விளையாட்டை பூரணமாக அனுபவித்து அதில் வெற்றியடைந்தவர்களில்
”வேதா” என அன்புடன் அழைக்கப்படுபவர் D.M. வேதாபரணம். உதைபந்தாட்டம்,கிறிக்கெற் ஆகிய
இரண்டும் அவருடைய இரண்டு கண்கள் போன்றவை. சமகாலத்தில்
உதைபந்தாட்டம்,கிறிக்கெற் ஆகிய இரண்டு விளையாட்டுக்களிலும் தடம் பதித்து சாதனை செய்தவர்.
கரப்பந்தாட்டமும் இவரின் கரங்களுக்குக் கட்டுப்பட்டது. டானியல் முருகேசு, நகுலாம்புசம் தம்பதியின் மூத்த புதல்வனாக கரவெட்டியில்
பிறந்தார்.
வேதாபரணத்தைப்
போன்றே அவரது சகோதரர்களும் தடகளம்,உதைபந்தாட்டம்,கிறிக்கெற்,கரப்பந்தாட்டம் ஆகியவற்றில்
சாதித்தவர்கள். பாடசாலை சார்பாகவும், ஊர் கழக அணி சார்பாகவும் விளையாட்டுகளில் பங்கெடுத்து
தமது அணியை வெற்றி பெறச்செய்தாவர்கள்
கரவெட்டி
நாவலர் மடம் அரசினர் பாடசாலை,வதிரி பெதடிஸ்த மிஷன், ஹாட்லிக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். வதிரி பொம்பேர்ஸ்
கழகம், ஹாட்லிக்கல்லூரி ஆகியவற்ரின் பல வெற்றிகளுக்கு இவரின் விளையாட்டு உறுதுணை புரிந்தது.
வேதாபரணத்தின் விளையாட்டு
ஆர்வத்துக்கு ஹாட்லிக் கல்லூரி உத்வேகம் கொடுத்தது. அவருக்குள்
இருந்த திறமை அவரை உச்சத்துக்கு அழைத்துச் சென்றது. வடமராட்சியில் உதைபந்தாட்டம் கோலோச்சிய வேளையில் ஹாட்லிக் கல்லூரி மட்டும் கிரிக்கெற்றுக்கும்
களம் கொடுத்தது ஹாட்கிக் கல்லூரியில் தென்னம் மட்டையில் கிறிக்கெற் விளையாடிய வேதாபரணத்தை விக்ரர் துரைசாமி
ஆசிரியரும் தனது குரு என அவர் மதிக்கும் டி.ஆர்.அருமைநாயகமும் வியந்து மூன்றாம் பிரிவு
கிரிக்கெர் அணியில் விளையாட சிபார்சு செய்தார்கள். வேதாபரணத்தின் திறமையால் அவர் இரண்டாம் பிரிவு அணியில் விளையாடினார்.
ஹாட்லிக் கல்லூரியின் முதல் பிரிவு உதைபந்தாட்ட அணியின்
தலைவராக வேதாபரணம் செயற்பட்ட வேளையில் அக்கல்லூரியின்
இரண்டாம் பிரிவு உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பை ஹாட்லிக் கல்லூரியின்,
பயிற்சியாளரும் அதிபரும் அவருக்கு வழங்கினார்கள். இது அவரது திறமைக்குக் கொடுத்த சான்றாகும். அன்றைய அதிபர்களான பூரணம்பிள்ளை. ஏகாம்பரம் ஆகியோர்
வேதாபரணத்தை வழிநடத்தினர்.
சிறுவனான
தனது விளையாட்டை ஊக்குவித்தவர்களில் கரவெட்டி
அமரர் அ.துரைசாமி முக முக்கியமானவர்என பேட்டி ஒன்றில் வேதாபரணம் குறிப்பிட்டுள்ளார். பயிற்சியாளர்
இரத்தின சிங்கத்தின் நெருக்கம் அவரை புடம் போட்டது. உதைபந்தாட்ட சாதனைகளுக்கு சற்றும்
குறைவில்லாமல் கிறிக்கெற்றிலும் சாதித்தார். துடுப்பாட்டம்,பந்துவீச்சு,களத்தடுப்பு
ஆகியவற்றில் முத்திரை பதித்தார். வதிரி பொம்பேர்ஸ் கழகத்துக்கு வேதாபரணம் விளையாடிய
காலம் அந்தக்கால ரசிகர்களால் மறக்க முடியாதது.பொம்பேர்ஸின் வெற்றியில் அவரின் பங்களிப்பு
அபரிமிதமானது.
விளையாட்டு வீரன் வேதாபரணம் பல சாதனைகளின் சொந்தக்காரன்.
மத்தியஸ்தர் வேதாபரணம் நடுநிலையான செயற்பாட்டாளர். பயிற்சியாளர் வேதாபரணம் புதிய வீரர்களை
உருவாக்கியவர். கிராம சேவகர் வேதாபரணம் சமூக
செயற்பாட்டாளர். உதைபந்தாட்ட லீகின் தலைவர் வேதாபரணம் சிறந்த நிர்வாகி. தான் கால்பதித்த
அத்தனை துறைகளிலும் சிறந்த தலைவனாகத் திகழந்தவர் வேதாபரணம்.
சீன
உதைபந்தாட்ட அணி இலங்கைக்கு விஜயம் செய்தபோது அதற்கு எதிராக விளையாடிய பருத்தித்துறை
தெரிவு அணியில் வேதாபரணமும் ஒரு வீரராக விளையாடினார். உதைபந்தாட்டம்,கிறிக்கெற் ஆகிய
இரண்டு போட்டிகளுக்கும் இலங்கையில் பலபாகங்களிலும் மத்தியஸ்தராகக் கடமையாற்றியவர் வேதாபரணம்.
இங்கிலாந்துக்குச் சென்றபோது இலண்டனில் நடைபெற்ற கிறிக்கெற் போட்டிகளில் நடுவராகச் செயற்பட்ட பெருமைக்குரியவர்
வேதாபரணம்.
பருத்தித்துறை
உதைபந்தாட்ட லீக்கின் தலைவராக வேதாபரணம் செயற்பட்ட போது அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற உதைபந்தாட்டப்
போட்டியில் பருத்தித்துறை அணி சம்பியனாகியது. இவருடைய தலைமைத்துவத்தில் தமிழ் கழக அணி
ஒன்று தேசிய மட்டத்தில் சம்பியனாகியது. அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு
விஜயம் செய்தபோது முற்றவெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சம்பியன் கிண்ணத்தை வழங்கி
கெளரவித்தார். 2013 ஆம் ஆண்டு வடமராட்சி உதைபந்தாட்ட
லீக் உதயமானபோது அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட
வேதாபரணம், ஆயுள் காலத் தலைவராக காலமாகிவிட்டார்.
வேதாபரணத்தின் ஆளுமையால் கவரப்பட்ட இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம்
2017 ஆம் ஆண்டு அவரை நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராக்கியது. அது மட்டுமல்லாமல் புட்சால்
உதைபந்தாட்டத்தின் பொறுப்பையும் அவரிடம் வழங்கியது. உதைபந்தாட்ட லீக்கில் வேதாபரணத்தின்
25 வருட தலைமைத்துவ சேவையை பாராட்டு முகமாக
பங்களாதேஷுக்குச் சென்ற இலங்கை அணியில் அவரையும் ஒரு அங்கத்தவராக அனுப்பி இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் கெளரவம் வழங்கியது.
வடமாகாண
உதைபந்தாட்டப் பேரவையின் பொதுச்செயலாளராகக்
கடந்த 4
வருடங்களாக வேதாபரணம் கடமையாற்றினார்.
கண்டியைச் சேர்ந்த அமரசேகர,பசநாயக்க, யாழ்ப்பாண வீரர்களான கனகதுரை,
ஸ்ரீபத்மராஜா போன்ற அதி வேக பந்து வீச்சாளர்களுக்கும், தெய்வேந்திரம், சச்சிதானந்தம், போன்ற ஔழல் பந்து
வீச்சாளர்களுக்கும் எதிராக விளையாடியதை அவர்
பெருமையுடன் நினைவு கூர்வார்
பேராசிரியர் நடராஜ சுந்தரம், கந்தராஜா,ஆனோல்ட்,சிவகுருநாதன், மயில்வாகனம்,அவுஸ்திரேலிய
அணி இலங்கைக்கு விஜயம் செய்தபோது விளையாடிய அமரர் பாலசுப்பிரமணியம், இலங்கை அணிக்காக
வெளிநாட்டுக்குச் சென்று விளையாடிய கஜேந்திரன் பாலசிங்கம்,டொனால்ட் கணேசகுமார்.கனகதுரை,வி.ரி.மகாலிங்கம்,டேவிட்
தம்பிராஜா, எம்.கருணாகரன் ஆகியோருடன் இணைந்தும் எதிராகவும் விளையாடினார்.
75 ஆவது வயதில் பவளவிழா கொண்டாடிய வேதாபரணம் விளையாட்டுத்துறையில்
மணிவிழாவை அடைந்த வேளையில் பிரிந்துவிட்டார்.
வர்மா
தினக்குரல்
டிசம்பர் 15