Sunday, September 7, 2008
தி.மு.க. கூட்டணியைப் பிரிக்க முயற்சி செய்கிறார் ஜெயலலிதா
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் வெளியேறுவது உறுதியாகிவிட்டது. மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கிய இடதுசாரிகள் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு வழங்கி வருகின்றன.
காங்கிரஸ், இடதுசாரிகள் என்ற இரட்டைக் குதிரையில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முயற்சி செய்கிறார். காங்கிரஸுடனான உறவுகளை முறித்துக் கொண்ட இடதுசாரிகள் தமிழகத்தில் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கிய இடதுசாரிகள் அடுத்து என்ன செய்வதென்று இன்னமும் முடிவு செய்யவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின் போது இடதுசாரிகளின் செல்வாக்கு வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. அதேபோன்று தமிழக அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாகவும் இடது சாரிகளின் செல்வாக்கு உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடது சாரிகளுக்குக்கும் இடையேயான உறவு இன்னமும் அப்படியேதான் உள்ளது. இடதுசாரிகளை அரவணைத்துச்செல்லும் நடவடிக்கையில் தமிழக அரசாங்கம் கண்ணும் கருத்துமாகச் செயற்படுகிறது. இந்த நிலையில் இடது சாரிகளுக்கு பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட பாரதீய ஜனதாக் கட்சி முயற்சி செய்கிறது. மத்தியில் ஆட்சி அமைக்கத் தயாராக இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியை புறந்தள்ளி இடது சாரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் அணுகு முறை அரசியல் கட்சிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட டாக்டர் ராமதாஸ், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தனக்கு அழைப்பு வரும் என்று காத்திருந்தார். ஆனால், பாரதீய ஜனதாக் கட்சியிடமிருந்து கூட டாக்டர் ராமதாஸுக்கு அழைப்பு வரவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறாமல் இருக்கும் இடதுசாரிகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையை நாடி பிடித்துப் பார்க்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் அழைப்புக்கு இடதுசாரிகளிடமிருந்து எதுவிதமான பதிலும் வெளிவரவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறும் இடது சாரிகள் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது.
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துத்தான் சிறுதாவூர் பங்களா, ஜெயலலிதாவால் கட்டப்பட்டது என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் தமிழக முதல்வரிடம் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணைகளை நடத்திய நீதிபதி சிவசுப்பிரமணியன் தலைமையிலான கமிஷன், புறம்போக்கு நிலத்தை அபகரித்தே சிறுதாவூர் பங்களா கட்டப்பட்டது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் கீழ் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.
ஜெயலலிதாவின் மீது அழுத்தமான குற்றச்சாட்டை சுமத்திய மாக்ஸிஸ்ட்டுகள் அவருடன் எப்படி இணைவார்கள் என்ற சந்தேகம் உள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் இதனை மறந்து விடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேற்றப்பட்டு விட்டது. இடதுசாரிகளும் கூட்டணியில் இருந்து வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான பலம் குறைந்துவிடும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இடத்தை நிரப்ப அவர்களின் சமுதாயத்தில் இருந்து சிலரை திராவிட முன்னேற்றக் கழகம் வளைத்துப் போட்டுள்ளது. படையாச்சியார் பேரவை என்ற அமைப்பு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக களமிறங்கத் தயாராகி உள்ளது.
மறைந்த ராமசாமி படையாட்சியின் மகன் டாக்டர் ராமதாஸ்தான் இந்த நிறுவனத்தின் தலைவர். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸைப் போன்றே இவரும் தமது சமுதாயத்திற்காகக் குரல் கொடுத்து வருகிறார்.
டாக்டர் ராமதாஸின் பின்னால் சென்ற வன்னியர் சமூகத்தின் வாக்கு வங்கியை கவர்வதற்கான நடவடிக்கைகளில் படையாட்சியின் பேரவை களமிறங்கி உள்ளது.
முதல்வர் கருணாநிதி வன்னிய சமுதாயத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். வன்னியர் சமுதாயத்துக்கு முதல்வர் கருணாநிதி செய்த நன்மைகளை பட்டியலிட்டுள்ளது.
பலமான கூட்டணி அமைப்பதற்காக சகல தலைவர்களும் காத்திருக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றின் செல்வாக்கு தமிழகத்தில் சரிந்துள்ளது. எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கும் மிக மோசமாகச் சரிந்துள்ளது. பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஜெயலலிதாவுக்கு எதிராக உள்ளது.
ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைக்கலாம் என்று ஜெயலலிதா கனவு காண்கிறார். அவரின் கனவுக்குத் தடையாக விஜயகாந்த் உள்ளார். ஜெயலலிதாவும் பலமான கூட்டணி அமைக்காவிட்டால் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் தனது அரசியல் வாரிசு ஸ்டாலின் தான் என்று முதல்வர் இப்பொழுதே அறிவித்தால் கட்சி உத்வேகம் பெறும். அதற்குரிய ஏற்பாடுகளை தமிழக முதல்வர் முன்னெடுத்தால் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.
வர்மா; வீரகேசரி வார வெளியீடு, 24.08.2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment