Monday, November 2, 2009

அடக்க முயல்கிறது காங்கிரஸ்அடங்க மறுக்கிறது தி.மு.க



திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவு பலமாக இருப்பதாக இரண்டு கட்சிகளின் தலைவர்களும் வெளியே காட்டிக் கொண்டாலும் இரு கட்சிகளுக்கும் இடையேயான சிறு சிறு உரசல்கள் அவ்வப்போது பூதாகரமாக வெளியே தெரிகின்றன.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நொந்து போய் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் மத்திய தொலைத் தொடர்பு அலுவலகத்தின் மீது சி.பி.ஐ. நடத்திய அதிரடி சோதனை அமைந்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அமைச்சு அலுவலகத்தில் சி.பி.ஐ. நுழைந்திருக்க முடியாது என்ற கருத்து உள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடுவதற்கு தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தினுள் சி.பி.ஐ. நடத்திய அதிரடிச் சோதனை முன்னோட்டமாக அமைந்துள்ளது.
யுனிடெக், ஸ்பெக்ரம் ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ரம் அலைவரிசை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக உருவான சர்ச்சை இன்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சின் அலுவலகத்தினுள் சி.பி.ஐ புகுந்து சோதனை நடத்தும் நிலைக்கு வளர்ந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிந்து காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான அமைச்சு ஒதுக்கப்பட்டபோதே காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேயான புகைச்சல் ஆரம்பமானது.
ஸ்பெக்ரம் அலைவரிசையை குறைந்த விலைக்கு வாங்கிய நிறுவனங்கள் அதனை கூடிய விலைக்கு விற்பனை செய்துள்ளன. இதனால் அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கான ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தொலைத் தொடர்பு அமைச்சின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பங்குகளை வாங்கும் நிறுவனங்கள் அதனை விற்பனை செய்யும்போது நிதி அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும். ஸ்பெக்ரம் அலைவரிசையை வாங்கிய நிறுவனங்கள் நிதி அமைச்சின் அனுமதியைக் கேட்டு மத்திய அமைச்சின் அனுமதியுடன் தான் விற்பனை செய்தது. ஆகையினால் மத்திய அரசும் தவறு செய்துவிட்டது என்ற கருத்தும் உள்ளது.
ஸ்பெக்ரம் அலைவரிசை ஒதுக்கீடு எல்லாம் பிரதமரின் ஒப்புதலுடன்தான் நடைபெற்றது என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கூறியுள்ளார். ஸ்பெக்ரம் விவகாரத்தில் எந்தவிதமான ஊழலும் நடைபெறவில்லை எல்லாம் முறைப்படி பிரதமரின் ஒப்புதலுடன் தான் நடைபெற்றது என்று கூறியுள்ளார் அமைச்சர் ராசா.
எதிர்க்கட்சி அலுவலகங்களிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வீடுகளிலும் திடீரெனப் புகுந்து சோதனை செய்யும் சி.பி.ஐ. ஆளும் கட்சி அமைச்சின் அலுவகத்தினுள் புகுந்தமை கூட்டணிக்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2001 ஆம் ஆண்டைப் போலவே 2007 ஆம் ஆண்டில் முதலில் வருபவர்களுக்கு முதலில் உரிமை வழங்கப்பட்டது என்று முடிவு செய்யப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது. இந்த முறை தவறானது இதில் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று அப்போதே எதிர்க்கட்சிகள் கூறின.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தினுள் புகுந்த சி.பி.ஐ. அதிகாரிகள், ஸ்பெக்ரம் தொடர்பான பல ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். சோதனை பற்றிய அறிக்கை எதனையும் சி.பி.ஐ. இதுவரை வெளியிடவில்லை. சி.பி. ஐ.யின் அறிக்கையின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் ஆராயும்.
மாயாவதி, முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுத்த போது அவர்களை அடக்குவதற்கு சி.பி.ஐ. யை ஆயுதமாகப் பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சி. அதேபோன்று ஒரு நிலையே இப்போதும் ஏற்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் அடங்குமா காங்கிரஸ் கட்சி அடக்குமா என்பது சி.பி. ஐ. யின் அறிக்கையின் பின்னர் தெரியவரும்.
முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய அனுமதி வழங்கிய மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷள்க்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் நடத்த திட்டமிட்டிருந்த எதிர்ப்புக் கூட்டம் முல்லைப் பெரியாறு எதிர்ப்புக் கூட்டமாக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த அறிவிப்பினால் மத்திய அரசு தமிழக அரசின் நடவடிக்கையை உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கியது.
தமிழக அரசும், மத்திய அரசும் முட்டி மோதுவதைப் பார்க்க எதிர்க்கட்சிகள் ஆவலாக இருந்த வேளையில் மதுரையில் நடைபெற இருந்த முல்லைப் பெரியாறு எதிர்ப்புக் கூட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் ரத்துச் செய்தது. முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக மத்திய அரசு அறிவித்ததனால் எதிர்ப்புக் கூட்டத்தை தமிழக அரசு கைவிட்டது.
வட மாநிலங்களில் தனது எதிர்க்கட்சிகளை வீழ்த்தி தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையில் ஏற்பட இருந்த பூகம்பம் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அடுத்த நகர்வைப் பார்த்து காய் நகர்த்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 01/001/09

1 comment:

வெண்காட்டான் said...

both are in good partnership. varma is writing to cheat tamils in srilanka.