Sunday, September 7, 2008

மக்களின் மனதைக் கவர்வதற்கு சலுகை வழங்குகிறது தமிழக அரசு



அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினால் துவண்டிருக்கும் தமிழக மக்களின் வயிற்றில் பால் வார்த்தது போல் கிலோ அரிசி ஒரு ரூபா என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டாலும் மின் தடை என்ற அஸ்திரம் மக்களின் வாழ்வில் இருளை ஏற்படுத்தி உள்ளது.
மக்களின் வாழ்வில் இன்றியமையாத தொன்றாக மின்சாரம் உள்ளது. மின்கலப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின்தடை அமுலுக்கு வரப் போகிறது என எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்த போது அவை எல்லாம் பூச்சாண்டி எனப் பூசி மெழுகிய தமிழக அரசு >தற்போது மின் தடை பற்றி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் மின்சாரத்தை பாவிப்பதில் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்பட்டு வந்தன. சாதாரண விழாக்களிலும் பிரமாண்டமான மாநாடுகளிலும் தனது தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை வீண் விரயம் செய்வதில் ஆளும் கட்சிக்குப் போட்டியாக எதிர்க்கட்சிகள் செயற்பட்டன.தமிழக அரசினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட மின் தடையைக் காரணம் காட்டி தி.மு.க. வை ஆட்சியிலிருந்து அகற்ற பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி செய்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கம்யூனிஸ்ட்கள் கொண்டு வந்தால் அதனை ஆதரிப்போம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு நம்பிக்கை இல்லாத் தீர்மானம்தான் ஒரே வழி என்று டாக்டர் ராமதாஸ் நினைக்கிறார். அதேவேளை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை இன்னொரு கட்சி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தால் மத்திய அரசில் அதன் பங்களிப்பு இல்லாமல் போய்விடும் என்றும், சோனியா காந்தியின் நம்பிக்கை சிதறிவிடும் என்று டாக்டர் ராமதாஸ் பயப்படுகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தால் தி.மு.க. அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று கூறி தப்பித்து விடலாம் என்றும் டாக்டர் ராமதாஸ் நினைக்கிறார்.
தி.மு.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்ற ஒருவரி அறிவித்தலை கெட்டியாகப் பிடித்துள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். மின் வெட்டுப் பிரச்சினையை சட்ட மன்றத்தில் அவசரப் பிரச்சினையாகக் கொண்டு வந்து விவாதிப்பதற்கான நடவடிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்து வருகிறது. மின் வெட்டுப் பிரச்சினையை தமிழக சட்டமன்றத்தில் விவாதித்தால் திராவிட முன்னேற்றக் கழகம் தனிமைப்படுத்தப்பட்டு விடும்.
மின்சாரத்தின் தேவை முன்னை விட அதிகளவில் அதிகரித்துள்ளது. ஆனால் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் தமிழக அரசாங்கம் கூடிய அக்கறை காட்டவில்லை என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கும் கட்சிகளின் கருத்து.
மின் தடை காரணமாக தமிழக அரசாங்கத்தை விமர்சிக்கும் சகல அரசியல் தலைவர்களும் தமது கட்சியின் மாநாடுகளின் போது தேவைக்கு அதிகமாக மின்சாரம் பாவிக்கப்பட்டபோது அதனைத் தட்டிக் கேட்கவில்லை.
மின் ஒளியில் ஜொலித்த பிரமாண்டமான தமது உருவங்களைப் பார்த்து ரசித்த தலைவர்கள் அனைவரும் இன்று மின் தடைக்கு எதிராகப் போராடுகின்றனர். இதேவேளை அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா என்ற திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. ஏழைகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய இந்த அறிவிப்பு மின் தடையால் இருட்டடிக்கப்பட்டுள்ளது.
சரிந்து கொண்டிருக்கும் தனது செல்வாக்கை உயர்த்துவதற்கு தி.மு.க. அரசாங்கம் கடுமையாகப்போராடி வருகிறது. அண்ணா குடும்பத்துக்கு 40 இலட்சம் நிதி உதவி, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, சத்துணவு, ஊழியர்களுக்கு சலுகை என தமிழக அரசாங்கம் அவ்வப்போது அமுல்படுத்தும் நல்ல பல செயற்றிட்டங்களை மின்தடை கபளீகரம் செய்துவிட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலவச அறிவிப்புகளைப் போற்றிப் புகழ்ந்த பாட்டாளி மக்கள் கட்சி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா என்ற திட்டத்தை மோசமாக விமர்சித்துள்ளது. தேர்தல் சமயத்தில் தனது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதனை போற்றிப் புகழ்ந்த பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்ற பின்னர் இலவசத் திட்டங்களை விமர்சனம் செய்து வந்தது.
ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாவாக விற்பனை செய்வதனால் 400 கோடி ரூபா மேலதிகமாக செலவாக உள்ளது. இதற்கான நிதி எங்கிருந்து ஒதுக்கப்படுகிறது என்று தமிழக அரசாங்கம் தெரிவிக்கவில்லை. புதிய வரிகளின் மூலமும் ஒரு சில பொருட்களின் விலை உயர்வின் மூலமும் 400கோடி ரூபா வருமானமாகப் பெறப்படும் எனக் கருதப்படுகிறது.
எவ்வாறெனினும் மின் விநியோகம் சீராகும் வரை தமிழக அரசாங்கத்தின் இலவச திட்டங்கள் மக்களின் மனதைக் கவரப் போவதில்லை.

வர்மா; வீரகேசரி வார வெளியீடு, 07.09.2008

No comments: