Sunday, November 28, 2010

வில்லியமின் நிச்சயதார்த்தத்தில் நினைவு கூரப்பட்ட டயனா

பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் டயானாவின் மகன் வில்லியத்தின் திருமண நிச்சயதார்த்தத்தின் மூலம் டயானா மீண்டும் நினைவு கூரப்பட்டுள்ளார். சார்ள்ஸ்டயானா திருமணம் கடந்த நூற்றாண்டில் மிகப் பிரமாண்டமான திருமணமாக அமைந்தது. பிரிட்டிஷ் மக்களின் மனதில் மட்டுமல்லாது உலகின் பல கோடி மக்களின் மனதில் இடம்பிடித்தவர் டயானா. உலகின் எண்ணற்ற படப்பிடிப்பாளர்களுக்குத் தீனி போட்டவர் டயானா. பப்பராசிகளினால் துரத்தப்பட்டு கொடூரமாக உயிரை இழந்தார்.
சார்ள்ஸ் டயானா திருமணம் முறிந்த போது டயானாவின் பக்கமே அதிகமானோர் இருந்தனர். இளவரசர் சார்ள்ஸுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட டயானாடொடி என்ற கோடீஸ்வரரைக் காதலித்த போது அதிகமானோர் அக் காதலை விரும்பவில்லை. டயானாவைக் கைவிட்ட இளவரசர் சார்ள்ஸ் தனது காதலியான கமிலாவைக் கரம் பிடித்தார். டயானாவின் இடத்தில் கமீலாவை இருத்திப் பார்க்க அதிகமானோர் விரும்பவில்லை. டயானாவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கமீலாவுக்குக் கொடுக்கப்படவில்லை.
கென்யாவில் தனது திருமணம் பற்றி வில்லியம் அறிவித்த போது எவரும் ஆச்சரியப்படவில்லை. கதே மிடில்ரொன் என்னும் யுவதியை வில்லியம் காதலிப்பது உலகறிந்த விடயம். திருமண நிச்சயதார்த்தத்தின் போது தனது தாய் டயானா அணிந்த மோதிரத்தை மிடில்ரொன் கையில் வில்லியம் அணிந்தபோது உலகமே அதிசயமாகப் பார்த்தது.
டயானா அணிந்த மோதிரத்தை தனது எதிர்கால மனைவியின் விரலில் அணிவித்து தாய் டயானாவுக்குரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளார் வில்லியம். நீள் வட்டமான நீல நிறமுடைய அந்த மோதிரத்தில் 14 வைரங்கள் உள்ளன.
இங்கிலாந்தின் அடுத்த இளவரசி தனது மனைவி கதே என்பதை வில்லியம் பூடகமாக அறிவித்துள்ளார். டயானாவை நேசிப்பவர்களின் பார்வை கதேயின் பக்கம் திரும்பியுள்ளது. கமீலாவை இளவரசியாக ஏற்றுக் கொள்ளத் தயங்குபவர் கதேயை இளவரசியாக ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டனர் என்பது இங்கிலாந்துப் பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
தனது மனைவி கமீலா ராணியாவதை தான் விரும்புவதாக இளவரசர் சார்ள்ஸ் கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்தில் உள்ள அதிகளவான மக்கள் இதனை விரும்பவில்லை என்பது பத்திரிகைகளின் கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. இளவரசர் சார்ள்ஸ், டயானாவைக் கைவிட்டதை விரும்பாத இங்கிலாந்து மக்களில் அதிகமானோர் அவர் கமீலாவைக் கரம் பிடித்ததையும் விரும்பவில்லை.
தனது தாய் டயானாவின் மோதிரத்தை கதேக்கு வழங்கியதை இங்கிலாந்து மக்கள் வரவேற்றுள்ளனர். அதேவேளை முறிந்து போன திருமண ஞாபகார்த்த மோதிரத்தை வில்லியம் கதேக்கு வழங்கியதை சிலர் விரும்பவில்லை. ஆனால் டயானாவுக்கு கொடுக்கப்பட்ட அதே முக்கியத்துவம் கதேக்கும் கொடுக்கப்படும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
வில்லியம், கதே திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் டயானா சார்ள்ஸ் திருமணத்தைப் போன்று மிகவும் சிறப்பாக அத் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வில்லியம் கதே திருமணத்தைக் குறி வைத்து இப்பொழுதே வியாபாரம் களை கட்ட ஆரம்பித்து விட்டது. வில்லியம் கதே ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. திருமண நிச்சயதார்த்தத்திலன்று விற்பனைக்கு வந்த இப் பொருட்களை பிரிட்டிஷ் மக்கள் ஆர்வத்துடன் வாங்கினார்கள்.
இங்கிலாந்தில் வெளிவரும் சகல பத்திரிகைகளும் வில்லியம் கதே திருமண நிச்சயதார்த்தம் பற்றிய செய்தியை முன்பக்கத்தில் படங்களுடன் பிரசுரித்தன. திருமணம் நடைபெறும் வரை ஊடகங்களின் பார்வை அரச குடும்பத்தின் மீதுதான் இருக்கும்.
1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி சார்ள்ஸைத் திருமணம் முடிப்பதற்காக தகப்பன் ஏர்ள்ஸ் பென்சரின் கரத்தைப் பிடித்தபடி டயானா நடந்து வந்தபோது அந்தத் திருமண வைபவத்தில் ஆறாவது வரிசையில் தனது சிறிய மகனுடன் அமர்ந்திருந்தார் திருமதி கமீலா பாக்கர். டயானாவின் மகன் வில்லியத்தின் திருமண நிச்சயதார்த்தத்தின் போது சார்ள்ஸின் மனைவியாக இருந்தார் கமீலா.
முதலில் யாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறதோ அவருக்குத்தான் தாய் டயானாவின் மோதிரத்தை கொடுக்க வேண்டும் என்று வில்லியமும் ஹரியும் முடிவு செய்திருந்தார்கள். சார்ள்ஸும் கமீலாவும் மறக்க நினைத்த டயானாவை மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளார் வில்லியம்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 26/12/10

Wednesday, November 24, 2010

அணி மாற விரும்புகிறது காங்கிரஸ்தனிவழி போகத் தயாராகிறது தி.மு.க.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இருந்த பனிப்போர் அமைச்சர் ராசாவின் இராஜினாமாவுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிகள் அனைத்தும் அதன் கூட்டணிக் கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மதிப்புக் கொடுத்து வந்துள்ளன. கூட்டணி அமைத்த பின்னர் குடைச்சல் கொடுக்காது நல்ல பிள்ளையாக வலம் வரும் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசின் துணையுடன் தனது காரியங்கள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றி வந்தது.
மத்திய அரசு அமையும் போது எத்தனை அமைச்சர்கள், எந்தத் துறை அமைச்சர்கள் என்று பேரம் பேசி அமைச்சுப் பதவிகளைப் பெற்று வந்தது திராவிட முன்னேற்றக் கழகம். பெரும்பான்மை இன்றி தமிழகத்தில் ஆட்சி செய்யும் திராவிட முன்னேற்றக் கழகத்தை இணைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. அமைச்சர் ராசாவின் பொறுப்பில் இருந்த ஸ்பெக்ரம் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடுகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அத்திபாரத்தையே ஆட்டம் காணச் செய்து
விட்டன.
ஸ்பெக்ரம் விற்பனையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறிய போது மத்திய அரசும் தமிழக அரசும் அதைப் பூசி மெழுகி மறைக்க முயன்றன. ஸ்பெக்ரம் ஏலம் எல்லாம் முறைப்படிதான் நடைபெற்றது. நீதிமன்றத்தில் எல்லாவற்றையும் ஒப்படைத்து குற்றமற்றவன் என்று நிரூபிப்பேன் என்று அமைச்சர் ராசா சவால் விட்டார். ஸ்பெக்ரம் விவகாரத்தை சி.பி.ஐ. பொறுப்பெடுத்து விசாரணை செய்து வருகிறது. நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெறுகிறது. அமைச்சர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பட்டும் படாமலும் கூறி வந்தது. எதற்கும் மசியாது ராசாவை அமைச்சராக அழகு பார்த்தார் தமிழக முதல்வர் கருணாநிதி. எதிர்க்கட்சிகளின் கேள்விகளை நாடாளுமன்ற இரு அவைகளின் முடக்கம் சி.பி.ஐ. விசாரணை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப பல முனைகளில் நெருக்குதல் ஏற்பட்ட போது ராசா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தார்.
வருமானவரித் துறை, மத்திய அமுலாக்கப் பிரிவு என்பனவும் தமது விசாரணைகளை முடுக்கிவிட்டன. இவை தவிர நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பகிரங்கப்படுத்தப்பட்டன. ராசா இராஜினாமாச் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்கும் என்பதை காலம் கடந்து கருணாநிதி உணர்ந்து கொண்டார்.
இந்தியாவின் மிக முக்கியமான அமைச்சுப் பதவிகளில், தொலைத்தொடர்பு அமைச்சும் ஒன்று. தயாநிதிமாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. கருணாநிதி குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது தயாநிதிமாறனிடம் இருந்த தொலைத் தொடர்புத் துறை பிடுங்கப்பட்டு ராசாவிடம் வழங்கப்பட்டது. குடும்பப் பிரச்சினை சுமுகமாகி மீண்டும் காங்கிரஸ் ஆட்சிபீடம் ஏறியபோது தொலைத் தொடர்புத் துறையை தயாநிதிமாறனிடம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அவர் பதவி வகித்த போது ஏற்பட்ட முன்னேற்றம் ராசா அமைச்சரானதும் தேக்கமடைந்தது. ஆனால் அந்த அமைச்சுப் பதவி மீண்டும் ராசாவுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதில் கருணாநிதி உறுதியாக இருந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்குமிடையே ஏற்பட்ட பல முறுகல்களை சோனியாவும், மன்மோகன் சிங்கும் மிகவும் பக்குவமாகத் தீர்த்து வைத்தார்கள். ராசாவின் விவகாரம் அவர்களின் கையையும் மீறிச் சென்றுவிட்டது. பலமுறை விசாரணைகள் ராசாவை முடக்கியுள்ளன. ராசா தொடர்ந்தும் அமைச்சராக இருக்க வேண்டும் என்று விரும்பிய திராவிட முன்னேற்றக் கழகம் இப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு மிகுந்த பிரயாசைப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போயின.
ஸ்பெக்ரம் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதனால் நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது அரச தரப்பு வழக்கறிஞர் தடுமாறினார். ராசாவின் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முன்பு ராசா இராஜினாமாச் செய்து விட்டார். அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஊழல் விவகாரம் புதியதல்ல. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மிக பல ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டு அவை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. அவற்றை மாற்ற தலைவர்கள் தாம் கறைபடியாதவர்கள் போல் அறிக்கை விடுகின்றனர்.
சசிதரூ, அசோக் சவான், கல்பாடி ஆகியோர் அண்மையில் ஊழலில் சிக்கி பதவி துறந்தவர்கள். அவர்களை முன் உதாரணம் காட்டித்தான் ராசா இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. காங்கிரஸ் கட்சியின் நெருக்கடி காரணமாக ராசா இராஜினாமாச் செய்தார். தொலைத் தொடர்புத் துறை அமைச்சுப் பதவியில் இருந்து ராசா இராஜினாமாச் செய்தாலும் அந்த அமைச்சுப் பதவி தமது கட்சியில் உள்ள ஒருவருக்குத்தான் கிடைக்கும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நினைத்தது. ஆனால் கபில் சிபிலை காங்கிரஸை தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக்கியது காங்கிரஸ் கட்சி. ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவரான கபில் சிபிலை அமைச்சராக்கி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது காங்கிரஸ்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை முறித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி சேரப் போகிறது என்ற தகவல் பரபரப்பாக வெளியான போது திராவிட முன்னேற்றக் கழகம் அதனை அசட்டை செய்தது. காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தரப் போவதாக ஜெயலலிதா அறிவித்த பின்னர் சுதாகரித்துக் கொண்ட கருணாநிதி ராசாவின் இராஜினாமாவுக்கு ஒப்புதலளித்தார்.
அமைச்சுப் பதவியில் இருந்து ராசா இராஜினாமா செய்ய மாட்டார் என்று உறுதியாகக் கூறி வந்த கருணாநிதி முக்கியமான ஒரு முடிவை எடுத்த பின்புதான் ராசாவின் இராஜினாமாவுக்கு ஒப்புதலளித்தார். ராசா தவறு செய்யவில்லை என்று கருணாநிதியும், கனிமொழியும் மட்டும்தான் குரல் கொடுத்து வருகின்றனர். ஏனையோர் அமைதி காக்கின்றனர். தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது புதிய கூட்டணிகள் உதயமாவதற்கான அறிகுறி இப்போதே தோன்றியுள்ளது. ராசாவின் விவகாரம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான விரிசலை அதிகரித்துள்ளது. தமிழக சட்ட சபைத் தொகுதிப் பங்கீட்டின் போது இரு கட்சிக்குமிடையேயான விரிசல் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
தமிழக ஆட்சியில் பங்கு பெற வேண்டும். அதற்கேற்ற வகையில் தொகுதிப் பங்கீட்டில் பேரம் பேச வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. தமிழக ஆட்சியில் பங்கு கொடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. ஆட்சியில் பங்கு தருபவர்களுடன் தான் கூட்டணி என்ற முடிவில் உள்ளது காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியை நம்பி கூட்டணி சேர்வதற்கு தமிழகக் கட்சிகள் எவையும் தயாராக இல்லை. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினாலும் பரவாயில்லை. அது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேரக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 21/12/10

Sunday, November 21, 2010

இராணுவத்துடன் போராடும்ஜனநாயகப் போராளி

இராணுவ ஆட்சி நடைபெறும் மியன்மாரில் ஜனநாயகம் தளைத்தோங்க வேண்டும் என்பதற்காக மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஆங் சாங் சூகி கடந்த சனிக்கிழமை வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். மியன்மார் என்று அழைக்கப்படும் பர்மாவின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராட்டக் குழுத் தலைவரான ஜெனரல் ஆங் சான், கின் கி தம்பதியருக்கு 1945 ஆம் ஆண்டு பிறந்தவர்.
யாங் கூனில் பிறந்த ஆங் சாங் சூகி தனது வாழ்நாளில் அதிக காலத்தை இந்தியாவிலும் இங்கிலாந்திலும் கழித்தார். டில்லியின் தனது படிப்பை மேற்கொண்ட ஆங் சாங் சூகி, இலண்டன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகியற்றில் பட்டம் பெற்றார். மிக்கேல் ஆரிஸ் என்ற பிரிட்டிஷ்காரரை மணமுடித்தார்.
ஆங் சாங் சூகியின் தகப்பன் ஜெனரல் ஆங் சான் 1947 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் 1988 ஆம் ஆண்டு மியன்மார் திரும்பினார். அப்போது இராணுவ ஆட்சிக்கு நாட்டு மக்கள் காட்டிய எதிர்ப்பைக் கண்டு மக்களின் விடுதலைக்காக தேசிய ஜனநாயக லீக் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். 1962 ஆம் ஆண்டு முதல் மியன்மாரில் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது. இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று போராடிய ஆங் சாங் சூகிக்கு மியான்மார் அரசு கொடுத்த பரிசு வீட்டுக் காவல்.
ஆங் சாங் சூகியின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகுவதைக் கண்ட மியன்மார் அரசு 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரை வீட்டுக் காவலில் வைத்தது. ஆங் சாங் சூகியை விடுதலை செய்யுமாறு உலக நாடுகள் அனைத்தும் ஏகோபித்த குரலில் கோரிக்கை விடுத்தன. அவை எவையும் மியன்மார் அரசின் போக்கை மாற்றவில்லை. சிறையில் இருந்தபடி தனது போராட்டத்தை நடத்தினார் ஆங் சாங் சூகி, அவரது நியாயமான போராட்டத்தை அங்கீகரித்த நோபல் பரிசுக் குழு 1991 ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கிக் கௌரவித்தது.
தாயைப் பார்ப்பதற்காக நாடு திரும்பிய ஆங் சாங் சூகி தாய் நாட்டை விடுவிப்பதற்காகப் போராட்டத்தில் இறங்கியதால் கணவனையும் பிள்ளைகளையும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. புற்றுநோயாளியான ஆரிஸ் தன் மனைவி ஆங் சாங் சூகியைக் கவனிப்பதற்காக மியன்மாருக்குச் செல்ல விரும்பினார். மியன்மார் அரசு அவருக்கு விஸா வழங்க மறுத்து விட்டது. கணவனைப் பார்க்க ஆங் சாங் சூகி விரும்பிய போது இங்கிலாந்துக்குச் சென்றால் நாடு திரும்பக் கூடாது என்று மியன்மார் அரசு நிபந்தனை விதித்தது. விடுதலையா, கணவனா என்ற கேள்வி எழுந்தபோது தனக்கு நாட்டு மக்களின் நலனே முதன்மையானது என்று முடிவெடுத்தார். 1999 ஆம் ஆண்டு சூகியின் கணவர் பிரிட்டனில் மரணமானார்.
1990 ஆம் ஆண்டு மியான்மாரில் தேர்தல் நடைபெற்றது. ஆங் சாங் சூகியின் கட்சி வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த இராணுவ அரசு ஆட்சியை ஒப்படைக்கவில்லை. 2009 ஆம் ஆண்டு ஆங்சாங் சூகியின் வீட்டுக் காவல் முடிவடையும் வேளையில் அவரது வீட்டில் அமெரிக்கரான ஜோன் எட்வேட், என்பவர் சட்டவிரோதமாகத் தங்கி இருந்ததாகவும் அதற்கு ஆங் சாங் சூகி ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறி குற்றம் சாட்டி 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை அவரது வீட்டுக்காவலை நீடித்தது.
நவம்பர் 7 ஆம் திகதி மியான்மாரில் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஆங் சூங் சூகி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. அவரது கட்சியை முடக்குவதற்குரிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஆங் சாங் சூகி அறிவித்தார். இதனால் அவரது கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஆங் சாங் சூகியின் கட்சியில் இருந்து பிரிந்தவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிட்டு ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றனர்.
மியன்மாரில் நடைபெற்ற தேர்தலில் இராணுவ ஆட்சியாளர்கள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளனர். இந்த நிலையில் ஆங் சாங் சூகி வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். வீட்டுக் காவலில் இருந்த போது அவருக்கு இரண்டு பெண் உதவியாளர்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்டனர். தொலைபேசி இணைய வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஆங் சாங் சூகியின் வீட்டின் முன்னால் திரண்ட மக்கள் கூட்டம் அவருக்கு இருக்கும் செல்வாக்கை வெளிப்படுத்தியது. வீட்டுக் காவலில் இருந்து விடுதலையான ஆங் சாங் சூகி என்ன செய்யப் போகிறார் என்பதே உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. மியான்மாரில் இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் தன்னை சிறையிட்டவர்களின் மீது கோபப்படவில்லை என்றும் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
மியான்மாரின் அரசியலில் சிக்கலான நேரத்தில் ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இராணுவ அரசு அங்கு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. உலக நாடுகள் இராணுவ அரசைக் கண்டித்ததே தவிர உறுதியாக எதிர்ப்புக் காட்டவில்லை. ஆங் சாங் சூகியின் செல்வாக்கைக் குறைக்க வேண்டுமென்றால் இராணுவச் சாயம் பூசப்பட்ட அரசைக் களைய வேண்டும். மியன்மார் அரசு இராணுவ அரசு அல்ல. ஜனநாயக அரசு என்பதை வெளிப்படுத்த வேண்டும். அதிரடி அரசியலில் ஆங் சாங் சூகி ஈடுபட மாட்டார். அமைதி வழி சென்றுதான் நினைத்ததைச் சாதிக்கும் ஆளுமை ஆங் சாங் சூகியிடம் உள்ளது.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 19/11/10

Tuesday, November 16, 2010

காங்கிரஸுக்கு வலை விரிக்கும் ஜெயலலிதா



காங்கிரஸுக்கு வலை விரிக்கும் ஜெயலலிதா
தி.மு.க.வுக்கு எச்சரிக்கை விடுக்கும் காங்கிரஸ்

திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையேயான கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை என்று இரண்டு கட்சியின் தலைவர்களும் அடிக்கடி கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலின் போது புதிய கட்சிகளுடன் கூட்டணி அமையும் என்று ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்து வருகிறார். காங்கிரஸ் தலைமை திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை விரும்புகிறது. ஆனால் ராகுல்காந்தியும் தமிழகத்தின் சில தலைவர்களும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை விரும்பவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைய வேண்டும் என்று தமிழகத் தலைவர்கள் சிலர் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.
ஜெயலலிதாவும், விஜயகாந்தும் காங்கிரஸ் கட்சியை எதிர்பார்க்கின்றனர். காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க வேண்டாம் என்று தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இச்செய்தியை ஜெயலலிதா மறுக்கவில்லை. இதபோல்தான் விஜயகாந்த் தன்பங்குக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதை விஜயகாந்த் தவிர்த்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேயான பிரச்சினை இல்லை என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக முயற்சி செய்து வருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்களைக் கவனத்தில் எடுக்காது டில்லித் தலைமைப் பீடத்தின் கருத்தையே திராவிட முன்னேற்றக் கழகம் கவனத்தில் எடுத்து வருகிறது.
தமிழக சட்டசபை ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மிக நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முதல்வர் கருணாநிதி அதற்கு சரியாக பிடிகொடாது பதிலளித்து வருகின்றார். ஸ்டாலினைத் துணை முதல்வராக்கியதைக் காங்கிரஸில் உள்ள சிலர் விரும்பவில்லை. தங்களுடைய ஆலோசனை இன்றி துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டதாக விசனப்படுகின்றனர். தமிழக ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியதற்கு தாம் உதவி செய்தபடியால் துணை முதல்வர் பதவி தமக்கு வேண்டும் என்று காங்கிரஸில் உள்ள சிலர் விரும்புகின்றனர்.
தமிழகத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் ஆட்சியில் பங்குபற்றுவதற்குரிய அமைச்சர்களின் எண்ணிக்கை துணை முதல்வர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் எண்ணம் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்தால் தமிழக முதல்வராவதற்கு விஜயகாந்த் விரும்புகிறார். தான் ஆட்சியைப் பிடிப்பதற்காக அமைச்சரவையில் பங்கு போட்டு துணை முதல்வர் பதவியைத் தாரைவார்க்க விஜயகாந்த் ஒப்புக் கொண்டால் கூட்டணியில் மாற்றம் ஏற்படும். ஆட்சியில் பங்கு கொடுக்க விஜயகாந்தும் விரும்பாவிட்டால் காங்கிரஸின்பாடு திண்டாட்டமாகி விடும்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு ஜெயலலிதாவும், விஜயகாந்தும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். புதிய கூட்டணி பற்றிய அறிவிப்பு எதனையும் காங்கிரஸ் மேலிடம் வெளிப்படுத்தவில்லை. ஜெயலலிதாவுடன் காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்தால் அது காங்கிரஸை விட ஜெயலலிதாவுக்குத்தான் அதிக இலாபத்தைக் கொடுக்கும். ஆகையினால்தான் காங்கிரஸுடன் கூட்டு சேர ஜெயலலிதா விரும்புகிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவதை ஜெயலலிதா எதிர்பார்க்கிறார்.
கார்கில் போரில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்கியதில் ஊழல் செய்த மும்பை முதல்வர் அசோக் சவான்கொமன் வெல்த்போட்டியில் தில்லுமுல்லு செய்த சுரேஷ் கல்மாடி ஆகியோரின் பதவிகளைப் பிடுங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. ஸ்பெக்ரம் ஊழலில் சிக்கியதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட அமைச்சர் ராஜாவை திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தை மீறி நடவடிக்கை எடுக்க முடியாது தடுமாறுகிறது காங்கிரஸ் கட்சி.
ஊழல் செய்த முக்கிய புள்ளிகளை பதவியிலிருந்து விரட்டியது போன்று அமைச்சர் ராஜாவின் விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. ஊழல்வாதிகள் அரசியலில் இருந்து ஓரம்கட்டப்பட வேண்டும் என்று ராகுல்காந்தி விரும்புகிறார். ராஜாவின் விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ராகுல்காந்தி நம்பிக்கை இழந்துள்ளார். காங்கிரஸ் கட்சியைப் போன்று நேர்மையாக நடக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜாவுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கத் தவறினால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவதற்கு முயற்சி செய்யும். இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவை இழக்க விரும்பாத காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் திரிசங்கு நிலையை நன்கு உணர்ந்துள்ள ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சிக்கு தெம்பூட்டும் விதமாகப் பேசி உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் அதற்கு மாற்றீடாக 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்கப் போவதாகக் கூறியுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் வெற்றி பெற்ற ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் நாடாளுமன்றத்தில் உள்ளனர்.
மேலதிகமாக ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜெயலலிதா எங்கிருந்து கொண்டு வருவார் என்பது தெரியவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து முக்கிய பிரமுகர்கள் வெளியேறி வரும் நிலையில் வேறு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு அவர் தமது அணியில் சேர்ப்பார் என்பது புரியாத புதிராக உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை தரும் வகையில் ஜெயலலிதா உரையாற்றியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எச்சரிக்கை விடும் வகையில் காங்கிரஸ் ஊழல் பேர்வழிகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இரண்டு சம்பவங்களின் தாக்கம் அடுத்த வாரம் பகிரங்கத்துக்கு வந்து விடும்.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 14/11/10

Friday, November 12, 2010

களை எடுக்கும் ஜெயலலிதாகலக்கத்தில் தொண்டர்கள்


தமிழக சட்ட சபைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வரும் வேளையில் மாவட்டச் செயலாளர்களையும் மாவட்டப் பொறுப்பாளர்களையும் பதவியில் இருந்து தூக்கி எறிந்து அதிர்ச்சி வைத்தியம் செய்துள்ளார் ஜெயலலிதா. சக்தி மிக்க பொறுப்பாளர்களையும் நிர்வாகிகளையும் தூக்கி எறிவதற்கு ஜெயலலிதா எப்போதும் தயங்கியதில்லை.
தமிழக முதல்வராகப் பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொன்னையன் போன்ற நிர்வாகிகளையே தூக்கி எறிந்த ஜெயலலிதா மாவட்டச் செயலாளர்களையும் பொறுப்பாளர்களையும் தூக்கி எறிந்தது ஆச்சரியமானதல்ல.
கோவையிலே தமிழக அரசு செம்மொழி மாநாட்டை நடத்தித் தனது பலத்தை வெளிப்படுத்தியது. அதே கோவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டத்தை நடத்தி ஆளும் கட்சியைக் கிலிகொள்ளச் செய்தவர் செ. ம. வேலுச்சாமி. அவருடைய மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு எம். ஜி. ஆர். மன்றச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் ஜெனிபர் சந்திரன், விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர் வளர்மதி ஆகியோரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
வட சென்னையில் 13 வருடங்களாக மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர் சேகர் பாபு. வடசென்னையில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்ப்பதில் முன்னிற்பவர். அவருடைய பதவி பறிக்கப்பட்டு எம். ஜி. ஆர். மன்றச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகச் சில தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சேகர் பாபுவின் ஆதரவாளர்களில் ஆயிரக்கணக்கானோர் இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள பிரமுகர்களில் சிலரின் பதவி பறிக்கப்படுவதும் அவர்களின் ஆதரவாளர்கள் அதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வதும் வழமையான சம்பவங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.
சென்னையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் சேகர் பாபு. தமிழக சட்ட சபையில் ஜெயலலிதாவைத் தாக்கிப் பேசும் போது உரத்துக் குரல் கொடுப்பவர்களில் முதன்மையானவர் சேகர் பாபு. சபாநாயகரின் பணிப்பின் பேரில் பலமுறை அவைக் காவலர்களினால் தமிழக சட்டசபையில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர் சேகர் பாபு. அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி போன்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் கட்சியிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் விரித்த வலையில் சேகர் பாபுவும் விழப் போகிறார் என்ற சந்தேகத்திலேயே அவரிடமிருந்த பொறுப்பு பறிக்கப்பட்டது.
வட சென்னையில் சேகர் பாபுவின் செல்வாக்கு அதிகமானது. அவர் அணிமாறினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பலத்த வீழ்ச்சியாக அமையும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பெரும் புள்ளிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தாவும் போது கட்சிக்கு பாதிப்பு ஏற்படாது தொண்டர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பின்னால் நிற்பதாகவே தலைமைப்பீடம் கருதியது. ஆனால் அணி மாறியவர்களில் பலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ஜெயலலிதாவின் இந்த அதிரடியான நடவடிக்கைகளால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதாவால் வெளியேற்றப்படுவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஜெயலலிதாவைப் பழிவாங்கவும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் சூழ்நிலை தோன்றும் சந்தர்ப்பம் உள்ளது.
""நாம் ஒற்றுமையாக இருந்தால் ஆயிரம் தி. மு. க. வந்தாலும் எம்மை வீழ்த்த முடியாது'', ""ஆறாவது முறை நான் முதலமைச்சராவது மக்களின் கைகளில்தான் உள்ளது'' தமிழக சட்டமன்றத் தேர்தல்களையும், நாடாளுமன்றத் தேர்தல்களையும் பெரும் நம்பிக்கையுடன் எதிர்கொண்ட தமிழக முதல்வர் உரைத்த வார்த்தைகள் அவை. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் கூறுகிறாரா அல்லது ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் கூறுகிறாரா என்ற சந்தேகம் உள்ளது. அதேபோல் அடுத்த முறை தான் முதல்வராவது தமிழக மக்களின் கைகளில் என்கிறாரா அல்லது தனது மக்களின் கைகளில் உள்ளது என்கிறாரா?
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கோட்பாட்டுடன் அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடமையும் கண்ணியமும் திசைமாறிப் போய் விட்டன. இதுவரை இருந்த கட்டுப்பாடும் கட்டுமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. கோஷ்டி மோதல் இல்லாத கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்ளும் கோஷ்டி மோதல் ஒளிர்விடத் தொடங்கியுள்ளது. ஸ்டாலினின் ஆதரவாளர்களும் அழகிரியின் ஆதரவாளர்களும் வெளிப்படையாகவே தம்மை இனம் காட்டியுள்ளனர்.
ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே கோஷ்டிப் பூசல் உள்ளது. ஏனைய தலைவர்கள் கோஷ்டியாகச் செயற்படவில்லை என்றுதான் தலைமை நினைத்துக் கொண்டிருந்தது. அண்மையில் நடைபெற்ற மாவட்டக் கூட்டம் ஒன்றின் போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தமது கோஷ்டிப் பூசலை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஸ்டாலினையும் அழகிரியையும் ஒற்றுமையாக்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய முக்கிய கடமைகளில் முக்கியமானது அழகிரியை சமாதானப்படுத்துவதுதான்.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 71/12/10




தமிழக சட்ட சபைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வரும் வேளையில் மாவட்டச் செயலாளர்களையும் மாவட்டப் பொறுப்பாளர்களையும் பதவியில் இருந்து தூக்கி எறிந்து அதிர்ச்சி வைத்தியம் செய்துள்ளார் ஜெயலலிதா. சக்தி மிக்க பொறுப்பாளர்களையும் நிர்வாகிகளையும் தூக்கி எறிவதற்கு ஜெயலலிதா எப்போதும் தயங்கியதில்லை.
தமிழக முதல்வராகப் பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொன்னையன் போன்ற நிர்வாகிகளையே தூக்கி எறிந்த ஜெயலலிதா மாவட்டச் செயலாளர்களையும் பொறுப்பாளர்களையும் தூக்கி எறிந்தது ஆச்சரியமானதல்ல.
கோவையிலே தமிழக அரசு செம்மொழி மாநாட்டை நடத்தித் தனது பலத்தை வெளிப்படுத்தியது. அதே கோவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டத்தை நடத்தி ஆளும் கட்சியைக் கிலிகொள்ளச் செய்தவர் செ. ம. வேலுச்சாமி. அவருடைய மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு எம். ஜி. ஆர். மன்றச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் ஜெனிபர் சந்திரன், விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர் வளர்மதி ஆகியோரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
வட சென்னையில் 13 வருடங்களாக மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர் சேகர் பாபு. வடசென்னையில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்ப்பதில் முன்னிற்பவர். அவருடைய பதவி பறிக்கப்பட்டு எம். ஜி. ஆர். மன்றச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகச் சில தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சேகர் பாபுவின் ஆதரவாளர்களில் ஆயிரக்கணக்கானோர் இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள பிரமுகர்களில் சிலரின் பதவி பறிக்கப்படுவதும் அவர்களின் ஆதரவாளர்கள் அதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வதும் வழமையான சம்பவங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.
சென்னையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் சேகர் பாபு. தமிழக சட்ட சபையில் ஜெயலலிதாவைத் தாக்கிப் பேசும் போது உரத்துக் குரல் கொடுப்பவர்களில் முதன்மையானவர் சேகர் பாபு. சபாநாயகரின் பணிப்பின் பேரில் பலமுறை அவைக் காவலர்களினால் தமிழக சட்டசபையில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர் சேகர் பாபு. அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி போன்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் கட்சியிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் விரித்த வலையில் சேகர் பாபுவும் விழப் போகிறார் என்ற சந்தேகத்திலேயே அவரிடமிருந்த பொறுப்பு பறிக்கப்பட்டது.
வட சென்னையில் சேகர் பாபுவின் செல்வாக்கு அதிகமானது. அவர் அணிமாறினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பலத்த வீழ்ச்சியாக அமையும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பெரும் புள்ளிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தாவும் போது கட்சிக்கு பாதிப்பு ஏற்படாது தொண்டர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பின்னால் நிற்பதாகவே தலைமைப்பீடம் கருதியது. ஆனால் அணி மாறியவர்களில் பலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ஜெயலலிதாவின் இந்த அதிரடியான நடவடிக்கைகளால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதாவால் வெளியேற்றப்படுவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஜெயலலிதாவைப் பழிவாங்கவும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் சூழ்நிலை தோன்றும் சந்தர்ப்பம் உள்ளது.
""நாம் ஒற்றுமையாக இருந்தால் ஆயிரம் தி. மு. க. வந்தாலும் எம்மை வீழ்த்த முடியாது'', ""ஆறாவது முறை நான் முதலமைச்சராவது மக்களின் கைகளில்தான் உள்ளது'' தமிழக சட்டமன்றத் தேர்தல்களையும், நாடாளுமன்றத் தேர்தல்களையும் பெரும் நம்பிக்கையுடன் எதிர்கொண்ட தமிழக முதல்வர் உரைத்த வார்த்தைகள் அவை. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் கூறுகிறாரா அல்லது ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் கூறுகிறாரா என்ற சந்தேகம் உள்ளது. அதேபோல் அடுத்த முறை தான் முதல்வராவது தமிழக மக்களின் கைகளில் என்கிறாரா அல்லது தனது மக்களின் கைகளில் உள்ளது என்கிறாரா?
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கோட்பாட்டுடன் அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடமையும் கண்ணியமும் திசைமாறிப் போய் விட்டன. இதுவரை இருந்த கட்டுப்பாடும் கட்டுமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. கோஷ்டி மோதல் இல்லாத கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்ளும் கோஷ்டி மோதல் ஒளிர்விடத் தொடங்கியுள்ளது. ஸ்டாலினின் ஆதரவாளர்களும் அழகிரியின் ஆதரவாளர்களும் வெளிப்படையாகவே தம்மை இனம் காட்டியுள்ளனர்.
ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே கோஷ்டிப் பூசல் உள்ளது. ஏனைய தலைவர்கள் கோஷ்டியாகச் செயற்படவில்லை என்றுதான் தலைமை நினைத்துக் கொண்டிருந்தது. அண்மையில் நடைபெற்ற மாவட்டக் கூட்டம் ஒன்றின் போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தமது கோஷ்டிப் பூசலை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஸ்டாலினையும் அழகிரியையும் ஒற்றுமையாக்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய முக்கிய கடமைகளில் முக்கியமானது அழகிரியை சமாதானப்படுத்துவதுதான்.
சூரன்.ஏ.ரவிவர்மா

Thursday, November 4, 2010

இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா ஒபாமா?



உலகத் தலைவர்களில் பலர் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும். அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி தமது நாட்டுக்கு வர வேண்டும் என்பதிலும் உலகத் தலைவர்களில் பலர் அதிக அக்கறையாக உள்ளனர். ""மாற்றம் தேவை'' என்ற தாரக மந்திரத்துடன் புஷ்ஷின் அரசைத் தோற்கடித்த அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவின் இந்திய விஜயத்தினால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. ஒபாமாவின் இந்திய விஜயத்தினால் மாற்றம் வராதா என்று இந்தியா எதிர்பார்க்கிறது.
கொம்பியூட்டர் தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ள இந்தியர்கள் பலர் அமெரிக்காவிலேயே தொழில் புரிகின்றனர். வேலை இல்லாத அமெரிக்கர்
களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காக இந்தியாவுக்கு வழங்கப்பட்ட தொழில்நுட்பப் பணிகளை ஒபாமா குறைத்து விட்டார்.
ஒபாமா ஜனாதிபதியான பின்பு வெளிநாட்டினரின் விஸாக் கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒபாமாவின் விஜயத்தினால் இதற்கான தீர்வுகள் கிடைக்கலாம் என்று இந்தியா கருதுகிறது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற வேண்டும் என இந்தியா விரும்புகிறது. இந்தியாவின் பரம எதிரியான சீனா இதற்கு எதிர்ப்புக் காட்டி வருகிறது. சீனாவின் எதிர்ப்பை முறியடித்து ஐ.நா.வில்
பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்கு ஒபாமா உதவக் கூடும் என்று இந்தியா நம்புகிறது.
காஷ்மீர் விவகாரத்தினால் இந்தியாவின் மீது திணிக்கப்படும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த ஒபாமாவின் வருகை உதவும் என இந்தியா நினைக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி முதலில் இந்தியாவுக்கு விஜயம் செய்வதும் பின்னர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதும் வழமையாகி விட்டது. 2011 ஆம் ஆண்டு ஒபாமா பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானும் சீனாவும் எல்லையில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. ஒபாமாவின் விஜயத்தின் மூலம் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களும் தொழில்நுட்ப உதவிகளும் கிடைக்கலாம். பொக்ரான் அணுகுண்டு சோதனையின் பின்னர் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் சில இன்னமும் அமுலில் உள்ளன. ஒபாமாவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் அந்தத் தடைகள் விலக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
அமெரிக்காவுக்குப் போட்டியாக ரஷ்யா இருந்த போது ரஷ்யாவுடன் இந்தியா மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தது. அதனால் அமெரிக்காவும் அமெரிக்கா சார்பு நாடுகளும் இந்தியா மீது அதிக அக்கறை காட்டவில்லை. ரஷ்யாவின் பிரிவினைக்குப் பின்னர் அமெரிக்காவுடன் நட்புறவு கொள்ள வேண்டிய சூழ்நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது. அதேவேளை இந்தியாவின் பொருளாதாரத் தொழில்நுட்பம், இராணுவ வளர்ச்சி காரணமாக இந்தியாவை கவர வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. கிளின்டன் இந்தியாவுக்கு விஜயம் செய்ய முன்னர் 22 வருடங்களாக அமெரிக்க ஜனாதிபதி எவரும் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை.
ஏர் போர்ஸ் 1 என்ற விசேட விமானத்திலேயே ஒபாமா பயணம் செய்வார். நான்கு என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானம் மணிக்கு 630 மைல் வேகத்தில் பறக்கும் ஆற்றல் உள்ளது. விமானியின் அறைக்குக் கீழே உள்ள தளத்தில் ஒபாமாவின் அறையும், அதன் அருகில் அலுவலகமும் உள்ளது. அதனை அடுத்து மருத்துவர்கள் அலுவலகம் உள்ளது.
விமானத்தின் நடுப் பகுதியில் விருந்தினர்கள் அறையும், பாதுகாப்பு அலுவலர்கள் அறையும் உள்ளன. வால் பகுதியில் பத்திரிகையாளர்களுக்கான அறையும் விமான ஊழியர்களுக்கான அறையும் உள்ளன. விமானத்தில் பறந்தபடியே உலகில் எந்த இடத்துக்கும் தொடர்பு கொள்ளும் தகவல் தொழில்நுட்ப வசதி உள்ளது.
ஒபாமா இந்தியாவில் பயணம் செய்வதற்காக பாதுகாப்பு, தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட விசேடமான கார் கொண்டு வரப்பட்டுள்ளது. 18 அடி நீளமும் 5 அடி 10 அங்குல உயரமும் உள்ள இக்கார் மணிக்கு 60 மைல் வேகத்தில் பயணம் செய்யும். கார் முழுவதும் எட்டு அங்குலத்துக்கு இரும்புத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. எதையும் தாங்கும் சக்தி உள்ள கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயரில் சிறு சேதம் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டுத் தாக்குதல் போன்றவற்றினால் காருக்கு சிறுசேதம் கூட ஏற்படாது.
ஒபாமாவின் இருக்கைக்கு முன்னால் கொம்பியூட்டர், தொலைபேசி வசதிகள் உள்ளன. அவர் காரில் இருந்தபடியே துணை ஜனாதிபதி, அமெரிக்காவின் இராணுவத் தலைமையகம் உட்பட உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளலாம். இரவில் பார்க்கும் கண்ணாடி, நவீன துப்பாக்கி, கண்ணீர் புகைக் குண்டு வீசும் கருவி ஆகியன உள்ளன. ஒபாமாவின் இரத்த குரூப் காரில் இருக்கும். அமெரிக்க உளவுத்துறையின் சிறப்புப் பயிற்சி பெற்றவர் சாரதியாக இருப்பார்.
ஒபாமாவின் இந்திய விஜயம் தீர்மானிக்கப்பட்டதும் அமெரிக்க அதிகாரிகளும், உளவு அதிகாரிகளும் இந்தியாவுக்குச் சென்று பாதுகாப்புப் பற்றி இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். உலகின் அதிக உச்சப் பாதுகாப்புப் படையுடன் ஒபாமா நாளை இந்தியா செல்கிறார். அவர் செல்லும் இடங்களில் 5 கிலோ மீற்றர் தூரம் வரை செல்போன்கள் ரிமோட் கொன்ட்ரோல்கள் என்பனவற்றைச் செயலிழக்கச் செய்யும் கருவிகள் கொண்டு செல்லப்படும். ஆள் இல்லாத விமானங்களுடன் வெளியில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளும்.
மகாத்மா காந்தியை நேசிக்கும் ஒபாமாவின் விஜயத்தின் மூலம் பல தேவைகளை நிறைவேற்ற இந்தியா காத்திருக்கிறது.


சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 05/11/10

சாதனையுடன் இலங்கை அணி வெற்றி

இலங்கை, அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையே மெல்போனில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மத்தியூஸ், மலிங்கவின் அதிரடி துடுப் பாட்டத்தின் மூலம் இலங்கை அணி 1 விக்கெட்டால் வெற்றி பெற்றது. 9 ஆவது விக்கெட்டுக்கு இணைந்து விளையாடிய மத்தி யூஸ், மலிங்க ஆகியோர் 27 வருட 9 ஆவது விக்கெட்டுக் கான இணைப்பாட்ட சாத னையை முறியடித்தனர். 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய வீரர்க ளான கபில்தேவ், கிர்மானி ஆகியோரின் சாதனையையே இவர்கள் முறியடித்தனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடிய 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணி வீரர்களின் அபார பந்து வீச்சினால் தடுமாறிய அவுஸ்திரேலிய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
மைக் ஹசி ஆட்டமிழக்காது 71 ஓட்டங்கள் எடுத்தார். காயத்திலிருந்து மீண்டும் அணியில் சேர்ந்த விக்கெட் கீப்பர் ஹிட்டின் 49 ஓட்டங்கள் எடுத்தார்.
பெரேராவின் அபாரமான பந்து வீச்சு அவுஸ்திரேலிய வீரர்களைக் கட்டுப்படுத்தியது. 46 ஓட்டங்களைக்
கொடுத்த பெரேரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் அவுஸ்திரேலிய பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது தடுமாறியது. சங்கக்கார. 49 ஓட்டங்கள் எடுத்தார்.
எட்டு விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை மத்தியுவ், மலிங்க ஜோடி அபாரமாகத் துடுப்பெடுத்தாடி இலங்கையின் வெற்றிக்கு வித்தி ட்டனர். இவர்கள் இருவரும் 132 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
இலங்கை அணி 239 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் மலிங்க ஆட்டமிழந்தார். 48 பந்துகளுக்கு முகம் கொடுத்த மலிங்க நான்கு பவுண்டரி இரண்டு சிக்ஸர் அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுத்தார்.
ஒரு ஓட்டம் எடுப்பதற்காக களமிறங்கிய முரளிதரன் பவுண்டரி அடித்து வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.
மத்தியுஸ் 77 ஓட்டங்கள் எடுத்தார். 84 பந்துகளுக்கு முகம் கொடுத்த மத்தியூஸ் எட்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் அடங்கலாக 77 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்டநாயகனாக மத்தியூஸ் தேர்வானார்.
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 04/11/10

Wednesday, November 3, 2010

தமிழககாங்கிரஸ்தலைவர்களால்திருமாவளவனுக்குகடும்நெருக்கடி


திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவு நீடிக்குமா அல்லது இடையில் முறிந்து விடுமா என்ற பட்டி மன்றம் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, எமது உறவு உறுதியாக உள்ளது என்று இரண்டு கட்சித் தலைவர்களும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சங்கடப்படுத்தும் வகையில் பேச வேண்டாம் என்று காங்கிரஸ் தலைமைப்பீடம் தமிழகத் தலைவர்களுக்கு உத்தரவிட்டும் இளங்கோவன், கார்த்திக் சிதம்பரம் போன்ற ஒரு சிலர் எல்லை மீறிப் பேசி வருகின்றனர்.
தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சோனியா காந்தியின் பேச்சுக்குக் கட்டுப்படுபவர்கள் என்பதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்களை முதல்வர் கருணாநிதி ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஆனால் அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்குவதற்காக இராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி ஆரம்பிக்கப்பட்ட நடைப் பயணம் காங்கிரஸ் கட்சியைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. தமிழக அரசு அமுல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையில் உதித்தவை என்று காங்கிரஸார் பிரசாரம் செய்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்துக்கு இளைஞர் காங்கிரஸால் ஆரம்பிக்கப்பட்ட நடைப் பயணம் இடையில் தடம் மாறி திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கும் பயணமாக மாறியது. இலவசத் தொலைக்காட்சியினால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என்று இளைஞர் காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது. இந்தப் பிரசாரத்தினால் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க முடியாது. தாங்களும் தருகிறார்கள் இல்லை. தருபவர்களையும் தடுக்கிறார்கள் என்ற ஆவேசம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தமிழகக் காங்கிரஸின் கோஷ்டிப் பூசல் அரசியல் உலகில் மிகப் பிரபல்யமானது. ராகுல் காந்தியின் மேற்பார்வையிலேயே இளைஞர் காங்கிரஸ் வளர்த்தெடுக்கப்பட்டது. தமிழக இளைஞர் காங்கிரஸில் கோஷ்டிப் பூசல் இல்லை என்று யாரும் கூற முடியாத நிலை உள்ளது. வாசன் கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி என்று இளைஞர் காங்கிரஸ் இரண்டு பிரிவுகளாக உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சீண்டிப் பார்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திருமாவளவனைச் சீண்டத் தொடங்கி விட்டனர். இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இந்திய அரசு நடந்து கொண்ட முறையை திருமாவளவன் கடுமையாக விமர்சித்து வருகிறார். கூட்டணிக்குள் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திருமாவளவன் குற்றம் சாட்டுவதைத் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது திராவிட முன்னேற்றக் கழக அரசும் மெத்தனமாய் இருந்தது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதைப் பற்றி திருமாவளவன் வாயே திறப்பதில்லை. காங்கிரஸ் கட்சியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் திருமாவளவன் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் குற்றம் சாட்டுவதில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றன. காங்கிரஸின் தயவு இல்லாமல் திருமாவளவன் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஆகையால் அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் திருவாய் மலர்ந்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் கட்சி ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவு இல்லாமல் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதை இரண்டு கட்சித் தலைவர்களும் மறந்து விட்டனர்.
தமிழகத்தில் உள்ள தலித்துக்களில் அதிக மானோர் திருமாவளவன் பின்னால் உள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் சில தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி தலித்களிடமுள்ளது. அமைச்சர் சிதம்பரத்தின் மகன் என்பதைத் தவிர வேறு எந்த
விதமான செல்வாக்கும் இல்லாத கார்த்திக்கின் அண்மைக் காலக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் வேறு ஒருவர் இருப்பதாகவே தோன்றுகிறது.
நடிகர் எஸ்.எஸ்.சந்திரனின் மறைவு
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல நடிகர்களும், நடிகைகளும் இருந்தாலும் எஸ். எஸ். சந்திரனின் பேச்சு எப்பவும் எதிர்க் கட்சிகளை மட்டம் தட்டுவதாகவே இருக்கும். எஸ்.எஸ்.சந்திரனின் இடத்தை நிரப்புவதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய நடிகர் ராதாரவியை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளார் ஜெய
லலிதா.
நடிகர் ராதாரவி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் அல்லது சரத்குமாரின் கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அரசியலை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்த ராதாரவி மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியை ராதா ரவி கடந்த வாரம் சந்தித்தார். அப்போது காங்கிரஸில் ராதாரவி இணைகிறார் என்று பரபரப்பாகச் செய்தி வெளியானது. ராதா ரவி அதை மறுக்கவோ ஒப்புக் கொள்ளவோ இல்லை. இந்த நிலையில் திடீரென அவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் புள்ளிகளில் பலர் அதிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஏதோ ஒரு இலாபம் இல்லாமல்
ராதாரவி மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்க மாட்டார்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ள ஒரு தொகுதியில் ராதாரவி தேர்தலில் போட்டியிடலாம் அல்லது காலியாகும் ராஜ் சபை உறுப்பினராகி நாடாளுமன்றம் செல்லலாம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறுபவர்களை மீண் டும் கட்சிக்குள் இணைப்பதற்கு ஜெயலலிதா விரும்புகிறார். தமிழக தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் கட்சியில் பலம் குறையக் கூடாது என்பதில் ஜெயலலிதா கவனமாக உள்ளார்.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு
31/10/10