Wednesday, January 5, 2011

கூட்டணிக் கனவில்அரசியல் கட்சிகள்

தமிழக அரசின் சாதனைகள் எல்லாம் ஸ்பெக்ட்ரம் எனும் அஸ்திரத்தினால் மறைக்கப்பட்டதால் கலங்கிப் போயுள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.
விஜயகாந்தின் கூட்டணி சேர காங்கிரஸாரும் ஜெயலலிதாவும் விரும்புகின்றனர். கூட்டணி பற்றி விஜயகாந் அறிவித்ததும் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும்.
தமிழக எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாததை ஸ்பெக்ட்ரம் என்ற மந்திரச் சொல் செய்து முடித்துள்ளது. தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகள் எனலாம். தமிழக மக்களின் மனதை மாற்றவில்லை. ஆனால் ஸ்பெக்ட்ரம் என்ற சொல் தமிழக அரசியலை மட்டுமல்லாது இந்திய அரசியலையே அதிரச் செய்துள்ளது. தமிழக எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியதை இந்திய தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் கன கச்சிதமாகச் செய்து முடித்துள்ளன.
தமிழக அரசின் சாதனைகள் எல்லாம் ஸ்பெக்ட்ரம் என்ற ஒரே ஒரு அஸ்திரத்தின் மூலம் மறைக்கப்பட்டுவிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு இந்திய மத்திய அரசுதான் பொறுப்புக் கூற வேண்டும். இந்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசைத் தவிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டும் குற்றவாளியாக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி நிற்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவதற்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளன தமிழக எதிர்க்கட்சிகள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு காங்கிரஸ் கட்சி வெளியேறினால் இதனுடன் கூட்டணி அமைக்க விஜயகாந்தும் ஜெயலலிதாவும் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் முழுப் பொறுப்பையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலையில் சுமத்தியுள்ளனர். ஸ்பெக்ட்ரம் விநியோகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. இந்தியாவில் இதுவரை நடைபெற்ற ஊழல்களில் மிகப் பிரமாண்டமான ஊழல் இதுதான் என்று ஊடகங்கள் வர்ணிக்கின்ற ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான கூட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் விவகாரம் தான் விசாரணை நடைபெறுகிறது என்று மக்களுக்கு விளக்கும் கூட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் ஆங்காங்கே நடத்தி வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த விளக்கத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்களா இல்லையா என்பதை தமிழக சட்டமன்றத் தேர்தலின்போதுதான் அறிய முடியும்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி ஒதுங்கியே நிற்கிறது. இந்திய மத்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அதற்கு ராசாதான் முழுப் பொறுப்பு என்பதுபோல் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்பாடு உள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்
தவறு எதுவும் நடைபெறவில்லை என்று அடித்துக் கூறினால் ராசா குற்றமற்றவர் என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். அது திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்று தமிழக காங்கிரஸ் சிந்திக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒற்றுமையாக்குவதற்கு ராகுல் காந்தி மிகுந்த பிரயாசைப்படுகிறார். இவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்குரிய சூழ்நிலை தமிழகத்தில் இல்லை. வாசன், இளங்கோவன், சிதம்பரன், தங்கபாலு போன்ற மூத்த தலைவர்கள் தமக்கென்று ஒரு கூட்டத்துடன் செயற்படுகின்றனர். இவர்களுடைய செயற்பாடுகள் இளைஞர் காங்கிரஸையும் பற்றிக் கொண்டுள்ளது. ராகுல் காந்தி அண்மையில் தமிழகத்துக்கு விஜயம் செய்த போது அவரைச் சந்திப்பதற்கு இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதேவேளை தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கும் இளைஞர் காங்கிரஸுக்கும் இடையே இடைவெளி அதிகரித்துச் செல்கிறது. காங்கிரஸின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்று
ராகுல் காந்தி கூறியதனால் தமக்குரிய இடத் தைப் பெறுவதற்கு இளைஞர் காங்கிரஸ் முயற்சி செய்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்பவில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி
சேரக் கூடாது என்று இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு உரிய இடம் வழங்கப்படும் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது. இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்டால் தமக்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என்ற பயம் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்களின் கோஷ்டிப் பூசல் வெளிவரும்.
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது புதிய கூட்டணிகள் உருவாகுவது தவிர்க்க முடியாது. விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று காங்கிரஸாரும், ஜெயலலிதாவும் விரும்புகின்றனர். கூட்டணி அமைத்துக் கொடுக்காது அரசியலில் வலம் வந்த விஜயகாந்த் கூட்டணி சேரும் விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 9ஆம் திகதி கூட்டணி பற்றி விஜயகாந் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதன் பின்னர் தமிழக அரசியல் சூடுபிடிக்கத்
தொடங்கிவிடும்.
கருணாநிதியுடன் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந் விரும்ப மாட்டார். கருணாநிதியின் குடும்பத்தின் மீதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் மிக மோசமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து தனது மதிப்பைக் குறைப்பதற்கு விஜயகாந்த் விரும்பமாட்டார்.
விஜயகாந் கூட்டணி சேரும் கட்சியில் இணைவதற்கு ஏனைய அரசியற் கட்சிகள் முண்டியடிக்கும் சூழ்நிலை உருவாகும். கருணாநிதியுடன் அல்லது ஜெயலலிதாவுடன் இணைவதனால் விஜயகாந்துக்கு பிரயோசனம் ஏற்பட வாய்ப்பு இல்லை. மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் நேரடியாக தான் இணைவதையே விஜயகாந் விரும்புகிறார். தமிழக சட்டசபைக்கான தேர்தலுக்கான தற்காலிக இணைப்பாக இல்லாமல் மத்திய அரசை அமைக்கும் நிரந்தர இணைப்பையே விஜயகாந் எதிர்பார்க்கிறார்.
தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் கோலோச்சிய வைகோவும் டாக்டர் ராமதாஸும் நொந்து நொடிந்து போயுள்ளனர். வைகோவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களில் பலர் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். ஜெயலலிதாவின் தலைமையில் தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க தயாராகிறார் வைகோ. வைகோவின் பின்னால் பிரமாண்டமான கூட்டம் கூடிய
காலம் போய் ஜெயலலிதா செல்லும் இடம் எல்லாம் வைகோ செல்லும் காலம் உருவாகியுள்ளது.
தமிழக அரசியல் அரங்கில் காய்களை நகர்த்தி வெற்றிக் கனி பறித்த டாக்டர் ராமதாஸைத் தேடுவோர் யாருமில்லை. தனது சட்சிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என்பதை நன்கு உணர்ந்துள்ள டாக்டர் ராமதாஸ் தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதி சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்துவதற்குரிய வியூகங்களை எதிர்க்கட்சி வகுக்கத் தொடங்கி உள்ளன. ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக விஜய் அரசியலில் இறங்கப் போவதாக பூச்சாண்டி காட்டப்படுகிறது. விஜய் வழமை போல் மௌனமாக இருக்கிறார். அரசியலுக்கு வருகிறார் அஜித் என்ற செய்தி பரபரப்பாக பரவுகிறது.
விஜயும், அஜித்தும் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. எம்மைப் புறக்கணித்த தமிழக அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு விஜயும் அஜித்தும் ஜெயலலிதாவுடன் கைகோர்க்கப் போவதாக செய்தி கசிந்துள்ளது.
வீழ்ந்து விட்ட தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் முழு வீச்சில் இறங்கியுள்ளது. பொங்கல் திருநாளுக்காகப் புதிய இலவசத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இலவசமாக ஸ்பெக்ட்ரமா வெற்றி பெறும் என்பது தமிழக சட்ட மன்றத் தேர்தலின் போது தெரிந்துவிடும்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 02/01/11

No comments: