Friday, December 10, 2010

பீகாரில் காங்கிரஸ் தோற்றதால்உஷாராகிவிட்டார் கருணாநிதி

பீகார் சட்ட சபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததனால் தமிழக முதல்வர் கருணாநிதி மிகுந்த உற்சாகமடைந்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையேயான கூட்டணி தொடரும் என்று திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் சிலர் இந்தக் கூட்டணி தொடரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
வட மாநில சட்ட சபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதே போன்று தமிழகத்திலும் தனியாகப் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது ராகுல் காந்தியின் கனவு. ராகுல் காந்தியின் கனவை நிஜமாக்குவதற்கான பிரசாரங்களில் இளங்கோவனும், கார்த்திக் சிதம்பரமும் மும்முரமாகச் செயற்படுகின்றனர். இவர்களுடன் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜும் கைகோர்த்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா ஆகியோருடன் தமிழக முதல்வர் கருணாநிதி மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து வரும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் பல வகையிலும் உதவி புரிந்து வருகின்றனர். மன்மோகன், சோனியா காந்தி, கருணாநிதி ஆகியோருக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தாலும் தேர்தலின் போது கூட்டணி சேர்வதா, தனித்துப் போட்டியிடுவதா என்பதை ராகுல் காந்திதான் தீர்மானிக்கின்றார். ராகுல் காந்தியின் விருப்பப்படியே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழகத்துக்கு விஜயம் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் தமிழக காங்கிரஸ் தலைமையகத்துக்குச் செல்லாது விட்டாலும் முதல்வர் கருணாநிதியை சந்திக்காது திரும்புவதில்லை. தமிழகத்துக்குப் பலமுறை விஜயம் செய்த ராகுல்காந்தி இதற்கு விதிவிலக்காக முதல்வர் கருணாநிதியையோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களையோ சந்திக்கவில்லை. ராகுல் காந்தியின் திட்டப்படி காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் அந்த எதிர்பார்ப்பு சிதறிவிட்டது.
திராவிட முன்னேற்றக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி தனித்துப் போட்டியிடும் அல்லது விஜயகாந்துடன் இணைந்து தமிழகத் தேர்தலை சந்திக்கும் என்ற கருத்து பலரிடமிருந்து வெளிவந்தது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி தன்னுடன் இணையும் என்று ஜெயலலிதா எதிர்பார்த்தார். திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸைக் கைவிட்டால் எந்தவித நிபந்தனையுமின்றி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதாகக் கூறி எதிர்பார்ப்பை அதிகரித்தார் ஜெயலலிதா.



திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டால் நஷ்டமடையப் போவது காங்கிரஸ் கட்சிதான் என்பதை கருணாநிதி வெளிப்படையாகக் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கூட்டணியில் இருந்து வெளியேறிய வைகோ, ஜெயலலிதாவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்துப் படுதோல்வி அடைந்தார். ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் வைகோ உள்ளார். ஆனால் அவரால் முன்னைய நாட்களைப் போன்று உரத்துக் குரல் கொடுக்க முடியாத நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கோபித்துக் கொண்டு கூட்டணியில் இருந்து பிரிந்த இடதுசாரிகள் ஜெயலலிதாவுடன் கைகோர்த்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து படுதோல்வி அடைந்தனர். தோல்வியால் துவண்டுவிடாத இடதுசாரிகள் வழமை போல் அறிக்கைகளை வெளியிட்டு சவால் விடுத்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி இல்லையென்றால் தமிழகத்தை யாரும் ஆட்சி செய்ய முடியாது என்று இறுமாப்புடன் பேசிய டாக்டர் ராமதாஸ் ஜெயலலிதாவுடன் இணைந்த பின்னர் அதுதான் வெற்றிக் கூட்டணி என்று உறுமினார்.
வைகோ, இடதுசாரிகள், டாக்டர் ராமதாஸ் ஆகியோருடன் இணைந்ததனால் ஜெயலலிதா இலாபமடைந்தார். வைகோ இடதுசாரிகள், டாக்டர் ராமதாஸ் ஆகியோர் உள்ளதையும் இழந்தனர். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் செல்வாக்கு மிக்க கட்சிகளாக உள்ளன. இந்த இரண்டு கட்சிகளுடனும் இணைந்து போட்டியிட்டால்தான் தமிழகத்தில் உள்ள ஏனைய கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை வெளிப்படுத்தியது.
அரசியல் கட்சித் தலைவர்களின் முடிவு வாக்காளர்களின் முடிவினால் நிராகரிக்கப்பட்ட சம்பவங்கள் பல முறை நடந்துள்ளன. சட்டம், ஒழுங்கு, அன்பளிப்பு, ஊழல் என்பனவற்றை எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டுப் பிரசாரம் செய்தாலும் பல தேர்தல்களில் அவற்றை மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சி, மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், மக்கள் அனுபவிக்கும் இலவசங்கள் என்பனவற்றைப் பட்டியலிட்டு தமிழக சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக உள்ளது. ஸ்பெக்ரம் ஊழலைப் பற்றி உரத்துக் கூறி வரும் எதிர்க்கட்சிகள் தேர்தல் சமயத்தில் ஸ்பெக்ரம் பிரச்சினையையே முக்கிய கருப்பொருளாகப் பிரசாரம் செய்யும்.
அரசியல்வாதிகளின் ஊழல்களை விசாரிப்பதற்காக அவ்வப்போது விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்களின் அறிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. ஊழலை வெளிப்படுத்துவதற்காக விசாரணை அமைத்த கட்சியே ஊழல் செய்த கட்சியுடன் கைகோர்த்து தேர்தலைச் சந்தித்த அவலமும் அரங்கேறியுள்ளன. நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மேன்முறையீடு செய்து விட்டு சுகபோகங்களை அனுபவிக்கின்றனர். கட்சித் தலைமை செய்யும் குற்றங்களை விசுவாசம் மிக்க தொண்டர்கள் மறந்து விடுவதே வழமையானது.
ஸ்பெக்ரம் ஊழல் விவகாரத்தினால் ராஜா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தால் மட்டும் போதாது. அவரைக் கட்சியில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் முதல்வர் கருணாநிதிக்கு எச்சரிக்கை கலந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். ஸ்பெக்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பது பற்றி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்கு தெரியும்.
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. பீகாரில் தோல்வி அடைந்தது போல் தமிழகத்திலும் அடி வாங்குவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்வதற்கு சோனியாகாந்தி தயாராக இல்லை. விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து பரீட்சார்த்தம் செய்ய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விரும்பவில்லை. கூட்டணி சேர்ந்தால்தான் தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதை காலம் கடந்து விஜயகாந்த் உணர்ந்து உள்ளார். காங்கிரஸ் கட்சியையே அவர் பெரிதும் நம்பி இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட காங்கிரஸ் கட்சி இப்போதைக்குத் தயாராக இல்லை. ஆகையினால் ஜெயலலிதாவின் பக்கம் சாய்வதற்கு விஜயகாந்த் தயாராகி விட்டார் போல் தெரிகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி உடைந்தால் அது பாரதீய ஜனதாக் கட்சிக்குச் சாதகமாகிவிடும். தமிழகத்தில் காணாமல் போன பாரதீய ஜனதாக் கட்சி மீண்டும் வலுப் பெற்றுவிடும். மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு அது நெருக்குதலைக் கொடுக்கும்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 05/12/10

No comments: