Thursday, February 23, 2017

நம்பிக்கை இல்லாத நம்பிக்கை வாக்கெடுப்பு


 ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் நிலவிய குழப்பநிலை  எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதால் மேலும் சிக்கலடைந்துள்ளது. ஜெயலலிதாவுக்குப் பதிலாக அவசர அவசரமாக  பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். அவரை இறக்கிவிட்டு தான் முதலமைச்சராவதற்கு சசிகலா முயற்சி செய்தார். அதற்கு பன்னீர்செல்வம்  முட்டுக்கடை போட்டார்.சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டதால் சசிகலாவின் கனவு தவிடு பொடியாகியது. பன்னீர்செல்வத்தைத்  தூக்கி எறிந்துவிட்டு  தனக்கு விசுவாசமான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க சசிகலா வியூகம் வகுத்தார்.  சசிகலாவை முதல்வராக்குவதற்காக கூவத்தூர் சொகுசு ஹோட்டலில் சிறைவைக்கப்பட சட்டசபை உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய இக்கட்டான நிலை தோன்றியது. தனக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்ட சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவை எடப்பாடி சந்தித்தார்.  ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட தினகரனும் எடப்பாடியுடன்  வித்யாசாகர் ராவை சந்தித்தார்.


சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக தனி ஒருவனாகப் போராடபோவதாக அறிவித்த பன்னீர்செல்வத்துக்கு  11    சட்டசபை உறுப்பினர்கள்  ஆதரவளித்தனர்.  நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் தமிழக அமைச்சர்களும் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.சசிகலாவின் குடும்பத்தவர்களால் சிறைவைக்கப்பட்டிருக்கும் சட்டசபை உறுப்பினர்களில் பலர் தனக்கு ஆதரவானவர்கள் என பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினர். இரண்டு தரப்பினரும் ஏட்டிக்குப் போட்டியாக  பொறுப்பு ஆளுநரைச் சந்தித்து தமது நியாயங்களைக் கூறினர். வித்யாசாகர் ராவின் முடிவுக்காக தமிழக அரசியல் காத்துக் கிடந்தது.   தமிழகத்தின் அடுத்த முதல்வர் எடப்பாடியா பன்னீரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் தொக்கி நின்றது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரும் பன்னீரை விரும்பினர். சொகுசு ஹோட்டலில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக தொகுதிகளில்  போராட்டங்கள் நடைபெற்றன. சொகுசு ஹோட்டல் இருக்கும் கூவத்தூர் மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை இழந்தனர். சசிகலாவின்  கிராமமான மன்னர் குடியில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் ஹோட்டலைச் சுற்றி பாதுகாப்பாக நின்றனர். பொற்சிறையில் இருந்தவர்கள் குடியும் கும்மாளமுமாகக்  கூத்தடித்தனர். தமக்கு வாக்களித்தவர்களின் மன ஓட்டத்தைப் பற்றிச் சிறிதும் அக்கறை இல்லாது மிச்சமாக உள்ள நான்கு ஆண்டுகளை அனுபவிப்பதற்கு அவர்கள் முடிவு செய்தனர். சொகுசு ஹோட்டலில் இருந்து தப்பி  பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த சரவணன் என்பவர் அங்கு நடப்பவற்றை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சசிகலாவும் எடப்பாடி பழனிச்சாமியும் தன்னைக் கடத்தி தடுத்து வைத்ததாகப் பொலிஸில் புகார் செய்தார். அந்தப் புகார் அப்படியே கிடப்பில்போடப்பட்டு விட்டது.

ஊடகங்கள் அனைத்தும் தமிழக அரசியலை மையப்படுத்தியே   செய்திகளை வெளியிட்டன. பன்னீரின் பக்கத்தில் உள்ள நியாயங்களும் குறைகளும் அலசி ஆராயப்பட்டன. அதேபோல்   எடப்பாடியின் பக்கத்தில் உள்ள குறை நிறைகள் அரங்கத்துக்கு வந்தன. கடந்த 16 ஆம் திகதி வியாழக்கிழமை பதினைந்து நாட்களுக்குள் சட்ட சபையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வித்யாசாகர் ராவ் வேண்டுகோள் விடுத்தார்.எடப்பாடி தரப்பு உற்சாகமடைந்தது.சசிகலாவின் கனவு நிறைவேறப்போவதை நினைத்து அவர்கள்  சந்தோஷமடைந்தனர். 18  ஆம் திகதி சனிக்கிழமை பரபரபப்பான நிலையில் தமிழக சட்ட மன்றம் கூடியது. எடப்பாடி தரப்பில் இருக்கும் சிலர் பன்னீரின் பக்கம் தாவுவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் திடீரென‌  திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்தியது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்த திராவிட முன்னேற்றக் கழகம் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரியது. சபாநாயகர்  தனபால் அதற்கு இணங்க மறுத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பின் வெற்றியும் தோல்வியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதுவித பயனும் ஏற்படப்போவதில்லை. எம்.ஜி.ஆர் மறைந்தபின்னர் அவருடைய மனைவி ஜானகி தலைமையிலும், எம்.ஜி.ஆரின் சினிமாபடக் கதாநாயகி ஜெயலலிதா தலைமையிலும் கழகம் இரண்டாகி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி வெற்றி பெற்று ஜெயலலிதா தோல்வியடைந்தார். 28  வருடங்களின் பின்னர் ஜெயலலிதாவின் மறைவால் கழகம் இரண்டாகி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஜெயலலிதாவின் விசுவாசியானபன்னீர்செல்வம்  ஒருஅணிக்கு தலைமை தாங்கினார்.  ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா இன்னொரு அணிக்குத் தலைமைதாங்கினார். .சசிகலா சிறைக்குச்சென்றதால் அவருடைய பிரதிநிதியாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டார். இப்போதும்  ஜெயலலிதா தோல்வியடைந்து விட்டார்.

மக்கள் மன்றத்தின் சபாநாயகர்  நடுநிலையானவராக இருக்க வேண்டும். ஆனால்,பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே சபாநாயகர் செயற்படுகிறார். இரகசிய  வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழக அங்கத்தவர்கள் கோஷமிட்டனர். அவர்களின் கோஷங்களுக்கு சபாநாயகர் மிரளவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விடாது திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டனர். எதிர்க்கட்சிகள் கோஷமிட்டால் பொங்கி எழும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அமைதி காத்தனர். முன்னதாக சட்டசபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் வாகனம் அனுமதிக்கப்படவில்லை., சிறை வைக்கப்பட்டிருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களின் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டன.  சபாநாயகரின் முடிவே இறுதி முடிவு முடிவெடுக்க முடியாத சபாநாயகர் மூன்று முறை  சபையை ஒத்தி  வைத்தார்.
 திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டதால் அவரது ஒலிவாங்கி மேசை என்பன சேதமாக்கப்பட்டன. சபாநாயகர் வெளியேறியதும் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் இருவர் அதில் அமர்ந்தனர்.  சபாநாயகரின் உத்தரவுக்கமைய சபைக் காவலர்களால் வலுக்கட்டாயமாக திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின்  உடை கிழிக்கப்பட்டது. தங்களுக்கு நேர்ந்த கதியை  ஸ்டாலினும் மற்றையவர்களும் தொலைக் காட்சிக்குத் தெரிவித்துக்கொண்டிருந்த வேளை சட்ட சபைக்குள் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.    122 உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவளித்தனர்.  11  உறுப்பினர்கள் எடப்பாடியை எதிர்த்தனர்.

ஸ்டாலினும்  ஏனைய உறுப்பினர்களும் அலங்கோல உடையுடன் ஆளுநரைச் சந்தித்து முறையிட்டனர். அங்கிருந்து மெரீனாவுக்குச் சென்ற அவர்கள் மறியல் செய்தனர். அவர்களைக் கைது செய்த பொலிஸார் பின்னர் விடுதலை செய்தனர். முதலமைச்சர் எடப்பபாடியின் தலைமையிலான தமிழக அரசுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகம் முழுவதும்  அறப்போராட்டம் நடத்துகிறது. தமிழக அரசுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய உண்ணா  விரதப் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும்தான் தமிழக அரசுக்கு எதிராகப் போராடுகின்றன.ஏனைய கட்சித் தலைவர்கள் தமது கண்டணங்களைத் தெயவித்து  விட்டுப் பேசாமல் இருக்கின்றனர். இப்போது தேர்தல் நடைபெற்றால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருக்கிறது.  தேர்தலில் வெற்றி பெறும்  நம்பிக்கை மற்றைய கட்சித் தலைவர்களுக்கு  இல்லாததனால் அவர்கள் அமைதியாக இருக்கின்றனர்.

தில்லு முல்லுகள், விதி மீறல்களின் மத்தியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி உள்ளன.  சப் இன்ஸ்பெக்டர் தரத்தில் உள்ளவர்கள் தான் சபை காவலர்களாக மார்சல் உடையில் சபாநாயகரின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும். சட்டசபைச்செயலர் ஜமல்டினின் உத்தரவுப்படி கமிஷனர்,துணை கமிஷனர், இணை கமிஷனர் தரத்தில் உள்ளவர்கள் சபைக் காவலர்களாக உள்ளே இருந்ததாகத் தெரிய வருகிறது.  வெளியேற்றப்படும் உறுப்பினர்களின் பெயரை சபாநாயகர் தெரிவிக்க வேண்டும். பெயர் சொல்லாமல் எல்லோரையும் வெளியேற்ற உத்தரவிட்டது தவறு சபாநாயகரின் முன்நிலையில் தான் .வெளியேற்றப்பட வேண்டும் சபாநாயகர் தனது அறியில் இருக்கும் போது சபைக் காவலர்கள் சட்ட சபைக்குள் நுழைந்தது தவறு என்கிறார்கள் முன்னாள்   சபாநாயகர்கள்.   சேடப்பட்டி முத்தையா,ஆவுடையப்பன்,வி.பி துரைசாமி ஆகியவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்  திராவிட முன்னேற்றக் கழகமும் அட்சியில் இருந்தபோது சபாநாயகர்களாகக் கடமையாற்றியவர்கள். நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சபையில்  ஒருமுறைதான் கோரமுடியும். சபாநாயகர் இரண்டு முறை கோரியது சட்டப்படி தவறு என்றும் இவர்கள் கூறுகின்றனர்

சொகுசு ஹோட்டலில் சிறைவைக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களை சுதந்திரமாக வெளியில் விடாது பத்து நாட்கள் அடைத்து வைத்து நம்பிக்கைக் வாக்கெடுப்பை நடத்தியது தவறு என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கூறுகிறார்கள். வாக்களித்த மக்களின் விருப்பத்தை அறியாமல் எடப்பாடியை முதலமைச்சராக்கியதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விரும்பவில்லை. பன்னீரை ஆதரித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கு அவர்களது தொகுதிகளில் மாலை மரியாதையுடன் வரவேற்பளிக்கப்படுகிறது. எடப்பாடியை ஆதரித்தவர்கள் இரண்டு நாட்கள் சென்னையில் தங்கி இருந்துவிட்டு பொலிஸ்  பாதுகாவலுடன் தொகுதிக்குச் சென்றுள்ளனர். நான்கு வருடங்களுக்குப் பின்னர் தமிழக சட்ட சபைத் தேர்தல் நடைபெறும் போது இன்று நடந்தவற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என எடப்பாடியை ஆதரித்தவர்கள் நினைக்கிறார்கள்.

நான்கு வருடங்கள் இந்த ஆட்சி நிலைக்குமா என்பது சந்தேகம். சட்ட சபையில் நடைபெறும் கலவரங்கள் பற்றிய விபரங்கள்பற்றி ஆளுநர் உள்துறை அமைச்சுக்கு அறிக்கை அனுப்புவது வழமை. தமிழக சட்ட சபையில் நடந்தவை பற்றிய அறிக்கையை உள்துறை அமைச்சுக்கு அனுப்பிய ஆளுநர் அதனை பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பியுள்ளார். இது தமிழக  அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சபாநாயகரின் செயலுக்கு எதிராக ஸ்டாலின் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் சுவாமியும் வைகோவும் எடப்படிக்கு ஆதரவாகக் அக்ருத்துக் கூறியுள்ளனர்.

தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக இயங்கும் தமிழக அரசை அகற்றுவதற்கு சகல வழிகளிலும் ஸ்டாலின் முயற்சி செய்கிறார்.எடப்பாடி முதல்வரானதை  பாரதீய ஜனதாக் கட்சி விரும்பவில்லை. பத்து மாதங்களில் மூன்று முதலமைச்சர்களைத் தமிழகம் கண்டுள்ளது.
எடப்பாடிக்கு எதிரான அரசியல் வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில்  அவருக்கு எதிராக தினகரன் களத்தில் இறங்கி உள்ளார் தினகரனை முதல்வராக வேண்டும் என்ற குரல் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒலிக்கத் தொடங்கி விட்டது
வர்மா

Friday, February 17, 2017

முதல்வராக ஆசைப்பட்ட சசிகலா சிறை வைக்கப்பட்டார்

 
வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்த  வழக்கில் சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகிய  மூவரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ததால் குற்றவாளிகள் மூவரும் கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை மாலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவ்வழக்கின் முதலாம் எதிரியான ஜெயலலிதா மரணமானதால் அவரது பெயர் விடுவிக்கப்பட்டது. என்றாலும் அவருக்கு விதிக்கப்பட்ட 100  கோடி ரூபா அபராதத் தொகையை வசூலிப்பதற்கு அவருடைய சொத்துக்கள் விற்பனைசெய்யப்படும்.

1991  ஆம் ஆண்டு முதல்  1996 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக   66  கோடி ரூபா சொத்து சேர்த்ததாக ஜனதாக் கட்சித்தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  வழக்குத் தொடர்வதற்கு அன்றைய ஆளுநர் சென்ன ரெட்டியிடம் அனுமதி கோரினார். இந்திய மாநில முதலமைச்சர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு முதன் முதலாக ஆளுநர் அனுமதி  கொடுத்தார். பின்னாளில்  குற்றவாளி என நீதிமன்றம் திர்ப்பளித்ததால் சிறைக்குச்சென்ற முதலாவது முதலமைச்சர் என்ற அவப்பெயரும் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது.


சென்னை,பெங்களூர்,டில்லி ஆகிய நகரங்களில் ஐந்து நீதிமன்றங்களில்  பதினைந்து நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தார்கள். ஐந்து நீதிபதிகள் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை எழுதினார்கள். 1996   ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் ஊழல் பற்றிய  விபரங்களை 539 பக்கங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுநரிடம் கையளித்தது.ராமதாஸ், வைகோ ஆகியோரும் தமது கட்சியின் சார்பில் ஜெயலலிதாவின்  ஊழல்   பற்றிய ஆதாரங்களை   ஆளுநரிடம்  கையளித்தனர். பின்னர் சுப்பிரமணியன் சுவாமி,ராமதாஸ்,, வைகோ ஆகியோர்  ஜெயலலிதாவுடன் இணைந்து தேர்தலைச்சந்தித்தனர்.
ஜெயலலிதா,சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கல் டி குன்ஹா 2014 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி எதிரிகள் நால்வரும்  குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார். நால்வருக்கும் தலா நான்கு வருட சிறைத்தண்டனையும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபா அபராதமும்    மற்றையவர்களுக்கு தலா 10 கோடி ரூபாவும்  அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். ஜெயலலிதா தரப்பினரின் மேல் முறையீட்டு மனுவை   விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015  ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி நால்வரும் நிரபராதிகள் என விடுதலை செய்தார். குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்  முறையீடு செய்தது. மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ்,  அமிதவ் ராய் அடங்கிய டிவிசன் பெஞ்ச்  2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம்     13   ஆம் திகதி  விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது.2016 ஆம் ஆண்டு டிசம்பர்  5 ஆம் திகதி ஜெயலலிதா மரணமானார்.  நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ்,  அமிதவ் ராய் அடங்கிய டிவிசன் பெஞ்ச் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்  14  ஆம் திகதி வழங்கிய தீர்ப்பில் நீதிபத்தி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது.


ஜெயலலிதா மரணமானதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் ஆட்சியையும் கைப்பற்றும் நோக்கில் சசிகலாவும் அவருடைய குடும்பத்தவர்களும் செயற்பட்டனர். ஜெயலலிதாவின் உடல் வைத்தியசாலையில் இருக்கும் போதே முதலமைச்சர் பன்னீர்ச்செல்வமும் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். வீட்டில் இருந்தும் கழகத்தில் இருந்தும் ஜெயலலிதாவால்  விரட்டப்பட்டவர்கள் அவருடைய சடலத்தைச் சுற்றிப்  பாதுகாப்பாக நின்றனர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தூரத்தில் நின்று கண்ணீர் வடித்தனர். 

பன்னீர்ச்செல்வத்தின் தலைமையில் தமிழக அரசு செயற்படும் என நினைத்தவர்களின் எண்ணத்தில் சசிகலாவின் விருப்பம் பேரிடியாக அமைந்தது. சசிகலாவைப் பொதுச்செயலாளராக்க வேண்டும் என்ற கோஷம் ஓங்கி ஒலித்தது. கழக விதியை மீறி சசிகலாவைப் பொதுச்செயலாளராக நியமித்தனர். முதலமைச்சர் பதவியின் மீது சசிகலாவின் பார்வை விழுந்தது. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பன்னீர்ச்செல்வம் முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என கழக விசுவாசிகள் விரும்பினர். சாதுவாக இருந்த  பன்னீர்ச்செல்வம்   போர்க்கோலம் பூண்டார். சசிகலா அணி பன்னீர்ச்செல்வம் அணி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டானது.

சசிகலாவும் பன்னீர்ச்செல்வமும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர ராவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.  சசிகலாவின் உத்தரவுக்கிணங்க சொகுசு ஹோட்டலில் சட்டமன்ற உறுப்பினர்கள்  தங்கவைக்கப்பட்டனர்.. இந்திய அரசியல்வாதிகளின் பார்வை தமிழகத்தை நோக்கித் திரும்பியது. ஆளுநரின் முடிவுக்காக இரண்டு தரப்பும்  காத்திருந்தது. சட்டமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக வெளியில்விட்டால் அவர்கள்  பன்னீரின் பக்கம் போய்விடுவார்கள் என சசிகலா அச்சப்பட்டார். மக்கள் ஆதரவு பன்னீர்ச்செல்வத்தின் பக்கம்  திரும்பியது.  ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களும்பன்னிரண்டு  நாடாளுமன்ற உறுப்பினர்களும் பன்னீர்ச்செல்வத்தின் பக்கம் சேர்ந்தனர்.

அறுதிப்பெரும்பான்மை இருப்பதால் முதலமைச்சராகி விடலாம் என சசிகலா நினைத்தார். ஆனால், ஆளுநரின் எண்ணம் வேறுவிதமாக இருந்தது. சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு வரும்வரை பொறுமைகாக்க வேவண்டும் என ஆளுநர் நினைத்தார். தீர்ப்பைப் பற்றிக்  கவலைப்படாது  முதலமைச்சராகும் நோக்கில் சசிகலா செயற்பட்டார். சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதம் கொடுக்கப்பட்டால் முதலமைச்சருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டியது ஆளுநரின் கடமை பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என சசிகலா முழங்கினார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நடைபெறும் பதவிப்போட்டி ஊடகங்களுக்கு நல்ல தீனியாக அமைந்தது. தொலைக் கட்சித் தொடர்களைப் பார்ப்பவர்களின் தொகை குறைந்தது.

சசிகலாவும் பன்னீர்ச்செல்வமும்  ஏட்டிக்குப் போட்டியாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தனர். சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழக சட்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் தனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என சசிகலா தொடர்ந்து அறிவித்தார். சசிகலாவால் சிறை வைக்கப்பட்டிருக்கும் சட்ட சபை உறுப்பினர்களில் பலர் தனக்கு ஆதரவு தருவார்கள் என பன்னீர்ச்செல்வம் தெரிவித்தார். சசிகலாவின் பிடியில் இருந்து தப்பியவர்கள் பன்னீர்ச்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பன்னீரைச்சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்தனர். தமிழக சட்ட சபையின் முன்னாள் அமைச்சர்கள் உறுப்பினர்கள் பன்னீர்ச்செல்வத்தின் பின்னால் அணிவகுத்தனர். தமிழக அரசியல் மிகமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.ஆளும் கட்சி இரண்டாகி பதவிக்காகப்  போராடியது.

ஜெயலலிதாவின் வழியில்ஆட்சி அமைக்கப்போவதாக இரண்டு அணித்தலைவர்களும் முழங்கினர். எம்.ஜி.ஆரால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அரசியல் ஆளுமை மிக்கவர்கள் அவரின் பின்னால் இருந்தனர். சசிகலாவின் பின்னால் பதவி ஆசை கொண்டவர்கள் அடிமைபோல்  நிற்கின்றனர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனது கைகளுக்கு வரும் என அப்போது சசிகலா கனவிலும் நினைத்திருக்க மாட்டார். சசிகலாவின் கொந்தளிப்பை உச்ச நீதிமன்றம் அடக்கியது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  மூவரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர்.சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வெளியானதும் பன்னீர்ச்செல்வத்தின் ஆதரவாளர்கள் குதூகலம் அடைந்தனர். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளி என்பதை அவர்கள் மறந்து விட்டனர்
 சசிகலாவின் அணி உற்சாகம்  இழந்தது.சட்ட மன்ற உறுப்பினர்களை தடுத்து வைத்திருக்கும் உல்லாச ஹோட்டலில் சசிகலா ஆலோசனை நடத்தினர். சசிகலாவின் நம்பிக்கைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதா மறைந்ததும் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்க  சசிகலா விரும்பினார். மத்திய அரசு கொடுத்த நெருக்கடியினால் அவர் முதலமைச்சராகும் வாய்ப்பு பறிபோனது.  நீதிமன்றத் தீர்ப்பு எடப்பாடிக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. பன்னீர்ச்செல்வம் முதலமைச்சராகக் கூடாது என்பதில் சசிகலா உறுதியாக இருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான குழு ஆளுநரைச்சந்தித்து  ஆட்சி அமைக்க அனுமதி கோரியது.   ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட தினகரனும் அந்தக்குழுவில்
இடம்பெற்றிருந்தார்.முன்னதாக சசிகலா ஆளுநரைச் சந்திக்கச்சென்ற போதும் தினகரனும் உடன் சென்றிருந்தார். இதனை  ஜெயலலிதாவின் விசுவாசிகள் விரும்பவில்லை. பன்னீர்ச்செல்வம் தரப்பினரும் ஆளுநரைச்சந்தித்தது.

நெருக்கடியான இந்த நேரத்தில் சிறைக்குசெல்ல விரும்பாத சசிகலா சரணடைவதற்கு கால அவகாசம் கோரினார். மறுப்புத் தெயவித்த உச்ச நீதிமன்றம் உடனடியாகச் சரணடையுமாறு உத்தரவு பிறப்பித்தது. சசிகலாவும் இளவரசியும் ஒரு காரில் சென்றனர். சுதாகரன் சற்று தாமதமாக சென்று சரணடைந்தார்.நான்கு வருடங்களுக்கு இவர்கள் வெளியே வரமுடியாது. உரிய காரணத்தைக் காட்டி பரோலில் வெளியே வந்து மீண்டும் சிறைக்குச்செல்ல வேண்டும் மறுசீராய்வுக்கு மனுச்செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அதில் வெற்றி பெறுவதற்கு சந்தர்ப்பம் மிகக் குறைவு.

ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட டி டி தினகரனையும் வெங்கடேசனையும் மன்னித்த சசிகலா அவர்களை மீண்டும் கட்சியில்  சேர்த்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்  இல்லாத துணைச்செயலாளர் பதவியை தினகரனுக்குக் கொடுத்துள்ளார் சசிகலா. கட்சியும் ஆட்சியும் தனது குடும்பக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே சசிகலாவின் நோக்கம். சசிகலாவின் பின்னால் நிற்பவர்களில் எவரும் இதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. கட்சியின் செயலாளர் தான் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவே பன்னீர்ச்செல்வத்திடம் இருந்து பதவியைப் பறிக்க திட்டம் தீட்டப்பட்டது. இப்போது இரண்டு பதவிகளுக்கும் இரண்டு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட மன்ற உறுப்பினர்களின் கணக்கைக் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். அவருடன்  30  அமைசர்களும்  பதவி ஏற்றுள்ளனர். சசிகலா சிறையில் இருப்பதை மறந்து அவரது ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி லட்டு வழங்கி கொண்டாடுகிறார்கள்.ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்ட செங்கோட்டையனும் அமைச்சராகி உள்ளார். எதிர் வரும் சனிக்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்தாலும் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாதான் அவர்களை இயக்கப்போகிறார்.
வர்மா

Wednesday, February 8, 2017

பொங்கி எழுந்த பன்னீரால் இரண்டாகிறது அ.தி.மு.க

ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் கலகம் ஏற்படும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். எந்தவித முணுமுணுப்பும் இன்றி பன்னீர்ச்செல்வ‌ம்  முதலமைச்சரானார். ஜெயலலிதாவின் விசுவாசியான பன்னீர்ச்செல்வ‌ம் முதல்வராகியதால்  அவரது தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இயல்பு நிலை மாறாது  இயங்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக அரசியலுடன் எந்த வித தொடர்பும் இல்லாத சசிகலா நியமனமான போது உள்ளே ஏதோஒரு பூசல் இருப்பது போன்ற தோற்றப்பாடு தோன்றியது. உட்கட்சிப் பூசலுக்கான ஆதாரம் எவையும் வெளியில் தெரியவில்லை.
 

பன்னீர்ச்செல்வ‌த்தை முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு சசிகலாவை  முதல்வராக்க வேண்டும் என பன்னீர்ச்செல்வ‌த்தின் அமைச்சரவையில் உள்ளவர்கள் பெட்டு கொடுத்தனர். சசிகலாவை  முதல்வராக்கி விட்டுத்தான் அடுத்த வேலை என  தம்பித்துரை  முழங்கினார்.பொறுமையின் சிகரமான பன்னீர்ச்செல்வ‌ம் அமைதியாக நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார். அரசியலுக்கு அப்பால் பன்னீர்ச்செல்வ‌த்தின் மீது மதிப்பு வைத்திருந்தவர்கள் அவரின் செய்கையல் ஆத்திரமடைந்தனர். சசிகலாவி முதல்வராக்க  நாள் குறித்தார்கள்.பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவ் டில்லிக்குச்சென்றதால்  சசிகலாவின்  பதவி ஏற்புவைபவம் தள்ளிப்போனது. இரண்டாவது  முறையும்  நாள்  குறித்து தடல் புடலாக ஏற்பாடு நடைபெற்றது.  வித்யா சாகர் ராவ் டில்லியில்  முகாமிட்டார். சந்தேகங்களும்  சட்டச் சிக்கல்களும் உண்மையும் பொய்யும் கலந்து பரவலானது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் தமிழக மக்களும் சசிகலாவைக் கடுமையாக எதிர்த்தனர். இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் முதல்வர் கனவில் காய்களை நகர்த்தினார் சசிகலா. தமிழக முதலமைச்சர் என்ற கோதாவை மறந்து சசிகலாவின் முன்னால் பவ்வியமாக இருந்த பன்னீர்ச்செல்வ‌த்தின் சுயரூபம் சசிகலா தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்தது.என்னை மிரட்டி ரஜினாமாச்செய்ய வைத்தனர் என்ற  பன்னீர்ச்செல்வத்தின்  ஒரு சொல் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9   மணிக்கு மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியின் முன்னால் சுமார் முக்கால் மணிநேரம் மெளன அஞ்சலி செலுத்திய பின்னர் பன்னீர்ச்செல்வ‌ம் வழங்கிய பேட்டி உறக்கத்தில் இருந்த தமிழக மக்களைத் தட்டி எழுப்பியது.


 என்னை முதல்வராக்கி அவமானப்படுத்தினார்கள்.   முதலமைச்சர் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டு  சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என எனது அமைச்சரவையில் உள்ளவர் பேட்டியளித்தார். இது பற்றி  முறையிட்டேன். தொலைபேசியில் அவரைக் கண்டித்ததாகக் கூறினார்கள்.  தொடர்ந்தும் இதேபோல செய்திகள் வெளியாகின. போன்ற பல குற்றச்சாட்டுகளை பன்னீர்ச்செல்வம் முன்வைத்தார்.  தனது மனதில் இருந்தவற்றை பன்னீர்ச்செல்வ‌ம் கொட்டியதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உற்சாகமானார்கள்.சசிகலாவின் குடும்பத்தை எதிர்க்கும் ஒரு தலைவனை எதிர்பார்த்திருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராகவும் முதலமைச்சராகவும் முன்மொழிந்த பன்னீர்ச்செல்வ‌மா போர்க்கொடி  தூக்கினார் என்ற சந்தேகம் பலர் மனதில் உண்டாகியது. ஜெயலலிதா இறந்தபின்னர் களில் விழும் கலாசாரம் முடிந்துவிடும் என எதிர்பார்த்திருந்த  வேளையில் சசிகலாவின் காலில்  விழுந்து அக் கலாசாரத்தைத் தொடர்ந்த பன்னீர்ச்செல்வ‌ம், ஜெயலலிதாவின் சமாதியின் முன் சசிகலா முதல்வராவதற்கு முன்வைத்த  திட்டங்கள் அனைத்தையும் பகிரங்கப்படுத்தினார்.. பன்னீர்ச்செல்வ‌த்தின் மனச்சாட்சி ஜெயலலிதாவின் சமாதிக்கு முன் பேசியதால் ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் ஆனந்தமடைந்தனர்.  பன்னீர்ச்செல்வ‌த்தின் பேட்டியால் சசிகலா  தரப்பு விசனமடைந்தது.

பன்னீர்ச்செல்வ‌த்துக்குப் பின்னால் ஏனைய சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லக்கூடாது என்பதற்காக நள்ளிரவில் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தை  சசிகலா நடத்தினார். நள்ளிரவு நடைபெற்ற கூதடத்தில் கலந்து கொண்ட அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. நள்ளிரவுக் கூதடத்தின் முடிவில்  பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்ச்செல்வ‌ம் நீக்கப்பட்டதாக சசிகலா அறிவித்தார். திராவிட ட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எம்.ஜி.ஆர் விலக்கப்பட்ட சம்பவம் பலரின் மனதில் வந்து போனது. பன்னீர்ச்செல்வ‌த்தின் வீட்டிலும் போயஸ் கார்டனிலும் குவிந்த தொண்டர்கள்  அவர்களை வாழ்த்தி கோஷம் போட்டனர். நள்ளிரவுக் கூட்டம் முடிந்ததும் சட்ட மன்ற உறுப்பினர்கள் வீட்டுக்குச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. சொகுசு பஸ்களில் ஏற்றப்பட்ட அவர்கள் வசதியான ஹூட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பன்னீர்ச்செல்வ‌த்தின் பக்கம் சாய்ந்துவிடுவர்களோ  என்ற பயம்  சசிகலாவின் மனத்தில் இருக்கிறது.
சசிகலாவை ஆதரிக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட மன்ற உறுப்பினர்கள்   சிறை வைக்கப்பட்டுள்ளனர்.  எத்தனை உறுப்பினர்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. சட்ட மன்ற உறுப்பினர்கள் எனது கட்டுப்பாட்டில் உள்ளனர். பன்னீர்ச்செல்வ‌த்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது எனும் சந்தோஷத்துடன் படுக்கைக்குச்சென்ற நித்திரையால்  எழும்பும்போது கட்சிகள் பல மாறிவிட்டன. மக்கள் விரும்பினால் ராஜினாமாக் கடிதத்தை வாபஸ் பெறுவேன்,ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிப்பதற்கு விசாரணைக்கமிசன் அமைக்கப்படும் என்ற பன்னீர்ச்செல்வ‌த்தின் அறிவிப்பு பலரையும் கவர்ந்தது. ஜெயலலிதாவின்மரனத்தின் மர்மம்  வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர். போயஸ் தோட்டத்தில் தவறான மருந்து கொடுக்கப்பட்டதல் தான் ஜெயலலிதா மரணமடைந்தார் என முன்னாள் சபாநாயகர் பி.எச். பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற  உறுப்பினர் மைத்திரேயன் , முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் அவருடைய மகன், முன்னாள் அமைச்சர்கள்  முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் பன்னீர்ச்செல்வ‌த்தைச் சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். சசிகலாவின் கண்காணிப்பையும் மீறி ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மன்சூர் முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி, மன்சூர் அலிகான் சரத்குமார் எஸ்.வி.சேகர் கராத்தே ஹுசைன்  ஆகியோர் பன்னீர்ச்செல்வ‌த்தின் பக்கம் சாய்ந்துவிட்டனர். வெளித் தோற்றத்துக்கு ஓரணியாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டுபட்டுள்ளது.

ஷீலா பாலகிருஷ்ணன்,வெங்கட்ரமணன்,சாந்த ஷீலா நாயர் போன்ற தலைமைச்செயலக அதிகாரிகள் பதவியை விட்டு விலகி விட்டனர்.தமிழக அரசு இப்போது யாரின் கையில் உள்ளது என்ற  குழப்பம் நீடிக்கிறது. சட்டம் ஒழுங்கைக் கவனிப்பது யார்?  பொலிஸாரைக் கையாள்வது    யார்                          போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. பன்னீர்ச்செல்வ‌த்ஹ்டின் வீட்டிலும் போயஸ் கார்டனிலும்  கூடியுள்ள கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.ஜெயலலிதாவுக்குக் குடைச்சல் கொடுத்த சுப்பிரமணியன் சுவாமி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கிய சுப்பிரமணியன் சுவாமி சசிகலாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.


இரண்டு பெரியதலைகள் முட்டி மோதும்போது தீபாவைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை. தீபா ரன்னுடன் சேரலாம் என பன்னீர்ச்செல்வ‌ம் பச்சைக்கொடி காட்டியுள்ளார். சசிகலாவை எதிர்க்கும் ஜெயலலிதாவுக்கு விசுவாசமனவர்கள் அனைவரும் பன்னீரின் பின்னால் சென்றுவிட்டனர். தனி மர்மக் நிற்கும் தீபாவை தன்னுடன் இணையுமாறு பன்னீர்ச்செல்வ‌ம் அழைப்பு விடுத்துள்ளார்.சசிகலாவுக்கு எதிரான சக்திகள் அனைத்தும் பன்னீர்ச்செல்வ‌த்தின் பின்னால் அணிவகுத்துள்ளன.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பன்னீர்ச்செல்வ‌த்தின் பின்னால் இருக்கின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட மன்ற உறுப்பினர்களை சசிகலா சிறை வைத்துள்ளார்.

சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிருபிப்பேன் என பன்னீர்ச்செல்வ‌ம் சூளுரைத்துள்ளார். சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு  வழக்கின் தீர்ப்பு இவ்வாரம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டதால்  அவரின் தளிக்கு மீள் கத்தி தொங்குகிறது. ஆளுநரின்  கையில் இவர்களின் தலைவிதி  உள்ளது.
வர்மா.


Saturday, February 4, 2017

மல்லுக்கட்டில் முந்திய பன்னீர்ச்செல்வ‌ம் அதிர்ச்சியில் சசிகலா


ஜெயலலிதா மறைந்தபின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரம்  பன்னீர்ச்செல்வ‌த்தின் கைகளுக்குச் செல்லும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஜெயலலிதாவுக்கு அடுத்தது யார் என்ற கேள்வி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்ததில்லை. கழகத்தின் ஒரே ஒரு தலைவர் ஜெயலலிதாதான்.  மற்றைய கட்சிகளைப் போன்று இரண்டாம் கட்டத்தலைவர் என்ற பேச்சுக்கு இடம் இருக்கவில்லை. ஜெயலலிதா குற்றவாளி என இரண்டு முறை நீதிமன்றம் தீர்ப்பளித்த போது இரண்டு முறையும் பன்னீர்ச்செல்வ‌த்தின் கையில் முதலமைச்சர் பதவியைக் கொடுத்துவிட்டு அவர் சிறைக்குச்சென்றார். ஜெயலலிதாவின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பெற்ற பன்னீர்ச்செல்வ‌ம் தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்புக்கு சசிகலா தரப்பு முட்டுக்கட்டை போட்டது.

ஜெயலலிதாவின் பின்னால் அடக்க ஒடுக்கமாக குனிந்த தலை நிமிராமல் வலம் வந்த சசிகலாவுக்கு அதிகார ஆசை  ஏற்பட்டதால் பன்னீர்ச்செல்வ‌த்துக்குத் தலைவலி தொடங்கியது. சசிகலாவின்  கணவன் நடராஜனின் அரசியல் சித்து விளையாட்டு அனைவருக்கும் தெரிந்த பரகசியமான உண்மை. ஜெயலலிதாவின் பின்னால் முப்பது வருடகாலம் அப்பாவி போல்  இருந்த சசிகலாவுக்கு பதவி ஆசை தொற்றிக்கொண்டது.  சசிகலாவின் பின்னால் அவரது கணவன் நடராஜனும் குடும்பமும் உள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களும் தமது பதவியைக் காப்பாற்றுவதற்காக சசிகலாவுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.


பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி பன்னீர்ச்செல்வ‌த்துக்கு பக்க பலமாக இருக்கிறது. இந்திய மத்திய அரசின் பிரதிநிதியாக தமிழகத்தில் இயங்கும் ஆளுநர் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். ஜெயலலிதாவின் ஆளுமைக்கு இணையான தலைமை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்    இல்லை.ஜெயலலிதாவின் இடத்தை  சசிகலா நிரப்புவார் என சிலர் தப்புக்கணக்குப் போட்டுள்ளனர்.முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்ச்செல்வ‌த்தை இறக்கிவிட்டு சசிகலாவை அமர்த்துவதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விதியை மீறி சசிகலாவை கழகப் பொதுச்செயலாளராக நியமித்தனர்.  சசிகலா முதலமைச்சராவதை பாரதீய ஜனதாக் கட்சி விரும்பாததனால் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
சசிகலாவின் தலைமைக்கு எதிராக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் கலகக் குரல் எழும்பும் என எதிர்பார்த்தவர்கள்  ஏமாற்றமடைந்தனர்.  சசிகலாவின் காலில் விழுந்ததால் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு மக்களிடையே இருந்த மதிப்புக் குறைந்தது. பதவியில் இருப்பவர்கள் சசிகலாவுக்கு கூழைக்கும்பிடுபோட்டத்தைச் சகிக்க முடியாத தொண்டர்கள் ஜெயலலிதாவின் மருமகள் தீபாவின் வீட்டை  நோக்கிப் படை எடுத்தனர். சசிகலாவுக்கு ஆதரவான பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் சசிகலா என்ற பிரமையை உண்டாக்கின. சசிகலாவைப் பிடிக்காத பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தீபாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கின.  ஊடகங்களின் போட்டா போட்டியில்  பன்னீர்ச்செல்வ‌த்தை யாரும் கணக்கில் எடுக்கவில்லை


கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்களை அடியொற்றி தமிழக அரசியல் இரண்டு பிரிவாக இருந்தது. ஜெயலலிதாவின் மறைவும் இயங்க  முடியாத நிலையில் கருணாநிதி இருப்பதும்  தமிழக அரசியலில் மென்போக்கை உருவாக்கி உள்ளன. பன்னீர்ச்செல்வ‌த்தின் தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இயங்க வேண்டும் என மோடி  விரும்புகிறார். தமிழகத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான ஸ்டாலினும்  பன்னீர்ச்செல்வ‌த்தின் தலைமையை விரும்புகிறார்.சசிகலாவை  அரசியல் ரீதியாக  எதிர்ப்பதை விட பன்னீர்ச்செல்வ‌த்தை எதிர்ப்பது இலகுவானது என ஸ்டாலின் கருதுகிறார். தமிழக சட்ட சபையில் மென்போக்கான எதிர்ப்பை திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்துகிறது.

 சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டும் என விரும்புபவர்களால் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு ஏகப்பட்ட நெருக்கடி கொடுக்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு பக்க பலமாக இருக்கப்போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்திக்க அனுமதி கோரினார்.அவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்காத பிரதமர் மூன்று முறை பன்னீர்ச்செல்வ‌த்தைச் சந்தித்து அவர் கூறிய அனைத்தையும் செவிமடுத்தார். சசிகலா தரப்புக்கு மோடி விடுத்த மறைமுக எச்சரிக்கையாகவே இது நோக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள்  நடத்திய அறவழிப் போராட்டம் பன்னீர்ச்செல்வ‌த்துக்குப் பெரும் நெருக்கடியைக்கொடுத்தது. தமிழக  அரசுக்கான அவரச சட்டத்தை இந்திய மத்திய அரசு தயாரித்தது.    ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டதென்ற   நல்ல செய்தியுடன் தமிழகம் திரும்புவேன்  என சபதம் எடுத்த பன்னீர்ச்செல்வ‌த்தின் சபதத்தை மோடி நிறைவேற்றி வைத்தார்.மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பொலிஸார் களம் இறங்கியதால் பன்னீர்ச்செல்வ‌த்தின் மீது வெறுப்பைத் தோற்றுவித்துள்ளது. அமைதியான போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட வன்முறையை பலரும் கண்டித்துள்ளனர். நக்சலைடுகள்,தேசவிரோத சக்திகள் மெரீனாவில் ஊடுருவியதாக இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் அறிவித்துள்ளன.

மாணவர்களால் மெரீனாவில் ஆரம்பிக்கப்பட்ட அறவழிப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் ஊடுருவிய ஒருசில தேசவிரோத சக்திகளை  அரச புலனாய்வாளர்களை இலகுவாகக் கட்டுப்படுத்தி இருக்கலாம். அப்படிச்செய்யாது போலீசாரை ஏவிவிட்டதன்  மூலம் எதிர்காலத்தில் இப்படியான அறவழிப்போராட்டங்கள்  நடைபெறக்கூடாது என்ற எச்சரிக்கையை மத்திய மாநில அரசுகள் விடுத்துள்ளன. பொது மக்களின்  உடமைகளைச் சேதமாக்கி அவற்றுக்குப்  பொலிஸார் தீவைத்த ஆதரங்கள் சமூக வலைத்தளங்களிலும் இணைய தளங்களிலும்  இருக்கின்றன.  அப்போது நடந்தவற்றை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின.போராட்டக்காரர்கள்   மீது தாக்குதல் நடைபெற்றதை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசாரணைக்குழு ஒன்றை தமிழக அரசு நியமித்துள்ளது.  

உலகின் மிக நீளமான கடற்கைகளில் மெரீனாவும் ஒன்று. சுமார் நான்கு கிலோ  மீற்றர்  நீளமான அப்பரந்த கடற்கரையில்  அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் கூடி இருந்தனர். மோடி, பன்னீர்ச்செல்வ‌ம், சசிகலா ஆகியோரை எதிர்த்து சிலர் கோஷம் போட்டுள்ளனர். அந்தக் கோஷங்களுக்கும் மாணவர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை. மோட்டர் சைக்கிளில் பின்லேடனின் படம் ஒட்டப்பட்ட புகைப்படத்தை சட்ட சபையில்  பன்னீர்ச்செல்வ‌ம்  காட்டினார். தாங்கள் மெரீனாவுக்குச் செல்லவில்லை என அப் புகைப்படத்தில் இருப்பவர்கள் தெரிவித்தனர். தமிழக புலனாய்வாளர்கள் முதலமைச்சர் பன்னீர்ச்செல்வ‌த்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள்.

ஜெயலலிதா சிறையில் இருந்தபோது இரண்டு முறை  முதலமைச்சராகப் பதவி  வகித்த பன்னீர்ச்செல்வ‌ம் ஜெயலலிதாவின் கட்டளைப்படி பொம்மை முதலமைச்சராகச் செயற்பட்டார். ஜெயலலிதா இறந்தபின்னர்  முதலமைச்சராகப் பதவி ஏற்ற  பன்னீர்ச்செல்வ‌ம், சசிகலாவுக்கு அடிபணிந்து செயற்பட்டார்.சசிகலாவை விரும்பாத பாரதீய ஜனதாக் கட்சி பன்னீர்ச்செல்வ‌த்துக்கு ஆதரவுக் கரம் நீட்டியதால் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் துணிவு பன்னீர்ச்செல்வ‌த்துக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை பெற்ற பன்னீர்ச்செல்வ‌ம் இப்போது தான் விரும்பியதைச் செய்யத் தொடங்கிவிட்டார்.

வர்தாப்   புயலால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது களத்தில் இறங்கி  செயற்பட்டார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தார்,ஆந்திராவுக்கு விஜயம் செய்து அம்மாநில முதலமைச்சரைச் சந்தித்து சென்னை குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்தார். சென்னை வெள்ளத்தால் அழிக்கப்பட்டபோது அன்றைய  முதலமைச்சர்  ஜெயலலிதா திரும்பியும் பார்க்கவில்லை. அண்டை மாநிலங்களின் பிரச்சினைகளுக்கு பேசித் தீர்வு காணாது நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு பெறவே ஜெயலலிதா விரும்பினார்.

தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு பன்னீர்ச்செல்வ‌ம் உடனடியாக  துரித கதியில் தீர்வு காண்பதால் அவருடைய செல்வாக்கு அதிகரித்துள்ளது. மக்கள் ஆதரவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கலக் தொம்டர்களின் ஆதரவும் சசிகலாவுக்கு இல்லை. பன்னீர்ச்செல்வ‌த்தின் சுறுசுறுப்பைப் பார்த்த அண்ணா திராவிட முன்னேற்றக் ககழக  சட்ட மன்ற உறுப்பினர்கள்  பன்னீர்ச்செல்வ‌த்தின் பக்கம் சரியத் தொடங்கிவிட்டனர்.  ஜெயலலிதாவையும் சசிகலாவையும் சட்ட சபையில் புகழ்ந்து பேசிய  அண்ணா திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்கள் இப்போது  பன்னீர்ச்செல்வ‌த்தையும் புகழ  ஆரம்பித்துள்ளனர். பன்னீர்ச்செல்வ‌த்தின் பதவியைப் பறிக்கக்  காத்திருப்பவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
வர்மா