Tuesday, January 31, 2017

ராஜ ஶ்ரீகாந்தனின் "காலச் சாளரம்

எழுத்தாளர் ராஜ ஶ்ரீகாந்தன் அவர்களைப் பற்றிப் புலம் பெயர்ந்த பின்பு தான் அதிகம் அறிந்து கொண்டேன். நான் தாயகத்தில் இருந்த போது மல்லிகை இதழில் அவரின் எழுத்துகளைப் படித்திருக்கக் கூடும். அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் "ராஜ ஶ்ரீகாந்தன் நினைவுகள்" என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அவர் வழியாகவும், மறைந்த அன்புச் சகோதரி, எழுத்தாளர் திருமதி அருண்விஜயராணி வழியாகவும் அவர் பற்றி அறிமுகம் கிட்டியது, ஏன் இந்த நூல் கூட அருண் விஜயராணி அக்கா தன்னிடமிருந்த ஒரு தொகுதி நூலை எனக்கு அனுப்பிய போது கிட்டியது தான்.
காலச் சாரளம் என்ற நூல் ராஜ ஶ்ரீகாந்தன் அவர்களுடைய முதலாவது சிறுகதைத் தொகுதியாக, எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் ஓகஸ்ட் 1994 இல் வெளியிட்டது.
ஈழத்தின் வடமராட்சிப் பிரதேசத்தின் குறிச்சியாக விளங்கும் வதிரி மண்ணின் மைந்தன் ராஜ ஶ்ரீகாந்தன். காலச் சாளரம் சிறுகதைத் தொகுதியின் 12 சிறுகதைகளில் மண் வாசனை தழுவிய கதைகள் வரணி மண்ணையே பகைப்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.
ராஜ ஶ்ரீகாந்தன் அவர்களுடைய எழுத்தைப் புதிதாக நுகரும் வாசகனாகவே அணுகி இந்தச் சிறுகதைத் தொகுதியை வாசித்து முடித்த போது எழுந்த உணர்வு என்னவெனில், தான் எடுத்துக் கொண்ட கதைப் பொருளை எடுத்து அமர்த்தும் அந்த உலகத்தை வாசகனுக்குக் காட்ட முனையும் போது கையாளும் வர்ணனை, அவரின் தொழில் சார்ந்த அனுபவங்களைக் கதைகளின் ஓட்டத்துக்குக் கையாண்ட திறன் இவற்றின் மூலம் ஈழத்தின் மிகச் சிறந்த கதை சொல்லியாக மனதில் அமர்கிறார். இவர் எழுதியவை சொற்பம், இன்றைய வாசகர்களுக்கும் இவை பரவலாகப் போய்ச் சேர இந்தச் சிறுகதைகளைப் பத்திரிகைகளில் மீள் பிரசுரம் செய்தல் வேண்டும் என்னுமளவுக்கு இந்த எழுத்தின் முக்கியத்தை உணர்கிறேன்.
தமிழர் பிரதேசங்கள் பரவலாக இராணுவ அச்சுறுத்தலை எதிர்நோக்கினாலும் வடமராட்சியைப் பொறுத்தவரை மற்றைய இடங்களுக்கு முன்னோடியாகப் போரியல் வாழ்வின் நெருக்கடிகளை எண்பதுகளில் சந்தித்திருக்கிறது. வான் குண்டுத் தாக்குதல் மட்டுமன்றி இராணுவத்தின் நேரடி அச்சுறுத்தல்களும் நிலவிய சூழல் அமைந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்து வாழ்வியல் வரலாறு இங்கே பதியப்பட்டிருக்கிறது.
இந்த சிறுகதைத் தொகுதியில் மிக முக்கியமான படைப்பாக "தத்து" என்ற படைப்பு அமைந்திருக்கிறது. கிராமத்துக் கிழவிக்கும் அடைக்கலம் தேடிவந்த போராளிகளுக்குமான உறவு முறை அங்கே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிறுகதையில் யாழ்ப்பாணத்துக் கிராமத்தின் வாழ்வியல் வெகு இயல்பாகக் காட்டப்பட்டிருப்பதோடு கதையின் முடிவை நகர்த்திய விதம் வெகு சிறப்ப்ய். "தத்து" சிறுகதை தன்னுடைய படைப்பு அத்தனையையும் படித்த தன் தாய்க்கு மிகவும் பிடித்தது என்கிறார் ராஜ ஶ்ரீகாந்தன். வெலிகடை மத்திய சிறைச்சாலையில் இருந்து மு.கந்தவரோதயன் என்ற அரசியல் கைதி இந்தக் கதையைச் சிலாகித்து எழுதிய கடிதமும் பகிரப்பட்டிருக்கிறது.
வட தமிழீழத்தின் மீதான மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக 1987 இல் வடமராட்சி நோக்கி முன்னெடுக்கப்பட்ட ஒபரேஷன் லிபரேஷனின் தாக்கத்தை, இழப்புகள் தந்த துயர் தோய்ந்த வடுக்களை வரலாற்றுப் பதிவாக்குகிறது "அரை ஞாண் தாலி" .
போர்க்காலக் கதைகளில் வரும் காட்டிக் கொடுப்பவன், இராணுவத்தின் அத்துமீறல் போன்றவற்றைப் படிக்கும் போது அக்காலச் சூழலில் இவற்றை எதிர்கொண்டவர்கள் நெருக்கடியான வாழ்வியலோடு அவற்றைப் பொருத்திப் பார்க்க முடியும்.
ஒரு எழுத்தாளனை இவர் இப்படியான தோரணையில் தான் எழுதுவார், இவரின் படைப்புகள் இந்த மாதிரியான வாழ்வியல் பண்புகளைத் தான் கையாளும் என்ற தோற்றப்பட்டை மறுதலிக்குமாற் போல "ஓர் உண்மைக் காகம் செத்துப் போச்சு", "ஜேன் ஆச்சி" ஆகியவை முற்றிலும் மாறுபட்ட உலகத்தில் சஞ்சாரிக்கும் படைப்புகள்.
போரியல் வாழ்வில் ஒரு சாதாரணன் எதிர்கொள்ளும் அவமானங்களையும், வலியையும் பதிவாக்குகிறது "நினைவுத் தடத்திலொரு கொடிய வடு".
"நண்பனை இனம் புரிந்து கொண்டான்" சிறுகதையில் தான் மாலுமியாகப் பணி புரிந்த அனுபவங்கள் கை கொடுக்க, நடுக்கடலில் குத்திட்டு நிற்கும் கப்பலில் நிகழ்ந்தவைகளை நேர்த்தியான விபரணை மூலம் கையாளுகிறார். இந்த மாதிரியான கதைகளுக்கு குறித்த துறை சார் அனுபவங்கள் எவ்வளவு தூரம் கை கொடுக்கும் என்று உணர முடிகிறது.
அபலைக்கு இன்னொரு அடித்தள வாழ்க்கை கொண்டவர் தான் ஆதரவு என்ற தொனியில் எழுதப்பட்ட "உயர்குலத்து உத்தமர்கள்" சமூகத்தில் போலி முகத்தோடு சமூக சேவையாளராக வலம் வருவோரின் முகத்திரையைக் கிழிக்கிறது.
நெருக்கடியான சூழலில் சைவத்தின் பாதுகாவலராக இயங்கிய ஆறுமுக நாவலரின் சாதீய அணுகுமுறையை மிகவும் எள்ளலோடு பதிவு செய்கிறார் ராஜ ஶ்ரீகாந்தன்.
அதே வேளை சமூகப் போராளி சூரன் அவர்கள் முன்னெடுத்த கல்விப் பணியையும் பாத்திரத்தினூடு வெளிக் கொணருகிறார்.
வரலாற்றில் மறக்க முடியாதவற்றைப் புனைகதைகளில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் சேர்க்கும் திறனைச் சிறுகதை புனைவோர் இவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.
"
காலத்தின் கதவுகள்" புரையோடிப் போயிருக்கும் சாதீய விஷம் குறித்துப் பேசுகிறது.
போர் நெருக்கடியிலும் இந்தச் சாதீய வரட்டு ஈழத்தவரிடையே பிணைந்திருப்பதையும் தன் கதைக் களனின் பாத்திரங்கள் வழியே பகிர்கிறார்.
உயரச் செல்பவர்களெல்லாம் உயர்ந்தவர்களல்ல, யதார்த்தம் போன்ற சிறுகதைகள் மன விசாரம் செய்து கொள்ளும் பாணியில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
"சமூக வாழ்க்கையினை, சம கால வரலாற்று நிகழ்வுகளை உள்வாங்கி, அவற்றைத் தெளிவான சிந்தனைத் தளத்தில் புடமிட்டு, தேவையான போது கடந்த கால நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி, கற்பனைச் சுவை சேர்ந்து "வாசிக்கின்ற" மனிதர்களுக்குப் பயனுள்ள கருத்துகளைக் கலையம்சத்துடன் தருபவனே "படைக்கின்ற" மனிதன். யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான தொடர்புகளைச் சரியான விகிதத்தில் அழகியல் அம்சங்களுடன் பேணுவதிலேயே படைக்கின்ற மனிதனின் ஆற்றல் தங்கியுள்ளது." என்கிறார் ராஜ ஶ்ரீகாந்தன்.
தொண்ணூறுகளுக்குப் பின்னான ஈழத்துயரத்தை இவ்வகைப் படைப்புகளூடே எடுத்து வர ராஜ ஶ்ரீகாந்தம் தற்போது நம்மிடையே இல்லை என்ற ஏக்கமும் எழுகிறது.
காலச் சாளரம் சிறுகதைத் தொகுதி ஈழத்து நூலகத்திலும் கிடைக்கிறது.

கானா பிரபா.



Saturday, January 28, 2017

வன்முறையில் முடக்கப்பட்ட அறவழிப்போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை  நீக்கக்கோரி தமிழகத்தில் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்ட அறவழிப் போராட்டம் கலவரம், கல்லெறி, தீவைப்பு,  கண்ணீர்ப்புகைக்குண்டு வீச்சு,தடியடி ஆகியவற்றுடன் பொலிஸாரால் முடித்து வைக்கப்பட்டது. தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டு எனப் பெருமையாக உரிமை கோரப்படும் ஜல்லிக்கட்டுக்கு பீட்டா எனும் வெளிநாட்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தின் மூலம் தடைவிதித்தது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத ஜல்லிக்கட்டை இந்த வருடம் நடத்த வேண்டும் என   விரும்பிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டங்களை நடத்தினர்.

ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவாக கிராமப்புறங்களில் ஆரம்பமான போராட்டங்கள் நகரங்களுக்குப் பரவியது. கிராமத்தவன்  பட்டணத்துக்காரன் என்ற வேறுபாடு நிர்மூலமாகி தமிழ்ப் பாரம்பரியம் என்ற அடையாளம் தமிழகத்தை ஒன்று திரட்டியது. ஜனவரி மாதம் 16 ஆம் திகதி மெரீனாவில் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அறவழிப் போராட்டம் உலகையே அதிசயத்துடன் திரும்பிப் பார்க்க வைத்தது. எந்த ஒரு நல்ல காரியத்துக்கும் தமிழர்கள்  ஒற்றுமையாக நிற்க மாட்டார்கள் என்ற அவப்பெயர் மறைந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய சில மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அறவழிப் போராட்டம் தமிழகத்தை நேர்கோட்டில் பயணிக்க வைத்தது.


மாணவர்களின் போராட்டத்தினால் கவரப்பட்ட இளைஞர்களும்  பொதுமக்களும் தாமாகவே முன்வந்து மெரீனாவில் குவிந்தனர். நூறு ஆயிரமானது ஆயிரம் இலட்சமானது. தடை ஏதும் இன்றி வருடா வருடம் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும், ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கிய பீட்டா அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒரே குரலில் ஒலித்தது. சென்னையில் ஓங்கி ஒலித்த குரல் . திருச்சி,மதுரை,கோவை ஆகிய நகரங்களிலும் அதிர்ந்தது.
 அரசியல்வாதிகளும் சினிமா நடிகர்களும் வரவேண்டாம் என மெரீனாவில் கூடிஇருந்தவர்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்பு பொதுமக்களைப் பெரிதும்கவர்ந்தது. தலைமை இல்லாத அந்தப் போராட்டம் இரண்டொரு நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என தமிழக அரசும் மத்திய அரசும் எதிர்பார்த்தன. அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. தலைமை இல்லாது ஒரே குறிக்கோளுக்காகக் கூடியவர்கள் உறுதியாக இருந்தனர். அமெரிக்கா,கனடா,இங்கிலாந்து,அவுஸ்திரேலியா, சவூதி அரேபிய, டோகா,இலங்கை  உட்பட 14  நாடுகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான  போராட்டங்கள் நடைபெற்றன. அமெரிக்காவில் உள்ள பீட்டாவின் தலைமையகத்துக்கு முன்னால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகம் ரயில் மறியல் போராட்டம் நடத்தியது. கழகத் தலைவர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். பொது மக்களுக்கு  இடைஞ்சல் கொடுத்த  ரயில் மறியல் போராட்டம் பொது மக்களுக்கு தொந்தரவு கொடுக்காத மாணவர்களின் போராட்டத்தின் முன்னால் பொசுங்கிவிட்டது. மாணவர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் ஒருநாள் அடையாள போராட்டம் நடத்தியது. கமல்,ரஜினி,அஜித் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாணவர்களின் எழுச்சியின் முன்னால் நட்சத்திரங்கள் ஒளி இழந்தன.

தைப்பொங்கலுக்கு முன்னர் சாதகமான தீர்ப்பு வரும் என தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர். வழக்கு விசாரணை  தள்ளிப் போனதால் அவர்கள் மெளனமாகினர். தமிழக சட்ட சபையில் அவசர சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டை நடத்த வகை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்களும் சட்ட அறிஞர்களும் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கினர். எதையாவது செய்து  ஜல்லிக்கட்டை நடத்த வேண்டிய நெருக்கடியில்  பன்னீர்ச்செல்வ‌த்துக்கு ஏற்பட்டது.  அவசர அவசரமாக டெல்லிக்குச்சென்று பிரதம் மோடியைச்சந்தித்த பன்னீர்ச்செல்வ‌த்துக்கு உடனடியாகத் தீர்வு  கிடைக்கவில்லை.  ஜல்லிக்கட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால் உதவி செய்ய முடியாது. தமிழக அரசு என்ன செய்தாலும் உடனிருப்பேன் என மோடி உத்தரவாதம் கொடுத்தார்.

தமிழகத்தில் உருவாகிய  ஜல்லிக்கட்டு அரசியல் டில்லியில் முடிவுக்கு வந்தது.  ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஏதுவாக சகல உதவிகளையும் மத்திய அரசு செய்தது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று அமைச்சுகள் ஜல்லிக்கட்டு  நடைபெற அனுமதி அளிக்கப்போவதாக உறுதிமொழி கொடுத்தன.மத்திய அரசின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட அவசரச்சட்டத்துக்கு  ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். திராவிட முன்னேற்றக் கழகம் அட்சியில் இருந்தபோது இயற்றப்பட்ட அவசரச்சட்டம்  ஜனாதிபதியின் ஒப்புதல் இன்றி நிறைவேற்றப்பட்டது.. இப்போது நிறைவேற்றப்பட்ட அவசரச்சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்பபுதல் அளித்துள்ளார். தமிழக சட்ட சபையில்  நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பினால் அங்கும் தடை இன்றி நிறைவேற்றப்படும். அதன் பின்னர் நீதிமன்றத்துக்குப் போனாலும் ஜல்லிக்கட்டைத் தடை செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து தடை செய்த ஜல்லிக்கட்டை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பாரதீய ஜனதாக் கட்சியும் சேர்ந்து தடையை நீக்கின.ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் ஆதரவு தமக்குக் கிடைக்கும் என இந்திய மத்திய  அரசும் தமிழக அரசும் கருதின.  இது மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றி  என்பதில் தமிழக மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை  நீங்கிவிட்டது. வாடிவாசல் திறக்கப்படும் காளைகள் துள்ளிப்பாயும். ஜல்லிக்கட்டு எனது தலைமையில் நடைபெறும் என டில்லியில் பன்னீர்ச்செல்வ‌ம் முழங்கினார்
ஜல்லிக்கட்டை நடத்துவதற்குரிய ஏற்பாட்டை தமிழக அரசு செய்தது. முதலமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் ஜல்லிக்கட்டுக்குத் தலைமை வகிக்க தயாரானார்கள். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனப் போராடிய மாணவர்கள் தமிழக அரசின் ஜல்லிக்கட்டுக்குத் ஒப்புக்கொள்ளவில்லை. வெறும் வாய்வார்த்தை அரசியலை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. மெரீனாவில் குவிந்துள்ள மக்களை அப்புறப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலையில் தமிழக அரசு சிக்கியது. இந்திய குடியரசு தினத்துக்கு முன்னர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய நெருக்கடிநிலை உருவானது.


ஜல்லிக்கட்டை நடத்திவிட்டால் போராட்டங்கள் அனைத்தும் கைவிடப்படும் என நினைத்த தமிழக அரசு  மதுரையில் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு துரிதமாக ஏற்பாடு செய்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை  ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.ஜல்லிக்கட்டை ஆரம்பித்து வைப்பதற்காக மதுரைக்குச்சென்ற முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் திருப்பி அனுப்பப்பட்டார். ஜல்லிக்கட்டுத் தடையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நீக்கியது என்பதைப் பறைசாற்றுவதற்காக  தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டை நடத்த முற்பட்டபோது மாணவர்களும்  போராட்டக்காரர்களும் தடுத்து  நிறுத்தினர். இவற்றை  முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் ஏற்பட்ட அவமானமாகவே தமிழக அரசு பார்த்தது.

அவசரகாலச்சட்டத்துக்காக  23 ஆம் திகதி திங்கட்கிழமை தமிழக சட்ட சபை கூட உள்ளது. அதன் பின்னர் வெற்றிக் கொண்டாட்டத்துடன் வீடு திரும்பலாம் என போராட்டக்காரர்கள் நினைத்தனர்.ஒரு கிழமை நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில் இலட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை.பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எதுவித இடையூறும் ஏற்படவில்லை.குப்பைகள் கஞ்சல்கள்  இல்லாத சுத்தமாக மெரீனா காட்சியளித்தது.  திங்கட்கிழமை அதிகாலை வழக்கத்துக்கு மாறாக  அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.   மெரீனாவுக்குச் செல்லும்பாதை மூடப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு விட்டதால் அனைவரும் களைந்து செல்ல வேண்டும் என பொலிஸார் அறிவித்தனர். போராட்டக்காரர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.  இரண்டு மணிநேரத்தினுள் கலைந்து செல்லுமாறு கோரப்பட்டது.

பொதுமக்களின் நண்பன் எனக்கூறும்  பொலிஸ் தனது சுய முகத்தை வெளிக்காட்டியது.  ஆண்,பெண் என்ற பேதமின்றி ,சிறுவர் பெரியவர் என்ற வேறுபாடின்றி  முதியவர் கர்ப்பிணி என்ற பாகுபாடின்றி தாக்குதல் நடைபெற்றது. வீதியில் நின்ற வாகனங்கள் பொலிஸாரால் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்கள்,  குடிசைகள் சந்தை  என்பன தீக்கிரையக்கப்பட்டன. அமைதியாக நடந்த அறவழிப் போராட்டத்தை பொலிஸார் வன்முறையாக மாற்றினார்கள். மெரீனாவுக்கு அருகே இருந்த மீனவர் கிராமம் பொலிஸாரால் சூறையாடப்பட்டது. பத்திரிகையளர்கள் தாக்கப்பட்டனர். அவர்களது புகைப்படக் கருவிகளும் வீடியோ கருவிகளும்  அடித்து உடைக்கப்பட்டன. இந்த  வன்செயல்கள் அனைத்தும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகின. அதனைக் கருத்தில் எடுக்காத  பொலிஸார் தமது நோக்கத்தை நிறைவேற்றினர். ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீக்கிரையக்கப்பட்டது. பொலிஸ் வாகனங்கள் தீயில் பொசுங்கின. 

பொலிஸாரின்  அராஜகத்தை தொலைக்காட்சியில் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவிய தேச விரோத சக்திகளை அப்புறப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக பொலிஸ் ஆணையர் அறிவித்தார். இதுபோன்ற ஒரு அறவழிப் போராட்டம்  இனி ஒரு போதும் நடைபெறக்கூடாது என்ற நோக்கிலேயே இந்தக் கொடூரமான தாக்குதல் நடைபெற்றது என்பது மறுக்க முடியாத உண்மை. போராட்டக்கரர்களுக்கு அபாய சமிக்ஞை ஒன்றை வெளிப்படுத்த பொலிஸார்  எடுத்த இந்த அதிரடி  அவர்களுக்கு எதிராகத் திரும்பி விட்டது.

பொலிஸார் சொல்வதுபோல தேச விரோத சக்திகள் தீவைத்ததற்கான பதிவுகள் எவையும் முன்வைக்கப்படவில்லை. வ்கனங்கள், வீடுக, சந்தை என்பனவற்றுக்கு பொலிஸார் தீவைக்கும்  காட்சிகளை தொலைக்காட்சிகள் தொடர்ந்து  ஒளிபரப்பி உண்மையை வெளிக்கொணர்ந்த்தன. பெண் பொலிஸ் துணியால் முகத்தை  முகத்தை  மூடிக்கொண்டு ஓடி ஓடித் தீவைக்கும் காட்சி மக்களைப் பதற வைத்துள்ளது. சமூக வலைத்தளங்கள் இணைய தளங்கள் அனைத்திலும் இந்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

 திருச்சியைத்தவிர தமிழகத்தின் ஏனைய இடங்களிலும் இதே போன்ற வன்செயல் மூலமாக போராட்டக்காரர்கள் விரட்டப்பட்டனர். தமிழக அரசும் இந்திய மத்திய அரசும் இந்த அராஜகத்துக்கு  மெளனமாக அங்கீகரம் வழங்கி உள்ளது. மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்கி அவசரகாலச்சட்டத்தை நிறைவேற்றிய மத்திய மாநில அரசுகள் மாணவர்களின் மீதான தாக்குதலுக்கு கண்டனம் எதுவும் வெளியிடவில்லை. அறவழிப்போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு இந்த அரசாங்கம் பதில் சொல்லாது. வேறு ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தபின்னர் தான் அந்தக் கறுப்பு ஆடு அடையாளம் கட்டப்படும்.

அறவழிப்போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதாக மத்திய மாநில அரசுகள் நினைக்கின்றன. கனன்று கொண்டிருக்கும் பாராட்ட உணர்வு எப்போது வெளிவரும் என்பதை யாராலுக் சரியாகக் கணித்துக் கூற முடியாது.
வர்மா 

Friday, January 20, 2017

அடக்கு முறைக்கு எதிரான உணர்வுபூர்வமான போராட்டம்

 
இயற்கைக்கு நன்றி கூறும் திருநாள் தைப்பொங்கல் தமிழர்களின் வாழ்வோடு ஒன்றித்த .தைப்பொங்கலுக்கு அடுத்த நாளை உழவுக்கு உதவிபுரிந்த  காளைக்கும் கோமாதாவுக்கும் உரிய  நாளாக தமிழ் மக்கள் கொண்டாடிவருகின்றனர். காளைகளையும் கோமாதாக்களையும் அலங்கரித்து அவற்றை வணங்கி பொங்கலிட்டுப் படைப்பார்கள்.தமிழரின் வீர விளையாட்டான ஏறுதழுவல் சிறப்பாக நடைபெறும். இதுவே மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது. காளையை அடக்குபவருக்கு காளை அடக்கும் வீரர் என்ற பட்டப்பெயர்  கிடைக்கிறது. தைமாதம் தமிழகத்தின் சில கிராமங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு பிரசித்தமானது.


இந்தியமண்ணின் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் கால் பாதித்த  பீட்டா எனும் அமைப்பு தடைவிதித்துள்ளது. PETA-  people  for  the ethical   treatment  of animals    என்று தன்னை அழைத்துக்கொள்ளும் இந்த அமைப்பு  1980  ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கிவருகிறது. ஆதரவற்று  வீதியில் அலையும் நாய், பூனை போன்ற விலங்குகளைப் பாதுகாப்பதே  தன்னுடைய பிரதான நோக்கம் என பீட்டா  பெருமையாகக் கூறுகிறது. விலங்குகளின் மீது அன்பு செலுத்துபவர்கள் பீட்டாவுக்கு ஆதரவுக்கரம் கொடுத்தனர். வீதியில் அலையும் விலங்குகளை மீட்கும் பீட்டாவால் அவற்றைப் பராமரிக்க முடியவில்லை. பதினைந்து நாட்களில் அவற்றை யாரும் தத்தெடுக்கவில்லை என்றால் அவற்றை கருணைக்கொலை செய்வதற்கு  அமெரிக்க அரசிடம் அனுமதிகோரியது.      பீட்டாவின் கோரிக்கைக்கு இணங்கிய அமெரிக்கா சட்டம் இயற்றி கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கியது. 2015   ஆம் ஆண்டு  35000 செல்லப்பிராணிகளை பீட்டா கொலை செய்தது.
செல்லப்பிராணி வளர்ப்பு அமெரிக்காவில் கோடிகளில் புரளும் வர்த்தகம்.   குறைந்த விலைக்கு  செல்லப்பிராணிகளை  யாரும் வாங்கக்கூடாது என்பதற்காகவே கருணைக்கொலை சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.  செல்லப்பிராணிகளைப் பாதுகாக்கும் சில நிறுவனங்கள் அமெரிக்காவில் இயங்கின்றன. பீட்டாவின்  உளவாளிகள் அவற்றை  இயங்கவிடாமல் தடுக்கின்றனர். 30 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு பீட்டா. 2014 ஆம் ஆண்டு   292 கோடி ரூபாவை வருமானமாகப் பெற்றது.   200 கோடி ரூபா நன்கொடையாகக் கிடைத்தது. இலட்சக்கணக்கான செல்லப்பிராணிகளைக் கொன்று குவித்த பீட்டாதான் ஜல்லிக்கட்டின் போது மாடு துன்புறுத்தப்படுகிறது என இந்திய நீதிமன்றத்தில் நிரூபித்து ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கி உள்ளது. அறிஞர் அண்ணா சொன்ன சட்டம் ஒரு இருட்டறை என்பதை பீட்டா நிரூபித்துள்ளது.


தமிழகத்தின் குறிப்பிட்ட சில கிராமங்களில் மட்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டைத் தடை செய்வதால் பீட்டாவுக்கு என்ன இலாபம். இலாபம் பீட்டாவுக்கு அல்ல பீட்டாவை வளர்க்கும் நிறுவனங்களுக்குத்தான் அதிக இலாபம். பீட்டா ஒரு அம்பு. ஜெர்சி இனப்பசுக்களை  தமிழகத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி   பால் வியாபாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பீட்டாவின் பின்னால் அணிவகுத்தி நிற்கின்றன.

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு எப்படியும் நடத்திவிட வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் திட சங்கற்பம் பூண்டனர். தைப்பொங்கலுக்கு முன்னர் கிராமங்களில் எழுச்சி கொண்ட போராட்டங்கள் சென்னை.மதுரை,திருச்சி போன்ற தமிழக நகரங்களையும் தொட்டன.  உயர் நீதிமன்றத் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தவேண்டும் என ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் தீர்மானித்தார்கள். ஜல்லிக்கட்டை நடத்தக்கூடாது என்பதில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் குறியாக இருக்கின்றன.
அலங்காநல்லூர் ,அவனியாபுரம்,வாடிவாசல் ஆகியன ஜல்லிக்கட்டுடன் நெருங்கிய தொடர்புடைய கிராமங்கள். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு  ஆர்வலர்கள்  ஒன்றுகூடினர்.  அதனைத் தடை செய்வதற்கு பொலிஸார் தயாராக நின்றனர். தடையை மீறி சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. பொலிஸார் தலையிட்டு விரட்டி அடித்தனர். எதற்கும் அஞ்சாது அங்கங்கே ஜல்லிக்கட்டு நடந்தது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான  போராட்டம் கிராமத்தைத்தாண்டி நகரத்தை நோக்கி நகர்ந்தது. அதன் வீரியத்தை அடக்கமுடியாது தமிழக அரசு தடுமாறுகிறது. இளைஞளால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் மாணவர்களும் இணைந்தனர்.  மூன்று நாள் தொட போராட்டத்தால் தமிழக மக்களின் கவனம் ஜல்லிக்கட்டை நோக்கித் திரும்பியது.


 தமிழ் மக்களின் உணர்வுடன் கலந்த ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அனுமதிக்கும் வரை போராட்டம் நடைபெறும் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாக் கலைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் களம் இறங்கி உள்ளனர். தமிழகத்தில் நடைபெறும்  போராட்டத்தை  வட இந்திய ஊடகங்கள் கவனத்தில் எடுக்கவில்லை. சேவக்,ஜடேஜா,அஸ்வின் ஆகியோரின் ட்வீட்கள் வடஇந்தியர்களைத்  திரும்பிப்பார்க்க வைத்தன.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் மத்தியில் காங்கிரஸும்  ஆட்சியில் இருக்கும் போதுதான் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக இப்போது தமிழகத்தை ஆட்சிசெய்யும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மத்தியில் ஆட்சி பீடத்தில் இருக்கும் பாரதீய ஜனதாவும் தமது எதிர்க் கட்சிகள் மீது குற்றத்தைச்சுமத்தி தப்பிக்க முனைந்தன. அதெல்லாம் பழையகதை இப்போது ஆட்சியில் இருக்கும் கட்சிகள்தான் ஜல்லிக்கட்டு நடக்க சட்டம் இயற்ற வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் உறுதிபடத் தெரிவித்துவிட்டனர். ஆந்திர அரசின் துணையுடன் ஜல்லிக்கட்டு,கிடா ஆட்டுச் சண்டை,சேவல் சண்டை என்பன நடந்தன. மத்திய அரசுஅதனைக்  கண்டுகொள்ளவில்லை. தமிழக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழக அரசு வாய்மூடி மெளனமாக இருக்கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட முடியாது என மத்திய அரசு கையை விரிக்கிறது. தமிழகத்துக்குத்  தண்ணீர் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கர்நாடக அரசு உதாசீனம் செய்தபோது கை கட்டி வேடிக்கை பார்த்த பாரதீய ஜனதா அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலை வணங்குமாறு தமிழக மக்களுக்கு அறிவுரை சொல்கிறது.   பாரதீய ஜனதாவின் பங்காளியான ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவு பீட்டாவுக்கு உள்ளது. பாரதீய ஜனதாவின் முக்கியஸ்தர்களான கிரண்பேடி,மேனகா காந்தி போறவர்கள் பீட்டா அமைப்பில் இருக்கிறார்கள். தடையை மீறி  ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என பீட்டா சொல்கிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசைக் கலைக்கக்கோரும் உரிமை தனக்கிருப்பதாக வெளிநாட்டு நிறுவனமான பீட்டா நினைக்கிறது. தமிழக அரசைக் கலைக்கும் உரிமையை அரச சார்பற்ற நிறுவனத்துக்கு இந்திய அரசு கொடுத்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஸ்பெய்ன் நாட்டில் நடைபெறும் காளை அடக்கும் போட்டி உலகப் பிரசித்தம் பெற்றது.   காளை அடக்கும் போட்டி என்ற பெயாரில் அங்கே காளை  கொல்லப்படுகிறது.   பீட்டாவின் பாச்சா அங்கே பலிக்கவில்லை.பெண் ஒட்டகத்தை அடைவதற்காக இரண்டு ஆண் ஒட்டகங்கள் மோதும் போட்டி துருக்கியில் நடைபெறுகிறது. ஸ்பெயினிலும் பிரான்ஸிலும் ஒரு தொன் கல்லை காளைகள் இழுக்கும் போட்டி நடைபெறுகிறது. அங்கெல்லாம் பீட்டாவால் வாலாட்ட முடியாது. தமிழகத்தில் மாடு துன்புறுத்தப்படுகிறது என குரல் கொடுக்கும் பீதடாவின் கண்ணில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மாட்டிறைச்சியில் கணக்குத் தெரியவில்லை. உலகில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிளையில் இருக்கிறது.
 இந்திய மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கவில்லை என்பதனால் தமிழக ஆளுநர் மாளிகை , அரச அலுவலகங்கள் ஆகியவற்றை முற்றுகையிட போராட்டக்காரர்கள் தயாராக உள்ளனர். சென்னை ,மெரீனாவில் மட்டும் இலட்சக்கணக்கானோர் குவிந்து போராட்டம் நடத்துகின்றனர்.
வர்மா 

Sunday, January 8, 2017

தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தலைமை

பக்தவக்சலம்,ராஜாஜி,அண்ணா,கருணாநிதி,எம்.ஜி.ஆர், ஜெயலிதா ஆகிய தலைவர்களினால் வழிநடத்தப்பட்ட தமிழகம், புதிய  தலைமையின்கீழ் செயற்படுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்தெறிய மற்றைய கட்சிகளால் முடியவில்லை. கருணாநிதி என்ற ஏகபோக தலைமைக்கு எதிராகப் புறப்பட்ட எம்.ஜி.ஆர்  உயிரோடு இருக்கும் வரை அவரால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.எம்.ஜி ஆரின் பாசறையில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா,கருணாநிதியின் அரசியல் வாழ்வுக்கு சவாலாக விளங்கினார்.

கருணாநிதி,ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைவர்களுக்கும் இணையான தலைமைத்துவம் தமிழகத்தில் இல்லை என்பதை சட்டமன்றத் தேர்தல் முடிவு எடுத்தியம்பியது.தோல்வியில் இருந்து   மீண்டெழும்  ஆற்றல் இருவருக்கும் உண்டு.முதுமை காரணமாக கருணாநிதியால் முன்புபோல் செயற்பட முடியவில்லை. ஸ்டாலினுக்கு தலைமைப்பதவியை விட்டுக்கொடுக்க கருணாநிதி தயங்கினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அப்படி இரு நிலை இருக்கவில்லை. தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரான ஜெயலலிதாவின் எதிர்பாரத மரணம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் மரணம் தந்த அதிர்ச்சி அகலுவதற்கிடையில் சசிகலாவை  கழகப் பொதுச்செயலாளராக நியமித்து ஆச்சரியப் படுத்தினர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள்.

முதுமையும் உடல் நிலை பாதிப்பும் கருணாநிதியை முடக்கியது.திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப்பீடமும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. ஆனால், வெற்றிடம் இருப்பதை வெளியில் தெரியாதவாறு  கருணாநிதியின் அறிக்கைகளும் ஸ்டாலினின் செயற்பாடுகளும் மூடி மறைத்துள்ளன. தலைவர் கருணாநிதி செயற்பட முடியாதவராக இருக்கிறார். கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்காக செயல் தலைவர் என்ற புதிய பதவி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. செயல் தலைவர் என்ற ஒரு பதவி திராவிட முன்னேற்றக் கழக யாப்பில் இல்லை.. தலைமைப் பதவியை விட்டுக்கொடுக்க கருணாநிதி  விரும்பாமையினால் யாப்பு திருத்தப்பட்டு செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை இப்போதைக்கு யூகிக்க முடியாது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பதவியை ஸ்டாலின் பொறுப்பேற்கும் சந்தர்ப்பங்கள் பலமுறை ஏற்பட்டும் அவை தட்டிக்கழிக்கப்பட்டன. தவிர்க்க முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். கழகத்தை வழி நடத்தும் சகல தகுதிகளும் ஸ்டாலினுக்கு உள்ளது. கருணாநிதியின் மகன் என்பதை விட அவரது அரசியல் அனுபவம் கூடுதல் தகமையாக இருக்கிறது. 63 வயதான ஸ்டாலினுக்கு    45 வருட அரசியல் அனுபவம் உடையவர். மாணவப் பருவத்திலேயே அரசியலில் செயற்பட்டவர். அவசரகலச்சட்டம்,மிசா ஆகியவற்றில் காது செய்யப்பட்டு பலமாகத் தாக்கப்பட்டு சிறை வசம் அனுபவித்தவர்.

இளைஞர் அணிச்செயலாளர்,பொருளாளர்,மேயர்,சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்  ஆகிய பொறுப்புக்களின் மூலம் அரசியல் பாடம் படித்தவர்.  செயல் தலைவர் பொறுப்புடன் இளைஞர் அணிச்செயலாளர்,பொருளாளர் ஆகிய  பதவிகளும் ஸ்டாலினின் வசம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இரண்டு நாட்களின் பின்னர் இளைஞர் அணி செயலாளர் பதவியைத் துறந்தார்.துணைச்செயலாளர் வெள்ளகோவில் மூ.வெ.சாமிநாதன் இளைஞஅணி செயலாளர் ஆனார்.

 திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 48 வருடங்களாகின்றன. கடந்த வாரம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தான் கருணாநிதி பங்குபற்றவில்லை. தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் புதிய தலைவர்களின் வழிகாட்டலில் செயற்படத் தொடங்கிவிட்டன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாப்புத் திருத்தம் செய்ய முடியாததனால் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் யாப்பைத் திருத்தி செயல் தலைவராக ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டார். தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சசிகலா கண்ணீர் மல்க எழுதிவைத்திருந்த உரையைப் படித்தார். அமைதியாக இருந்த நிர்வாகிகள்  அடிக்கடி கைதட்டினார்கள். ஸ்டாலினை முன்மொழிந்த அன்பழகன் கண்கலங்கினர். வழிமொழிந்த துரைமுருகன் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். நிர்வாகிகள் கண்ணிருடன் கைதட்டி வரவேற்றனர். அழுகையைக் கட்டுப்படுத்த முடியாது  ஸ்டாலின் திணறினார்.


 எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இப்போது இருக்கும் அடிமட்டத் தொண்டர்களில் அதிகமானோர் ஜெயலலிதாவின் விசுவாசிகள். எம்.ஜி.ஆரின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அழிந்து  இரண்டு தசாப்தங்க ளாகி  விட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் ஜெயலலிதா  என நினைப்பவர்கள் தான் அங்கு உள்ளனர். ஜெயலலிதாவின் இடத்தில் சசிகலாவை நிர்வாகிகள் இருத்தி உள்ளனர். ஜெயலலிதாவின் இடத்தில் சசிகலாவை அலங்கரிக்க தொண்டர்கள் விரும்பவில்லை.
ஜெயலலிதாவின் வழியில் ஒற்றுமையாக இருப்பதற்கு சசிகலா அழைப்பு விடுத்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இப்போ மூன்று பிரிவாக உள்ளது. நிர்வாகிகளும் அவர்களது தொண்டர்களும் சசிகலாவின் பின்னால் நிற்கின்றனர். சசிகலாவின் நியமனத்தை விரும்பாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். கட்சியின் முதுகெலும்பு தொண்டர்கள். கட்சியை வளர்ப்பவர்கள் நட்சத்திரப் பேச்சாளர்கள். வாக்களிக்கும் தொண்டர்களும் கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் மனதி பதிய வைக்கும் .நட்சத்திரப் பேச்சாளர்களும் வெளியேறுவது மிகவும் ஆபத்தானது.  ஜெயலலிதாவின் விசுவாசத் தொண்டர்கள் அவரது அண்ணன் மகளான தீபாவைத் தலைமை ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கிறார்கள்.


அண்ணா இறந்த பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பதவிக்கு பொருத்தமானவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற போட்டி நிலவியது. திராவிடக் கழகத்தில் இருந்து வெளியேறிய அண்ணாத்துரை புதிய கட்சியை உருவாக்கினர். அவரால் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைமை இருக்கை  காலியாக வைக்கப்பட்டது. கட்சியின் தலைவர் பெரியார் தான் என்பதை அண்ணா சொல்லாமல் சொன்னார். நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் இடையில் இருந்த பிணக்கைத்  தீர்ப்பதற்காக தலிவர் பதவி உருவாக்கப்பட்டு கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. பொதுச்செயலாளராக நெடுஞ்செழியன்    பொறுப்பேற்றார். அதன் பின்னர் கருணாநிதியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. அது கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக கருணாநிதி இருக்கிறார். அனால், கட்சி இப்போது  ஸ்டாலினின் கையில் உள்ளது. நிர்வாகிகளும் தொண்டர்களும் கருணாநிதியை விட்டு விலகி ஸ்டாலினின் பக்கம் சாய்ந்துள்ளனர். ஸ்டாலினுக்கு எதிராகக் கருத்துக் கூறிய கோசி மணி, வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள் உயிருடன் இல்லை.  ஸ்டாலினை மூர்க்கமாக எதிர்த்த அழகிரி  கட்சியை விட்டு  வெளியேற்றப்பட்டுவிட்டார். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஸ்டாலினை எதிர்க்கும் பலமான அரசியல் தலைவர்கள் யாரும் இல்லை.
ஸ்டாலினுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு சசிகலா தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்ய ஸ்டாலின் ஆரம்பத்தில் பயந்தார்.  அண்மைக் காலத்தில் மிகத் துணிச்சலுடன் அரசியல் ரீதியாக அவர் ஜெயலலிதாவை  எதிர்த்தார். ஸ்டாலினின் அரசியல் அனுபவத்துக்கும் ஆளுமைக்கும் எதிராக  சசிகலாவால் நிற்க முடியாது.

 ஜனநாயகம் இப்போது பணநாயகமாக மாறிவிட்டது. தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக இலவசங்களும் பண விநியோகமும் முன்னிலை பெற்றுள்ளன. காலியாக இருக்கு ஜெயலலிதாவின் ஆர் கே நகர் தொகுதியின் இடைத் தேர்தல் அடுத்த தலைமையை அடையாளம்  கட்டும்.
வர்மா . 

Tuesday, January 3, 2017

சசிகலாவின் பிடியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

 
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மிகப்பெரிய  கட்சியாக கட்டி எழுப்பிய பெருமைக்குரியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா என்ற பெண் ஆளுமை இந்திய மத்திய மாநில  ஆண் தலைவர்களின் அரசியல் வியூகங்களை உடைத்தெறிந்தது. ஜெயலலிதா மறைந்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை சசிகலா கைப்பற்றியுள்ளார். ஜெயலலிதா இருக்கும் வரை கட்சியில் அவர் மட்டும் தான் தலைவர். ஜெயலலிதாவுக்கு அடுத்த  இடத்தில் இருப்பவர் யார் என்ற கேள்விக்கு இடமிருக்கவில்லை.

உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா,  நலமாகி வீட்டுக்குத் திரும்புவார் என்றே அனைவரும் நம்பிக்கொண்டிருந்தனர்.நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவின் சடலம் தான் அங்கிருந்து வெளியேறும் என நினைத்த சிலர் சாதுரியமாகக் காய் நகர்த்தியுள்ளனர் என்பதை அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களால் அறியக்கூடியதாக உள்ளது. ஜெயலலிதாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது தலைமையை நிரப்பக்கூடிய தலைவர்  கழகத்தில் இல்லை. அவரது இடத்தை சசிகலா நிரப்புவார் என கழக நிர்வாகிகள் நம்புகின்றனர்.

 சினிமாவிலும் அரசியலிலும் எம்.ஜி ஆரால் வளர்க்கப்பட்டவர் ஜெயலலிதா.எம்.ஜி ஆரின் உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்தவர்கள் அவரின் ரசிகர்கள். எம்,ஜி ஆர் உயிருடன் இருக்கும் போது அவருக்கு அடுத்த இடத்தில் ஜெயலலிதாவை  வைத்துப் பார்த்தவர்கள்  எம்.ஜி ஆரின் ரசிகர்கள் எம்..ஜி ஆருக்கு ஈடாக ஜெயலலிதா இருப்பாரா  என்ற கேள்வி அப்போது எழுந்தது. கடைசி காலத்தில் எம்.ஜி. ஆரை மிஞ்சும் வகையில் கட்சியை வழி நடத்தியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இடத்தில் சசிகலாவை நினைத்துப் பார்க்க முடியாது என தொண்டர்கள் குமுறுகிறார்கள்.தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்துள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக்  கழக விதிகளின் பிரகாரம் பொதுச்செயலாளராவதற்குரிய தகுதி சசிகலாவுக்கு இல்லை. அவர் தகுதி பெறும் காலம் வரும் வரை இன்னொருவரை அந்த இடத்தில் இருத்துவதற்கு நிர்வாகிகள் விரும்பவில்லை. ஜெயலலிதாவின் விசுவாசியான  பன்னீர்ச்செல்வ‌ம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதை சசிகலாவின் மன்னார்குடி குடும்பம் விரும்பவில்லை. அதற்கு பன்னீர்ச்செல்வ‌த்தின் எதிரிகளும் துணைபோயுள்ளனர். உட்கட்சித் தேர்தல் நடத்தி பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். என்ற  கழக விதியைப் புறக்கணித்து.  சசிகலாவைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். இத் தீர்மானம் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தும் தீர்மானம் என்பதை அவர்கள் உணரவில்லை.

எம்.ஜி. ஆர் கட்சியை ஆரம்பித்தபோது அரசியல் சட்ட வல்லுனர்கள் அவரின் பின்னால் நின்றார்கள்.அதனால்தான் பொதுச்செயலாளர் தெரிவு பற்றிய சிக்கலான விதி சேர்க்கப்பட்டுள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களையும் தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றும் வகையில் இத் தீர்மானம் அமைந்துள்ளது. ஏகமனதாக கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்த பொதுச்செயலாளர் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் தேர்வு பற்றிய விதி முறை அமுல்படுத்தப்படவில்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் வேட்புமனு கோரப்படவில்லை. தேர்தல் ஆணையகத்துக்கு இது பற்றி யாராவது புகார் கொடுத்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம்.


இந்திய அரசியல் கட்சிகளில் பெரும்பாலனவை வாரிசுகளின் கைகளில் உள்ளன.வாரிசு அரசியல்தான் இந்தியாவில் தலை தூக்கி உள்ளது. எம்.ஜி ஆருக்கு வாரிசு இல்லை. ஜெயலலிதா திருமணம் முடிக்கவில்லை சசிகலாவுக்கும் வாரிசு இல்லை. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் விட்ட அதே தவறை சசிகலா விடமாட்டார். தனது குடும்பத்தில் உள்ள ஒருவரை தனக்கு அடுத்த தலைவராக உருவாக்கி விடுவார். அவரது கணவன் அதற்குரிய ஆலோசனையைக் கொடுப்பார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலாவது பொதுச்செயலாளராக எம்.ஜி.ஆர்  பொறுப்பேற்றார். அவர் இறந்தபின்னர் நெடுஞ்செழியன் பொதுச்செயலாளரானார்.எம்ஜி.ஆரின் மனைவி ஜானகி முதலமைச்சரான பின்னர் கட்சி இரண்டாகியது. ஜெயலலிதாவின் தலைமையில் கட்சி ஒன்றானபின்னர்  ஜெயலலிதா பொதுச்செயலாளரானார்.  அந்த இடைவெளியை சசிகலாவை வைத்து நிரப்பி உள்ளார்கள்.
  தமிழகத்தை  ஆட்சிசெய்யும் கட்சி, இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி இப்படிப்பட்ட உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் கட்சிக்கு  பொதுச்செயலாளராகும் தகுதி சசிகலாவுக்கு இருக்கா என பொது வெளியில் கேட்டால் இல்லை என்ற பதில் தான் வரும். ஜெயலலிதாவுடன் 33 வருடங்கள் வாழ்ந்த அந்த ஒரே ஒரு தகுதி போதும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  நிர்வாகிகள் அடித்துக் கூறுகின்றனர். சசிகலாவை எதிர்த்து சில தலைவர்கள் போர்க்கொடி தூக்குவர்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு எல்லாம் புஷ் வாணமாகியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களும் பெட்டிப்பாம்பாக அடங்கி விட்டனர்.


ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.சசிகலாவுக்கு வக்காலத்து  வாங்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் ஜெயலலிதாவைத் தூக்கி எறிந்துவிட்டு சசிகலாவின் புகழைப் பாடத்தொடங்கி  விட்டனர். சில வேளைகளில் சசிகலாவிடம் ஆலோசனை கேட்கும் படி ஜெயலலிதா சொன்னதாக இப்போது தான் சொல்கிறார்கள்.  சின்னம்மா  என்ற அடைமொழி புதிதாக இருக்கிறது என்ற விமர்சனம் மேலோங்கி உள்ளது. சின்னம்மாவிடம் கேளுங்கள் என ஜெயலலிதா சொன்னதாக இப்போது சொல்கிறார்கள். சின்னம்மா எமக்குப் புதிதல்ல என்பது அவர்களது வாதம்.

உயர் பதவியில் உள்ளவர்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அடிமட்டத் தொண்டர்கள் சிலர் சசிகலாவுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். சென்னை,புதுக்கோட்டை,நெல்லை,பெரம்பலூர் ஈரோடு,நாமக்கல்,வேலூர்  போன்ற இடங்களில் சசிகலாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அங்குள்ள மகளின் அணி,மீனவர் அணி போன்றவை சசிகலாவை கடுமையாக எதிர்க்கின்றன. சில இடங்களில் சசிகலாவின் கட் அவுட்கள் சேதமாக்கப்பட்டன. சசிகலாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.. ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி  செலுத்தச்சென்ற சுவாதி ஆனந்தன் என்னும் தொண்டர் சசிகலாவின் நியமனத்துக்கு   எதிர்ப்புத் தெரிவித்து நஞ்சு அருந்தினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் சிலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சிலர் சேர்ந்து விட்டதாகத் தகவல்கள் வருகின்றன.

சசிகலாவை பொதுச்செயலாளராக்கியத்தில் வெற்றி பெற்ற தம்பித்துரை அவர்  முதலமைச்சராக வேண்டும் என  அழைப்பு விடுத்துள்ளார். மதுசூதனன்,செங்கோட்டையன்,பி.எச். பாண்டியன் சைதை துரைசாமி,ஆர்.பி.உதயகுமார்,கடம்பூர் ராஜு,சேவூர் ராமச்சந்திரன்,ஓ.எஸ்.மணியன்  போன்றோரும் இக்கருத்தை முன்னரே தெரிவித்திருந்தனர். ஜெயலலிதவைக் கடுமையாயக் எதிர்த்தவர் சைதை துரைசாமி. ஜெயலலிதா இருக்கும் இடம் கோயில் அங்கு செருப்புடன் செல்ல மாட்டேன் என்றவர் ஓ.எஸ்.மணியன். பன்னீர்ச்செல்வ‌த்துக்கு எதிராக மறைமுகமாக காய் நகர்த்தியவர்கள்   இப்போது வெளிப்படையாக அவரை எதிர்க்கத் தொடங்கிவிட்டனர்.   திரிசங்குவின் நிலையில் பன்னீர்ச்செல்வ‌ம் இருக்கிறார். தனக்கு எதிராகக் களம் இறக்கப்பட்ட சசிகலாவை வெளிப்படையாக எதிர்க்க முடியாமல் திணறுகிறார் பன்னீர்ச்செல்வ‌ம்.
 பன்னீர்ச்செல்வ‌த்தை கைக்குள்  வைத்துக்கொண்டு தமிழகத்தில் கால் ஊன்ற பாரதீய ஜனதா விரும்புகிறது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகளை பாரதீய ஜனதாக் கட்சி விரும்பவில்லை. மத்திய அரசுடன் முரண்படாமல் மிகுதி நான்கரை வருடங்களை ஓட்டுவதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. அதனால்தான்  மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற ஜெயலலிதா போட்டிருந்த முட்டுக்கட்டைகளை தமிழக அரசு விலக்கிக் கொண்டுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்  நடக்கும் கூத்துகளை  திராவிட முன்னேற்றக் கழகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. சசிகலாவின் நியமனம் பற்றிய ஆச்சரியம் அகலுவதற்கிடையில் திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 போயஸ்கார்டன் ஜெயலலிதாவின் நினைவிடமாகுமா  வாரிசு இல்லாத ஜெயலலிதாவின் சொத்துகள் கழகத்தின் வசமாகுமா என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கப்போவதில்லை. அரசியலுக்கு வரமாட்டேன் என ஜெயலலிதாவுக்கு சத்தியம் செய்து கொடுத்தவர் ஜெயலலிதாவின் சமாதியின் முன்னிலையில் அரசியல் பிரவேசம் செய்துள்ளார்.

சசிகலாவை அரசியலுக்கு கொண்டுவர தீட்டப்பட்ட திட்டம் கனகச்சிதமாக நிறைவேற்றப்பட்டு விட்டது. ஜெயலலிதாவின் மரணத்தால் வெற்றிடமான  ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற வேண்டும். கூட்டணிக் கட்சிகளின் உதவி இன்றி இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும்  தமிழக சட்ட மன்றத் தேர்தலிலும் ஜெயித்துக் காட்டியவர் ஜெயலலிதா. அந்த வெற்றியைத் தக்கவைக்க வேண்டிய மிகப்பரிய பொறுப்பு சசிகலாவின்  தலையில் சுமத்தப்பட்டுள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற  உறுப்பினர்களும் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களும் சசிகலாவை எதிர்த்து கலகம் செய்ய மாட்டார்கள். நான்கரை வருடம் ஆட்சி செய்யும் அதிகாரத்தை இழப்பதற்கு அவர்கள் விரும்பமாட்டார்கள்.  ஆகையினால் சசிகலாவுக்கு எதிராக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் சலசலப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.
வர்மா