Showing posts with label விஜயகாந்த. Show all posts
Showing posts with label விஜயகாந்த. Show all posts

Sunday, January 3, 2016

தடுமாறும் விஜயகாந்த் தவமிருக்கும் தலைவர்கள்

தமிழக அரசியலும் தமிழ் சினிமாவும் ஒன்றாகப் பின்னிப்பிணைந்துள்ளன.அண்ணாத்துரை,கருணாநிதி, எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்து  முதலமைச்சரானார்கள். சிவாஜி,பாக்கியராஜா போன்றவர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்று காணாமல் போனார்கள். ரஜனியும் விஜயும் அரசியலுக்கு வரப்போவதாக பூச்சாண்டி காட்டுகிறார்கள். வீர வசனம் பேசி கதாநாயகனான விஜயகாந்துக்கு அரசியல் ஆசை வந்தபோது அடுத்த முதல்வர் நான்தான் என்ற கனவில் மிதந்தார். தொண்டை கிழிய கத்திப் பேசி கைதட்டல் வாங்கியதால்  மகிழ்ச்சியடைந்த விஜயகாந்த் அரசியலிலும் இலகுவாக வெற்றி பெறலாம் என நினைத்தார்.

சிவாஜி,எம்.ஜி.ஆர்,கமல்,ரஜனி,விஜய்,அஜித்  போன்ற நடிகர்களுக்கு இருப்பது போன்ற வெறிபிடித்த ரசிகர்கள் விஜயகாந்திடம் இல்லை. அப்படி இருந்தும் அரசியலில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை கொண்ட சிலர் அவரின் பின்னால் அணிவகுத்தனர். திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் கூட்டணி  இல்லை. கடவுளுடனும் மக்களுடனும் தான் கூட்டணி என்ற தாரக மந்திரத்துடன்  தேர்தல்களைச் சந்தித்த விஜயகாந்த்  பிரதான கட்சிகளின் வாக்குகளை சிதறடித்து தோல்வியடைந்தார். .  கூட்டணி  அமைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதை காலம் கடந்து உணர்ந்த விஜயகாந்த் கூட்டனிக்கு ஆசைப்பட்டார்.

 விஜயகாந்தைத் தம் பக்கம் இழுக்க கருணானிதியும் ஜெயலலிதாவும் முயற்சி செய்தனர். மிகுந்த கெடுபிடிகளின் மத்தியில் ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் இணந்தார் விஜயகாந்த்.கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவதே விஜயகாந்தின் குறிக்கோளாக இருந்தது. அவர் நினைத்தபடியே கருணாநிதி பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அரசியலில் கீழ்மட்டத்திலிருந்த விஜயகாந்த் உச்சாணிக்கொம்பில் ஏறி நின்றார். விஜயகாந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற மகுடத்தைச்சூட்டிய ஜெயலலிதா அவரைப் படுகுழியில் வீழ்த்தினார்.

சென்னையில் பத்திரியாளர் ஒருவரை காறித்துப்பிய வீடியோவால் விஜயகாந்தின் மதிப்பு குறைந்துள்ளது  2016  ஆம் ஆண்டு உங்கள் கட்சி ஆட்சியைப்பிடிக்குமா என் ஒரு நிருபர் கேட்டபோது  இதைப்போய் ஜெயலலிதாவிடம் கேள்  என்று த்தூ என காறித்துப்பினார். கேள்விக்கு பதிலளிக்காது நிருபரையும் ஊடக முதலாளிகளையும் அவமானப்படுத்தியதால் சமூக வலைத்தளங்க:ள்  விஜயகாந்துக்கு எதிராகத் திரும்பி உள்ளன.

  சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் அறிவிப்பேன் என்று சென்னையில் அறிவித்துவிட்டுப் போனார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சென்னை திரும்பிய போது  விமான நிலையத்தில்  செய்தியாளர்கள் மத்தியில் எகிறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் கோபமடைந்த விஜயகாந்த், "போயா..உனக்கு பதில் சொல்ல முடியாது" என்று தமக்கே உரித்தான நாக்கை துறுத்தும் பாணியில் எகிறினார். பின்னர் அவரை அவரது மச்சான் சுதீஷ், மனைவி பிரேமலதா ஆகியோர் சமாதானப் படுத்தினர்.

 சென்னை விமான நிலையத்தில் ‘ஏர்போர்ட்' பாலு என்ற செய்தியாளரை ‘நாய், நாய்' என்று திட்டி பரபரப்பை கிளப்பினார் விஜயகாந்த், ‘நீங்களா எனக்கு சம்பளம் தர்றீங்க?' என்று கோபமாக கேட்டார்.அதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம் நடத்தினார்கள் பத்திரிகையாளர்கள்.

 இதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மோடியை கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்,செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் ஆத்திரமடைந்தார்.
 அப்போது அவர் கூறிய, ‘தூக்கிஅடிச்சிருவேன் பாத்துக்க' என்ற வாக்கியம் இன்றும் சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகவே உள்ளது 

   ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த போது செய்தியாளரை சந்தித்த விஜயகாந்த் மணல் கொள்ளை,சுந்தர்பிச்சை பற்றி கலவையாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப,புரியாத விஜயகாந்த், என்ன    கேட்டீங்க் கிட்ட வாங்க அடிக்க மாட்டேன் என்று சிரித்தபடி கூறினார்.


சட்டசபையிலும் விஜயகாந்த் தனது சண்டித் தனத்தை காட்டினார். அவரைப்பற்றி விமர்சனம் செய்தால் நாக்கைத்துருத்தி கையைக்காட்டி எச்சரிக்கை செய்வார். விஜயகாந்தின் செயலை அரசியல் தலைவர்கள் கண்டிக்கவில்லை. கூட்டணிக் கதவை அகலத்திறந்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் வாய்மூடி மெளனமாக இருக்கின்றனர். விஜயகாந்தை எதிர்த்தால் கூட்டணி குலைந்து விடும் எனப்பயப்படுகிறார்கள்.விஜயகாந்தின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஸ்டாலின் அவருக்கு சார்பாக கருத்துத் தெரிவித்துள்ளார். இதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 விஜயகாந்த் வந்தால் வெற்றி பெறலாம் என மனக்கணக்கு போட்டிருக்கும் வைகோவின்  சகபாடிகள் இன்னமும்   வாயைத் திறக்கவில்லை. வாயைத்திறந்தால் விஜயகாந்த் வரமாட்டார் என அவர்கள் நினைக்கிறார்கள். வைகோ மட்டும் படும் படாமலும் அறிவுரை கூறியுள்ளார்.
விஜயகாந்த்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினாருக்குமான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இரத்ததான முகாமில் கலந்து கொண்ட  விஜயகாந்தின் கண்ணில் பட்ட ஜெயலலிதாவின் படம் புதிய பிரச்சினையை உண்டாக்கியுள்ளது. ஜெயலலிதாவின் படத்தைக்  கிழித்தெரியுமாறு தனது தொண்டர்களுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டார். தலைவனின் உத்தரவை  சிரமேற் கொண்ட தொண்டர்கள் ஜெயலலிதாவின் படத்தை கிழித்து எறிந்தனர்.
ஜெயலலிதாவின் படம் கிழிக்கப்பட்டதால் கொதித்தெழுந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள்  எதிர்த்  தாக்குதல் நடத்தினர்.  தஞ்சாவூர் களேபரமானது.  விஜயாந்தின் கட்சிக்கொடி படம் என்பன தீக்கிரையாகின. இரண்டு கட்சித்  தொண்டர்களும்  கைது செய்யபட்டனர். விஜகாந்துக்கு எதிராகவும் பொலிஸில்  முறைப்பாடு செய்யப்பட்டது. வியகாந்துக்கு எதிரான போராட்டத்தை ஜெயலலிதா விரும்பவில்லை. போராட்டங்களைக் கைவிடுமாறு அவர் அறிவித்த்துள்ளார். ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள்  கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினர். வன்செயலாக மாறிய அப்போரட்டங்க்களை கைவிடுமாறு ஜெயலலிதா உடனடியாக அறிவிக்கவில்லை.

விஜயகாந்துக்கு எதிரான போராட்டங்கள் விபரீதமாகி வன்செயலாக மாறினால் அவர் மீது அனுதாபம் ஏற்பட்டுவிடும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பழி விழுந்துவிடும் என ஜெயலலிதா அஞ்சுகிறார். எதிர்க்கட்சிகள் இதனை ஊதிப் பெருப்பித்துவிடும் என்ற என்பதை ஜெயலலிதா உணர்ந்துள்ளார்.
 விஜயகாந்துக்கு எதிராக பொலிஸில் புகார் செய்யப்பட்டதால்  கைது செய்யப்படுவதில் இருந்து தப்புவதற்காக முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடினார் விஜயகாந்த்.

விஜயகாந்தைக் கைதுசெய்து அவருக்கு  பப்ளிசிற்றி வழங்க ஜெயலலிதா விரும்பமாட்டார் எனக் கூறிய நீதிபதி 5 ஆம் திகதிவரை விஜயகாந்தை கைது செய்ய தடை விதித்தார் இந்த அரசியலை அறியாத விஜயகாந்த் நல்லதொரு சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுள்ளார்.
கும்பகோணம்,தஞ்சாவூர்,சென்னை,நாமக்கல் ஆகிய இடங்களில் விஜயகாந்துக்கு எதிராக போராட்டங்கள்  நடைபெற்றன. புதுச்சேரயில் ஹோட்டல் ஒன்றில் விஜயகாந்த் தங்கி  இருப்பதாக அறிந்த பத்திரிகையாளர்கள் அக ஹோட்டலை முற்றுகையிட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களும் அங்கு கூடி  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


திராவிட முன்னேற்றக் கழகம்,பாரதீய ஜனதாக் கட்சி வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி என்பன  விஜகாந்தின் வருகைக்காக காத்திருக்கின்றன. ஒருகட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஊடகங்களின் கைகளிலேதான் உள்ளன. பத்திரிக்கை,தொலைக்காட்சி என்பனவற்றுடன் விஜயகாந்த் மோதிக்கொண்டிருந்தால் அவருக்குரிய முக்கியத்துவத்தை ஊடகங்கள் குறைத்துவிடும் அபாயம் உள்ளது. இது அவரது அடுத்த கட்டவளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும். அரசியல் தலைவருக்குரிய பக்குவம் விஜயகாந்திடம் இல்லை.பொதுமக்களுடனும் பத்திரிகையாளர்களுடனும் நல்லுறவைப் பேணத் தவறிவிட்டார்.
வர்மா 
தமிழ்த்தந்தி
1/3/16

Friday, November 20, 2015

பீகாரின் பாதையில் செல்லுமா தமிழகம்?


அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை என்பதை பீகார் தேர்தல் உணர்த்தி உள்ளது.பொது எதிரியான பாரதீய ஜனதாவை வீழ்த்துவதற்காக பரம எதிரிகளான லல்லு,நிதீஷ்குமார்,சோனியா ஆகிய மூவரும் கெளரவத்தைக் கைவிட்டு ஓரணியில் நின்று சாதித்துள்ளனர்.கருணாநிதி,வைகோ,திருமாவளவன்,ராமதாஸ்,வாசன்,இளங்கோவன்,சிதம்பரம்,நல்லகண்ணு,பி.மகேந்திரன்,விஜயகாந்த் ஆகியோர் ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.பீகாரில் மூன்று தலைவர்கள் ஒன்றிணைந்து பாரதீய ஜனதாவை விரட்டினார்கள்.தமிழகத்தில் பத்துக்குமேற்பட்டதலைவர்கள் ஆளுக்கு ஒருதிக்கில் நிற்பதனால் ஜெயலலிதாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.

தமிழக அரசியல் தலைவர்களின் வரட்டுக்கெளரவம் ஜெயலலிதாவின் வெற்றிக்கு செங்கம்பள‌ம் விரித்துள்ளது.எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைக்கக்கூடாது என்பது ஜெயலலிதாவின் விருப்பம்.அவரின் விருப்பத்தை எதிர்க்கட்சித் தலைவர்கள் சிரமேற்கொண்டு செவ்வனே நிறைவேற்றிவருகின்றனர்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் பெருவெற்றி பெற்றார்.பாரதீய ஜனதாகூட்டணியில் வைகோ,விஜயகாந்த்,ராமதாஸ் ஆகியோர் போட்டியிட்டனர். பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளரும் ராமதாஸின் மகன் அன்புமணியும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றனர்.தனித்தனியாகப் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.அதே போன்ற ஒருநிலையே எதிர் வரும் தமிழக சட்டசபைத் தேர்தலிலும் நடைபெறும் நிலை உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியைவிட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி  ஆறு சதவீதம் குறைவாக உள்ளது. ஆறு சதவீத வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக இரண்டு கட்சிகளுடன் கூட்டணி சேரவேண்டிய நிலையில் உள்ளது திராவிட முன்னேற்றக்கழகம்.கூட்டணிக் கதவை அகலத்திறந்து வைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏனைய கட்சிகள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.


திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வருடம் செப்டெம்பரில் நடைபெற்ற கட்சிமாநாட்டில் ஜெயலலிதாதான் பொது எதிரி என  பகிரங்கமாக அறிவித்த வைகோ திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணிக்கு பச்சைக் கொடி காட்டினார். ஸ்டாலின்,கருணாநிதி ஆகியோரை வைகோ சந்தித்ததார். உயர்நிலைக் குழுக்கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என வைகோ அறிவித்ததனால் இரண்டு கட்சித் தொண்டர்களும் உற்சாகமடைந்தனர்.இந்த உற்சாகம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.வைகோ தலைமையில் மக்கள் நல கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதால் திராவிட முன்னேற்றக் கழகம் அதிர்ச்சி யடைந்துள்ளது.
மக்கள் நலக் கூட்ட‌ணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,விடுதலைச் சிறுத்தைகள்,கொம்யூனிஸ்ட்  கட்சி, மாக்சிஸ்ட் கட்சி ஆகியவற்றின் வாக்கு வங்கு 6 முதல் 8 சதவீதமே உள்ளது.இந்தக்கூட்டணியால் வாக்குகளைப்பிரிக்க முடியுமே தவிர ஆட்சியைப்பிடிக்க முடியாது.இந்தக்கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தால்  ஜெயலலிதா ஆட்சியை இழப்பது நிச்சயம்.

விஜயகாந்தின்கட்சிக்கு 5 முதல் 8 சதவீத வாக்கு வங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல்58 சதவீத வாக்கு வங்கி உள்ளது.இந்த இரண்டு கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்தால் கருணாநிதி முதல்வராகி விடுவார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தொக்கி நிற்பதனால் பிரதான எதிர்க் கட்சிகள் ஒரே பாதையில் செல்ல விரும்பவில்லை.

கருணாநிதிதான் அடுத்த முதல்வர் என திராவிட முன்னேற்றக் கழ்கத்தினர் நினைக்கின்றனர்.ஸ்டாலினுக்கு கருணாநிதி வழிவிட வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆதரவாளர்களின் விருப்பம்.ஒரேகட்சியினுள் இரண்டு முதலமைச்சர்கள் இருக்கும் விந்தையான அரசியல்த‌மிழகத்தில் நிலவுகிறது. முதல்வர் கனவில் இருக்கும்  விஜயகாந்த் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேரத்துடிக்கிறார். பாரதீயஜனதாவின் வாக்கு வங்கி பரிதாபமாக  உள்ளது.தமிழகத்தில் செல்வாக்குமிக்க தலைவர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை. தமிழக கட்சிகளின் தயவை நம்பியே பார‌தீய ஜனதா உள்ளது. இவை எல்லாவற்றையும் தெளிவாகத்தெரிந்து கொண்ட விஜயகாந்த்,ஜெயலலிதாவுடனும் கருணாநிதியுடனும் கூட்டணி இல்லை என மேடைதோறும் பிரசாரம் செய்கின்றார்.அவரின் மனைவி ஒருபடிமேலேபோய் கருணாநிதியை மிக மோசமாகத் தாக்குகிறார்.

தனது மகன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த ராமதாஸ் திராவிட முன்னேற்றக்கழகத்தை மிக மோசமாக விமர்சிக்கின்றார். அவருடைய மகன் அன்புமணி, ஸ்டானினுடன் மல்லுக்கட்டுகிறார். ஆளும்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையோ அதனை வழிநடத்தும் ஜெயலலிதாவையோ விமர்சிக்காக தகப்பனும் மகனும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர்களையும் குறிவைப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவரான ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரான ராகுலுக்கும் பொருத்தம் சரியில்லை. இவர்களின் பிடிவாதத்தினால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் இணையவில்லை.அதன் பலனாக பொது எதிரியான ஜெயலலிதா வெற்றி பெற்றார்.இவர்கள் இருவரும் தமது வரட்டுகெளரவத்தைக் கைவிட்டால் ஜெயலலிதாவை வீழ்த்தலாம் இல்லையேல் மீண்டும் அவர் முதல்வராவதைத் தடுக்க முடியாது.

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.மக்கள் நலக்கூட்டணியை உடைத்து  திருமாவளவனை உள்ளே இழுக்க திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. அந்தக்கூட்டணியைப் பாதுகாக்க அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தன்னாலானதைச் செய்யக்  காத்திருக்கிறது. வைகோவின் கட்சியின் முக்கியஸ்தர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் சாய்ந்துவிட்டனர்.இறுதி நேரத்தில் இன்னும் சிலர் அங்கிருந்து வருவார்கள் என திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்க்கிறது.இதே வேளை விஜயகாந்தின் கட்சியை உடைக்க அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் காய் நகர்த்துகிறது.

ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் விரும்பினாலும் தமிழகத்தலைவர்கள் விரும்பவில்லை.பீகார்  மாநிலத்தலைவர்கள் ஒன்றிணைந்து பாரதீய ஜனதாக் கட்சியை மண்கெளவ வைத்ததை முன்மாதிரியாகக்கொண்டு தமிழகத்தலைவர்களும் பொது எதிரியான ஜெயலலிதாவை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்தால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறவேறும் இல்லையேல் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார்..

ரமணி
தமிழ்த்தந்தி
15/11/15

Monday, February 17, 2014

கூட்டணிக்குழப்பத்தில் பா.ஜ.க


வட இந்தியா எங்கும் மோடி அலை வீசுவதனால் தென் இந்தியாவிலும் வலுவான கூட்டணி அமைக்கலாம் என்ற பாரதீய ஜனதாக்கட்சி யின் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது. திராவிடக்கட்சிகளுடனும், காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று மேடை தோறும் முழுக்கமிட்ட விஜயகாந்தை வளைத்துப்போட்டால் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்ற  பாரதீய ஜனதாக்கட்சியின் கனவு தவிடு பொடியாகி விடும் போல் உள்ளது.

பாரதீய ஜனதாக்கட்சியுடன் விஜயகாந்த் கூட்டணி சேர வேண்டும் என்று முதலில் முயற்சி செய்தவர் தமிழருவி மணியன். காங்கிரஸ்,  திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் பரம எதிரியான இவர் தமிழகத்தில் இருந்து இரண்டு கட்சிகளையும் தூக்கி எறிய வேண்டும் என்று சபதமெடுத்தார். அவரின் முயற்சியினால் பாரதீய ஜனதாக்கட்சி மிகவும்  மகிழ்ச்சியடைந்தது. காங்கிரஸும், திராவிட முன்னேற்றக் கழகமும் கதிகலங்கின.

விஜயகாந்தை தமது கூட்டணியில் சேர்ப்பதற்கு திராவிட முன்னேற்றக்கழகமும், காங்கிரஸ் கட்சியும் தூதுக்கு மேல் தூது அனுப்பின. எதற்கும் அசையாது பொறுமையாக சகல கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்திய விஜயகாந்தின் பார்வை இப்போது காங்கிரஸின் பக்கம் சாய்ந்துள்ளது. விஜயகாந்தின் இந்த வியூகம் பாரதீய ஜனதாக்கட்சியை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காங்கிரஸையும், திராவிட முன்னேற்றக்கழகத்தையும்  அரசியலி இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்று விஜயகாந்துக்கு தமிழருவி  மணியன் போதித்தார். அவரின் போதனையை புறம் தள்ளிய விஜயகாந்த் சோனியா விடம் கருணாநிதியிடமும் சரணடையும் வகையில்  வியூகம் அமைத்து வருகிறார்.

விஜயகாந்த், வைகோ, டாக்டர், ராமதாஸ் ஆகியோருடன் வலுவான கூட்டணி ஒன்றை அமைப்பதற்குரிய நடவடிக்கையை பாரதீய ஜனதாக்கட்சி முன்னேடுத்தது வைகோவும்,டாக்டர் ராமதாஸும் பாரதீய ஜனதாக்கட்சியுடன் இணைவார்கள். விஜயகாந்த்  விரைவில்  முடிவை அறிவிப்பார் என பாரதீய ஜனதாக்கட்சி நம்பியது. யாருடன் கூட்டணி என்பதை அறுதியிட்டுக் கூறாமல் தனது மதிப்பை உயர்த்தும் விஜயகாந்தின் போக்கு  புரியாமல் அரசியலில் தலைவர்கள் வெறுப்படையத் தொடங்கினர். கூட்டணி  சேர்வதும் சேராததும் விஜயகாந்தின் விருப்பம் என்ற ரீதியில் விஜயகாந்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.

மோடி தமிழகத்துக்கு வந்தபோது வைகோவையும்,டாக்டர் ராமதாஸையும் மேடையேற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதாக்கட்சி விரும்பியது.  அந்த விருப்பத்தை வைகோவும், டாக்டர் ராமதாஸும்  நிராகரித்துவிட்டனர். கூட்டணித்தொகுதி பேரம் முடித்த பின்பே மேடை ஏற வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக உள்ளனர்.  கருணாநிதியும், ஜெயலலிதாவும் கடைசி நேரத்தில்  காலைவாரியதால் சூடுபட்ட வைகோ கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சூன்பே கூட்டணித் தலைவர்களுடன்  மேடை ஏறுவேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.வைகோவின் சார்பில் மல்லை சத்யா உட்பட சிலர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  வைகோ வாழ்த்துச செய்தியை வெளியிட்டார். மோடி தங்கியிருந்த ஹோட்டலுக்குச்  சென்ற வைகோ தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மோடியை வைகோ சந்தித்ததனால் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டுச்சேர முடியாத வைகோவுக்கு மோடியுடன் சேர்வதைத் தவிர வேறு தெரிவுஇல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேரப் போகிறேன் என்று தெரியாமலேயே தனது கட்சி போட்டியிடும் தொகுதி களையும்  வேட்பாளர்களையும் அறிவித்து தேர்தலையே  கேலிக்கூத்தாக்கிய டாக்டர் ராமதாஸ் தான் கேட்கும் தொகுதிகள் ஒதுக்கபடவில்லை என்றால்  கூட்டணி இல்லை  என்று அறிவித்துள்ளார்.தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டசபைத் தேர்தல்களின் போது வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய வைகோவையும், டாக்டர் ராமதாஸையும்  வருந்தி அழைத்து யாரும் கூட்ட ணியில் சேர்ப்பது இல்லை.அந்த இடத்தை விஜயகாந்த் பிடித்து விட்டார். விஜயகாந்தின் வளர்ச்சி இவர்கள் இருவருக்கும் பாதகமாக அமைந்துள்ளது. விஜயகாந்த் கேட்கும் தொகுதிகளைக் கொடுப்பதற்கு மத்திய, மாநில, கட்சிகள் தயாராக இருக்கின்றன. பேச்சாற்றல், செயலாற்றல் மிக்க தலைவர்கள் யாருமே விஜயகாந்தின் கட்சியில் இல்லை. மக்களைக் கட்டிப்போடும் வகையிலான  கவர்ச்சிகர மாகப் பேசும் சக்தி விஜயகாந்துக்கு இல்லை வாக்குகளை சிதறடிக்கும் சக்தி அவருக்குள்ளது.  அதன் காரணமாகத்தான் அவருடன் கூட்டணி சேர வேண்டும் என பலம் மிக்க கட்சிகள் விரும்புகின்றன

விஜயகாந்தும், டாக்டர் ராமதாஸும் பாரதீய ஜனதாக்கட்சியின் எல்லைக்கு வெளியே நின்று கண்ணாமூச்சி   விளையாடுவதனால் அவர்களை கைவிட வேண்டிய நிலைக்கு பாரதீய ஜனதாக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் பலமான கூட்டணி என எதிர் பார்க்கப்படடது. பாரதீய ஜனதாக்கட்சி பலவீனமடைந்துள்ளது.  பாரதீய ஜனதாக் கட்சியின் பலவீனம் ஜெயலலிதாவுக்கு தெம்ப ளித்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் விஜயகாந்த் சேர்ந்தால் தமிழகத்தில் பாரதீய ஜனதாக்கட்சி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடும் அபாயம் உண்டு.
வர்மா
 சுடர் ஒளி 16/02/13 

Monday, February 10, 2014

வார்த்தை தவறிய தலைவர்கள்


இந்திய நாடாளுமன்றத்  தேர்தலில் தனித்து நிற்போம். நாற்பது தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்  என்று வீறாப்பு பேசிய ஜெய லலிதா, இடது சாரிகளின் முதுகில் சவாரி விடத் தயாராகி விட்டார். கடவுளுடனும், மக்களுடனும் தான் கூட்டணி என்று சினிமாப்பாணியில் அறை கூவல் விடுத்த விஜயகாந்த் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிடம் மண்டியிட்டார். ஊழல் ஒழிப்பு மாநாடு நடத்திய விஜயகாந்த் திராவிட முன்னேற்றக்கழகத்துடனும், காங்கிரஸ் கட்சியுடனும் இரகசிய     பேரம் நடத்துகிறார். திராவிட முன்னேற்றக்கழகத்துடனும், தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி சேரமாட்டேன் என்று சத்தியம் செய்த டாக்டர் ராமதாஸ் பாரதீய ஜனதாக்கட்சிக்கு தூது அனுப்பயுள்ளார்.

இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவருவதற்கிடையில் கூட்டணி பேரத்தை முடித்துவிட தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் முனைப்புக்காட்டத் தொடங்கிவிட்டன.செல்வாக்குள்ள மாநிலக் கட்சிகள், தேசியக்கட்சிகளை ஆட்டிப்படைக்கின்றன. தேர்தல்கால வாக்குறுதி போன்று வாக்குத் தவறிய தலைவர்கள் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்பில் கூட்டணிசேரத் துடிக்கின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தயவில் நாடாளுமன்றத்  தேர்தலில் போட்டியிடலாம் என்று காத்திருந்த கூட்டணித் தலைவர் களை உதாசீனம் செய்து, நாப்பதும் நமக்கே என்ற கோஷத்துடன் நாடாளுமன்றத்  தேர்தலில் தனித்துப் போட்டிபோடப்போவதாக ஜெயலலிதா அறிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கும்போது அவர் இறங்கிவருவார் என்று கூட்டணித் தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
கூட்டணித் தலைவர்களின் நம்பிக்கை வீண்போக வில்லை. இடது சாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகார பூர்வமாக அறிவித்து ஜெயலலிதா. இடது சாரி களின் எதிர்பார்ப்பில் பாலை வார்த்தார் ஜெயலலிதா. சிறு பிள்ளைத் தனமான முன்னைய அறிவிப்பை அவருடைய கூட்டணித் தலைவர்கள் மறந்துவிட்டனர். தமிழகத்தில் கால்பதிப்பதற்கு அவர்களுக்கு கொளுகொம்பு ஒன்று தேவைப்பட்டது. நாடாளுமன்றத்  தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஜெயலலிதாவால் வெற்றிபெற முடியாது என்பதை இடது சாரித்தலைவர்கள் நன்கு அறிவார்கள்.காங்கிரஸ், பாரதீய ஜனதாக்கட்சி ஆகியவற்றுக்குப் போட்டியாக மூன்றாவது அணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வட இந்திய அரசியல்வாதிகள் விரும்புகின்றனர். அவர்களின் ஆசையைப் பூர்த்திசெய்யும் முகமாக தமிழகத்தில் மூன்றாவது அணியை ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாக்சிஸக் கட்சி ஆகியவற்றுடன் கைகோத்துள்ள ஜெயலலிதா தனது பிரதமர் கனவுக்கு அடித்தள மிட்டுள்ளார்.
பாரதீய ஜனதாக்கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டுச் சேர முடியாத இடதுசாரிகள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகையை அதிகரிப்பதற்காக ஜெயலலிதாவின் உதவியை நாடியுள்ளனர். தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிட இடதுசாரிகள் விரும்புகின்றனர். ஆனால், இரட்டை இலக்கத் தொகுதிகளை ஜெயலலிதா கொடுக்கமாட்டார். ஐந்துக்கும் குறைவான தொகுதிகளையே ஜெயலலிதா கொடுப்பார். இடதுசாரிகளின் உதவியுடன் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் திட்டம்.பிரதமர் யார் என்பதை முன்னிலைப்படுத் தாமலே  ஜெயலலிதாவும் இடதுசாரிகளும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி விட்டனர். காங்கிரஸ்  கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள் தம்முடன் இணையும் என்று ஜெயலலிதா எதிர்பார்க்கிறார். ஜெயலலிதாவை நம்பியிருக்கும் சரத்குமாரும் முஸ்லிம் தலைவர்களும் ஜெயலலிதாவின் வெற்றிக்காக பிரசாரம் செய்வதைத் தவிர வேறுவழி இல்லை. ஜெயலலிதா மனம் இரங்கி அவர்களுக்கு தலா ஒரு தொகுதி கொடுத்தால் மகிழ்ச்சியடைவார்கள். அப்படிக் கொடுத்தாலும் அவர்கள் இரட்டை இலைச்சின்னத்தில் தான் போட்டியிடவேண்டும்  என்பார்.ஆனாலும் அப்படி ஒரு விஷப்பரீடசையை செய்வதற்கு ஜெயலலிதா தயாராகவில்லை.

விஜயகாந்தின்  கட்சியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவிடம் சரணடைந்த ஏழு சட்டமன்ற உறுப்பினர்களும் தமது விசுவாசத்தை ஜெயலலிதாவுக்கு காட்டவேண்டிய துர்ப்பாக்கிய நிலை  எழுந்துள்ளது. தாம் வெற்றிபெற்றது தமது செல்வாக்கினாலா? விஜயகாந்தின் செல்வாக்கினாலா? ! என்பதை நாடாளுமன்றத்  தேர்தலின் பின்னர் அவர்கள் அறிந்துகொள்வார்கள்.கூட்டணி என்ற சொல்லைக் கேட்டதும் சிங்கம் போல்   சிலிர்த்து எழுந்து தாண்டவமாடிய விஜயகாந்த் அரசியலைப்பற்றி ஞானம் பிறந்ததும் ஜெயலலிதாவுடன் கூட்டணியமைத் தார். தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது கட்சித் தலைவர்கள் எல்லோரும் ஒரே மேடையில்  தோன்றி  வாக்குக்கேட்டபோது ஜெயலலிதாவும், விஜயகாந்தும் எதிரும் புதிருமாக மேடையேறி பிரசாரம்  செய்தார்கள்.
ஜெயலலிதாவினால் ஓரம்கட்டப்பட்டதால் கூட்டணி அரசியல் புளிக்கும் என்று காலம் கடந்த ஞானத்தின் பின்னர் தனிவழி போகத் தொடங்கினார் விஜயகாந்த். நாடாளுமன்றத்  தேர்தலில் தன்னை நாடிவருவார்கள் என விஜயகாந்த் எதிர்பாத்தார். அவரது எதிர்பார்ப்பு வீணாகவில்லை. பாரதீய ஜனதாக்கட்சியும், திராவிட முன்னேற்றக்கழகமும் அவருக்குத் தூது விட்டன.  தனது மதிப்பு உயருவதை  அறிந்த விஜயகாந்த் அதிக தொகுதிகள் பெறும் நோக்குடன் இரண்டு கடசிகளுடனும் பேரம் பேசினார்
திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் பாரதீயஜனதா இரகசியப் பேச்சு நடத்தியவாறே காங்கிரஸ் கட்சியுடனும் விஜயகாந்தின் பிரதி நிதிகள் பேச்சு நடத்தினர். உளுந்தூர் பேட்டையில்  நடைபெறும் ஊழல் ஒழிப்பு மாநாட்டில் தனது முடிவை அறிவிப்பதாக விஜயகாந்த் அறிவித்தார். இதன் காரணமாக உளுந்தூர்  பேட்டை மாநாடு முக்கியத்துவம் பெற்றது.இலட்சக்கணக்கான மக்களின் முன்னலையில் நடைபெற்ற உளுந்தூர் பேட்டை மாநாட்டில் முடிவை அறிவிக்காது ஏமாற்றினார் விஜய காந்த். கூட்டணியா, தனியாகவா போட்டியிடுவது என மக்களிடம் கேட்டார் விஜயகாந்த். தனித்து என்றே மக்கள் கோஷமிட்டனர். மக்கள் தீர்ப்பைக் கேட்டதும் மக்களின் விருப்பம் தனித்துப் போட்டியிடுவது. தலைமையின் முடிவை மக்கள் ஏற்பார்கள் என்று அறிவித்தார் விஜயகாந்த். அரசியல் ரீதியான முடிவை மக்கள் கூட்டத்தில் எதிர்பார்க்கும் சிறுபிள்ளைத்தனமான அரசியலை விஜயகாந்த் அரங்கேற்றினார். அரசியல்  தெரிந்த அரசியல் அனுபவம் உள்ள தலைவர்களுடன் எடுக்கவேண்டிய முக்கியமான  முடிவை மக்களிடம் விஜயகாந்த் எதிர்பார்ப்பது தவறு.
விஜயகாந்தின் கட்சியை வழிநடத்திய அரசியல் அனுபவம் நிறைந்த பன்ருடடி ராமச்சந்திரன் வெளியேறியது மிகப்பெரிய பின்னடைவு. விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் மைத்துனன் தீம் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள். விஜயகாந்த் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். அவரது மனைவி கைதட்டல் வாங்குவதற்காகப் பேசுகிறார். ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் விமர்சித்து தனது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொண்டார்.யாருடன் கூட்டணி சேர்வது எனத் தெரியாது தடுமாறுகிறார் விஜயகாந்த். நல்லதொரு  முடிவை விரைவில் எடுப்பது அவருக்குத்தான் நல்லது. கூட்டணியில் உள்ள மற்றைய கட்சிகள் வெறுப்படையும் வரை காலதாமதம் செய்வது விஜயகாந்துக்கு நல்லதல்ல. விஜயகாந்தின் முடிவிலேதான் ஜெயலலிதாவின் வெற்றி தோல்வி அடங்கியுள்ளது.  

திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டணி சேர்ந்து அலுத்துப் போன  டாக்டர் ராமதாஸ் திராவிடக்  கட்சிகளும் வேண்டாம், தேசியக் கட்சிகளும் வேண்டாம் என்று ஞானோபதேசம் செய்தார். 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற கோஷத்துடன் ஜாதிகட்சிகள் சிலவற்றைத் தன்னுடன் இணைத்தார். கொஞ்சக் காலம் தனது அரசியல் சித்துவிளையாட்டைக் காட்டிய டாக்டர் ராமதாஸ் களைத்துப்போய் பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேரத்துடிக்கிறார்.பாட்டாளி மக்கள் கட்சிக்கும், பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையே பேச்சு நடைபெற்றதே தவிர இன்னமும் கூட்டணி உடன்பாடு எட்டப்படவில்லை. நாடாளுமன்றத்  தேர்தலுக்கு  முன்னர் தனது மகன் அன்புமணியை எம்.ஷ யாக்குவதற்கு முயற்சிசெய்கிறார் டாக்டர் ராமதாஸ். கூட்டணிக் கட்சியின் உதவியினால் வெற்றி பெற்றபோது அதைத் தனது தனிப்பட்ட செல் வாக்கு என்று நினைத்த ராமதாஸ் ஏதாவதொரு வகையில் அரசியலில் முன்னேறத்துடிக்கிறார்
கருணாநிதியும், டாக்டர் ராமதாஸும்  ஒன்றாக இருந்தபோது ராமதாஸின் மகன் அன்புமணி அமைச்சராக இருந்தார். கருணா நிதியைக்  கைவிட்டதால் மகனின் அரசியல் எதிர் காலமும் சூனியமாகிப்போனது. காங்கிரஸ் கட்சியின் நிலையும்  இதுதான். தமிழக அரசியல் தலைவர்கள் கருணாநிதியை விமர்சிப்பார்கள். எம்.பியாக்க வேண்டும் என்றால் கருணாநிதியின் உதவிதேவை என்பதைக் கடந்த ராஜ்ய சபை  தேர்தலின் மூலம் காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்துகொண்டனர்.ராஜ்ய சபை எம்.பி.பதவியை இழந்த வாசன் மீண்டும் எம்.பியாவதற்கு முயற்சி செய்தார்.  காங்கிரஸை விட்டு வெளியேவந்தால்  உதவி செய்யலாம் என திராவிட முன்னேற்றக் கழகம் கூறியது. கட்சியை விட்டு வெளியேறும் துணிவு இல்லாததனால் வாசனால் எம்.பியாக முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்து  நாடாளுமன்றத்  தேர்தலைச் சந்திக்கத் தயாராகியது திராவிட முன்னேற்றக்கழகம். முறிந்த உறவை ஒட்டவைக்க முயற்சிசெய்கிறது காங்கிரஸ். காங்கிரஸுடன் கூட்டுச்சேர தமிழகக் கட்சிகள் எவையும் தயாராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டால் வேறு வழி இல்லை என்று காங்கிரஸ் நன்றாக உணர்ந்துள்ளது. பூட்டிய கதவைத் திறப்பதற்கான முயற்சிகள் அனைத்தையும் செய்து வருகிறது காங்கிரஸ். ராகுல், திருமாவளவன் சந்திப்பு அரசியலில் பரபரப்பான செய்தியாக உள்ளது. பழைய கூட்டணியைப் புதுப்பிக்கும் சந்திப்பாக  இருக்கலாம் என்று நோக்கப்படுகிறது. மன்மோகன்சிங், சோனியா உள்ளிட்ட டில்லித் தலைவர்கள் சிலர் கருணாநிதி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். கருணாநிதியை, ராகுல் மதிப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. கருணாநிதியைச் சந்தித்துப் பேசுவதற்கு ராகுல் முயற்சி செய்ததாக  கடந்த வாரம் செய்தி வெளியானது. அந்தப் பின்னணியில்  திருமாவளவன் ராகுலைச் சந்தித்தது அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று  ஸ்டாலின் அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார்.  காங்கிரஸுடன் சேரவேண்டும் என்று அழகிரியும் கனிமொழியும் விரும்புகின்றனர்.ஸ்டாலினின் பார்வை விஜயகாந்தை நோக்கித் திரும்பயுள்ளது. விஜயகாந்த் வேண்டாம் என்று குமுறுகிறார் அழகிரி. சகோதரர்களின் பாசப்போராட்டத்தில் சிக்கித்தவிக்கிறார் பாசக்காரத் தந்தை கருணாநிதி. 
திராவிட முன்னேற்றக்கழகம் தனது பலத்தைக் காண்பிப்பதற்காக  திருச்சியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளது. 10 இலட்சம் பேர் இந்த மாநாட்டில் கூடுவார்கள் என்று திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்பார்க்கிறது.  விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் உட்பட 13 கட்சிகள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில்  நாடாளுமன்றத்  தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளன. அதிக கட்சிகள் இருந்தாலும் தேர்தலில் வெற்றிபெறுவதற்குரிய பலம் இக்கட்சிகளுக்கு இல்லை
ஊழல் செய்த அரசியல்வாதிகளின் பெயரை வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சி, கனிமொழிக்கு எதிரான வழக்கின் முக்கியமான ஒலிப்பதிவை வெளியிட்டுள்ளது. இந்த ஒலிப்பதிவு உண்மை என நிரூபக்கப்பட்டால் கனிமொழி கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி அறிவித்துள் ளது. தேர்தல் நெருங்குகையில்  திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு  எதிரான 2ஜி வழக்கை தூசுதட்ட எதிரணிகள் தயாராகிவிட்டன.
அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் எதிரான ஊழல் வழக்குகளும் விசாரணைக் கமிஷன்களும் காலம் சென்ற பன்னர் மங்கிப்போயுள்ளன. வரலாறு போபஸ் ஊழல் பரசாரத்தில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றது. கருணாநிதிக்கு எதிரான வர்மா கமிஷன், விடுதலைப் புலிகளைக் தப்பவைத்த  குற்றம் என்பன காலப்போக்கில்  காணாமல் போய் விட்டன. வருமானத்துக்கு மீறிய சொத்துச்சேர்த்த வழக்கு, டான்சி நிலபேர ஊழல் போன்ற வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட ஜெயலலிதா இரண்டாவது முறை முதல்வராகிவிட்டார். அடுத்த தேர்தலின் பின
பிரதமராகும் கனவில் மிதக்கிறார், வழக்கு இன்னமும் முடியவில்லை.
2ஜி வழக்கில் ஒரு இலட்சம் கோடி ஊழல் என்ற குற்றஞ்சாட்டப்பட்டது. இப்போது 200 கோடி ஊழல் எனச் சுருங்கிவிட்டது. இந்தச் சிக்கலில் இருந்து திராவிட முன்னேற்றக்கழகம் தப்பிவிடும் என்று கருணாநிதி நம்புகிறார்.
வர்மா 
சுடர் ஒளி 09/02/14