Wednesday, November 18, 2009
திருநாவுக்கரசரின் வெளியேற்றத்தால்பலமிழந்தது தமிழக பா.ஜ.க.
தமிழக அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை களைவதற்கான நடவடிக்கையை முதல்வர் கருணாநிதி ஆரம்பித்துள்ளார். சொத்துச் சேர்ப்பதுதான் அரசியல்வாதிகளின் பிரதான நோக்கம் என்ற பரவலான கருத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தீர்மானித்துள்ளார்.
அமைச்சர்கள் தமது பெயரிலும் தமக்கு வேண்டியவர்களின் பெயரிலும் அதிகளவான சொத்துக்களைச் சேர்த்துள்ளார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டு. அமைச்சர் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி பெறுமதியான சொத்துக்களை குறைந்த விலைக்கு சில அமைச்சர்கள் சுருட்டியுள்ளனர். தற்போது அவர்களின் பக்கம் தமிழக முதல்வரின் பார்வை திரும்பியுள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமான சொத்துச் சேர்த்ததாக ஜெயலலிதாவின் மீது திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் வழக்குத் தாக்கல் செய்தது. ஆனால், திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் சிலர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, குறைந்த விலையில் பெறுமதிமிக்க காணிகளை வாங்கியுள்ளனர்.
செல்வாக்கும், பதவியும் அவர்களின் செயலைத் தடுக்கவில்லை. பொது மக்கள் மத்தியில் அவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இந்த விசயங்கள் தமிழக உளவுத்துறையின் மூலம் முதல்வரின் கவனத்துக்குச் சென்றதும் முதல்வர் கருணாநிதி எடுத்த அதிரடி முடிவினால் தவறான வழியில் சொத்துச் சேர்த்த அமைச்சர்கள் அதனைத் திரும்ப ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மிக முக்கிய அமைச்சர் ஒருவரை அழைத்த முதல்வர் கருணாநிதி குறைந்த விலையில் வாங்கிய இடத்தை உரியவரிடம் திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவுக்கிணங்க அவர் ஒப்படைத்ததை கேள்விப்பட்டவர்கள் அதேபோன்று தாம் வாங்கிய இடங்களை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் இந்த அதிரடி நடவடிக்கை அவர் மீது நல்ல பெயரை உருவாக்கி உள்ளது. ஆளும் கட்சி அரசியல்வாதிகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி எதுவும் செய்ய முடியாது என்ற மன நிலை மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
ஒரு ரூபாவுக்கு ஒருபடி அரிசி, இலவச தொலைக்காட்சி, இலவச காஸ் இணைப்பு ஆகிய திட்டங்கள் போன்று கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பலர் உயிர் பிழைத்துள்ளனர். பலரின் நோய் தீர்க்கப்பட்டுள்ளது. தரமான மருத்துவ வசதிகளைப் பெற முடியாதவர்கள் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குச் செலுத்துவதை அறிந்த ஜெயலலிதா அதேபோன்ற ஒரு திட்டத்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்மூலம் நடைமுறைப்படுத்த விரும்புவதாக செய்தி ஒன்று கசிந்துள்ளது. மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்கு இது போன்ற செயற்பாடுகள் தேவை என்பதை ஜெயலலிதா உணர்ந்துள்ளார் போல் தெரிகிறது.
ஹெலி விபத்தில் பலியான ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு புகழையும் மதிப்பையும் பெற்றுக் கொடுத்தது இது போன்ற ஒரு காப்பீட்டுத் திட்டம் தான். அவர் இறந்ததும் அதிர்ச்சியில் பலர் இறந்தனர். கவலையில் பலர் தற்கொலை செய்தனர். அதே நடைமுறையைத்தான் தமிழக முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தி யுள்ளார்.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் தனது அரசியல் வாரிசான ஸ்டாலினுக்குப் போய் சேரும் என்ற நம்பிக்கை முதல்வர் கருணாநிதியிடம் உள்ளது. ஸ்டாலினின் அரசியலை ஸ்திரப்படுத்துவதற்காக அமைச்சர் துரைமுருகனை ஓரம் கட்டியதைப்போல் அமைச்சர் ஆற்காடு வீராசாமியையும் கட்சி மேலிடம் ஓரம் கட்டத் தொடங்கி உள்ளது. மின்துறையில் ஏற்பட்ட நெருக்கடியில் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. அடிக்கடி ஏற்பட்ட மின் தடையினால் அரசுக்கு பலத்த நஷ்டம். இதனை ஒழுங்குபடுத்தத் தவறியதாக ஆற்காட்டார் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.
முதல்வர் கருணாநிதியின் கீழ் பணியாற்றியவர்கள் ஸ்டாலினின் கீழ் பணியாற்றும்போது சில சிக்கல்கள் ஏற்படலாம். அதனைத் தடுப்பதற்கும் ஸ்டாலினின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுக்கு சில பதவிகளை வழங்கவும் வேண்டிய சூழ்நிலை கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். எம்.ஜி. ஆருடன் இணைந்து தமிழக அரசியலில் ஒரு காலத்தில் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட திருநாவுக்கரசர் ஜெயலலிதாவின் எழுச்சியினால் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். அரசியலில் செல்வாக்குள்ள திருநாவுக்கரசர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி பாரதீய ஜனதாக் கட்சியில் இணைந்தார்.
அரசியலில் அனுபவமும் திறமையும் உள்ள திருநாவுக்கரசருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் தேசியச் செயலர் பதவியும் கொடுத்து பாரதீய ஜனதாக் கட்சி அழகுபார்த்தது. அத்வானி, வாஜ்பாய் ஆகியவர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியில் அத்வானியின் கை ஓங்கியதால் வாஜ்பாயின் ஆதரவாளரான திருநாவுக்கரசர் ஓரம் கட்டப்பட்டார். கட்சியிலுள்ள தனது செல்வாக்கு குறைவதை அறிந்த திருநாவுக்கரசர் கட்சியுடனான தொடர்புகளை குறைத்துக் கொண்டார்.
தமிழகத்தில் மிக மோசமான நிலையில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சியை வளர்ப்பதற்கு தலைவர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. திருநாவுக்கரசரின் வெளியேற்றத்தால் தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சியின் நிலை பரிதாபமாக உள்ளது.
சிதம்பரம், வாசன், தங்கபாலு, இளங்கோவன் போன்ற தலைவர்களின் கட்டுப்பாட்டில் காங்கிரஸ் கட்சி உள்ளது. புதிதாக களம் புகுந்த திருநாவுக்கரசரை ஆதரிக்கவும் அங்கு சிலர் தயாராக உள்ளனர். திருநாவுக்கரசரின் வருகையால் தமிழக காங்கிரஸின் செல்வாக்கு உயர்வதற்கு சந்தர்ப்பம் இல்லை. திருநாவுக்கரசர் அரசியலில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 15/11/09
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment