ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசின் "சமர்ச்சீக்கல்வி' பாடத் திட்டத்தை முடக்கி புதிய புத்தகத்தைத் தயாரிப்பதற்கு முயற்சி செய்தது. இதன் காரணமாக தமிழக மாணவர்களின் கல்வி பாதிப்படைந்தது. தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிருப்தியடைந்த தமிழக அரசு மேன்முறையீடு செய்தது. பெரும் பரபரப்புடன் எதிர்பார்த்த தீர்ப்பு தமிழக அரசுக்கு எதிராகவே வழங்கப்பட்டது. 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமுல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமச்சீர் கல்வியில் கை வைக்க வேண்டாம் என்று புத்திஜீவிகளும் பெற்றோரும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் கூட்டணிக் கட்சியான இடதுசாரிகளும் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். விஜயகாந் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்தார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்ட முதல்வர் ஜெயலலிதா சமச்சீர் கல்வியை உடனடியாக அமுல்படுத்துவதாக அறிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக மிக வேகமாகச் செயற்படும் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைக்கு கடிவாள மிட்டுள்ளது உயர்நீதிமன்றம். சமச்சீர் கல்வியை மீண்டும் அமுல்படுத்துவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியதால் திராவிட முன்னேற்றக் கழகம் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை பெறுவதற்கு இச் சம்பவம் முன்னோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையின் முதல்வர் என அறிவிக்கப்பட்ட அழகிரியை மதுரையிலிருந்து அப்புறப்படுத்தும் வேலையை தமிழக அரசு ஆரம்பித்துள்ளது. அழகிரியின் கையாட்களான பொட்டு சுரேஷ், எஸ்.எஸ்ஆர், கோபி, தளபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கு பிணையில் வெளி வர முடியாதபடி குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு, கொலை போன்ற குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளனர். அழகிரியின் மனைவி காந்தியின் சொத்து விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன. நில ஆக்கிரமிப்புத் தொடர்பான வழக்கு அவர் மீது தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அழகிரியைச் சுற்றி இருப்பவர்களை அப்புறப்படுத்தி விட்டு அழகிரியை தனிமைப்படுத்த வேண்டும் என்ற திட்டம் ஓரளவு கைகொடுக்கத் தொடங்கி விட்டது. அழகிரியைச் சுற்றி மதுரையில் மையம் கொண்டிருந்த பலர் காணாமல் போய்விட்டார்கள். அழகிரியுடன் தொடர்பு வைத்தால் பொலிஸாரிடம் அகப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்று ஒதுங்கத் தொடங்கி விட்டார்கள்
அறுதிப் பெரும்பான்மை இல்லாது ஐந்து வருடங்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழக அரசை மைனோரிட்டி அரசு என்று ஜெயலலிதா ஏளனம் செய்தார். மைனோரிட்டி அரசு என்ற அவச் சொல்லைத் தாங்க முடியாத திராவிட முன்னேற்றக் கழகம் தனது செயற்பாடுகளின் மூலம் நல்ல பெயரை சம்பாதித்தது. அசுர பலத்துடன் ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசை ""ஜெயா'' அரசு என்று திராவிட முன்னேற்ற கழகம் அழைக்கத் தொடங்கியுள்ளது. ஜெயா அரசு என்றால் அது ஜெயலலிதாவின் அரசு என்ற கருத்தே முதலில் தோன்றும்.
ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் அப்படியான அர்த்தத்தில் கூறவில்லை. ஜெயா அரசு என்றால் ஜெயிக்காத அரசு என்ற வியாக்கியானம் கூறுகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
ஜெயலலிதாவின் அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைய வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பமாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பப்படியே ஜெயலலிதாவின் அரசுக்கு முதலாவது அடி விழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா அரசு செய்யும் திட்டங்கள் தவிடு பொடியாகும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.
ஜெயலலிதாவின் அரசுக்கு அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல் பெருத்த சவாலாக இருக்கும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகள் அனைத்திலும் கண்டிப்பாக வெற்றி பெற்றேயாக வேண்டும். இல்லையெனில் தமிழக அரசை வெற்றி பெற்ற மக்களே நிராகரித்து விட்டார்கள் என்ற பிரசாரத்தை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துவிடும். சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததால் நொந்து போயிருக்கும் ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி மூலம் தனது செல்வாக்குக் குறைவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு14/08/11
No comments:
Post a Comment