சம்பியனான இந்தியா |
இந்தியா - நியூசிலாந்து அணிகள்
இடையிலான 3-வது
மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று
பகல்-இரவு மோதலாக நடந்தது. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
நாணயச் சுழற்சியில் ஜெயித்த
நியூஸிலாந்து கப்டன் வில்லியம்சன், ‘இரவில் பனிப்பொழிவின் தாக்கத்தில் பந்து வீசுவது சிரமம்’ என்பதை கருத்தில் கொண்டு முதலில் பந்துவீசித் தேர்வு
செய்தார்.
இதன்படி ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் தொடக்க
ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். தவான் 7-வது ஓவரில் 14 ஓட்டங்களில் வெளியேறினார்.. அடுத்து கப்டன்
விராட் கோஹ்லி களம் புகுந்தார்.
ரோகித் -கோஹ்லி ஜோடியினர், துடுப்பாட்டத்துக்கு உகந்த வகையில் காணப்பட்ட ஆடுகளத்தை சரியாக
பயன்படுத்தி சரிவை தடுத்து நிறுத்தியதுடன் நேர்த்தியாக விளையாடி ஓட்டங்களை
திரட்டினர். 18.4 ஓவர்களில் இந்தியா 100 ஓட்டங்களை தொட்டது. இந்த கூட்டணியை உடைக்க நியூஸிலாந்து கப்டன் எடுத்த
முயற்சிக்கு அவ்வளவு எளிதில் பலன் கிடைக்கவில்லை. இருவரும் தவறுக்கு இடம்
கொடுக்காமல், ஏதுவான
பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு ஓட விட்டனர். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா தனது 15-வது சதத்தை நிறைவு செய்தார். 35.1 ஓவர்களில் இந்தியா 200 ஓட்டங்களை தாண்டியது.
32 ஆவது சதம் அடித்த கோஹ்லி தொடர் நாயகன். |
டிரென்ட் பவுல்டின் ஒரு ஓவரில்
இருவரும் சேர்ந்து 4 பவுண்டரிகளும், கிரான்ட்ஹோமின் ஓவரில் 3 பவுண்டரிகளும் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினர். இவர்கள் ஆடிய விதத்தை
பார்த்த போது இந்திய அணி 360 ரன்களை நெருங்கும் போலவே தோன்றியது.
அணியின் எண்ணிக்கை 259 ஓட்டங்களாக
உயர்ந்த போது ரோகித் சர்மா 147 ஓட்டங்களில் (138 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) அட்டம் இழந்தார்.. ரோகித்-கோஹ்லி ஜோடி
2-வது
விக்கெட்டுக்கு 230 ஓட்டங்கள் (211 பந்து) எடுத்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா (8) வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து விக்கெட் கீப்பர் டோனி நுழைந்தார்.
மறுமுனையில் கப்டனுக்குரிய
பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அட்டகாசப்படுத்திய கப்டன் விராட் கோஹ்லி தனது 32-வது சதத்தை பூர்த்தி செய்தார். அதிக சதங்கள்
அடித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கருக்கு (49 சதம்) அடுத்து கோஹ்லி இருக்கிறார்.
நடப்பு தொடரில் 2-வது முறையாக சதம் அடித்த கோஹ்லி 113 ஓட்டங்களில் (106 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். டோனி தனது
பங்குக்கு 25 ஓட்டங்களும்
(17 பந்து, 3 பவுண்டரி), கேதர் ஜாதவ் 18 ஓட்டங்களும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 337 ஓட்டங்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில்இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 85 ஓட்டங்கள் எடுத்தது. இருப்பினும் இந்த
மைதானத்தில் இது அதிகபட்ச ஸ்கோராக பதிவானது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு
எதிராக 303ஓட்டங் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
பின்னர் மெகா இலக்கை நோக்கி
நியூஸிலாந்து அணி தனது பதில் வேட்டையை தொடங்கியது. புவனேஷ்வர்குமார் வீசிய முதல்
ஓவரிலேயே காலின் முன்ரோ சிக்சரும், 3 பவுண்டரியும் விளாசி, சரவெடிக்கு அடித்தளம் போட்டார். முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான
புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சை இந்த முறை நியூஸிலாந்து வீரர்கள் அடித்து விளையாடினர்..
இன்னொரு தொடக்க வீரர் கப்தில் 10 ஓட்டங்களில் பும்ராவின் பவுலிங்கில் வீழ்ந்தார். இதன் பின்னர் சீரான
இடைவெளியில் அந்த அணிக்கு விக்கெட்டுகள் விழுந்தன. காலின்முன்ரோ (75 ), கப்டன் கனே வில்லியம்சன் (64 ), ராஸ் டெய்லர் (39 )
ஆகியோர் அணிக்கு வலுவூட்டினர்.
மிடில் வரிசையில் அந்த அணியின்
விக்கெட் கீப்பர் டாம் லாதம் தூண்போல் நிலைகொண்டு, இந்திய பவுலர்களுக்கு குடைச்சல் கொடுத்தார்.
நியூஸிலாந்தின் ஸ்கோரும் துரிதமாக நகர்ந்தது. வெற்றி யார் பக்கம்? என்பது கணிக்க முடியாத சூழல் நிலவியதால்
பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்த நிலையில் 48-வது ஓவரில் டாம் லாதம் (65 ரன்-அவுட் ஆனார். அதன் பிறகே இந்திய
வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 25 ஓட்டங்கள்
தேவைப்பட்டது. 49-வது ஓவரை வீசிய புவனேஷ்வர்குமார் 10 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஆறுதல் தந்தார். இதையடுத்து 6 பந்தில் 15 ஓட்டங்கள் தேவையாக இருந்தது.
உச்சக்கட்ட டென்ஷனுக்கு
மத்தியில் கடைசி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, கட்டுக்கோப்புடன் பந்து வீசினார். ஒரு
விக்கெட்டை வீழ்த்தியதுடன் 8 ஓட்டங்கள் மட்டுமே வழங்கினார். 50 ஓவர்களில் நியூஸிசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 331 ஓட்டங்கள் சேர்த்தது. இதன் மூலம்
இந்தியா 6 ஓட்ட வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
இந்திய பீல்டர்கள் சில நல்ல
ரன்-அவுட் வாய்ப்புகளை கோட்டை விட்டனர். அத்துடன் 16 வைடு உள்பட 20 ஓட்டங்களை எக்ஸ்டிரா வகையில் வாரி வழங்கினர். இவற்றை
மட்டும் கச்சிதமாக செய்திருந்தால் நியூசிலாந்து இந்த அளவுக்கு ‘
இந்த வெற்றியின் மூலம் இந்திய
அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் நியூஸிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி
பெற்றிருந்தன. ரோகித் சர்மா ஆட்டநாயகனாகவும், விராட் கோலி(2 சதத்துடன் 263 ஓட்டங்கள் ) தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
அடுத்து இந்தியா-நியூசிலாந்து
இடையே 3 போட்டிகள்
கொண்ட 20 ஓவர்
தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி டெல்லியில் நடக்கிறது.