Showing posts with label வட்டாரச்சொல். Show all posts
Showing posts with label வட்டாரச்சொல். Show all posts

Sunday, August 9, 2009

கூத்தும் கும்மாளமும்

சிவராத்திரி எண்டால் எங்களுக்கு உசார்வந்துவிடும். விடியவிடிய கன இடங்களீலை கூத்துநடக்கும்.அந்த இரவு மறக்கமுடியாத இரவாக இருக்கும்.கூத்துப்பாக்க எண்டு வீட்டிலை சொல்லிப்போட்டு வெளீக்கிட்டா கன சோலியளை செய்வம்.
அண்ணாச்சாமி வாத்தியாரின்ரை சீன் கன இடங்களூக்குப்போகும்.சீன்,லைற் எஞ்ஜின். ஸ்பீக்கர், மேக்கப் எண்டு எல்லாத்தையும் அண்ணாசாமிவாத்தியார் பொறுப்பெடுப்பார். முல்லைத்தீவு,மீசாலை,அல்வாய்,சமரபாகு,கொடிகாமம் எண்டு அஞ்சு இடத்திலை அவற்றை ஆக்கள்தான் சீன் கட்டுவினம்.
நாங்கள் கூத்துப்பாக்கஎண்டுசொல்லிப்போட்டு வேறை அலுவல்தான் பாப்பம்.இளனி களவெடுக்கிறது, மரவள்ளிக்கிழங்குபிடுகிங்கி அவிக்கிறது,படலையை களட்டி அவற்ரைகோவக்காரரின்ரை வீட்டிலை கட்டுறது,வாளைக்குலை வெட்டுறது எண்டுஎங்கடை வேலை விடியவிடியநடக்கும். சிவராத்திரிக்கு மூண்டாவது ஷோ எண்டாலும்கட்டாயம் பாப்பம்.
நடிகமணீ வி.வி. வைரமுத்துவின் மயானகாண்டம் எங்கையாவது நடக்கும் கட்டாயம் மயானகாண்டம் பாத்துப்போட்டுத்தான் படம் பாப்பம்.வைரமுத்துக்கு சோடியாக அரியாலை ரத்தினம் ஸ்திரிபாட் .சந்திரமதியாகரத்தினம் அழுதா சனமும் அழும். அச்சுவேலி மார்ககண்டுதான் யமனாக வருவார். அவருக்கு பேரேயமன் மார்க்கண்டுதான்.
மயானகாண்டம் நடக்கமுதல் பவூன் சின்னதுரையும் சீனா பானாவும் சனத்தசிரிக்கபண்ணுவினம்.ஒரு இடவெளி பாத்து பருத்துறைக்குப்போய் தோசை அப்பம் சாப்பிடுவம்.
கூத்துப்பாக்ககனசனம் வரும் கொஞ்சப்பேர்தான் விரதகாறர். மிச்சப்பேர் பம்பலுக்கு வாறவை.அது அந்தககாலம். இனிஅது போலைவராது.

கூத்து.........................நாடகம்
கும்மாளம்/குஷி......சத்தோசம்
உசார்..............உற்சாகம்
சீன்............நாடகதிரைச்சீலை
அலுவல் .......வேலை
படலை........வீட்டுக்குவெளீயே உள்ளகதவு
பம்பல்.......பொழுதுபோக்கு
ஸ்திரிபாட்......பெண் வேடமிடும் ஆண்
பவூன்..........நகைச்சுவை நடிகர
நன்றி;http://eelamlife.blogspot.com/2009/07/blog-post_10.html

Sunday, August 2, 2009

அடுப்படி வைத்தியம்

எனது அம்மம்மா அடிக்கடி சொல்லும் வசனம் "கறி புளி முப்பத்திரண்டும் முடிஞ்சுபோச்சு". அந்த முப்பத்துரண்டுமென்னவென்று எனக்குத்தெரியாது. அம்மம்மாவை ஊரில் உள்ள உறவினர்கள் எல்லோரும் அப்புஅம்மா என்றுதான் அழைப்பார்கள்.நாங்களும் அவரை அப்புஅம்மா என்றுதான் கூப்பிடுவோம்..அயலவர்கள் மருந்தாச்சி என்பார்கள். அம்மாவின் தகப்பன் வைத்தியர். இதுபரம்பரைத்தொழில்.

அப்புஅம்மாசொல்லும் முப்பத்திரண்டும் முடிஞ்சுபோச்சு என்பதை அம்மாவும் அடிக்கடி சொல்வார். முப்பத்திரண்டும் என்னவென்று அம்மாவைக்கேட்டேன்.அம்மா சரியானபதில் சொல்லவில்லை.அப்புஅம்மாவிடம் கேட்டேன். அப்புஅம்மாசொன்னபதிலை நம்பமுடியவில்லை இப்படியும் இருக்குமா என்றசந்தேகம் மனதைக்குடைந்தது.

அம்மாவின் தகப்பனை உறவினர்கள் அப்பு என்பார்கள். நாங்களளும் அப்பு என்றே கூப்பிடுவோம். அயலவர்கள் மருந்தப்பு என்பார்கள். அவருடையபெயர் சிலம்பு என்பது பலருக்குத்தெரியாது.

ஜனனம் மரணம் இரண்டையும் நாடிபிடித்து சொல்லிவிடுவார்.நாடியைப்பிடித்து நோயைசொல்லிவிடுவார்.நோயாளியின் கையைப்பிடித்து அவர் இரண்டு நாள் தவணை சொன்னால் கொழும்பில் உள்ள உறவினர்களூக்கு தந்தி அடித்துவிடுவார்கள். சிலநோயளிகளைப்பார்த்து அவர் எதுவும் பேசாமல் போவார் அப்போது உறவினர்கள்மருந்தப்பு ஒண்டும் பற‌யாமல் போறியள் எனபார்கள்.அவர் ஒண்டும் பேசாதுபோனால் காரியத்தைப் பார்க்கவேண்டியதுதான்.

அப்புவுடன் சோர்ந்து இருந்ததனால் அப்புஅம்மாவும் அங்கீகரிக்கப்படாத வைத்தியரானார்.
முப்பத்திரண்டும் என்றால் குசினியில் உள்ள மஞ்சள்,மிளகு.வெந்தயம்,சீரகம் உள்ளி,வெங்காயம்,பெருங்காயம் போன்றவற்றுடன் நோய்தீர்க்கும் சில மரக்கறிகள்என அப்புஅம்மா கூறியதை சிறு வயதில் நான் நம்பவில்லை.

சுமார் 10 வருடங்களுக்குமுன்னர் கிச்சன் கிளினிக் எனும் கட்டுரை கல்கி சஞ்சிகையில் பிரசுரமானது. இலகுவாககிடைக்கக்கூடியஇயற்கைமூலிகள் 64 உள்ளன. அவற்றில் 32 எமது வீட்டுசமையறையில் உள்ளனஎன கல்கியில் படித்தபின்புதான் அப்புஅம்மாவைப்பற்றிபூரணமாக அறியமுடிந்தது.

தங்கச்சியும் மனிசியும் முப்பத்திரண்டும் முடிஞ்சு போச்சு எண்டு சொல்லத்தொடங்கிட்டினம்.

நாடி...................மணிக்கட்டில் உள்ள இரத்தம் ஓடும் நரம்பு
தவணை...............நோயாளி உயிருடனிருக்கும் காலம்.
தந்தி அடிப்பது..........உறவினர் சாகப்போகிறா என்ற அறிவிப்பு
பறயாமல்..............எதுவும் சொல்லாது
காரியம்................இறுதிக்கிரிகைக்கான எற்பாடு
குசினி/அடுப்படி ..................சமயலறை
நன்றி:
http://eelamlife.blogspot.com/2009_07_01_archive.html