Saturday, July 31, 2021

இரண்டாவது ஒலிம்பிக்கில் இரண்டு தங்கங்கள்

  உலக வரைபடத்தில்  2008 ஆம் அண்டு  உருவான கொசோவா  எனும் நாடு டோக்கியோ ஒலிம்பிக்கி இரண்டு தங்கப்  பதக்கங்களைப் பெற்று தன்  திறமையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் ஆரம்பவிழாவில் கொசோவா கொடியுடன் எட்டு வீரர்கள்  அணிவகுத்துச் சென்றபோது  அவர்கள் மீது எந்த விதமான எதிர்பார்ப்பும் எழவில்லை. பதக்கம்  பெறாத  நாடுகளின் பட்டியலில் இடம் பெறும் நாடு என்ற  எண்ணமே அனைவருக்கும் ஏற்பட்டது.

ஜூடோ போட்டியின்  மகளிர் 48 கிலோ எடை பிரிவில் க்ராஸ்ரிக் எனும்  வீராங்கனை தங்கப்பதக்கம் பெற்றதும் உலகமே ஆச்சரியத்துடன் பார்த்தது. அந்த ஆச்சரியத்தில் இருந்து மீள்வதற்கிடையில் , 57 கிலோ எடை பிரிவில் க்ஜவாகோ எனும் இன்னொரு வீராங்கனை தங்கம் வென்று தாய் நாட்டைப் பெருமைப்படுத்தினார்.

  அல்பேனியர்களை அதிகம் கொண்ட கொசாவோ,  1913‍ஆம் ஆண்டு செர்பியாவுடன் இணைக்கப்பட்டது. செர்பியர்கள் கிறித்த மதத்தவர் அல்பேனிய மொழி பேசும் மக்களோ இஸ்லாமியர்கள். இருதரப்புக்கும் மோதல்கள் வெடித்தன. இது மத மோதல்களாக இல்லாமல் அல்பேனிய தேசிய இனத்தின் போராட்டமாகவே தொடர்ந்தது. செர்பியாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக நேட்டோ படைகள் களமிறங்கின. இதன் விளைவாக 2008-ம் ஆண்டு கொசாவோ ஒருதலைப் படமாக தனிநாடாக   பிரகடனம் செய்யப்பட்டது. ஐநா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் அங்கீகரித்தன. முதல் முறையாக  2016ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கொசோவா பங்குபற்றியது.

மூன்று நாடுகளுக்காக ஒம்பிக்கில் விளையாடிய வீராங்கனை

        உலக சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டியில் 16 வயதில் களம் இறங்கிய  ஒக்சனா சுஸோவிட்னா 46 ஆவது வயதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஓய்வை அறிவித்தார். 30 வருடங்களாக ஜிம்னாஸ்டிக் போட்டிகளில்  கோலோச்சிய சுஸோவிட்னா ஓய்வு சாதிப்பதற்கு வயது தடை அல்ல என்பதை  எடுத்துக் காட்டியுள்ளார்.

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வீரர்களில் அதிகமானோர் ஒரு நாட்டுக்காக பலமுறை கலந்துகொள்வார்கள். உஸ்பெகிஸ்தான் நாட்டில் பிறந்த சுஸோவிட்னா, .விதிவிலக்காக இதுவரை மூன்று நாடுகளுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

ஜிம்னாஸ்டிக் போட்டியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் 46 வயதான ஒக்சனா சுஸோவிட்னா, டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வால்ட் பிரிவில் தோல்வியடைந்ததை அடுத்து தனது ஓய்வை அறிவித்தார். புற்றுநோயில் இருந்து மீண்ட 21 வயது நிரம்பிய இவருடைய மகனும் இப்போட்டியை நேரில் கன்டு ரசித்தார். 16 ஆவது வயதில் உலக சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டியில் சோவியத் யூனியன் சார்பாக முதன்முதலாக கலந்து கொண்டார் சுஸோவிட்னா. இப்போட்டியில்   மாற்று வீரராகவே கலந்து கொண்டாலும் ஊருக்கு திரும்பி வருகையில் அவருடைய கையில் இரண்டு பதக்கங்கள் இருந்ததன‌. அன்றிலிருந்து கடந்த 30 வருடங்களாக ஜிம்னாஸ்டிக் களத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.

சோவியத் நாடுகள் சிதறுண்டு தனித்தனி நாடாக பிரிந்த போது, 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் முன்னாள் சோவியத் நாடுகள் அனைத்தும் சுதந்திர காமன்வெல்த் நாடுகள் என்ற பெயரில் ஒருங்கிணைந்து ஒலிபிக்கில் போட்டியிட்டன.அப்போது அந்த அணியின் கீழ் விளையாடிய சுஸோவிட்னா, ஜிம்னாஸ்டிக் குழு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

சுஸோவிட்னான் மகன் அலிஷர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் உஸ்பெகிஸ்தானில் சிகிச்சை அளிக்கப் போதுமான வசதி இல்லாத காரணத்தினல் நோய்வாய்ப்பட்ட தன் மகனோடு  2002 ஆம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்தார்.

ம்கனைன் நோய் தீவிரமடைந்ததால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை அறிவித்தார். மகனின் சிகிச்சை செலவிற்கு நிதி திரட்டுவதற்காக மறுபடியும் ஜிம்னாஸ்டிக் களத்தில் கால் பதித்தார்.

 ஜேர்மனியி தங்கி இருந்தபோது 2008 ஆம் ஆண்டு பீஜிங்  ஒலிம்பிக்கில் ஜேர்மனி சார்பாக விளையாடி தனி நபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். அப்போது அவருக்கு  33 வயது. இந்த வயதில் ஜிம்னாஸ்டிக்கில், அதுவும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது சாதாரண விஷயம் இல்லை.

இரண்டு மாதத்திற்கு முன்புதான் அவருடைய மகனும் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமாகியிருந்தார். இது அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது. அந்த மகிழ்ச்சியுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் உஸ்பெகிஸ்தான் சார்பாக கலந்து கொண்டார்.


இதுவரை பெற்ற பதக்கங்கள்

ஒலிம்பிக் 1 தங்கம், 1 வெள்ளி

உலக சம்பியன் 3 தங்கம், 4வெள்ளி, 4வெண்கலம்

உலகக்கிண்ணம் 1 தங்கம், 1  வெண்கலம்

ஏசிய கேம்ஸ் 2 தங்கம் 4 வெள்ளி 2 வெண்கலம்

ஏசியன் சம்பியன் ஷிப் 3 வெள்ளி, 1 வெண்கலம்

ஐரோப்பியன் சம்பியன் ஷிப்  1 தங்கம், 1வெள்ளி 1 வெண்கலம்

இஸ்லாமிய  சொலிடரி கேம்ஸ் 1 தங்கம் 

சுஸோவிட்னா பங்குபற்றியஒலிம்பிக் போட்டிகள்.


 

1992 பர்சிலோனா [ஸ்பெய்ன்], 1996 அட்லாண்டா [அமெரிக்கா], 2000 சிட்னி [அவுஸ்திரேலியா],2004 ஏதென்ஸ் [கிரீஸ்], 2008 பீஜிங் [ச்சினா],2012 இலண்டன்[இங்கிலாந்து],2016ஜெனீரோ [பிரேஸில்],2020 டோக்கியோ [ஜப்பான்

டோக்கியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் பங்குபற்றியஅதிக வயதான வீரராக சுஸோவிட்னா உள்ளார்.

Friday, July 30, 2021

தீதும் நன்றும்

 

கும்மிருட்டைக்  கிழித்துக்கொண்டு பெரும் சத்தத்துடன் காட்டுப் பாதையில் அந்த உழவு இயந்திரம் சென்று கொண்டிருந்தது.  அதன் பின்னால் கொழுவப்பட்ட பெட்டியில்  இருபத்தைந்து இளைஞர்கள் இருட்டை வெறித்தபடி  பார்த்துக்கொண்டிருந்தனர். அச்சம்,பழிவாங்கல், இலட்சியம் என்பன அவர்களின் கண்களில் மின்னின.

அவர்கள் அனைவரும் புதியவர்கள்,  முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள். வெவ்வேறு கிராமங்களில் வசிப்பவர்கள். இப்படி ஒன்றாக ஒருநாள் இணைவோம் என அவர்கள் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். ஒருவரை ஒருவர் வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தனர். ஏதோ ஒரு இலட்சியம் அவர்களை ஒன்றிணைத்துள்ளது. ஒருவருடன் ஒருவர் பேச ஆசைதான். ஆனால், சூழ்நிலை அவர்களுக்கு  இடம் கொடுக்கவில்லை. சீருடையுடன் துப்பாக்கி ஏந்தியவர்கள் அவர்களைச் சுற்றி இருந்தனர்.

உழவு இயந்திரத்தைச் செலுத்துபவரின்  இரண்டு பக்கங்களிலும் துப்பாக்கியுடன் இருந்த நால்வர் இருட்டைக் கூர்ந்து அவதானித்தபடி இருந்தனர். உழவு இயந்திரத்தின் சத்தத்தால் அச்சப்பட்ட  பறவைகளும் ,குரங்குகளும்  தூக்கம் கலைந்து பாதுகாப்புத் தேடிச் சென்றன.

தமது மக்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை. அவர்கள் பாதுகாப்பாக அச்சமின்றி சுதந்திரமாக வாழ வேண்டும் என தலைவர்கள் பொது மேடைகளில் ஆவேசமாகப் பேசினார்கள். கைதட்டல்கள், விசிலடிப்புகள், இரத்தத்திலகங்களுடன் கூட்டம் கலைந்துவிடும். தலைவர்கள் நிம்மதியாகத் தூங்குவார்கள். அவர்களது ஆவேசப் பேச்சுகளால் தூக்கம் கலைந்த இளைஞர்கள் தீப்பிளம்பானார்கள். தலைவர்கள் சொன்னதைஇரகசியமாகச் செய்து முடித்தார்கள்.

தீவிரவாத இளைஞர்களை பொலிஸார்  சல்லடை போட்டுத் தேடினார்கள். பொலிஸாரின் இழப்பு அதிகரித்ததால் இராணுவம் அழைக்கப்பட்டது.  தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தனது முழு சக்தியையும் பாவித்தது. அது இரு தரப்பிலும் பயங்கரவாதமாக மாறியது.

 திடீரென ஆங்காங்கே சில மின்னல் கீற்றுகளுடன் துப்பாக்கிச் சத்தங்கள் எழுந்தன. உழவு இயந்திரப் பெட்டியில் இருந்தவர்கள் எழுந்தனர்.

"எளும்ப வேண்டாம். இருங்கோ" என யாரோ சத்தமிட்டனர். துப்பாக்கிச் சத்தம் அதிகரித்ததால் அது யாருக்கும் கேட்கவில்லை. கேட்டாலும் அதற்குக் கட்டுப்படும் மன நிலையிலும் அவர்கள் இல்லை. எழுந்தவர்கள்  பொத்து பொத்தென இரத்தம் சொட்டச் சொட்ட விழுந்தனர்.

உழவு இயந்திரம்  வேகமாக ஓடியது. துப்பாக்கியுடன் இருந்தவர்கள் திருப்பிச் சுட்டனர். அமைதியான காடு அல்லோல கல்லோலப்பட்டது.

நந்தனுக்கு சுய நினைவு திரும்பிய  போது அவனுக்குப் புரியாத பாஷையில் சிலர் கதைத்தனர். மெதுவாகக் கண்ணைத் திறந்து பார்த்தான். இடதுகை தோள் மூட்டில் பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. முரட்டுத் தோற்றமுடைய சிலர் மங்கலாகத் தெரிந்தனர்.

இந்த வைத்தியசாலைக்கு எப்படி வந்தேன்? இடதுகை தோள்மூட்டில் எப்படிக் காயம் ஏற்பட்டது? இது எந்த இடம்? என்னை சுற்றி இருப்பவர்கள் யார்? போன்ற கேள்விகள் அவன் முன் தோன்றின. பழைய ஞாபகங்கள் நந்தனின் னத்திரையில் ஓடின.

கைதடியும் அதன் சுற்றுப்பகுதியும் நந்தனுக்கு  ஞாபகத்தில்  வந்துபோனது. இலங்கையில் நடைபெறும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக்கொண்டுவர இந்திய அமைதி காக்கும் படை ஆயுதங்களுடன் வந்து இறங்கிய காலம் அது. சமாதானம் பேச வந்தவர்கள் சண்டித்தனம் காட்டினார்கள். இலங்கை அரசுக்கு எதிரான உள் நாட்டுப் போர் இந்திய அரசுக்கு எதிராகத்  திசைமாறியது.

இலங்கையில் நடக்கும் யுத்தத்தில் பங்கு பெறாமல் ஒதுங்கி இருந்த குடும்பங்களில் நந்தனின் குடும்மும் ஒன்று. சுற்றி வளைப்பு, கைது,விசாரணை எல்லாம் பழகிப் போய்விட்டது.

சாவகச்சேரி சந்தையில் நந்தனின் தகப்பன் மரக்கறி வியாபாரம் செய்து குடும்பத்தைப் பார்த்தார்.  படிப்பு ஏறாததால் பாடசாலையை முடித்துக்கொண்ட நந்தன் தகப்பனுக்கு உதவியாக இருந்தான். தாய், இரண்டு சகோதர்கள் என அளவான குடும்பம். வருமானம் பெரிதாக இல்லை என்றாலும்  மகிழ்ச்சியான   வாழ்க்கை அமைந்தது.

இந்திய ஹெலிக்கொப்டர் சாவகச்சேரிச் சந்தையின்  மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் நந்தனின் தகப்பனும் சதைப் பிண்டமானார். மரக்கறி கொள்முதல் செய்வதற்காகத் தோட்டத்துகுச் சென்றதால் நந்தன் தப்பினான்.அடுத்து என்ன செய்வதெனத் தெரியாது தவித்தது நந்தனின் குடும்பம்.

தகப்பனின் இழப்பில் இருந்து மெது மெதுவாக வெளியே வந்த நந்தன் தனக்கு உதவியாக மரக்கறி வியாபாரத்துக்கு தாயை அழைத்துச் சென்றான். அவனது சகோதரர்கள் இருவரும் பாடசாலையில் படிக்கின்றனர் தகப்பனின் மறைவு நந்தனை உலுக்கியது. இந்திய இராணுவத்தைக் காணும்போதெல்லாம் இரத்தம் துடித்தது. மிகவும் அமைதியான நந்தனின் குணாம்சம் தகப்பனின் கொடூர மரணத்தால் மாறியது.

இயக்கத்துக்கு ஆட்களைச் சேர்ப்பதாக நந்தனின் நண்பன் ஒருவர் கூறினான். அவனுடன் கதைத்து விபரம் அறிந்தபின்னர் தனது பெயரையும் சேர்க்கும்படி சொன்னான் நந்தன். நண்பன் கொடுத்த தகவலின் படி இரவு எட்டு மணிக்கு வாசிகசாலையடியில் நந்தன் காத்திருந்தான். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் நந்தனின் பெயரைக் கூறி அழைத்துச் சென்றார். உள் வீதியூடாக மட்டுவிலை நோக்கிச் சென்றது அந்த மோட்டார் சைக்கிள்.

சண்டை சுற்றிவளைப்பு என்பனவற்றால் மட்டுவிலுக்கு அப்பால் உள்ள கிராமங்களைப் பற்றி  நந்தனுக்கு எதுவும்  தெரியாது.சுமார் அரை மணித்தியாலத்தின் பின்னர் புலிகளின் முகாம் ஒன்றுக்குள் அந்த மோட்டார் சைக்கிள் நுழைந்தது.  நந்தனை அழைத்துச் சென்றவர் அவனை ஒருவரிடம் கையளித்தார் அவர் நந்தனிடம் சில  கேள்விகளைக் கேட்டார். நந்தன் பதிலளித்தான். நந்தனின் பெயர் விபரம் எல்லாம் பதிந்த  பின்னர் அவனை இன்னொருவரிடம் ஒப்படைத்தார்.

நந்தனை அழைத்துச் சென்றவர் அந்த முகாமில் உள்ள கட்டடத்தின் ஒரு அறைக்குள் விட்டார்.  அங்கே  இன்னும் பலர் இருந்தனர். சிறிது நேரத்தில் அனைவருக்கும் சாப்பாடு கொடுக்கப்பட்டது. அறைக் கதவு  திறந்து இருந்தது. ஆனால், துப்பாக்கி ஏந்தியவர்கள் வாசலில் இருந்தார்கள்.  நந்தனை விட வயதில் கூடியவர்களும்  அவனை விட வயது குறைந்தவர்களும் இருந்தார்கள்.

கையில் துண்டுடன் வந்த ஒருவர் ஒவ்வொரு பெயராக வாசித்தார். பெயருக்குரியவகள் எழுந்து வெளியே சென்றனர். நந்தனின் பெயர் வாசிக்கப்பட்டபோது நந்தன் எழுந்து சென்றான். அந்தக் கட்டடத்துக்கு வெளியே வரிசையாகச் சென்றனர். நந்தனுக்குப் பின்னாலும் சிலர் சென்றனர்.முன்னால் சென்றவர்கள் உழவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்ட  பெட்டியில் ஏறினார்கள். நந்தனும்  ஏறினான்.

முன்னுக்கும் பின்னுக்கும் துப்பாக்கி ஏந்திய மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்புடன் உழவு இயந்திரம் அந்த முகாமை விட்டு வெளியேறியது. சுமார் ஒரு மணி நேரப் பயணத்தின் பின்னர் கடற்கரையைச் சென்றடைந்தது உழவு இயந்திரம். உழவு இயந்திரத்தில் இருந்த அனைவரும்  வேறு ஒரு குழுவிடம் கையளிக்கப்பட்டனர். அங்கேயும் துப்பாக்கி ஏந்தியவர்கள் காவல் காத்தனர். ஆனால், அவர்களின் கைகளில் நவீன துப்பாக்கிகள் இருந்தன.இப்படி ஒரு துப்பாக்கியுடன் நான் வலம் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை  என நந்தன் நினைத்தான்.

உழவு இயந்திரத்தில் வந்தவர்களை பெயர் சொல்லி கடல் பக்கம் அழைத்துச் சென்றார்கள். கடலினுள் மரத்தாலான பாதை போடப்பட்டிருந்தது.அதன் மேல் சென்றவர்கள் பாதையில் கட்டப்பட்டிருந்த  போட்களில்  ஏறினார்கள்.  பத்துக்கும் மேற்பட்ட போட்கள்  ஒரே நேரத்தில் கடலைக் கிழித்துக்கொன்டு புறப்பட்டன. கடல் பயணம் நந்தனுக்கு புதியது. மனது படபடத்து பயப்பட்டான்.

கடற்கரை வெளிச்சங்கள் மெல்ல மெல்லத் தூரமாகி றைந்தன. கண்ணுக் கெட்டிய தூரத்துக்கு தண்ணீர்தான் தெரிந்தது.மேலே நட்சத்திரங்கள் மின்னின. எங்கோ தூரத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டன.

போட் பயணம் அமைதியாக இருந்தது. நந்தன் இருந்த  போட்டுக்குள் துப்பாக்கியுடன் சிலர் இருந்தனர். எந்தத் திசையை நோக்கிச் செல்கிறோம் எனத்தெரியாமல் ஒருவரை ஒருவர் அச்சத்துடன் பார்த்தனர்.

" போன கிழமை நேவி அடிச்சு இந்த இடத்திலைதான் ரண்டு போட் தாண்டது. நாப்பது பேர்செத்துப்போச்சினம்" என துப்பாக்கி ஏந்திய ஒருவர் சொன்னார்.

அது உண்மையோ பொய்யோ தெரியாது நந்தனுக்கு வயிற்றைக் கலக்கியது. மற்றவர்களும்  மிரட்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.துப்பாக்கி ஏந்திய இன்னொருவர் சிரித்ததை யாரும் கவனிக்கவில்லை.

பதை பதைக்கும் போட் பயணம் ஒருவாறு முடிவுக்கு வந்தது. இடுப்பளவு தண்ணீரில் அனைவரும் இறங்கி நடந்தனர். நந்தனும் இன்னும் சிலரும் உழவு இயந்திரப் பெட்டி  ஒன்றில் ஏற்றப்பட்டனர். ஆட்கள் சரி பார்க்கப்பட்ட பின்னர் வேறு சிலர் அவர்களைப் பொறுப்பேற்றனர். கடற்கரையில் இருந்து புறப்பட்ட உழவு  இயந்திரம், காட்டுப்பாதையை  நோக்கிச் சென்றது.

நந்தனை யாரோ தட்டி எழுப்பினார்கள். நந்தன் மெதுவாக கண்னைத் திறந்து பார்த்தான். அவனைச் சுற்றி இந்திய இராணுவம் நின்றது. யாரைக் கொல்ல வேண்டும் என சபதம் எடுத்து வீட்டை விட்டுப் புறப்பட்டானோ அந்த  இராணுவத்திடம் தான் கைதியாக இருப்பதை  எண்ணி வெட்கப்பட்டான்.

காட்டுக்குள் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்து தான் கைது செய்யப்பட்டிருப்பதை நந்தன் புரிந்து கொன்டான்.   உழவு இயந்திரத்தில் தன்னுடன் வந்த யாராவது இருக்கிறார்களா என மெதுவாக நோட்டமிட்டான். தெரிந்தவர்கள் யாரும் இல்லை.

இந்திய இராணுவத்துடன் சில தமிழ் இளைஞர்களும் துப்பாக்கியுடன் நின்றார்கள். தமிழ் தெரிந்த இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் நந்தனை விசாரணை செய்தார். பெயர்,ஊர்,தகப்பன்,தாய்,சகோதரங்கள் போன்றவற்றை நந்தன் மறைக்காமல் சொன்னான். இந்திய இராணுவத்தின் தாக்குதலில் தகப்பன் கொல்லப்பட்டதையும், இயக்கத்துக்கு விரும்பிப் போனதையும் சொல்லவில்லை.

 

பாடசாலை மைதானத்தைச்  சுற்றி முள்ளுக் கம்பி அடித்து திறந்த வெளிச் சிறையில் நந்தனைப் போல் நூற்றுக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டனர். நான்கு மாதங்களின் பின்னர் சமையல் கூடத்தில் நந்தனுக்கு வேலை கொடுக்கப்பட்டது.அப்போது அவனுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்தது. ஆனாலும், சமையல் கூடத்தை விட்டு வெளியில் எங்கும் செல்ல நந்தனுக்கு அனுமதியில்லை. நந்தன் தங்கி இருக்கும் சமையல் கூடம்  மிகப் பெரிய முகாமின் மத்தியில் உள்ளது. இது தான் வாழ்க்கை இந்த முகாம் காட்டுக்கு மத்தியில் இருக்கிறதா நகரத்தில் இருக்கிறதா அல்லது கிராமத்தில் இருக்கிறதா என நந்தனுக்குத் தெரியாது.

  நந்தன் கைது செய்யப்பட்டு ஒரு ருடம் கடந்து விட்டது.தாயும் சகோதரர்களும் எப்படி இருப்பார்கள் எனத்தெரியாமல் தினமும் தவிப்பான். தான் இயக்கத்துக்குப் போகும் தகவலை நந்தன் தாய்க்குத் தெரிவிக்கவில்லை. இந்திய ஆமியால் கைது செய்யப்பட்டசிலர் விடுதலையானார்கள்.  தான் விடுதலையாகி வீட்டுக்குப் போனால் இயக்கம் வந்து என்ன செய்யும் எனத்தெரியாது நந்தன் குழம்பினான்.

 அந்த முகாமின் பொறுப்பதிகாரியான இந்தியத் தமிழர் சமையல் கூடத்துக்கு வரும்போது நந்தனுடன் சகஜமாகக் கதைப்பார். அது அவனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அந்த அதிகாரி வேறு முகாமுக்கு மாற்றமாகி போவதாக அங்குள்ளவர்கள் கதைத்தனர். அதனால் நந்தன் கவலையடைந்தான்.

சமையல் கூடத்துக்கு வந்த அந்த அதிகாரி நந்தனுடன் சிறிது நேரம் கதைத்துவிட்டு  என்னுடன் வருகிறாயா எனக் கேட்டார்.

நந்தன் பதில் எதுவும் கூறாமல் தயங்கினான்.தன்னுடன் வந்தால் சமையல் வேலை செய்ய வேண்டாம். பயிற்சி தந்து துப்பாக்கி தருவதாக  விளக்கமளித்தார்.

கால மாற்றம் நந்தனை வேறுபாதையில் கொண்டு சென்றது. இந்திய இராணுவத்திடம் கைதியாக அகப்பட்ட பல இளைஞர்கள் இப்போது இந்திய இராணுவத்துடன் சேர்ந்து ஆயுதம் ஏந்தி தாம் கொண்ட கொள்கைக்கு எதிராகச் செயற்படுகிறார்கள். ஆயுதப் பயிற்சி பெற நந்தன் ஒப்புக்கொண்டான்.

இராணுவப்பயிற்சி முடிந்ததும் மீண்டும் அந்த அதிகாரியிடம் நந்தன் ஒப்படைக்கப்பட்டான். அவர் இப்போது முகாமுக்குப் பொறுப்பதிகாரி அல்ல.சுற்றி வளைத்து தேடுதல் நடத்தும் சிறப்புப் படையின்  பிரதான அதிகாரி. புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கும் தகவல்களை விசாரித்து இந்திய இராணுவத்துக்கு எதிராக செயற்படுபவர்களைக் கைது செய்வதுதான் அந்த அதிகாரியின் பிரதான கடமை அதற்காகவே நந்தனைப் போன்றவர்களைத் தனக்கு அருகில்  வைத்திருக்கிறார்.

அந்த அதிகாரியின் கீழ் நந்தன் பணியாற்றத் தொடங்கி ஆறு மாதம் கடந்து விட்டது. இப்போது அவனது பெயர் ரொபேட். இந்திய இராணுவத்துடன் இணைந்ததால் அவனது பாஷையும் மாறிவிட்டது. அவனது பிறப்பிடம் யாழ்ப்பாணம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அதனை வெளிக்காட்ட அவனும் விரும்பவில்லை.

தேடுதல் வேட்டையின் போது பலமுறை நேரடி மோதல்கள் நடைபெற்றன. பலர் காயமடைந்தனர். சிலர் இறந்தனர். அவர்களில் இந்திய இராணுவத்தினரும், தமிழ் இளைஞர்களும் அடக்கம்.  அந்த அதிகாரியின் தலைமையிலான குழு வவுனியா,கிளிநொச்சி,பரந்தன் என பல இடங்களிலும் தேடுதல் நடத்தி இயக்கத்துக்கு எதிராக செயற்பட்டது.

ஒரு நாள்  அவர்களுக்குக் கிடைத்த  புலனாய்வுத் தகவலை அடுத்து நள்ளிரவில் இரண்டு ட்ரக்களில் புறப்பட்டனர்.  அதிகாலையில் அவர்கள் அனைவரும் ஒரு கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். அந்தக் கிராமத்தில் இருந்து வேலைக்குச் சென்ற அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். கிராமத்துக்குள் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. இருள் விலகி வெளிச்சம் பரவியபோது  தாங்கள் கைதடியில் நிற்பதை நந்தன் அறிந்துகொண்டான். தேடுதல், பாதுகாப்பு என்பனவற்றுக்காக பலாலியில் இருந்துவந்த பெருமளவான இந்திய இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்துகொண்டனர்.

வீடுவீடாகச் சென்ற இந்திய இராணுவத்தினர் ஆண்களின் அடையாள அட்டைடையை வாங்கிக்கொண்டு அருகில் உள்ள பாடசாலைக்குச் செல்லும்படி  கூறினர். ஆண்களும், இளைஞர்களும் மரணப் பீதியுடன் இராணுவத்தின் பின்னால் சென்றனர். பெண்களும், குழந்தைகளும் அழுது குழறி மண்றாடினர். ஒரு சிலர் கையெடுத்துக்கும்பிட்டு, காலில் விழுந்து கெஞ்சினர். இராணுவக் கட்டளையின் செவிகளில் அவை எவையும் விழவில்லை.

 

பிரதான அதிகாரியும் அவருக்குப் பாதுகாப்புக்காகச் சென்றவர்களும் நந்தனின் கிராமத்துக்குள் நுழைந்தனர். தாயையும், சகோதரர்களையும் சந்திக்கலாமா உறவினர்களைக் காணலாமா என அவன் மனம் பரபரத்தது. அந்தக் கிராமத்தில் உள்ள அனைவரையும் நந்தன் அடையாளம் கண்டுகொண்டான்.யாராவது தன்னை அடையாளம் கண்டு உதவி கேட்பார்களோ எனநந்தன் அச்சப்பட்டான். பயத்துடன் இராணுவத்தைப் பார்த்தவர்கள் நந்தனைக் கவனிக்கவில்லை.

பிரதான அதிகாரி சைகை காட்டியதும் துணைக்கு வந்த இராணுவத்தினர் பச்சைக் கலர் அடித்த வீட்டைச் சுற்றி வளைத்தனர்.மேலதிகாரியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து செயற்பட்ட நந்தன் முதன் முதலாக  பதற்றப்பட்டான். வீட்டுக்குள் சென்ற  இராணுவத்தினர் நந்தனின் தாய் மாமனான கோபாலை இழுத்துவந்தனர்.கோபாலின் மனைவியும் பிள்ளைகளும் பெரும் சத்தமிட்டபடி பின்னால் வந்தனர்.பிரதான அதிகாரி கோபாலை விசாரித்தார்.

"பேரென்ன"

"கோபால்"

'புலிக்கு சப்போட்டா"

"இல்லை"

'பொய் சொல்லாதை"

"இல்லை, ஐயா நான் கூலி வேலை செய்யிறனான்."

"எனக்கு எல்லாம் தெரியும். போன கிளமை ஐஞ்சு பேர் இங்கை தங்கினவை"

"இல்லை. ஐயா ஒருவரும் இங்கை வரேல்லை"

"எங்களைப்பற்றி சொல்லிக்குடுக்கிறது நீ தானே"

"இல்லை ஐயா, ஒருதரும் வரேல்லை."

கோபாலும் அவரது குடும்பத்தினரும் மன்றாடினர். வீட்டுக்குள் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்திய இராணுவத்தினர் வெறும் கையுடன் வெளியே வந்தனர். கோபாலின் மகன் சயந்தனுடன் சற்று தூரம் சென்ற அந்த அதிகாரி தனியாக விசாரித்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கு இல்லை என தலையாட்டி பதில் சொன்னதை அனைவரும் அவதானித்தனர்

"ரொபேட் ரண்டு  பேரையும் கூட்டிப்போ" எனஅதிகாரி  உத்தரவிட்டார்.யாரந்த ரொபேட் என கோபாலின் குடும்பத்தினர் பார்த்தனர். அவர்கள் நந்தனை அடையாளம் கண்டனர்.

கோபாலின்  கையைப் பிடித்து நந்தன் கூட்டிச் சென்றான். இன்னொரு இராணுவச் சிப்பாய் கோபாலின் மகன் சஜந்தனைக் கூட்டிச் சென்றான்.

"அட சண்டாளா என்ரை  மனிசனை பழிவாங்கிட்டியே" என கோபாலின் மனைவி பெருங்குரலெடுத்து அலறிய சத்ம் அந்தக் கிராமம் எங்கும் எதிரொலித்தது.

 

காற்று வெளி  இணையசஞ்சிகை

சித்திரை 2021

சூரன்..ரவிவர்மா