Wednesday, June 10, 2015

ம.தி.மு.க பச்சைக்கொடி மகிழ்ச்சியில் தி.மு.க‌

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்கான  சாதக சமிக்ஞையை வைகோ வெளியிட்டதனால் திராவிட முன்னேற்றக் கழகம் உற்சாகமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேறியபின் மெகா கூட்டணி அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டியது. அது எதிர்பார்த்த கட்சிகள் இணையாமையால் படுதோல்வியடைந்தது. திராவிட முன்னேற்றக்கழகம் மட்டுமல்லாது பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணியும் கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் மண்னைக் கெளவியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடியது.
                                                 
திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றைப் புறந்தள்ளி மூன்றாவது அணி தலையெடுக்க முடியாதென்பது யதார்த்தம். இந்த யதார்த்தத்தைப் புரிந்தும் புரியாதமாதிரி பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையில்  அமைந்த கூட்டணி தமிழகத்தில் பலத்த அடிவாங்கியது.
இந்தியாவில் வீசிய காங்கிரஸுக்கு எதிரான பாரதீய ஜனதா அலை தமிழகத்திலும் பலமாக வீசும் என்ற எதிர்பார்ப்பு தேர்தல் முடிவை புரட்டிப்போட்டது. பாரதீய ஜனதாக்கட்சியில் இருந்து ராமதாஸும் வைகோவும் வெளியேறினர்.  மகன் அன்புமணி எம்பியான சந்தோஷத்துடன் கூட்டணியை முறித்தார் ராமதாஸ். வைகோ வழமைபோன்று வெறும் கையுடன் வெளியேறினார். கூட்டணியில் இருப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அரசியல் நடத்துகின்றார் விஜயகாந்த்.

 தமிழக அரசியல் தலைவர்களிடம் அரசியல் நாகரிகம் என்பது மருந்துக்கும் கிடையாது. ஒரு அரசியல் கட்சித்தலைவர் இறந்துவிட்டால் எதிரணி அரசியல்  தலைவர் கலந்துகொள்ளமுடியாத இருண்ட அரசியல் கலாசாரம் தமிழகத்தில் உள்ளது. திருமண வைபவம் என்றால் அழைப்பிதழ் அனுப்பமாட்டார்கள். தனது பேரனின் திருமணத்துக்கு எதிர்க்கட்சித்தலைவர்கள் அனைவரையும் அழைத்துள்ளார் கலைஞர் கருணாநிதி. கருணாநிதியின் உத்தரவுக்கமைய எதிர்க்கட்சித்தலைவர்கள் அனைவரையும் வீடு தேடிச்சென்று அழைப்பிதழைக் கையில் கொடுத்தார் ஸ்டாலின்.

மூத்த‌ அர‌சிய‌ல் தலைவ‌ர் என்ப‌த‌னால் அனைவ‌ரையும் அர‌வ‌ணைத்துச் செல்ல‌ விரும்புகிறார் க‌ருணாநிதி.அர‌சிய‌ல்வாதிக‌ளும் விம‌ர்ச‌க‌ர்க‌ளும் இத‌னை அர‌சிய‌ல் க‌ண்ணாடிமூல‌ம் பார்த்த‌ன‌ர். மெகா கூட்ட‌ணி அமைக்க‌ க‌ருணாநிதி திட்ட‌ம் போடுகிறார் என‌ தலைப்புச்செய்திக‌ள் வெளியாகின‌.விஜ‌ய‌காந்த் தனது வீட்டுக்கு அழைக்காம‌ல் அலுவ‌ல‌க‌த்தில் ச‌ந்தித்தார். ராம‌தாஸும் அன்பும‌ணியும்  ஸ்டாலினை ச‌ந்திப்ப‌தை த‌விர்க்க‌ முய‌ன்ற‌ன‌ர். வில்ல‌ங்க‌மான‌ செய்தி வெளியான‌தால் ச‌ந்தித்த‌ன‌ர். ஸ்டாலின் த‌ன்னைச் ச‌ந்தித்து திரும‌ண‌ அழைப்பித‌ழைக்கொடுத்த‌தை ஆச்ச‌ரிய‌த்துட‌ன் டுவிட்ட‌ரில் ப‌கிர்ந்தார் சுப்பிர‌ம‌ணிய‌ன்சுவாமி. இதேவேளை அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌கத் த‌லைவ‌ர்க‌ள் எவ‌ருக்கும் திரும‌ண‌ அழைப்பித‌ழ் கொடுக்க‌ப்ப‌ட‌வில்லை. க‌ருணாநிதி வீட்டுத்திரும‌ண‌ அழைப்பித‌ழ் ப‌ற்றி நாக‌ரிக‌மாக‌வும் அநாக‌ரிக‌மாக‌வும் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் வெளியாகின‌. ப‌ழுத்த‌ அர‌சிய‌ல்வாதியான‌ க‌ருணாநிதி அதனைக்ண்டுகொள்ள‌வில்லை.

த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ச‌பைத்தேர்த‌லுக்கு இன்ன‌மும் ஒரு வ‌ருட‌ம் உள்ள‌து. இந்த‌நிலையில் விம‌ர்ச‌க‌ர்க‌ள் எதிர்வு கூறிய‌தைப்போன்று திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்துட‌ன் கூட்ட‌ணி சேரும் சாத்திய‌ம் ப‌ற்றி வைகோ சாத‌க‌ச‌மிக்ஞை காட்டி உள்ளார். இத‌னால் இர‌ண்டு க‌ட்சித்தொண்ட‌ர்க‌ளும் ம‌கிழ்ச்சிய‌டைந்துள்ள‌ன‌ர்.

வைகோவின் வளர்ச்சி ஸ்டாலினுக்கு போட்டியாக இருந்தமையினால் அவர் 1993 ஆம் ஆண்டு திராவிட் முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். கருணாநிதியைக் கொல்வதற்கு புலிகளுடன் சேர்ந்து வைகோ திட்டம் தீட்டியதற்காகவே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டது. அக்காரணம் நம்பத்தகுந்ததாக இருக்கவில்லை. திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து வெளியேறிய  வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். வைகோவுடன் பலர் வெளியேறியதால் அவருடைய கட்சி பலமடைந்தது. காலப்போக்கில் அரசியல் சதுரங்கத்தில் வெற்றி பெறமுடியாததனால்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் மாறிமாறி கூட்டணி சேர்ந்தது.

 அர‌சிய‌ல் க‌ள‌த்தில் த‌னித்து நின்று வெற்றி பெற‌முடியாது என்ப‌தை உண‌ர்ந்த‌ வைகோ ப‌ல‌மான‌ க‌ட்சிக‌ளின் கூட்ட‌ணியை நாடினார். சில‌ச‌ம‌ய‌ங்க‌ளில் அவ‌ருக்கு வெற்றியைக்கொடுத்த‌ கூட்ட‌ணி ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் காலை வாரிய‌து. திராவிட‌ முன்னேற்ற‌க்க் க‌ழ‌கம், அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ம் ஆகிய‌வ‌ற்றுக்கு மாற்றீடாக‌ மூன்றாவ‌து அணி அமைக்க‌லாம் என்ற‌ ந‌ம்பிக்கை க‌ட‌ந்த‌   நாடாளும‌ன்ற‌த்தேர்த‌லுட‌ன் த‌விடுபொடியாகிய‌தால் மீண்டும் திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌த்தின் ப‌க்க‌ம் சாய‌த்த‌யாராகி விட்டார் வைகோ.1993 ஆம் ஆன்டு பிர‌ச்சினைக்குப் பின்ன‌ர் வைகோவின் வீட்டுக்கு ஸ்டாலின் சென்ற‌த‌னால் இது சாத‌க‌மான‌து.


 க‌ருணாநிதி த‌லைமையிலான்  மெகாகூட்ட‌ணியின் முத‌ல்அடியை வைகோ எடுத்து வைத்துள்ளார். ஜெய‌‌ல‌லிதாவின் த‌லைமையிலான‌ க‌ட்சியை ப‌ல‌வீன‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு க‌ருணாநிதி த‌லைமையில் கூட்ட‌ணி அமைப்ப‌துதான் ச‌ரி என்ப‌தை கால‌ம் க‌ட‌ந்து வைகோ உண‌ர்ந்துள்ளார்.ப‌ல‌வீன‌மாக‌ இருந்த‌ திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ம் ச‌ற்று தெம்பாக‌ உள்ள‌து.  நாடாளும‌ன்ற‌த்தேர்த‌லில் திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ம் ப‌ல‌த்த‌ அடி வாங்கினாலும் அத‌னுடைய‌ வாக்கு வ‌ங்கி தொய்ய‌வில்லை. வைகோவின் அர‌சிய‌ல் க‌ண‌க்கை ஏனைய‌ த‌லைவ‌ர்க‌ளும் புரிந்து கொண்டால் த‌மிழ‌க‌த்தில் அர‌சிய‌ல் மாற்ற‌ம் ஏற்ப‌டும்.

Thursday, June 4, 2015

கைகொடுத்தது கர்நாடகம்


 வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில் நிரபராதி என ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு அப்பீல் செய்யப்போவதாக முறைப்படி அறிவித்துள்ள‌து. கர்நாடக அரசின் இந்த முடிவு தமிழக எதிர்க்கட்சித்தலைவர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது.   வழக்குகளில் சட்டம் என்ன சொல்கிறது என்றுதான் பார்ப்பார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகள் அனைத்திலும் சட்டம் பின்னுக்குத்தள்ளப்பட்டு அரசியல்தான் முன்னிலைப்படுத்தப்பட்டது.

ஜெயலலிதா தப்புச்செய்யவில்லை என்று வாதிடுவதைத்தவிர்த்து அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது என்பதை முன்னிறுத்தியே அவரது வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.  ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானத்துக்கு அதிகமான சொத்துச் சேர்த்த வழக்கு கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையேயான பனிப்போரை அதிகமாக்கி உள்ளது.நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு மிகவும் கடுமையானது. ஜெயலலிதாவுக்கு எதிராக நான்கு வருட சிறைத்தண்டனையும் 100 கோடிரூபா அபராதமும் விதித்தார்.சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு தலா இரண்டு வருட சிறைத்தண்டனையும் 10 கோடிரூபா அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை முடக்கியது. ஜெய‌லலிதாவின் அரசியல் எதிரிகள் குதூகலப்பட்டார்கள். தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்து 21 நாள் சிறை வாசத்தின் பின்னர் தமிழகத்துக்குத் திரும்பினார். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை மூன்று மாதத்தினுள் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் கட்டளையிட்டது.

ஆயிர‌க்க‌ண‌க்கான‌ அப்பீல்வ‌ழ‌க்குக‌ள் நிலுவையில் இருக்கும்போது  ஜெய‌ல‌லிதாவின் அப்பீல் வ‌ழ‌க்கு ம‌ட்டும்  சுட‌ச்சுட‌ ந‌டைபெற்ற‌து. இந்தியாவே இந்த‌ வ‌ழ‌க்கை உன்னிப்பாக‌ அவ‌தானித்த‌து. தீர்ப்பு நாள‌ன்று ஒட்டுமொத்த‌ இந்தியாவும் க‌ர்நாட‌காவை நோக்கிய‌து. 19 வ‌ருட‌ வ‌ழ‌க்கின் தீர்ப்பு மூன்று நிமிட‌ங்க‌ளில் வாசிக்க‌ப்ப‌ட்ட‌து.ஜெய‌ல‌லிதா,ச‌சிக‌லா,இள‌வ‌ர‌சி, சுதாக‌ர‌ன் ஆகிய‌ மூவ‌ரும் நிர‌ப‌ராதிக‌ள் என் தீர்ப்ப‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து.

அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழம்,அதனுடைய   தோழ‌மைக்க‌ட்சிக‌ள், பார‌தீய‌ ஜ‌ன‌தாக் க‌ட்சி ஆகிய‌ன‌ ம‌கிழ்ச்சிய‌டைந்த‌ன‌. ஏனைய‌ க‌ட்சிக‌ள் அனைத்தும் அதிர்ச்சியில் உறைந்த‌ன‌. நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் உள்ள‌ க‌ண‌க்குப்பிழை சாமானிய‌ர்க‌ளையும் ச‌ந்தேக‌ப்ப‌ட‌ வைத்த‌து.நீதியின் மீது ஏற்ப‌ட்ட‌ ச‌ந்தேக‌த்தை க‌ர்நாட‌க‌ அர‌சுதான் தீர்க்க‌ வேன்டும்.ஆனால் க‌ர்நாட‌க‌ம் மெள‌ன‌மாக‌ இருந்த‌து. த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் க‌ர்நாட‌க‌த்துக்கு நெந்ருக்க‌டி கொடுத்த‌ன‌ர். எத‌ற்கும் அச‌ராத‌ க‌ர்நாட‌க‌ அர‌சு ச‌ட்ட‌ப்பிர‌ச்சினைக‌ளை முன்வைத்து தாம‌த‌ப்ப‌டுத்திய‌து.


க‌ர்நாட‌க‌ அட்வ‌கேட் ஜென‌ர‌ல் ர‌விக்குமார், அர‌ச‌த‌ர‌ப்பு வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ஆச்சார்யா ஆகியோர் அப்பீல் செய்ய‌ வேண்டும் என‌ப்ப‌ரிந்துரைத்த‌ன‌ர்.  ஜெய‌ல‌லிதாவுக்கு எதிரான   சொத்துக்குவிப்பு வ‌ழ‌க்குக்கு பிள்ளையார் சுழிபோட்ட‌ சுப்பிர‌ம‌ணிய‌ன் சுவாமி அப்பீல் செய்ய‌ப்போவ‌தாக‌ அறிவித்து இராஜினாமாக் க‌டித‌த்தை த‌யாராக‌ வைத்திருக்கும் ப‌டி ச‌வால் விட்டார்.  சுப்பிர‌ம‌ணிய‌ன் போட்ட‌  பிள்ளையார் சுழியை பூத‌மாக்கி ஜெய‌ல‌லிதாவை க‌திக‌ல‌ங்க‌ வைத்த‌ க‌ருணாநிதி  க‌ர்நாட‌க அர‌சு அப்பீல் செய்ய‌வில்லை என்றால்  தாம் அப்பீல் செய்வ‌தாக‌ நாள் குறித்தார்.

காங்கிர‌ஸ் க‌ட்சியின் ஆளுகையில் இருக்கும் க‌ர்நாட‌க‌ அரசு த‌ன்னிச்சையாக‌ முடிவெடுக்க‌ முடியாது. சோனியா அல்ல‌து ராகுலின் உத்த‌ர‌வு இல்லாம‌ல் எதையும் செய்யும் அதிகார‌ம் க‌ர்நாட‌க‌ அர‌சுக்கு இல்லை என்ப‌து வெளிப்ப‌டையான‌ ர‌க‌சிய‌ம்.அத‌னால்தான் ச‌ட்ட‌ப்பிர‌ச்சினைக‌ளை முன்வைத்து கால‌த்தை இழுத்த‌டித்த‌து. மேலிட‌த்தில் இருந்து உத்த‌ர‌வு கிடைத்த‌தும் அப்பீல் செய்யப்போவ‌தாக‌ அறிவித்த‌து.
   2ஜி ஊழ‌ல் விவ‌கார‌த்தினால் திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தை த‌ள்ளி வைத்திருக்கும் ராகுல் ஜெய‌ல‌லிதாவுக்கு எதிரான‌ ஊழ‌ல் வ்ப‌ழ‌க்கில் அவ‌ச‌ர‌ம் காட்டாது நிதான‌மாக‌  இருந்த‌து அர‌சிய‌ல் அர‌ங்கில் நெருட‌லை ஏற்ப‌டுத்தி உள்ள‌து. எடியூர‌ப்பாவின் ஆட்சியில் ந‌டைபெற்ற‌ முறைகேட்டை எதிர்த்து 350 கி,மீற்ற‌ர் பாத‌ யாத்திரை சென்ற‌ க‌ர்நாட‌க‌ முத‌ல்வ‌ர் சித்த‌ராமையா  ஜெய‌ல‌லிதாவுக்கு எதிராக‌ அப்பீல் செய்ய‌ த‌ய‌க்க‌ம் காட்டிய‌து புரியாத‌ புதிராக‌ உள்ள‌து.

ஜெய‌ல‌லிதா நிர‌ப‌ராதி என‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ தீர்ப்புக்கு எதிராக‌ அப்பீல் செய்வ‌த‌ற்கு இர‌ண்டு வ‌ழிமுறைக‌ள் உள்ள‌ன‌.நீதிப‌து குமார‌சாமி வ‌ழ‌ங்கிய‌ தீர்ப்புக்கு தடை வாங்குவ‌து அல்ல‌து உய‌ர்நீதிம‌ன்ற‌த்தில் அப்பீல் செய்வ‌து.நீதிப‌தி குமார‌சாமியின் தீர்ப்பு செல்லாது என‌ த‌டை வாங்கினால் அடுத்த‌ நிமிட‌ம் ஜெய‌ல‌லிதாவின் ப‌த‌வி ப‌றிக்க‌ப்ப‌ட்டுவிடும். தீர்ப்புக்கு த‌டை வாங்க‌ப்போவ‌தாக் அர‌ச‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ஆச்சார்யா கோடி காட்டி உள்ளார்.முதல்வ‌‌ராக‌ப்ப‌த‌வி ஏற்ற‌ ஜெய‌ல‌லிதா ச‌ட்ட‌ப்பேர‌வை உறுப்பின‌ராவ‌த‌ற்காக‌ த‌மிழ‌க‌த்தில் இடைத்தேர்த‌ல் ந‌டைபெற‌ நாள் குறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஜெய‌ல‌லிதாவுக்கு எதிராக‌  14 வ‌ழ‌க்குக‌ள் தாக்க‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. ச‌ட்ட‌த்தில் உள்ள‌ ச‌ந்துபொந்து இந்து இடுக்கெல்லாம் புகுந்து  நிர‌ப‌ராதி என‌ நீதிம‌ன்ற‌ம் ஜெய‌ல‌லிதாவை விடுத‌லை செய்த‌து. ச‌ட்ட‌ப்ப‌டி ஜெய‌ல‌லிதா நிர‌ப‌ராதி என்றாலும் அண்ணாதிராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழக ஆத‌ர‌வாள‌ர்க‌ளைத்த‌விர‌
ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அவ‌ரை குற்ற‌வாளி என்றே நினைக்கின்ற‌ன‌ர்.


ஜெய‌ல‌லிதா நிர‌ப‌ராதி என்ற‌ தீர்ப்புக்கு எதிராக‌ த‌டை வாங்க‌ப்ப‌டுவ‌தையே அவ‌ர் விரும்புகிறார். அர‌சிய‌ல் காழ்ப்புண‌ர்ச்சியினால் த‌ன‌து ப்த‌வி ப‌றிக்க‌ப்ப‌ட்ட‌து என்ற‌ பிர‌சார‌ம் தொண்ட‌ர்க‌ள் ம‌த்தியில் த‌ன‌து செல்வாக்கை அதிக‌ரிக்கும் என‌ ந‌ம்புகிறார்.