Sunday, July 31, 2016

ஒருவழிப் பாதையான நல்லிணக்கம்


 போர் என்றால்போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று அறைகூவல்விடுத்து ஆயுதப்போராட்டத்தை உசுப்பேற்றினார் ஜே.ஆர். ஜெயவர்தன.சமாதானப் புறாவைப்பறக்கவிட்டு போர் மேகத்தைக் கலைக்க முயற்சி செய்தார் சந்திரிகா பண்டாரநாயக்க. சமாதானத்துக்கான போர் என்ற எதிர் மறையான வாசகத்துடன் போரை முடித்துவைத்தார் மஹிந்த ராஜபக்‌ஷ. நல்லிணக்கம் என்ற செய்தியுடன் ஆட்சிபீடமேறினார் மைத்திரி பால சிறிசேன.
சர்வ அதிகாரத்தைக் கையில்வைத்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்தன போரை  நடத்த முடியாது சமாதானத்தை ஏற்படுத்தாது பதவியை விட்டு வெளியேறினார். புலிகளையும் இந்திய அமைதி காக்கும் படையையும் மோதவிட்டுப் பிரச்சினையை மேலும் பெரிதாக்கினார். சந்திரிகா பறக்கவிட்ட சமாதானப்புறாக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.   ஒருதலைப்பட்சமான யுத்தத்தின் மூலம் போரை முடித்துவைத்த மஹிந்த ராகபக்‌ஷ தமிழ் சிங்களப்பிரச்சினையை மேலும் விரிவடையச்செய்தார். யுத்தம் முடிவுக்கு வந்ததே தவிர தமிழ் சிங்கள இனப்பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. நல்லிணக்க அரசாங்கம் இப்போது ஆட்சிபீடமேறி உள்ளது. கடந்த ஆட்சியின் போது நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவித்தபலர் இன்றைய ஆட்சியிலும் அதிகாரம் மிக்க அமைச்சர்களாக இருக்கின்றனர்.

நல்லிணக்கம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்  என்பதில் பலத்த வாதப்பிரதிவாதங்கள் நிலவுகின்றன. யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்து நல்லிணக்கம் ஆரம்பிக்க வேண்டும் என பெரும்பான்மையான சிங்கள மக்கள் நினைக்கின்றனர். யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதத்தைச் சிலர் இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். யாழ்ப்பாணத்தவர்களுக்கு நல்லிணக்க வகுப்பு நடத்த சிலர் ஆர்வமாக உள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே உள்ள பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டபோது இனவாதக் கண்ணோட்டத்துடன் யாரும் பார்க்கவில்லை.யாழ்ப்பாண பல்கலைக் கழகப் பிரச்சினைக்கு இனவாத சாயம் பூசப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களிடம் நம்பிக்கை ஏற்படும்படி நடந்து கொள்வதுதான் நல்லிணக்கத்தின் முதல்படி.நல்லிணக்கத்துக்கான பாதைகள் அனைத்தையும் மூடி அடைத்து விட்டு நல்லிணக்கத்துக்கு தமிழ் மக்கள் எதிரிகள் என்ற ரீதியில் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.  பிரிட்டிஷாரிடமிருந்து சிங்களத் தலைவர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழ்த் தலைவர் இங்கிலாந்துவரை சென்றது இன்றைய சிங்களவர்களுக்குத் தெரியாது. உண்மை தெரிந்தவர்களும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை.இலங்கையின் பூர்வீக குடிகள் சிங்களவர்கள் என்றுதான் சிங்கள மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது. அந்தப் போதனையில் வளரும் மாணவன் பிற்காலத்தில் அரசியல்வாதியாகையில் தமிழர்களைத் தூசாக நினைக்கிறார்,

பதவி ஆசைபிடித்த சிங்களம் மட்டும் சட்டமூலம் தமிழர்களை அந்நியப்படுத்தியது. பல்கலைக்கழகத் தரப்படுத்தல் தமிழ் இளைஞர்களின் உணர்ச்சியைத் தூண்டியது, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த ஜே.ஆர்.ஜெயவர்தனவின் காலத்தில் தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் ஒடுக்கப்பட்டன.  சமாதானப்  புறாவாக வலம் வந்த சந்திரிகாவின் முயற்சிகளை  ரணில் தலைமையிலான எதிர்க்கட்சி முடக்கியது. சந்திரிகா ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் இருந்த காலத்தில் நாட்டில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் ஆட்சியில்  உருப்படியாக எதனையும் செய்ய முடியாது பரிதாபமாகப் பதவியைப் பறிகொடுத்தார் ரணில்.

மஹிந்த ராஜபக்‌ஷவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக அரசியல் எதிரிகளான சந்திரிகாவும் ரணிலும்  ஓரணியில் இணைந்தனர். நல்லிணக்கம் என்ற வாசகத்துடன் புதிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியது. அவர்கள் நினைத்தது நடந்துவிட்டது ஆனால், தமிழ் மக்கள் எதிர்பார்த்த எதுவும் நடைபெறவில்லை. புதிய புதிய பெயருடன் தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கின்றன.. .காடுகள் அழிக்கப்படுகின்றன. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும்  வடமாகாண சபை உறுப்பினர்களும் தட்டிக் கேட்கும்போது உரிய பதில் கொடுக்கப்படுவதில்லை.

தமிழ் மக்களின் காணிகளில் புத்தர் சிலைகள்  நிறுவப்படுகின்றன. சிங்கள மக்கள் இல்லாத இடங்களிலும் புத்தர் சிலைகள் தோன்றுகின்றன. இராணுவ முகாம்கள் பொலிஸ் நிலையங்கள் ஆகியவற்றில் புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன. நல்லிணக்க அரசாங்கத்தால் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. தமிழக மீனவர்களால் வடபகுதியின் மீன் வளம் சுரண்டப்படுகிறது. வடபகுதி மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக முடியாத நிலை உள்ளது. ஆனால், வட பகுதியில் மீன் பிடிப்பதற்கு சிங்கள மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதனைத் தட்டிக் கேட்கும் தமிழ் மீனவர்களை பொலிஸாரும் புத்தபிக்குகளுக் மிரட்டுகின்றனர். அத்து மீறியவர்களைத் தட்டிக் கேட்டவர்கள் பொலிஸாரால் விசாரிக்கப்படுகின்றனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட தமக்கு நல்லிணக்க அரசாங்கத்தால் விமோசனம் கிடைக்கும் எனஎதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காணாமல் போனவர்களைக் கண்டு பிடிக்கும் ஆணைக்குழுத் தலைவரின் அறிக்கைகள் நம்பிக்கையளிப்பதாக இல்லை. யுத்த வெற்றியின் மூலம் ஆட்சியைப் பிடித்தவர்கள் அந்த வெற்ரி நிரந்தரமானது என்று போட்ட கணக்கு தப்பாகப் போய்விட்டது.  இந்த அரசங்கத்தை விழுத்துவதற்கான திட்டங்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்கள் மத்தியில் இருந்து நல்லிணக்கம் ஆரம்பமாக வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரி விரும்புகிறார். இனவாத அரசியல் பேசும் சிங்கள அரசியல்வாதிகள்  இதற்குத் தயாராக இல்லை. தமிழ் மக்களை அடக்கு ஒடுக்கிக் கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது


Saturday, July 23, 2016

கட்சிகளின் வெளியேற்றத்தால் நலிந்துபோன கூட்டணி

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றுக்கட்சி என்ற பெயருடன் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நலக் கூட்டணி படு தோல்வியடைந்தது. கட்சித் தலைவர்கள்  கட்டுப்பணத்தை இழந்து பரிதாபமாகத் தோல்வியடைந்தனர். தேர்தல் காலங்களில் ஏதோ ஒரு அலை அடித்து ஆளும் கட்சியை வீட்டுக்கு அனுப்புவதே வாடிக்கை. ஆனால், அண்மையில் நடைபெற்ற தமிழகத் தேர்தலில் எந்த விதமான அலையும் அடிக்காது ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். ஜெயலலிதாவை அசைக்கும் பலம் கருணாநிதிக்கு மட்டும் உள்ளதால்  அவருடன் விஜயகாந்த் சேரக்கூடாது என்பதில் ஜெயலலிதா கவனமாக இருந்தார். ஜெயலலிதா நினைத்தது போலவே கருணாநிதியுடன் விஜயகாந்த்  கூட்டணி சேரவில்லை.


திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்தை இணைக்கும் இரகசியத்திட்டம்  வெற்றி பெற்றுவிட்டதை அறிந்த கருணாநிதி பழம் நழுவி பாலில் விழும் என்று பூடகமாகத் தெரிவித்தார். விஜகாந்தின் வருகையை கருணாநிதி ஆவலுடன் எதிர் பார்த்திருந்த வேளையில் மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். அடுத்த முதலமைச்சர் என்ற கனவுட தேர்தலில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்டுப்பணத்தைப் பறிகொடுத்தார்.  ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதல்வராகலாம் என்ற  நம்பிக்கையில் இருந்த விஜயகாந்த் அதிர்ச்சியில்  இருந்து இன்னமும் விடுபடவில்லை.
மக்கள் நலக்கூட்டணியின் படு தோல்வியில் இருந்து அக்கட்சித் தலைவர்கள் மீளமுன்னர் எதிர்பார்த்த தோல்வி என வைகோ கூறியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தமிழக சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வைகோ விலகியதில் இருந்து தோல்வியை அவர் உணர்ந்துள்ளார் என அறிய முடிகிறது. கடைசிவரை அதனை வெளிக்காட்டாது மூடி மறைத்துள்ளார். தேர்தல் தோல்வியின் பின்னர் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் கூடிப்பேசி தோல்விபற்றி விவாதிக்கவில்லை. அரச இயந்திரமும் பணநாயகமும் வென்றுவிட்டது என அறிக்கைவிட்டனர்.

மக்கள் நலக் கூட்டணியின் தோல்வியால் வைகோ கவலைப்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்வி அவரை உற்சாகப்படுத்தி உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த்  சேர்ந்திருந்தால் கருணாநிதி முதல்வராகி இருப்பார். விஜயகாந்தின் கட்சி 20 ஆசனங்களைப் பெற்றிருக்கும் என ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். தனது இராஜதந்திரத்தால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்தது என வைகோ கொக்கரிக்கிறார். தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் மட்டும் தான் வெற்றி பெற்றன மற்றைய கட்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன என்பது வைகோவுக்குத் தெரிந்த உண்மைதான். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
 சினிமாவில் இருந்து அரசியலில்   கால் ஊன்றிமெது மெதுவாக   உயரத்துக்குச் சென்று கொண்டிருந்த  விஜயகாந்தை தேர்தல் முடிவு குப்புற கவிழ்த்து விழுத்தியது. வைகோவுடன் சேர வேண்டாம் என  விஜயகாந்தின் கட்சியினரே அவருக்கு ஆலோசனை கூறினர். மனைவி பிரேமலதாவின் பேச்சைக் கேட்டதனால் வெளியில் தலை காட்ட முடியாத நிலையில் இருக்கிறார் விஜயகாந்த். தோல்வியைக் கண்டு மக்கள் நலக்கூட்டணி அஞ்சாது என  வைகோ அறிக்கை விடுத்தார்.  ஏனைய  தலைவர்கள் அனைவரும் பேசாமடந்தையாக இருந்தனர். மிகுந்த இழுபறியின் மத்தியில்  மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்த விஜயகாந்த் முதல் ஆளாக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
Add caption
 விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் ஓடிப்போவதைத் தடுக்க வேண்டிய கடமை விஜயகாந்துக்கு உள்ளது.  அதன் காரணமாக மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விஜயகாந்த் வெளியேறிவிட்டார்.   இதனால் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள்   ஆறுதலடைவார்கள் என அவர் நினைக்கிறார்.விஜகாந்தைத் தொடர்ந்து வாசனும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். இவர்கள் இருவருக்கும் போக்கிடம் எதுவும் இல்லை. அடுத்து என்ன செய்வது என்ற திட்டமும் அவர்களிடம் இல்லை. தமிழர் முன்னேற்றப்படைத் தலைவி வீரலட்சுமியும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்.

மக்கள் நலக்  கூட்டணியின் பலம் என்று நினைத்த விஜயகாந்தும் வேறு வழி இல்லாமல் கூட்டணியில் சேர்ந்த வாசனும் வெளியேறியதால் கூட்டணிக்கு எதுவிதபாதிப்பும் இல்லை என்று வழக்கம் போல வைகோ அறிவித்துள்ளார். மக்கள் நலக் கூட்டணிக்கு அச்சாரம் போட்டவர்களில் ஒருவரான திருமாவளவன்  மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையப்போவதாக செய்திகள்  வெளிவந்துள்ளன. அந்தச் செய்திகளை திருமாவளவன் ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஏதோஒரு உண்மை இருப்பதால் வதந்தி முதலில் வந்துள்ளது.

மாகிஸ்ட் , கொம்யூனிஸ் கட்சிகளும் வைகோவும் தனிமைப்பட்டுள்ளனர். ஆறு பெரிய கட்சிகளுடன் இருந்த மக்கள் நலக் கூட்டணி  நான்கு கட்சிகளாகச் சுருங்கி உள்ளது. அணி மாறுவதற்கான தருணத்தை எதிர்பர்த்து திருமாவளவன் காத்திருக்கிறார். மூன்று கட்சிகளின் கூட்டணியாக மக்கள் நலக் கூட்டணி மாறிவிடும் நிலை உள்ளது. இரண்டு பெரிய தேர்தல்களில் தோல்வியடைந்த கருணாநிதி உள்ளாட்சித்  தேர்தலில்  வெற்றி பெறுவதற்கான சூத்திரத்தைத் தேடுகிறார். ஆகையால் புதிய கூட்டணிக்கான சாத்தியம் உள்ளது.
வர்மா
Sunday, July 17, 2016

அடக்க வந்தவரின் உயிரைப்பறித்த காளை


ஸ்பெய்ன் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளில் காளை அடக்கும் போட்டி பிரபலமானது. மிகப் பெரியதொரு மைதானத்தில் பண்டைய உடை அணிந்த ஒருவர் சீறிவரும் காளைக்கு முன்னால் சிவப்புத்துணியைக் காட்டி அம்புகளால் குத்தி காளையைக்கொல்வார்.  ஆயிரக்கணக்கான   ரசிகர்கள் மைதானத்திச் சுற்றி இருந்து ஆரவாரம் செய்வார்கள். கடந்த வாரம்  நடைபெற்ற காளை அடக்கும் போட்டியில் விக்ரர் பாரியோ என்ற 29 வயதான இளம் வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். 21 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற மிக மோசமான உயிர்ப்பலி இதுவாகும்.
ஸ்பெய்ன் நாட்டின் தெரிதல் எனும் நகரில் நடைபெற்ற காளை அடக்கும் போட்டியைக் காண  வழக்கம் போல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குழுமி இருந்தனர். பாரியோவின் வீரத்தைக் காண்பதற்காக அவரது காதல் மனைவி ரிகுயில் செனாவும் பார்வையாளர் பகுதியில் இருந்தார்.சீறிவந்த காளையில் முதுகில் பாரியோ சில அம்புகளைச் செலுத்தினார். ரசிகர்கள் ஆரவாரம் செய்து பாரியோவை உற்சாகப்படுத்தினர்.


செகோவியா நகரில் பிறந்தவர் பாரியோ. மாட்ரிட் அருகே இந்த நகரம் உள்ளது. கோல்ப் கிளப் ஒன்றில் இவர் பணியாற்றி வந்தார். நீண்ட காலமாகவே காளை பிடி வீரராக வேண்டும் என்ற ஆர்வத்தில் அதற்காக பயிற்சி பெற்று வீரராக மாறினார்.  2012ம் ஆண்டு முதல் இவர் முழுமையான காளைச் சண்டை வீரராக மாறி காளைகளை அடக்கி வந்தார் ஸ்பெய்ன் நாட்டின் தெரியல் என்ற நகரில்தான் இந்த காளைச் சண்டைப் போட்டி நடந்தது. வருடா வருடம் நடக்கும் பெரியா டெல் ஏஞ்செல் என்ற திருவிழாவின் ஒரு பகுதியாக காளைச் சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாரியோவின் வெற்றியை எதிர்பார்த்திருந்த வேளையில் திடீரெனத்திரும்பிய காளை பாரியோவின் நெஞ்சைக்குத்திக்கிழித்து அவரைத் தூக்கி எறிந்தது. பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறந்தனர். விசைந்து சென்ற பாதுகாவலர்கள் பாரியோவை  மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பினர். கணவனின் வீரத்தைக் காணவந்த செனா  அவரின் மரன ஓலத்தைக் கேட்டுத் துடித்தார். கணவனின் வெற்றியைக் கண்டு ரசிக்க விரும்பிய செனா அவரின் மரணத்தைக் கண்டு கலங்கினார்.


காளை அடக்கும் போட்டியில் ஏற்கெனவே  பல வீரர்கள் மடிந்தனர். காளை கட்டுமீறி பார்வையாளர் பகுதிக்குள் புகுந்ததனால் பார்வையாலர்கள் பலர் இறந்தனர்.  1984 ஆம் ஆண்டு  நடந்த போட்டிகளின்போது 5 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பிரபலமான காளை பிடி வீரர் பிரான்சிஸ்கோ ரிவேராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1985 ஆம் ஆண்டு ஜோஸ் ஜியோ என்ற வீரர் மரணமானார். பிரபலமான வீரரான மனோலா மொண்டிலுயு, ரமொன் சொரொ ஆகிய  இருவரும் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கும் ஸ்பெயினில் நடைபெறும்  காளை அடக்கும் போட்டிக்குமிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஜல்லிக் கட்டின் போது காளைக்கு எதுவித துன்பமும் நேர்வதில்லை. ஆனால், ஸ்பெயினில்  நடைபெறும் காளை அடக்கும் போட்டியின் போது அம்புகளால் குத்தப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக காளை அடக்கப்படுகிறது. இந்தியாவில் ஜல்லிக்கட்டுக்குத்தடை விதிக்கபட்டுள்ளது.  இந்தியாவைக் குறிவைக்கும் பீட்டா  போன்ற அமைப்புகளின் பட்டியலில் ஸ்பெய்ன் என்றொரு  நாடு  இல்லை.
வர்மாThursday, July 14, 2016

சரித்திரமாகிய சம்பவம்

மனம் நிறைந்த கனவுகளுடன் ரயில் நிலையத்தில் காத்திருந்த சுவாதி என்ற இளம்பெண்ணை ஒரு வாலிபன் வெடிப்படுகொலை செய்தான். கொடூரமாக நடைபெற்ற இச்சம்பவம், ஒருசிலமணி நேரத்தினுள் சரித்திர முக்கியத்துவம் மிக்கதாக மாறிவிட்டது.  ஒர் இளம் பெண்ணை வாலிபன் வெட்டிச்சாய்த்தது பரபரப்பான செய்தியாக மாறியது. கொலைக்கான காரணம் எது எனத் தெரிவதற்கு முன்பே காதல் பிரச்சினையால் நடைபெற்றகொலை என ஒட்டுமொத்தமாக முடிவு  செய்யப்பட்டது. கடந்த மாதம் 24 ஆம் திகதி பொழுது புலரும்  வேளையில் ஓர் இளம் பெண்ணின் வாழ்வு அரிவாளினால் முடிக்கப்பட்டது.

ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளம் பெண் சுவாதி என அடையாளம் காணப்பட்டாள். அவளைக்     கொலை செய்த இளைஞர் யாரெனத் தெரியாது  பொலிஸார் தடுமாறினர். கொலைகாரனைப் பிடிப்பதற்காக சிறப்புப் பிரிவுகளை பொலிஸார் அமைத்தனர். ஊடகங்கள் பரபரப்பான செய்திகளுக்காக உள்ளதையும் இல்லாததையும் இட்டுக்கட்டி செய்திகளைப் புனைந்தன.  இளம் பெண்ணின் வாழ்க்கை  கொடூரமாகப் பறிக்கப்பட்டது. அவளது பெற்றோரின் கனவு சிதைக்கப்பட்டது.  இவற்றை எல்லாம் கருத்தில் எடுக்காது.  தலித் பெண் கொல்லப்படும் போது சினந் தெழுபவர்கள் எங்கே? பிராமணப் பெண்ணை முஸ்லிம் கொலை செய்துவிட்டான் என்று சாதி ரீதியகவும் மத ரீதியாகவும் பிரசாரம் செய்யப்பட்டது. சாதிகள் இல்லையடி பாப்பா என்பது பாடப்புத்தகத்தில் மட்டும் உள்ளது. மத சார்பற்ற நாடு  என்பது தேர்தல் காலங்களில் மட்டும் உரக்கச் சொல்லும் கோஷம்.


சுவாதியைக் கொலை செய்தவன் அவளது கைத் தொலை பேசியையும் அபகரித்துச்சென்றுவிட்டான். அதன்  காரணமாக சுவாதி கடைசியாக யாருடன் கதைத்தாள் என்ற விபரம் தெரியாது பொலிஸார் குழம்பினர் எதிர் பாராத  நேரத்தில் நடைபெற்ற கொலையால் அங்கு நின்றவர்கள் அதிர்ச்சியில் இருந்து விடுபடமுன்னர் கொலைகாரன் தப்பி ஓடிவிட்டான். சிலர் அவனைத் துரத்தினர். என்றாலும் அவனைப்பிடிக்கமுடியவில்லை. ரயில் நிலையத்தில் பாது காவலர் யாரும் இருக்கவில்லை. ரகசிய கண்காணிப்பு கமரா எதுவும் பூட்டப்படவில்லை. ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள வீட்டிலும் வீதியிலும் இருந்த  சிசிரிவி கமரா மூலம் முதுகிலே பாக்கை சுமந்து கொண்டு கட்டம் போட்ட சட்டையுடன் ஒரு உருவம் வெளியேறியது தெரிய வந்தது. அந்த உருவம் தான் கொலைகாரன் என கொலையை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். ஆனால் அவனை அடையாளம் காணமுடியவில்லை.

வீட்டையும் நிறுவனத்தையும் பாதுகாப்பதற்கு சிசிரிவி கமராவை பொருத்துங்கள் என பலமாக விளம்பரம் செய்யப்படுகிறது. சுவாதியை கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றவனை அந்த சிசிரிவி கமராவால் சரியாக இனம் காண முடியவில்லை.  பொலிஸுக்கு நெருக்குதல் அதிகரித்தது. ஊடகங்கள் தமக்குத்தெரிந்த கதைகளை ஜோடித்தன.    கொல்லப்பட்ட பெண்ணை ஒரு இளைஞன் அடித்ததை சிலநாட்களுக்கு முன்னர்  தான் பார்த்ததாக ஒருவர் வாக்கு மூலம் கொடுத்தார். அவன் அடிக்கும் போது எதிர்த்து ஒரு வார்த்தையும் அவள்  பேசவில்லை என்றும்  அவர் தெரிவித்தார். காதல் பிரச்சினைதான் கொலையில் முடிந்ததாக சிலர் முடிவு செய்தனர்.

ரயில் நிலையத்தில் சுவாதியை ஒருவன் அடித்ததை பலர் பார்த்திருப்பார்கள். அன்று யாராவது ஒருவர் தட்டிக் கேட்டிருந்தால் சிலவேளை இன்று சுவாதி உயிரோடு இருந்திருப்பாள்.  தன்னை யாரோ பின்தொடர்வதாக தனது நண்பர்களிடம் சுவாதி கூறி இருக்கிறாள். அவனைத் தட்டிக்கேட்க முற்பட்ட நண்பர்களை சுவாதி தடுத்து நிறுத்தினாள். கோயில் பூசகரும் இதனை உறுதிப்படுத்திஉள்ளார்.தன்னைப்  பின்தொடர்பவனை சமாளிக்கலாம் என்ற அசட்டுத் துணிச்சலே சுவாதியின் உயிருக்கு எமனானது. சுவாதியைப் பின் தொடர்ந்தவனை தட்டிக் கேட்டிருந்தால் அவன் பயத்தில் விலகி இருப்பான். அவனுடைய வன்மம் கொலைவரை சென்றிருந்தாலும்  கொலைகாரன் யாரென உடனடியாக அடையாளம் கண்டிருக்கலாம்.  சுவாதியின் கொலை இளம் பெண்களுக்கு  ஒரு பாடமாக வேண்டும். முன்பின் தெரியாத ஒருவர் தொல்லை கொடுத்தால் துணிச்சலுடன் தட்டிக் கேட்க வேண்டும். அல்லது உறவினர் நண்பர்களிடம் கூறி எச்சரிக்கைப்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட வேளையில் பொலிஸில் புகார் செய்யத் தயங்கக்கூடாது. சுவாதிக்கு நேர்ந்த   முடிவு இன்னொரு பெண்ணுக்கு வரக்கூடாது.

சுவாதியைக் கொலை செய்த சந்தேகத்தில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.   சுவாதியைக் கொலை செய்ததை  ராம்குமார் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் அறிவித்தனர். சுவாதியின் கொலை  பற்றிய மர்ம முடிச்சு அவிழ்ந்துவிட்டது என பொலிஸார் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். அவர்களுடைய நெம்மதி நெடுநேரம் நீடிக்கவில்லை. ராம்குமார் கைது செய்யப்பட்டபின் பொலிஸாருக்கு நெருக்கடி  ஆரம்பித்தது. 

 சென்னையில் ராம்குமார் தங்கி இருந்த மேன்சனில் உள்ள ஒருவர் கொடுத்த தகவலின் மூலம் ஒரு வாரமாக ராம்குமாரைப் பின்தொடர்ந்த பொலிஸார் நள்ளிரவில் அவரைக் கைது செய்தனர். பொலிஸாரைக் கண்டதும் தப்பி ஓடிய ராம்குமார் தந்து கழுத்தை பிளேட்டால் அறுத்ததாக பொலிஸ் அறிக்கை கூறுகிறது. ராம்குமாரை பொலிஸ் கைது செய்த முறை தவறானது என்ற குரல் பலமாக ஒலித்தபோது அவரது குடும்பத்தினரும் ராம்குமார் குற்றவாளி இல்லை என்று கூறத்தொடங்கிவிட்டனர்.

ராம்குமார் குற்றவாளி என்பதற்கான ஆதரங்களை பொலிஸார் மிக வேகமாகச் சேகரிக்கும் அதேவேளை ராம்குமார் கொலைசெய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை சிலர் முன்வைக்கின்றனர். நீதிமன்றத்தில் கேட்கவேண்டிய கேள்விகளை சமூகவலைத் தளங்களிலும் இணைய தளங்களிலும் பதியப்பட்டுள்ளன.  சுவாதி கொலையில் முக்கியபுள்ளி இருக்கிறார். அவரைக் காப்பாற்றுவதற்காக அவசர அவசரமாக ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என சிலர் குரல் கொடுக்கின்றனர்.

ராம்குமார் தனது கழுத்தை அறுத்த படம் கசியவிடப்பட்டது.  சந்தேக  நபரை அடையாள அணிவகுப்பில்  நிறுத்துவதற்கு முன்னர் அவரின் படத்தை ஊடகங்களுக்குக் கொடுத்தது மிகப்பெரிய தவறு. ராம்குமாரின்  தாயையும் அக்காவையும் துரத்தித் துரத்திப் படமெடுத்து ஊடகங்களில் பகிரங்கப்படுத்தினர். இது ஊடக தர்மம் அல்ல.  இது ஒருவகையான ஊடக வன்செயல். ஊடகங்களுக்கு முகத்தைக் காட்ட மறுத்த ராம்குமாரின் சகோதரியும் தகப்பனும் பின்னர் துணிவுடன் ஊடகங்களுக்கு முன்னால் தோன்றி ராம்குமார் குற்றவாளி இல்லை என்று கூறினர. ராம்குமார் கைது செய்யப்பட்ட்டபோது பயன்திருந்தவர்களுக்கு யாரோ பின்னணியில் இருந்து துணிச்சலைக் கொடுத்துள்ளனர்.

ராம்குமாருக்கு பிணை வழங்கக்கோறி  வழக்கறிஞர்  ஒருவர் மனுத்தாக்கல் செய்தார். ராம்குமாரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் அனுமதி பெறாது தன்னிச்சையாக களம் இறங்கிய வழக்கறிஞர் ஒரு அரசியல் கட்சியில் பிரதிநிதி என்ற உண்மை வெளியானதால் அவர் பின்வாங்கிவிட்டர். ராம்குமாரின் சார்பாக அவரது ஊரைச் சேர்ந்த  வழக்கறிஞர் ஆஜரானார். உண்மை கண்டறியும் குழுவும் ராஜ்குமாருக்காக களம் இறங்கி உள்ளது. ராஜ்குமார் கொலை செய்யவில்லைஎன இவர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.ராஜ்குமார் வைத் திறந்தால்  பல உண்மைகள் வெளிவரும் என அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். சுவாதியின் உறவினர்களும் நண்பர்களும் அவளைப்பற்றி மிக உயர்வாக கூறியுள்ளனர்.

சுவாதி கொலை செய்யப்பட்ட அன்று தமிழகத்தில் 18    பேர்  கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களின் பார்வை சுவாதியின் மீது மட்டும் விழுந்துள்ளது.சுவாதிக்கு எதுவித களங்கமும் இல்லாது நீதி கிடைக்க வேண்டும்.

வர்மா 

Friday, July 8, 2016

புனிதமான பணியில் கறுப்பு ஆசிரியர்கள்

\மாணவனின் உயர்விலே  பெற்றோரைவிட அதிக அக்கறை கட்டுபவர்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தமது பெற்றோரைவிட அதிகளவு   நேரத்தை ஆசிரியர்களுடன் பகிந்து கொள்கிறார்கள். மாதா,பிதா,குரு, தெய்வம் என்பார்கள்.   குருவுக்குப் பின்னர் தான் தெய்வத்தை வணங்க வேண்டும் என வரையறை செய்துள்ளனர். குரு சிஷ்ய வழமை இருந்தபோது குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையிலான உறவு மிக இறுக்கமாக இருந்தது. கால ஓட்டத்தின்  மாற்றத்தால் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையிலான தொடர்புகள் விரிவடைந்து விட்டன.

பாடசாலைக்கு அப்பால் பொது இடங்களிலும் ஆசிரியருக்கு மரியாதையை கொடுத்த காலம் முன்னர் இருந்தது என்று சொல்ல வேண்டிய காலத்தில் வாழ்கிறோம். இன்றைய சில மாணவர்கள் பாடசாலையில் ஆசிரியருக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதில்லை. ஒருசில ஆசிரியர்கள் புனிதமான ஆசிரியத் தொழிலுக்கு இழுக்கை ஏற்படுத்துகின்றனர்.  சிறுமியை  சீரழித்த முதியவர்.  மூதாட்டியை காமப்பசிக்கு இரையாக்கிய  இளைஞன்.  போன்ற செய்திகள் சில வருடங்களுக்கு முன்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியாகின. ஆனால்,இன்று பாலியல் வல்லுறவு பற்றிய செய்தி வராத நாளே இல்லை. பரபரப்புக்காக சில  பத்திரிகைகள் அதனை மிகைப்படுத்தி செய்தியாக்குகின்றன.

மாணவிகளுக்கு நல்ல வழி கட்ட வேண்டிய ஆசிரியர்கள் சிலர்  தமது பாலியல் வீரத்தை மாணவிகளிடம் கட்டியதால் தமிழ் சமூகமே தலை குனிந்து நிற்கிறது. அவற்றை முடி மறைக்க சில  ஆசிரியைகள் துணை போனது பெண் இனத்துக்கே அவமானம்.   பாலியல் குற்றம் செய்தவர்களையும் அவர்களுக்கு உடந்தையானவர்களையும் கைது செய்வதற்கு போராட்டம் நடத்த வேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது.  குற்றம் செய்வதைப் பற்றி சிந்திக்க பயந்தவர்கள் இன்று சர்வ சாதாரணமாக  குற்றத்தை செய்துவிட்டு அதனை எப்படி மறைக்கலாம் என திட்டமிடுகின்றனர்.

மனம், அவமானம் ஆகியவற்றின் காரணமாக ஒருசில பாலியல் குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. அல்லது மன்னிக்கப்டுகின்றன.  இப்படியான சந்தர்ப்பங்கள் தான்  இன்னொரு பாலியல் குற்றத்துக்கு  தூபமிடுகின்றன.  பாலியலால் பதிக்கப்பட்ட பெண்கள் அவமானத்தால் கூனிக்  குறுகி நடக்கையில் பாலியல் குற்றவாளி தலை நிமிர்ந்து நடக்கிறான். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட, பாலியல் தொந்தரவுக்கு  ஆளான பெண்களை ஏளனமாகவும் இளக்காரமகவும்  நோக்கும் நிலை மாற்றமடைய வேண்டும்.

உயர்ந்த நோக்குடன் ஆசிரியத் தொழிலை ஏற்ற ஆசிரியர்கள் தம்மை நம்பி வந்த மாணவிகளை போகப்பொருளாக நினைத்து விட்டார்கள். பிறர்  மனை நோக்குதல் பற்றி இவர்கள் படித்திருப்பார்கள். அதனை நடை முறையில் கடைப்பிடித்திருந்தால் இப்படிப்பட்ட இழி நிலையை அவர்கள்  நினைத்திருக்க மாட்டார்கள். சட்டம் தனது கடமையை சரிவர செய்யத் தொடங்கிவிட்டது. இவர்களைப் போன்ற ஆசிரியர் என்ற போர்வையைப் போர்த்திய காமப்பசி கொண்ட மிருகங்கள் இருந்தால் அவர்களை வெளிச்சத்துக்குக்  கொண்டு வரவேண்டும்.

ஒருசில ஊடகங்கள் பத்திரிக்கை தர்மத்தை மீறி அதிகளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. பாதிக்கப்பட்டது தமிழ் மாணவி என்ற  நினைப்பு இல்லாமல் பாலியல் குற்றத்துக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. புங்குடுதீவு   மாணவியின் கொலை நடைபெற்று ஒரு வருடம் கடந்து விட்டது. அதனை மிகைப்படுத்தி ஒருவருட சம்பவத்தை முழுப்பக்கத்தில் படங்களுடன் பிரசுரித்து அந்த மாணவியை மீண்டும் ஒருமுறை சாகடித்தனர். பாலியல் வல்லுறவு ஒருநாள் வேதனை. பத்திரிகைச் செய்திகள் தினம் தினம் நரக வேதனை என்பதை சில ஊடகங்கள் நினைப்பதில்லை.

சிறந்த முறையில் பணியாற்றிய நல்லாசிரியர்களுக்கு ஜனாதிபதி வருடாந்தம் விருது வழங்கி கெளரவிக்கிறார்.ஜனாதிபதியிடம் இருந்து நல்லாசிரியர் விருதைப் பெறுவதற்கு பல ஆசிரியர்கள் விரும்புகின்றனர். நல்லாசிரியர்களின் மத்தியிலே இப்படிப்பட்ட பாலியல் வக்கிரம் உடைய ஆசிரியர்களும் இருப்பது வெட்கக்கேடானது. யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதியில்  உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாலியல் சேட்டை செய்வதற்கு எப்படித் துணிவு வந்தது. நகரத்தை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் இடங்களில் நடைபெறும் அத்து மீறல்கள் நகரத்தின் கண்களுக்குத் தெரிவதில்லை. நகரத்தில் நடைபெறும் சிறு சம்பவமும் பெரிதாகப் பேசப்படும் நிலை உள்ளது. யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி  பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்,வானொலிகள்,இணைய தளங்கள் இயங்குகின்றன. அவற்றின் புலனாய்வுக் கண்களுக்கு இந்த அநியாயம் எப்படித் தெரியாமல் போனது.

 பாலியல் குற்றம் புரிந்த ஆசிரியரை காப்பாற்ற முயற்சி செய்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பாலியல் குற்றத்தை மூடி மறைக்க முயற்சித்தவர்களின் நெஞ்சழுத்தம் எத்தகையது என்பதை நினைக்கையில் வியப்பாக உள்ளது. பாடசாலை மாணவன் சிறு தவறு செய்தால், குற்றம் செய்தால் அவனுக்கு அறிவுரை கூறி திருத்த வேண்டியது. ஆசிரியரின் கடமை. முதல் முறை இப்படியான குற்றத்தை அல்லது தவறை செய்துவிட்டாய் இனி இப்படிச்செய்யாதே. திருந்திவிடு என ஆசிரியர்கள் மாணவனை நல் வழிப்படுத்த வேண்டும்.தப்பான வழியில் செல்பவனுக்கு சரியான பாதையைக்காட்டுவதே ஆசிரியரின் பணி. ஆசிரியனே தவறான பாதையில் சென்றால் அந்த மானவனுக்கு நல்வழி காட்டுவது யார்? 

சில பாடசாலைகள் வியாபார நிலையமாக மாறி விட்டன. புதிய மாணவர்  சேர்க்கையில் அன்பளிப்பு, புதிய கட்டடம் கட்ட ஒப்பந்த செய்யும்போது தரகுப்பணம் கைமாறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலதிகாரிகளுக்கு இவை எல்லாம்தெரியும் ஆனால், சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். ஒரு பாடசாலையில் மோசடி செய்த அதிபரைப்பற்றி ஆதாரத்துடன் மேலிடத்துக்குத் தெரிவித்தால் அவரை வேறு இடத்துக்கு மாற்றி விடுகிறார்கள். அந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்படுவதில்லை. மோசடி செய்த அதிபர் விசாரிக்கப்படுவதில்லை. 

தேசியப் பாடசாலை ஒன்றின் அதிபர் ஓய்வுபெற்று ஒருவருடம் கடந்து விட்டது. பிரதி அதிபர்தான் பாடசாலையை வழி நடத்துகிறார். பதில் அதிபர் ஏதோ ஒரு பரீட்சைக்குத் தோற்றியுள்ளாராம். அவரை அப் பாடசாலையின் அதிபராக்குவதற்காக இன்னொருவருக்கு அதிபர் நியமனம் வழங்காது இழுத்தடிக்கப்படுகிறது. இது போன்ற பிரச்சினைகளைத்  தீர்க்க முடியாத  நிலையில் கல்விச் சமூகம் இருக்கிறது.புனிதமான ஆசிரியத்தொழில் புரிபவரின் பின்னணி சரியாக ஆராயப்பட வேண்டும். நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள் வக்கிர புத்தி இல்லாதவர்களாக இருக்க வேண்டும்,.இளம் பிஞ்சுகளைப் பொசுக்குபவர்கள் ஆசிரியராக இருக்கத் தகுதி அற்றவர்கள். அகப்படாமல் அசமடக்காக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுபவர்களை சமுதாயத்தின் முன்னால் நிறுத்தி பகிரங்கப் படுத்தினால் இளம் சமுதாயம் காப்பாற்றப்படும்.  
வர்மா