Sunday, September 21, 2008

பொறுமை காக்கிறார் வைகோ


தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணிக் குழப்பங்கள் இன்னமும் தீர்ந்தபாடில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கூட்டணி சேர்ந்த பல கட்சிகள் இன்று சிதறிப் போயுள்ளன. இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் நீடித்தாலும் வெளியேற முடியாத சூழ்நிலையில் கூட்டணியில் இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் பிரதான பங்கு வகித்தவர் வைகோ. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்தினார். வைகோவின் அரசியல் பலத்தை உணர்ந்த கலைஞர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமது கட்சியின் வெற்றிக்காக அவருடன் கூட்டணி சேர்ந்தார்கள்.
வைகோவின் வளர்ச்சி தமிழகத்தின் இரு பெரும் கழகங்களையும் கதி கலங்க வைத்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றம் வைகோவின் அரசியல் வளர்ச்சியை அசைத்துப் பார்த்தது. வன்னியர் சமூகத்தின் வாக்கு வங்கி என்று மார்தட்டிய பாட்டாளி மக்கள் கட்சிக்குரிய முக்கியத்துவத்தை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் வழங்கினர். அதன் காரணமாக வைகோ சற்று பின்தள்ளப்பட்டார். கூட்டணியில் தனக்குரிய இடத்தை கேட்டுப் பெறுவதில் டாக்டர் ராமதாஸ் கண்டிப்பாக இருந்தார். கூட்டணியின் வெற்றிக்காக சில விட்டுக் கொடுப்புகளுடன் தனக்கு இழைக்கப்பட்ட அவமானங்களைத் தாங்கிக் கொண்டõர் வைகோ. வன்னியர் வாக்கு வங்கி மூலம் உச்சத்துக்குச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கி குறையத் தொடங்கியுள்ளது. வன்னியர்கள் அதிகளவு உள்ள இடங்களிலேயே பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு குறையத் தொடங்கியுள்ளது.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றுக்கிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை திராவிட முன்னேற்றக் கழகம் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இத்தனை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த கட்சிகள் நீண்ட காலம் நிலைத்திருப்பதில்லை.
அடுத்த தேர்தலையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து சந்திக்கத் தயாராக இருப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார் வைகோ.திராவிட முன்னேற்றக் கழகத்துடன் வைகோ இணைந்திருந்தபோது அவருக்கு கடைசி இடமே கிடைத்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது.
செஞ்சிராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய வைகோவுக்கு எதிராகப் போராடினார்கள்.
செஞ்சி இராமச்சந்திரனும் எல். கணேசனும் வைகோவுக்கு எதிராகக் கிளர்ந்தபோது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உடைந்து விட்டது என்ற கருத்து நிலவியது. வைகோவை எதிர்த்து போராடியவர்களை திராவிட முன்னேற்றக் கழகம் அரவணைத்தது. ஆனால், அந்தச் சலசலப்பு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. வைகோவின் செல்வாக்கின் முன்னால் அவர்களது கிளர்ச்சி தவிடு பொடியானது.பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டைகளில் வைகோவுக்கு செல்வாக்கு உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கும்மிடிப் பூண்டி, அணைக்கட்டு, திண்டிவனம் போன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு வைகோ தான் காரணம்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 61 இடங்களிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றன. வைகோவின் தயவு இல்லையென்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆசனங்களின் எண்ணிக்கை இதனைவிடக் குறைவானதாக இருக்கும். எனினும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் வைகோ இருந்திருந்தால் கூட்டணிகளின் தயவு இன்றி திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து ஆட்சி அமைத்திருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளான இடதுசாரிகள் வெளியேறி விட்டன. பாட்டாளி மக்கள் கட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் தூக்கி எறிந்து விட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸின் தமிழகத் தலைவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி சேரத் துடிக்கின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தஞ்சமடைந்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக சட்ட மன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமானது.
தனக்குரிய மரியாதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் கிடைக்கும் என்று வைகோ நம்புகிறார். வைகோவின் நம்பிக்கையை ஜெயலலிதா நிறைவேற்றுவரா? தட்டிக் கழிப்பாரா என்பதை அறிய அரசியல் உலகம் ஆவலாக உள்ளது.

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு (14.09.2008)

No comments: