Friday, December 24, 2010

இந்திய அரசியலை அதிரவைக்கும் ஸ்பெக்ரம் தமிழக சினிமாவைஆட்டிப்படைக்கும் அரசியல்


தமிழக அரசியலில் இருந்து தமிழ் சினிமாவை பிரித்துப் பார்க்க முடியாது. அரசியல் கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்துக்கும் அரசியலில் சேரப் போவ தாக அறிவித்த விஜய்க்கும் தொடர்ந் தும் நெருக்கடிகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. ஆர். ராசாவின் பிரச்சினையின் சூடு ஆறுவ தற்கு முன்னர் சீமானின் விடுதலை தமிழக அரசியலை இன்னும் சூடாக்கியுள்ளது.
எம்.ஜி.ஆர்., ரஜினி ஆகியோருக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் அதிக வசூலை பெற்ற விஜயின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவதற்கு தமிழக அரசியல் தான் காரணம் என்று கருத்து நிலவுகிறது. நடிகர் விஜய் காங்கிரஸில் சேரப் போகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கே ராகுலைச் சந்திப்பதற்கு இலகுவில் அனுமதி வழங்கப் படுவதில்லை. விஜய் ராகுலைச் சந்தித்தது அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. விஜயின் எதிர்பார்ப்பு நிறைவேறாததனால் அரசியல் பிரவேசம் தடைப்பட்டது.
அரசியல் கட்சி ஆரம் பிக்க வேண்டும் என்று எண்ணம் விஜ யிடம் இருக்க வில்லை. ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து அரசியல் நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. இதனை அறிய அவரது ரசிகர்கள் தமது தலைவரை முதல்வராக்கப் போவதாக அறிவித்தார்கள். முதல்வர் கனவில் அரசியலில் இறங்கிய விஜயகாந்த் இன்னமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வெற்றி வாய்ப்பை மட்டும் தடுக்கிறது விஜயகாந்தின் கட்சி. விஜயகாந்த் எனும் நடிகர் வெற்றி பெற்றாரே தவிர விஜயகாந்தின் செல்வாக்கினால் அவரது கட்சியில் போட்டியிட்ட யாரும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தான் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய தகவல் வெளியானது.
விஜயின் தகப்பன் எஸ்.ஏ. சந்திரசேகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர அபிமானி தனது மகனை முதல்வர் அரவணைப்பார் என்று எதிர்பார்த்தார். எம்.ஜி.ஆர். வைகோ ஆகியோரின் வெளியேற்றத்தின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் பட்ட அவஸ்தைகளை மனதில் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் விஜயை இணைப்பதற்கு தயக்கம் காட்டியது. விஜய் நடித்த படங்களை வெளியிடுவதற்கு தமிழக தியேட்டர் உரிமையாளர் கள் போட்டி போடுவார்கள். கூடுதல் பணம் கொடுத்து விநி யோக உரிமையை வாங்குவார்கள். விஜய் நடித்த "காவலன்'படத்தை வெளியிடு வதற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இந்த மாதம் படம் வெளியிட வேண்டிய காவலன் படம் அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஏ. சந்திரசேகரன், ஜெயலலிதா ஆகியோரின் சந்திப்பு பற்றிய உண்மையான தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையுமாறு விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியில் இணைவதற்கு முன்னர் தனது ரசிகர்களின் பலத்தைக் காட்டுவதற்கு பிரமாண்டமான மாநாடு ஒன்றை நடத்தும் எண்ணம் விஜயிடம் உள்ளது.
விஜயகாந்தின் மைத்துனர் தயாரித்து விஜய்காந்த் இயக்கி நடித்த விருதகிரி என்ற படத்தைத் திரையிடுவதற்கு தமிழகத்தில நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லை. தமிழக அரசியல் தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் ஆளும் கட்சியை விமர்சிப்பவர்களின் படங்கள் வெளியிட முடியாத நிலை உள்ளது. எதிர்ப்பை மீறி வெளியிட்டாலும் வெற்றி பெற முடியாதுள்ளது.
ராசாவை சுற்றி பின்னப்பட்ட ஸ்பெக்ரம் என்னும் வலை டில்லியையும் தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது அரசாங்கம் திணறுகிறது. "ஸ்பெக்ரம்' விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் அலுவலகங் களிலும் வீடுகளிலும் திடீர் திடீரென சோதனைகள் நடைபெறுகின்றது. திடீர் சோதனைகளின் போது முக்கியமான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகினவே தவிர அவை பற்றிய விபரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
"ஸ்பெக்ரம்' விவகாரத்தினால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சோனியாவின் ஒப்புதல் இல்லாமல் சோதனைகள் நடைபெற வாய்ப்பு இல்லை என்று திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. "ஸ்பெக்ரம்' ஒதுக்கீடு முறைப்படி தான் நடைபெற்றது என்பதில் மத்திய அரசு உறுதியாய் உள்ளது. "ஸ்பெக்ரம்' ஒதுக்கீட்டி"ல் ஊழல் நடைபெற்றிருந்தால் அது அரசாங்கத் துக்குத்தான் அவமானம் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. ராசாவின் ராஜினாமாவின் மூலம் விவகாரத்தை அடக்கி விடலாம் என்ற எண்ணம் நிறைவேறவில்லை.
"ஸ்பெக்ரம்' விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பு இல்லை. திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர் தான் இதனைச் செய்தார் என்ற கருத்து காங்கிரஸ் தலைவர்களிடம் உள்ளது . "ஸ்பெக்ரம்' ஒதுக்கீட்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக் கும் தொடர்பு உள்ளது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
ராசாவைக் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஸ்டாலின், தயாநிதி மாறன், அழகிரி ஆகிய மூவரும் ஒன்றாகச் குரல் கொடுக்கின்றனர். எதிரும் புதிருமாக இருக் கும் மூவரும் ராசாவின் விவகாரத்தில் ஒற்றுமையாக உள்ளனர். ராசாவை விட கட்சி பெரிது என்று மூவரும் ஒருமித்துக் குரல் கொடுக்கின்றனர். ராசா தப்பிச் செல்லவில்லை என்று அடித்துக் கூறிய முதல்வர் கருணாநிதி என்ன செய்வது என்று தெரியாது தடுமாறுகின்றார்.
அமைச்சர் பூங்கோதையும் நீரா ராடியாவும் பேசியதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் வெளியாகி திராவிட முன்னேற்றக் கழகத்தை இன்னமும் சூடாக்கியுள்ளது. முதல்வரின் மனைவி தயாளு அம்மாளுக்கு மிகவும் நெருக்கமானவர் அமைச்சர் பூங்கோதை. இவ் விவகாரம் தயாளு அம்மாளுக்கும் நெருக்கடியைக் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைத் தமிழருக்கு ஆதரவான சீமானின் பேச்சு அவரை சிறைக்கு அனுப்பியது அவருக்கு விதிக்கப்பட்ட தடுப்புக் காவல் சட்டத்துக்கு முரணானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறையிலிருந்து வெளிவந்த சீமான் முதல்வர் கருணாநிதிக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் சீமான். இந்த சவால் எதிர்க்கட்சிகளை மகிழச்சியில் ஆழ்த்தியுளளது. கருணாநிதிக்கு எதிராக சீமான் பொது வேட்பாளராக போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தங்களால் முடியாததை சீமானால் செய்ய முடியும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. தமிழக சட்ட சபைத் தேர்தலில் தோல்வி அடையாத தலைவர் என்ற பெருமையுடன் இருக்கும் கருணாநிதியை வீழ்த்த நல்லதொரு அஸ்திரம் கிடைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 19/12/10

No comments: