மழை வெள்ளப் பாதிப்பில்
இருந்து தமிழக மக்கள் பூரணமாக விடுபடாது அல்லல்படுகின்றனர். இழந்தவைகளை மீண்டும்
பெறமுடியுமா எனத்தெரியாது தவிக்கின்றனர்.இந்த இக்கட்டான நிலையிலும் தமிழக அரசியல்
தலைவர்கள் அடுத்த தேர்தலைப் பற்றியே சிந்திக்கின்றனர். தமிழக அரசின் மீது கோபமாக இருக்கும்
மக்கள் தேர்தலில் பாடம் புகட்டத் தயாராகிவிட்டனர். தமிழக அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும்
எதிராக மக்களின் கோபம் திரும்பி உள்ளது. மக்களின் கோப உணர்வை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த அரசியல் தலைவர்கள் முயற்சிக்காது
அடுத்த முதல்வர் கனவில் மிதக்கின்றனர்.
திரவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திரவிட
முன்னேற்றக் கழகமும் இல்லாத தமிழக அரசை நினைத்துப்பார்க்க முடியாது. இந்திய
நாடாளுமன்றத் தேர்தலில் மிகுந்த நம்பிக்கையுடன் களம்
இறங்கிய மூன்றாவது அணி மண்ணைக் கெளவியது. சூடுபட்டபின்பும் மீண்டும்
அதே போன்ற தவறைச் செய்யத் துணிந்துள்ளனர்.இந்த இரண்டு கட்சிகளும் இல்லாத அரசை
உருவாக்குவோம் என வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி சபதம் எடுத்துள்ளது. மக்கள்
நலக் கூட்டணியின் சபதத்தினால் முதல்வர் கதிரையை தக்கவைத்துக்கொள்ளலாம் என ஜெயலலிதா
நம்புகிறார்.
மத்திய அரசு வழங்கிய
நிவாரண உதவியை அதிகரிக்கக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதத்துக்கு மேல் கடிதம்
எழுதுகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட்ஸ் அப்பில் ஆறுதல் கூறுகிறார்.
கடிதத்திலும் வட்ஸ் அப்பிளும் மக்கள் வாக்களிப்பதில்லை என்பதை ஜெயலலிதாவுக்கு
அவரது ஆலோசகர்கள் எடுத்துக் கூறவில்லை.
தமிழக சட்டசபைத்
தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்னும் முடிவில்
இருந்து ஜெயலலிதா பின்வாங்க மாட்டார்.நிவாரண உதவியைக்
காரணம் காட்டி பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிடிகொடாது ஜெயலலிதா நடந்து கொண்டார். ஜெயலலிதா
சாதக சமிக்ஞை காட்டாததனால் விஜயகாந்தின் பக்கம் சாய்கிறது பாரதீய ஜனதா.
தமிழக சட்டசபைத்
தேர்தலைக் குறிவைத்து அரசியல் தலைவர்கள் காய்நகர்த்தி வரும் வேளையில் விஜயகாந்த்
மதில் மேல் பூனை போல் இருக்கிறார். இதுவரைகாலமும் விஜயகாத்தை கண்டும் காணாமல்
இருந்த பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் இன்று அவரது வீடு தேடிச் சென்றுள்ளனர்.
மக்கள்நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்கப் போவதாக வைகோ
கூறியதும் பாரதீய ஜனதாத் தலைவர்கள் விஜயகாந்தின் வீடுதேடிச் சென்றுள்ளனர்.
சாதகமான முடிவு
வரும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் விஜயகாந்த். நான்தான் முதலமைச்சர்.
எனது கட்சியின் தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும். எக்காரணம் கொண்டும் பாட்டாளி
மக்கள் கட்சியை சேர்க்கக் கூடாது. என நிபந்தனை விதித்தார். விஜயகாந்தின் நிபந்தனையால்
கலங்கிப் போன தலைவர்கள் வெறும் கையுடன் திரும்பினார்கள்.
விஜயகாந்த் நடிகராக
இருக்கும்போது பாட்டாளி மக்கள் கட்சி அவரது படங்களைத் திரையிட விடாது
தடுத்தது.நடிகர் விஜயகாந்தை எதிர்த்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ராமதாஸ்
அரசியல் கட்சித் தலைவர் விஜயகாந்தையும் தனது எதிரியாகவே பார்க்கிறார். அரசொயலில்
இருதுருவங்களாக இருக்கும் விஜயகாந்தையும் ராமதாஸையும் கடந்த
நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்ரினைத்தது போல தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் இணைக்கலாம்
என்ற எண்ணத்தில் காய் நகர்த்திய பாரதீய ஜனதாக் கட்சி தோல்வியடைந்தது.
Add caption |
பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் முதலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் பேரம் பேசினார்கள். தன்னிச்சையாக அன்புமணியை முதல்வர் வேட்பாளராகிய ராமதாஸின் நிபந்தனையால் பாரதீய ஜனதா ஆடிபோனது. அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர். என்ற ராமதாஸின் வேண்டுகோள் சாத்தியப்படாது என்பதை அவர்கள் உணர்ந்தனர். இதை எல்லாம் தெரிந்து கொண்ட விஜயகாந்த் கடும் கோபமானார். தனது கோபத்தை பாரதீய ஜனதாத் தலைவர்களிடம் காட்டினார். அவர்கள் தேடி வந்தபோது ஒருமணி நேரம் காக்கவைத்து சந்தித்தார். விஜயகாந்தும் அன்புமணியும் ஒரே இடத்தில் இருக்கமாட்டார்கள் என்பதை அரசியல் தலைவர்கள் இப்போதாவது உணர்ந்து கொண்டு சாதகமான வழியில் காயை நகர்த்த வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
விஜயகாந்த் அல்லது அன்புமணி இருவரில் ஒருவரே கூட்டணியில் சேர்க்க வேண்டிய தர்ம சங்கடமான நிலையில் பாரதீய ஜனதா உள்ளது.ஒரு கட்சியில் இரண்டு முதலமைச்சர் வேட்பாளர்கள் இருக்க முடியாது. வாக்கு வங்கி அதிகமாக உள்ள விஜயகாந்தையே பாரதீய ஜனதா தேர்வு செய்யும். அன்புமணியைக் கைவிடும். இதனால் அன்புமணியின் அரசியல் எதிர்காலம் சூனியமாகி விடும் ஆபத்து உள்ளது.
விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்து விட்டு வைகோ வீட்டிலே இருக்க பாரதீய ஜனதாத் தலைவர்கள் விஜயகாந்தின் வீடு தேடிச்சென்றதால் கலக்கமடைந்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் விழுந்தடித்து ஓடிப்போய் விஜயகாந்தைச் சந்தித்தனர். இன்முகத்துடன் அவர்களை வரவேற்ற விஜயகாந்த் முடிவுசொல்லாது அனுப்பி வைத்தார். இந்தக் களேபரத்துக்கிடையில் விஜயகாந்துக்கு கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். சிறிய கட்சிகள்தான் பெரிய கட்சிகளைத் தேடிப் போகவேண்டுமா பெரிய கட்சிகள் இறங்கி வரக் கூடாதா என்ற விஜயகாந்தின் கேள்விக்கு கருணாநிதி பதிலளித்துள்ளார்.
விஜயகாந்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஆகையினால்அவர்தனது பேரம் பேசும் சக்தியை அதிகரிப்பார். அதிக தொகுதிகளை எதிர் பார்த்து மெளனமாக இருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம்,பாரதீய ஜனதாக் கட்சி, மக்கள் நலக் கூட்டணி ஆகியன விஜயகாந்தின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாற்று வழியில் சிந்திக்கிறது. அவரது கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்களுக்கு வலை விரித்துள்ளது. முன்னதாக ஒன்பது சட்டசபை உறுப்பினர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் சாய்ந்து விட்டனர். சட்டசபையில் அவர்கள் தனிக் குழுவாக இயங்குகின்றனர்.கட்சியைவிட்டு வெளியேறுபவர்களைத் தடுக்க வேண்டிய நிலைக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டுள்ளார்.
காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. ஆட்சியில் பங்கு துணை முதவர் பதவி போன்ற கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துவதனால் திராவிட முன்னேற்றக் கழகம் தயங்குகிறது.சோனியா,ராகுல், ஆகியோருக்கு எதிராக வழகுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிதம்பரத்தின் மகனுடைய வீட்டிலும் அலுவலகத்திலும் சி.பி.ஐ சோதனை நடத்தியது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலரின் அலுவலகத்திலை.பி.ஐ சோதனை நடத்தியது. இவை அரசியல் பழிவாங்கல் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்தால் 2ஜி வழக்கு மேலும் இருக்கமாகும் என திராவிட முன்னேற்றக் கழகம் அச்சப்படுகிறது. ஆகையினால் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் இணையும் வாய்ப்பு மிக குறைவாக உள்ளது.
தமிழக அரசியல் தலைவர்கள் முதல்வர் கனவில்மிதக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை முதலமைச்சராக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. குவாரி முறைகேட்டை விசாரிக்கும் நீர்மையான் அதிகாரியான சகாயம் முதல்வரானால் ஊழல் தலை தலைதூகாது என்று பலரும் நினைக்கிறார்கள். கட்சி சாராத மக்கள் அனைவரும் சகாயத்தை விரும்புவார்கள். கட்சைசி நீரத்தில் முடிவெடுக்கும் வாக்காளர்கள் சகாயத்தைத் தேர்வு செய்வார்கள்.மக்கள் நலக் கூட்டணியில் சகாவம் போட்டியிட்டால் ஆம் ஆத்மி எழுச்சி ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
தமிழாக சட்டசபைத் தேர்தலில் கூட்டணி இல்லாது வெற்றி பெறலாம் என இறுமாப்புடன் இருந்த ஜெயலலிதாவை மழை வெள்ளம் அசைத்துள்ளது. இலவசங்களும் வெல்ல நிவாரணமும் தன்னைக் காப்பாற்றும் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற நினைப்பில் மண் விழுந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள் நலக் கூட்டணி,பாரதீய ஜனதாக் கட்சி,காங்கிரஸ்கட்சி,பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தேர்தலை எதிர் நோக்குவதற்கு தம்மைத் தயார்ப்படுத்திவிட்டன. வசமாய் போல விஜயகாந்த் முடிவெடுக்காது மதில் மீள் பூனை போல் பதுங்கி இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிரான வாக்குகள்தான் அடுத்த முதல்வரைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் என்பதை தமிழக அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால் முதல்வராகலாம்.
வர்மா
தமிழ்த்தந்தி
27/12/15