Sunday, September 7, 2008
கூட்டணியின் பலம் குறைந்ததால் தடுமாடுகிறார் முதல்வர் கருணாநிதி
காங்கிரஸ், இடதுசாரிகளின், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் துணையுடன் நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழக சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடிய திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தற் போது இடதுசாரிக் கட்சிகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் சவால் விட்டுள்ளன.
தமிழக ஆட்சியின் குறைபாடுகளை விமர்சனம் என்ற பெயரில் நார் நாராக கிழித்த பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசாங்கத்தின் வழக்கமான திட்டங்களையும் அவ்வப்போது எதிர்த்து வந்தது. பொறுமை இழந்த திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியைக் கழற்றி விட்டது.
அமெரிக்காவுடனான இந்திய அரசின் அணு சக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் வாங்கினார்கள். எனினும் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்துடனான இடதுசாரிகள் உறவு சுமுகமாகவே சென்று கொண்டிருந்தது. காங்கிரஸை எதிர்க்கும் இடதுசாரிகள் திராவிட முன்னேற்றக்கழகத்தை எதிர்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தமிழக முதல்வரிடம் இருந்தது.
தமிழக முதல்வரின் ஆசை நிராசையானதும் திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து கடுமையான கண்டனங்களை இடதுசாரிகள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் இடதுசாரிகள் மீது மிகக்கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தனர். முதல்வரும் தனது பங்குகளுக்கும் கவிதையில் வசை பாடினார். முதல்வரின் கவிதையால் கொதித்தெழுந்த இடதுசாரிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துடனான தொடர்பை அறுத்தெறிந்தனர்.
இடதுசாரிகள் தனக்கு கைகொடுப்பார்கள் என்று முற்றுமுழுதாக நம்பிய முதல்வர் கருணாநிதி பாட்டாளி மக்கள் கட்சியை வெளியேற்றினார். இடதுசாரிகள் கூட்டணியில் இருந்து மூட்டையைக் கட்டியதால் பாட்டாளி மக்கள் கட்சியுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க முனைப்புக் காட்டுகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.
தமிழக அரசாங்கம் விடும் தவறுகளை ஆக்ரோஷமாக எதிர்க்கும் டாக்டர் ராமதாஸ் மத்திய அரசாங்கம் தவறு விடும் போதெல்லாம் மௌனமாக இருக்கிறார் அல்லது அடக்கி வாசித்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் கைவிட்டாலும் காங்கிரஸ் கட்சி தன்னை கைவிடாது என்ற நம்பிக்கை டாக்டர் ராமதாஸிடம் உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியைவிட பலமான இடதுசாரிகள் தன்னுடன் இருப்பதனால் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறலாம் என்ற முதல்வரின் மனக்கோட்டை சரிந்ததனால் தன்னால் தூக்கி எறியப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பிரசார பீரங்கியான காடுவெட்டி குருவை திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் சிறையில் வைத்துள்ளது. அவர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் காடுவெட்டி குருவை விடுதலை செய்ய வேண்டும். கூட்டணிக்காக காடுவெட்டி குரு விடுதலை செய்யப்பட்டால் காடுவெட்டி குருவின் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டு அரசியல் பழிவாங்கல் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும். காடுவெட்டி குரு சிறையில் இருப்பதையே பாட்டாளி மக்கள் கட்சி விரும்புகிறது. தேர்தல் சமயத்தில் காடுவெட்டி குரு சிறையில் இருந்தால் அனுதாப வாக்கு கிடைக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நினைக்கிறது.
மறுபுறம் இடதுசாரிகளுக்கு ஜெயலலிதா பகிரங்க அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்புக்கு ஒரு வாரம் கடந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்திருக்கிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேராவிட்டால், தாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவதற்கு தயாராக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியும் மதவாதக் கட்சியுமான பாரதீய ஜனதாக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என தமிழகத்தின் இடதுசாரித் தலைவர்களான தா.பாண்டியனும், வரதராஜனும் அறிவித்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகக் கிளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர விருப்பம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பாரதீய ஜனதாவைவிட அதிக செல்வாக்குள்ள கட்சியாக இடதுசாரிகள் விளங்குகின்றன. அவர்களது வாக்கு வங்கி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு உந்துசக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பியிருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி என்ன செய்வதென்று தெரியாது தவித்துக் கொண்டிருக்கிறது. விஜயகாந்துடன் இணைவதற்கு முயற்சி செய்யும் பாரதீய ஜனதாக் கட்சி, விஜயகாந்தை கைவிட்டால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையத் தயாராக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்தால் பாரதீய ஜனதாக் கட்சி தனித்து விடப்படும் அபாயம் உள்ளது.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் கூட்டணி சேர வேண்டும் என்று விஜயகாந்த் ஆசைப்படுகிறார். அவரின் முதலாவது தெரிவாக காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சி கைவிடும் பட்சத்தில் தனித்து நிற்கும் முடிவை விஜயகாந்த் அறிவிப்பார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மத்திய அரசாங்கத்தையும் தமிழக அரசாங்கத்தையும் ஆட்டிப் படைக்கிறது. மத்தி யிலும் தமிழகத்திலும் ஆட்சியமைத்திருக்கும் காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எப்படிச் சமாளிக்கப் போகின்றதெனத் தெரியவில்லை.
காங்கிரஸுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இருந்தாலும் அங்கு உள்ள கோஷ்டி மோதல்கள் அதன் வெற்றிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி, விஜயகாந்த், பாரதீய ஜனதாக் கட்சி என நான்கு முனைப் போட்டி ஏற்பட்டால் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பயனைடையும் வாய்ப்பு உள்ளது.
வர்மா;வீரகேசரி வாரவெளியீடு, 31.08.2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment