Sunday, January 31, 2010

ஸ்டாலினுக்கு முடி சூட்டுவதில்உறுதியாக உள்ள கருணாநிதி






அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது என்ற முடிவில் முதலமைச்சர் கருணாநிதி உறுதியாகவுள்ளார். ஓய்வுகள் இன்றி அரசியலிலும் இலக்கியத்திலும் பணியாற்றி வரும் முதல்வர் கருணாநிதி ஓய்வு பெற வேண்டிய வயதையும் தாண்டி கடமையாற்றுகின்றார். ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகவே முதல்வர் ஓய்வு எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் ஓய்வு அறிவிப்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு மகிழ்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வருடன் மிக நெருக்கமாகப் பழகிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் கருணாநிதியின் ஓய்வை விரும்பவில்லை. ஸ்டாலினின் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் உள்ளனர். முதல்வர் கருணாநிதியின் முடிவு அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் ஸ்டாலின் முதல்வராவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் முதல்வர் கருணாநிதியின் தீர்மானம் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. கருணாநிதி என்ற பெயருக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் ஸ்டாலின் என்ற பெயருக்கு வருமா என்ற சந்தேகம் அவர்களுக்கு உள்ளது. ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சியும் தியாகமும் தேர்தலின்போது அவருக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையும் கட்சித் தொண்டர்களிடையே உள்ளது.
எந்தவித பிரச்சினையும் இன்றி சென்ற ஸ்டாலினின் அரசியல் பயணம், அழகிரியின் அரசியல் பிரவேசத்தினால் சற்று அதிர்ந்தது. மிக நீண்டகாலமாக அரசியலில் கோலோச்சி வரும் ஸ்டாலினுக்கு உரிய கௌரவம் வழங்கப்படுவதற்கு முன்னர் அரசியலில் நுழைந்த அழகிரி மத்திய மந்திரி ஆகிவிட்டார். மந்திரிப் பதவியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மாநில அரசுப் பக்கம் அழகிரி தாவப் போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அழகிரியைத் திருப்திப்படுத்தாமல் ஸ்டாலின் உயர் பதவியில் அமர முடியாது என்ற கருத்து பரவலாக உள்ளது.
ஸ்டாலினின் எதிரி ஜெயலலிதாவோ அல்லது விஜயகாந்தோ அல்ல அழகிரிதான். ஸ்டாலினின் எதிரி என்ற எண்ணம் சில பத்திரிகைகள் மூலம் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது. பத்திரிகைச் செய்திகளை ஸ்டாலினும் அழகிரியும் கவனத்தில் எடுக்கவில்லை. நடைபெற்று முடிந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் இருவரும் இணைந்து பணியாற்றி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளனர்.
ஸ்டாலினை முதல்வராக்குவது என்பது அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல. பல வருடங்களாக ஸ்டாலினின் செயற்பாடுகளை அவதானித்து அவருக்கு பல பதவிகளைக் கொடுத்துத்தான் ஸ்டாலினை முதல்வராக்கும் முடிவை முதல்வர் கருணாநிதி எடுத்துள்ளார். துணை முதல்வர் பதவியில் ஸ்டாலின் சிறப்பாகச் செயற்படுகிறார் என்பதையும் கண்டு கொண்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தமிழக முதல்வர் கருணாநிதி தனது ஓய்வை முறைப்படி அறிவித்ததும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள மூத்த தலைவர்களும் படிப்படியாக தமது ஓய்வை அறிவிப்பார்கள். கட்சியை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் கருணாநிதி ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளார். அதனைப் பின்பற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்கள் சிலர் ஓய்வு பெற உத்தேசித்துள்ளனர். ஸ்டாலினின் தலைமையை விரும்பாத சில தலைவர்களும் உண்மையான காரணத்தை வெளிப்படுத்தாது ஓய்வு பெறும் முடிவில் உள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள அடுத்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஸ்டாலின் தலைமை ஏற்க உள்ளார். ஜெயலலிதா, விஜயகாந்த், வைகோ ஆகிய தலைவர்களை எதிர்த்து தனது கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டிய சூழ்நிலை ஸ்டாலினுக்கு உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் ஸ்டாலினுக்கு பூரண ஆதரவு தெரிவிப்பார்கள்.
இடது சாரி தலைவர்களும் டாக்டர் ராமதாஸும் திராவிட முன்னேற்றத்துக்கு எதிராகவே செயற்படுகின்றனர். அவர்களையும் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளார் ஸ்டாலின். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் ஸ்டாலினின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய எம். ஜி.ஆர்., வைகோ ஆகியோர் வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்த போதும் கட்சியை சிறந்த முறையில் வழிநடத்தினார் கருணாநிதி. பல தோல்விகளைச் சந்தித்த போதும் துவண்டு விடாது கட்சியைக் கட்டி வளர்த்தார்.
பெண்ணாகரம் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் முற்று முழுதாக ஸ்டாலினின் மேற்பார்வையிலேயே பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளது. முதல்வரின் ஓய்வு அறிவிப்புக்குப் பின்னர் நடைபெறவுள்ள தேர்தல் ஆகையினால் அது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. பெண்ணாசரத்தில் பொது வேட்பாளரை நிறுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ற கருத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸின் கருத்தை எதிர்க் கட்சித் தலைவர்கள் எவரும் இதுவரை ஆமோதிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் கட்சிகளில் பலமுள்ள கட்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கருதப்படுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை இன்றி திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆகையினால் டாக்டர் ராமதாஸின் கருத்துடன் எதிர்க் கட்சித் தலைவர்கள் யாரும் ஒத்துப் போகவில்லை.
கூட்டணி சேரத் தயார் என அறிவித்த விஜயகாந்தின் அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக மக்கள் மிக ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். பெண்ணாசரம் இடைத் தேர்தலின்போது சாதகமான சமிக்ஞையை விஜயகாந்த் வெளியிடுவாரா என்ற ஆவல் மேலோங்கி உள்ளது. வந்தவாசி, திருச்செந்தூர் இடைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த விஜயகாந்த் பெண்ணாசரம் இடைத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்குவாரா அல்லது பிரதான எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயற்படுவாரா என்ற கேள்வியும் தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.
அழகிரியைப் பற்றி பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அழகிரி ராஜினாமாச் செய்யப் போகிறார். அழகிரி தமிழக அரசியலில் தீவிரம் காட்டப் போகிறார் என பரபரப்பாக வெளிவரும் செய்திகள் பற்றி அழகிரி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
அழகிரியைச் சுற்றிப் பின்னப்படும் செய்தி வலைகள் எப்போதும் அவரைத் தாக்குவதாகவே உள்ளன. வழமை போல் அவற்றை புறந்தள்ளி விட்டு மதுரையிலேயே முகாமிட்டுள்ளார் அழகிரி.
நாங்கள் விட்டுச் செல்லும் பணிகளை ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்று பகிரங்கமாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்புகள் கையளிக்கப்படும் அதேவேளை அழகிரிக்கும் மிக முக்கிய பொறுப்புக்கள் கையளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 24/01/10

No comments: