆகிய  நாடுகளும் வட  கொரியாவுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு மிரட்டும் வகையில் போராயுதங்களை நகர்த்துகின்றன. வல்லரசு நாடுகள் அனைத்தும் நவீன வகையான ஆயுதங்களைத் தயாரிப்பதில் போட்டி போட்டு முனைப்புக் காட்டுகின்றன. தீவிரவாத அச்சுறுத்தல் உலகின் பல நாடுகளை மிரட்டுகின்றன. தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதில் அந்த நாடுகள் அதிக கவனம் செலுத்துகின்றன. புதிய ஆயுதங்களைத்  தயாரிக்கும் அதே  வேளை அறிமுகமாகும் புதிய ஆயுதங்களைக் கொள்வனவு  செய்வதிலும் பல நாடுகள் முனைப்புக்காட்டுகின்றன.

நாட்டின் அபிவிருத்தி,கல்வி,வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஒதுக்கும் பணத்தை விட அதிகமாக பாதுகாப்புக்காக ஒதுக்குவதற்கு அச்சுறுத்தலுக்கு உள்ளன நாடுகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. பயங்கரவாத நடவடிக்கையில் ஊறிப்போனவர்கள்  புதிய புதிய யுக்தியைக் கையாள்வதால் அவற்றைத் தடுக்க முடியாத நிலை உள்ளது. பொது மக்கள் சந்தோசத்தை அனுபவிப்பதற்காக கூடும் இடங்களையே தீவிரவதிகள் குறி வைக்கின்றனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் குறிக்கப்பட்ட நேரத்தில் வெடிக்கும் குண்டுகள், வாகனக் குண்டுகள் தற்கொலைத் தாக்குதல் போன்றவற்றைத் தவிர்த்து பொது மக்கள் கூடும்  இடங்களில் கனரக வாகனத்தை  வேகமாகச் செலுத்தி மக்களைக் கொல்லும் திட்டங்களை தீவிரவாதிகள் நடத்துகிறார்கள்.
பிரித்தானிய, ஜேர்மனி,இத்தாலி,பிரான்ஸ் ஆகிய நாடுகள் தீவிரவாதச் செயல்களால் பல மோசமான விளைவுகளைச் சந்தித்துள்ளன. எந்த நாடுகளின் எல்லைக்குள் தீவிரவாதம் ஊடுருவியுள்ளது. அமெரிக்கா, சீனா,ரஷ்யா ஆகிய நாடுகளை இருந்த இடத்தில் இருந்தபடியே வட கொரியா மிரட்டுகிறது. வட கொரியாவுக்கு எதிரான யுத்த மேகம் கருக்கட்டி உள்ளது. விமான சேவைகளை நிறுத்தும் அளவுக்கு சர்ச்சை வெடித்துள்ளது. வட கொரியாவுக்கு அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்துள்ளது. பதிலுக்கு வட கொரிய அமெரிக்காவை மிரட்டுகிறது. மூன்றாவது உலக யுத்தம் வெடித்தால் அதனைத் தங்கும் சக்தி உலகின் சிறிய நாடுகளுக்கு இல்லை. யுத்தம் செய்யும் வல்லரசுகளுக்கு அருகில் உள்ள சிறிய நாடுகள் சில உலக வரைபடத்தில் இருந்து காணமல் போகும் நிலை ஏற்படும்.


வல்லரசு நாடுகளில் பலமுள்ள நாடக தன்னை நிலை நிறுத்த அமெரிக்காவும் சீனாவும் கங்கணம் கட்டியுள்ளன. அகண்டு பரந்த நாடாக இருந்த ரஷ்யா சிதறுண்டு  பல நாடுகளாகப் பிரிந்ததால் சற்று அடக்கமாக இருந்தது.  இப்போது பழைய பலத்துடன் வல்லரசின் வல்லவனாக தன்னை முதன்மைப்படுத்த முயற்சிக்கின்றது. இந்த வல்லரசு நாடுகளில் ஆசைக் கனவைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு வட கொரிய தயாராக இருக்கிறது.அமெரிக்காவும் ரஷ்யாவும் கடந்த மாதம் தமது  படைகளையும் இராணுவத் தளபாடங்களையும்  நகர்த்தியுள்ளன அமெரிக்கா தனது   யு.எஸ்.எஸ். எனும் நீர் மூழ்கிக் கப்பலை  கொரிய தீபகற்பத்துக்கு  அருகே நிறுத்தியுள்ளது.  விமான தாங்கிக் கப்பல் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ளது. அமெரிக்காவும் தென் அமெரிக்காவும்  போர் ஒத்திகை நடத்துகின்றன. இது வட கொரியாவை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு போயுள்ளது.
வட கொரிய தனது 85  ஆவது இராணுவ தினத்தைக் கொண்டாடி அமெரிக்காவையும் தென் கொரியாவையும் மிரட்டியுள்ளது. இதேவேளை அவுஸ்திரேலியாவின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் உள்ள அமெரிக்கப்படைத் தளங்கள் மீது அணு குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக வட கொரியா மிரட்டியுள்ளதால் அமெரிக்க பாதுகாப்பைத்  அதிகப்படுத்தியுள்ளது. ஈபனோஸ் அணு ஏவுகணைப் பாதுகாப்பை துரித கதியில் கொரிய தீபகற்பத்துக்கு அமெரிக்கா  அனுப்பி வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் குண்டுகளின் தாய் என  வர்ணிக்கப்படும் பயங்கரமான குண்டை வீசி பயங்கர வாதத்தை அடியோடு அழிக்க எதையும் செய்யத் தயார் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.


எலக்ரோ மக்னடிக் எனும் மின்காந்த அலையிலான ஆயுதம் ஒன்றை உருவாக்குவதற்கு அமெரிக்கா முயற்சி செய்வதாக வெளியான தகவலால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.  குண்டுகளுக்குப் பதிலாக  குண்டுகள் போல் செயற்படும் மின்காந்த அலைகள் பயங்கர அழிவை ஏற்படுத்தும் வல்லமை உடையனவாகக் கருதப்படுகிறது. ஒளியை விட  ஆறு மடங்கு வேகத்தில் செயற்பட்டு   சுமார் 100   மைல் தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் வாய்ந்தது.  இந்த ஆயுதத்தைத் தடுக்கும்  வல்லமை எந்த நாட்டுக்கும் இல்லை என அமெரிக்கா   தெரிவித்துள்ளது.
 வட கொரியாவிடம் தெர்மோ நியூ கிளியர் குண்டுகள் இருப்பதாக ஸ்பெயின் நாட்டுப் பிரஜையும் அந்  நாட்டு கெளரவக் குடிமகனும்  சிறப்புப் பிரதி நிதியுமான  பெனோஸ்  தொலைக் காட்சி ஒன்றுக்கு வழங்கிய தெரிவித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். உலகை  அழிப்பதற்கு மூன்று தெர்மோ நியூ கிளியர் குண்டுகள் போதும். வட கொரியாவுடன் விளையாட வேண்டாம்.ஏவுகணைகள் மூலம் தனது நாட்டைப் பாதுகாக்கும் தைரியம் ஜனாதிபதி கிம் ஜாம் உன்னுக்கு இருகிறது. வட கொரியாவுக்கு எதிரான போரில் சீனா முக்கை நுழைத்தால் பாரிய இழப்பைச் சந்திக்கும் எனவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானின் நாகசாகி,ஹிரோசிமா ஆகிய நகரங்களில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் தாக்கம்  இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அணுகுண்டு வீசப்பட்டதால் இரண்டாவது உலக யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. மூன்றாவது உலகப் போர் அணுகுண்டில் இருந்து தான் ஆரம்பமாகும் என்ற பயம் மக்களிடம் தொற்றியுள்ளது. யுத்தம்  செய்வதற்கு வல்லரசுகள் தம்மைத்  தயார்ப் படுத்துகின்றன. வளர் முக நாடுகள் போரை விரும்பவில்லை.


 

Thursday, May 4, 2017

இரட்டை இலைக்கு விலைபேசிய தினகரன்

    இரட்டை இலைக்கு விலைபேசிய தினகரன்
கறுப்புக் கண்ணாடி,முழுக்கைச் சட்டை, வலதுகையில் மணிக்கூடு செக்கச்செவேல் என்ற நிறம், முதுகையும் இரண்டு தோள்களையும் இணைக்கும் துண்டு, பாசமான சிரிப்பு,அன்பான அரவணைப்பு, இரட்டை  இலைச்சின்னம். என்பன  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அடையாளங்களில் பிரதானமானவை. பிரமாண்டமான மேடயில் ஏறி மக்கள் வெள்ளத்தின் முன்னால் இரண்டு விரல்களை உயர்த்திக்காட்டி இரட்டை இலைச்சின்னத்தை  ஞாபகப்படுத்தும் அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தால் எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும் உடம்பு புல்லரிக்கும்.

திரவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய  எம்.ஜி.ஆர், ஊழலற்ற, இலஞ்சம் அற்ற ஆட்சியை அமைப்பேன் என சபதம் எடுத்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின்னர் அவரின் சபதத்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் மறந்து விட்டார்கள். ஊழலும் இலஞ்சமும் அவரால் உருவாக்கப்பட்ட கட்சிக்குள் தலை விரித்தாடியது. எம்.ஜி.ஆரின் மீது விசுவாசமும் அபிமானமும் வைத்திருந்தவர்கள் ஓரம் கட்டப்பட்டனர். எம்.ஜி.ஆரின் வாரிசாகத் தன்னை நியமித்துக் கொண்ட ஜெயலலிதா அவரின் வழியைப் பின்பற்றி கழகத்தை முன்னெடுத்துச்செல்லப் போவதாக உறுதி பூண்டார். எம்.ஜி.ஆரையும் அவரது தொண்டர்களையும் கவர்வதற்காக எம்.ஜி.ஆரைப் போன்றே  இரண்டு விரல்களை உயர்த்திக்காட்டி அரசியலில்  அரசியலில் உச்ச நிலையை எட்டினார்.

எம்.ஜி.ஆரைப் போல நடித்த  ஜெயலலிதாவால் எம்.ஜி.ஆரைப் போல  வாழத்தெரியவில்லை. வருமானத்துக்கு மீறிய அதிக சொத்துச்சேர்த்த  வழக்கில் குற்றவாளியாகி சிறை சென்ற முதலாவது முதலமைச்சர் என்ற அவப்பெயரைப் பெற்றார். ஜெயலலிதா இறந்ததும் உடன்பிறவா சகோதரி சசிகலா அந்த இடத்தைப் பிடிக்க முயற்சி செய்தார்.   சசிகலா சிறைக்குப் போகையில் தனது குடும்ப உறுப்பினரான தினகரனுக்கு கட்சியில் உயர் பதவி கொடுத்தார். சசிகலா,தினகரன் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கட்சியை விட்டும் தனது வீட்டைவிட்டும் ஜெயலலிதா விரட்டினார். பின்னர் சசிகலாவை மட்டும் தன்னுடன் இணைத்துக்கொண்டார். இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டும் தமது பதவியைத் தக்க வைப்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சசிகலாவுக்கும் தினகரனுக்கும்  முன்னுரிமை கொடுத்தனர்.

ஜெயலிதா மறைந்ததும் பன்னீச்செல்வத்தின் தலைமையிலும் சசிகலாவின் தலைமையிலும் கட்சி இரண்டானது. சசிகலா சிறைக்குப் போனதால் தினகரனின் அட்டகாசம் அதிகமானது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தினகரனின் ஆட்டத்துக்கு முடிவுகட்டியது.   ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்த பன்னீச்செல்வத்தின் ஆதரவாளரான மதுசூதனனனும்  தினகரனும் இரட்டை இலைச்சின்னத்துக்கு  உரிமை கோரியதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் இரட்டை இலைச்சின்னத்தையும் தேர்தல் கமிஷன் தடை செய்தது.
எம்.ஜி.ஆரின் இரட்டை இலை என்ற மாயச்சின்னத்தால்  வெற்றி பெறலாம் என்ற தினகரனின் கனவு மண்ணானது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  தினகரனின் ஆதரவாளர்கள் பணம் கொடுத்தது ஆதரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் இரத்தானது. இரட்டை இலை இருந்தால்தான் கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை உணர்ந்துகொண்ட தினகரன் இரட்டை இலையைக் கைப்பற்றுவதற்காக குறுக்கு வழியை நாடினார். தேர்தல் கமிஷனுக்கு இலஞ்சம் கொடுத்தால் இரட்டை இலையைப் பெறலாம் என யாரோ ஒருவர் ஆலோசனை  கூறியதால் இலஞ்சம் கொடுத்து இரட்டை இலையைப் பெற தினகரன் முடிவுசெய்தார். இலஞ்சத்தால்  எதையும் சாதிக்கலாம் என நினைத்த தினகரன் பொலிஸாரின் கிடுக்கிப் பிடியில் அகப்பட்டுள்ளார்.

தமிழக அரசைத் தனது கைப்பிடிக்குள் வைத்திருக்க மத்திய அரசு விரும்பியது. தினகரனின் நடவடிக்கைகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டன. பாரதீய ஜனதாவின் விருப்பத்தேர்வான பன்னீருக்கு எதிராக மன்னார்குடிக் குடும்பம் எடப்பாடியைக் களம் இறக்கி உள்ளது. தினகரனின் ஆட்டத்தை முடித்துவிட்டால் தமிழக அரசு அடங்கிவிடும் என மத்திய அரசு கணக்குப் போட்டது. டில்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 1.3 கோடி ரூபாவுடன் சுகேஸ் சந்தர் என்பவரை பொலிஸார்  கைது செய்தபோது இரட்டை இலைச்சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் கொடுத்த இலஞ்சம் என்ற உண்மை தெரியவந்தது. வழமை போல தொலைக்காட்சி முன்னால் புன்னகையுடன் தோன்றிய தினகரன் சுகேஸ் சந்தர் அன்பவரைத் தனக்குத் தெரியாது எனத்  தெரிவித்தார்
.
டில்லி பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட தினகரனால் அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை. பொலிஸார் முன்வைத்த ஆதாரங்களால்  தினகரன் அதிர்ச்சியடைந்தார். விசாரணையின் முடிவில் தினகரன்,அவருடைய உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர்  மல்லிகார்ஜுன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர்களை மேலதிக விசாரணைக்காக பொலிஸார் தம் வசம் எடுத்துள்ளனர். இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உயர்மட்டத் தலைவர்கள் கதிகலங்கி உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக அமைச்சர்களும் சட்டசபை உறுப்பினர்களும் தினகரனைக் கைவிட்டுள்ளனர். இதேவேளை விசாரணை வளையத்தில் சிக்குவோமோ என்ற பயமும் அவர்களை வாட்டி வதைக்கிறது.
இரட்டை இலைச்சின்னத்தைப் பெறுவதற்காக 60 கோடி ரூபா இலஞ்சம் கொடுக்க தினகரன் முன்வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தப் பணம் தினகரனுடையதா? இல்லை என்றால் தினகரனுக்கு அந்தப் பணத்தைக் கொடுத்தது யார் என்ற கேள்விக்கு  சரியான பதிலை அவர் கொடுக்கவில்லை. இலஞ்சம் கொடுத்து காரியத்தைச் சாதிக்கலாம்  என்ற துணிவை தினகரனுக்கு யார் கொடுத்தது. இதற்கு முன்னர் அவர் இலஞ்சம் கொடுத்து  எத்தனைப் பெற்றுள்ளார் போன்ற கேள்விகளுக்கு விசாரணையின் முடிவில் விடை கிடைக்கும்.

 கர்நாடக மாநில  பெங்களூரைச்சேர்ந்தவர் சுகேஸ் சந்தர். மோசடி மன்னனான இவருடன் தினகரன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்துள்ளார். தமிழகம்,ஆந்திரா,கர்நாடகம், டில்லி,கொல்கட்டா,ஆகிய மாநிலங்களில் மோசடி செய்ததால் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டவர்.தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி,மலையாளம் ஆகிய மொழிகளில் பேசி தான் நினைத்ததைச் சாதிக்கும் திறமை மிக்கவர்.ஆடம்பரமாக வாழ்வதற்காக  கோடிக்கணக்கில் மோசடி செய்வதே சுகேஸ் சந்தரின் பிரதான தொழில்.அடம்பர வாழ்க்கையில் மோகம் கொண்டவர். மருத்துவக்கல்லூரி மாணவியான லீனா மரியா பால் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தார். சுகேஸ் சந்தரின் மோசடிகளுக்கு அவரின் மனைவியும் உடந்தையாகச் செயற்பட்டவர். சில மலையாளப் படங்களில் நடித்த லீனா மரியா பால், தொலைக்காட்சித் தொகுப்பாளினியாகவும்  பணி புரிந்தார். சுகேஸ்  சந்தர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து ஒன்பது சொகுசுக் கார்கள், 6.5 கோடி ரூபா பெறுமதியான பிரஸ்லற் 9 இலட்சம் பெறுமதியான கம்மல் என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணத்தால் வெற்றிபெற்று  முதல்வராகலாம் என தினகரன் நினைத்தார். இடைத்தேர்தல் இரத்தானதால் இரட்டை இலைச்சின்னத்தைப் பெற்று முதல்வராகலாம் என்ற தினகரனின் ஆசை அவரை பொலிஸ் பிடியில் சிக்க வைத்துள்ளது.