Showing posts with label தமிழகம்2016. Show all posts
Showing posts with label தமிழகம்2016. Show all posts

Monday, June 6, 2016

காங்கிரஸ் தலைவர்களிடையே புதுவையில் பனிப்போர்


இந்தியாவின் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிவடைந்து நான்கு மாநிலங்களில் முதல்வர்கள் பதவியைப் பொறுபேற்றுவிட்டனர். மிக நீண்ட  இழுபறியின் பின்னர் புதுவையின்  முதலமைச்சரின் பெயரை காங்கிரஸ் வெளியிட்டது. கேரளமும் மேற்கு வங்கமும் காங்கிரஸை ஏமாற்றிவிட்டன. பதினைந்து வருட ஆட்சியின் பின்னர் காங்கிரஸ் அசாமைப் பறிகொடுத்துவிட்டது.  கருணாநிதியின் கருணையால் தமிழகத்தில் எட்டுத் தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. புதுவையில் பறிகொடுத்த ஆட்சியை மீண்டும்  கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில்  திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து  காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. புதுவையில் காங்கிரஸ் கட்சியுடன் திராவிட  முன்னேற்றக் கழக‌ம் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது புதுவையில் 25  தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 15 தொகுதிகளிலும்  9 தொகுதிகளில் போட்டியிட்ட திராவிட  முன்னேற்றக் கழகம் இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமசிவாயம் முதலவராவார் என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கையில் முன்னாள் அமைச்சர் நாராயணசாமி முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்காக காய் நகர்த்தினார். இதனால் புதுவையில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே  எதிர்பார்ப்பு கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற நமசிவாயத்தை ஒதுக்கி வைத்த  காங்கிரஸ் தலைமை, சட்ட மன்ற உறுப்பினர் அல்லாத நாராயணசாமியை முதல்வர் பதவிக்கு சிபார்சு செய்தது.

காங்கிரஸ் தலைமையின்  முடிவை ஏற்காத நமசிவாயத்தின் விசுவாசிகள் போராட்டம் செய்தனர். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப்பிடிதத்தில் நமசிவாயத்தின் பங்கு  அதிகம். நமசிவாயத்தின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றியை நாராயணசாமி தட்டிப்பறிப்பதை நமசிவாயத்தின் விசுவாசிகளால் ஜீரணிக்க முடியவில்லை.புதுவையில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது முதலமைச்சராக இருந்தவர் ரங்கசாமி. ரங்கசாமியின் தன்னிச்சையான போக்கினால் காங்கிரஸ் கட்சி  அவரைத் தள்ளி வைத்தது. காங்கிரஸ் கட்சிக்குப் பாடம் புகட்டுவதற்காக  காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி என் ஆர்  காங்கிரஸ்ஸ் என்ற கட்சியை ஆரம்பித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்து 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி முதல்வரானார். கட்சியை ஆரம்பித்து இரண்டு மாதங்களில்  ஆட்சியைப் பிடித்த ரங்கசாமி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கழற்றிவிட்டு விட்டு சுயேட்சையின் உதவியுடன்  ஆட்சியை நடத்தினார்.

காங்கிரஸ் கட்சிக்குத் துரோகம் செய்த ரங்கசாமியை வீழ்த்தியத்தில் பெரும் பங்கு வகித்த நமசிவயத்தை ஓரம் கட்டிய காங்கிரஸ் நாராயணசாமியை முதல்வராக்கியது. முதல்வர்  பதவி கிடைக்காததால் ஏமாற்றமடைந்த நமசிவாயம் தனக்கு துணை முதலவர்பதவி  தரும் படி கோரிக்கை விடுத்தார். மிகச்சிறிய யூனியன் பிரதேசமான புதுவையில் துணை முதல்வர் பதவி சாத்தியமானதல்ல என்று தெரிந்து கொண்டும் நமசிவாயம் விடுத்த கோரிக்கையின் உண்மை முகம் தெரியவில்லை.காங்கிரஸ் என்றால் குழப்பமும்   கோஷ்டி மோதலும் இருக்கும் என்பதற்கு புதுவை விதிவிலக்கல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.முதல்வருக்கான குடுமிச்சண்டை தற்பொழுது ஓய்ந்தாலும் எப்போது விஸ்வரூபம எடுக்கும் என்பது தெரியாது.

புதுச்சேரியில் கால் பாதிப்பதற்காக    கிரண்பேடியை களத்தில் இறக்கி உள்ளது  பாரதீய ஜனதாக் கட்சி. டெல்லி சட்ட சபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தவரை புதுவையின் துணை ஆளுனராக பாரதீய ஜனதா நியமித்துள்ளது.புதுவையில் காங்கிரஸ் அரசுக்கு தலையிடி கொடுப்பதற்காகவே கிரண்பேடி துணை  ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பதில் கிரண்பேடிக்கு நிகராக யாரும் இல்லை. கிரண்பேடியைச்சமாளிக்கும்  திறமை நமசிவயத்திடம் இல்லை. அதனால்தான் நாராயணசாமியை காங்கிரஸ் முதலமைச்சராக்கியது.

   துணை நிலை ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கும் கிரண் பேடி, புதுச்சேரி முதல்வருக்கு நிச்சயம் மிகப் பெரிய சவாலாக விளங்குவார்  எனவேதான் நாராயணசாமியின் நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. இன்று இல்லாவிட்டாலும் கூடிய விரைவிலேயே நாராயணசாமி - கிரண் பேடி இடையே போர்  தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்து விட்டது. கிரண்பேடியை சமாளிக்க அதிரடியான ஒருவர் தேவை என்பதால்தான் நாராயாணசாமியை கட்சி மேலிடம் நியமிக்க முடிவு செய்தது.. மேலும் புதுவையில் அரவம் இல்லாமல் உள்ள பாரதீய ஜனதாக் கட்சியினர்  தற்போது உற்சாகத்துடன் களத்தில் குதிக்க ஆரம்பித்துள்ளனர். எனவே கிரண் பேடியை வைத்து புதுச்சேரியில் பாஜகவை வளர்க்க அக்கட்சி முயல்கிறதோ என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது

 
கிரண் பேடியின் நியமனம் பல்வேறு விதமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு முதல்வர் பதவியில் செயல்படுவது குறித்த "பயிற்சியாக" துணை நிலை ஆளுநர் பதவியை பலரும் பார்க்கின்றனர். அடுத்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் மீண்டும் கிரண் பேடியே பாஜக சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும், அதற்குள் அவர் நிர்வாக ரீதியான அனுபவத்தையும், நல்ல பெயர்யும் புதுவையில் பெற்று விட்டால் அது டெல்லி தேர்தல் களத்தில் உதவியாக இருக்கும் என்று பாஜக கணக்குப் போடுவதாக கூறுகிறார்கள்.

 
இது உண்மையாக இருக்குமோ என்றுதான் எண்ண வைக்கிறது கிரண் பேடியின் செயல்பாடுகளும். புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தது முதல், ஒரு முதல்வர் போலத்தான் செயல்பட ஆரம்பித்துள்ளார் கிரண்பேடி. முதல்வர் அறிவிக்க வேண்டியதையும், சொல்ல வேண்டியதையும் இவர் அதிகாரிகளுக்குக் கூறி வருகிறார். பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

 
கிரண்பேடி தனது அலுவலகத்தோடும், ராஜ்பவனோடும் முடங்கிப் போகக் கூடியவர் அல்ல என்பதை அவரது அன்றாட செயல்பாடுகள் வெளிப்படுத்துவதால், முதல்வராகப் பதவியேற்கவுள்ள நாராயணசாமிக்கு நிச்சயம் பெரிய சவாலாகவே இருக்கும் ஆளுநரை சமாளிப்பது.
 
பிற மாநில ஆளுநர் பதவி போல அல்ல புதுச்சேரி ஆளுநர் பதவி. இது யூனியன் பிரதேசம் என்பதாலும், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் ஆளுநர் பதவிதான் இங்கு பெரியது. ஆளுநரைப் பகைத்துக் கொள்ள முடியாது. அதை விட முக்கியமாக மத்திய அரசை விமர்சிக்க முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் மத்திய அரசின ஒப்புதல் தேவை என்று ஏகப்பட்ட லொட்டு லொசுக்குகள் உள்ளன. புதிய ஆட்சியமைக்கவே, மத்திய அரசின் உள்துறையின் அனுமதி பெற்றாக வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதனால்தான் நாராயணசாமி இன்னும் பதவியேற்காமல் உள்ளார்.  
கிரண்பேடி நிச்சயம் அதிரடியாக செயல்படுவார். அதிரடி உத்தரவுகளைப் பிறப்பிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், டக்கென எளிதில் பணிந்து போகக் கூடியவர் அல்ல நாராயணசாமி. அதிரடியாக செயல்படக் கூடியவரும் கூட. போராடக் கூடியவரும் கூட. எனவே நிச்சயம் புதுச்சேரி அரசியல் களம் படு சூடாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ரமணி
தினத்தந்தி
6/6/16


Saturday, June 4, 2016

தேர்தல் தோல்வியால் பாடம் படித்த தலைவர்கள்

  திராவிட முன்னேற்றக் கழக‌ம அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் ஆகிய இரண்டு கட்சிகளைத் தவிர வேறு கட்சிகளுக்கு தமிழகத்தில்  இடம் இல்லை என  தமிழக சட்டசபைத் தேர்தலின் மூலம் மக்கள் தெளிவாக உணர்த்திவிட்டனர். ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் வீட்டுக்கு  அனுப்பப் போவதாக சபதம் எடுத்து தலைப்பா கட்டிக்கொண்டு புறப்பட்ட வைகோ சத்தம் சந்தடி இன்றி அடங்கிவிட்டார். இரண்டு திராவிடக்  கட்சிகளும் ஐம்பது வருடங்களாக ஆட்சி செய்து தமிழகத்தைச் சீரழித்து விட்டன. திராவிடக்  கட்சிகளின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற மையத் தோற்றத்துடன் பிரசாரம் செய்த கட்சிகள் அனைத்தும் மூக்குடைபட்டுநிற்கின்றன.

அண்ணா திராவிட முன்னேற்றக்   கழகத்தின் வாக்கு வங்கியை மட்டும் நம்பி தேர்தலில் தனித்துக் களம் இறங்கிய ஜெயலலிதா வரலாற்றுச் சாதனையுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளார்.வாசன் ,  வேல்முருகன் போன்ற அரசியல் தலைவர்கள் ஜெயலலிதாவின் நிழலில் தேர்தலில் போட்டியிட விரும்பினார்கள். அவர்களை ஜெயலலிதா திரும்பியும்பர்க்கவில்லை. தேர்தல் திகதி அறிவித்தபின்னர் கட்சியை ஆரம்பித்த கருணாஸையும்  வாக்குவங்கி, மக்கள் மத்தியில் செல்வாக்கு போன்றவை இல்லாத கட்சித் தலைவர்களையும் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.ஐந்து வருடங்களாக ஜெயலலிதாவின் காலடியில் கிடந்துவிட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியேறிய சரத்குமாருக்கும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கொடுத்தார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் வெற்றி பெற்று ஜெயலலிதா தொடர்ந்தும் முதல்வரானாலும் அவருடைய பழைய அமைச்சர்கள் சிலர் தோல்வியடைந்தனர். ஜெயலலிதாவுக்கு எதிரான அலையில் சிக்கி சரத்குமாரும் தோல்வியடைந்தார்.ஜெயலலிதா கொடுத்த சந்தர்ப்பத்தினால் தான் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். விஜயகாந்தை எதிர்க்கட்சித் தலைவராக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் வாக்குவங்கிதான் அரசியலில் அரிவரி படிக்க முயலும் கருணாஸை வெற்றி பெறச்செய்தது.


அசுர பலத்துடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த தேர்தலின்  போது படு  தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்த்தை இழந்த திராவிட முன்னேற்றக் கழக‌ம் இப்போதைய தேர்தலில் அதிகளவு  தொகுதிகளில் வென்று பலமான எதிர்க்கட்சியாக மிளிர்கிறது. மக்கள் நலக் கூட்டணி என்ற பலமான சக்தியால் திராவிட முன்னேற்றக் கழக‌ம் மண் கெளவப்போகிறது என்ற  மாயையை உடைத்து தோல்வியையும் வெற்றியாக நினைக்கிறது திராவிட முன்னேற்றக் கழக‌ம். திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் செல்வாக்கினால் காங்கிரஸ் கட்சியும் இந்தியன் முஸ்லிம் யூனியனும் வெற்றி பெற்றன.
திராவிட முன்னேற்றக் கழக‌ வேட்பாளர்களில் பலர் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.வாக்குகள் என்னும் போது முன்னணியில் இருந்தவர்கள் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தனர். ஜெயலலிதா தொடர்ந்தும் பதவியில் இருக்கக்கூடாது என்று விரும்பிய தலைவர்கள்  ஒற்றுமையாக தேர்தலில் போட்டியிடாததும்  திராவிட முன்னேற்றக் கழக‌ வேட்பளர்களை சிலரின் தோல்விக்கு கட்சியில் உள்ளவர்களின் குழிபறிப்பும்  ஒருகாரணம் மீனாலோகு  என்ற பெண் வேட்பாளர் தனக்கு கட்சியினரால் ஏற்பட்ட அவமானங்களையும் ஒற்றுமை இன்மையையும் கருணாநிதியின் முன்னால் சொன்னபோது வாய்விட்டு அழுதார். அவரின் கதையைக் கேட்ட கருணாநிதி கண்கலங்கினார்.

திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் தோல்விக்குக் காரணமானவர்களை களை  எடுத்தால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம். இல்லையேல் இதேபோன்ற காலைவாரும் காட்சிகள் அடிக்கடி நடைபெறுவதைத் தடுக்க முடியாது. ஒருவர் தப்பு செய்தால் அவரை அகற்றுவது ஜெயலலிதாவின் பாணி. தப்புச் செய்தவருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்குவது கருணாநிதியின் கொள்கை. ஜெயலலிதாவின் அதிரடி முடிவினால் தப்புச் செய்வதற்கு தயங்குவார்கள். கருணாநிதியின் நடவடிக்கையினால் தப்புசெய்பவர்கள் உற்சாகமாகி விடுவார்கள். திராவிட முன்னேற்றக் கழக‌த்தவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டிருந்தால் சிலவேளை கருணாநிதி முதலமைச்சராகி இருப்பார்.

திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் சேர்ந்திருந்தும் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. 65 தொகுதிகள் வேண்டும் என அடம் பிடித்த காங்கிரஸ் இறுதியில்   41 தொகுதிகளுடன் திருப்தியடைந்தது.  எட்டு தொகுதிகளில் மட்டும் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு அக் கட்சியில் உள்ள கோஷ்டி மோதலே காரணம். சிதம்பரம் போன்றவர்கள் முழுமூச்சுடன் பிரசாரம் செய்யவில்லை. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்  இளங்கோவன் தான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று குற்றம் சாட்டபடுகிறது. தமிழக காங்கிரஸ் பிரமுகர்களுடன் செயற்படாது இளங்கோவன் தனிச்சையாக எடுத்த முடிவுகள்தான் தோல்விக்கு முக்கிய காரணம். 

மக்கள் நலக் கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கப்போகிறது என்ற கோஷம் வெறும் வாய்ச்சவடாலில்   முடிவடைந்தது.   ஒற்றுமையாக நின்று  புகைப்படத்துக்குப் போஸ் கொடுத்த மக்கள் நலக் கூட்டணித்  தலைவர்கள் ஒற்றுமையாகப் பிரசாரம் செய்யவில்லை.  மக்கள் நலக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தபோது வந்து குதித்த விஜயகாந்தால் வெற்றித் தேவதை காததூரம் ஓடிவிட்டாள். மக்கள் நலக் கூட்டணியை விரும்பியவர்கள் விஜயகாந்தின் வருகையால் மனம் மாறிவிட்டனர். தேர்தல் தோல்விக்குப் பின்னர் மக்கள் நலக் கூட்டணித்  தலைவர்கள் ஒன்றாகக்  கூடி தோல்விபற்றி ஆராயவில்லை. பணநாயகம்  அரச இயந்திரம் வெற்றி பெற்றதென தனித் தனியாக அறிக்கை விட்டனர்.

தேர்தலில் தோல்வியடைவோம் என்பதை தேர்தலுக்கு முன்பே உணர்ந்ததாக வைகோவும் திருமாவளவனும் அறிவித்து தொண்டர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர். தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் மக்கள் நலக் கூட்டணிக்கு இருந்த வரவேற்பு பிரசாரத்தின் போது  மங்கிவிட்டது. இவர்களின் பிரசாரமும் தேர்தல் அறிக்கைகளும் மக்களைக் கவரவில்லை. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் எதிர்க்க வேண்டும் என்பதில் கூட்டுச்சேர்ந்தவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என சிந்திக்கவில்லை.
 பட்டாளி  மக்கள் கட்சி அரசியல் கட்சி அல்ல, வன்னியரின் கட்சிதான் என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது. தமிழகத் தேர்தலைப்பற்றி யாரும் சிந்திக்க முன்பே முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பிரசரத்தை  ஆரம்பித்த ராமதாஸ் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். சினிமாவைக்  கைவிட்டுவிட்டு அரசியலுக்கு வந்த  சீமானுக்கும் இனி வேறுவழி இல்லை. இருவரும் தோல்வியில் இருந்து படம் படிக்கவில்லை.

தேர்தலில் தோல்வியடைந்த திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் எவரும் கட்டுப்பணத்தை இழக்கவில்லை. 174 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது.  தோல்வியில் கிடைத்த வெற்றியாகவே திராவிட முன்னேற்றக் கழகம் இதனைக் கருதுகிறது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு தொகுதிகளில் கட்டுப்பணத்தை இழந்தது. சீமானின் நாம் தமிழர் கட்சி 234   தொகுதிகளில் போட்டியிட்டு சகல தொகுதிகளிலும்  கட்டுப்பணத்தைப் பறிகொடுத்தது. 104 தொகுதிகளில்  போட்டியிட்ட விஜயகாந்தின் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் கட்டுப்பணத்தைத் திரும்பப்பெற்றது. தலைவர் விஜயகாந்தும் கட்டுப்பணத்தைப் பறிகொடுத்தார்.25 தொகுதிகளில் போட்டியிட்ட கம்யுனிஸ்ட் கட்சி சகல தொகுதிகளிலும்   கட்டுப் பணத்தை இழந்தது. 27 தொகுதிகளில் போட்டியிட்ட வைகோவின் கட்சி இரண்டு தொகுதிகளில் கட்டுப்பணத்தை திரும்பப்பெற்றது. 29 தொகுதிகளில் போட்டியிட்ட வாசனின் கட்சி  27 தொகுதிகளிலும்  25 தொகுதிகளில் போட்டியிட்ட திருமாவளவனின் கட்சி  22 தொகுதிகளிலும் கட்டுப்பணத்தை இழந்தன. 234  தொகுதிகளில் போட்டியிட்ட 234  தொகுதிகளில் போட்டியிட்ட பட்டாளி மக்கள் கட்சி  212 தொகுதிகளில் கட்டுப்பணத்தை பறிகொடுத்தது.

மக்கள் நலக் கூட்டணி தொடருமா என்பதை தலைவர்கள் எவரும் அறிவிக்கவில்லை. உள்ளூராட்சித் தேர்தலின் போது தோல்வியடைந்த தலைவர்கள் மீண்டும் தலை எடுப்பார்கள்.
வர்மா

Wednesday, May 25, 2016

முடங்கிப் போன மூன்றாவது அணி


தமிழக அரசியல் களத்தில்  அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் மாற்றீடான கட்சி எதுவும் இல்லை என்பதை தமிழக மக்கள் மீண்டும் ஒரு முறை  நிரூபித்துள்ளனர். ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் வீட்டுக்கு அனுப்பி வைப்போம் எனச் சபதம் எடுத்து மூன்றாவது அணியை அமைத்த தலைவர்கள் அனைவரும் மண்னைக் கெளவியுள்ளனர்.  திராவிட முன்னேற்றக்கழகத்துடன் விஜயகாந்த் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் ஜெயலலிதா வெற்றி பெற முடியாது என்பது வெளிப்படையான உண்மை. இந்த யதார்த்தத்தைப் பொய்யாக்க வைகோ எடுத்த பெருமெடுப்பிலான முயற்சி எதிர் பார்த்தது போலவே தோல்வியடைந்தது.

கருணாநிதியும் விஜயகாந்தும் சேரக்கூடாது என்பதே ஜெயலலிதாவின் விருப்பம். ஜெயலலிதாவின் விருப்பத்தை வைகோ கனகச்சிதமாக நிறைவேற்றியுள்ளார்.. தமிழகத்தில்  கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என்ற தமிழக அரசியல் தலைவர்களின் விருப்பத்தை தமிழக மக்கள் நிராகரித்துவிட்டனர். முதலமைச்சர் வேட்பாளராகக் களம் இறங்கிய அன்புமணியும் விஜயகாந்தும் படு தோல்வியடைந்தனர், சினிமாவில் இருந்து அரசியலில் கால் பதித்த விஜயகாந்த், தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். கடந்த சட்ட மன்றத் தொடரில் எதிர்க்கட்சித் தலவராக வலம் வந்த விஜயகாந்த் இப்போது நடந்த தேர்தலில்  கட்டுப்பணத்தை இழந்து படு தோல்வியடந்தார்.

ஜெயலலிதாவுக்கு எதிராக மிகப்பிரமாண்டமான எதிர்ப்பு அலை எதுவும் இருக்கவில்லை. ஆனால்,ஜெயலலிதாவுக்கு எதிரான சிறியளவிலான எதிர்ப்பு இருந்தது, அந்த எதிர்ப்பை ஒரிடத்தில் குவித்து வெற்றிக்கான வியூகத்தை வகுக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தவறிவிட்டனர். வைகோவால் வழிநடத்தப்பட்ட மக்கள் நகக் கூட்டணி கருணாநிதியை மூர்க்கமாக எதிர்த்தது. ஜெயலலிதாவுக்கு எதிராக மிக மோசமான விமர்சனங்களை மக்கள் நலக் கூட்டணி முன் வைக்கவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிழல் கட்சியே மக்கள் நலக் கூட்டணி என்ற கருத்து இருந்தது, தேர்தல் முடிவு அதனை மெய்ப்பிப்பது போல இருக்கிறது. வைகோவும்  திருமாவளவனும் இடது சாரிகளுடன் சேர்ந்து தேர்தலுக்கு முகம்  கொடுக்கப் போவதாக அறிவித்தபோது எந்தவித சந்தேகமும் தோன்றவில்லை. அப்போது மக்கள் நலக் கூட்டணியின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தமிழக முதலமைச்சராக வைகோவா  இடதுசாரித் தலைவர்களா என்ற கேள்வி எழுந்த போது தலித்துக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என வைகோவின்  குரல் ஒலித்தது. வைகோவின் விருப்பத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். கருணாநிதியும் ஜெயலலிதாவும் முதலமைச்சராவதற்கு இரத்தம் சிந்தி வேலை செய்த வைகோ, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்று விஜயகாந்தை அறிமுகப்படுத்தியபோது  தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.

இராஜதந்திரம் மிக்க மூத்த அரசில்வாதியான வைகோவின் அறிவிப்பு மக்கள் நலக் கூட்டணிக்கு ஆப்பு வைத்தது. தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்  அசைக்க முடியாத வாக்கு வங்கி உள்ளது.  இதுவரை நடந்த தேர்தல்களில் அவர்களது  வாக்கு வங்கி பெரியளவில் சரிந்ததில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு ஐந்து சதவீத வாக்கு அதிகமாக உள்ளது. விஜயகாந்தின் மூலம் அந்த ஐந்து சதவீத வாக்கை சரிக்கட்டலாம் என கருணாநிதி கணக்குப் போட்டார். கருணாநிதியின் கணக்கை இடையில் புகுந்த  வைகோ குழப்பி அடித்து விட்டார்.

மூன்றாவது அணி என்ற பெயரில் கடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய கட்சிகள் அனைத்தும் இணைந்து போட்டியிட்டன. தமிழக வாக்காளர்கள் மூன்றாவது அணியை அப்போதே நிராகரித்து விட்டனர். மாயையில் மக்களைக் குழப்பினர். மக்கள்  நலக் கூட்டணியின் மாயையில் சிக்கிய  வாக்காளர்களினால் கருணாநிதியின்  சாதனை தகர்ந்தது. மின்வெட்டு, மழைவெள்ள அனர்த்தம், மதுபானசாலை திறப்பு போன்ற வற்றை முன்னிறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் பிரசாரம் செய்தது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் வெற்றி பெறலாம்என்ற  மனநிலை கருணாநிதிக்கு ஏற்பட்டது.

எம்.ஜி.ஆருக்குப்பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். ஜெயலலிதாவின் இந்த வரலாற்று வெற்றி வெறும் ஒருசதவீதத்தால் கிடைத்துள்ளது. அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு சற்று சரிவடைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் குறந்தளவு வாக்குகளினால் தோல்வியடந்துள்ளது. 200அல்லது,300 வாக்குகளால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். மிகப் பிரபலமான திருமாவளவன் 87 வாக்கு களினால் தோல்வியடந்தார். திரப்பட நடிகரான கருணாஸ் வெற்றி பெற்றுவிட்டார். கருணாஸ் பிரபலமான நடிகர் அல்ல. சரத்குமார், விஜயகாந்த் ஆகியோருடன் ஒப்பிடுகையில் கருணாஸின் திரப்பட வாழ்க்கை பூஜ்ஜியம். ஜெயலலிதாவின் செல்வாக்கினால்தான் கருணாஸ் வெற்றி பெற்றார்.


பழைய பெருச்சாளிகளை ஜெயலலிதா ஓரம் கட்டியதும் அவருடைய வெற்றிக்கு ஒரு காரணம். புதியவர்களுக்கு வாய்ப்புக்  கொடுத்தார். அவர் எதிர் பார்த்ததுபோல புதியவர்கள் வெற்றி பெற்றனர். கருணாநிதியால் துணிச்சலுடன் பழையவர்களை ஓரம் கட்ட முடியவில்லை. ஒதுங்கிய பழையவர்கள் தமது வாரிசை களம் இறக்கினார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்..
திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் 172 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட்டன. திராவிட முன்னேற்றக்  கழகம் 89 தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 83 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. கடந்த தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடம் தோல்வியடைந்த திராவிட முன்னேற்றக் கழகம் இம்முறை நடைபெற்ற தேர்தலைலிஒப்பீட்டளவில் வெற்றி பெற்றுள்ளது. இதே வெற்றியை அதனுடைய  கூட்டணிக்கட்சிகள் பெறவில்லை. அடித்துப் பிடித்து அதிக தொகுதிகளைப் பெற்ற  கங்கிரஸ் வெறும் எட்டுத் தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. விஜயகாந்திடம் இருந்து பிரிந்து வந்தவர்களுக்கு ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டார். இதுவும் அவரது கட்சியின் தோல்விக்கு காரணமானது. ஜெயலலிதாவின் செல்வாக்கினால் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை ஸ்டாலின் உணரத் தவறிவிட்டார்.


தமிழக அரசியலில் மூன்றாவது அணி எனக் கூறிக்கொண்டு யாரும் அரசியல்  நடத்த முடியாது என்பதை வாக்காளர்கள் தெளிவாக உணர்த்தியுள்ளனர். ஜெயலலிதாவை எதிர்க்க வேண்டும் என்றால் கருணாநிதியுடன் இணைய வேண்டும். இல்லை என்றால் ஜெயலலிதாவிடம் சரணடைய வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டு இவர்கள் அரசியல் செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
வர்மா
துளியம். கொம்

Monday, May 23, 2016

வரலாறு காணாத வெற்றிபெற்ற ஜெயலலிதா


தமிழக சட்ட மன்றத் தேர்தலில் வரலாறு காணாத பெரு வெற்றி பெற்ற ஜெயலலிதா ஆறாவது முறையாக முதலமைச்சராக  பதவி ஏற்க உள்ளார். தமிழக சட்ட மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருந்தது. தேர்தல் நெருங்கும் வேளையில் ஜெயலலிதாவின் வெற்றி  கேள்விக்குறியானது.  ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற விளம்பரங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தின.  தேர்தலுக்கு முன்னைய கருத்துக் கணிப்புகளும் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளும் ஜெயலலிதாவுக்குப் பாதகமாக இருந்தன. இவை எல்லாவற்றையும் தாண்டி ஜெயலலிதாதான் முதலமைச்சர் என்று தமிழக மக்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்  மாற்றுக்கட்சி தமிழகத்தில் இல்லை என்பதை வாக்காளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் தவிர ஏனைய தலைவர்கள் அனைஅவரும் படு தோல்வியடைந்தனர். திராவிட முன்னேற்றக் கழகம் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகள் தான் தமிழகத்தில் உள்ளன. ஜெயலலிதாவின் விருப்பத்துடன் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட்ட மூவர் வெற்ரி பெற்றுள்ளனர். கருணாநிதியின் தயவில் காங்கிரஸ் எட்டு தொகுதிகளிலும்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதொகுயிலும் வெற்றி பெற்றன.

  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 131 தொகுதிகலில்வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக அட்சி அமைக்கிறது. 98 தொகுதிகளில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக்கழகம் பலமான எதிர்க் கட்சியாக  இருக்கப்போகிறது. அடுத்த முதலமைச்சர் என்ற பந்தாவுடன் வலம் வந்த அன்புமணி தோல்வியடைந்தார்.  ஜெயலலிதாவின் புண்ணியத்தால் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த், தனக்கு அதிக செல்வக்கு இருப்பதாக கனவுகண்டு கட்டுப்பனத்தையும் இழந்து மூன்றாவது இடத்துக்குத்தள்ளப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விட வெறும் 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது    ஜெயலலிதாவின்கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் 40.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. கருணாநிதியின்கூட்டணிக்கு 39.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இருவருக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 1 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கர பந்தாவுடன் வலம் வந்த விஜயகாந்த்தின் கட்சி  கேவலமான நிலைக்குப் போயுள்ளது. அக்கட்சிக்கு வெறும் 2.4 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. அக்கட்சியை விட பாரதீய ஜனதாக் கட்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது

 தேசிய முற்போக்குத்  திராவிடக் கட்சித் தலைவ்ரும் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் கட்டுப்பணம் இழந்தார்.
பென்னாகரத்தில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின்  முதல்வர் வேட்பாளர் அன்புமணி தோல்வியுற்றார். காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் திருச்செந்துாரில்போட்டியிட்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் தமிழிசை, ஒட்டப்பிடாரத்தில் போட்டியிட்ட புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமிஇ ஈரோடு கிழக்கில் போட்டியிட்ட மக்கள் தே.மு.தி.க.,தலைவர் சந்திரகுமார்,

ராமநாதபுரத்தில் போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார் கடலுாரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பெரம்பலுாரில் போட்டியிட்ட சமூக சமத்துவ படை தலைவர் சிவகாமி ஆகியோர் தோல்வியுற்றனர்.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொது செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை தவிர மற்ற கட்சி தலைவர்கள் அனைவரும் தோல்வியை சந்தித்தனர்.

'தோல்வியை தழுவுவோம்' என்ற பயத்தில் தான் ம.தி.மு.கஇ பொது செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கோவில்பட்டியில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கி விட்டார் என்று தி.மு.க.இவினர் கூறியதை மெய்யாக்கும் வகையில் அவர் போட்டியிடவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.
2016 சட்டசபைத் தேர்தல் இடதுசாரிக் கட்சிகளுக்கு பெரிய சோதனையாக அமைந்துள்ளது. இதுவரை இடதுசாரிகளின் பிரதிநிதித்துவம் இல்லாத எந்த சட்டசபையும் தமிழகத்தில் அமைந்ததில்லை. ஆனால் முதல் முறையாக இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகளே இல்லாத சட்டசபையை தமிழகம் கண்டுள்ளது. தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இடதுசாரிகள் இடம் பெறாத தேர்தலே கிடையாது. அந்த அளவுக்கு நீக்கமற இருந்து வந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தற்போது ஒரு இடத்தில் கூட வெல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பலரையும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் வெறும் 87 வாக்குகளில் வெற்றியை பறிகொடுத்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். இதேபோல் 13 பேர் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளில் தோல்வியைத் தழுவியுள்ளனர். நெல்லை தொகுதியில் திமுகவின் ஏ.எல்.எஸ். லட்சுமணன், அதிமுகவின் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டனர். இதில் திமுகவின் லட்சுமணனிடம் 601 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டார் நயினார் நாகேந்திரன். தென்காசியில் அதிமுகவின் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் காங்கிரஸின் பழனி நாடாரும் போட்டியிட்டனர். அதிமுக வேட்பாளரிடம் 462 வாக்குகளில் பழனிநாடார் தோற்றுப் போனார். திருவிடைமருதூர் திமுகவின் கோவி செழியனும் அதிமுகவின் சேட்டுவும் மோதினர். இதில் செழியனிடம் 532 வாக்குகளில் தோல்வி அடைந்தார் சேட்டு. திருமயம் தொகுதியில் திமுகவின் ரகுபதியும் அதிமுகவும் வைரமுத்துவும் களம் கண்டனர். ரகுபதியிடம் வைரமுத்து 766 வாக்குகளில் தோல்வி அடைந்துள்ளார். திருப்போரூர் தொகுதியில் அதிமுகவின் கோதண்டபாணியிடம் 950 வாக்குகளில் தோற்றுப் போனார் திமுகவின் விஸ்வநாதன். சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுகவின் பி. வெற்றிவேலிடம் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் 519 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார். பேராவூரணியில் அதிமுகவின் கோவிந்தராசுவிடம் திமுகவின் அசோக் குமார் 995 வாக்குகளில் தோல்வி அடைந்தார். பரமத்தி வேலூரில் திமுகவின் கே.எஸ். மூர்த்தியிடம் 378 வாக்குகளில் தோல்வி அடைந்தார் அதிமுகவின் ஆர். ராஜேந்திரன். கோவில்பட்டியில் அதிமுகவின் கடம்பூர் ராஜூவிடம் திமுகவின் ஏ சுப்பிரமணியன் 428 வாக்குகளில் தோற்றார். கரூரில் அதிமுகவின் விஜயபாஸ்கரிடம் திமுகவின் பேங்க் சுப்பிரமணியன் 441 வாக்குகளில் வீழ்ந்தார். காட்டுமன்னார்கோவிலில் வெறும் 87 வாக்குகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அதிமுக வேட்பாளரிடம் தோற்றார். பர்கூர் தொகுதியில் அதிமுகவின் ராஜேந்திரனிடம் திமுகவின் கோவிந்தராசன் 982 வாக்குகளில் தோற்றுப் போனார் செய்யூரில் திமுகவின் ஆர்.டி. அரசுவிடம் அதிமுகவின் முனுசாமி வெறும் 304 வாக்குகளில் தோல்வியைத் தழுவினார்.

தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியான நாம் தமிழர் கட்சி எங்குமே முன்னிலையில் இல்லாவிட்டாலும் கூட வாக்குகளைப் பெறுவதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்சிக்கு 1 சதவீத அளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. என்ன விசேஷம் என்றால் நீண்ட காலமாக அரசியல் களத்தில் ஏதாவது ஒரு வகையில் சக்தியாக திகழ்ந்து வந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோரையும், புதிதாய்ப் பிறந்த தமிழ் மாநில காங்கிரஸையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது நாம் தமிழர் கட்சி. இக்கட்சியின் தலைவர் சீமான் தமிழகம் முழுவதும் செய்த தீவிரப் பிரச்சாரம், இவரது கட்சியினர் நடத்தி வந்த தீவிர களப் பணி, இக்கட்சியின் வித்தியாசமான தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பலவற்றின் காரணாமாக இக்கட்சியும் மக்களின் பார்வையில் விழுந்துள்ளது.  சீமான் போட்டியிட்ட தொகுதியில் அவர் ஐந்தாவது இடத்தையே பிடித்தார்.


  ஜெயலலிதா ஆர். கே.நகர் இடைத்தேர்தலில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனை விட 39,537 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 1.50 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற ஜெயலலிதாவிற்கு இம்முறை குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார்.   இம்முறை திமுக சார்பில் வலுவான வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதோடு பலமுனை போட்டி நிலவியதும் காரணமாக உள்ளது.   ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழனை போட்டியிட்டார். தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக முன்னாள் துணை வேந்தரான வசந்தி தேவி போட்டியிட்டார்.  
   இதுவரை 9 முறை சட்டசபைத் தேர்தல்களில் ஜெயலலிதா போட்டியிட்டுள்ளார். தற்போது 7வது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார். ஒருமுறை அவர் தோல்வியடைந்துள்ளார்.  

2015ம் ஆண்டு இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து நின்ற மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் கட்டுப்பணத்தை  இழந்திருந்தனர். ஆனால், இம்முறை அவரின் வாக்கு வித்தியாசம் பாதியாகக் குறைந்துள்ளது. தனது முந்தைய சாதனையை தக்க வைக்க அவர் தவறியுள்ளார். காரணம் என்ன? கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து வலுவான எதிர்கட்சிகள் யாரும் போட்டியிடவில்லை. சிபிஎம் வேட்பாளர் மகேந்திரன் மட்டுமே போட்டியிட்டார். எனவே ஓட்டுக்கள் அனைத்து மொத்தமாக ஜெயலலிதாவிற்கு கிடைத்தது. இம்முறை திமுக, மக்கள் நலக்கூட்டணி, பாமக, நாம் தமிழர், பாஜக என பலமுனை போட்டி நிலவியது. எனவே வாக்குகள் அனைத்து பிரிந்ததே ஜெயலலிதாவின் வாக்கு வித்தியாசம் குறைய காரணமாக அமைந்துள்ளது.

திருவாரூரில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட கருணாநிதி  அதிக வாக்கு வித்தியாசத்தி;ல் வெற்றி பெற்றி வரலாற்றுச் சாதனை செய்துள்ளார். சொந்த ஊரான திருவாரூரில்  இரண்டு முறைபோட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்றும் முதல்வராக முடியவில்லை. அதே போல தான் ஸ்ரீ ரங்கம் எந்து பூர்வீகம் என கூறி ஜெயலலிதா போட்டியிட்டு வெற்ரி பெற்றும் முதல்வராக முடியவில்லை. சொந்த ஊர் இருவரின் காலையும் வாரிவிட்டது.

திருமாளவன், விஜயகாந்த், ஸ்டாலின் பெயர்களைக் கொண்ட வேட்பாளர்களை நிறுத்தி வாக்காளர்களை குழப்பியுள்ளனர் எதிர்கட்சியினர். சுயேட்சை திருமாவளவனால் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். இதேபோல் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எதிராக விஜயகாந்த் என்ற பெயரில் 2 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்த தொகுதியில் 3 விஜய்காந்த்களும் டெபாசிட் இழந்தனர். இதே தொகுதியில் பாமக வேட்பாளர் பாலு பெயரில் சுயேட்சை வேட்பாளர் பாலு என்பவர் போட்டியிட்டுள்ளார். இந்த சுயேட்சை வேட்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளனர். தேர்தலில் மக்களை குழப்ப, பிரதான வேட்பாளர் பெயரில் இன்னொரு வேட்பாளரை நிறுத்துவதென்பது கட்சிகள் கையாளும் ஒரு யுக்தி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட, அன்புமணி பெயரில் அன்புமணியை எதிர்த்து இன்னொரு வேட்பாளர் நின்றார். ஆனால், இதுவரை இதுபோன்ற யுக்தி வாக்கு சதவீதத்தில் எந்த பெரிய மாற்றத்தையும் கொண்டு வந்ததில்லை. ஆனால், இம்முறை ஒரு வேட்பாளரின் வெற்றியையே அது பறித்துவிட்டது.
 
ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற கோஷத்துடன் தேர்தலில் போட்டியிட்டவர்கள் தமது தலையில் மண்ணை அள்ளிப்போட்டுள்ளனர். தமது செல்வாக்குத் தெரியாமல்  அதிக தொகுதிகளுக்கு ஆசைப்பட்ட தலவர்களுக்கு அரசியல் என்றால் என்ன என்று தமிழக மக்கள் புரிய வைத்துள்ளனர்.

Sunday, May 15, 2016

தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தல்


அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் ஐந்து வருட ஆட்சியில் தமிழகம் முன்னேறியதா? அல்லது படுகுழியில்  விழுந்ததா?  என்பதைத் தீர்மானிக்கும்  தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தமிழகம் முன்னேறி உள்ளது. சட்டம் ஒழுங்கு  சிறப்பாக உள்ளது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி உயர்வடைந்துள்ளது என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌மும் தமிழகம் பின்தங்கி உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தொழில் துறை வளர்ச்சி அடையவில்லை என்று  எதிர்க்கட்சிகளும் பிரசாரம் செய்து ஓய்ந்து போயுள்ளன.

ஐந்து வருட ஆட்சியின் பயனை அறுவடை செய்ய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் தயாராக இருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌  ஆட்சியின் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் எதிர்க்கட்சிகள், வாக்காளர்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன. தமிழகத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டபோது எதிர்க் கட்சிகள் சிதறுண்டு இருந்ததனால் ஜெயலலிதாவுக்குச் சாதகமான நிலை  இருந்தது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றதனால் தமிழக சட்ட சபைத் தேர்தலிலும் துணிச்சலுடன் தனித்து களம் இறங்கி உள்ளார் ஜெயலலிதா. பலமான  கூட்டணி அமைத்தால் ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றலாம் எனக் கருதிய எதிரணித் தலைவர்கள்  வாக்கு வங்கி உள்ள கட்சிகளை நோக்கித் திரும்பினர்..


. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தனித் தனியே போட்டியிட்டதனால் படுதோல்வியடைந்த திராவிட முன்னேற்றக் கழக‌மும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இணைந்தன. திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கும் இடையே சுமார் ஐந்து சதவீத  வெற்றி வாய்ப்பு இருப்பதனால் விஜயகாந்தின் வருகையை கருணாநிதி பெரிதும் எதிர் பார்த்தார்.  கருணாநிதி முதலமைச்சராக இருந்த  போது  அவரை விட்டுக்கு அனுப்புவதற்காக ஜெயலலிதாவுடன் கை கோர்த்த விஜயகாந்த் இன்று ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றுவதற்காக முழு வீச்சில் களம் இறங்கவில்லை.
   திராவிட முன்னேற்றக் கழக‌ம், பாரதீய  ஜனதாக் கட்சி, மக்கள் நலக் கூட்டணி ஆகியவற்றுடன் ரகசியமாகவும் பகிரங்கமாகவும் பேச்சு வார்த்தை நடத்தி தனது நிலைமையை ஸ்திரப்படுத்துவதில் முனைப்பாக இருந்தார்.  விஜயகாந்த் வருவர் என்ற நம்பிக்கையில் பழம் நழுவி பாலில் விழும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டபின் நிம்மதியாகப் படுத்துறங்கினார் கருணாநிதி. காலையில் எழுந்து பார்த்த போது வைகோவின் பாசறையில் விஜயகாந்த் தஞ்சமடைந்திருந்தார். கருணாநிதியின் நிம்மதியைக் கெடுத்த வைகோவின் செயலால் ஜெயலலிதா மகிழ்ச்சியடைந்தார். கருணாநிதியும் விஜயகாந்தும்  சேரக்கூடாது என ஜெயலலிதா  விரும்பினார். ஜெயலலிதாவின் விருப்பத்தை வைகோ நிறைவேற்றியதால் கருணாநிதி நிம்மதி இன்றித் தவித்தார்.

ஜெயலலிதாவை எப்படி வீழ்த்தலாம்  என எதிர்க்கட்சிகள்  தலையைப் பிய்த்துக்கொண்டு இருந்தபோது ஜெயலலிதாவின் கோட்டைக்குள் இருந்து அவருக்கு எதிரானவர்கள் புறப்பட்டனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ அமைச்சர்களின்  நம்பிக்கைக்குரியவர்களின் வீடுகளில் இருந்து கோடிக்கணக்கான பணம்  கைப்பற்றப்பட்டது. தேர்தலைக் கண்காணிக்கும் பறக்கும் படையுடன் மத்திய அரசின் கீழ் உள்ள வருமானவரித்துறையும் கைகோர்த்துக்கொண்டு தேடுதல்களை நடத்துகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தை முடக்குவதற்காக மத்திய அரசு பின்னணியில் காரியமாற்றுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திராவிடக் கழகங்களுக்கு எதிரான பலமான அணியாக மக்கள் நலக் கூட்டணியை  கட்டி  எழுப்பிய வைகோ அதனை சிதறடித்துவிட்டார். திராவிட முன்னேற்றக் கழக‌மும் பாரதீய ஜனதாக் கட்சியும் விஜயகாந்துக்கு வலைவீசி காத்திருக்கையில் அவரை மக்கள் நலக் கூட்டணியில் இணைத்து பெருமிதமடைந்த வைகோ தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கியதால் மூன்றாவது அணி  கலகலத்துப் போயுள்ளது. வைகோவின் முடிவை கூட்டணித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வைகோ போட்டியிடாதது மக்கள் நலக் கூட்டணிக்கு பின்னடைவு என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

திராவிடக் கழகங்களுக்கு எதிரான வாக்குகள் மக்கள் நலக் கூட்டணிக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போயுள்ளது.  அந்த வாக்குகளை பாட்டாளி மக்கள் கட்சியும் சீமானின்  கட்சியும் பங்கு போடும் நிலை எழுந்துள்ளது. இந்த வாக்குகளால் அக்கட்சிகளால் வெற்றி பெற முடியாது.தேர்தலுக்கு முன்னரே மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் ஆளுக்கு ஒருபக்கம் நிற்பதால் அதன் மீது இருந்த நம்பிக்கை குறைந்துள்ளது.விஜயகாந்தின் நடவடிக்கைகள் கண்ணியம் மிக்க வாக்களர்களை சிந்திக்க வைத்துள்ளது.


அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் வேட்பாளர் தெரிவில் பாரிய தவறிழைத்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் வேட்பாளர்களாக  அறிவிக்கப்பட்டவர்களின் சந்தோசம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அவர்கள் மாற்றப்பட்டு புதியவர்கள் .அறிவிக்கப்பட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழக‌த்திலும் வேட்பாளர்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றதால் வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். மக்கள் சேவைக்காக தேர்தலில் போட்டியிடுபவர்களில் பலர்  கோடீஸ்வரர்கள். ஏழைகளை  எந்தக்கட்சியும் வேட்பாளர்களாக அறிவிப்பதில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சியின் வேட்பாளர்களில் 28 சதவீதம் பேர் தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

  திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் ,இந்திய  கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களில் அளித்திருக்கும் விவரங்களை ஆய்வுசெய்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு மற்றும் தமிழக தேர்தல் கண்காணிப்புக் குழு ஆகியவை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
சட்டமன்றத் தேர்தலில் 3776 பேர் போட்டியிடுகின்றனர். பிரதான கட்சிகளின் சார்பில் 997 பேர் போட்டியிடுகின்றனர்.து குறித்து பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் 16 பேர் மீது கடுமையான குற்றங்களைச் செய்துள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது எனத் தெரிவித்தார்.
பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் 157 பேர் தங்கள் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு போன்ற கடுமையான வழக்குகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி தொகுதி வேட்பாளரான ராமச்சந்திரன் மீது 3 கொலை வழக்குகளும்  திராவிட முன்னேற்றக் கழக கே.பி.பி சாமி,    பட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்  ஆர். ஹரிகரன் ஆகியோர் மீது தலா ஒரு வழக்கும் இருக்கிறது.
கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்கள்  திராவிட முன்னேற்றக் கழக த்தில்   41 பேரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  36 பேரும் உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் 37 வேட்பாளர்கள் மீது கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளன.

வழக்குகள் ஒரு புறமிருக்க இந்த முறை பிரதான கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துக்களின் மதிப்பும் அதிகரித்துள்ளது.
வேட்பாளர்களின் சராசரி வருமானம் 4.35 கோடி எனத் தகவல்
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 4.35 கோடி எனவும் ஜெயராம் வெங்கடேசன் பிபிசியிடம் கூறினார்.
பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடும் 997 வேட்பாளர்களில் 553 வேட்பாளர்கள் ஒரு கோடிக்கு மேல் சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களில் 32 பேருக்கும்  திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களில் 133 பேருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக. வேட்பாளர்களில் 156 பேருக்கும் ஒரு கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது.
அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி தொகுதியின் வேட்பாளர் எச் வசந்தகுமார் தனக்கு சுமார் 337 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 113 கோடி ரூபாய் சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். கருணாநிதியின் சொத்தும் அதிகரித்துள்ளது.

 தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின்  5.75 சதவீத  வாக்கு இழப்பால்  திராவிட முன்னேற்றக் கழக‌ம் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக என்டிடிவியின் நிறுவனர் பிரணாய் ராய் கருத்து தெரிவித்துள்ளார்.  .   கடந்த கால தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று பிரபல கருத்துக் கணிப்பியல் நிபுணரும்   என்டிடிவி நிறுவனருமான பிரணாய் ராய் குழு கணித்துள்ளது. இதன்படி இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் 5 முதல்வர் வேட்பாளர்களோடு கட்சிகள் களத்தில் நிற்கின்றன. இதில் 36.5 சதவீத வாக்குகளை பெறும் அணி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என்றும் அதோடு தற்போதைய நிலையில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ அணியிலிருந்து 5.75 சதவீத வாக்குகள் பிரிந்து  திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்குச் செல்லும் நிலையே உள்ளது

 1984-ம் ஆண்டிற்கு பிறகு தமிழக மக்கள் ஒருமுறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் மறுமுறை  திராவிட முன்னேற்றக் கழக‌ம் என்றே வாக்களித்து வந்துள்ளனர். அதோடு சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியமைக்கும் கட்சி அடுத்த தேர்தலில் பெருவாரியான வாக்கு சதவீதத்தை இழந்து தோல்வியையே தழுவியுள்ளது. இதுவும் வரலாறு. கடந்த 2011 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ கூட்டணி 203 இடங்களை கைப்பற்றியது அதுபோல 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் கைப்பற்றியது. இது சட்டசபை தேர்தலில் 217 இடங்களை பெறுவதற்கு சமமான வெற்றியாகும். இந்த தேர்தலை பொறுத்தமட்டில் இதுவரை இல்லாத அளவில் 3 வது அணியாக சிறு சிறு கட்சிகளை கொண்ட மக்கள் நலக் கூட்டணியானது விஜயகாந்த் தலைமையில் 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது. அன்புமணி ராமதாஸ் தலைமையில் பட்டாளி மக்கள் கட்சியும்  232 தொகுதிகளில் தேர்தலை சந்திக்கிறது.சீமானின் கட்சியும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இது பல்வேறு வகைகளில் வாக்குகளை பிரிப்பதால் 36.5 சதவீதம் வாக்குகள் பெறும் கட்சி   ஆட்சி அமைக்க முடியும். 

தமிழக சட்ட சபைத் தேர்தலில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும். எந்தக் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்.வெற்றி பெறும் தலைவர் யார்? எத்தனை வாக்குகளால் வெற்றி பெறுவார்.தோல்வியடையும் தலைவர் யார்?  போன்ற கேள்விகளுடன் பந்தயம்  பிடிப்பவர்கள் இரகசியமாக களம் இறங்கி உள்ளனர்.  தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட போது ஜெயலலிதாவின் பக்கம் வெற்றி அலை இருந்தது. ஆகையினால்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ ஆட்சியைத் தக்க வைக்கும்  என்று அதிகமானோர் பணம் கட்டியுள்ளனர்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம்  வெற்றி பெற்றால் பல மடங்கு பணம்  கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதனால்  திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் வெற்றிக்காக பந்தயம் பிடிப்போர் மறை முகமாக வேலை செய்வதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிருத்தப்படும் மூன்று  முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுமே வயது முதிர்வு மற்றும்  ஆரோக்கிய குறைபாடால் அவதிப்படுவது இந்த தேர்தலின் ஒரு பெரும் சோகம். 93 வயதில் காலடி எடுத்து வைக்க உள்ள கருணாநிதியால் நடக்க முடியாது. 69 வயதாகும் ஜெயலலிதாவில் நின்றபடி பேச முடியவில்லை. இவர்களுக்கு மாற்றாக வந்துள்ளேன் என்று கூறிய விஜயகாந்த்தால் பிறர் உதவியின்றி நடக்க முடியவில்லை.  கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு உள்ளது. விஜயகாந்தின் நிலை பரிதாமாக உள்ளது
.இரண்டு கைகளையும்  குவித்து கும்பிட்ட வேட்பாளரின் தலைவிதியை எழுதுவதற்கு தமது ஆள்கட்டி விரல் மூலம் பதிலளிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.
வர்மா


Monday, May 9, 2016

அரசியல் ஆட்டத்தில் விளையாட்டு வீரர்கள்


இந்திய அரசியலில் சினிமாவின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. விளையாட்டு வீரர்களும் அரசியலில் தமது செல்வாக்கை வெளிப்படுத்தினார்கள். தமிழாக்கம்,கேரளா,புதுச்சேரி,மேற்கு வங்கம் அஸாம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் தற்பொழுது நடைபெறுகிறது.  தமது கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள் ரசிகர்களின் அபிமானம் பெற்ற விளயாட்டு வீரர்களை களம் இறக்கி  உள்ளது. சித்து .அசார் ஆகியோர் முன்னர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். தற்பொழுது சச்சின் டெண்டுல்கர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். கிரிக்கெற் வீரர்களான ஸ்ரீ  காந்த்,லக்ஷ்மி ரத்தன் சுக்லா ,உதைபந்தாட்ட வீரரான பாய்ச்சங் பூட்டியா, தடகள வீராங்கனையான ஜோதிர்மயி சிக்தர் ஆகியோர் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கேரளா சட்ட சபைத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் ஸ்ரீ சாந்த் போட்டியிடுகிறார்.வேகப்பந்து  வீச்சாளரான ஸ்ரீ சாந்த்  மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.ஆறாவது ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஸ்ரீ சாந்த் சூதாட்ட புகாரில் குற்றம் சாட்டி கைது    செய்யப்பட்டார்.  டெல்லி உஅயர் நீதி மன்றம் அவர் மீது குற்றம் இல்லை எனக் கூறி விடுதலைசெய்தது..ஆனால், இந்திய கிரிக்கெட் சபை ஸ்ரீ சாந்துக்கு  வாழ் நாள் தடை விதித்து அவருடைய கிரிக்கெற் வாழ்க்கையை  குழி தோண்டிப் புதைத்துவிட்டது. நீதி மன்றம் ஸ்ரீ சாந்தை விடுதலைசெயதும் இந்திய கிரிக்கெற் சபை அவரை  முடக்கி வைத்திருக்கிறது. அந்தப் பதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்த ஸ்ரீ சாந்த்  தேர்தலில் வெற்றி பெற்று புகழின் உச்சத்துக்குச் செல்வர் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்திய உதை பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரான பாய்ச்சங் பூட்டியா இந்திய உதைபந்தாட்ட அணிக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்தவர்.மேற்கு வங்கத்திலுள்ள சிலிகுரி   தொகுதியில்  திரிணாமூல்  காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டார்லிங் தொகுதியில் போட்டியிட்டு பாரதீய ஜனதாக் கட்சி வேட்பாளர் சுரிந்தர் சிங்கிடம்  தோல்வியடைந்தார்.சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் அசோக் பட்டர்ச்சாரியவை எதிர்த்துப் போட்டியிடுகிறார். சிலிகுரி தொகுதியில் அசோக்  பட்டர்ச்சாரியா தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவர். ஆகையினால் பூட்டியாவின் பாய்ச்சல் பலிக்காது என்ற கருத்து உள்ளது.

தடகள வீராங்கனையான ஜோதிர்மயி சிக்தர் ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றவர்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மேற்கு வங்க சோனப்பூர் வடக்கு தொகுதியில்  சிபிஎம் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

கிரிக்கெற் வீரரான  லக்ஷ்மி ரத்தன் சுக்லா  கடந்த ஆண்டு ஒய்வு பெற்றார். முதல் தர போட்டிகளில் விளையாடிய சகலதுறை வீரரான இவர் ஒருநாள் போட்டி அணியிலும் இடம் பிடித்தார் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் ஹவுரா வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.உதைபந்தாட்ட வீரர்களான சையது ரகீம் நபி , திபீன்று  பிஸ்வாஸ் ஆகியோரும்  திரிணாமூல் காங்கிரஸ் வேட்பளர்களாக போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவின் பின்னர் இவர்களுடைய அரசியல் பாதை வெளிச்சமா இருட்டா என்பது தெரிய  வரும்.

கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பறிகொடுக்கும் என்றே பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறிவந்தன. இந்த நிலையில் கடந்த வாரம் வெளியான புதிய கருத்து கணிப்பில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் தமிழகத்தைப் போல வரும் 16-ஆம் திகதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனநாயக ,மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய 3 அணிகள் களத்தில் உள்ளன.

இதில் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி ஆகியவற்றுக்கு  இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரையிலான பெரும்பாலான கருத்து கணிப்புகள் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவர் எனக் கூறி வந்தன. இந்நிலையில் மார்ஸ் மற்றும் புஷ் ஏஜென்ஸி ஆகியவை இணைந்து தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை  வெளியிட்டன. அதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 69 முதல் 73 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 65 முதல் 69 இடங்களைக் கைப்பற்றக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 45 சதவீத வாக்குகளும் இடதுசாரி கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகளும் இதர கட்சிகளுக்கு 12 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் மதுவிலக்கு கொள்கைதான் அந்த கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பை அதிகரித்திருப்பதாக 90 சதவீதமானவர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் சோலார் பேனல் ஊழல் காங்கிரஸுக்கு பெரும் பாதகமாக உள்ளதாகவும் பெரும்பாலான வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  இந்தக் கருத்துக் கணிப்பினால் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.
ரமணி