இந்திய
நாடாளுமன்றத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றபோது பணப்பட்டுவாடா புகாரில் இடை நிறுத்தப்பட்ட வேலூர்
நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி
பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொருளாளர் துரை முருகனின்
மகன் கதிர் ஆனந், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் வேட்பாளராக புதிய நீதிக்
கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் பிரதான வேட்பாளராக கடந்த ஏப்ரல் மாதம் வேட்புமனுத்
தாக்கல் செய்தனர். துரை முருகனுக்குச் சொந்தமான வீடு,அலுவலகங்கள், அவருடைய உறவினர்,நண்பர்கள்
வீடுகளில் நடைபெற்ற சோதனையில் பதுக்கி வைத்த பணம், ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டதால்
அப்போது இடை நிறுத்திவைக்கப்பட்ட தேர்தல் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்றது.
ஸ்டாலின்,
எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இரண்டு தலைவர்களையும் எடைபோடும் தேர்தலாக வேலூர் தொகுதியின்
முடிவு நோக்கப்பட்டது. இரட்டைத் தலைமையால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தடுமாறுகிறது.
ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் பன்னீர்ச்செல்வத்தின் மகன் மட்டும் வெற்றி பெற்றதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்
அவரின் செல்வாக்கு அதிகரித்ததாகக் கருதப்பட்டது. அதனால் சண்முகத்தின் வெற்றி எடப்பாடிக்கு அவசியமாக இருந்தது. அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தில் எடப்பாடியின் கை ஓங்கி
இருந்தாலும் பன்னீருக்கு இருக்கும் செல்வாக்கு எடப்பாடிக்கு இல்லை என்பதே உண்மை.திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஸ்டாலினுக்குப்
போட்டியாக தலைவர்கள் யாரும் இல்லை.
ஏ.சி.சண்முகம்
இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட்டார். வேலூரில் செல்வாக்கு மிக்கவர் சண்முகம்.
2014 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதாவின் ஆதரவுடன் போட்டியிட்ட சண்முகம்
3,34,326 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்
கழக வேட்பாளர் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.வேலூரில் சண்முகத்தின் கல்விச்சாலை
உள்ளது, அங்குள்ள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுக்கொடுத்துள்ளார்.மக்களுடன்
மிக நெருக்கமாகப் பழகுபவர் போன்றவை அவருக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. துரை முருகனின் குடும்பம்
சென்னையில் வாழ்ந்தாலும் அவருக்குப் பரீட்சயமான தொகுதியான வேலூர் அவரது மகனைக்
கைவிடவில்லை.
அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் சண்முகத்துக்கு எதிர்ப்பு இல்லை. கதிர் ஆனந்துக்கு
அவருடைய கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் துரை முருகனைக்
குறிவைத்து நடத்தப்பட்ட சோதனைக்கான ஆதரங்கள் உள்ளிருந்தே கசிய விடப்பட்டதாக அப்போது
செய்திகள் வெளியாகின. மூத்த தலைவரின் வாரிசு எம்பியானால் இரண்டாம் கட்டத் தலைவர்கள்
முன்னேற முடியாது என்பதால் உள்ளுக்குள் எதிர்ப்பு இருந்தது அதனால்தான் கதிர் ஆனந்த்
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேலூர்
தொகுதியின் தபால் வாக்குகள் எண்ணப்பட்டபோது சண்முகம் அதிகளவு வாக்குகளைப் பெற்று முன்னிலையில்
இருந்தார். முதல் நான்கு சுற்றுகள் சண்முகம் முன்னிலை பெற்றார், 5 முதல் 12 சுற்றுகள்
வரை கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். 13 முதல் 18 சுற்றுகள் வரை சண்முகம்முன்னிலை பெற்றார்.
மாறி மாறி இருவரும் முன்னிலை பெற்றதாலும் வாக்கு
வித்தியாசம் அதிகமில்லாததாலும் யார் வெற்றி பெறுவார் என கணிக்க முடியாதிருந்தது.
18 ஆவது சுற்றின் பின்னர் கதிர் ஆனந்தின் கை ஓங்கியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீப
லட்சுமி தடுத்துவிட்டார். தீப லட்சுமியின் வாக்கு குறைவாக இருந்தபோது ஏ.சி.சண்முகம்
வெற்றிப் பாதையை நோக்கிச் சென்றார். தீப லட்சுமியின் வாக்கு அதிகரித்தபோது சண்முகத்தின்
வெற்றிப்பயணம் தடைப்பட்டு கதிர் ஆனந்தின் வெற்றி உறுதியானது.வாக்கு எண்னும் மைஅயட்தில் கதிர் ஆனந்த் இருந்தார். ஏ.சி.சண்முகம் அருகில் இருந்த விடுதியில் தங்கி இருந்தார்.
வேலூர்
தொகுதியில் 71.51 சதவீத வாக்கு பதிவானது. கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகலும், தீப லட்சுமி
26,995 வாக்குகளும் பெற்றனர். 8,141 அதிகப்படியான வாக்குகளால் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். வேலூரில் மூன்று இலட்சம் இஸ்லாமிய வாக்குகள்
இருந்தமையால் இரண்டு பிரதான கட்சிகளும் அந்த வாக்கைக் குறிவைத்து பிரசாரம் மேற்கொண்டனர்.
வேலூரில் பாரதீய ஜனதாக் கட்சி தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் அனுமதியளிக்கவில்லை. பாரதீய ஜனதாக் கட்சி களம் இறங்கினால் இஸ்லாமியரின் வாக்குகள் கிடைக்காது என்பதை
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உணர்ந்திருந்தது.
தேர்தல் முடிவு அதனை வெளிப்படுத்தியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பதாகைகள் மோடியின்படம் காட்சிப்படுத்தப்படவில்லை. ஏ.சி.சண்முகம்
தனது பிரசாரத்தில் மோடியை முன்னிலைப்படுத்தினார்.
சண்முகம் வெற்றி பெற்றிருந்தால் எடப்பாடி அவரை அமைச்சராக்கி பன்னீருக்கு நெருக்கடி
கொடுக்க முயற்சித்திருப்பார்.
துரை
முருகனின் மகனைத் தோற்கடிக்க கங்கணம் கட்டி பிரேமலதா பிரசாரம் செய்தார். பிரேமலதாவின்
கட்சியை துரை முருகன் அவமானப் படுத்தியதால் அவரைப் பழிவாங்க பிரேமலதா முன்னின்றார்.
ஆனால், அவரின் ஆம்பூர் தொகுதிஅயில் கதிர் ஆனந்த் அதிக வாக்குகள் பெற்றார். கதிர் ஆனந்தின் வெற்றியைத் தனது மகன்
உதயநிதியின் வெற்றியாகவே ஸ்டாலின் கருதுகிறார். வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்ய கனிமொழிக்கும்
திருமாவளவனுக்கும் அனுமதி கொடுக்கபப்படவில்லை. கனிமொழி இல்லமல் உதயநிதியின் பிரசாரத்தில்
வெற்றி பெற வேண்டும் என்பதே ஸ்டாலினின் விருப்பம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்தால் அங்குள்ள சில சாதியினர் வாக்களிக்க மாட்டார்கள்
என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தேசிய
புலனாய்வு முகாமை அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு
திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்கியதால்
இஸ்லாமியரின் வாக்கு திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைக்காது எனக் கருதப்பட்டது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் இஸ்லாமியரின் வாக்குகள்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைக்கவில்லை. பாரதீய ஜனதாக் கட்சிக்கும்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் எதிரான மனநிலையில் இருந்து தமிழக மக்கள் இன்னமும்
மாறவில்லை என்பதை வேலூர் தேர்தல் முடிவு வெளிபடுத்துகிறது.