Saturday, October 29, 2011

கடாபியைஅழித்த மக்கள்புரட்சி

மன்னர் ஆட்சியிலிருந்த லிபியா 1969 ஆம் ஆண்டு செப்ரம்பர் முதலாம் திகதி இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் விடுதலையடைந்தது. இளம் இராணுவ அதிகாரி முயாமத் அபு மின்யர் அல் கடாபி தலைமையிலான இராணுவக் குழு லிபியாவைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. மனனராட்சியிலிருந்து லிபியாவை மீட்ட கடாபியை மக்கள் புகழ்ந்தார்கள். வீதியில் இறங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். கடாபி என்ற மாவீரனைப் பெற்றதால் லிபியா மகிழ்ச்சியடைந்தது. 42 வருடங்களின் பின்னர் லிபியத் தலைநகர் திரிபோலியிலிருந்து சொந்த ஊரான சியாட்டிற்கு துரத்தப்பட்டார் கடாபி.
இரத்தம் சிந்தா புரட்சியின் மூலம் லிபியாவை விடுதலை செய்த கடாபியிடமிருந்து லிபியாவை மீட்க நடந்த போராட்டத்தில் ஏராளமான இரத்தம் சிந்தப்பட்டது. 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணமானார்கள். 42 வருடங்களின் முன்னர் விடுதலை வீரன் கடாபியைப் பார்த்து வியந்த லிபிய மக்களின்று கடாபியின் பிணத்தைப் பார்க்க வரிசையில் நிற்கிறார்கள். மேற்குலகுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய கடாபிக்கு அவரது நடவடிக்கையே எமனாக அமைந்தது. எகிப்தியத் தலைவர் கமால் அப்துல் நாசரால் ஈர்க்கப்பட்ட கடாபி, நாசரைப் போன்றே புரட்சியின் மூலம் லிபியாவைக் கைப்பற்றினார்.
அரபுலகில் அண்மையில் ஏற்பட்ட புரட்சியினால் டியூனிஷிய ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பி ஒடிவிட்டார். எகிப்து ஜனாதிபதி கொஸ்னி முபாரக் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்நோக்கியுள்ளார். லிபியாவில் புரட்சி வெடித்தபோது தனது எதிரிகளை அடக்கி விடலாம் என்றே கடாபி நினைத்தார். கடாபிக்கு எதிரான புரட்சிப் படைகளின் பின்னால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகள் இருந்தன. வெளிநாடுகள் ஆயுத உதவி செய்தாலும் புரட்சிப் படையை அழிக்கக் கூடிய ஆயுத பலம் கடாபியின் இராணுவத்திடம் உள்ளது. ஐ.நா. வும் சர்வதேச நீதிமன்றமும் கடாபிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததனால் லிபியாவின் களநிலைவரம் மாறியது. கடாபிக்கு எதிரான புரட்சிப் படைக்கு ஆதரவாக நேட்டோ களமிறங்கியது. கடுமையான போராட்டத்தின் பின் லிபியத் தலைநகர் திரிபோலி வீழ்ந்தது. கடாபியின் குடும்பம் தப்பிச் சென்றது.


தாய் நாட்டை விட்டு ஓடமாட்டேன். எலிகளைப் போல் எதிரிகளைத் தேடி அழிப்பேன் என்று சூளுரைத்த கடாபி கானுக்குள் பதுங்கியபோது வெளியே இழுத்து எடுத்து சுட்டுக் கொல்லப்பட்டார். கடாபி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காலில் பலத்த காயம் உள்ளது என்று முதலில் செய்தி வெளியானது. அந்தச் செய்தியை உறுதிப்படுத்த முன்பே கடாபி கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி வெளியானது. கைது செய்யப்பட்ட பின் கடாபி கொல்லப்பட்டரா அல்லது சண்டையின்போது கொல்லப்பட்டாரா என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கடாபிக்கு இழைக்கப்பட்ட அநீதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காலில் பலத்த காயமடைந்ததாகக் கூறப்பட்ட கடாபி நடந்து சென்ற காட்சி தெளிவாகத் தெரிந்தது. கடாபியைக் கண்டதும் மாத்திரம் மேலிட்ட புரட்சிப் படையினர் அவர்மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இத்தனை காலமாக எங்களை வதைத்த கடாபியைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே அங்கிருந்தவர்களிடம் மேலோங்கியது. கடாபியைக் காப்பாற்ற அங்கு யாருமே இல்லை. கடாபியை உயிருடன் பிடிக்கப்பட்டதும் அவரைக் காண்பதற்காக புரட்சிப் படையினர் பலரும் முண்டியடித்தனர். தன்னைக் கைது செய்த புரட்சிப் படை வீரர்களிடம் என்ன தவறு செய்தேன் எனக் கேட்டார். தன்னைச் சுட வேண்டாம் என்று தெரிவித்தார். அவரின் பேச்சை அங்குள்ள யாருமே கவனத்தில் எடக்கவில்லை. கடாபியின் பேச்சைக் கேட்பதற்காக ஒரு காலத்தில் முண்டியடித்த மக்கள் கூட்டம் இன்று அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
கடாபியின் மகன் முட்டாஸி உயிருடன் கைது செய்யப்பட்டு பின் சிறிது நேரத்தின்பின் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்திவெளியாகியுள்ளது. புரட்சிப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்ட பின்னரே சுட்டுக் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தற்போது வெளியாகி உள்ளன. இதுவும்
யுத்தக்குற்றவிசாரணைக்குட்படலாம் எனத்தெரிகிறது.
கடாபி உயிருடன் கைது செய்யப்பட்டால் வெளிநாட்டில் ஒப்படைக்க மாட்டோம் நாம் விசாரணை செய்து தண்டனை வழங்குவோம் என்று புரட்சிப்படைத் தலைவர்கள் கூறியிருந்தனர். ஆனால் கடாபியைக் கைது செய்த புரட்சிப்படை வீரர் ஒருவர் கடாபியைச் சுட்டுக் கொலை செய்துவிட்டார். தலையிலும் கையிலும் சுடப்பட்ட கடாபி அரைமணி நேரத்தின் பின்னரே உயிர் பிரிந்ததாக புரட்சிப்படை வீரர் ஒருவர் கூறியுள்ளார். நிராயுத பாணியாகச் சரணடைந்த கடாபி சுட்டுக் கொலை செய்ததால் புரட்சிப் படை மீது யுத்த மீறல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை அடக்குவதற்காகப் புகுந்த அமெரிக்காவும் நேட்டோ படைகளும் தலிபான்களையும் ஒஸõமாவையும் அங்கிருந்து விரட்டின. பாகிஸ்தானில் ஒஸாமாவை அமெரிக்காவின சிறப்புப் படையணி சுட்டுக் கொலை செய்து சடலத்தையும்கொண்டு சென்றது. ஈராக்கில் சதாமின் ஆட்சியை அகற்றுவதற்காகக் களம் புகுந்த அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் சதாமை கைது செய்து தூக்குத் தண்டனை வழங்கினர்

ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் நேரடியாகத் தலையிட்ட அமெரிக்காவும் நேட்டோப் படையும் லிபியாவில் புரட்சிப் படைகளுக்கு உறுதுணையாக இருந்து கடாபியை அழித்துவிட்டமை இறைச்சி பதனிடப் பயன்படும் அறையொன்றில் கடாபியினதும் அவரது மகனினதும் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. அச்சடலங்களைப் பார்ப்பதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
உலகெங்கும் உள்ள வங்கிகளிலும் ரியல் எஸ்டேட் முதலீடுகளிலும் கடாபிக்கு 200 பில்லியன் டொலர் சொத்து இருப்பதாக லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் 37 பில்லியன் டொலர் சொத்துக்களும் லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள கடாபியின் 30 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புரட்சிப் படையும் சில வெளிநாடுகளும் விரும்பியது போல கடாபி அழிக்கப்பட்டு விட்டார். இனி லிபியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும். கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் லிபியா சின்னாபின்னமாகியுள்ளது. கட்டடங்கள் மதகுகள் வீதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. இவற்றை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அவற்றுக்கான நிதியை எப்படிப் பெறுவது என்பது லிபியாவின் அடுத்த ஆட்சியாளர்களில் முன்னாள் உள்ள பாரிய சவாலாகும்.
கடாபியை அகற்றுவதற்காகப் போராடிய புரட்சிப் படையிலும் பல பிரிவுகள் உள்ளன.
அந்தப் பிரிவினைகளை இடைக்கால அரசு எப்படிச் சமõளிக்கப் போகிறது. இடைக்கால அரசு எவ்வளவு காலத்துக்கு செயற்படும் நிலையான ஆட்சி எப்படி அமையும் போன்ற கேள்விகளுக்கு சரியான விடை கிடைக்கவில்லை. ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள பொம்மை அரசு போன்ற ஒரு பொம்மை அரசு லிபியாவில் ஏற்படுமா அல்லது லிபிய மக்கள் விரும்பும் அரசு ஏற்படுமா என்ற சந்தேகம் உள்ளது.
கடாபியின் உடல் ஆறு நாட்களின் பின்னர் பாலைவனத்தில் இரகசியமாகப் புதைக்கப்பட்டுள்ளது. சதாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சதாமின் ஆதரவாளர்கள் கூடி சதாமை நினைவு கூர்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒஸாமா பின் லேடனின் உடல் கடலில் வீசப்பட்டது. இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கு விரோதமாக ஒஸாமாவின் உடல் கடலில வீசப்பட்டது என்று குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அக் குற்றச்சாட்டுக்கு இன்னும் சரியான பதிலை அமெரிக்கா வழங்கவில்லை. கடாபி உடலையும் பகிரங்கமாக புதைக்கப்பட புரட்சிப்படை விரும்பவில்லை. அதன் காரணமம்க இரகசியமாக கடாபியின் உடல் புதைக்கப்பட்டது.
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்தால் அவரது உடல் 24 மணி நேரத்தினுள் புதைக்கப்பட வேண்டும். கடாபி அவரது மகன் முட்டாஸி அமைச்சர் யுனிஸ் ஆகியேõரின் உடல்கள் ஆறு நாட்களின் பின்னரே அடக்கம் செய்யப்பட்டன. இறைச்சி பாதுகாக்கும் குளிர்சாதன அறையில் மூவரின் சடலமும் நிலத்தில் வைக்கப்பட்டிருந்தன. கடாபியின் உடலைப் பார்த்த பலரும் புகைப்படம் எடுத்ததுடன் கடாபியைத் திட்டித் தீர்த்தனர்.
ஆட்சியைக் கைப்பற்றியபோது லிபியாவை நல்ல வழியில் இட்டுசென்றார் கடாபி. காலம் செல்ல செல்ல பதவி ஆசையும் குடும்பத்தின் சுயநலமும் கடாபியைத் தவறான வழிக்கு அழைத்துச் சென்றன. கடாபி இல்லாத லிபியாவை நினைத்துபார்க்க சிரமமாக உள்ளது.
ரமணி

மெட்ரோநியூஸ் 28/10/11


Tuesday, October 25, 2011

சி.பி.ஐ.யின் வலையில்தயாநிதிமாறன்

தமிழக அரசியல் சூடு பிடித்துள்ள இவ்வேளையில் ஸ்பெக்ரம் விவகாரம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. ஸ்பெக்ரம் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜாவும், கனிமொழியும் சிறைக்குச் சென்ற பின்னர். அடுத்த இலக்கு யார் என்ற பட்டிமன்றம் தமிழகத்தை பரபரப்பாக்கியது. தயாநிதி மாறன், கலாநிதிமாறன், சன் தொலைக்காட்சி மீது சி. பி. ஐ. பாயும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. தயாநிதி மாறன் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்தது வெறும்வாயை மன்றவர்களுக்கு சுவையான அவலாக மாறியது.
உள்ளாட்சித் தேர்தல் திருச்சி மேற்கு இடைத் தேர்தல் ஆகியவற்றின் மீது தமிழக அரசியல் வாதிகள் கவனத்தைத் திருப்பிய வேளையில் சி.பி.ஐ. சத்தமில்லாது தயாநிதிமாறன் மீது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
ஸ்பெக்ரம் விவகாரத்தில் தயாநிதிமாறன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட மாட்டாது என்று முதலில் செய்தி வெளியானது. அந்தச் செய்தி பற்றிய விமர்சனங்கள் கடுமையாகியதும் சி.பி.ஐ. விளக்கம் கூறவேண்டிய நிலை ஏற்பட்டது. தமது அறிக்கையை ஊடகங்கள் தவறாக விளங்கிக் கொண்டதாகவும், திரிவுபடுத்திய தாகவும் சி.பி.ஐ. தன்னிலை விளக்கம் தெரிவித்தது. ஸ்பெக்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் மட்டுமல்லாது அமைச்சர் ப.சிதம்பரம் மீதும் குற்றச்சாட்டு எழுந்தும் சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்கும் என்ற செய்தியால் அரசியலில் பரபரப்புத் தொற்றியது.
அமைச்சர் சிதம்பரத்துக்கும் அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் இடையேயான பனிப்போர் பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதம் அம்பலமாகியதால் உள்வீட்டு பிரச்சினை சந்திக்கு வந்தது. பிரணாப் முகர்ஜியின் கடிதத்தின் பிரகாரம் சிதம்பரம் ஸ்பெக்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ளாரா? என்ற கேள்வி எழுந்தது. இறுதியில் வழக்கம் போல அந்தப் பிரச்சினை பூசி மெழுகப்பட்டதால் ஸ்பெக்ரம் விவகாரத்தில் இருந்த சிதம்பரம் விடுவிக்கப்பட்டதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டது. ஸ்பெக்ரம் விவகாரத்தில் ராசா எதனையும் தனித்துச் செய்யவில்லை. பிரதமருக்கும் அமைச்சர் சிதம்பரத்துக்கும் அறிவித்து விட்டு அவர்களின் அனுமதியின் பேரிலேயே ஸ்பெக்ரம் விற்பனை செய்யப் பட்டது என்று ராசாவின் வழக்கறிஞர் வாதிட்டார். பின்னர் அவர்கள் மீதான குற்றச் சாட்டை மறுத்தார். மன்மோகன், சிதம்பரம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்படுவதும் பின்னர் வாபஸ் பெறுவதும் வாடிக்கையாகி விட்டது.
இதை போன்றுதான் தயாநிதி மாறன் மீது குற்றம் சுமத்தப்படுவதும் பின்னர் அது கைவிடப்படுவதும் வாடிக்கையானது. ஆனால் சி.பி.ஐ,க்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக தயாநிதிமாறன், கலாநிதி மாறன் ஆகி யோரின் வீடுகள் சன் ரீவி அலுவலகத்திலும் தேடுதல் நடைபெற்றது. இத் தேடுதலில் முக்கிய ஆவணங்கள் எவையும் கிடைத்ததாகத் தகவல் வெளிவரவில்லை. ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதும் ஸ்பெக்ரம் கைமாறியதும் மேக்கிஸிலின் துணை நிறுவனம் மூலம் சன் ரீ.வி குழுமத்துக்கு 600 கோடி முதலீடு செய்தது. 600 கோடி ரூபா முதலீடு ஏன் செய்யப்பட்டது என்ற கேள்வியை சி.பி.ஐ. தொடர்ந்து பல மாதங்களாகக் கேட்டு வந்தது. இச் சம்பவம் பற்றி தயாநிதி மாறனுக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் விசாரித்து மிகவும் காலதாமதம் செய்தே தயாநிதி மாறன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட் டுள்ளது.
2004 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதல் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வரை தொடர்ந்து தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் பதவி வகித்தார். அக் காலத்தில் ஸ்பெக்ரம் அலைவரிசையை விற்பனை செய்ய இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் வழங்கியது. ஸ்பெக்ரம் விற்பனை செய்வதற்கான விலையை நிர்ணயம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சுக்குழு ஒன்øற நியமித்தார் தனது அமைச்சுக்குள் ஏனைய அமைச்சர்கள் தலையிடுவதை விரும்பாத தயாநிதி மாறன் விரும்பவில்லை. தனது அமைச்சு சுதந்திரமாக இயங்குவதை ஏனைய அமைச்சர்கள் குழு தடுக்கும் என்று பிரதமருக்கும் கடிதம் எழுதினார். தயாநிதி மாறனின் விருப்பப்படி முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ரம் அலைவரிசை விற்பனை செய்யப்பட்டது.
தயாநிதி மாறனின் வழி காட்டலிலேயே ஸ்பெக்ரம் விற்பனையை மேற்கொண்டார் ராசா. ராசா சிறையில் இருக்கும் பொழுது இதற்கு முன்னோடியாக விளங்கிய தயா நிதிமாறன் சுதந்திரமாகத் திரிவதைப் பொறுக் கமாட்டாத சுப்பிரமணிய சுவாமி நீதிமன் றத்தை நாடினார். ஸ்பெக்ரம் விவகாரம் சூடாறிய நேரங்களில் சுப்பிரமணிய சுவாமி அறிக்கைகளை வெளியிட்டு சூடாக்கினார். விசாரணை கைது என்ற வட்டத்தினுள் மாறன் குடும்பம் வந்துள்ளது. சன் குழுமத்தின் வரவுசெலவு அறிக்கைகளை சி.பி.ஐ. துல்லியமாக ஆராய்ந்தது.
திராடவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான பரிதி இளம் வழுதி கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். உள்கட்சி ஜனநாயகம் சீராக இல்லை என்ற குற்றம்சாட்டியே அக்கட்சியிலிருந்து இராஜினாமாச் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்த வேளையில் தமிழக சட்ட மன்றத்தில் தனி ஒருவனாக நின்று கட்சியின் மானத்தைக் காத்தவர். கட்சியை வளர்ப்பதற்காக நடைபெற்ற போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டு சிறை சென்றார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோபப்பார்வைக்கு ஆளானவர் பரிதி இளம் வழுதி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி யின் போது, ஜெயலலிதாவின் கோபப்பார்வையில் பலமுறை சிறை சென்றவர். தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது தான் தோல்வியடையக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதனா லேயே கட்சியே விட்டு வெளியேறியுள்ளார் பரிதி இளம் வழுதி.
கருணாநிதியைச் சந்தித்து தனது தோல்விக் குக் காரணமான மூவரைப் பற்றியும் புகார் கொடுத்தார் பரிதி இளம் வழுதி. அவரு டைய புகாரில் உள்ள மூவரையும் கட்சியை விட்டு நீக்குவதாக முரசொலியில் செய்தி வெளியாகியது. ஆனால் மறுநாள் அவர்கள் நீக்கப்படவில்லையென்று என்று செய்தி வெளியானது. கட்சித் தலைமை தன்னை அவமதிப்பதாகக் கருதிய பரிதி இளம் வழுதி கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்.
ஸ்டாலினுக்கும், பரிதி இளம் வழுதிக்கும் இடையேயான உறவில் இப்போது விரிசல் விழுந்துள்ளது. தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தனது தோல்விக்கு காரணை மானவர்கள் பற்றி விபரத்தை ஸ்டாலினிடம் கொடுப்பதற்கு பலமுறை முயற்சி செய்தார் பரிதி இளம் வழுதி. ஸ்டாலினைச் சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஸ்டாலினுடன் கைகோர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் இளைஞர் அணியை வழி நடத்தியவர் பரிதி இளம் வழுதி இன்று அவரைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார் ஸ்டாலின்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஸ்டாலின் கை ஓங்கியுள்ளது. அழகிரிக்கும் ஸ்டாலினுக்குமான பனிப்போரில் ஸ்டாலின் பக்கமே கருணாநிதி நிற்கிறார். பரிதி இளம் வழுதியின் விவகாரத்திலும் ஸ்டாலினைப் பகைத்துக் கொள்ள கருணாநிதி விரும்ப வில்லை.
பரிதி இளம் வழுதியைச் சமாதானப்படுத் தும் முயற்சியில் சில திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அழகிரி, வீரபாண்டி, ஆறுமுகம் போன்ற பலம் வாய்ந்த தலைவர்கள் ஸ்டாலினுக்கு எதிராக உள்ளார்கள். அவர்களின் பின்னால் பரிதி இளம் வழுதி செல்லக் கூடாது என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு16/10/11

Monday, October 24, 2011

தடுமாறும் தலைமைகள்தவிக்கும் @வட்பாளர்கள்


தமிழக உள்ளாட்சித் தேர்தலை ஒரு அறிக்கையின் மூலம் கருணாநிதி மாற்றியதால் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தேர்தலின் போது தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தைக்கு ஒரு குழு அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவு காணப்படுவதே தமிழக அரசியலின் வழமையான செயற்பாடு. இதை எல்லாம் மீறி யாரையும் கலந்து பேசாமல் தேர்தலில் தனித்துப் போட்டி என்று தடாலடியாக அறிவித்தார் கருணாநிதி. கருணாநிதிக்குச் சளைத்தவர் இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக ஜெயலலிதாவும் தனிவழி செல்ல முடிவு எடுத்திருந்தார்.
ஜெயலிலதாவின் பாணி சற்று வித்தியாசமானது. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்பே மேயர் வேட்பாளர்களின் பெயரை அறிவித்து விட்டார். பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஏனைய வேட்பாளர் பட்டியலைக் கட்டம் கட்டமாக வெளியிட்டார். ஜெயலலிதாவுடன் மிக ஒட்டியிருந்த கூட்டணிக் கட்சிகள் தாமாகவே வெளியேறின.
ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பதவிகளுக்கு நான்கு இலட்சத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தனித் தனியே போட்டியிடுவதால் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாதுள்ளது. மாநிலத் தேர்தல் அதிகாரியின் மேற்பார்வையில் நடைபெறும் தேர்தல் என்பதனால் ஆளும் கட்சிக்குச் சாதகம் அதிகம். இது வரை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும்கட்சி தோற்றதில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஒரு தேர்தலிலும் தனித்துப் போட்டியிடவில்லை. இம்முறையும் பலமில்லõத மூன்று சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்தக் கட்சிகளினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்தவித இலாபமும் இல்லை. அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றி வாய்ப்பைத் தரக் கூடிய பலம் அந்தச் சிறிய கட்சிகளுக்கு இல்லை. தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற சகல தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், அண்ணாதிராவிடக் முன்னேற்ற கழகத்தைப் பின் தள்ளியது.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்திலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி வாய்ப்பை இழந்தது. விஜயகாந்தும், ஜெயலலிதாவும் இணைந்ததனால் இருவரும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றனர். தமிழகச் சட்டசபைத் தேர்தல்களின் போது ஒட்டி உறவாடிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், தேசிய முற்போக்குத் திராவிட முன்னேற்றக் கழகமும் இப்போ கீரியும் பாம்பும் போல் ஆளை ஆள் எதிர்த்து நிற்கின்றன. தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது ஜெயலலிதாவும், விஜயகாந்தும் ஒரே மேடையில் ஏறவில்லை. தேர்தல் முடிந்த பின்னர் தமிழக அரசைப் பற்றி பாராட்டியும், விமர்சித்தும் விஜயகாந்த் பேசவில்லை. தமிழக அரசின் நூறு நாள் ஆட்சி போன்று கூட்டணித் தலைவர்கள் புகழ்ந்து பேசிய போது விஜயகாந்த் மௌனமாக இருந்தது தேர்தல் முடிவுக்குப் பின்னர் இரு கட்சியின் தேவை முடிந்து விட்டது. ஆகையினால் கூட்டணி தேவை இல்லை. இந்த நிலைப்பாட்டையே ஜெயலலிதாவும், விஜயகாந்தும் எடுத்திருந்தனர்.
ஜெயலலிதா அவமானப்படுத்தியதும் மார்க்ஸிஸ்ட் கட்சி ஓடிச் சென்று விஜயகாந்துடன் ஒட்டிக் கொண்டது. பூட்டி இருந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கதவைப்பலம் கொண்ட மட்டும் தட்டிப் பார்த்து ஏமாந்த இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி கடைசிநேரத்தில் விஜயகாந்தைத் தேடிச் சென்றது. கொம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதா மீது நம்பிக்கை வைத்ததனால் விஜயகாந்துடனும் கூட்டணிச்சேர முடியாமல் நிலை உள்ளது. கொம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்ஸிஸ்ட் கட்சியும் பல சந்தர்ப்பங்களில் ஒரே நாளில் பிரச்சினைகளை வெளிப்படுத்திய போதிலும் தேர்தல் நேரத்தில் மட்டும் யார் பலசாலி என்பதில் தமக்குள் மோதிக் கொள்ளவுள்ளனர். இப்போதும் அப்படிப்பட்ட ஒரு நிலையே தோன்றியுள்ளது.
தமிழக காங்கிரஸின் நிலை மோசமாகவே உள்ளது. 1989 ஆம் ஆண்டின் முன்னர் இப்போது தான் தனியாகத் தேர்தலைச் சந்திக்கிறது. காங்கிரஸின் கட்சி. 1989 ஆம் ஆண்டு 9.83 சதவீத வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலின் போது தமது உண்மையான வாக்கு வங்கியே காங்கிரஸ் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பமாக ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டிப் பூசல் இன்னமும் முடிந்தபாடில்லை. தமிழக சட்ட மன்றத் தேர்தலின் பின்னர் தமிழக காங்கிரஸ் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்தார் தங்கபாலு. இன்று வரை அவருக்குப் பதிலாக இன்னொருவர் தலைவராக நியமிக்கப்படவில்லை. இப்போதும் தான் தான் தலைவர் என்ற பந்தாவில் வலம் வருகிறார் தங்கபாலு.
வேட்பாளர்பட்டியலில் ஒருவரின் பெயர் நீக்கப்பட்டதõல் கடந்த வாரம் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பெரும் ரகளை ஏற்பட்டது. அதிகாரிகளால் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டன. தங்கபாலுவின் படம் கழற்றி எறியப்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெறும் குத்து வெட்டுக்களை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்துள்ளனர். இழந்த பெருமையை மீட்பதற்கு கங்கணம் கட்டியுள்ளனர் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள். தமிழக சட்ட மன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழக தோல்விக்குக் காரணமாக ஸ்பெக்ரம் இப்போ வலுவிழந்துள்ளது. ஸ்பெக்ராம் விவகாரத்தில் சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் பெயரும் அடிபடுவதனால் ஸ்பெக்ரம் விவகாரம் திசை திரும்பி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு மின்வெட்டும் ஒரு காரணம். ஜெயலலிதாவின் ஆட்சியில் மின் வெட்டு தாண்டவமாடுகின்றது. தமிழ் சட்ட மன்றத் தேர்தலின் வெற்றியைத்தக்க வைக்க வேண்டிய நிலையில் உள்ளõர் ஜெயலலிதா.
காங்கிரஸும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையைக் கடந்த காலங்களில் மேற்கொண்டன. உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்களுக்குரிய சந்தர்ப்பத்தை இரண்டு கட்சிகளும் வழங்கவில்லை. இளைஞர்கள் இதனால் நொந்து போயுள்ளனர்.
தமிழகத் தேர்தல்களின் போது ரஜினியின் பெயர் அடிபடாத சந்தர்ப்பங்கள் மிக மிகக் குறைவு. சட்டசபைத் தேர்தலின் போது வேட்பாளர்களும், இரண்டாம் கட்டத் தலைவர்களும் ரஜினியைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி சுய விளம்பரம் தேடினார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேயர் வேட்பாளரின் வெற்றிக்காக ரஜினி ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.
சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாவாரவெளியீடு09/10/11

Sunday, October 23, 2011

தி.மு.க.அ.தி.மு.க பலப்பரீட்சை

தமிழக அரசியல் களம் புதியதொரு பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு சகல அரசியல் கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன. நீண்ட காலத்தின் பின்னர் மும்முனைப் போட்டியைச் சந்திக்கத் தயாராகியுள்ளது. தமிழகம் வாக்கு வங்கி, சாதிப்பலன் அரசியல் செல்வாக்கு, தனி மனித ஆதிக்கம் என்பனவற்றின் மூலம் இதுவரை தேர்தலைச் சந்தித்த தமிழக அரசியல் கட்சிகள் தமது உண்மையான பலம் எது என்பதை அறியக்கூடிய நேரம் வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் பலவீனங்களைத் தமது பலமாக மாற்றிய கட்சிகள் நிலை குலைந்து போயுள்ளன.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக வைகோவும் டாக்டர் ராமதாஸும் ஏற்கெனவே அறிவித்து விட்டனர். திராவிடக் கட்சிகளால் ஏமாற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்டவர் வைகோ மகனின் நாடாளுமன்றப் பதவிக்காக திராவிடக் கட்சிகளை ஏமாற்றியவர் டாக்டர் ராமதாஸ். வைகோ கட்சித் தொண்டர்களையும், டாக்டர் ராமதாஸ் வன்னியர்களையும் நம்பி தனியாகக் களமிறங்கியுள்ளனர். பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு யாருமே முன்வராத நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் தம்மைக் கைவிட மாட்டார்கள் என்ற ஏனைய கட்சிகளின் தலைவர்கள் நினைத்தனர். அவர்களின் நினைப்பு தவிடு பொடியாகியது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போதும் தமிழக சட்டமன்றத் தேர்தலின்போதும் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் மிரட்டிப் பணியவைத்த கூட்டணிக் கட்சிகள், தமிழக உள்ளாட்சித் தேர்தலின் போது தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் உதவியின்றி தனித்துப் போட்டியிடப் போவதாக கருணாநிதி அதிரடியாக அறிவித்தார். கருணாநிதியின் தனிவழி அறிவிப்பால் காங்கிரஸும் விடுதலைச் சிறுத்தைகளும் அதிர்ச்சியடைந்தன. தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த கருணாநிதியின் அதிரடி அறிவிப்பினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகள் பெரிதும் மகிழ்ந்தன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகளின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மேயர் வேட்பாளர்களின் பெயரை வெளியிட்டார் ஜெயலலிதா. குறைந்தது இரண்டு மேயர் களையாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த விஜயகாந்துக்கு ஜெயலலிதாவின் அறிவிப்பு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஜெயலலிதாவின் அறிவிப்பினால் கலக்கமடைந்த இடதுசாரிகள் நிலைமையைச் சீர்படுத்துவதற்கு முயற்சி செய்தன. ஜெயலலிதாவின் பிடிவாத குணம் இறங்கிவர மறுத்தது. நிலைமை கட்டுமீறிப் போவதை உணர்ந்த மார்க்சிஸ் கட்சி வெளியேறியது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கதவு திறக்காதா எனத் தவமிருந்தது. கதவு திறக்கப்படாதென உறுதியாகத் தெரிந்ததும் விஜயகாந்திடம் சரணடைந்தது கம்யூனிஸ்ட் கட்சி.
குடியரசுக் கட்சி, பார்வர்ட் பிளாக், முஸ்லிம் லீக் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பேரம் பேசும் கட்சிகளுடன் ஜெயலலிதா கூட்டணி சேரவில்லை. கொடுத்ததை வாங்கும் சமத்துவகட்சிகளையே தன் அருகில் வைத்திருக்கிறார் ஜெயலலிதா. கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகவே விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் புண்ணியத்தால் எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானதை ஜெயலலிதா ரசிக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்தைக் கூட்டணியில் சேர்த்தால் அவர் இன்னமும் அதிகமாகச் செல்வாக்குப் பெற்று விடுவார் என அஞ்சுகிறார் ஜெயலலிதா.

மக்களுடனும் ஆண்டவனுடனும் தான் கூட்டணி என்று வாய் கிழியப் பேசிய விஜயகாந்த், தமிழக சட்டமன்றத்தேர்தலில் கருணாநிதிக்குப் பாடம், புகட்டுவதற்காக ஜெயலலிதாவுடன் சேர்ந்தார். உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதா கைவிட்டதும் இடதுசாரிகளைக் கைப்பிடித்தார். சந்தர்ப்பவாத அரசியல் என்ன என்பதை விஜயகாந்த் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளார். சட்டமன்றக் கூட்டத் தொடரில் வாய் திறக்காத விஜயகாந்த் தேர்தல் பிரசார மேடைகளில் அனல் பறக்க பிரசாரம் செய்யத் தயõராகி விட்டார்.
கருணாநிதியே கதி என்று இருந்த திருமாவளவன் அரசியல் சதுரங்கத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டார். காங்கிரஸ் கட்சியைத் தூக்கி எறிந்த கருணாநிதி திருமாவளவனையும் கழற்றி விட்டார். சுனாமியில் சிக்கிய நாடு போல கதி தெரியாது கலங்கிப் போயுள்ளார் திருமாவளவன். இஸ்லாமிய அமைப்புகளையும் தலித் அமைப்புகளையும் ஒன்றிணைத்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளிய கிருஷ்ணசாமி, ஜெயலலிதா இன்னமும் திருந்தவில்லை என்ற உண்மையை ஒப்புக் கொண்டுள்ளõர்.
தமிழக சட்டமன்றத்துக்கு கிருஷ்ணசாமியை அன்புடன் அழைத்துச் சென்ற ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தலில் நடுத்தெருவில்விட்டு விட்டார். தனது பலத்தைக் காட்டுவதற்காக தனித்துக் களமிறங்குகிறார் கிருஷ்ணசாமி.
வீரவசனம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆடிப் போயுள்ளனர். காங்கிரஸின் முதுகில் கருணாநிதி சவாரி செய்த காலம் போய் கருணாநிதியின் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தலிலும் சவாரி செய்யக் காத்திருந்தது. காங்கிரஸின் போக்கை நன்கு தெரிந்த கருணாநிதி காங்கிரஸைத் தூக்கி எறிந்தார். கருணாநிதி நட்டாற்றில் கைவிடுவார் என்பதை எதிர்பார்க்காத காங்கிரஸ், விஜயகாந்துடன் கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை எல்லாம் நிர்மூலமாக்கிய விஜயகாந்த் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்தார்.
1971 ஆம் ஆண்டிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முதுகில் உல்லாசமாகச் சவாரி செய்த காங்கிரஸ் தனிமைப்பட்டுப் போயுள்ளது. தனித்துத் தேர்தலைச் சந்திக்கத் திராணி இல்லாத நிலையில் விஜயகாந்துடன் இணைவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்பினார்கள். அவர்களின் விருப்பம் ஈடேறாததினால் வீரவசனங்களுடன் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கிறது காங்கிரஸ்.
தமிழகத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே ராகுலின் விருப்பம். ராகுலின் விருப்பத்துக்கு இளங்கோவன், யுவராஜ் போன்றவர்கள் தூபமிட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர்களையும் மிக மோசமாக விமர்சித்தனர். இவர்களின் அவமானங்கள் எல்லாவற்றையும் பொறுமையாக சந்திக்க கருணாநிதி சந்தர்ப்பம் பார்த்து காங்கிரøஸக் கழற்றிவிட்டுள்ளõர். காங்கிரஸின் பலம் பலவீனம் என்ன என்பதை மத்திய அரசு தெரிந்து கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளார் கருணாநிதி. ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோருடன் போட்டி போட முடியாத தமிழக காங்கிரஸ், வைகோ, ராமதாஸ் ஆகியேõரின் கட்சிகளை விட கூடுதலான இடங்களைப் பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே உள்ளாட்சித் தேர்தலைக் கருதுகிறார் கருணாநிதி. பெரிய கட்சிகளின் தயவால் வெற்றி பெறும் சிறிய கட்சிகளின் உண்மையான செல்வாக்கு உள்ளாட்சித் தேர்தலில் வெளிப்படப் போகிறது. உள்ளாட்சித் தேர்தலின் முடிவு புதிய கூட்டணிக்கு அச்சாரமிடும்.
உள்ளாட்சித் தேர்தல், திருச்சி மேற்கு இடைத் தேர்தல் ஆகிய இரண்டிலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமது பலத்தை வெளிப்படுத்தக் களமிறங்கியுள்ளனர். படை பலம் எதுவும் இல்லாமல் இருவரும் நேருக்கு நேர் மோதத் தயாராகிவிட்டனர்.

சூரன்.ஏ.ரவிவர்மா


வீரகேசரிவாவாரவெளியீடு02/10/11


Tuesday, October 18, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 8பாசமுள்ள அண்ணன் தங்கை உறவை கொச்சைப்படுத்துகிறது சமூகம். தங்கையின் கணவன் மனைவி மீது சந்தேகப்படுகிறான். தன் குழந்தையின் தகப்பன் தான் இல்லை என்று கூறுகிறான். தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியால் அண்ணன் தங்கை உறவை வெளிப்படுத்த முடியாது தவிக்கிறான் நாயகன். இப்படி ஒரு வித்தியாசமான கதை அம்சத்துடன் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இதய வீணை.
பெற்றோரை கொலைசெய்த‌தவனை பழி வாங்குவது, கடத்தல் கும்பலை அழிப்பது. தொழிலாளர்களை ஏமாற்றும் முதலாளிக்கு பாடம் புகட்டுவது போன்ற அடித்தடி படங்கள்தான் எம்.ஜி.ஆருக்கு புகழைத் தேடிக் கொடுத்தன. அவற்றிலிருந்து வேறுபட்டு கதை அம்சமுள்ள சில படங்களும் எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்த்தன‌. இதய வீணை படத்தில் பாசமுள்ள அண்ணனாக நடித்துபாராட்டுப்பெற்றார்.
எம்.ஜி.ஆருக்கும் தந்தை வக்கீலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் உங்கள் மகன் என்பதை வெளிப்படுத்த மாட்டேன் என்று சபதம் செய்கிறார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் தங்கை லக்ஷ்மி பணக்காரனான சிவக்குமாரை காதலிக்கிறார். இந்த காதலுக்குப் பல தடைகள் எழுந்தது. திருமணம் நடக்க உதவி புரிகிறார் எம்.ஜி.ஆர். லக்ஷ்மியின் அண்ணன் தான் எம்.ஜி.ஆர் என்பது சிவகுமாருக்கு தெரியாது.
எம்.ஜி.ஆர் மஞ்சுளாவை காதலிக்கிறார்.வில்லன்களான நம்பியார், ஆர்.எஸ்.மனோகர் ஆகியோரின் சூழ்ச்சியால் எம்.ஜி.ஆர் மீது கொலைப்பழி விழுகிறது. எம்.ஜி.ஆர் தலை மறைவு வாழ்க்கை வாழுகிறார். ஒரு நாள் தங்கை லக்ஷ்மியின் வீட்டுக் கூரையின் மீது ஏறி தப்பிச் செல்கிறார் எம்.ஜி.ஆர். அப்போது லக்ஷ்மி குளித்துக் கொண்டிருக்கிறாள். இதனைக் கண்ட சிவகுமார் தனது மனைவி குளிப்பதை எம்.ஜி.ஆர் பார்த்ததாக கூறுகிறார். சிவகுமாரின்சுடுசொற்களால் லக்ஷ்மி மனம் கலங்குகிறாள். எம்.ஜி.ஆர் யாரென்று சொல்ல முடியாது தவிக்கிறாள். எம்.ஜி.ஆருக்கும் லக்ஷ்மிக்கும் தொடர்பு இருப்பதாக ஊரே கூறுகிறது. எம்.ஜி.ஆரின் காதலி மஞ்சுளாவும் இதனை நம்புகிறார். இறுதியில் தனது திறமையால் கொலைப்பழியிலிருந்து தப்புகிறார் எம்.ஜி.ஆர். மகனின் பெருமையை உணர்ந்த தகப்பன் எம்.ஜி.ஆர் தான் தன் மகன் என்று கூறுகிறார். எம்.ஜி.ஆர் லக்ஷ்மியின் சகோதரர் என்ற உண்மை அறிந்து சிவகுமார் மனம் திருந்துகிறார்.
பிரபல எழுத்தாளரான மணியன் எழுதி வாரம் @தாறும் ஆனந்த விகடனில் வெளியான தொடர் நாவல்தான் இதய வீணை. இலட்சக்கணக்காண வாசகர்கள் ஆனந்த விகடனை வாங்கியதும் இதயவீணை தொடரைத்தான் முதலில் படிப்பார்கள். தனது எழுத்துக்களால் வாசகர்களை கட்டிவைத்த மணியனின் நாவலுக்கு வசனம் எழுதியவர் சொர்ணம். நாவலின் மூலக்கதை சிதறாமல் படமாக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர், மஞ்சுளா, எம்.ஜி.சக்கரபாணி, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், லக்ஷ்மி, சிவகுமார், ஜிசகுந்தலா, தேங்காய் சீனிவாசன், ஏ.சகுந்தலா, சச்", எஸ்.லீலா, பூரணம், விஸ்வநாதன், மாஸ்டர் சேகர், மாஸ்டர் பிரபாகர், ஐசரி வேலன், டி.என்.வெங்கட்ராமன், திருப்பதி சாமி, கன்னையா, பாண்டு, உசிலமணி ஆகியோர் நடித்தனர்.வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் பாடல்களை எழுதினர். சங்கர் கணேஷ் இசையமைத்தனர். காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர், பொன்னந்தி மாலை பொழுது, இன்று போல என்றும் வாழ்க எங்கள் வீட்டு திருமகளே, ஆனந்தம் இன்று ஆரம்பம், ஒரு வாலுமில்ல நாலு காலுமில்ல ஆகிய பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. ஒளிப்பதிவு ஏ.சண்முகம். காஷ்மீரில் அழகாக அற்புதமாகப் படமாக்கினார் மணியனும் வித்துவார் வேலட்சுமணனும் இணைந்து தயாரித்தனர். இரட்டையர்களான கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள்.
சிறந்த கதையம்சம் உள்ள இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிப்பெற்றது. ஹிந்தியிலும் தெலுங்கிலும் டப் பண்ணி வெளியிட்டார்கள்.
மித்திரன்16/10/11

Sunday, October 16, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 7

கணவர் மீது சந்தேகப்பட்டு குடும்பத்தில் கலவரத்தை ஏற்படுத்துகிறாள் ஒரு பெண். மனைவியின் கொடுமைகளை தாங்க முடியாது வீட்டை விட்டு வெளியேறுகிறான் அவன். தன் மனைவியை இன்னொருவனுடன் பழகச் சொல்லி வற்புறுத்துகிறான் ஒருவன். கணவனின் இழி செயலுக்கு இணங்காது வீட்டை விட்டு வெளியேயறுகிறாள் அந்தப் பெண். மனைவி வீட்டை விட்டு வெளியேயறியதை அறிந்தவன் மனைவியைத் தேதடுகிறான். வெவ்யேவறு காரணத்துக்காக வீட்டை விட்டு வெளியேறிய ஆணும் பெண்ணும் சந்தித்து ஒன்றாக வாழ்கின்றனர். வித்தியாசமான கதை அமைப்புடன் வெளிவந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற படம்தான் புதுப்புது அர்த்தங்கள்.
தமிழ் சமூகத்தின் பண்பாடு கலாசாரம் எல்லாவற்றையும் மீறிய இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒருவரின் மனைவியும் ஒருத்தியின் கணவனும் வீட்டை விட்டு வெளியேயறி ஒன்றாகக் குடித்தனம் செய்யும் கதையை விரசம் இல்லாது மிகவும் துணிச்சலாகப் படமாக்கியிருந்தார். சமூகத்தில் நடைபெறும் சில அவலங்களை தனக்கே உரிய பாணியில் திரையில் வெளிபடுத்தினார் பாலசந்தர்.டேட்டிங் என்ற சமூகசீர்கேடு இப்போது நாகரீகம் என்ற பார்வையில் அரங்கேறுகிறது. இதுபற்றி யாரும் சிந்திக்காத காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் மனக் கட்டுப்பாட்டுடன் ஒரே வீட்டில் வாழலாம் என்பதை வெளிப்படுத்திய படம் புதுப்புது அர்த்தங்கள்.
பிரபல பாடகர் ரகுமான். அவரது பாடல்களுக்கு பெண் ரசிகைகள் அடிமையானார்கள். அவர் பாடும் இடமெல்லாம் கூடும் ரசிகைகளினால் அரங்கம் அதிர்ந்தது.செல்வச் செருக்குமிக்க குடும்பத்தில் பிறந்த கீதா, ரகுமானின் மீது ஆசைப்படுகிறாள். கடை தொகுதிக்கு பொருட்கள் வாங்கச் சென்ற கீதா அங்கே தொலைக்காட்சியில் ரகுமான் பாடுவதை வெறித்துப் பார்த்தாள். கீதா பார்த்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியை மகள் விரும்புகிறாள் என நினைத்த தாய் ஜெயசித்ரா. என்ன வேண்டும் என கேட்கிறாள். பாடுபவர் வேண்டும் என்று கீதாசொல்கிறாள். வாங்கிட்டா போச்சு என்று தாய் ஜெயசித்ரா அலட்சியமாக கூறுகிறாள். பணத்தால் எதையும வாங்கலாம் என்று கணக்கும் போடும் குடும்பத்தில் மாப்பிள்ளையாகிறான் ரகுமான்.
ரசிகர்கள் கொடுக்கும் தொல்லைகளை அன்புடன் ஏற்றுக் கொள்கிறான் ரகுமான். ரசிகைகள் மீதும் கணவன் மீதும் சந்தேகப்படுகிறாள் கீதா. ரகுமான் பாடக்கூடாது என்று தடை விதிக்கிறாள் கீதா. கீதாவின் சித்திரவதைகளினால் துவண்டு போகிறார் ரகுமான். பிரபல பாடகர் ரகுமானின் குடும்ப விவகாரம் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாகி விவகாரத்து வரை செல்கிறது.
கணவனின் கொடூர இச்சைக்கு இணங்காத சித்திராவும் மனைவியின் சித்திரவதையினால் வெளியேறிய ரகுமானும் ஒரே வீட்டில் வசிப்பதனால் இருவருக்கும் முடிச்சுப் போடுகிறார்கள். சிக்கலான திரைக்கதையை மிகவும் தெளிவாக முடித்தார் இயக்குநர் பாலசந்தர். ரகுமானின் மனைவியும் சித்திராவின் கணவனும் திருந்துகின்றனர். ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு மீண்டும் இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர்.
ரகுமான், கீதா, சித்தாரா, ஜெயசித்ரா, ஐனகராஜ், பூர்ணம் விஸ்வநாதன், செள‌கார் ஜானகி, சத்யன் ஆகியோர் நடித்தனர். விவேக் அறிமுகமான படம் இது. ரகுநாத ரெட்டியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தின் வெற்றிக்கு இளையராஜாவும் ஒரு காரணம். இப்படத்தின் பாடல்கள் இன்றும் மனதைவிட்டு அகலவில்லை. பாடல்களை மையமாகக் கொண்ட படங்களில் பாடல்களே மிகவும் முக்கியமானவை. அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து இசைவேள்வி நடத்தியுள்ளார் இசைஞானி இளையராஜா. கேளடி கண்மணி பாடகன் சங்கதி, கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே, குருவாயூரப்பா குருவாயூரப்பா, எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும், எடுத்த நான் விடவா என் பாட்டை ஆகிய பாடல்கள் ஒலிக்காத நாளே இல்லை எனலாம்.
கதையையும் தன்னையையும் நம்பி தனது கவிதாலயா மூலம் புதுப்புது அர்த்தங்கள் என்னும் படத்தை வெளியிட்டார் பாலசந்தர். பிரபலம் இல்லாத நடிகர்கள் நடித்து வெளியாகிய வெற்றிப்படங்களில் புதுப்புது அர்த்தங்களும் ஒன்று.
மித்திரன்09/10/11

Tuesday, October 4, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 6

நட்புக்கு இலக்கணமான பல படங்கள் வெளிவந்த @வளையில் நட்புக்கு துரோகம் செய்யும் கன்னிப்பருவத்திலே வெளியாகி 275 நாட்களை தாண்டி வெள்ளிவிழா கொண்டாடியது. ஆண்மை இழந்த நண்பனின் மனைவியை அடையத்துடிக்கும் துரோகியை அடையாளம் காட்டிய படம் கன்னிப்பருவத்திலே. 1979 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் மிகச் சிறந்த நடிகராக ராஜேஷ் அறிமுகமானார். ராஜேஷின் மனைவியாக வடிவுகரசி நடித்தார். ராஜேஷின் நண்பனாக . கே.பாக்கியராஜ் நடித்தார். திருட்டு முழி சோடாபுட்டி கண்ணாடியுடன் பார்த்ததும் சிரிப்பை வரவழைக்கும் பாக்கியராஜின் வில்லத்தனம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தது.
நம்பியார் பி.எஸ்.வீரப்பா அசோகன் ராமதாஸ் போன்ற பயங்கர வில்லன்களை பார்த்து மிரண்ட தமிழ் ரசிகர்களுக்கு பாக்கியராஜின் வில்லத்தனம் வித்தியாசமாக இருந்தது. ரி.எஸ்.பாலையா எம்.ஆர்.ராதா ஆகியோர் நகைச்சுவையுடன் கூடிய வில்லன் பாத்திரத்தில் மிளிர்ந்தனர். தில்லானா @மாகனம்பாள் படத்தில் நம்பியார், ராமதாஸ் போன்றவர்கள் வில்லன் பாத்திரத்தில் நடித்தாலும் இறுதிவரை நகைச்சுவையுடன் கூடிய வில்லனாக நிலைத்தவர் நாகேஷ். காதலர்களான சிவாஜியையும் பத்மினியையும் பிரிப்பதற்கு வில்லனான நாகேஷ் @மற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட பாக்கியராஜ் வில்லன் பாத்திரத்தைக் காத்திரமாகச் செய்து முடித்தார்.
ராஜேஷûம் பாக்கியராஜும் உயிர் தோழர்கள் ராஜேஷ் வடிவுகரசியை காதலிக்கிறார். வடிவுகரசியும் ராஜேஷை உயிருக்குயிராக காதலிக்கிறார். பாக்கியராஜ் மேற்படிப்பிற்காக வெளியூர் சென்று விடுகிறார். ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் போது காளையினால் முட்டப்பட்ட ராஜேஷ் ஆண்மையை இழக்கிறான். திருமணத்தின் பின் மனைவியை திருப்திப்படுத்த முடியாது தவிக்கிறார். ராஜேஷ். கணவனின் இயலாமையை அறிந்த வடிவுகரசி கணவனின் இயலாமையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தாம்பத்தியசு கத்தை தேடாது கணவனின் மனதை நோகடிக்காது கிராமத்து பெண்ணாக பணிவிடை செய்கிறாள்.
வெளியூரில் படித்துவிட்டு கிராமத்துக்கு வரும் பாக்கியராஜுக்கு ராஜேஷின் இயலாமை தெரியவருகிறது. தாம்பத்திய சுகத்தை அனுபவிக்காது வாழும் வடிவுகரசியை வலையில் வீழ்த்த முயற்சிக்கிறார் பாக்கியராஜ். பாக்கியராஜின் ஆசைக்கு இணங்க மறுக்கிறாள் வடிவுகரசி. வடிவுக்கரசியை துரத்தித் துரத்தி தொல்லை கொடுக்கிறார் பாக்கியராஜ். வடிவுகரசியின் புத்திமதியைக் கேளாது அவளை அடைய முயற்சி செய்கிறார் பாக்கியராஜ்.
பாக்கியராஜின் தொல்லையைத் தாங்க முடியாது திட்டமிட்டு பாழும் கிணற்றில் தள்ளிக் கொலை செய்கிறாள் வடிவுகரசி. இந்த விஷயம் எல்லாம் ராஜேஷுக்கு தெரிய வருகிறது. பாக்கியராஜின் மரணத்தின் பின் நிம்மதியாக வாழ்கிறாள் வடிவுகரசி.
எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்த இப்படத்தை பி.வி.பாலகுரு இயக்கிநார். திரைகதை வச‌னத்தை பாக்கியராஜ் எழுதினார். பாக்கியராஜின் வச‌னங்கள் வடிவுகரசியை மட்டுமல்ல ரசிகர்களையும் பதற வைத்தது. பாக்கியராஜ் திரையில் தோன்றும் போது பூனையின் ச‌த்தத்தினை பின்னனியில் ஒலிக்கவிட்டு காட்சிக்கு பரபரப்பூட்டினார்கள் இரட்டையர்களாகிய ச‌ங்கர் கணேஷ். அட்டகாச‌ச் சிரிப்பு அவேச‌ப் பேச்சு எதுவுமின்றி இயல்பாகத் தனது வில்லத்தனத்தை வெளிபடுத்தினார் பாக்கியராஜ்.
நேதாஜி, முத்துபாரதி, பூங்குயில், புலமைபித்தன் ஆகியோர் எழுதியநடையை மாற்றி, ஆவாரம்பூமேனி, அடி அம்மாடி சின்னப்பொண்ணு, பட்டுவண்ண ரோஜாவாம் ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேவற்பைப் பெற்றன. ச‌ங்கர் கணேஷ் இசையமைத்த வெற்றிப்படங்களில் வரிசையில் கன்னிப்பருவத்திலேயும் சேர்ந்தது.
பாக்கியராஜின் திரைக்கதை வச‌னத்தில் வெளியான படங்கள் தோல்வியடைந்ததில்லை பாக்கியராஜின் கதை வச‌னத்தில் உருவாக்கப்பட்ட படங்களுக்கு வேற்று மொழிகளில் அதிக கிராக்கி உள்ளது. இப்படமும் வேற்று மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்றது.
மித்திரன்04/10/11