ஊழலின் மொத்த உருவமான காங்கிரஸ் கட்சியை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும் எனச் சபதமிட்டு அரசியல் அரங்கத்தில் தோன்றிய அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் என்றால் என்ன என்பதை டில்லி சட்ட சபைத் தேர்தலின் மூலம் புரிந்து கொண்டார். தமது கோட்டை என இறுமாந்திருந்த காங்கிரஸை கூட்டித்துடைத்து குப்பைக் கூடையில் போட்டது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி.
நாற்றமெடுக்கும் ஊழலை கூட்டிச் சுத்த மாக்குவதற்காக துடைப்பத்தை தனது சின்னமாகக் கையில் எடுத்தது ஆம் ஆத்மி கடசி. ஆம் ஆத்மி கட்சி எதிர்பார்த்தது போன்று டில்லியில் காங்கிரஸை ஓரங் கட்டியது.அதேவேளை காங்கிரஸின் ஆதரவுடன் கெஜ்ரிவால் முதல்வரானார்.
அண் மையில் நடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ்கட்சி பின்னடைவைச் சந்திக்கும் என எதிர் பார்க்கப்பட்டது.பாரதீய ஜனதாக்கட்சி முன்னிலை வகிக்கும், ஆட்சியைக் கைப்பற்றும் என்றே கருத்து கணிப்புகளும் எதிர்வு கூறின.ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் என்று யாருமே கணிக்கவில்லை.
ஆம் ஆத்மி கட்சியினால் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் சிதறடிக்கப்படும்.பாரதீய ஜனதாக்கட்சி சுலபமாக ஆட்சியைப் பிடித்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.70 தொகுதி கள் கொண்ட டில்லி சட்ட சபையில் பாரதீய ஜனதாக்கட்சி 31 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 28 தொகுதிகளிலும், காங்கிரஸ்கட்சி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.ஆட்சி அமைப்பதற்கு 36 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். உதிரிக்கட்சியின் ஆதரவைப் பெற்றாலும் யாரும் ஆட்சியமைக்க முடியாத நிலை. பரம எதிரியான காங்கிரஸ் மனது வைத்தால்தான் டில்லியில் ஆட்சிபீடம் ஏறலாம் என்ப தைபாரதீய ஜனதாக் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் உணர்ந்தன.
டில்லியில் ஆட்சிபீடம் ஏறமுடியாது என்பதைத் தெரிந்து கொண்ட பாரதீய ஜனதாக் கட்சி கெளரவமாக ஒதுங்கிக் கொண்டது.ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு வழங்க காங்கிரஸ் முன் வந்தது.காங்கிரஸின் ஆதரவை ஆம் ஆத்மி உடனடியாக ஏற்கவில்லை. தமிழக அரசியல் கட்சிகளைப் போன்று பொதுச்சபை கூடி தலைவர் முடிவெடுப்பார் என்று கூறவில்லை. மக்கள் கருத்தைக் கேட்பதற்கு காலஅவகாசம் கேட்டது.
காங்கிரஸின் ஆதரவு தேவை இல்லை .மறு தேர்தல் தான் என்று உறுதியாக இருந்த ஆம் ஆத்மி சற்று இறங்கிவந்தது.டில்லியில் உள்ள நகரங்களிலும் சேரிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியது ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மக்களின் கருத்துக்களைக் கேட்டார்கள்.மூன்று இலட்சத்து 24 ஆயிரம் எஸ். எம்.எஸ்.இரண்டு இலட்சத்து 38 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள்,ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ஈமெயில் மூலம் மக்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தார்கள். காங்கிரஸின் தயவுடன் ஆட்சிபீடம் ஏறலாம் என்ற மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து ஆட்சியமைக்க சம்மதித்தது ஆம் ஆத்மி.
டில்லியில் இதுவரைகாலமும் தனி ஆட்சி தான் நடைபெற்றுவந்தது.இப்போது தான் முதல் முதலாக இன்னொரு கட்சியின் உதவியுடன் ஆட்சி அமைகிறது.ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட ஆம் ஆத்மி எப்படிப்பட்ட ஆட்சியை அமைக்கப் போகிறதென்பதை அறிவதற்காக வே காங்கிரஸ்கட்சி ஆதரவு வழங்கி உள்ளது. தலைமையின் முடிவை டில்லியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்கவில்லை. ஒரு சில இடங்களில் எதிர்ப்பு கோஷங்களும், போராட்டங்களும் நடை பெற்றன. காங்கிரஸின் முடிவுக்கு எதிராகப் போராடும் தொண்டர்கள் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் படங்களை எரித்தார்கள்.தப்பு செய்த தனது கட்சித்தலை வருக்குத் தண்டனை கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.
டில்லியில் ஆட்சிபீடம் ஏறும் ஆம் ஆத்மியின் முன்னால் மிகப் பெரிய சவால் உள்ளது . ஆட்சிபீடம் ஏறும் கட்சிகள் எவையும் வாக்குறுதியை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை. ஆம் ஆத்மியின் தேர்தல் கால வாக்குறுதி மிகவும் கடினமானது.ஆட்சிபீடம் ஏறியதும் மின் கட்டணத்தை 50 சதவீதமாகக் குறைப்போம் என ஆம் ஆத்மி வாக்குறுதியளித்தது.மின் கட்டணத்தை பாதியாகக் குறைக்க என்ன மாயம் செய்யப் போகிறது ஆம் ஆத்மி கட்சி.
டில்லியை மாநில அந்தஸ்தாக உயர்த்து வது, 50 இலட்சம் மக்களுக்கு தினமும் 700 லீற்றர் தண்ணீர், இரண்டு இலட்சம் பொதுக் கழிப்பறை,போக்குவரத்து தரமுயர்த்துவது, ஊழல் செய்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை என்பனவும் ஆம் ஆத்மியின் வாக்குறுதிகளில் அடங்கும்.இவை எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத வாக்குறுதிகள். இவற்றை நிறைவேற்றத் தவறினால் பொதுத் தேர்தலில் ஆம் ஆத்மி பின்னடைவைச் சந்திக்கும். தேர்தல்கால வாக்குறுதிகளில் ஒரு சிலவற்றை யாவது நிறைவேற்றினால்தான் இந்தியப் பொதுத்தேர்தலில் காங்கிரஸும் பாரதீய ஜனதாக்கட்சியும் பின்னடைவைச் சந்திக்கும். இல்லையேல் தான் வெட்டிய குழியில் தானே விழ வேண்டிய நிலை ஆம் ஆத்மிக்கு ஏற்படும். ஊழல் செய்த அரசில்வாதிகள் மீது நடவடிக்கை என்ற ஆம் ஆத்மியின் கோஷத்தை டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இரசிக்கவில்லை.எங்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்து எங்கள் மீது நடவடிக்கையா என்று பொருமுகின்றனர் டில்லியில் உள்ள காங்கிரஸ் தலை வர்கள்.
டில்லியில் இளவயதுமுதல்வர் என்ற பெருமையைப் பெறுகிறார் 45 வயதான அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்கு உறு துணையாக இருக்கும் சிகோடியாவுக்கு 41 வயது. இவர் துணை முதல்வராகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.டில்லியில் துணை முதல்வர் பதவி உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை. ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்களின் சராசரிவயது நாற்பதாகும். அமைச்சரவை அறிவிக்கப்படும் முன்பே பூசல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. டில்லி சட்ட சபைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார் பில் வெற்றி பெற்ற அனைவரும் தலைவரை போன்று நேர்மையானவர்கள் தானா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. காங்கிரஸ் கைவிட்ட காங்கிரஸ்குல்லாவை ஆம் ஆத்மியினர்கள் தம் தலையில் சூட்டியுள்ளனர். ஊழ லையும் சுமப்பார்ர்களா என்பதை காலம்தான் கூற வேண்டும்.
வர்மா
சுடர் ஒளி 29/12/13