Sunday, August 30, 2020

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று ஆரம்பம்

 


ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டி நடைபெறும்.

முதல் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சும் (செர்பியா), சோபியா கெனினும் (அமெரிக்கா) பட்டம் பெற்றனர். 

கொரோனா வைரஸ் காரணமாக மே, ஜூன் மாதங்களில் நடைபெற இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. இந்த போட்டி செப்டம்பர் 21-ம் திகதி தொடங்குகிறது. ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெற இருந்த விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டது. 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று 31- ஆம் திகதி திங்கட்கிழமை தொடங்குகிறது. 

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. இதனால் இந்தப் போட்டி ரசிகர்கள் இல்லாமல் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறையில் நடத்தப்படுகிறது. 

நடப்பு சாம்பியனும், உலகின் 2-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) பாதுகாப்பு காரணமாக இந்தப் போட்டியில் ஆடவில்லை. 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) காயம் காரணமாக இந்தாண்டு இறுதிவரை ஆட மாட்டார் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார். 

நடால், பெடரர் இல்லாததால் அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்ல நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. 33 வயதான அவர் 18-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். ஜோகோவிச் அமெரிக்க ஓபன் பட்டத்தை 4-வது முறையாக வெல்லும் வேட்கையில் உள்ளார்.

 ஜோகோவிச்சுக்கு டொமினிக் தீயம் (ஆஸ்திரியா), மெட்வதேவ் (ரஷ்யா), ஸ்டேபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), சுவரேவ் (ஜெர்மனி) ஆகியோர் சவாலாக இருப்பார்கள். 

பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் பினாகா (கனடா) ஆடவில்லை. கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) சோபியா கெனின், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), நமோமி ஒசாகா (ஜப்பான்) போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 

38 வயதான செரீனா வில்லியம்ஸ் 24-வது கிராண்ட் சிலாம் பட்டம் வென்று புதிய சாதனை படைக்கும் முயற்சியில் உள்ளார்.  

 

Saturday, August 29, 2020

ஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா விலகல்

 


நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா விளையாடமாட்டார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில், அணி பந்து வீச்சாளர், அணி நிர்வாகிகள் என 13 பேருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது 

இந்த நிலையில்அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா  போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பி விட்டதாகவும் அணி சிஇஒ தெரிவித்துள்ளார்.

Thursday, August 27, 2020

ரி20 யில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ சாதனை

 


ரி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை டுவெய்ன் பிராவோ பெற்றார். 

 

மேர்கு இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான 36 வயதான டுவெய்ன் பிராவோ. .பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார் 

தற்போது கரிபியன் தீவுகளில் நடந்து வரும் கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக டுவெய்ன் பிராவோ விளையாடி வருகிறார். 

இந்நிலையில், போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி செயிண்ட் லூக்கா சோகஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டிரின்பாகோ வீரர் டுவெய்ன் பிராவோ வீசிய பந்தில் லூக்கா அணியின் கார்ன்வெல் ஆட்டமிழந்தார். 

அவரது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ரி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பிராவோ பெற்றார். மேலும் கரிபியன் பிரிமீயர் லீக்கில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் பெருமையையும் பிராவோ தட்டிச்சென்றார். 

ரி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைபடைத்துள்ள போதும் ரி20 போட்டியில் 400 விக்கெட்டுகளை கடந்த ஒரே வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரும் பிராவோவே ஆவார். 

ரி20 போட்டியில் அவருக்கு அடுத்த படியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளவர் இலங்கை அணியின் லசித் மலிங்கா ஆகும். மலிங்கா ரி20 கிரிக்கெட்டில் இதுவரை 390 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் 

ஏற்கனவே ரி20-யில் 400 விக்கெட்டுகளை கடந்த ஒரே வீரர் என்ற பெருமையில் இருந்து தற்போது 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் பிராவோவை சேர்ந்துள்ளது.