Tuesday, December 28, 2010

தி.மு.க.வைக் கைவிடதயாராகிறது காங்கிரஸ்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கிறார் ராகுல் காந்தி. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்பவில்லை. தமிழக அரசின் இலவசத் திட்டங்கள், சலுகைகள் என்பன மக்களின் மனதில் நன்கு ஊன்றிப் போயுள்ளது. ஆகையினால் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெளியேறினால் பாதிப்பு ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்தன என்ற முதல்வர் கருணாநிதியின் புள்ளி விபரம் அவர்களை சிந்திக்கத் தூண்டியது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தை ஸ்பெக்ரம் விவகாரம் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் என்ற பெருமை ஸ்பெக்ரம் விவகாரத்துக்குக் கிடைத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. ஸ்பெக்ரம் விவகாரத்தில் ராசா தப்புச் செய்யவில்லை என்று முதல்வர் கருணாநிதி அடித்துக் கூறுகிறார். ஸ்பெக்ரம் விவகாரத்தினால் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவான தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறுகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான பனிப்போர் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படாமையினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது காங்கிரஸ் தலைவர்கள் பலர் மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர். அவர்கள் சீறும் போது காங்கிரஸ் தலைமை அவர்களை அடக்கி வைத்திருந்தது காங்கிரஸ் தலைமை. இன்று தலைமையைத் தட்டிக் கேட்கும் துணிவு தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு பிறந்துள்ளது.
காங்கிரஸ் தலைமைப் பீடத்திலும் தமிழகக் காங்கிரஸிலும் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களும் உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள் தமது கருத்துக்களை பகிரங்கமாக வெளிவிடுவதில்லை. இளங்கோவன் போன்ற ஒரு சிலர் மட்டும் அவ்வப் போது துணிவுடன் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்தனர். ஸ்பெக்ரம் விவகாரத்தினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுத் தலைவர்கள் வெளிப்படையாகத் தமது கருத்துக்களைக் கூறத் தொடங்கி விட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகம் வாரி வழங்கிய இலவசங்களும், சலுகைகளும் ஸ்பெக்ரம் என்ற மிகப் பிரமாண்டமான ஊழலின் முன்னால் அடிபட்டுப் போகும் நிலை உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையின் போது திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து விடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு எதிரான கருத்துக்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் பகிரங்கமாகக் கூறவில்லை. ராசாவைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. ராசாவைக் காப்பாற்றுவதற்காக தலித் என்ற ஆயுதத்தை முதல்வர் கருணாநிதி கையில் எடுத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகம் பலமிழந்து விடும். காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கு ஜெயலலிதா மிகவும் ஆர்வமாக உள்ளார். ஜெயலலிதாவின் மீது மதிப்பு வைத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்களும் அதற்கு முழு முயற்சி செய்து வருகின்றனர்.
ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் போன்றவர்கள் பகிரங்கமாக இதனைத் தெரிவித்துவருகின்றனர் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறும் கட்சிகள் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறும் கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதும் வாடிக்கையான சம்பவம். இந்த வழமையை மாற்ற வேண்டும் என்று ராகுல்காந்தி விரும்புகிறார். காங்கிரஸின் முதுகில் ஏனைய கட்சிகள் தொடர்ந்தும் சவாரி செய்ய இடமளிக்கக் கூடாது. காங்கிரஸுடன் மற்றக் கட்சிகள் சேர வேண்டும் என்பதே ராகுலின் குறிக்கோள்.
ராகுல்காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு ஸ்பெக்ரம் விவகாரம் ஒரு காரணியாக அமைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் இணைந்தால் காங்கிரஸ் கட்சியின் தனித்துவம் இல்லாமல் போய் விடும். காங்கிரஸ் கட்சி மதிப்புடனும் மரியாதையுடனும் இருக்க வேண்டுமானால் காங்கிரஸின் தலைமையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளில் உள்ள பலர்மீது. ஊழல் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு சிலர் குற்றவாளிகளாகத் தண்டனை பெற்றுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஊழல் கட்சி தான் என்பதை நிரூபிக்கும். ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் பதவி வகிக்க முடியாது. ஊழலை ஊக்குவிப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஒரு போதும் இடமளிக்காது என்று காங்கிரஸ் மாநாட்டில் சோனியா காந்தி கூறியுள்ளார். சோனியாவின் இந்தக் கூற்று திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எச்சரிக்கை மணியாக அடிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகக், கூட்டணியில் இருந்து வெளியேறினால் விஜயகாந்துடன் கூட்டணி சேரும் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் செல்வாக்கு மிக்க ஊழல் இல்லாத கட்சி தலைவராக விஜயகாந்த் உள்ளார் என்ற கருத்து உள்ளது.
இளைஞர் காங்கிரஸில் உள்ளவர்கள் அடுத்த தமிழக முதல்வர் என்று இளைஞர்களை உசுப்பி விட்டுள்ளார் ராகுல் காந்தி. தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் பல பிரிவுகள் உள்ளன. வாசன், இளங்கோவன், சிதம்பரம் போன்ற தலைவர்களின் பின்னால் பலர் அணி வகுத்து உள்ளனர். ஒரு தலைமையின் கீழ் தமிழக காங்கிரஸ் செயற்பட வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். ராகுல் காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற தமிழக இளைஞர் காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆனால் அதற்குள்ளும் சில கோஷ்டிப் பூசல்கள் உள்ளன.
ஸ்பெக்ரம் விவகாரம் ஜெயலலிதாவை உற்சாகமடைய வைத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் முக்கிய எதிர்பார்ப்பு. காங்கிரஸ் கட்சியின் வெளியேற்றம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதிப் பலத்தைக் குறைத்து விடும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது கடும் கோபத்தில் இருக்கும் விஜய் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டப் போவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு விஜய் விரும்பினார். அவரைக் கட்சியில் சேர்ப்பதற்கான சமிக்ஞையை காங்கிரஸ் வெளியிடாததால் அரசியல் ஆர்வத்தை அடக்கி வைத்திருந்தார். இப்போது விஜய் அரசியலில் இறங்கும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.
விஜயின் வரவை ஜெயலலிதா எதிர்பார்க்கிறார். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் போக்குக் காட்டி விட்டு காங்கிரஸ் கட்சியில் விஜய் சேரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. திராவிடக் கட்சிகளில் இணைந்தால் ஊழலைப் பற்றிப் பிரசாரம் செய்ய முடியாது. ஸ்பெக்ரமின் முன்னால் போஸ் ஊழல் காணாமல் போய் விட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான சக்திகள் அனைத்தும் பலமடைந்து வரும் வேளையில் ராசாவுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. ராசாவை கட்சியில் இருந்து நீக்கினால் துணிவுடன் பிரசாரம் செய்யலாம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் ராசாவை பலிக்கடா ஆக்குவதிலேயே தங்கியுள்ளது.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 26/12/10

No comments: