Tuesday, December 14, 2010

ராசாவைக் கைவிட விரும்பாத கருணாநிதிsகூட்டணியை உதறமுடியாது தவிக்கும் காங்கிரஸ்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னால் அமைச்சர் ராசாவின் டெல்லி வீட்டிலும் அலுவலகத்திலும் சி. பி. ஐ. நடத்திய அதிரடிச் சோதனையின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல் விழலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2ஜி அலைவரிசை ஒதுக்கிய விவகாரத்தில் அன்றைய தொலைத் தொடர்புகள் அமைச்சர் ராசாவின் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஊழல் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாயின. ஸ்பெக்ரம் ஊழல் விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்ற போது அமைச்சர் ராசா இராஜினõமாச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ராசாவின் இராஜினாமாவின் பின்னர் பிரச்சினை ஓய்ந்து விடும் என்று காங்கிரஸ் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்பார்த்தன. எதிர்க்கட்சிகளின் விடாப்பிடியால் ராசா மீதான ஊழல் விவகாரத்தை சமாளிக்க முடியாது காங்கிரஸும், திராவிட முன்னேற்றக் கழகமும் தடுமாறுகின்றன. எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற முடக்கம் காங்கிரஸ் கட்சியை நிலை தடுமாற வைத்துள்ளது. ராசாவின் பிரச்சினையால் காங்கிரஸ் கட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவு பாதிப்படையுமோ என்று இரண்டு கட்சிகளும் சிந்திக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் அதனை வெளியே காட்டாது இரண்டு கட்சிகளும் அடக்கி வாசிக்கின்றன.
ஸ்பெக்ரம் அலை ஒதுக்கீட்டின் மூலம் 1.76 இலட்சம் கோடி ஊழல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஒரு ஊழல் நடைபெறவேயில்லை என்று அடித்துக் கூறிய முதல்வர் கருணாநிதி தனி ஒருவரால் எப்படி இவ்வளவு ஊழல் செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். ராசா ஊழல் செய்யவில்லை என்று முதல்வர் கூறுகிறாரா அல்லது ஊழலில் மற்றவர்களுக்கும் பங்கு இருப்பதாகக் கூறுகின்றாரா என்று தெரியவில்லை.
ஸ்பெக்ரம் ஒதுக்கீட்டில் முக்கிய தரகராகச் செயற்பட்டு வந்த நீரா ராடியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பல உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஸ்பெக்ரம் ஒதுக்கீடு முறைப்படி இல்லாமல் தரகர்கள் மூலம் நடைபெற்றது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஸ்பெக்ரம் விவகாரத்தில் ஊடகங்கள் பல தகவல்களை பகிரங்கப்படுத்தின. ஊடகங்களில் வெளியான பல தகவல்கள் முக்கியஸ்தர்கள் சிலரை அசௌகரியப்படுத்தியுள்ளன. பிரபல தொழிலதிபர் ரத்தன்டாடாவுக்கும் நீரா ராடியாவுக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் தனது தனி மனித உரிமையை மீறியதாக நீதிமன்றத்தை நாடியுள்ளார் டாடா.
ஸ்பெக்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற ரகசிய பேரங்கள் பகிரங்கமானதால் அதன் பின்னணியில் உள்ளவர்கள் கலங்கிப் போயுள்ளனர். தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாள், மகள் கனிமொழி ஆகியோரும் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் கதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நீரா ராடியாவுடன் உரையாடும் குரல் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோருடையது தானா என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவர்களிடம் விசாரணை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியல்வாதிகளில் பலர் ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றனர். சிலர் குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்யப்பட்டனர். தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் எதிரியான ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை விதிக்கப்பட்டார். கருணாநிதி குடும்பத்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. தயாளு அம்மாளும், கனிமொழியும் விசாரிக்கப்பட்டால் ஜெயலலிதாவுக்கு அது சாதகமாகி விடும். ஜெயலலிதாவின் ஊழல் பற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் வாய் திறக்க முடியாத நிலை தோன்றி விடும்.
தமிழகத்தின் கோடீஸ்வரர்களில் கருணாநிதியும் ஒருவர் என்ற குற்றச்சாட்டு அவரது அரசியல் எதிரிகளினால் சுமத்தப்பட்டது. கருணாநிதி குடும்பத்தின் செல்வச் செழிப்பு அக்குற்றச்சாட்டு உண்மையில் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. தனது சொத்து விபரத்தை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டன தலைவரைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களும் ஏனைய தலைவர்களும் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.
நடிகர் விஜயை அரசியல் நீரோட்டத்தில் தள்ளி விடுவதற்காக முயற்சிகள் ஒருபுறம் நடைபெறுகின்றன. ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்தார்.கட்சி ஒன்று ஆரம்பிக்கப் போகிறார். ஜெயலலிதாவுடன் இணையப் போகிறார் என்ற செய்தி கடந்த வாரம் முழுவதும் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக வெளியாகின. திருச்சி மாநாட்டில் விஜய், அஜித் ஆகியோருக்கு ஆதரவாக ஜெயலலிதா பேசியதால் இந்த ஊகம் கிளம்பியுள்ளது.
விஜய் அண்மையில் நடித்து வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியடைந்தன. விஜய் நடித்து வெளியான தோல்விப் படங்களை விநியோகம் செய்தது சன்பிக்ஸர்ஸ், சன்பிக்ஸர்ஸின் தயாரிப்பில் விஜய் நடித்து வெளியான படமும் படு தோல்வி அடைந்தது. தோல்வியடைந்த கவலையில் இருந்து மீள்வதற்காக விஜய் மிகுந்த பிரயத்தனப்படுகிறார். அவரை அரசியல் குளத்தில் விழுத்துவதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர். விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களில் சிலர் விரும்புகின்றனர். அவர் செய்யும் நல்ல காரியங்களின் பின்னணியில் அரசியல் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் இன்னமும் உரிய இலக்கை அடையவில்லை. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக விஜயகாந்த் மிளிர்கிறார். தனித்து நின்று அவரால் வெற்றி பெற முடியவில்லை. சட்ட சபைத் தேர்தலில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். அவருடைய செல்வாக்கை நம்பி தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் கட்டுப்பணத்தையும் இழந்தனர்.
விஜயகாந்தின் அரசியல் தோல்வி சினிமா நட்சத்திரங்களின் அரசியல் பிரவேசத்துக்கு முக்கிய பாடமாக அமைய வேண்டும். சினிமா நடிகர்களின் அரசியல் தோல்வியைக் கண்ட பின்னராவது விஜய் ரசிகர்கள் உணர்ந்திருக்க வேண்டும். அதனைத் தெரிந்து கொண்டும் தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய் என்று அவரது ரசிகர்கள் கோஷமிடுகின்றனர். விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகச் கட்டுரைகள் பிரசுரமா கின்றன.
அரசியல் ஊகங்களுக்கு முன்னர் புள்ளி வைக்க விஜய் விரும்பவில்லை. தன்னைப் பற்றி வெளியாகும் செய்திகளை உன்னிப்பாக அவதானித்து வரும் விஜய் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. விஜய் அரசியலில் குதித்தால் தமிழக அரசியலில் எதிர்பார்க்கும் பாதிப்பு எதுவும் தோன்றப் போவதில்லை.
தமிழகத்தில் நடைபெற்ற கருத்துக் கணிப்புகள் நடிகர் விஜய்க்கு அதிகம் செல்வாக்கு இருப்பதை வெளிக்காட்டியுள்ளன. ரஜினியை விட அதிக செல்வாக்குமிக்கவர் விஜய் என்பது கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. அரசியல்வாதி விஜய்க்கு செல்வாக்கு இருக்கிறதா என்ற கருத்துக் கணிப்பு நடைபெறவில்லை. தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி விட்டன. விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாரா இல்லையா என்ற விபரம் தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கும் போது தெரிந்து விடும்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு12/12/10

No comments: