Sunday, January 3, 2010

இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால்நிம்மதியடைந்துள்ள எதிர்க்கட்சிகள்




பெண்ணாகரம் தொகுதி மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பொங்கல் அன்பளிப்புகளை எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து தடுத்து விட்டன. பெண்ணாகரம் தொகுதியின் உறுப்பினரான பெரியண்ணன் மரணமானதால் ஜனவரி 20 ஆம் திகதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த எதிர்க்கட்சிகள், பெண்ணாகரம் இடைத் தேர்தலை உடனடியாகச் சந்திக்கத் தயங்கின.
பொங்கல் சமயத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றால் பொங்கல் இனாம் என்ற பெயரில் முறைகேடுகள் நடைபெறலாம் என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், பெண்ணாகரம் இடைத் தேர்தலை ஒத்தி வைத்தது. 2006 ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கி திருச்செந்தூர் வரை நடைபெற்ற 10 இடைத் தேர்தல்களிலும் தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.
"சிறுபான்மை அரசு ' என்று ஜெயலலிதா தமிழக அரசை இளக்காரமாகக் கூறி வந்தாலும் இடைத் தேர்தலின் வெற்றி மூலம் தனது உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். ஒரு இடைத் தேர்தல் முடிந்து அதன் வரவு செலவுக் கணக்கைப் பார்ப்பதற்கு முன்னரே அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலையில் தமிழகக் கட்சிகள் உள்ளன.
பெண்ணாகரம் இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இன்பசேகரனை வேட்பாளராக அறிவித்து பிரசாரத்தை ஆரம்பித்து விட்டது.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் சலுகைகள், இலவச விநியோகங்களை அரசாங்கம் அறிவிக்கக் கூடாது. 6 ஆம் திகதி சட்ட மன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தும்போது புதிய அறிவிப்புக்களை வெளியிட்டால். தேர்தல் சட்ட விதிகளின்படி அது குற்றமாகுமா? பொங்கலுக்கு ஏழைகளுக்கு அரசாங்கம் இலவச வேஷ்டி சேலை வழங்குவது வழமையானது. பொங்கலுக்கு வழங்கும் இலவச வேஷ்டி சேலை குற்றமாகுமா? போன்ற கேள்விகள் தமிழக அரசின் சார்பில் எழுப்பப்பட்டன.
பெண்ணாகரம் இடைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தடுக்கும் ஒரு வேலைத் திட்டத்தைமுன்னெடுக்க வேண்டிய நிலை க்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.
வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் விஜயகாந்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அடுத்த தேர்தலுக்கு எப்படி முகம் கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சிந்திக்கத் தொடங்கி விட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்கடிப்பதற்கு பலமான ஒரு கூட்டணி அமைக்க வேண்டிய தேவையை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. கௌரவப் பிரச்சினை காரணமாக பலமான கூட்டணி அமைவது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக எதிர்க்கட்சிகள் பிரிந்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சாதகமானதாக உள்ளது.
திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளின் வெற்றி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரும் கட்சிகள் பேரம் பேசும் சக்தியை இழந்துள்ளன. தனி வழி செல்லும் விஜயகாந்தும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்பார்த்த வாக்குகளைக் கூடப் பெறாது தோல்வியடைந்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்தபோது வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள் ஆகியன அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த போது படுதோல்வி அடைந்தன. அந்தக் கட்சிகள் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்தால் பேரம் பேசுவதில் தமது பழைய செல்வாக்கைக் காட்ட முடியாத நிலை உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபரிமித வளர்ச்சியைத் தடை செய்ய முடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிதறி உள்ளன.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சவால்விடக் கூடிய எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயற்படாமையினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி எவ்வித தங்கு தடையுமின்றி உயர்ந்து கொண்டிருக்கிறது.
திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் விஜயகாந்துக்கு ஏற்பட்ட தோல்வி அவருடைய கட்சிக்கு விழுந்த மிகப் பலமான அடியாக உள்ளது. திராவிடக் கழகத்தை ஆட்டிப் படைக்கப் போகும் கட்சி, கறுப்பு எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆரைப் போன்று திரை உலகில்
இருந்து அரசியலுக்கு வந்தவர் போன்ற
மாயைகளுடன் அரசியலில் அடி எடுத்து வைத்த விஜயகாந்தின் கூட்டங்களுக்கு இலட்சக் கணக்கில் கூட்டம் சேர்ந்தது. விஜயகாந்த்துக்கு கூடிய கூட்டம் வாக்களித்திருந்தால் முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஓரம் கட்டப்பட்டிருப்பர்.
பெண்ணாகரம் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த அறிவிப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வீதத்தைக் குறைக்குமே தவிர, அதன் வெற்றியைத் தடுக்க உதவாது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவானவர்கள் பெண்ணாகரம் தொகுதியில் அதிகளவில் உள்ளனர். பெண்ணாகரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டபோது கணிசமான வாக்குகளைப் பெற்றதே தவிர, வெற்றி பெறவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கியும் செல்வாக்கும் குறைந்துள்ள நிலையில் பெண்ணாகரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் தான் சிதறுமே தவிர, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியில் எதுவித பாதிப்பும் ஏற்படாது.
டாக்டர் ராமதாஸுக்கும் விஜயகாந்துக்கும் இடையேயான பலப் பரீட்சையில் முன்னணியில் நிற்பது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாகவே பெண்ணாகரம் இடைத் தேர்தல் கருதப்படுகிறது. பெண்ணாகரம் தொகுதியில் வெற்றி பெற முடியாது எனத் தெரிந்தும் அதிக வாக்கு பெறுவது யார் என்ற போட்டியே ராமதாஸுக்கும் விஜயகாந்துக்கும் இடையே ஏற்படவுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உட்கட்சித் தேர்தலில் நடந்த ஊழல் காரணமாக ஏற்பட்ட பிரச்சினை போயஸ்கார்டன் வரை எதிரொலிக்கிறது.
மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உட் கட்சித் தேர்தல்களில் நடைபெற்ற முறைகேட்டை வெளிப்படுத்துவதற்காக சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் வாசஸ்தலமான போயஸ் கார்டனின் முன்னால் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தல்கள் இதுவரை காலமும் எதுவித பிரச்சினையுமின்றி சுமுகமாக நடைபெற்று வந்தன. இந்த ஆண்டு நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை மூடி மறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை காலமும் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் தமக்கு விருப்பமில்லாதவர்கள் வெற்றி பெற்ற போதும் அமைதியாக இருந்தவர்கள் இம்முறை அமைதியாக இருக்காது ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி ஜெயலலிதா அக்கறை காட்டுகிறாரா இல்லையா என்பது தெரியாதுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தலினால் வெறுத்துப் போய் இருப்பவர்களை இழுக்கும் பணியை சிலவேளை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கலாம். கட்சியின் தலைமைப் பீடத்துடனான முரண்பாடு, கட்சித் தொண்டர்களைப் பாதித்தால் தொண்டர்கள் கட்சி மாறும் சூழ்நிலை ஏற்படும்.
பெண்ணாகரம் இடைத் தேர்தலுக்கு முன்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதை அறிய பலரும் காத்திருக்கின்றனர்.
வர்மா


வீரகேசரிவாரவெளியீடு 03/01/10

No comments: