Sunday, February 10, 2019

பலமான கட்சிகள் கூட்டணிக்கு காத்திருக்க தனி வழி செல்லும் கமல்


இநதிய நாடாளுமன்றத்  தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சகல அரசியல் கட்சிகளும் பலமான  கூட்டணியில் போட்டியிட ஆர்வம் கொண்டிருக்கையில்  தமிழகத்தின் சகல தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக கமல் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் எனும் அரசியல் கட்சியை உருவாக்கிய கமல் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியுடவில்லை. அந்தக் கட்சிக்கான வாக்கு விகிதம் என்ன எனவும் சரியாகக் கணிக்கப்படவில்லை. தனித்துப் போட்டி என்ற கமலின்முடிவு அவரின் தன்னம்பிக்கையைப் புலப்படுத்துகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, கமல் சந்தித்தது  அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் கூட்டணி இல்லை என கமல் உறுதியாகக் கூறியிருந்தார். இந்துத்துவாவின் மீது அதிக மோகம் கொண்ட பாரதீய ஜனதாக் கட்சியுடன் கமல் சேரமாட்டார். ஆகையால் காங்கிரஸுடன் கமல் சேர்வார்  என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பிரதமர் வேட்பாளராக ஸ்டாலினால் ராகுல் காந்தி பிரகடனப்படுத்தியபின்னர் அரசியல் கள நிலவரம் மாறிவிட்டது. ராகுலை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கிய வேளையில் ஸ்டாலினின் பிரகடனம் காங்கிரஸுக்கும்  திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகரித்தது.

திராவிட முன்னாற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு எதிரான வாக்குகளைக் கவர்வதற்கு கமல் காய் நகர்த்துகிரார். இதே பாணியில்தான் விஜயகாந்த், அரசியலில் முன்னேறினார். அரசியலுக்கு வரப்போவதாக கமலுக்கு முன்னர் ரஜினி அறிவித்தார். அவரின் அறிவிப்பு அறிவிப்பாகவே இருக்கிறது.  சினிமாவின் நடிப்பதில் ரஜினி அதிக ஆர்வம் காட்டுகிறார். என் வழி தனி வழி என்பது ரஜினியின் பிரபலமான சினிமா வசனம். அதனை கமல் நிஜமாக்கிவிட்டார். தமிழகத்தின் பலம் வாய்ந்த கட்சிகள் ரகசியமாகக் கூட்டணிப்பேச்சு வார்த்தை நடத்துகின்றன. கமல் துணிந்து களத்தில் இறங்கிவிட்டார். பரபரப்பான அரசியல் கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்ட கமல் அரசியல் தலைவராகிவிட்டார்.

தமிழகத்தில் அரசியல் கட்சியை ஆரம்பித்து முதல்வராகிய பெருமை எம்ஜிஆரையே சாரும். எம்ஜிஆருடன் சேர்ந்ததால் ஜெயலலிதாவும் முதல்வராகினார். கர்நாடகாவில் நடிகர் என்.டி.ராமராவ் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல்வரானார். அரசியல் கட்சி அமைத்த ஏனைய நடிகர்கள் பலமான கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்றத்திலும்  சட்டசபையிலும் உறுப்பினரானார்கள். சிலர் தோல்வியடைந்தனர்.  கால மாற்றத்தில் அவர்களின் கட்சியும் காணாமல் போய்விட்டது. இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான் கமல், கட்சியை ஆரம்பித்துள்ளார்.

கமலுடன் கூட்டணி சேர்வதற்கு எந்தக் கட்சியும் தயாராகவில்லை. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பலமான கூட்டணியை அமைப்பதற்கு முயற்சி செய்யும்போது கமல் தனித்து விடப்பட்டார். தன்னுடைய நிலமையைப் புரிந்துகொண்ட கமல் துணிச்சலுடன் தனியாகக் களம் இறங்கிவிட்டார்.  நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது கமலின் நோக்கமல்ல. தமிழகத்தில் தனக்குரிய செல்வாக்கைப் பரீட்சிப்பதற்கான களமாக தேர்தலை அவர் கருதுகிறார்

சூரன்.ஏ.ரவிவர்மா.

No comments: