Showing posts with label தலிபான்கள். Show all posts
Showing posts with label தலிபான்கள். Show all posts

Monday, September 13, 2021

ஆப்கான் அரசியலில் மூக்கை நுழைக்கும் பாகிஸ்தான்

தலிபான்கள் ஆப்கானிஸ்தானைப் பொறுப்பேற்றது முதல் அங்கு பாகிஸ்தானின் கை ஓங்கி உள்ளது. ஆப்கானில் அமெரிக்கா இருக்கும் வரை  வெளிப்படையாக உதவி செய்யாமல் அமைதிகாத்த பாகிஸ்தான் அமெரிக்காவின்  வெளியேற்றத்துக்குப் பின்னர் வெளிப்படையாக தன‌து காய்களை நகர்த்தத் தொடங்கி உள்ளது.

ஆப்கானின் அரசுத் த‌லைவர்களில்  அனேகமானோர் பாகிஸ்தானைப்  பின்னணியாக கொண்டவர்கள்.  அமெரிக்காவாலும்  பிற நாடுகளாலும் தேடப்படும் பட்டியலில் உள்ளவர்களின் அரசுக்கு பாகிஸ்தான் முண்டு கொடுக்கிறது.ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நிலையில் அங்கு புதிய அரசு அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவரான பயஸ் ஹமீத் காபுல் சென்று அங்கு தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பு பல்வேறு யூகங்களையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

ஆப்க‌னின் புதிய அமைச்சரவையை தஜிக், உஸ்பெக், ஹசாரா சிறுபான்மையினர் என அனைவரையும் உள்ளடக்கியதாக அமைக்க தாலிபான்கள் விரும்பினர். முன்னாள் அரசியல்வாதிகளை அமைச்சரவையில் இடம்பெறச் செய்வதன் மூலம் சர்வதேச அங்கீகாரத்தை பெற முடியும் என்பது தலிபான்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.பாகிஸ்தானின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே, ஹக்கானி பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


ஆப்கானிஸ்தானின்பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், அந்நாட்டுனான வர்த்தகம் பாகிஸ்தானின் நாணயமான ரூபாய் மதிப்பிலேயே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் அமெரிக்க டொலரிலேயே நடைபெற்று வந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் டொலருக்குப் பதிலாக பாகிஸ்தானின் பணம் புழக்கத்தில் வர உள்ளது.

ஆப்கானிஸ்தான் தலிபான் வசம் சென்றுள்ளதை தங்களுக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். ஆர்ப்பாட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தானுக்கு எதிராக ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாகிஸ்தான் தூதரகம் முன்பு அவர்கள் பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். தாலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தானுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்ட பலர், பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு அந்நாட்டுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். முதலில் பெண்கள் அதிகளவு கூடினர். அதனை தொடர்ந்து ஆண்களும் கூடி கோஷம் எழுப்பினர்.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என்றும்  விடுதலை வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தை படம் பிடிக்க முயன்ற‌ பத்திரிக்கையாளர்களை தலிபான்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் விதமாக வானத்தை நோக்கி தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்கள் கலைந்து சென்றனர்

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியிருப்பதில் பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

 ஆப்கானில் புதிய இடைக்கால   அரசை அங்கீகரிப்பதில் சர்வதேச நாடுகள் தயக்கம் காட்டி வருவதுடன் இன்னமும் தெளிவான முடிவை எடுக்க முடியாமல் உள்ளனர்.  ஆனால், ஆப்கானின் எல்லை நாடான பாகிஸ்தானில்  உள்ள மக்கள் தலிபான்களின் ஆட்சியை விரும்புகிறார்கள்.

பாகிஸ்தாலில்  சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்திருப்பதற்கு பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கலப் பாகிஸ்தான் என்ற அமைப்பினால் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 55% சதவிகித பாகிஸ்தானியர்கள் தலிபான் ஆட்சிக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். 25% பாகிஸ்தானியர்கள் மட்டுமே தலிபான் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்த 65% பேர் தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 5ம் திக‌தி வரையில் சுமார் 2500 பாகிஸ்தானியர்களிடையே இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டோரின் மொத்தம் 58% ஆண்களும், 36% பெண்களும் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியால் மகிழ்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் நகர்ப்புறங்களில் வசிப்போர் 58% தாலிபான்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானுக்கு உலக நாடுகள் உதவ முன்வரவில்லை என்றால், அந்நாடு முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஆட்சியாளர்களின் வங்கிக் கணக்குகளை தலிபான்கள் முடக்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், அந்நாட்டு மத்திய வங்கியில் இருந்த 10 பில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா முடக்கியுள்ளது. இதேபோல, 440 மில்லியன் அமெரிக்க டொலர்வ்மதிப்பிலான அவசர இருப்புத் தொகையை சர்வதேச கண்காணிப்பு நிதியம் முடக்கியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் சூழல் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தியது.

அப்போது பேசிய ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா சிறப்பு தூதர் டிபோரா லயன்ஸ், ஆப்கானிஸ்தானில் உள்ள 97 சதவிகித மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் செல்லும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார். அந்நாட்டில் பொருளாதார முடக்கம் ஏற்படும் முன்னர் சர்வதேச நாடுகள் உதவ முன் வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். ஆப்கான் நாணயத்தின் மதிப்பு படுபாதாளத்திற்கு செல்லும் என்றும், உணவுப் பொருட்கள் மற்றும் எரிவாயு விலை நினைக்க முடியாத அளவிற்கு உயரும் என்றும் லயன்ஸ் தெரிவித்தார். ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் அரசிடம் பணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

பொருளாதார நடவடிக்கையை மேற்கொள்ள சில காலம் அனுமதி அளிக்க வேண்டும். நெகிழ்வுத்தன்மை மற்றும் உண்மையை நிலைநாட்ட அனுமதி அளித்தால், இம்முறை அவர்கள் மனித உரிமையைக் காத்து பயங்கரவாதத்தை எதிர்ப்பார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் ஆப்கானிஸ்தான் அரசு செய்த செலவில் 75 சதவிகிதத்தை கொடுத்து வந்தன. ஆப்கானை விட்டு தப்பிபோடிய முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி உள்ளிட்ட சிலரது மத்திய வங்கி கணக்குகளை தலிபான்கள் முடக்கியுள்ளனர். முன்னாள் துணை அதிபர், முன்னாள் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தலிபான்களின் கலாச்சார குழுத் தலைவர் ஆன்மானுல்லா சமன் கனி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோர் மற்ற வங்கிகளில் வைத்துள்ள கணக்குகளை முடக்கவும் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ஆப்கான் பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்றும், குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே பெண்களின் கடமை என்றும் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சயத் ஜக்ருல்லா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, September 11, 2021

அமெரிக்காவை அதிரச்செய்த நாள் செபெம்பர் 11

உலக வல்லரசான அமெரிக்காவை நிலைகுலையவைத்த நாள் 9/11.  சர்வவலமை மிக்க அமெரிக்காமீது எதிர் பாராத தருணத்தில் நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதல் இன்றளவும்  பேசும் பொருளாக இருக்கிறது. இரட்டைகோபுரத் தாக்குதலின் சூத்திர தாரியான  ஒஸாமா பின் லேடனைத் தேடி ஆப்கானுக்குள் நுழைந்த  அமெரிக்கா இருபது வருடங்களின்  பின்னர்  ஆப்கானை விட்டு வெளியேறியுள்ளதால்  உலகின் கவனத்தைப்  பெற்றுள்ளது.

பயங்கரவதத்தை உலகில் இருந்து முற்றாக அழிக்கப்போவதாக சபதம் எடுத்து யுத்தம் மேற்கொண்ட அமெரிக்கா தலிபான்களிடம் ஆப்கானிஸ்தானை ஒப்படைத்துள்ளது.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், ஜாக் கிராண்ட்கோலாஸ் அந்த காலை 7:03 மணிக்கு எழுந்ததை இன்னும் நினைவில் கொள்கிறார். அவர் கடிகாரத்தைப் பார்த்தார், பின்னர் ஜன்னலுக்கு வெளியே வானத்தில் ஒரு உருவம் கண்ணில் பட்டது - ஒரு தேவதை ஏறுவது போல் ஒரு விரைவான பார்வை. அவருக்கு அது இன்னும் தெரியாது, ஆனால் அது அவரது வாழ்க்கை மாறிய தருணம்.

காலை 10:03 மணி மற்றும் யுனைடெட் ஃப்ளைட் 93 பென்சில்வேனியா மைதானத்தில் விழுந்து நொறுங்கியது.ஜாக் கிராண்ட்கோலாஸ்  அந்த்ச் செய்தியை தொலைக் காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார்.

  படுக்கையறையில் தூங்கும்போது அன்று காலை இரண்டு செய்திகளை விட்டுவிட்டான். முதலில், நியூஜெர்சியிலிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்குமனைவிமுந்தைய விமானத்தில் செல்கிறாள் என்ற நல்ல செய்தி. பின்னர் அவள் விமானத்திலிருந்து அழைத்தாள். "ஒரு சிறிய பிரச்சனை" இருந்தது என்றாள்.   கிராண்ட்கோலாஸ் நினைவு கூர்ந்தார்.   "நான் உன்னை விட அதிகமாக நேசிக்கிறேன், அதை தெரிந்து கொள்ளுங்கள். தயவுசெய்து என் குடும்பத்தினருக்கும் நான் அவர்களை நேசிக்கிறேன் என்று சொல்லுங்கள். விடைபெறு, அன்பே  " என்றசெய்தி இருந்தது.

கிராண்ட்கோலாஸ் அதிர்ச்சியடைந்தார். அவரது  கர்ப்பிணி மனைவியும்   குழந்தையும்  விமான விபத்தில் இறந்ததை அறிந்து துடித்துப்போனார்.

  லாரனுக்கு 38 வயது மற்றும் முதல் குழந்தையுடன் மூன்று மாத கர்ப்பிணி. நியூ ஜெர்சியில் தனது பாட்டியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக அவர் கிழக்கு நோக்கி பயணம் செய்தார், பின்னர் கர்ப்பத்தை அறிவிக்க சில கூடுதல் நாட்கள் தங்கியிருந்தார் 

கிராண்ட்கோலாஸ் சோகத்திற்குப் பிறகு மனச்சோர்வு மற்றும் உயிர் பிழைத்தவரின் குற்றத்துடன் போராடினார்

கிராண்ட்கோலாஸ் மறுமணம் செய்து கலிபோர்னியாவின் சான் ரஃபேலில் அவரும் லாரனும் வாங்கிய வீட்டை விட்டு வெளியேறினார். இன்று, அவர் ஒரு விளம்பர நிர்வாகியாக தனது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் தனது பிறக்காத குழந்தைக்கு அஞ்சலி செலுத்தும் துக்க செயல்முறை பற்றி ஒரு புத்தகம் எழுதுகிறார். குழந்தைக்கு 20 வயதாக இருக்கும் ஏப்ரல் மாதத்தில் இது வெளியிடப்படும்.

செப்டம்பர் 11, 2001  தாகுதலில் இருந்து  தப்பியதை நேற்றுப்போல் உணர்கிறேன் என்கிறார் ஜோ டிட்மர். உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தின் 105 வது மாடியில் அமர்ந்திருந்த போது கடத்தப்பட்ட விமானம் முதல் கோபுரத்தை மோதியது.61 வயதான அவர் 42 ஆண்டுகளாக காப்பீட்டுத் துறையில் இருக்கிறார்.


கடத்தப்பட்ட விமானம் முதல் கோபுரத்தைத் தாக்கியபோது, அவர் 105 வது மாடியிலிருந்து எதையும் கேட்கவோ பார்க்கவோ இல்லை என்று கூறினார்."நாங்கள் பார்த்தது ஒளிரும் விளக்குகள் மட்டுமே" என்று டிட்மர் கூறினார்.அவர் இருந்த அறை நான்கு சுவர்களால் சூழப்பட்டிருந்தது, ஜன்னல்கள் இல்லை.அந்த நேரத்தில், அவரும், அறையில் இருந்த மற்ற 54 பேரும் சேர்ந்து, ஒரு வெடிப்பு காரணமாக வெளியேறச் சொன்னார்கள்.

அவரும் சக  ஊழியகளும் வேகமாக் கட்டடத்தை விட்டு வெளியேறினார்கள்.   அதிர்ஷ்ட வசமாக  ஆபத்து  இன்றிவெளியேறியவர்களில் ஜோ டிம்மரும்  ஒருவர்.


 இவர்களைப்  போல பலர் 9/11    மறக்க மாட்டார்கள். அந்த நாள் ஏற்பட்ட வடு அவர்களின் வாழ்க்கையில் இருந்து இன்னமும்  மறையவில்லை. பயங்கரவாதம் இன்னமும்  முற்றாக அழிக்கப்படவில்லை. அது புதிய வடிவத்தில் உலகை அச்சுறுத்துகிறது.

செப்டம்பர் 11, 2001   அமெரிக்கா மீது  தாக்குதல் நடத்துவதற்காக  நான்கு விமானங்கள்  கடத்தப்பட்டன.

 நான்கு விமானங்களிலும் இருந்த  அனைவரும் கொல்லப்பட்டனர். இதில் 246 பேர் பொதுமக்கள். 19 பேர் பயங்கரவாதிகள்.

உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களிலு விமானங்கள் மோதின.

 தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது.

வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது.

 இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர்.

  விமான எண் 11

 

  11 விமானப் பணியாளர்கள் மற்றும் ஐந்து கடத்தல்காரர்களைத் தவிர 76 பயணிகளுடன், அதிகாலை 7:59 மணிக்கு பாஸ்டனிலிருந்து கிளம்பிய விமானத்தைக் கடத்தி காலை 8:46 மணிக்கு, உலக வர்த்தக மையத்தின் வடக்குக் கோபுரத்தைத் தகர்த்தனர்.

 விமான எண் 175

 

  9 விமானப் பணியாளர்கள் மற்றும் ஐந்து கடத்தல்காரர்களைத் தவிர 51 பயணிகளுடன், காலை 8:14 மணிக்கு லோகன் விமான நிலையத்திலிருந்து லொஸ் பாஸ்டனிலிருந்து ஏஞ்சலஸ்க்கு கிளம்பிய விமானத்தைக் கடத்தி காலை 9:03 மணிக்கு, உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தை தகர்த்தனர்.

விமான எண் 77

 

  6 விமானப் பணியாளர்கள் மற்றும் ஐந்து கடத்தல்காரர்களைத் தவிர 53 பயணிகளுடன், காலை 8:20 மணிக்கு வொ்ஜினியாவிலிருந்து ஏஞ்சலஸ்க்கு கிளம்பிய விமானத்தைக் கடத்தி காலை 9:37 மணிக்கு, பென்டகன் மீது மோத வைத்தனர்.


விமான எண் 175

  7 விமானப் பணியாளர்கள் மற்றும் நான்கு கடத்தல்காரர்களைத் தவிர 33 பயணிகளுடன், காலை 8:42 மணிக்கு நீவர்க் விமான நிலையத்திலிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு கிளம்பிய விமானத்தைக் கடத்தினர். காலை 10:03 மணிக்கு, பென்னிசிலாவனியா மாகாணத்திலுள்ள ஷான்க்ஸின் நிலப்பகுதியின் மீது விமானம் மோதியது.

Friday, September 10, 2021

ஆப்கானிஸ்தானில் ஆழமாகக் கால் பதிக்கும் சீனா

அமெரிக்கா, இந்தியா  ஆகிய இரண்டு நாடுகளின் கண்காணிப்பில்  ஆப்கானிஸ்தான் இருந்தபோது  அதிக  ஈடுபாடு  இல்லாமல் இருந்த  சீனா இப்போது  அதிக  அக்கறை  காட்டுகிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள்   கைப்பற்றியபோது  உலக நாடுகள்  அனைத்தும்  அதிர்ச்சியுடன் பார்த்த போது  சீனா முந்திக்கொண்டு  ஆதரவு தெரிவித்தது.

உலக நாடுகளுடன் நட்புறவு பாராட்ட விரும்பும் தலிபான்கள் அமெரிக்காவுடனும், இந்தியாவுடனும்  நெருக்கமாக செயற்பட மாட்டார்கள். அந்த இடத்தை நிரப்ப சீனா முயற்சிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான புதிய ஒரு எல்லை உருவாகுவதை  சீனா விரும்புகிறது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதை தடுக்க, இந்தியாவின்  அண்டை நாடுகளை வளைத்துள்ளது போல், ஆப்கானையும் கைக்குள் வைக்க சீனா முயற்சிக்கிறது.

இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் என பல நாடுகளை சீனா கைக்குள் வைத்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதாக இந்த நாடுகளில் அதிக அளவில் முதலீடுகள் செய்து, அவற்றை தன் கட்டுப்பாட்டில் சீனா வைத்துள்ளது.திபெத் அதன் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு அருகில் உள்ள அனைத்து நாடுகளையும் வளைத்து, இந்தியாவுக்கு மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக சீனா விளங்கி வருகிறது. எதிர்காலத்தில் போர் ஏற்பட்டால் தன் படைகளை அந்த நாடுகளில் நிலைநிறுத்தி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பது அதன் திட்டம்.நேரடியாக போரில் ஈடுபடாவிட்டாலும், இந்தியாவுக்கு பாதுகாப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சீனா நிச்சயம் ஏற்படுத்தும்.

ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில்  செய்யப்பட்ட   வர்த்தக பொருளாதார  ஒப்பந்தங்கள் அனைத்தும் கைவிடப்படும் நிலையில் உள்ளன. அந்த  இடத்தை  சீனா  கெட்டியாகப் பிடிக்க  சந்தர்ப்பம் உள்ள‌து. ஆப்கானிஸ்தானுக்கு உட்கட்ட‌மைப்பு வசதிகள் தேவையாக உள்ளது. சீனா முன்னின்று  அதனை  நிறைவேற்றும்

ஆப்கானிஸ்தானூடாக பல நாடுகளை  சீனாவுடன் இணைக்கும், பிரமாண்ட சாலை திட்டத்துக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பது ஒரு காரணம். தங்கள் நாட்டுக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த சீனாவுக்கு தலிபான்கள் அனுமதிக்க வேண்டும்.மற்றொன்று, ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு துர்கிஸ்தான் அமைப்பு என்ற பயங்கரவாத அமைப்பு, உய்குர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தானில் வலுவாக உள்ளது.

ஆப்கானுடன் 80 கி.மீ., நீள எல்லையை சீனா பகிர்ந்து கொள்கிறது. அதில் பெரும்பகுதி ஜின்ஜியாங் மாகாணத்தில் வருகிறது. அதனால், தன் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க சீனா விரும்புகிறது. தலிபான் அமைப்பின் முக்கிய தலைவர்கள்  சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீயை சந்தித்து பேசினர். அப்போது, 'இந்த பயங்கரவாத அமைப்பினர் எங்கள் எல்லையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்' என, தலிபான் உறுதி அளித்துள்ளது.

பல வகையான  தாதுக்கள் அடங்கிய அரிய பூமி ஆப்கானிஸ்தான். சுமார் 1 டிரில்லியன் டொலர் மதிப்பினால் ஆன பூமியின் மீது  ஆப்கானிஸ்தான் அமர்ந்துள்ளது. பொருளாதாரம்,நிதி ரீதியாக பின்னடைவில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு உதவ உலக நாடுகள் பின் வாங்கியிருந்தாலும், தற்போது சீனா உதவலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது.ஆப்கானில் உள்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்துதல், தொழில் கட்டமைப்பு வாய்ப்புகள் மற்றும் பயன்படுத்தப்படாத 1 டிரில்லியன் டொலர் மதிப்பிலான விலையுயர்ந்த கனிமங்களை அணுகுதல் என சீனாவுக்கு தேவையானதாக உள்ளது

தலிபான்களுக்கு உதவ எந்த ஒரு  நாடும் இப்போது தயாராக இல்லை.தலிபானுக்கு உதவ ஒரு பலமான நாடு தேவை. இதனால் சீனாவை தாலிபான்கள் ஏற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவும் ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் சீனா 1 டிரில்லியன் கனிமங்களை எடுப்பதிலும் உதவி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் உதவியுடன், தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பொருளாதார மீட்சிக்கு போராடுவார்கள் என்று  தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இத்தாலிய செய்தித்தாளிடம் கூறினார். சீனாவிடம் இருந்து பெரும் உதவிகளை  தலிபான்கள் எதிபாரப்ப‌தை இது வெளிப்படுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தை திறந்து வைக்க சீனா உறுதி அளித்துள்ளதாகவும்  'மாட்டிறைச்சி' உறவை சீனா பராமரிக்கும் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

"சீனா எங்கள் மிக முக்கியமான பங்குதாரர் மற்றும் எங்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது, ஏனென்றால் அது நம் நாட்டை முதலீடு செய்து மீண்டும் கட்ட தயாராக உள்ளது" என்று தாலிபான் செய்தி தொடர்பாளர் பேட்டியில் கூறினார்.வர்த்தகப் பாதைகளைத் திறப்பதன் மூலம் சீனா தனது உலகளாவிய செல்வாக்கை அதிகரிக்க விரும்பும் உள்கட்டமைப்பு முயற்சியான புதிய சில்க் சாலை - தலிபான்களால் மதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள  செப்புச்  சுரங்கங்கலை இயக்குவதற்கு  சீனாவின் உதவிய  தலிபான்கள் நாடக்கூடும். விமான நிலையங்களை இயக்குவதற்கான தொழில் நுட்ப  உதவிகளையும்  சீனாவிடம் இருந்து தலிபான்கள் பெறுவதற்கான சந்தர்ப்பம் உள்ள‌து.  .

  சில சிறிய அளவிலான முதலீடுகளை சீனா செய்யக்கூடும், ஆனால் அந்த நீண்ட கால முதலீடுகள் நாட்டில் போதுமான நிலைத்தன்மை மற்றும் நாட்டில் போதுமான பாதுகாப்பு இருப்பதைப் பொறுத்தது, இவை பொருளாதார ரீதியாக சாத்தியமான ஒன்றாக மாறும். ஆனால், தலிபான்கள் சில வரம்புகளை விதித்தே  உதவியைப் பெறுவார்கள். 

இன்றைய நாளில் இலத்திரனியல் சாதனங்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் சீனாவுக்கு, ஆப்கானில் உள்ள கனிமங்கள் தேவை. குறிப்பாக பட்ரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியத்திற்கு தேவை அதிகம் உள்ளது.  சீனாவின் குறி ஆப்கானில் இருக்கும் தாதுக்கள் என்பதால், மெதுவாக ஆப்கானிஸ்தானுக்கு தனது ஆதரவினை கொடுக்க தொடங்கியுள்ளது. இது அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான அப்பிள், டெஸ்லா நிறுவனங்களுக்கு போட்டியாக அமையலாம் எனவும் கருத்துகள் நிலவி வருகின்றன. மொத்தத்தில் நேரம் பார்த்து காய் நகர்த்த தொடங்கியுள்ளது சீனா.

அமெரிக்காவுக்கு இணையான  ஒரு  நாடு தலிபான்களுக்குத் தேவையாக உள்ளது. அது சீனாவாகத்தான்  இருக்க முடியும்.

Wednesday, September 8, 2021

ஆப்கானிஸ்தான் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்குமா?

ஆப்கானிஸ்தானை  கைப்பற்றிய  தலிபான்கள் புதிய அரசாங்கத்தை அறிவித்துள்ளனர். இது இடைக்கால அரசு என  அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை வருடங்களுக்கு இடைக்கால‌  அரசாங்கமாக இருக்கும் என்பது தெரியவில்லை. எதிர்பார்த்ததுபோல்  பெண்களுக்கு இடம் இல்லை. அமெரிக்க  அரசாங்கத்தால் தேடப்படும் பட்டியலில் உள்ள‌வர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.

  ஆப்கானிஸ்தானின் புதிய அரசு தொடர்பான அறிவிப்பை  தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்  வெளியிட்டார்.

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்களின் விவரத்தை தாலிபன் தலைமை அறிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானை இனி 'ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்' என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தலைநகர் காபூலில் தாலிபன் செய்தித்தொடர்பாளர் சஃபியுல்லா முஜாஹிதின் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இடைக்கால அரசில் இடம்பெறும் அமைச்சர்களின் விவரங்களை வெளியிட்டார். அதன் விவரம்:

பிரதமர் - முல்லா மொஹம்மத் ஹஸன் அகுந்த் (இவர் தலிபான் இயக்கத்தின் நிறுவனர் முல்லா ஒமருடன் கூட்டாளியாக இருந்தவர்),துணை பிரதமர்கள் - முல்லா அப்துல் கனீ பரதர், மெளலவி அதுல் சலாம் ஹனாஃபி,உள்துறை - சிராஜுதீன் ஹக்கானி (இவர் ஹக்கானி ஆயுத போராளிகள் குழுவின் தலைவருடைய மகன் - இந்த குழு அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவால் தேடப்படும் நபர்)பாதுகாப்பு - முல்லா மொஹம்மத் யாகூப் முஜாஹித் (இவர் தலிபான் நிறுவனர் முல்லா ஒமரின் மகன்),வெளியுறவு - மெளலவி ஆமிர் கான் முட்டாக்கி,நிதி- முல்லா ஹிதாயத் பத்ரி,நீதித்துறை - அப்துல் ஹக்கீம் இஷாக்ஸி,தகவல் துறை - கைருல்லா சயீத் வாலி கெய்ர்க்வா

தற்போது அறிவிக்கப்பட்டவர்கள், முறைப்படி அரசு அமையும்வரை இடைக்காலமாக அமைச்சரவையை வழிநடத்துவார்கள் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

தலிபான்இயக்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவரான முல்லா ஒமரின் கூட்டாளியாக இருந்தவர் முல்லா மொஹம்மத் ஹஸன் அகுந்த்.

 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை தலிபான் ஆண்டபோது, துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்தவர். முந்தைய தாலிபன் ஆளுகையின்போது கந்தஹார் மாகாண ஆளுநராகவும் இருந்துள்ளார்.

இவரை பிரதமர் பதவிக்கு தலிபான்அதிஉயர் தலைவர் ஹெபடுலா அகுந்த்ஸாதா தேர்வு செய்திருக்கலாம் என பிபிசி உருது கூறியுள்ளது.

பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளவர்களின் ஆவணங்களின்படி இவர் கந்தஹார் மாகாணம், மியால் பகுதி, ஸ்பின் போத்லாக் மாவட்டத்தில் பிறந்தவர், இவரது வயது 58. நூர்சாய் பழங்குடியைச் சேர்ந்தவர்.

முல்லா ஹஸ்ஸன் அகுந்த், ஐ.நா பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பவர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலிலும் இவர் இருக்கிறார்.

தலிபானின் அதிஉயர் தலைவர் ஹெபடுலா அகுந்த்ஸாதா. 2001இல் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையிடம் தலிபான்வீழ்ச்சி அடைந்த பிறகு பொதுவெளியில் தென்படாத இவர்,  ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசை தாலிபன் அறிவித்த பிறகே தனது பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். 

வயதில் 60களில் இருக்கும் இவர், தமது வாழ்வின் பெரும்பாலான நாட்களை ஆப்கானிஸ்தானிலேயே கழித்துள்ளார். 1980களில் சோவியத் ஆக்கிரமிப்பின்போது இஸ்லாமியவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கெடுத்த இவர், ஆயுதக்குழுவுக்கு தலைவர் என்பதை விட, சமய தலைவராகவே தலிபான்களால் போற்றப்பட்டார்.1990களில் தலிபான்ஆளுகையின்போது ஷரிய சட்டங்களின்படி தலிபான் நீதிமன்றத்துக்கு தலைமை வகித்தார்.

ஷரிய சட்டங்களின்படி தண்டனைகள் கடுமையானதாக இருந்தன. பொதுவெளியில் குற்றவாளிகள் கொல்லப்படுவது, தகாத உறவில் ஈடுபட்டால் கொல்லப்படுவது திருடினால் முடமாக்கப்படுவது என அந்த ஆளுகையில் தண்டனைகள் கடுமையாக இருந்தன.இந்த நிலையில், இன்று ஹெபடுலா அகுந்த்ஸாதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய விதிகள் மற்றும் ஷரிய சட்டத்தை அரசு பராமரிக்கும் என்று கூறியுள்ளார்.தேசத்தின் உயரிய நலன்களை பாதுகாத்து, அமைதி, வளம், வளர்ச்சி தழைத்தோங்க பொறுப்பில் உள்ளவர்கள் பணியாற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்கும் வைபவத்தில் கலந்துகொள்ள ஐக்கிய அமீரகம், பாகிஸ்தான், சவுதி அரேபியா சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய ஆறு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவை  தலிபான்களுக்கு  மிக நெருங்கிய  நாடுகளாகும்.இதில் பாகிஸ்தான், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தலிபான்கள் ஆட்சி நடத்திய 90களிலே அவர்களுக்கு ஆதரவு அளித்தன.

தற்போது தலிபான்கள் நட்புப் பட்டியலில் புதிதாக சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் சேர்ந்துள்ளன. கட்டாருக்கும் தலிபான்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.கல்வித்துறை பற்றி குறிப்பிட்டுள்ள அவர், ஷரிய சட்டத்துக்கு உட்பட்டு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான மதம் மற்றும் நவீன அறிவியல் சூழ்நிலைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

அப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்கப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ள‌து. பயக்கரவாதிகளுடன் தொடர்பு கொள்ளப்போவதில்லை என  கனடா ஏற்கெனவே அறிவித்தது. பிரிட்டனால் தேடப்படும் நபர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் பிரிட்டனும் உடனடியாக அங்கீகாரமளிக்க மாட்டாது.சீனா, பாகிஸ்தான், தலிபான் எல்லாம் ஓரணியில் நிற்பதால் இந்தியா இப்போதைக்கு நெருங்க  மாட்டாது.

இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறுமா அரசியல் கட்சிகள் உருவாக இடம் கொடுக்கப்படுமா  போன்ற  கேள்விகளுக்கு எதுவித பதிலும் இல்லை.








Tuesday, September 7, 2021

தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெண்கள் கலகக்குரல்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் விரைவில் புதிய ஆட்சி உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர். அனைத்து ஆப்கானிஸ்தான் மாகாணங்களுக்கும் கவர்னர்கள், அதிகாரிகள் ஆகியோரை நியமித்து வருகின்றனர். பதவியேற்பு நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர். அவர்களது ஷரியா சட்டம் மூலமாக ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி நடைபெறும். இந்த சட்டங்களை முறையாகக் கடைபிடிக்க  பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  கடந்த இருபது ஆண்டு காலமாக அமெரிக்க அரசின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டை ஆட்சி செய்து வந்துள்ளனர்.அவர்கள் அமெரிக்காவின்  கைப்பொம்மைகளாகச் செயற்பட்டதாக தலிபான்கள்  கருதுகின்றனர்.

 இந்த முறை தாலிபான்களின் ஆட்சி மாறுபட்டு இருக்கும் என்று ஆப்கானைக்  கைப்பற்றியதும்  உறுதியளித்தனர். இந்த முறை  பெண்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்றும் பெண்கள் பள்ளி, கல்லூரி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தலிபான்கள் தெரிவித்தனர்.

 ஆனால், அவர்கள் சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாகவே இருக்கிறது. முதலில் புர்கா அணியாமல் ஆண் துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என அறிவித்த தலிபான்கள்,   ஆண்- பெண் இருபாலர் படிக்கும் கல்வி முறைக்கு தடை விதித்துக்கனர்.

தலிபான்களின் கட்டுப்பாட்டில்  ஆப்கான் சென்றதும்   தொலைக்காட்சியில்     பெண்கள்  அகற்றப்பட்டார்கள். ஆண்கள் செய்தி  வாசித்தார்கள். மேற்கத்தைய  கோட் உடை  மாறி ஆப்கானின் தேசிய உடை அணிந்த  ஆண்கள்  தோன்றினார்கள். இருபது  வருடங்கள் சுதந்திரத்தை அனுபவித்த  ஆப்கான் பெண்கள் ஓரிரவுக்குள்  அதனை இழக்க விரும்பவில்லை.  ங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக  போராட்டங்களை நடத்துகின்றனர். பெண்களின் இந்தப்  போராட்டம்  தலிபான்களுக்கு புதியதாக உள்ளது.

சிறைக்கைதிகளை  தலிபான்கள்  விடுதலை  செய்ததால் ஆப்கானிஸ்தானில் உள்ள 250  பெண்  நீதிபதிகள்  அச்சத்தில்  உள்ளனர். தமது  உயிருக்குப்  பாதுகாப்பு இல்லை எனக்கூறிய  பெண்நீதிபதிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்னொரு புறத்தில்  விபசாரம் செய்த  பெண்கைன் பட்டியலை  தலிபான்கள் தயாரிப்பதாகச் செய்தி வெளியாகி உள்ளது.

தலிபான்களின் ஆட்சிக்கு எதிராகத் தலைநகர் காபூலில் போராட்டம் நடத்திய பெண் சமூக ஆர்வலர் ஒருவர் மீது தாலிபான்கள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் உரிமை மறுக்கப்படும் என்பதால், தலிபான்களுக்கு எதிராக சில பெண்கள் தலைநகர் காபூலில் தொடர் போராட்டம் நடத்தி னர். இரண்டாம் நாள் நடைபெற்ற போராட்டத்தில் தான் தலிபான்கள் பெண் சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.  தலிபான்களால் தாக்கப்பட்டவர் நர்கிஸ் சதாத் என்ற பெண்கள் உரிமை ஆர்வலர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

தலிபான்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பெண்கள், ஜனாதிபதி மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றனர்.அதைத் தடுத்த தலிபான்கள் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதாகவும், அதைத் தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியதாகவும் டோலோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. முன்னதாக வியாழக்கிழமை ஹெராட் என்ற இடத்தில் தலிபானின் புதிய அரசில் பெண்களுக்கு உரியப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.   தங்களை வேலைக்கு செல்ல அனுமதி வேண்டும் என சில பெண்கள் தைரியமாக சாலையில் வந்து போராடியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின்  முன்னைய  அரசாங்கத்தால் குற்றவாளி என  தீர்ப்பளிக்கபட்டவர்களை  தலிபான்கள் விடுதலை செய்துள்ளனர்.தடை ச்ய்யப்பட்ட பயங்கரவாத குழுக்களில்  உள்ளவர்களும் விடுதலை செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.ஆப்கான் சிறையில் இருந்த  தலிபான்களும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். குற்றவாளிகள் சிலருக்கு  அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை தாபான்கள் வழங்கி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் நீதிமன்றத்தில் நீதிபதிகளாகப் பதவி வகித்த பெண்கள் பலர் தற்போது இதனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர். தங்களால் ஒரு காலத்தில் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தற்போது தாபான்கள் ஆதரவுடன் வெளியில் சுதந்திரமாக உலா வருகின்றனர்.

ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் நீதித்துறையில் பணிபுரியும் பெண்களை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள்  இருவர் சுட்டுக்கொல்லப்பட்டன்ர். இப்போது நாடு முழுவதும் கைதிகள் தலிபான் அமைப்பால் விடுதலை செய்யப்பட்டிருப்பதால், பெண் நீதிபதிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நாட்டை விட்டு வெளியேறிய பெண் நீதிபதி ஒருவர் கூறி உள்ளார்.

காபூலில்  எனது வீட்டிற்கு தலிபான் அமைப்பைச் சேர்ந்த நான்கைந்து பேர் சென்று என்னைப் பற்றி விசாரித்துள்ளனர். இங்கிருந்த பெண் நீதிபதி எங்கே? என்று கேட்டுள்ளனர். அவர்கள் என்னால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். இதேபோல் ஆப்கானிஸ்தானில் தற்போது இருக்கும் பெண் நீதிபதிகளிடம் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள், தங்களை மீட்காவிட்டால் உயிருக்கு நேரடி ஆபத்து இருப்பதாக என்னிடம் கூறுகின்றனர்  என அந்த நீதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெண் நீதிபதிகள் சங்கத்தில் உள்ள சக நீதிபதிகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பினரின் உதவியுடன் சமீபத்தில் வெளியேறிய ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளில் இவரும் ஒருவர். மற்ற நீதிபதிகளும் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்காக மனித உரிமை ஆர்வலர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.


இதனிடையே விபசாரத்தில் ஈடுபட்டு வந்த ஆப்கானிஸ்தான் பெண்கள் யார் யார் என கண்டறியும் பணியில் தலிபான்கள் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காகவே விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்களின் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் எனவும் அதற்காக தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது, முந்தைய (1996-2001) தலிபான்கள் ஆட்சியில் விபசாரம் அல்லது குடும்ப உறவுகளுக்கு மாறான உறவு வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு பொது இடத்தில்   தலிபான்கள் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.

தங்காது  உரிமைகளைப்  பெற  ஆப்கானிஸ்தானியப்  பெண்கள்  போராடத் துணிந்து விட்டனர்.ஆப்கானிஸ்தான்  பெண்களில்  இந்தப் போராட்டங்களை தலிபான்கள் எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறார்கள் என்பதே உலக அரசியலின் முன்னால் உள்ள பிரதான கேள்வி.

ரமணி