Showing posts with label ராகினி. Show all posts
Showing posts with label ராகினி. Show all posts

Wednesday, November 16, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 43

பாட்டும், நடனமும் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த  போது அறிமுகமானவர்கள் திருவாங்கூர் சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினி. திருவாங்கூர் சகோதரிகளின் நாட்டியம் படத்தில் இருப்பதாக  பிரத்தியேகமாக விளம்பரம் செய்யப்படும்லலிதா,பத்மினி,ராகினி ஆகிய  மூவரில்  திறமையானவர் யார் என  பிரித்தரிய முடியாது. அவர்களின் திறமையையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால்பத்மினி திரையுலகில் அடைந்த உயரத்தை மற்றவர்களால் எட்ட முடியவில்லை.

கணவனே கண் கண்ட தெய்வம்திரைப்படத்தில் நாகராணியாக நடித்த லலிதா  பேசப்பட்டார். ஒரு சில தமிழ்ப் படங்களில்  நடித்த பின்னர் மலையாளப் பட உலகின் பக்கம் ஒதுங்கி விட்டார். விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ்ப்  படங்களில் நாயகியாக நடித்த ராகினி பின்னர் துணைப் பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் பத்மினியோடு இணைந்து நடித்த படங்கள்தான் அதிகம்.ஆனால், பத்மினி தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். சிவாஜி, எம்.ஜி.ஆர் உட்பட அந்தக் காலத்து கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்தார்.

  சிவாஜியின் 2-வது படத்திலேயே அவருடன் ஜோடி சேர்ந்த பத்மினி எம்.ஜி.ஆரின் 35-வது படமானமதுரை வீரன்படத்தில்தான் முதன்முதலாக அவருடன் ஜோடியாக நடித்தார். நாற்பதுக்கும் மேற்பட்ட திரை அரங்கங்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடிய வெற்றிச் சித்திரமாக அந்தப் படம் அமைந்தது. அதற்குப் பிறகு பத்மினி எம்ஜிஆரோடு நடித்த படங்களில் முக்கியமான படம்மன்னாதி மன்னன்”. எம்ஜிஆரோடு பல படங்களில் ஜோடியாக நடித்த பத்மினி அவருடைய சகோதரியாக  ரிக்ஷாக்காரன்படத்தில் நடித்தார். சிவாஜிக்கு இணையாக நடித்த ஜோடிகளில் ஒருவராக பத்மினி இருக்கிறார். இரண்டு  கதாநாயகிகள்  உள்ள படங்களிலும் நடித்து தனது பாத்திரத்தை ம்ருகேற்றினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற இந்திய மொழிகள் தவிர ரஷ்ய மொழிப் படத்திலும் நடித்தவர் பத்மினி. ரஷ்யப் படத்தில் நடித்தது மட்டுமின்றி அந்தப் படத்தில் ரஷ்ய மொழியில் பேசியும் இருந்தார் அவர். பால்ராஜ் சஹானி, பிரித்விராஜ் கபூர், நர்கீஸ், பத்மினி ஆகியோர் நடிக்கபர்தேசிஎன்ற பெயரில் தயாரான அந்தத் திரைப்படம் இந்தி-ரஷ்யன் ஆகிய இரு மொழிகளில் தயாரானது.

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் போட்டிபோட்டி நடித்த பாடல்காட்சி அன்றைய சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பத்மினியின் திரை  உலக வாழ்க்கையில் அவராலும், அவரது ரசிகர்களாலும் மறக்க முடியாத ஒரு திரைப்படம்வஞ்சிக் கோட்டை வாலிபன்”. ஜெமினியின் பிரம்மாண்டமான அந்தப் படத்தில்  பத்மினி, வைஜயந்திமாலா ஆகிய இருவரும் பங்கு பெற்ற போட்டி நடனம் ஒன்றைப் படமாக்கி இருந்தார் அப்படத்தின் இயக்குனரான எஸ்.எஸ்.வாசன்.

கண்ணும் கண்ணும் கலந்துஎன்று தொடங்கும் அந்தப் பாடல் காட்சியின் இடையில்சபாஷ் சரியான போட்டிஎன்பார் பி.எஸ்.வீரப்பா. அவருடைய அந்த வசனத்துக்கு ஏற்ப அந்தப் பாடல் காட்சியில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் போட்டி போட்டுக் கொண்டு நடனம் ஆடி இருந்தனர். அந்தப் பாடல் காட்சிக்காக பத்மினியும், வைஜயந்திமாலாவும்  தீவிரமாகப் பயிற்சி பெற்றனர். தமிழில் பத்மினியும்,  கிந்தியில் வைஜயந்திமாலாவும் கொடிகட்டிப் பறந்தனர்.

அவர்கள்  இருவருக்குமிடையே அப்போது எந்த போட்டியும் இல்லை. அந்தப் பாடல் காட்சியின் முடிவிலும் அந்த போட்டி நடனத்தில் யாருக்கு வெற்றி என்பது காட்டப்படவில்லை. எங்களின் நோக்கமெல்லாம் அந்தப் பாடல் காட்சியில் யார் வெற்றி பெறுவது என்பதைவிட ரசிகர்களை திருப்திப்படுத்துவதில்தான் இருந்ததுஎன்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் பத்மினி.அந்தப் போட்டி நடனத்தில் வெற்றி பெற்றது யார் என்பதைக் காட்டாததற்குப் பின்னாலே எஸ்.எஸ்.வாசனின் புத்திசாலித்தனமும், வியாபாரத் தந்திரமும் இருந்தது.

வஞ்சிக் கோட்டை வாலிபன்திரைப்படம் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் உருவான படம். இந்தியில் அதன் பெயர்ராஜ்திலக்”. அந்தப் படம் தயாரானபோது தமிழில் பத்மினி புகழின் உச்சத்தில் இருந்ததுபோல, இந்தியில் வைஜயந்திமாலா நல்ல புகழுடன் இருந்தார். போட்டி நடனத்தில் வைஜயந்திமாலா வெற்றி பெற்றதாகக் காட்டினால் நிச்சயமாக தமிழ் ரசிகர்கள் அதை விரும்ப மாட்டார்கள்.

அதேபோன்று பத்மினி வெற்றி பெற்றதாகக் காட்டினால் இந்தி ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்தான் உத்திரத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு மிகப் பெரிய லஸ்தர் விளக்கு கீழே விழ அதை பத்மினியும் வைஜயந்திமாலாவும் அதிர்ச்சியோடு பார்ப்பதாக அந்த நடனக் காட் சியை வாசன் முடித்துவிட்டார் என்று பரவலாகப் பேசப்பட்டது.

1942-ம் ஆண்டில் பி.யு.சின்னப்பாவும், கண்ணாம்பாவும் ஜோடியாக நடித்தகண்ணகிதிரைப்படத்தைத் தயாரித்து மாபெரும் வெற்றியைக் குவித்த ஜுபிடர் சோமுவிற்கு சிவாஜி கணேசன் கோவலனாகவும் பத்மினி கண்ணகியாகவும் நடிக்க அந்தப் படத்தை மீண்டும் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை 1950-ம் ஆண்டில் பிறந்தது.

கண்ணகியின் புதிய பதிப்பை இயக்க .எஸ்..சாமியை இயக்குநராகத் தேர்ந்தெடுத்த அவர் படத்தைத் தொடங்குவதற்கு முன்னாலேகண்ணகிபடத்தைத் தனது இனிய நண்பரான அறிஞர் அண்ணாவிற்குத் திரையிட்டுக் காட்டினார்.

படத்தைப் பார்த்த அறிஞர் அண்ணா “1940-க்கும்1950-க்கும் இடைப்பட்ட பத்து வருடங்களில் தமிழ் சினிமாவில் எவ்வளவோ மாற்றங்கள் வந்து விட்டன. ஆகவே இப்போதுள்ள சூழ்நிலையில் மீண்டும் கண்ணகியை எடுத்தால் வெற்றி பெறுவது கஷ்டம்என்று சோமுவிடம் சொன்னார்.

கண்ணகிகதையை மீண்டும் படமாக்குகின்ற யோசனையை அறிஞர் அண்ணா வரவேற்கவில்லை என்றாலும் தனது கணவனைக் காப்பாற்ற போராடிய கண்ணகியின் பாத்திரம் .எஸ்..சாமியின் மனதில் நிலைத்து நின்று விட்டதால் அந்த பாத்திரத்தை மையப்படுத்தி ஒரு கதையை எழுதித் தரும்படி பிரபல நாவலாசிரியரான அரு.ராமநாதனை அவர் கேட்டுக் கொண்டார். அந்தக் கதைதான் சிவாஜியும் பத்மினியும் ஜோடியாக நடிக்கதங்கப் பதுமைஎன்ற பெயரிலே வெளிவந்தது பெரு வெற்றி பெற்றது.

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோரோடும், இந்தியில் ராஜ்கபூர் என்ற உச்ச நட்சத்திரத்தோடும் பல திரைப்படங்களில் பத்மினி நடித்துக் கொண்டிருந்தபோது ராமச்சந்திரன் என்ற டாக்டரை அவருக்கு திருமணம் செய்ய வைக்க முடிவெடுத்தார் அவரது தாயார்.

அப்போது திரையுலகில் இருந்த பலர் பத்மினியைத் திருமணம் செய்து கொள்ள தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர். ஆனால் அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு பத்மினிக்கு அவரது தாயார் தேர்வு செய்த மணமகன்தான் கேரளாவைச் சேர்ந்த ராமச்சந்திரன். பத்மினி திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியே கசியத் தொடங்கியதும் பத்திரிகையாளர்கள் பத்மினியைச் சூழ்ந்து கொண்டு கேள்விகளால் அவரைத் துளைத்தனர்.

உங்களை மணக்கப் போகும் மணமகன் யார்? அவர் இந்தத் திரையுலகை சேர்ந்தவரா? என்றெல்லாம் பத்திரிகையாளர்கள் கேள்விகளை அடுக்கியபோதுஎனக்குத் திருமணம் நிச்சயமாகி இருப்பது உண்மைதான். மற்ற விவரங்களை என்னுடைய தாயார் விரைவில் அறிவிப்பார்என்று பதில் அளித்தார் பத்மினி.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பீர்களா?” என்ற கேள்விக்கு எல்லா நடிகைகளையும் போலவேதிருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டேன்என்று பதில் சொன்னார் பத்மினி. ஆனால் பத்மினியின் திரைப் பயணத்தில் மறக்க முடியாத படங்களாக அமைந்ததில்லானா மோகனாம்பாள், சித்தி, வியட்நாம் வீடு, இரு மலர்கள்உட்பட பல சிறந்த படங்கள் திருமணத்திற்குப் பிறகு அவர் நடித்த படங்கள்தான்.

1960-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதியன்று ஆலப்புழையில் இருந்த லலிதாவின் வீட்டில் பத்மினியின் திருமணத்துக்கான நிச்சயத்தார்த்த நிகழ்ச்சி நடைபெற்றபோது அந்த நிகழ்ச்சியில் பத்மினி கலந்து கொள்ளவில்லை. அந்த சமயத்தில் பாரதப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் முன்பாக பத்மினியும் ராகினியும் நடனமாடிக் கொண்டிருந்தனர். “அங்கு நடனமாடிக் கொண்டிருந்தேனே தவிர அன்று என்னுடைய எண்ணமெல்லாம் ஆலப்புழையில்தான் இருந்ததுஎன்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் பத்மினி.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில்லை அன்று முதலில் பத்மினி முடிவெடுத்திருந்ததால் அவர் அப்போது நடித்துக் கொண்டிருந்த பல படங்களில் அவர் நடித்து முடிப்பதற்கு வசதியாக அவரது திருமணத்தை 1961-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதியன்று நடத்த முடிவு செய்தார் அவரது தாயார்.

ஆனால் அவர் திட்டமிட்டபடி அந்தத் தேதிக்குள் அவரது படங்களின் படப்பிடிப்பு முடிவடையாததால் திருமணத் தேதி மே மாதம் 25-ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. மே மாதம் முதல் வாரத்துக்குள் எல்லா படங்களையும் முடித்துவிட திட்டமிட்டிருந்தார் பத்மினி. ஆனால் படப்பிடிப்பு நீண்டு கொண்டேயிருந்தது.

மே மாதம் 21 முதல் வரை இராமாயண நாட்டிய நாடகத்தில் நடிக்கவும் பத்மினி ஒப்புக் கொண்டிருந்ததால் காலை முதல் மாலைவரை படப்பிடி ப்பு அதற்குப் பிறகு நாட்டிய நாடகம் என்று பம்பரமாக சுழன்றார் பத்மினி. திருமணத்திற்கு முன்னால் அவரது கடைசி நாட்டிய நிகழ்ச்சி மே மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. அந்த நாட்டிய நாடகத்தில் பத்மினி சீதையாகவும், ராகினி ராமராகவும் நடித்தனர்.

நாடகம் முடிந்தவுடன்இனி இந்த ராமன் உனக்கு வேண்டாம். அந்த ராமச்சந்திரன் போதும்என்று பத்மினியிடம் ராகினி கிண்டலாகத்தான் சொன்னார் என்றாலும் அவர் அப்படி சொன்னதைத் தொடர்ந்து இருவராலும் அழுகையை அடக்க முடியவில்லை.

ஐம்பத்தி ஆறு ஆண்டுகள் கலைச்சேவை புரிந்த ஈடு இணையற்ற நடிகையான பத்மினிக்கு இந்திய அரசு எந்த உயரிய விருதும் கொடுத்து கெளரவிக்கவில்லை.